கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்

வழிச் செலவு

தீவினை செலுத்துதலால் இடையாமம் கழிந்து வைகறைப் பொழுதில், கோவலனும் கண்ணகியும் எழுந்து, காவலர் அறியாது இடைகழி வாயிலைக் கடந்து புறப்பட்டனர். புறப்பட்டவர்கள், திருமால் கோயிலை அடைந்து, வலஞ்செய்து தொழுது, புத்த விகாரங்களையும், அருகன் கோவில் சிலாதலங்களேயும் வணங்கி, நகரின் பெருவாயிலையுங் கடந்து, இலவந்திகை மதிலுக்குப் புறத்திற்சென்று, காவிரியின் வடகரைச் சோலை வழியாக மேற்கு நோக்கி ஒரு காத தூரம் போய், ஒரு குளிர்ந்த சோலையை அடைந்தனர். அவ்வளைவிலே கன்ணகி தேவி, நடையினால் மிகவும் தளர்ந்து, “மதுரை மூதுர் யாது?” என வினவினாள். அது கேட்டுக் கண்ணகியின் தளர்ச்சிக்குத் துன்பம் கொண்ட கோவலன், வருத்தத்தை மறைப்பதற்கு நகை காட்டி, “தமது நாட்டிக்கு அவ்வூர் ஆறைந்து காதத்தில் உள்ளது. இனி அணித்தே,” என்று இரு பொருள் படம் சொன்னான்.

கோவலனும் கண்ணகியும் சிறிதுநேரம் இளைப்பாறிய பின்னர்ப் பக்கத்திலுள்ள தவப்பள்ளியிலிருந்த கவுந்தி என்னும் பெயருடைய ஒரு முதிர்ந்த சைன சந்நியாசினியைக் கண்டு, அடிதொழுதனர். ஆம் முதியவனாகிய கவுந்தி, இருவரையும் நோக்கி, “நீங்கள் சிறந்த அழகும், நற்குடிப்பிறப்பும், நல்லொழுக்கமும் உடையவர்களாய்க் காணப்படுகின்றீர்கள். நீங்கள் தீவினையாளரைப்போல் உங்கள் இருப்பிடம் விட்டுப் பெயர்ந்து, இங்கு வந்த காரணம் யாதோ?” என்று கேட்டாள். அதற்குக் கோவலன், “சுவாமி, நான் மதுரை மாநகரம் சென்று, நியாய வழியில் பொருள் தேட விரும்பினேன் ; இதுவே இங்கு வருதற்குக் காரணம்,” என்று சொன்னான்.

கவுந்தியடிகள் அதனைக் கேட்டு, “நன்று? இப்போது செல்லுதற்கிருக்கும் : வழியே காடுகளை இடை இடையே கொண்ட நாடு. வழியில் பருக்கைக் கற்கள் படர்ந்து கிடக்கும். இவளது அனிச்சமலரினும் மெல்லிய அடிகள் அவற்றில் எவ்விதம் நடக்கப் பொறுக்கும்? என் செய்வது? ஊழின் வலியை வெல்வார் யார்? யான் பெரியோர்களிடம் அறவுரை (திருமோபதேசம்) கேட்பதற்கு மதுரை செல்ல எண்ணியிருக்கிறேன் ; ஆதலின், நானும் உங்களுடன் வருகின்றேன், வாருங்கள்,” என்றாள். அது கேட்டுக் கோவலன், கண்ணகியின் வருத்தமாற்றுதற்கு ஒரு பெண் துணைகிடைத்ததே என்று மிகவும் மகிழ்ந்தான்.

கவுந்தி, செல்லும் வழிகளின் இயற்கையைக் கூறத் தொடங்கி, ‘கோவல, நாம் இனிச் செல்ல வேண்டிய இடத்துக்கு வழி வயலும், தோட்டமும், சோலையுமான வழியேயன்றி, வேறு வழியில்லை. கண்ணாற்பார்க்கவும் முடியாத இம்மெல்லியாளை அழைத்துக்கொண்டு சோலேகளினூடே நிழல் வழியாகச் செல்லக்கருதினால் அவ்விடங்களில் வள்ளிக்கிழங்கை அகழ்ந்தெடுத்த குழிகளில் சண்பக மாங்களின் வாடற்பூக்கள் சேர்ந்து பொய்க்குழி படுத்தியிருக்கும். அவ்விடங்களை அறிந்து பாதுகாவலுடன் செல்லாவிடின், ஆபத்து உண்டாகும். அது பற்றித் தரை நோக்கி ஒதுங்கி நடந்தால், பலாப்பழங்கள் தலையிலும் முதுகிலும் முட்டும்; தோட்டங்களின் வழியாகச் சென்றால், பலாச் சுளைகளிலுள்ள விதைகள் காலில் உறுத்தும் இங்கனம் சோலையும் தோட்டமுமாகிய கரை வழியன்றி வயல்வழியாகப் போவோமாயின், குளங்களில் மீன் இரை தேரும் நீர் நாய்கள் தாவக்காணினும், சேல் மீன்கள் உகளக் காணினும், வாளை பாயக்காணினும், மலங்கு மிளிரக் காணினும், இவள் கலங்குவாள்; சோலைகளிலுள்ள தேனிறால் உடைந்து ஒழுகி வரும் தேன் கலந்த நீரை இவள் குடங்கையால் முகந்து பருகவும் கூடும்; வரம்பின் மேலிட்ட குவளைப்பூக்களில் படிந்துள்ள வண்டுகளில் நீங்கள் அடியிடவுங் கூடும். இவ்வழிகளை யெல்லாம்விட்டு, பெருவாய்க்காலின் அடைகரை வழியாகச் சென்றாலோவெளின், அங்குள்ள நண்டும் நத்தையும் நம் அடியால் நோயுறுமாயின், அக்கொலைப் பாவம் நம்மால் தாங்கவும் ஒண்ணாது. ஆதலால், இவற்றையெல்லாம் பாதுகாத்து நீ உன்மனைவியுடன் கவனத்தோடு நடக்கவேண்டும்” என்று கூறித் தனது

மூட்டையையும் மயிற்பீலியையும் தூக்கி அவர்களுடன் புறப்பட்டாள்.

அவர்கள் செல்லுகின்ற வழியில், காவிரியின் நீர், வாய்த்தலைக் கதவின் மீதெழுந்து குதிக்கும் ஓசையும், செந்நெல்லும் கரும்பும் வளர்ந்த கழனிகளின் அருகிலுள்ள நீர் நிலைகளில்

‘கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலுப் புள்ளும் புதாவும்’

ஆகிய நீர்ப்பறவைகள் கூடியிருந்து ஒலிக்கும் ஓசையும், பொன்னேர் பூட்டி நிலத்தை உழுவார் பாடும் ஏர்மங்கலப்பாட்டின் ஓசையும், நாற்று நடும் கடைசியர்கள் குரவை ஒலியும், களத்தின் கண் நெற்பொலி செய்வார் பாடும் முகவைப் பாட்டோசையுமான பலவித ஓசைகளையும் கேட்டு இன்புற்று வழி வருத்தந்தோன்றாமல், காவிரிக்கரை வழியாக நாளொன்றுக்குக் காதவழி நடந்து சீரங்கம் என்னும் திருப்பதியை அடைந்தனர். அங்கு அவர்கள் ஒரு சோலையிலிருக்கும் போது, அறமுரைக்கும் அருகசாரணர் இருவர் வந்து தோன்றினர்; அவர்களைக் கவுந்தி முதலியமூவரும் அடிவணங்கினர்; சாரணர் அவர்களுக்கு அறமுரைப்பக்கேட்டு, கவுந்தி அவர்களது அருண் மொழியைப் போற்றி, அருகதேவனைத் துதித்தாள். பின்பு சாரணர் செல்ல, மூவரும் ஒடமேறிக் காவிரியின் தென்கரையையடைந்து, ஒரு சோலையில் தங்கியிருந்தனர்; அப்பொழுது அங்கு வந்த வம்பப்பரத்தை ஒருத்தியும், வறுமொழியாடும் துார்த்தன் ஒருவனும் கவுந்தியை அணுகி, “மதனும் இரதியும் போல்வார் இவர்கள் யாவர்?” எனக் கோவலனையும் கண்ணகியையும் குறித்து வினவினர். அதற்குக் கவுந்தி, “இவர்கள் மதனும் இரதியும் அல்லர்; என் மக்களே இவர்கள் வழி நடந்து வருத்த முற்றிருக்கின்றனர். இவர்கள் பக்கம் செல்லாது போய்விடுங்கள்,” என்று கூறினள். அதனைக் கேட்ட அவர்கள் “தவத்தீர், ஒரு வயிற்றிற்பிறந்தோர் கணவனும் மனைவியுமாய்க் கூடி வாழ்தல் முறையென்று உங்கள் சாத்திரம் உரைக்கின்றதோ!” என்று பரிகசித்தனர். அவ்வளவில் கவுந்தி, “இவர்கள் முள்ளுடைக் காட்டில் முது கரியாக!” என அவர்களேச் சபித்தாள்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்த லரிது.’

என்றபடி கயவராகிய அவ்விருவரும் உடனே நரிகளாய் ஊளையிட்டனர். இதனைக் கண்ட கண்ணகியும் கோவலனும் மருண்டு இரக்கமுற்றுக் கவுந்தி யைத் தொழுது,

நெறியி னீங்கியோர் நீரல கூறினும்
அறியா மையெண் றறிதல் வேண்டும்.’

இனி இவர்கள் சாபநீங்கி உய்தலான காலத்தை அடிகள் அருள வேண்டும்,” எனப் பணிவுடன் வேண்டினர். அதற்குக் கவுந்தி, “இவர்கள் பெறுதற்கரிய மக்களுடம்பை ஒரு குறும்பு மொழியால் இழந்து, இழிபிறப்புற்றனர். ஓராண்டளவும் உறையூர் மதிற் புறத்துக் காவற் காட்டில் திரிந்து துன்பம் உழந்த பின்னரே இவர்கள் முன்னே உருவம் பெறுவாராக!” எனச் சாபவிடை செய்தனள்.

தென்கரையிலுள்ள உறையூரில் அன்றிரவு உறைந்து, வைகறையில் தென்றிசை நோக்கிப் புறப்பட்டு, ஒரு சோலையிலுள்ள மண்டபத்தில் தங்கினார்கள். அம்மண்டபத்தில், குடகமலையின் அருகிலுள்ள மாங்காடு என்னும் ஊரிலிருந்து யாத்திரையாக⁠ வந்த ஒரு முதுமறையோனைக் கண்ட கோவலன், “ஐயரே, இங்கு வந்த காரணம் என்ன?” என வினவினான். மறையவன், “நான் திருவரங்கப்பெருமானையும் திருவேங்கட நாராயணனையும் கண்டு வணங்கிக் கதிபெறும் விருப்பத்துடன் புறப்பட்டவன், பாண்டி நாட்டின் வளங்களையும், பாண்டியனுடைய செங்கோலையும் போய்க் கண்குளிரக் கண்டு வருகின்றேன். இங்ஙனம் வந்த நான், இங்கிருந்து சிறிது இளைப்பாறுகின்றேன்,” என்றான்,

அவ்வளவில் கோவலன், “அப்படியாயின், மதுரைக்குச் செல்லுதற்குரிய செம்மையான வழியை எங்கட்கு விளக்கிச் சொல்லுக,” என வேண்டினான். முதுமறையோன், “ஐயோ பாவம்! வெயிலின் கொடுமை மிக்க இந்தக் கோடைகாலத்தில் மெல்லியலான இப்பெண்மணியுடன் வந்தீர்கள். வழி வருத்தம் அதிகமாயிற்றே ! பாறையும், பருக்கைக்கல்லும், வழி மயக்கமும், கானலும் மிகுந்த இந்தத் தொலையாத பாலை நிலவழியைத் தொலைத்துப்போய்க் கொடும்பாளுர், நெடுங்குளம் என்னும் இரண்டூர்க்கும் பொதுவான ஏரியின் கரையை முதலில் அடைய வேண்டும்; பின்னர் அதினின்றும் சூலம்போலமூன்று வழி பிரிந்து செல்லும்; அம்மூன்று வழிகளில் வலப்பக்கம் செல்லும் வழியோ, வாகை, மூங்கில், கடம்பு முதலிய மரங்களும், கற்றாழை கரிந்துகிடக்கும் இடங்களுமாய் இருக்கும். அவற்றையெல்லாம் கடந்து சென்றால், மலைவாழை, கமுகு, தெங்கு, பலா முதலிய மரங்களும், பல கிழங்கு வகைகளும், தானிய வனங்களும் மிகுந்த தென்னவன் சிறுமலை தோன்றும், அம்மலையை வலப்பக்கத்து வைத்து இடப்பக்கத்து வழியிற்சென்றால், மதுரையை அடையலாம்.

“இடப்பக்கத்து வழியோ, குளங்களோடும் பூஞ் சோலேகளோடும்பாலை நிலங்கள் பல இடைக்கிடந்த காட்டு வழியாய் இருக்கும்; அவ்வழியைக் கடந்தால், அழகர் மலை எதிர்ப்படும். அம்மலையின் பிலவழியில் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்ற மூன்று பொய்கைகள் உண்டு. அவற்றில் மூழ்குவோர், முறையே இலக்கண நூல் அறிவையும், பூர்வ ஜன்ம உணர்ச்சியையும், விரும்பியவற்றையும் பெறுவார்கள். அவற்றில் சென்று மூழ்க உங்களுக்கு விருப்பமில்லையெனில், அழகருடைய திருவடியை நினைந்து ஆலயத்தின் கருட ஸ்தம்பத்தையேனும் தரிசித்து, மனத்துள் இன்பங்கொண்டு, பின்பு நீங்கள் மதுரையை அடையுங்கள்.

“இடைப்பட்ட வழி செவ்விய வழியே. வழியில் சோலைகள் சூழ்ந்த ஊர்கள் பல உண்டு;இடையிடையே காடுகளும் உண்டு. இக்காட்டு வழியைக் கடந்து செல்லுங்கால் ஓரிடத்து வனதெய்வம் ஒன்று உள்ளது; அது வருத்துந் தன்மையுடையது முதலில், வழிப் போவாரை நயமாகப்பேசி வஞ்சித்துப்போகவிடாது தடுக்க முயலும். அதன் வசப்படாது தப்பிச் சென்றால், மதுரைக்குச் செல்லும் பெருவழியை அடையலாம்; இம்மூன்று வழிகளுள் உமக்கு விருப்பமான வழியைப் பின்பற்றிச் செல்லுங்கள். நான் திருவரங்கப்பெருமானது சேவடி காணச் செல்கின்றேன்,” என்று சொன்னான். இங்ங்ணம் மறையவன் கூறியதைக் கேட்ட கவுந்தியடிகள், “நான்மறையாள, நீ கூறிய முப்பெரும்பொய்கைகளில் மூழ்கி அப்பயன்களை நாங்கள் அடையவேண்டா ; ஐந்திர வியாகர ணத்தை எங்கள் அருக குமரன் அருளிச்செய்த பரம ஆகமத்திற்காணலாம்; முற்பிறப்பிற் செய்தவற்றை யெல்லாம் இப்பிறப்பின் அநுபவத்தால் அறியலாம்; வாய்மையும் கொல்லாவிரதமும் உடையவர், விரும்பியனவெல்லாம் அடையலாம்; வணங்க விரும்பிய தெய்வத்தைக் காணுதற்குச் செல்வாயாக; நாங்கள் எங்கட்கு ஏற்ற வழியே போகின்றோம்,” என்று சொல்ல, மூவரும் புறப்பட்டு இன்று அணித்தேயிருந்த ஓர் ஊரில் தங்கினர்.

மற்றை நாட்காலையில் அவர்கள் அந்தணன் சொன்ன வழி மூன்றனுள் நடு வழியைப்பற்றிப் புறப்பட்டுச் சென்றனர். செல்லுங்கால் வழி நடையால் கால் தளர்ந்து நீர் வேட்கையுற்று ஓரிடத்துத் தங்கினர். கோவலன், தண்ணீர் கொண்டு வர, ஒரு தடாகத்தைக் கண்டு அதன் துறையில் நின்றான். நிற்கும் பொழுது அக்கானகத்துத் தேவதை, மாதவியின் தோழியாகிய வசந்தமாலை போல் வடிவங்கொண்டு கோவலனது அடியில் வீழ்ந்து வணங்கி, பொய்க்கண்ணீர் உகுத்து, “ஐய, மாதவி கொடுத்த ஓலையை தான் உம்மிடம் கொடுக்க நீர் மறுத்த செய்தியைப் பின்னர் அவளிடம் உரைத்த போது அவள் நான் மாலை வெண்தோட்டில் எழுதிய ஓலைப் பாசுரத்தில் தவறு ஒரு சிறிதுமில்லை; ‘நீ பேசிய சொற்களே கோவலர்க்குக் கோபமூட்டின போலும்! அதனாலன்றோ கோவலர் வாராது கொடுமை செய்து விட்டார் ?’ என்று கூறி மயங்கி வீழ்ந்து பின்னை எழுந்து, ‘கணிகையர் வாழ்க்கை கடையே போலும்!’ என்று தன்னை வெறுத்துப் பேசிக் கண்ணீர் சொரிந்து, முத்து வடத்தை அறுத்தெறிந்து, ஒருநாளும் பிரியாத என்னைத் துரத்திவிட்டாள் ; நீர் மதுரைக்குச் செல்வதை வழியில் எதிர்ப்பட்டோர் சொல்லக் கேட்டு, வணிகர் கூட்டத்தோடு இக்காட்டுவழி வந்து துயருழந்தேன்; இத்துயருழந்த அடியாளுக்கு என்ன நற்சொல் அருளுகின்றீர்?” என்று விநயமாகக் கேட்டது.

இவ்விதம் இயக்கியாகிய தெய்வம் நடித்துப் பேசியதைக் கேட்ட கோவலன், ஆராய்ந்து, ‘ஓ! முன் வழிப் போவாரை மயக்கும் வன தெய்வம் இவ்வழியிலுள்ளது என்றுமறையவன் சொன்னானன்றோ?’ அத்தெய்வமே போலும் இவள்! உண்மையை நன்றாகத் தெளிய, அக்தரி மந்திரத்தை உருவிட்டுப் பார்க்கிறேன்.” என்று அம்மந்திரத்தை உருவிட்டான். இதையறிந்து பயந்த வனதேய்வம், ஐய, நான் வசந்தமாலையல்லேன்; இவ்வனத்தில் திரியும் இயக்கி: உன் மீது விருப்பங்கொண்டு இங்கினம் மயக்கக்கருதினேன் ; நான் செய்த இப்பெரும்பிழையை நீ பொறுப்பதோடு கற்புடையதெய்வமாகிய கண்ணகிக்கும் மாதவத்தாட்டியாம் கவுந்தியடிகளுக்கும் தெரிவிக்காமலிருக்க வேண்டும்; அவர்கள் சாபம் என்னால் தாங்கவொண்ணாது,” என்று இரந்து கேட்டுத் தனதிருப்பிடம் சென்றது.

பின்பு கோவலன் ஒரு தாமரை இலையில் தண்ணீர் மொண்டுகொண்டு வந்து கண்ணகிக்குக் கொடுத்து விடாய் தணித்தான். சூரிய வெப்பம் கடுகுதலால், இனிச் செல்லுதல் முடியாதென்று கருதிக் கவுந்தி யடிகள், இருவரையும் அழைத்துப் போய் அங்குள்ள ஐயைகோட்டம் (காளி கோயில்) அடைந்தாள். கண்ணகி மெய் வருந்தி அடிகள் கொப்புளங் கொண்டு தளர்நடையோடு பெருமூச்செறிதலால், அவர்கள் அன்று மேற்செல்லாராய்க் கோட்டத்திலேயே ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

அன்று தினம் வேடர்கள், கொற்றவைக்குப் புலியிட்டுத் திருவிழாச் செய்தார்கள். தேவராட்டி ஒருத்தி, ஆவேசங்கொண்டு, அடி பெயர்த்தாடினாள். ஆடிய அவள், கண்ணகியை நோக்கி,

கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணி”

எனக் கண்ணகிக்கு இனி நிகழப் போகின்றவற்றைக் கூறினள். இங்ஙனம் தன்னைப் புகழ்ந்து கூறியதைப் பொறாத கண்ணகி, ‘இவள் தெய்வ மயக்கத்தால் இங்ஙனம் கூறினாள்,’ எனக் கருதி, நாணமுற்றுக் கணவனது பின் புறத்தே மறைந்து சிறுநகை செய்து நின்றாள்.

அப்பால் கோவலன் கவுந்தியைத் தொழுது, “பாண்டியனது செங்கோல் நலத்தால் இவ்வழியில் வனசரங்களாலும், ஜலசரங்களாலும் நமக்கு எவ்விதத் துன்பங்களும் உண்டாகா. இக்காட்டில் நம்மை வருத்துவது இவ்வேனிற்காலத்து வெயில் ஒன்றே: கண்ணகி, பாவம்! வெயில் மெய்யிற் படப் பொறாள்! இவள் சீறடி பருக்கைக் கற்களில் படியப் பொறா. ஆதலால், இனி இரவில் வழி கடப்பதே நன்று.” என்று விண்ணப்பித்தான். அதற்குக் கவுந்தி உடன்பட்டாள் சூரியன் மறைந்த பின், மூவரும் நிலாத் தோற்றத்தை எதிர் நோக்கி இருந்தனர்.

நிலா உதயமானவுடன், கோவலன் கண்ணகியைப் பார்த்து, மிருகங்களின் முழக்கத்துக்கும் பறவைகளின் ஒலிகளுக்கும் அஞ்சாமல் வருக, என்று சொல்லி, அவள் கையைத் தன் தோளில் சேர்த்துச் சென்றான். இருவரும் கவுந்தியின் அறவுரைகளைக் கேட்டுக்கொண்டே வழி வருத்தமின்றிப் பொழுது புலரும் அளவும் கடந்து, ஒரு பார்ப்பனச் சேரியை அடைந்தனர். அங்குள்ள பார்ப்பனர்கள் தங்களுக்குரிய வேதம் ஒதுதலைத் தவிர்த்து வரிப்பாட்டைப் பாடிப் பொழுது போக்கும் இழிந்த ஒழுக்கமுடையவர்களாயிருந்தபடியால், அவர்களது ஊர்க்குட்செல்லாது பக்கத்தில் ஓரிடத்தில் கண்ணகியையும், கவுந்தியடிகளையும் இருக்கும்படி செய்து கோவலன் காலைக் கடன் கழித்தற்கு ஒரு பொய்கையை அடைந்தான்.

கோவலன் இங்ஙனம் பொய்கைக்கண் நிற்கும் போது, கண்ணகியோடு அவன் வேற்றுாருக்குப்புறப்பட்ட செய்தி கேட்ட மாதவி துயர் கொண்டு எழுதிக்கொடுத்த ஒலையை வாங்கிக்கொண்டு புகாரினின்றும் புறப்பட்டுக் கோவலனைத் தேடித்திரியும் கௌசிகன் என்னும் மறையோனும் அப்பொய்கை வந்து சேர்ந்தனன்; கோவலன் வழி நடந்த வருத்தத்தாலும் மனைவியுடன் கானகம் வந்த கவற்சியாலும் உருவம் வேறுபட்டிருந்தபடியால், கெளசிகன் அவனைச் சந்தேகித்து ஓர் உபாயத்தால் இன்னனெனத் துணியக் கருதினான்; கருதியவன் கரையில் படர்ந்திருக்கும் மாதவியென்னும் மறுபெயருடைய குருக்கத்தி நிழலிற்போய் நின்று அதனை நோக்கி,

கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
வருந்திறல் வேனிற் கலர்களைத் துடனே
வருந்தினை போலும் மாதவி!”

என்று இந்த மாதவியை அந்த மாதவியுடன் உவமித்துப்பேசி நின்றான். அது கேட்ட கோவலன் “ஐய! நீ கூறிய இக்கூற்றிற்குப் பொருள் யாதோ?” என்று வினவினான். உடனே கெளசிகன், “என் ஐயம் அகன்றது; கோவலனைக் கண்டேன்!” என உவகை பூத்து, அவனைக்கிட்டி, “சீரிய செல்வ, உனது பிரிவால் உன் தந்தையும் தாயும் அருமணியிழந்த நாகம் போலத் தவிக்கின்றார்கள்; சுற்றத்தார் யாவரும் உயிரிழந்த உடம்பு போலத் துயர்க்கடலுளுணர்வற்றுக் கிடக்கின்றனர்; உன் ஏவலாளர் யாவரும் உன்னைத் தேடித் திசை திசைக்குச் சென்றிருக்கின்றனர்; பூம்புகார் நகரம் முழுதும் இராமனைப்பிரிந்த அயோத்திபோலச் செயலற்றுக் கிடக்கின்றது. உன் காதற்குரிய மாதவியோ, வசந்தமாலை மூலம் நீ திருமுகம் மறுத்தது முதல், மஞ்சத்தில் துஞ்சினாளே போலக் கிடக்கின்றாள். இந்த நிலையில் நான் மாதவியைப் பார்க்கச் சென்றேன். அவள் என்னே நோக்கி, ‘உமது இணையடி தொழுதேன். இத்துயர் தீர்க்க,’ என்று சொல்லி அப்போதே ஒரு திருமுகம் எழுதி, என் கண்மணி போல்வாருக்குக் காட்டுக!’ என்று என் கையிற்கொடுத்தாள். நான் அதனைக்கொண்டு திசையெல்லாம் தேடித்திரிந்தும் உன்னைக் காணாமல் பல இடங்களும் சுற்றி அலைந்தேன்,’ என்று சொல்லி, ‘அவ்வோலை இது’ என நீட்டினன். அவ்வோலேயின் மடிப்புறம் மாதவியின் புழுகு நெய் பூசிய கூந்தல் முத்திரையிட்ட மண்ணுடன் கூடியதாயிருந்தமையால், அதனைப் பிரித்து விட மனமில்லாதவனாய்ப் பின்பு பிரித்துவாசித்தான். அதில் “அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேள்,” என்று தொடங்கி,

வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் :
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோ(டு)
இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது,
கையறு கெஞ்சங் கடியல் வேணடும் :
பொய்தீர் காடசிப் புரையோய் ! போற்றி !”

என்று எழுதியிருந்தது. கோவலன் அதனைக் கண்ணுற்று மனங்குழைந்தான் ; “மாதவி யாதொரு பிழையும் செய்திலள்; இஃது என் தீவினைப் பயனே,” என்று சொல்லித் தளர்ச்சி யொழிந்தான். பின் அவன் கெளசிகனை நோக்கி, “இவ்வோலையை என் தந்தை யார்க்கு யானெழுதும் ஒலை போலவும் ஏற்ற சொற்களும் பொருளும் பொருந்திக் காணப்படுகின்றது; என் பெற்றோரைத் திசைநோக்கித் தொழுகின்றேன்;

விரைந்து சென்று இவ்வோலேயை அவர்கட்குக் காட்டி, என் பிரிவால் அவர்களுக்குற்ற தளர்ச்சியையும் துன்பத்தையும் நீக்குவாய்,” என்று கூறி அவனை அனுப்பிவிட்டு, அப்பால் கவுந்தியும் கண்ணகியும் இருக்குமிடத்திற்கு வந்தான். பின்பு அவர்களுடன் புறப்பட்டு, இடைவழியிற்கண்ட பாணர்களோடு அளவளாவி, அவர்களது வீணையை வாங்கி வாசித்துக் கொண்டே வழி நடந்தான். நடந்தவன், அவர்களே நோக்கி, “மதுரை நகர்க்கு இவ்விடத்திலிருந்து இன்னும் எத்தனை காதம் உள்ளது?” என்று கேட்டான். அதற்குப்பாணர்கள், “இனி நெடுந்தூரமன்று; அண்ணிதே; புலவர் மனத்தோடு நகரின் பலவகைமனங்களையும் மொண்டுகொண்டு, மதுரைத்தென்றல் நம்முகத்தில் வந்து வீசுகின்றது பார்” என்றனர். அன்று இரவு அவ்விடத்தில் தங்கி, நடு இராப்பொழுதில் புறப்பட்டு வையை ஆற்றின் கரையையடைந்து, “புனல்யாறு அன்று இது, பூம்புனல் ஆறு.” என்று தொழுது, மூவரும் ஒடத்தில் ஏறி ஆற்றைக் கடந்து, தென்கரை சேர்ந்தார்கள். மதுரையை வலஞ்செய்துவந்து மதிற்புறத்தில் கீழ்த்திசை வாயிலுக்கு அருகிலுள்ள புறஞ்சேரியில் அருகமுனிவர் இருக்கையில் தங்கினர்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *