கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்

கோவலன் கொலையுண்டது

கோவலன் சிலம்பு விற்கக் கடை வீதியிற் செல்லுங்கால் உருக்குத் தட்டாரும் பணித்தட்டாருமாகிய தட்டார் பலர் தன் பின் வர, அரச வரிசையாகிய சட்டையை அணிந்து, கையில் பற்றுக்கொடிறு பிடித்து, ஒதுங்கி நடக்கும் பொற்கொல்லன் ஒருவன் எதிர்ப்பட்டான். கோவலன் அவனைக் கண்டு, ‘இவன் பாண்டியனால் பெயரும் வரிசையும் பெற்ற பொற்கொல்லன் போலும்!’ எனக்கருதி, அவனை அணும், “அரசன் தேவி அணிதற்கேற்ற சிலம்பொன்று உள்ளது; அதனை நீ விலை மதிக்க வல்லையோ?” என்று கேட்டான், பொற்கொல்லன், “யான் மகளிருடைய அடிக்கலம் விலை மதித்தற்கு அறியேனாயினும், வேந்தர்க்கு முடிக்கலம் முதலியன சமைப்பேன்,” என்று தன் வன்மையை விநயத்தோடு வெளிப்படுத்திக் கோவலனைத் தொழுது புகழ்ந்தான். உடனே கோவலன், சிலம்பு பொதிந்திருந்த பொதி வாயை அவிழ்த்துக் காட்டினான். கால தூதனாய்க் கொல்ல வந்த கொல்லன், சிலம்பின் சித்திரத் தொழில் அருமைப்பாட்டையெல்லாம் கூர்ந்து பார்த்து, வஞ்சிக்க எண்ணங்கொண்டு, “ஐய, இவ்வுயர்ந்த விலைச் சிலம்பு, கோப்பெருந்தேவிக்கல்லது பிறர் வாங்குதற்கும்

அணிதற்கும் ஏற்றதன்று ; இதனை அரசனுக்கு அறிவித்து வருமளவும் நீர் என் குடிசைக்கருகிலுள்ள அவ்விடத்தில் அமர்ந்திரும்,” என்று வேண்டினன். கோவலனும் அங்ஙனமே அக்கசாலைப் பள்ளியின் மதிலினுள்ளே புகுந்திருந்தான். பொற்கொல்லன், “நான் முன்பு வஞ்சித்துக்கொண்ட அரசியின் சிலம்பு என்னிடத்தே உள்ளது என்று பலரும் அறிய அரசனுக்கு வெளிப்படு முன்னமே, அச்சிலம்போடொத்த இச் சிலம்பைக்கொண்டு வந்த அயலூரான்மீது இடுவந்தியிட்டு (பொய்ப்பழி ஏற்றி), என்மீது உண்டாகும் ஐயத்தை நீக்கிக்கொள்வேன்!” என்று துணிந்து, அரண்மனை நோக்கிச் சென்றான்.

அச்சமயத்தில் பாண்டியன், தன் மனைவி கொண்டுள்ள ஊடலை நீக்கும்பொருட்டு, மந்திரிகளை நீங்கித் தனியாக மனைவியிருக்கும் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். பொற்கொல்லன் அச்சமயத்தில் அரசனைக் கண்டு வணங்கி, “அரசர் பிரானே, கன்னக்கோலும் கவைக்கோலும் இல்லாமலே நித்திரை மந்திரத்தால் காவலாளரை மயக்கி, அரண்மனையிலிருந்த சிலம்பைக் கவர்ந்துகொண்ட கள்வன், இப்போது அதனை விற்பதற்கு ஊர்காவலர் கண்ணைக் கட்டி, மறைந்து வந்து, அடியேனுடைய சிறுகுடிலகத்துத் தங்கியிருக்கின்றான்; அதனை விண்ணப்பிக்கவே இங்கு வந்தேன்,” என்றான். அரசியின் ஊடலால் அறிவு மயக்கமுற்றிருக்தி பாண்டியன், காவலாளரை அழைத்து. அரசியின் சிலப்பு இவன் சொன்ன கள்வன் கையிலிருப்பின், அவனைக் கொல்ல, சிலம்போடு இங்குக் கொண்டு வருக!” என்று சொல்லக் கருதியவன், வினை விளைவு பலிக்குங் காலம் கிட்டியமையால் அது மறந்து ஆராயாது, “அவனைக்கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக!” என்று கட்டளையிட்டுச் சென்றான்.

பொற்கொல்லன், தான் எண்ணிய எண்ணம் முடிந்ததென்று தனக்குள் மகிழ்ந்து, காவலாளருடன் தீவினை வலையில் அகப்பட்டிருந்த கோவலன் இருக்குமிடத்தை விரைவில் வந்தடைந்தான். பின்பு அவன், கோவலனுக்குக் காவலாளிகளைக் காட்டி, “இவர்கள் வேந்தன் விருப்பப்படி சிலம்பு பார்க்க வந்தவர்கள்.” என்று சொல்லிச் சிலம்பைக்காட்டுவித்துக் காவலாளிகளைத் தனித்தழைத்துச் சிலம்பின் அருமைபெருமைகளைக் கூறுவான்போல ‘இவன் வைத்திருக்கும் சிலப்பு தேவியின் சிலம்பு என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. ஆகையால், நீங்கள் வந்த காரியத்தைவிரைந்து செய்யுங்கள்.” என்று தூண்டினான். கொல்லன் வார்த்தைகளைக்கேட்ட அவர்கள், கோவலனது முகத்தின் அழகையும் உடல் இலக்கணத்தையும் சாந்தமான குணத்தையும் அவன் இருந்த இருப்பையும் உற்று கோக்கி, “இவன் கள்வன் அல்லன்; இவனைக்கொல்லுதல் அந்தோ! பெரும்பாவம்!” என்றனர். கொல்லன் அவர்களைப் பார்த்து வஞ்சநகை நகைத்து, அவர்கள் மனம் உடன்படும்படி களவு நூலின் துறைகளையெல்லாம் எடுத்துக்கூறி, அவற்றில் பழகிய கள்வர் சாமர்த்தியங்களையும் விரித்துப் புலப்படுத்தி, தான் கூறியவையெல்லாம் உறுதி பெறுவதற்கு, நடவாத நிகழ்ச்சியொன்றை நடந்ததாகப் புனைந்து கூறத் தொடங்கினான் :

“வேலேந்திய வீரர்களே, திருடரின் திறமையை நீவிர் அறியீர் போலும்! நான் சொல்வதைக் கேளுங்கள்: பொல்லாத அந்தக்கள்வர்களுக்கு மந்திரம்,தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், ஆயுதம் ஆகிய இந்த எட்டுமே துணை. இந்தக் கள்வனை அரசன் ஆணைப்படி அழியாது இவனது மருந்து வசப்படுவீர்களாயின், அரசன் தண்டம் உங்களுக்குத் தவறாது. கள்வர் மந்திரத்தை அபிமந்திரிப்பாராயின்,

நாம் காண முடியாவகை மாயமாய் மறைவர், தங்கள் தெய்வத்தைச் சிந்திப்பாராயின் கைப்பற்றிய பொருளை நமக்குக் காட்டியும் தப்புவர், மருந்தினால் மயக்குவிப்பாராயின், நாம் இருந்த இடத்தைவிட்டுப் பெயரவும் முடியாது. தங்களுக்குச் சரியான சகுனம் வாய்த்தாலன்றி எப்படிப்பட்ட பெரிய பொருளும் கைப்படுவதாயிருந்தாலும் புறப்படவே மாட்டார். களவு நூல் தந்திரங்களைக் கொள்வாராயின், மண்ணுலகத்திலிருந்தே விண்ணுலகத்து இந்திரன் மார்பின் ஆரத்தையும் பெறுவர். இந்தப்பொருளைக்கைப்பற்றுதற்கு இதுவே இடமெனத்துணிந்து காலமும் கருதிக் கருவிகளையும் உபயோகித்துப் பொருள்களைக் கைப்பற்றுவாராயின், இவ்வுலகில் இவர்களைக்கண்டு பிடிக்க வல்லார் யாவர்? இவர்களுக்கு இரவென்றும் பகலென்றும் இல்லை. இவர்களுக்குத் தப்பி வாழ்தல் எவர்க்கும் ஆகாது.

