
கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்
கண்ணகி சேர நாட்டில் தெய்வமாதல்
கண்ணகிக்கு இங்ஙனம் மலைவாணர்கள் குரவையாடிச் சிறப்புச்செய்த இச்சமயத்தில், சேர ராஜதானியாகிய வஞ்சிமாககரிலிருந்து அரசு செலுத்துபவனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகனுமாகிய செங்குட்டுவன் என்பான், இலவந்திகை மாடத்தில் தன் தேவி இளங்கோ வேண்மாளுடன் இருந்தவன், தேவியின் விருப்பப்படி மலை வளங் கண்டு களிக்கக் கருதினன். பின்பு அவ்வாறே தன் பரிவாரங்கள் சூழத் தன் தேவி வேண்மாளோடும் தம்பி இளங்கோவடிகளோடும் வஞ்சிமாநகரை விட்டுப் புறப்பட்டு, மலையை ஊடறுத்துக்கொண்டு இழியும் பேராற்றங்கரையின் மணல் மிக்க எக்கரில் தங்குவானாயினன். அப்போது மலையில் குரவை நிகழ்த்தும் குறத்தியர் பாடலும், வேலன் பாட்டும், தினையிடிக்கும் ஓசையும், அருவியின் ஒலியும், புலியோடு பொருகின்ற யானையின் முழக்கமும், பரண்மீதிருந்து தினைப்புனம் காப்போர் கூப்பீடுகளும், இன்னும் பல்வகைஓசையும் ஆற்று மணலில் தங்கியிருக்கும் சேரனது சேனையின் ஆரவாரத்தோடு கலந்தொலித்தன. இவ்வமயத்தில், குறவர்கள் தங்கள் மலையில் வேங்கைமர நிழலிற் கண்ட அதிசயத்தை ஆற்றங்கரையில் தங்கியிருக்கும் தங்கள் அரசனுக்குத் தெரிவிக்கக்கருதி, யானைத்தந்தம், அகிற்கட்டை, சக்தனக்கட்டை, கவரி, தேன் குடம், சிந்துாரம், அரிதாரம், ஏலக்காய், வெற்றிலை, கூவைக்கிழங்கு (Arrow-root), மா, பலா, வாழைக் கனிகள், பூங்கொடிகள், பாக்குத்தாறு, ஆளிக்குட்டி சிங்கக்குட்டி, புலிக்குட்டி, யானைக்கன்று, குரங்குக்
குட்டி, கரடிக்குட்டி, மலையாடு, பன்னையாடு, மான் குட்டி, கஸ்தூரிக்குட்டி, கீரிப்பிள்ளை, மயில், கானக் கோழி, கிளி முதலிய மலைபடு பொருள்களைக் காணிக்கையாகச் சுமந்து, அரசன் சமுகத்திற்போய், ‘ஏழ்பிறப்படியோம், வாழ்கனின் கொற்றம்’ என்று அவன் அடி வணங்கினர்கள். பின்பு அவர்கள் அரசனை நோக்கி, “வேந்தர் வேந்தே, நாங்கள் வாழும் மலையிடத்து ஒரு வேங்கைமர நிழலில் மங்கையொருத்தி ஒரு பக்கமார்பு சிதைந்தவளாய்ப் பெருந் துயரோடும் வந்து நிற்க, தேவர் கூட்டம் அவ்விடம் வந்து அம்மங்கைக்கு அவள் காதற்கொழுநனக் காட்டி, அவளையும் தேவ விமானத்தில் அழைத்துச் சென்றனர்; அவள் எந்நாட்டாளோ, எவர் மகளோ, அறியோம்! இது பெரியதோர் அதிசயமாய் இராகின்றது ; பெருமானது நாட்டில் நிகழ்ந்த இதனை அறிந்தருளல் வேண்டும்,” என்று பணிவுடன் தெரிவித்தனர்.
அப்போது, மதுரையில் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி மதுரையை எரித்ததும் முதலாகிய செய்கிகளை நேரில் அறிந்தவராகிய மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் என்னும் தண்டமிழ்ப்புலவர், அரசனுடன் அங்கிருந்தவர், குறவர் கூறிய இச்செய்தியை அரசனுக்குத் தெரிவிக்கக் கருதி, “சேரர் வேந்தே, நான் அறிவேன் அது நிகழ்ந்த வற்றை,” என்று தொடங்கி, சிலம்பு கவர்ந்த திருடனென்று கோவலனைப் பாண்டியன் கொலை செய்வித்ததும், கண்ணகி பாண்டியன் முன் பெருஞ்சினத்துடன் வழக்குரைத்து வென்றதும், பாண்டியன், கொடுங் கோலுக்கஞ்சி உயிர் நீத்ததும், அவனிறந்தமை ஆற்றாது தேவியிறந்ததும், அரசியின் முன்பு கண்ணகி தன் சிலம்பை வீசி எறிந்துவிட்டுத் தனது மார்பைத் திருகி எறிந்து மதுரையை எரித்ததும் ஆகிய செய்திகளை விளங்கக் கூறிவிட்டுப் பின்பு, “பாண்டியனது கொடுங்கோன்மையைத் தலைமையரசனகிய உன்னிடம் கூறவந்தவள் போலத் தன்னாடாகிய சோனாடு செல்லாது உனது நாட்டை வந்தடைவாளாயினள் அம்மங்கை” என்று கூறி முடித்தார்.
இவ்வாறு புலவர் கூறக்கேட்ட செங்குட்டுவன், பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைப்பயனுக்கு வருந்திப் “புலவீர், ஊழ்வினையால் செங்கோலினின்றும் வழுவிய செய்தி, எம் போன்ற அரசர் செவிகளிற் படு முன்பே தன் குற்றத்துக்கு இரங்கிப் பாண்டியன் தன்னுயிரை விட்டான். அவ்வாறுவிட்ட உயிரே ஓர் ஆணியாய்க்கொடுங்கோலைச் செங்கோலாய் நிமிர்த்து விட்டது:அரசராயுள்ளோர்க்குத் தம்நாட்டில் மழை, காலத்தே பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் பிழை செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோலுக்கஞ்சி மன்னுயிர் காத்தலைக் கடப்பாடாகவுடைய அரசர் குடியிற் பிறத்தல் துன்பமல்லது இன்பமன்று”என்று சாத்தனார்க்குக் கூறிவிட்டுத் தன் தேவியை நோக்கி”அன்பிற்கருங்கலமாகிய பெண்ணே, கணவனுடன் உயிர் நீத்த பாண்டியன் தேவியும்,சினத்துடன் நம்காட்டை நாடி வந்த கண்ணகியும் ஆகிய இவ்விருபெரும்பத்திணிகளுள் யாவர் வியக்கத்தக்கவர்?’ என்று வினவினான். அதற்கு வேண்மாள், “தன் காதலனது துன்பத்தைக் காணப் பொறாது உயிர் நீத்த பண்டியன் பெருந்தேவி விண்ணுலகத்தேபேரின்பமுறக்கடவள்; அது நிற்க. இப்போது வேற்று நாட்டிலிருந்து நமது நாட்டைந்த பத்தினியை நாம் தெய்வமாகக் கோயில் செய்து பரசுதல் இன்றியமையாதது,” என்று கூறினாள்.
இதனைக்கேட்ட அரசன் தன் தேவியின் விருப்பத்திற்கு இணங்கி, அமைச்சரை நோக்கினான். அதனையறிக்த அமைச்சர்கள் ‘நம் நாடு நோக்கிவந்த அப்பத்தினித் தெய்வத்திற்குப் படிமம் சமைப்பதற்குரிய சிலையைப் பொதியமலையிலேனும் இமயமலையிலேனு-
மிருந்து எடுத்து வரல்வேண்டும்; அக்கல், பொதியக் கல்லாயின், காவிரியினும், இமயக்கல்லாயின், கங்கையிலும் நீராட்டித்தூய்மைசெய்தல் மரபாகும்”என்று கூறினர். இங்ஙணம் கூறக்கேட்ட செங்குட்டுவன், “பொதியமலையிற் கல் எடுத்துக் காவிரியில் நீராட்டல், எம்போன்ற வீரமிக்க சேரர்குடியிற்பிறந்தார்க்குச் சிறப்போடு பொருந்திய செய்கையாகாது; ஆதலால், இமயத்தில்கல்லெடுத்துக்கங்கையில் நீர்ப்படை செய்தலே எம் பெருமைக்கேற்ற செயலாகும்; இமய வரையன் நம் விருப்பிற்கிணங்கானாயின், வஞ்சி குடிச் சென்று பொருது சிலை பெறுவோம்,” என்று விராவேசத்துடன் உரத்துக்கூறினான்.
இங்ஙணம் சேரன் கூறியதைக் கேட்ட வில்லவன் கோதை என்ற சேனாதிபதி, அரசனை வாழ்த்தி, “வேந்தே, உம்மைப்போலும் வேந்தராகிய சோழ பாண்டியர், உம்மொடு பகைத்துக் கொங்கர் செங்களத்திற்செய்த போரில், அவர்கள் தமது புலிக் கொடியையும், மீன்கொடியையும் போட்டுவிட்டு ஓடியசெய்தி திசையானை களின் செவியிலும் சென்று எட்டியதன்றோ கொங்கணர், கலிங்கர், கருகாடர், பங்களர், கங்கர், கட்டியர், வடவாரியர் என்னும் அரசர்களுடன் உமது தமிழ்ப்படை கலந்து செய்த போர்க் களத்தில், நீவிர் யானைமேற்சென்று பகைவரை வெந்நிட்டழியச் செய்த அரியசெய்கை இன்னும் எங்கன் கண்களை விட்டகலவில்லை. அன்றியும் எம் கோமகளாகிய உம் தாயின் படிமத்தைக் கங்கையில் நீராட்டிய காலத்தில் எதிர்த்து வந்த ஆரிய மன்னர் ஆயிரவருடன் நீர் ஒருவராக நின்றுபொருத சினவெங்கோலத்தைக் கடுங்கண் கூற்றமும் கண்விழித்துப் பார்த்ததன்றோ! கடல் புடை சூழ்ந்த இந்நிலவுலகமுழுவதையும் வென்று தமிழ் நாடாக்கக் கருதிநீவிர் வடநாட்டு யாத்திரை செய்யின் உம்மை எதிர்ப்பார் அங்கு யாவர் ! இப்போது நீவிர்செய்யவிருக்கும் வடநாட்டு யாத்திரையைக் குறித்து ஆங்கு வாழும் அரசர்க்கெல்லாம் வில், கயல், புலி இவற்றை இலச்சினையாகக் கொண்ட உம் திருமுகத்தை முன்னே விடுத்தருள வேண்டும்.” என்று கூறினான்.
இதனைக் கேட்ட அழும்பில் வேள் என்னும் அமைச்சன், இந்நாவலந்தீவில் நமக்குப் பகைவராயுள்ளாரின் ஒற்றர்கள், நம் நகரத்தை நீங்காது இருப்பார்களாதலால், நாம் நம் வடநாட்டு எழுச்சியைப் பறையறைந்து நம் நகரில் தெரிவிக்குமாறு செய்திடின், அவ்வொற்றர்களே பகையரசர்க்கு இச்செய்தியைத் தெரிவித்துவிடுவர்; ஆதலால், திருமுகம் விடுத்தல் மிகையாகும்,” என்று சொன்னான். அரசனும் அதற்கு உடன்பட்டுப் பேராற்றங்கரையினின்றும் பெயர்ந்து, பரிவாரங்களுடன் வஞ்சிமாநகர் வந்து சேர்க்தான், சேர்ந்ததும் யானைமேல்முரசை ஏற்றிச் செங்குட்டுவனதுவடநாட்டுப்பயணத்தைப்பற்றியும் அப்போது இடையிலுள்ள பகையரசர் வந்து வணங்காவிடில் அவர்க்கு நேரும் தீங்குகளைப்பற்றியும்
“வாழ்க! எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றூழி யுலகங் காக்கென
விற்லைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்
கற்கொண்டு பெயரும்எங் காவல னாதலின்
வடதிசை மருங்கின் மன்னரெல்லாம்
இடுதிறை கொடுவக் தெதிரீ ராயின்
கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின் ; கேளீ ராயின்,
தோட்டுனை துறக்கும் துறலொடு வாழுமின் ;
தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி
வாழ்க சேனா முகம்!”
என்று வள்ளுவன் தெருவெங்கும் கூறி முரசறைந்தான்.
இவ்வாறு வஞ்சிமாநகரில் வடநாட்டு யாத்திரை குறித்துப் பறையறையப்பட்ட பின்னர் அன்று மாலையில் ஆசான், பெருங்கணி, அமைச்சர், சேனாதிபதிகள் சூழ்ந்து வாழ்த்தி, ஆணையை எதிர்பார்த்து நிற்க, சேரன் செங்குட்டுவன் சிங்காதனத்தில் வீற்றிருந்து, சேனைத் தலைவர்களை நோக்கி, “ஆரியமன்னர்கள், தம் நாட்டில் நடந்த ஒரு சுயம்வரத்தில் கூடியிருந்த போது, தமிழ் நாடாளும் வேந்தர் படையுடன் வந்து இமயமலையின் நெற்றியில் தமக்குரியவில், கயல், புலிக் குறிகளைப் பொறித்த நாளில் ‘எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை,’ என்று கூறித் தமிழ் வேந்தரை இகழ்ந்துரைத்த செய்தி, இங்கு வந்த தாபதரால் அறியலானோம்; அவ்விழிந்த மொழி தமிழ் வேந்தர் அனைவர்க்கும் சால இழிவு பயப்பதாகும்; ஆகலின், அங்கனம் இகழ்ந்து பேசிய ஆரிய மன்னர் முடிமேல் பத்தினிக் கடவுளைச் சமைத்தற்குரிய கல்லை ஏற்றிக் கொண்டு வருவேன் ; அங்ஙனம் செய்யாது என்கை வாள் வாளா வருமாயின், நான் பகையரசரை நடுங்கச் செய்யாது குடிகளை நடுங்கச்செய்த கொடுங்கோலனாகக்கடவன்!” என்று அப்பேரவையில் சினமிகுந்து வஞ்சினங் கூறினன் ; ஆசான், ‘அரசே, கோபந் தணிக!’ என்று சமனஞ் செய்தனன். அப்போது நிமித்தம் வல்லவனகிய மெனத்திகன் எழுந்துநின்று, ‘வேந்தே, பகைவேந்தரெல்லாம் உன் திருவடியை வணங்கத்தக்க கல்முழுத்தம் இதுவே; நீ கருதிய வட திசைச் செலவுக்கு இப்போதே எழுதல் நன்று,’ என்றான்.
நிமித்திகன் இங்ஙனம் கூறியதற்குச் செங்குட்டுவன் இசைந்து, தன் வாளையும் குடையையும் வடதிசைப் பெயர்த்து, நாட்கொள்ளும்படி கட்டளையிட்டான். அவ்வாறே ஐம்பெருங்குழு எண்பேராயம் எனப்படும் சபையோர்களும், கரும வினைஞர், கனக்கியல் வினைஞர் முதலிய அரசாங்க நிர்வாகிகளும் சேர்ந்து, பல்வகை வாத்தியம் முழங்கப் பட்டவர்த்தனக்களிற்றின் மேல் ஏற்றிய அரசவாளையும் வெண்கொற்றக் குடையையும் வஞ்சியின் வடதிசைப்புற மதிலுள் புகும்படி செய்தனர். அன்றிரவு, அரசன் போர் வீரர்கட்கும் பெருஞ்சோற்று விழாவோன்று செய்து அவர்களுடனிருந்து உண்டு, அவர்கட்கு உள்ளக் கிளர்ச்சியை உண்டு பண்ணினான். பின்பு வட நாட்டு வேந்தரை வெல்ல மேற்செல்லும் தன் கருத்தும் தோன்ற வஞ்சிமாலை முடியிலணிந்து மறுநாட் காலையிற் புறப்படச் சித்தமாயிருந்தனன்.
பொழுது புலர்ந்ததும் அரண்மனையில் மங்கல முரசம் முழங்கியது. அவ்வேளையே பயணத்திற்குக் குறித்த வேளையாதலால், செங்குட்டுவன், தன் குல தெய்வமாகிய சிவபெருமான் திருவடியை வலங் கொண்டு வணங்கி முடியிலணிந்து, பட்டவர்த்தனக் களிற்றின் மீதூர்ந்து, நால்வகைப்படையும் சூழப் புறப்பட்டுச் சென்று, நீலகிரியை அடைந்து, அங்கு அமைந்திருந்த பாடியில் தங்கி இளைப்பாறினன்.
இச்சமயத்தில், கொங்கணக் கூத்தரும், கருகாடகரும், குடகரும், ஓவரும் தத்தமக்குரிய அலங்காரங்களுடன் அரசன் முன் வந்து, ஆடல் பாடல்களைச் செய்து பரிசில் பெற்றுச் சென்றனர். பின்பு சஞ்சயன் முதலிய தன் தூதுவர்கள் பல்வகைத்திறைப்பொருள்களோடு வந்து வணங்கி, “அரசர் பிரானே, வட திசைச்செல்வது பத்தினிக்கடவுளின் உருவம்சமைத்தற்குரிய சிலையின்பொருட்டேயாயின், ‘நாங்களே
இமயத்திற் கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்து தருகின்றோம்,’ என்று நும் கட்பரசராகிய நூற்றுவர் கன்னர் தெரிவித்திருக்கின்றனர்,” என்று கூறி நின்றனர். அது கேட்ட செங்குட்டுவன், “வட நாட்டு அரசனாகிய பாலகுமாரன் மக்கள் கனகன் விஜயன் என்ற இருவரும், வடவரசர் பலருடன் கூடியிருந்த அமையத்தில் தம் நாவைக்காவது, எம் முடைய வலிமையை இகழ்ந்துரையாடினராம். ஆதனால் பத்தினிப் படிமத்துக்குக் கல்கொணரச் செல்வதோடு, இகழ்ந்த அவ்வடவேங்தரை வெல்வதற்கும் செல்கின்றது இப்படை என்பதனை நூற்றுவர் கன்னர்க்குத் தெரிவித்துக் கங்கையாற்றைக் கடப்பதற்கு காவாய் முதலியன அமைத்து வைக்கவும் கூறுங்கள்,” என்று சஞ்சயனை முன்னர் அனுப்பி வைத்தனன். பின்பு பாண்டியர் முதலிய அரசரிடமிருந்து அச்சமயம் வந்த திறைப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு செங்குட்டுவன் நீலகிரிப் பாடியினின்றும் எழுந்து வடதிசை கோக்கிப் புறப்பட்டான்.
இங்ஙனம் புறப்பட்ட செங்குட்டுவன், கங்கை ஆற்றை அணுகி, தன் நட்பரசராகிய நூற்றுவர் கன்ன்ர் அமைத்து வைத்திருந்த மரக்கலங்களில் ஏறி, அக்கரைசார்ந்து,அவர்களால் உபசரிக்கப்பெற்று,அங்கிருந்தும் புறப்பட்டு உத்தர கோசலத்தையடைந்து, பாசறை அமைத்துத் தங்கியிருக்தனன். இவ்வாறு சேரன் தம் நாட்டில் பாசறையமைத்துத்தங்கியிருப்பதையறிந்தவுடன் அந்நாட்டரசர்களான உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தான், சிலேதன் என்பவர்களைத் துணைக்கொண்டு கனகவிசயர் என்ற வடவேந்தர், ‘தமிழர் ஆற்றலைக் காண்போம் என்ற தருக்குக் கொண்டுபெருஞ்சேனையுடன் வந்து எதிர்த்தனர்.இவ்வாறு ஆரியவரசர் ஒருங்கு ஆடி வருதலைக் கண்ட செங்குட்டுவன், இரையை வேட்டு, வேட்டையிற் சென்ற சிங்க ஏறானது யானைக் குழாங்களைக்கண்டு பாய்வது போலப் பாய்ந்து, வடவரசர் சேனைகளைக் கொன்று குவித்து நூழிலாட்டினான். போரில் அழிந்தவர் போக, ஒழிந்தவர்களெல்லாம்தத்தம் படைகளை எறிந்துவிட்டு, சடை, காஷாய உடை, சாம்பல் இவற்றைப் பூசி, ‘சந்நியாசிக’ளென்றும், பீலியேந்தி ‘சைன முனிவர்” என்றும், இன்னும் ‘பாணர்’ என்றும், ‘கூத்தரென்றும்’ சொல்லித் தப்பியோடினர்.நாவைக் காவாது தமிழரசரை இகழ்ந்த கனக விசயர் இருவரும் தம் துனையரசர் ஐம்பத்திருவருடன் சேரன் கையில் அகப்பட்டனர். தேவரசுர யுத்தம் பதினெட் டாண்டிலும், இராம ராவண யுத்தம் பதினெட்டுத் திங்களிலும், பாண்டவ கெளரவர் யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவ கனகவிசயர் யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தன,” என்று உலகம் கொண்டாடப் பெரும்போர் புரிந்த அசகாய சூரனாகிய செங்குட்டுவன், பின்பு தன் சேனைத் தலைவன் வில்லவன் கோதையைப் படையுடன் போக்கி இமயமலையினின்றும் பத்தினிக் கடவுளின் படிமம் சமைப்பதற்குத் தக்க சிலையைக்கொணரச்செய்தான். பின்பு அதனைத் தோற்ற வேந்தராகிய கனகவிசயரது முடித்தலையில் எற்றிக் கங்கையை அடைந்து, சிலையைக் கங்கை நீரில் முறைப்ப்டி நீர்ப்படை செய்து, தென்கரைசேர்ந்து நூற்றுவர் கன்னரால் அமைக்கப் பட்ட அழகிய பாடியில் தங்கினன். பின்னர்ப் போரில் புறங்காட்டாது பொருத படைத் தலைவர்கட்கும் வீரர்கட்கும் வெற்றிக்கறிகுறியாகப் பொன்னாலாகிய வாகை மாலைகளை கெடும்பொழுதளவுமிருந்து வழங்கினான்.
இவ்வமயத்தில் கங்கையாடுதற்கு வந்த மாட லன் என்னும் மறையவன் செங்குட்டுவனது இருக்கைக்கு வந்து, அவனை வாழ்த்தி, ‘மாதவியின் கானல் வரிப்பாட்டானது, கனகவிசயரது முடித்தலையை
நெறித்துவிட்டது’ என்று நகை விளையக்கூறினான் இதனைக் கேட்ட சேரன், ‘மாடல,நீ இப்போது கூறிய ஆசியக்கூற்றின் பொருள் இன்னதென விளங்கக்கூறுதி.” என்று கூறினன். கூறலும், அவன் புகார் நகரத்தில் மாதவியும், கோவலனும் விழாமுடிவிற் கடலாடச் சென்றது முதல் நிகழ்ந்த வரலாறெல்லாம் விரித்துக்கூறித் தான் கூறிய சொற்றொடரின் பொருளை விளங்க வைத்தான்; மேலும் அவன் மதுரையில் கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற இடைக்குல மடத்தை மாதரி, அடைக்கலப் பொருளை இழந்தமைக்கு ஆற்றாது தீப்பாய்ந்திறக்ததும், கவுந்தியடிகள், கோவலன் கோலை பொறாது, உண்ணா நோன்புபூண்டு உயிர் நீத்ததும், கோவலன் தந்தை, பொருன் முழுதையும் தானம் புரிந்து தவக்கோலமுற்றதும், அவன் மனைவி பெருமனைக் கிழத்தி, புத்திர சோகத்தால் உயிர் விட்டதும், கண்ணகியின் தந்தை சமணமதம் சார்ந்ததும், அவன் மனைவி உயிர்நீத்ததும், இவற்றையெல்லாம் அறிந்த மாதவி பிக்குணிக்கோலம் பூண்டதும் ஆகிய தென்னாட்டுச் செய்திகள் பலவற்றையும் எடுத்து மொழிந்து, ‘மதுரையினின்றும் புகாருக்குச் சென்ற யான் கூறிய செய்தி, அங்குப் பலர் இறத்தற்குக் காரணமானபடியால் அத்தீங்கு தீரக்கங்கையாட வந்தேன்,’ என்றும் கூறி அங்கு அமர்ந்தான்.
இங்ஙனம் மறையவன் கூறியவற்றையெல்லாம் செவியேற்ற செங்குட்டுவன், அவனைப் பார்த்து, “நெடுஞ்செழியன் துஞ்சிய பிறகு பாண்டிநாடு எந்நிலை உற்றது?” என்று வினவ, மாடலன், “அரசே, கொற்கையிலிருந்த வெற்றி வேற்செழியன் மதுரைக்கு வந்து பத்தினிக் கடவுளுக்கு ஆயிரம் பொற் கொல்லரைப் பலியிட்டுக் களவேள்வியால்சாந்தி புரிய நாடு செழித்தது. அவன் சிங்காதனமேறி அரசாளுகின்றனன்,” என்று கூறினன்.
இங்ஙனம், வார்த்தையாடிக்கொண்டிருக்கையில் மாலைக் காலம் வந்தமையால் காலக் கடன் முடிக்கச் திசையில் செவ்வானத்தில் திகமும் வெண்பிறையைக் கூர்ந்து கோக்கினன். அப்போது அரசனது சோதிடன், “நாம் வஞ்சிமாநகர் விட்டு இங்கு வந்து முப்பத்திரண்டுமாதம் கழிந்தன.” என்றான். உடனே அரசன் தன் ஆசனத்தில் வந்தமர்ந்து, மாடலனிடம் தன் மைத்துனனாகிய பெரு கற்கிள்ளியின் ஆட்சி நலம் எத்தகையது என்று வினவ, மறையவன்,”சோழர் குலத்தவர் செங்கோல் கோடி வேறாகும் காலமும் உண்டோ?” என்றுவிடை பகர்ந்தான். அதன்மேல் சேரன் மாடலனுக்குத் தன் நிறையாகிய ஐம்பது துலாம்பாரம் பொன் தானமாக அளித்தனுப்பினன். தமிழ் நாடாளும் வேந்தர் ஆற்றலே அறியாது இகழ்ந்து அவமானமுற்ற கணகவிசயரைச்சோழ பாண்டியர்க்குக் காட்டி வரும்படி நீலன் முதலிய ஒற்றரை அனுப்பிவிட்டுக் கங்கைக் கரையி னின்றும் சேனைகளுடன் புறப்பட்டு ஆங்காங்குத் தங்கித்தன் வருகையை எதிர்பார்த்திருக்கும் கோப்பெருந்தேவி மகிழவும், பல்வகை வாத்தியங்கள் முழங்கக் குஞ்சர வொழுகையொடு கோகர் முழுவதும் வந்தெதிர்கொள்ளவும் பட்டத்து யானை மீது வெண் கொற்றக் குடை நிழற்ற முடிமீது வாகைமாலை மிளிரச் சேரன் வஞ்சி மூதூர் வந்து புகுந்தான்.
வஞ்சிமாநகர் புகுந்த செங்குட்டுவன், ஒரு நாள் பூரணசந்திரன் விளங்கும் அந்திக்காலத்துப் பரிவாரங்கள் சூழத் தன் தன்மபத்தினியாகிய இளங்கோவேண்மாளோடுங் கூடி நிலாமணியரங்கை அடைந்து சாக்கையன் என்பான் நிகழ்த்திய கொட்டிச்சேதம்
என்னும் கூத்தினைக் கண்டு களித்தான். பின்னர்ச் செங்குட்டுவன் தேவியுடன் நிலாமுற்றத்தை விட்டுப் புறப்பட்டுப் பேரோலக்க மண்டபத்தையடைந்து, அரியணையில் வீற்றிருந்தான். அப்போது, கனகவிசயரைக் கல்லேற்றி அழைத்துச் சென்ற நீலன் முதலியோர்கள், அரசன் அவையில் வந்து வணங்கி, “அரசே, கட்டளைப்படியே நாங்கள் சோழர் தலைநகர் சென்று, அங்குச் செம்பியர் பெருமானைக்கண்டு ஆரிய மன்னர்களைக் காட்டி வணங்கினோம், அவர்களைக் கண்ட சோழன், ‘போரிற் பேராண்மையுடன் பொருது அஞ்சியோடிய வேந்தரைப் பிடித்து வருதல் ஒரு வெற்றியாகாது,’ என்று கூறினன். பின்னர், வேந்தே, மதுரை சென்று பாண்டியனைக்கண்டோம், பாண்டியன், ‘தப்பியோடிய மன்னர்மேல் இவ்வாறு சீற்றங்கொண்ட அரசனது வெற்றி இதுவரை யாம் காணாத புதுமையாகும்,’ என்றான்,” என்று சொல்லிகின்றனர். இவ்வாறு தன் வெற்றியைச் சோழபாண்டியர் இகழ்ந்தனர் என்ற அளவில் செங்குட்டுவன் கோபம் பெருகிக் கண்கள் சிவந்து வெகுளி நகை செய்தனன். இங்ஙனம் அரசனுக்குச் சீற்றம் பெருகுதலைக்கண்ட மாடலமறையோன் சபையில் எழுந்து, “வெற்றி வேந்தே, கோபந்தணிக பகைவர்களை வென்று நீ அடைந்த வெற்றிபோல் வெற்றிபெற்றார் அரசருள் எவருளர்; உன் வாழ்நாள் பல்குக ! நான் சொல்லும் சொற்களை இகழாது ஏற்றருள வேண்டும். உனக்கு ஐம்பது யாண்டு கழிந்தும் நீ அறக்கள வேள்வி செய்யாது எப்போதும் மறக்கள வேள்வியே செய்து வருகின்றாய். உலகத்தில், இளமை, யாக்கை, செல்வம் எல்லாம் நிலையாவென்பதனை நீ நன்கறிவாய். உயிர்கள் தாம் செய்யும் நற்கருமங்களுக்கேற்ப உயர் கதியடையும். அத்தகைய யாக கருமங்களை இனி நீ செய்தல் வேண்டும்; ஆதலால், யாகபத்தினியாகிய
உன் தேவியுடன் இராசசூய வேள்வியை உடனே தொடங்குவாயாக,” என்று செங்குட்டுவன் மேலும் போர் தொடங்காது கோபம் தணியுமாறு உபதேசித்தனன்.
மாடலன் உபதேசம் பெற்ற அரசன், அவ்வாறே இராசசூய வேள்வி செய்யக்கருதி, அதற்கு வேண்டியனவெல்லாம் சித்தஞ் செய்து, வேள்வியை வேதம் வல்லாரைக்கொண்டு தொடங்கக்கட்டளை யிட்டான்.
இவ்வாறு கட்டளையிட்ட பின், உலகமெல்லாம் தொழும் பத்தினியாகத் தான் (கண்ணகி) விளங்குகின்றமையால்,’மடவார் கற்பு அரசர் முறைசெயினல்லது சிறவாது,’ என்னும் ஆன்றோர் நீதியைச் (தன் கணவனை நல்வழிப்படுத்தாத) சோழனைக்கொண்டுவிளக்கியும் செங்கோல் வளையின் அரசர் உயிர் வாழார் என்பதனப் பாண்டியனைக்கொண்டு விளக்கியும், தாம் செய்த சபதம் முடிந்தாலல்லது கடுஞ்சினங் தணியார் அரசர் என்பதனைச் சேரனக்கொண்டு விளக்கியும், மதுரைமாநகரம் எரிந்தழியுமாறு அழலைத் தன் சாப மொழியால் விளைவித்து, அருஞ்செயல் பல புரிந்து, சேரநாடடைந்து வேங்கைமர நிழலில் நின்றபத்தினி தேவியின் பொருட்டு அழகுபெறச் சமைத்த கோயிலுக்குச் செங்குட்டுவன், அந்தணர், அறிவர், புரோகிதன், நிமித்திகர் தலைவன் இவர்களுடன் சென்று, இமயத்தினின்றும் கொணர்ந்த சிலையில் சிற்பமுறையில் செய்து முற்றுவிக்கப்பெற்ற பத்தினிப் படிமத்தில் மங்கல அணிகள் பூட்டி அலங்கரித்துப் பூப்பலியாகிய அருச்சனைகள் புரிந்து, திக்குத் தேவதைகளைக் கடை வாயிலில் நிறுவி, ஆகம முறைப்படி பத்தினித் தெய்வத்தைப் பிரதிட்டை பண்ணுவித்துப் பெருமகிழ்ச்சி உற்றான்.
இஃது இங்ஙனமாக, கோவலன் கொலையுண்டிறந்தமையைக் கேட்டு, காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து கண்ணகியின் செவிலித்தாயும் அடித்தோழி தேவந்தியும் கண்ணகியைத் தேடிக் காணுதற்குப் புறப்பட்டு மதுரை வந்தனர் ; மதுரை எரிபட்டிருப்பதைக் கண்டு மாதரி வீட்டுக்குள் சென்றனர். மாதரி அடைக்கலப்பொருளாகிய கோவலனை இழந்ததனால் துன்புற்றுத் தீயிற்பாய்ந்து இறந்து போனமையால், அவள் மகள் ஐயையைக் கண்டு, நடந்தவற்றை யெல்லாம் கேட்டுத் தெரிந்தனர். பின் அவர்கள் ஐயையோடும் புறப்பட்டு வைகைக் கரை வழியாகச் சென்று, செங்குன்று என்னும் கண்ணகி எறிய மலையில் ஏறிப் பின்னர்ப் பத்தினிக் கோயிலை அடைந்தார்கள். அடைந்தவர்கள், அங்கிருந்த செங்குட்டுவனிடம் தாங்கள் ‘இன்னார்’ என்று தங்கள் வரலாற்றைத் தெரிவித்துக் கண்ணகி தேவியைத் தரிசித்துப் பலவாறு அரற்றிப் புலம்பினர், அதனை அவன் கேட்டுக் கொண்டிருக்கையில், கண்ணகி செங்குட்டுவனுக்கு மின்னற்கொடிபோலப் பளிச்சென்று மின்னி, தெய்வ வடிவத்தோடு காட்சி தந்தருளினாள். இதனைக் கண்ட செங்குட்டுவன் மிகுந்த ஆச்சரியமுற்றான். அப்போது தெய்வமாகிய கண்ணகி, “பாண்டியன் தீதில்லாதவன். அவன் இந்திரன் அரண்மனையில் நல் விருந்தாய் விளங்குகின்றான்; நான் இத் தெய்வ உடம்பைப் பெறுவதற்கு அவனே காரணமானவனாதலால், நான் அவன் மகள்,” என்றாள். உடனே வஞ்சி நகரத்துப் பெண்களெல்லாம் கண்ணகியைத் துதித்து பாடி, மூவேந்தரையும் வாழ்த்தினர். கண்ணகி தேவியும், “செங்குட்டுவன். நீடூழி வாழ்க!” என்று வாழத்தினள்.
கண்ணகியின் கடவுட்கோலத்தைத் தரிசித்து நின்ற செங்குட்டுவன், தேவந்தி என்னும் பார்ப்பனியை நோக்கிச் “சிறிது முன்பு நீங்கள் அழுது புலம்பிக் கொண்டு, பத்தினியின் சந்நிதானததில் கூறிய மணிமேகலை, என்பவள் யார்? அவன் துறவு பூண்டதற்குக் காரணமென்ன?” என்று கேட்டனன். அதற்குத் தேவந்தி, கோவலனுக்கு நாடகக் கணிகை மாதவி வயிற்றிற்பிறந்த மணிமேகலையின் சரிதத்தைக் கூறத் தொடங்கி, அவன் பிறந்ததும் வளர்த்ததும், கோவலன் கொலையுண்டது தெரிந்து, மாதவி புத்தசமயத்தில் புகுந்து பிக்ஷுணியாகி, மணிமேகலையையும் பௌத்த தர்மத்தில் சேர்த்ததுமாகிய செய்திகளை விரித்துக் கூறி நின்றாள்.
நின்ற தேவந்திமேல் பாசண்டச்சாத்தன் என்னும் தெய்வம் திடுக்கென்று ஆவேசமுற்றான் ; அதனால். அவள் கூந்தல் குலைந்து பின்னே தொங்கவும், புருவம் துடிக்கவும், செவ்வாயில் சிரிப்புத் தோன்றவும், மொழி தடுமாறி முகம் வெயர்க்கவும், செங்கண் சிவக்கவும், கையோடு கையைப் புடைத்துக் காலைத் துாக்கி வைத்து ஆடினாள். அங்ஙனம் அவள் மீதுற்றி பாசண்டச்சாத்தன், அரசனோடு நின்ற மாடலன் என்னும் மறையவனை நோக்கி, “நான் பாசண்டச்சாத்தன் ; இத்தேவந்திமேல் ஆவேசித்திருக்கிறேன்; பக்தினிதேவியாகிய கண்ணகியின் மங்கலப் பிரதிஷ்டையைக் காணுவதற்கு இங்கு வந்துள்ள பெண்களுள் அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களும், திருமால் கோயில் அருச்சகன் மகளும் இருக்கின்றார்கள். நான் முன் உன்னிடம் கொடுத்துள்ள மங்கலாதேவி கோயில் மலைச் சுனைத்தீர்த்தத்தை இந்த மூன்று பெண்களின் மீதும் தெளிப்பாயாக அந்தத் தீர்த்தம், தன்னில் மூழ்குவோர்க்குப் பழம் பிறப்பை அறிவிக்க வல்லது. இவர்கள் மீது தெளிப்பாயாயின் இவர்கள் தங்கள் முற்பிறவியை அறிவார்கள்,” என்றான்.
இவ்விதம் தேவந்தி ஆவேசமுற்றுக் கூறியவைகளைக் கேட்டுச் செங்குட்டுவன் ஆச்சரியமுற்று, மாடலனை நோக்கினன். மாடலன், “அரசே, கேள் : முன்னொரு நாள் மாலதி என்னும் பார்ப்பனமாது தன் மாற்றாள் பிள்ளையை எடுத்துப் பால் கொடுக்கையில் அக்குழந்தை விதி வசத்தால் பால் விக்கி இறந்து போயிற்று. அதனால் அவள் தன் மாற்றாளும், கணவனும் தன்னைப் பழிப்பார்களே என்று பயந்து வருந்திப் பாசண்டச்சாத்தன் கோயிலில் சென்று வரங்கிடந்தாள். அவளது துயரத்துக்கிரங்கி அச்சாத்தன் அக்குழந்தை உருக்கொண்டு வந்து, ‘அன்னாய், நான் வந்தேன்; உன் துயரை ஒழி, என்று கூறிற்று. அவள் அக்குழந்தையை மாற்றாள் கையில் மகிழ்ச்சியுடன் கொண்டு போய்க்கொடுத்தாள். பின் அவன் வளர்ந்து காளைப்பருவம் வந்ததும் இப்போது இங்கு ஆவேசித்தாடுகின்ற இத்தேவங்கியை மணஞ்செய்து, எட்டாண்டு இவளுடன் வாழ்ந்து வந்தான். இவ்வாண்டுகள் கழிந்ததும் அவன் இவளுக்குத் தன் வரலாற்று உண்மையைக் கூறித் தினந்தோறும் இவளைத் தன் கோயிலுக்கு வரும்படி சொல்லிவிட்டுப் பிறர்க்குத் தான் தீர்த்தமாடச் செல்பவன் போலக் காட்டித்தன் கோயிலுக்குப் போய்விட்டான். பின்பு இவள் அவன் கோயிலுக்குத் தினந்தோறும் சென்று வழிபட்டு வந்தாள். நான் ஒரு சமயம் மங்கலாதேவியின் கோயிலுக்குச் சென்றிருந்தபோது அச்சாத்தன் ஓர் அந்தணன் வடிவுடன் வந்த, உறியிலிருக்கும் இக்கரகத்தைக் கொடுத்துப் போயினான்; போனவன் மீண்டும் வாராததனால், அதனைக் கொண்டு வந்துவிட்டேன். இப்போது அச்சாத்தன் என்னும் தெய்வமே இவள் மீது ஆவேசித்து, இக்கமண்டல நீரைத் தெளிக்கும்படி கூறுகின்றான். அரசே, அப்படியே இப்பெண்கள் மீது இதன் நீரைத் தெளித்துப் பார்க்கலாம்,” என்று சொல்லி அந்நீரை அப்பெண்கள் மூவர் மேலும் தெளித்தான். உடனே அச்சிறுமிகட்குத் தங்கள் பழம் பிறப்புணர்ச்சி உண்டாயிற்று. அம்மூவரும் தனித் தனி புலம்பலானார்கள்.
ஒருத்தி, “நான் பெற்ற அருமந்த மகளே, உன் கணவன் தீய ஒழுக்கமுடையவனாய் உன்னைப் பிரிந்திருந்த நிலைமைக்கு வருந்திநின்றஉன் தாயாகிய யானும் அறியாமலே, நீ உன் கணவனுடன் அந்நியநாடு சென்றாய் உற்றார் யாருமில்லாமலே கணவனோடு அங்குச் கடுந்துன்பத்தை அடைந்தாய்,’ என்று புலம்பினாள்.
ஒருத்தி, “என்னுடன் கூடவேயிருந்த உன்மனைவியும் என் மருகியுமாகிய கண்ணகியை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் காட்டுவழியே : வருந்திச்சென்றனையே! இதனை நினைக்குந்தோறும் என் மனம் வருந் துகிறது. என் அருமை மகனே, என்பால் ஒருமுறை வாராயோ!” என்று புலம்பினாள்.
மூன்றாவதாக மற்றோருத்தி, “இளையோனே, நீ என் மனையில் தங்கியிருந்த காலத்தில், குரவைக்கூத்தாடி முடிந்ததும் வையை ஆற்றுக்கு நீராடச்சென்றிருந்த நான், திரும்பி வரும்போது ஐயோ! நீ கொலை யுண்டிறந்தாய் என்று ஊரார் சொல்லக்கேட்டேன்; அதற்கேற்ப மனையில் வந்து பார்த்தபோது, உன்னைக் காணேனாய் வருந்தினேன்.எந்தாய், என்னே அறியாது எங்குச் சென்னையோ தெரிந்திலேனே!” என்று அழுதாள்.
இவ்வாறாக அச்சிறு பெண்கள் மூவரும் அப்பத்திணிக் கோயிலில் முதியோர் பேசும் பேச்சால் பேசி அரற்றி அழவும், சேரவேந்தனாகிய செங்குட்டுவன் வியப்புற்று, மறுமுறையும் மாடலனை நோக்கினான், அவன் நோக்கும்குறிப்பறிந்த மாடலன், அரசனுக்குக் கூறுவான் : “அரசே, கோவலனது அன்பிற்குரிய மனைவி கண்ணகியின்மேல் அவள் தாயும், கோவலுனது தாயும் மிகுந்த அன்புள்ளவர்கள்: ஆதலால் கண்ணகியும் கோவலனும் இறந்து சுவர்க்கம் புகுந்த செய்தியை என்மூலமாகக் கேட்டறிந்ததும் அவர்கள் உயிர் விட்டார்கள். அப்படி அவர்கள் உயிர் விட்டும், சுவர்க்கம் புகுதற்குரிய பெரும்புண்ணியங்களை அவர்கள் செய்திலராகலின், சுவர்க்கம் புகாமல் கண்ணகி மேல் வைத்த பற்றுக்காரணமாகப்பத்தினித்தெய்வம் எழுந்தருளியுள்ள வஞ்சிமா நகரத்தில் அரட்டன் செட்டி மனைவி வயிற்றில் இரட்டைப் பிள்ளைகளாய்ப் பிறந்தனர். ஆயர் முதுமகளாகிய மாதரி, கண்ணகி மேல் வைத்த பேரன்பினாலும், திருமால்பொருட்டுக் குரவைக் கூத்தாடிய விசேடத்தாலும் அரவனையில் பள்ளிகொண்ட பெருமான் திருவடிகளை அருச்சித்துப் பூஜிக்கும் சேடக்குடும்பியென்னும் அந்தணன் மகளாய்ப் பிறந்தனள். இதனால், நல்லறஞ் செய்தோர் சுவர்க்கம் அடைதலும், ஒன்றில் காதல் வைத்தவர் பூமியில் பற்றுள்ள விடத்தில் பிறத்தலும், பாவ புண்ணியங்களின் பயன் உடனே விளைதலும், பிறந்தவர் இறக்கலும், இறந்தவர் பிறத்தலும் புதியன என்பதன்றித் தொன்று தொட்டு வருவன என்பது நன்கு விளங்கும். நீ சிவபெருமான் திருவருளால் பிறந்து புகழ் மிகுந்த வேந்தனாய் விளங்குதலால், முற்பிறப்பிற் செய்த தவப்பயன்களையும், பெரியோர் தரிசனங்களையும் கையகத்துப் பொருள் போல நன்கு கண்டாய்.” என்று சொல்லித் தன் முன்னர் அழுது புலம்பிய சிறு பெண்கள் மூவரும் முற்பிறப்பில் முறையே கண்ணகியின் தாயும், கோவலன் தாயும்,ஆய்ச்சியாகிய மாதரியுமாய் இருந்தவர்கள் என்பதை விளக்கிச் சொன்னான்.
இவற்றைக் கேட்ட செங்குட்டுவன்,மிகவும் ஆச்சரியமுற்றான். அதன் மேல் அவன் கண்ணகியின் கோயிற் பூஜைப் படித்தரங்களுக்கு வேண்டிய நிலங் களைத் தானம் செய்து, நித்திய உற்சவங்கள் நடத்தித் தேவந்தியையே நித்திய பூசைகளைச் செய்து வரும்படி நியமித்து, அப்பத்தினிக் கடவுளை மும்முறை வலம் வந்து வணங்கி சென் றான்.
இவன் இங்ஙனம் நிற்கச்சிறைப்பட்டு வந்திருந்து, கண்ணகியின் பிரதிஷ்டைகாலத்தில் விடுபட்ட கனக விசயர் என்னும் ஆரிய வேந்தரும், முன்பே வஞ்சி நகரில் சிறைப்பட்டிருந்து விடுபட்ட மன்னரும், கொங்கினங்கோசர் என்ற சிற்றரசர்களும், மாளுவ தேசத்தாசரும், கடல் சூழ்ந்த இலங்கை அரசனாகிய கஜபாகுவும் செங்குட்டுவன் முன்னே அப்பத்தினியை வணங்கினவர்களாய்,”தேவி, எங்கள் நாட்டிற்கும் எழுந்தருளிவந்து இச்சேரமான் செய்த பிரதிஷ்டையில் பிரசன்னமானதுபோலப் பிரசங்கமாகி, எங்கட்கும் அருள்புரிய வேண்டும்.” என்று பிரார்த்தித்தனர். இங்ஙனம் அவர்கள் வேண்டி நின்ற போது, “தந்தேன் வரம் ” என்று ஒரு தெய்வ வாக்கு யாவரும் கேட்க எழுந்தது. அது கேட்டுச் செங்குட்டுவனும் ஏனைய அரசர்களும் சேனைகளும் மோட்சலோகத்தையே நேரிற்கண்டவர்கள் போல மகிழ்ந்து ஆரவாரித்து நின்றனர். அதன் பின், செங்குட்டுவன் மாடலன் என்னும் மறையவனோடு பத்தினிக்கோட்டத்து யாகசாலையைப் பார்ப்பதற்குப் போவானாயினன்.
அதன்பின், செங்குட்டுவன் தம்பியாரும் இக்கண்ணகி சரித்திரத்தைச் சிலப்பதிகாரமென்னும் பெருங் காப்பியமாகப் பாடி முடித்தவரும் ராஜரிஷியும் கலியுமாகிய இளங்கோவடிகள், அப்பத்தினிக் கோட் டத்தை அடைந்தார். பத்தினித் தெய்வம் தேவந்தி மேல் ஆவேசமாய்த் தோன்றி, “சபாமண்டபத்தில் நீ உன் தந்தையாகிய சேரலாதனுடன். சிம்மாசனத்தடியிலிருந்த போது, ஒரு சோதிடன் வந்து உன்னைப் பார்த்து, ‘அரசாளுதற்குரிய இலக்கணம் உனக்கே உண்டு’ என்று சொன்னான். ‘அர சாளுதற்குரியவனாக என் தமையன் செங்குட்டுவனிருக்க, நீ முறைமை கெடச் சொன்னாய் என்று அச்சோதிடனைக்கோபித்துப் பார்த்துத் தமையனாகிய செங்குட்டுவனது ஆட்சி உரிமைக்குக் கேடு வாராதபடி ராஜ்ய செல்வத்தை வெறுத்து அன்றே துறவியாகிக் குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில் வசித்து, “மோக்ஷமா கிய இராச்சியத்தை ஆளுதற்கு இருக்கும் வேந்தனல்லவோ நீ?”என்று முன் நிகழ்ந்ததும் பின் நிகழப்போவதுமாகிய இளங்கோவடிகள் வரலாற்றைக்கூறிற்று. இவ்வாறு தன் வரலாறுரைத்த கண்ணகி தேவியின் பெருமை தங்கிய சரித்திரத்தைப் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் அடியிற்காணுமாறு இளங்கோவடிகள் உபதேசிக்கிறார் :
” பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமன் உயிர்க்கோலை நீங்குமின்
தானம் செய்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன் மின் பொருள் மொழி நீங்கன் மின்
அறவோர் அவைக்களம அகலா தணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழைபுயிர் ஒம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும்…….. பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினல் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உவநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுனை தேடுமின்
மல்லன் மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென.”
இலங்கை அரசன் கஜபாகுவும், கொங்குமண்டலத்து இளங்கோசரும், சோழன் பெருநற்கிள்ளியும், வேறு பல அரசரும் தங்கள் நாட்டகத்துக் கண்ணகிக்குக் கோயில் கட்டுவித்து, விழாக்கள் செய்து வழிபட்டார்கள். அதுமுதல் பத்தினி வணக்கம் பரவி நாடு செழிப்புற்றுத் திகழ்ந்தது.
★ ★ ★