“இன்னும் உண்மையாக நடந்த ஒரு செய்தியைக் கேளுங்கள் : முன்னொருநாள் கள்வனொருவன் தூதர் உருவம் கொண்டு வந்து பகற்பொழுது அரண்மனை வாயிலில் தங்கியிருந்து, இராப்பொழுதில் மாதர் வடிவங்கொண்டு அரண்மனை புகுந்து, நமது அரசனாகிய நெடுஞ்செழியன் தம்பி துயில் கொண்டிருக்கும் பள்ளியறையை அணுகினான். அணுகியவன், விளக்கு நிழலில் மறைந்து மஞ்சத்தகுகிற் சென்று இளங்கோவின் மார்பில் பிரகாசிக்கும் வைரமாலையை எடுத்தான். உடனே இளங்கோ விழித்து, அவனை வெட்டுதற்கு உடைவாளை உறையினின்றும் உருவினான். கள்வன் உறையை விரைந்து வாங்கி, இளங்கோ குத்துந்தோறும் குத்துத் தன்மேற்படாது அவ்வுறையினுள்ளே செல்லும்படி உறையைச் செறித்தான். ஒன்றுங்கூற நாவெழாத அரசன் தம்பி, கள்வனுடன் மற்போர் தொடங்க, கள்வன் ஆங்கு நின்ற தூணைத் தானாகக் காட்டிக் களவுநூற்கல்வியால் தப்பினான். அவனை இந்நாள்வரை கண்டார் உண்டாயின், சொல்லுங்கள் பார்ப்போம்!” என்று இவ்வாறு கூறி, “இனிக் காலம் தாழ்த்தாதீர்கள்” என்றான்.

இவற்றைக் கேட்டு நின்ற காவலாளிகளுள் ஒர் இளைஞன், “முன்னர் கூதிர்காலத்தில் ஒரு நாள் நள்ளிரவில் கன்னக்கோலோடு கரிய உடை தரித்து, கவ்விய ஊனை விடாத புலி போலக் கள்வன் ஒருவன் வந்து தோன்றினான். அப்போது காவல் செய்திருந்த நான் அவனை நெருங்கி என் வாளை உறையினின்றும் உருவினேன். இமைக்கு முன் அவன் வாளைப் பறித்தான்; அவனையும் என் வாளையும் இன்னமும் காணேன். ஆதலால், கள்வர் மாயம் எவர்க்கும் அறிதல் அரிது. பொற்கொல்லர் புகல்வது சாலவும் பொருத்தமுடையதே. இப்போது இவனைத் தப்ப விடின், அரசன் தண்டனை நமக்குத் தப்பாது, இனிச் செய்யத்தக்கதைத் துணிந்து சொல்லுங்கள்.” என்றான்.

அவ்வளவில் காவலாளிகளுள்ளே கள்ளுண்டு நின்ற கொலையஞ்சாப் பேதை மகன் ஒருவன், தன் கூரிய வாளால் கோவலனை வெட்டினன். அதனால் அவன் குருதி வெள்ளம் பெருக, நிலமகள் ‘அந்தோ!’ என்று புலம்பி வருந்த, பாண்டியனது வளையாத செங்கோல் வளைய, கொல்லன் கொல்லனேயாகத் துண்டு பட்டு வீழ்ந்து உயிர் துறந்தான்.

” நண்ணும் இருவினையும்; நண்ணுமின்கள் நல்லறமே ;
கண்ணகி தன்கேள்வன் காரணத்தால்-மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே ; பண்டை
விளைவாகி வந்த வினை.”

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *