
கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்
கண்ணகி துன்பம்
குரவை நாடகம் ஆடி முடிந்த பின்னர் மாதரி நீராடித் திருமால் அடியைப் பூசிப்பதற்கு வையை யாற்றிற்குச் சென்றாள். அப்போது உள் நகரத்தில் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்ட இடைச்சி ஒருத்தி, அதனைத் தெரிவிக்க விரைந்து வந்தாள் ; வந்தவள், கண்ணகியின் அழகையும் இளமையையுங் கண்டு அவளிடம் தன் வாக்கால் அதனைத் தெரிவிக்க நாவெழாது, குரவை ஆடிமுடித்து நீராடிவந்த ஆயர் மகளிரிடம் இரகசியமாய்க் கூறி, அவர்களுடன் விம்மி நின்றாள். கண்ணகி இதனைக் கண்டு, அருகில் நின்ற ஐயையை அழைத்து, ” தோழி, என் காதலர் இன்னும் வரக் காணேன் , அதனால் என்னெஞ்சம் வருந்தி மயங்குகின்றது; இம்மாதிரி யாவரும் மறைவாகப் பேசிக்கொள்வது யாதோ!
தெரிந்திலேன் !” என்று இரங்கிக் கூறினாள். செய்தி அறிந்து வந்த ஆய்ச்சி, “அந்தப்புரத்திலிருந்த சிலம்பை அபகரித்த கள்வன் கோவலனே என்று அவனைக் காவலர் கொலை செய்து விட்டனராம்!” என்றனள். அந்தோ! அப்போது கண்ணகியடைந்த துன்பத்தை எண்ணவும்படுமோ! துயரம் பொங்கி எழுந்தாள் ; கூந்தல் தாழ வீழ்ந்தாள் ; தன் வசமிழந்தாள் ; கண்கள் கலங்கிச் சிவக்கும்படி கையால் முகத்தில் அறைந்தழுதாள் ; கொழுநனை விளித்து, “அந்தோ ! நீர் எங்கிருக்கின்றீர்!” என்று பொருமிப் புலம்பினாள். இங்ஙனம் பலவாறு துயருழந்த கண்ணகி, பின்னர்க் குரவையாடின மகளிரை நோக்கி, “ஆயர் மகளிரே, நீங்கள் எல்லாம் கேளுங்கள்,” என்று சொல்லிப் பின் சூரியனை நோக்கி, “செங்கதிர்ச் செல்வனே, இவ்வுலகிலுள்ள பொருள்களுள் நீ அறியாத பொருள் ஒன்றும் இல்லை; ஆதலால், நீ அறிய என் கணவர் கள்வரோ?” என்றாள். அப்போது சூரியன், அசரீரியாய், “நின் கணவனோ கள்வனல்லன்! அவனைக் கள்வன் என்ற இவ்வூரைமாதே, விரைவில் எரியுண்ணும்,” என்றான்.
கண்ணகி மற்றைச் சிலம்பொன்றைக் கையிலேந்திக்கொண்டு, அந்த ஆயர்பாடியினின்றும் அந்த நகருள்ளே சென்று, அங்குள்ள கற்புடை மகளிரை தோக்கி, “நீதியில்லாத அரசனிருக்கின்ற ஊரிலிருந்து வாழும் பத்தினிகளே, என் கணவர் கொண்டுவந்த சிலம்புக்கு இணையான மற்றைச் சிலம்பு இதோ என் கையிலிருக்கின்றது ; உலகில் பிறந்தார் ஒருவரும் படாத துன்பம் யான் பட்டேன் ; ஒருவரும் உறாத துயரம் யான் உற்றேன்; என் கணவர் கள்வனல்லர் ; என் காற்சிலம்பு மிக்க விலை பெறுவதாதலால், அதனை அபகரித்துக் கொள்ளக் கருதி, அவரைக் கள்வனென்று பெயரிட்டுக் கொன்றார்களே ! இஃது என்ன அநியாயம் ! இம்மகளிர்க்கு முன் என் கணவரைப் பண்டுபோலக் காண்பேனோ! காண்பேனாயின் அஃது ஒருபுதுமையே; அவ்விதம் கண்டால் அவர் வாக்காற்சொல்லும் நல்லுரையைக் கேட்பேனோ? கேட்பேனாகில் அஃது எனக்கோர் உறுதி, அங்ஙனம் அவருரைக்கும் உரையைக் கேளேனாயின், ‘இவள் கள்வன் மனைவி,’ என்று என்னை நீங்கள் யாவரும் இகழுங்கள்,’ என்று ஆற்றாது புலம்பிச் சூளுரைத்தாள்.
இங்ஙனம் அழுகின்ற அவளை, மதுரை நகரத்தார் யாவருங்கண்டு, தேற்றும் வழி காணாது, தாமும் இரங்கி அழுது மயங்கி, “இனி இறக்குமளவும் நீங்காத துன்பத்தை இக்காரிகைக்கு உண்டாக்கியதனாலே, ஒருகாலும் கோடாத செங்கோல் கோடியது; இதனால்மேல் யாதுவிளையுமோ! பாண்டியனது அரசியல் அழிந்தது; இதனால் இனி யாதாகுமோ! செம்பொற்சிலம்பொன்றைக் கையிலேந்தி நம்மைக்கெடுத்தற்பொருட்டுப் புதுமையான பெருந்தெய்வம் இங்கு வந்தது; இதனால் இனி யாது நேருமோ! இவள் மிக விம்மி விம்மி வாய்விட்டு அரற்றுகின்றாள் ; தெய்வம் ஏறினாள் போலும் தன்மையுடையவளாயிருக்கின்றாள்; இதனால் இனி யாது விளையுமோ!” என்று பல படியாகக் கூறி, கண்ணகியின் நிலைமைக்கு வருந்தினர்.
வேறு சிலர், கண்ணகியை அழைத்துச் சென்று வெட்டுண்டு பட்ட கோவலனைக் காட்டினர். அப்பொழுது மாலைப்பொழுது வந்தது. ஊரெல்லாம் ஒல்லென்னும் பூசல் உண்டாயது. காலையில் தன்னைத் தழுவித் தன் மாலையைக்கொடுத்து வந்த கணவன், மாலையில் இரத்த வெள்ளத்தில் தன்னைப்பாராது பிணமாய்க் கிடக்கின்ற கடுந்துயரைக் கண்ட கண்ணகி,
” யாருமில் மருண்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ !
பார்மிகு பழி தூற்றப் பாண்டியன் தவறிழைப்ப
ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ !”
என்று பலவாறு அரற்றி அழுது, “இந்நகரத்தில் என்னைப் போல் பெண்பிறந்தார் இல்லையோ! சான்றார்கள் இல்லையோ ! தெய்வமில்லையோ! இவர்களிருப்பின் இவ்வநியாயம் பிறக்குமா!’ என்று இன்னன சொல்லி அழுது, கணவனைத் தழுவிக்கொண்டாள். அவ்வளவிலே கோவலன் எழுந்து நின்று, “அந்தோ! உனது மதிபோலும் முகம் கன்றியதே!” என்று சொல்லிக் கையால் அவள் கண்ணீரைத் துடைத்தான். பின்னர்க் கண்ணகி, விம்மி அழுது வீழ்ந்து, கணவனுடைய அடிகளைக் கையாற் பற்றிக்கொண்டாள். சுவர்க்கம் புகுவதற்கெழுந்த கோவலன், “கண்ணகி, நீ இருக்க,” என்று சொல்லி, தேவர் குழாம் சூழ வானிற்போனான்.
கண்ணகி, “இங்ஙணம் என் கணவர் எழுந்து நின்றது மாயமோதான் ! அன்றாயின், வேறு யாதாகும் இது! ஒரு வேளை என் மனத்தை மருட்டிய தெய்வமோ! தெரிகின்றிலேன்! ஆதலால், என் கணவரை எங்கும் போய் ஆராய்ந்து கூடுவேன்! அங்ஙனம் கூடுதலும் என் சினந் தணிந்தாலன்றிக் கூடேன்; என் சினம் தணிதற்பொருட்டு யான்சென்று அக்கொடிய வேந்தனைக்கண்டு, என் கணவரைக்கொன்ற இத்தீச் செய்கை யாதென்று கேட்பேன்,” என்று தன் நெஞ்சோடு கூறினாள். அப்போது தன்னுாரில் முன்புகண்ட தீக்கனா ஞாபகத்திற்கு வந்தது. அதனால், கண்ணீர் சோர நின்று, பின்பு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அரண்மனை வாயிலை நோக்கிச் சென்றாள்.
அப்போது பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி இளங்கோப்பெண்டு, தன் கணவானாகிய பாண்டியனது செங்கோலும் வெண்கொற்றக்குடையும் நிலத்தில் விழவும், ஆராய்ச்சிமணிக்குரல் அதிரவும், இரவில் வானவில் உண்டாகவும், பகலில் நக்ஷத்திரங்கள் உதிரவும், பூமி நடுங்கவும், கனவில் கண்டு, அவை தீக்கனாக்களென்று அஞ்சி, தோழியோடு அரசனிடம் வந்து, அக்கனாத்திறங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாள், அச்சமயத்தில் கண்ணகி கோபம் தணியாதவளாய் அரண்மனை வாயிலை அடைந்து, வாயில் காப்பவனை நோக்கி, “கணவனையிழந்தாள் ஒருத்தி கையிற்சிலம்பொன்றை ஏந்தி வந்து வாயிலில் காத்திருக்கின்றாளென்று உங்கள் அரசனிடம் அறிவி,” என்றனள். அவன் அங்ஙனமே சென்று, “அரசர் பெரும, வாயிலில் ஒருத்தி வந்திருக்கின்றாள். அவள் கொற்றவையோ, பத்திரகாளியோ, சடாரியோ என்று சொல்லத் தக்க கோபமுடையவளாய்க் காணப்படுகின்றாள். கணவனை இழந்தவளாம். கையில் சிலம்பொன்று பிடித்திருக்கின்றாள்” என்று தெரிவித்தான். அரசன் “அவளை அனுப்புக” என்றான். அவனும் அங்ஙனமே கண்ணகியை அரசனிடம் செல்லவிட, அவள் சென்று அரசன் முன்னிலையில் நின்றாள்.
அரசன் கண்ணகியைக் கண்ணுற்று, “அம்மா, நீ ஏன் கண்ணீர் சொரிகின்றாய்? நீ யார்? என்றான், அதற்குக் கண்ணகி, தேரா மன்ன, நான், ஒரு புறாவின் பொருட்டுத் தன் தசையை அரிந்து தராசில் வைத்த மன்னர் பிரானும், தன் மகனால் அறியாது கொல்லப்பட்ட ஒரு பசுக்கன்றின் காரணமாக அருமந்த குலத்துக்கு ஒரு மைந்தன் என்பதையும் பாராமல் தன் மைந்தன் மீது தேரைச்செலுத்திய மனுச்சோழனும் இருந்து அரசாண்ட புகார்நகரில் வாழ்வேன்; அந்நகரத்து மாசாத்துவானார் புதல்வர் கோவலர் மனைவி; அவர் ஊழ்வினையால் உனது ஊரில் எனது காற்சிலம்பை விற்க வந்து, உன்னாற் கொலையுண்டார்; என் பெயர் கண்ணகி” என்று கூறினாள். அரசன் கேட்டுக் “கள்வனை அரசர் கொல்லல் கொலையாமோ? நீதிதானே?” என்றான், கண்ணகி, “ஆராய்ந்து விசாரித்தறியாமல் கோவலருக்குக் கொலைத்தண்டம் விதித்தமையால் உனது நீதி முறைகெட்டது. என் சிலம்பின் அரி மாணிக்கம்; வேண்டுமாயின், சோதித்துப்பார்,” என்றாள். அரசன், “இவளுரைத்தது நேர்மையான வார்த்தையே; என் தேவியின் சிலம்பின் அரி, முத்தே,” என்று சொல்லி, இரண்டு சிலம்பையும் தருவித்துத் தன் முன்னரே வைத்தான். மாணிக்கப் பரலிருந்த கண்ணகி சிலம்பு, உடைந்து, பரல்கள் வெளிப்பட்டு, அரசனது கொலைத்தண்டம் விதித்த வாயைத் தண்டிப்பதுபோல வாயில்தெறித்தன.அதுகண்ட அரசன், “அந்தோ! பொற்கொல்லன் பொய்யுரை கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்! எனது அருமந்த திங்கள் மரபு என்னால் களங்கமுற்றதே! என் ஆயுள் இன்றோடு முடிக!” என்று மயக்கமுற்று இருந்தவாறே சிம்மாசனத்தில் வீழ்ந்து உயிர் துறந்தான். உடனே கண்ணகி தன் கைச்சிலம்பை அரசன் தேவி முன்னே எறிந்தாள்.
அது கண்ட கோப்பெருந்தேவி, தன் கணவன் இறந்தானென்பதையும் அறியாது,கண்ணகியை ஆற்றிப் பொறுதி கேட்க நினைந்து, உடல் நடுநடுங்கி உள்ளம் பதைபதைத்து, “ஐயோ! தந்தை தாய் முதலியோரை இழந்தார்க்கு அம்முறை சொல்லிப்பிறரைக் காட்டித் தேற்றலாம்; கணவனை இழந்தார்க்குத் தேற்றும் வகை யாதுளது? இது பற்றியன்றோ,
‘மக்களிழக்த இடும்பையினும் மனையாளிழந்த இடும்பையினும்
மிக்க இடும்பை ஒவாத விதவை இடும்பை’
என்று உலகம் கூறும் : என் செய்வேன்!” என்று சொல்விக் ‘காத்தருள வேண்டும்!’ என்று ஓலமிட்டுக் கண்ணகியின் இணையடியில் தொழுது விழுந்தாள்.
பின்னர்க் கண்ணகி, ‘தேவியே, யான் ஒன்றும் அறியேன். ஆயினும்,
‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.’
‘அல்லவை செய்தார்க்(கு) அறங்கூற்றம்’
என்ற ஆன்றோர் வாக்குகள் பொய்க்குமோ? நான் பத்தினிகள் பிறந்த பதியில் பிறந்தவள்; நானும் உண்மைப் பத்தினியேயாகில், அரசனோடு இம்மதுரையையும் அழிப்பேன், பார்! நீ என் பட்டிமையும் காண்பாய்,” என்று சபதஞ்செய்து, அவ்விடத்தை விட்டு நீங்கினாள். கண்ணகி கூறிய வீரமொழிகளை முற்றும் கேளாமுன்னரே, கோப்பெருந்தேவி, அரசன் இறந்தானென்று அறிந்ததும் உடன் உயிர் துறந்தாள்.
அப்பால் கண்ணகி, மதுரையிலுள்ள பெண்களையும், ஆடவர்களையும், தெய்வங்களையும், முனிவர்களையும் முன்னிலைப்படுத்தி, “எல்லீரும் கேளுங்கள்: யான் யாதொரு குற்றமுமில்லேன்; என் காதலனக் கொன்ற அரசன் நகரின் மீது தணியாக் கோபங் கொண்டேன்!” என்று வீரமொழிகளைக் கூறி, வலக் கையால் இடமார்பைத்திருகி எடுத்து, மும்முறை மதுரையைச் சுற்றிவந்து, வீதியில் வீராவேசத்துடன் எறிந்தாள். உடனே அக்கினிதேவன் சடைமுடியோடு ஒரு பார்ப்பன வடிவுடன் வந்து, “மகா பத்தினீ, உனக்குப் பிழை செய்த நாளில் இம்மதுரையம்பதியை எரித்து விடும்படி முன்னரே ஒரு கட்டளை பெற்றுள்ளேன் ; இப்பொழுது யாரை அழித்தல் வேண்டும்?” என்று கேட்டான். அதற்குக் கண்ணகி, “அந்தணர், அறவோர், பசுக்கள், பத்தினிகள், மூத்தோர், குழந்தைகள் என்னுமிவரைக் கைவிட்டுத் தீயோர் பக்கமே சேர்க,” என்று ஏவினாள். அப்பொழுதே மதுரைநகர் தீ மண்டி எரிவதாயிற்று. உடனே அந்நரைக் காக்கும் வருணபூதங்கள் நான்கும் பெயர்ந்து போயின. கடைவீதிகளும் இரத வீதிகளும் நால்வகை வருணத்தார் வீதிகளும் கலக்கமுற்றன. தருமமுடையோர் இடம், அழல் சேர்தலின்றிப் பாவிகள் வீடுகளில் அக்கினி பற்றி எரிந்தது. நெருப்பு நெருங்குதலாலே பசுக்களும், கன்றுகளும் அறநெறி தவறாதவர்களாகிய ஆயர் வீதிகளையடைந்தன. நித்திரை செய்துகொண்டிருந்த பெண்டிரும், ஆடவரும் பிழைக்குமிடந்தேடி அலங்கோலமாய் ஓடினர். மாதர்கள் பிள்ளைகளை எழுப்பிக்கொண்டு மாமிக்கிழவிகளோடு வெருவி ஓடினர். கற்புடைய பெண்கள் பலர் “கணவனையிழந்த இக்கற்புடையாள் சிலம்பால் அரசனோடு வெல்வழக்காடிப் பூசல் விளைத்து நியாயமே” என்று கூறி, அக்கினியைத் தொழுதனர். நகரமுற்றும் நடைபெறும் விழாக்கள் நடவாமல் ஒழிந்தன. வேத ஓசை அடங்கியது, வேள்வி இயற்றலும், தெய்வபூசனை செய்தலும் இல்லாது போயின. வீடுகளில் விளக்கேற்றல் முதலிய மங்கல காரியங்களும், அரண்மனைகளில் முரசு முழங்குதலும் அறவே ஒழிந்தன.
இவ்வாறு பாழ்பட்ட நகரத்தில் கண்ணகி, காதலனுக்குற்ற துன்பத்தால் உள்ளங்கனன்று, கொல்லன் உலைக்களத் துருத்திபோல் பெருமூச்செறிந்து, வீதி தோறும் சுழன்று சுழன்று திரிவாள் ; கவலையால்
சிறிது தூரம் செல்வான் ; இயங்கலும் இயங்குவாள்; மயங்கலும் மயங்குவாள். இத்தகைய வீரபத்தினிக்கு முன், தீயின் வெம்மை ஆற்றாத மதுராபதி என்னும் மதுரைநகர்த் தேவதை தோன்றினாள். அவன், கண்ணகியின் உக்கிரத்துக்கு அஞ்சிப்பின்புறத்தில் நின்று, “அங்காய், என் குறையைக் கூறுகின்றேன்; கேட்டருள்,” என்றாள். அது கேட்ட கண்ணகி, தன்னுடைய வாடிய முகத்தை வலப்பக்கமாக வளைத்து, ‘என் பின் நிற்போய், நீ யார் ? என் துன்பம் இன்ன தென அறிதியோ?’ என்று கேட்டாள். அதற்கு அத் தெய்வம் கூறுவதாயிற்று:
“பெண்ணே, நான் மதுராபதித்தெய்வம்; உன் துன்பத்துக்குக் காரணத்தை அறிவேன் அதனைக் கேட்பாயாக. உன் கணவன் உற்ற துயருக்கு நான் மிக வருந்துகின்றேன்! நான் இதுகாறும் இந்நகரில் அந்தணரது அருமறை ஒசையல்லது, ஆராய்ச்சிமணி இசையைக் கேட்டறியேன்; இப்பாண்டியன், பகைவர் பழி துாற்றுவதல்லது குடிகள் பழி துாற்றியறியான். அறிவு மயங்கிய காலத்தும் பாண்டியர்களில் ஒழுக்கக்தவறி நடந்தவர் இல்லை. இவற்றிற்குப் பொற்கைப்பாண்டியன் சரிதையே போதிய சான்றாகும்: அதனைக் கேள்:
“முன்பு இந்நகரில் கீரந்தை என்னும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் காசியாத்திரை போவதற்குப் புறப்பட்டான். அப்போது அவன் மனைவி, பாதுகாப்பில்லாத தன் மனையில் தனித்திருப்பதற்கு அஞ்சினாள்.அந்தணன், பெண்ணே, நீ அஞ்ச வேண்டா. நமது அரசன் செங்கோல் கோடாத வேந்தன்; ஆதலால், உனக்கு ஒரு தீங்கும் வாராது. உன்னை அரச வேலியே காக்கும்.” என்று தேற்றிப் புறப்பட்டுப் போனன். நகர் பரிசோதனைக்கு வந்த பாண்டியராஜன், அந்தணன் இவ்வாறு சொல்லிப் போனதை அறிந்தானாதலால், ஒவ்வொரு நாள் இரவும் கீரந்தையின் மனைவிக்குத் தெரியாது வந்து அவளைக் காத்து வந்தான். சில நாள் சென்ற பின் யாத்திரை சென்றிருந்த கீரந்தை திரும்பி வந்து, அன்றிரவு தன் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தான்.
வழக்கம்போலப்பார்ப்பனியைக் காப்பதற்குச்சென்ற பாண்டியன், அன்றிரவு வீட்டினுள் ஆண் அரவம் கேட்பதை அறிந்து திடுக்கிட்டுக் ‘கள்வனோ, வேறு யாவனோ!’ என்று அறிதற்குக் கதவைத் தட்டினன். உள்ளேயிருக்த கீரந்தை, ‘கதவைத் தட்டியவன் கள்வனோ, வேறு யாவனோ!’ என அஞ்சி ஐயமுற்றுத் திகைத்தான். அதனைக் கண்ட அவன் மனைவி, “நீர் யாத்திரை போகும்போது அரசவேலியே காக்கும் என்றுசொல்லிப் போனிரே ; இப்போது அவ்வேலி காவாதோ?” என்று கேட்டாள். இதனைக் கேட்ட பாண்டியன், ‘ஆராயாது இச்செய்கையைச் செய்து இவர்களிருவருக்கும் மன வருத்தத்தை உண்டாக்கி விட்டோமே!’ என்று கதவைத்தட்டிய தன் கையை வாளால் வெட்டிவிட்டான். பின்பு அவனுக்குத் திருவருளால் பொற்கை வளர்ந்தது. இப்படிச் சிறிய குற்றத்தைச் செய்தாலும் பெரிய குற்றத்தைச் செய்ததாகப் பாவித்து அநுதாபப்படுகின்ற அன்னவன் குலத்தில் பிறந்தோர் செம்மையினின்று தவறுதல் ஒரு நாளுமில்லே; இன்னமும் கேள் :
“சோழநாட்டில் பராசரன் என்னும் பார்ப்பான் ஒருவன் இருந்தான். அவன் சேரநாட்டரசனாகிய மாந்தரஞ்சோலிரும்பொறை என்பவனது பெருங் கொடையைக் கேள்வியுற்று அவனிடம் சென்று, சபையிலுள்ள கல்விமான்களைத் தன் கல்வித் திறமையால் வாதம் செய்து வென்றான். அதற்காக அவ்வரசன் மிகுந்த ஆபரணங்களையும் பொன் முடிச்சையும் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவற்றைப்பெற்று வெற்றியுடன் மீண்டு தன்னூருக்குப் புறப்பட்டுவந்த பார்ப்பான், பாண்டி நாட்டில் திருத்தங்கால் என்னும் ஊரையடைந்து, ஓர் அரசமரத்தடியில் (போதி மன்றத்தில்) உட்கார்ந்து,இளைப்பாறினன்.அவ்விடத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் வந்து புதியவனான அவனைச் சூழ்ந்து நின்றனர். அவர்களைப் பார்த்து, அவன், ‘பார்ப்பனச் சிறுவர்களே, நான் இப்போது உங்களைப் பரீக்ஷிக்கப் போகின்றேன்; நான் கேட்கிற சுருதியைத் தவறாது சொல்பவர்க்கு இந்தப் பொருள் முடிச்சைக் கொடுத்துவிடுகிறேன்,’ என்று சொன்னான். அச்சிறுவறுள் வார்த்திகன் மகன் தக்ஷிணாமூர்த்தி என்பவன் மற்றை யாவரினும் சந்தந் தவறாமல் மகிழ்ச்சியோடு அந்தச் சுருதியை ஒதினன். அவனைப் புகழ்ந்து பராசரன், முத்துப்பூனூல்,காப்பு, பொற்காசுகள் முதலியன பொதிந்த அப்பொதியை அவனுக்குக் கொடுத்துத் தன்னூர்க்குச் சென்றான். ராஜ சேவகர்கள் தக்ஷிணாமூர்த்தி பரிசாகப்பெற்ற பொருள்களைக் கண்டு பொறாமை கொண்டு, ‘ராஜ நீதிக்கு விரோதமாய் இந்தப் பார்ப்பான் களவுப் பொருளை வாங்கினான்,’ என்று தக்ஷிணாமூர்த்தியின் தந்தை வார்த்திகனைச் சிறைப்படுத்தினர். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள், அது கண்டு துன்பமுற்றுப் பூமியில் விழுந்து புரண்டழுதாள். அதனால், மதுரைத் துர்க்கை தேவியின் கோயிற்கதவும் தானே அடைத்துக்கொண்டது. அச்செய்தியை அறிந்த பாண்டியன், ‘என் அரசியலில் ஏதேனும் அநீதி உண்டாயதோ! துர்க்கைக்கு உற்ற துன்பம் என்ன ஆராய்ந்தறியுங்கள்,’ என்று கட்டளையிட்டான். அப்போது சேவகர்கள் வார்த்திகனை அரசன் சமூகத்துக்கு அழைத்துவந்து, நடந்ததை உரைத்தனர். அதனையறிந்த அரசன் வார்த்திகப் பிராமணனைப் பார்த்து, ‘இவ்வறிவில்லாதவர்கள் செய்கை நன்றன்று; இவர்களால் என் நீதி கெட்டது ; இதனைப் பொறுத்தல் உமது கடன்,” என்று சொல்லி, அவன் வாழும் ஊராகிய திருத்தங்காலோடு வயலுரையும் அவனுக்கு மானியமாகக் கொடுத்து வணங்கி அனுப்பினான். அவ்வளவில் துர்க்கை கோயிற்கதவு ஊரெல்லாம் ஒசை கேட்கத் தானே திறந்தது, உடனே சிறைக்கூடத்திலுள்ளாரைச் சிறையினின்றும் விடு மின்; வரிகளை வாங்காது விடுமின்; பிறர் கொடுத்த பொருளாயினும், புதையற்பொருளாயினும் பெற்றவர்க்கும் எடுத்தவர்க்குமே உரியதாகும், என்றுபறை யறைவித்து அரசநீதியை அறிவித்தவன் இப் பாண்டியன்.
“இப்பாண்டியனது அரசமுறை மிகச்சிறந்தது. மேலும் இத்தகைய அரசனும் இந்நகரும் ஆடித்திங்கள், கிருட்டிண பக்கம், பரணியோடு சேர்ந்த கார்த்திகை நட்சத்திரம், வெள்ளி வாரம் இவை சேர்ந்த தினத்தில் தீயால் அழியுமென்று முன்னரே சோதிட வார்த்தையும் உண்டு ; அது தவருதன்றோ! உன்கணவனுக்கு இத் துன்பம் உண்டாதற்குக் காரணமா யிருந்த ஊழ்வினையை உரைக்கின்றேன்; கேள் :
“கலிங்க நாட்டில் சிங்கபுரத்தரசன் வசு என்பவனும், கபிலபுரத்தரசன் குமரன் என்பவனும் தாயாதிகள். ஆதலின், தம்முள் பகைமை கொண்டு தங்கள் நகர்க்கு இடையிலுள்ள ஆறுகாத துாரம் அளவும் பெரும்போர் செய்தனர். அவ்வழியாகச் சென்று பொருள் தேட விரும்பிய சங்கமன் என்பவன் மாறு வேடம் பூண்டு, பண்டங்களைச் சுமந்து போய், தன் மனைவியுடன் சிங்கபுரத்துக் கடைவீதியில் அவைகளை விற்றுக்கொண்டிருந்தான். அரசன் சேவகனான பரதன் என்பவன், அவன்மீது கொண்ட பகைமை காரணமாக அவனைப் பகை அரசனுடைய ஒற்றன்’ என்று பிடித்துக்கொண்டுபோய், அரசனுக்குக் காட்டிக் கொலை செய்துவிட்டான். கொலையுண்டிறந்த சங்கமன் மனைவி நீலி என்பவள், மிக்க துயரமுற்று, பலவாறு முறையிட்டுப் பதினான்கு நாள் பலவிடத்தும் சென்று அழுதரற்றி, ஒரு மலைமீதேறி வீழ்த்து உயிர் துறந்து கணவனை மறுமையில் கூடுதற்கு நினைந்தவள், ‘எமக்கு இத்துயர் செய்தோர் மறு பிறப்பில் தாமும் இத்துன்பமே அடைவார்களாக!” என்று சாபமிட்டு, மலையினின்றும் வீழ்ந்திறந்தாள். அப்பரதனே பின்பு கோவலனாகப் பிறந்தான். அவள் இட்ட சாயம் கிட்டியதாகலின், நீங்கள் இத்துன்பம் உற்றீர்கள்,
‘உம்மை வினேவந் துருத்த காலைச்
செம்மை யில்லோர்க்குச் செய்தவம் உதவாது.’
கண்ணகீ, இற்றைக்குப் பதினான்காம் நாளின் மாலைப் பொழுதில் நீ உன் கணவனைத் தேவவடிவிற் கண்டு, அவனோடு சுவர்க்கம் புகுவாய்,’ என்று இவ்வாறு உரைத்து மதுராபதித் தெய்வம் கண்ணகியைத் தேற்றி, நகரின் தீயைத் தணிப்பித்துச் சென்றது. கண்ணகியும் மதுரை விட்டு நீங்கக் கருதினாள்.
மதுரையை விட்டுப்புறப்படக்கருதிய கண்ணகி, துர்க்கை கோயில் வாசலிலே தன்னுடைய கைவளையைத் தகர்த்து உடைத்துவிட்டு, “கீழ்த்திசை வாயிலின் வழியாகக் கணவரோடு மதுரையில் வந்த நான், இப்போது தமியேனாய் மேல்திசை வாயிலின் வழியாகப் போகின்றேன் ! இனி என் கணவரைக் காணும் அளவும் ஓரிடத்தும் இருத்தலும் இரேன் ! நிற்றலும் நில்லேன்’ என்றுகூறி, இரவுபகல் ஒயாது வையைக் கரையை வழியாகக் கொண்டு மேடென்றும் கிடங்கென்றும் பாராமல், மேற்குத் திசையை கோக்கிப் புறப்பட்டாள்.
பாண்டி நாடு, அன்று தொட்டு மழையின்றி வறுமையெய்தி, வெப்பு நோயும் குருவும் முதலாகிய; பல வகை நோய்க்கும் இடமானது. பின்பு கொற்கை நகரிலிருந்த வெற்றிவேற்செழியன் என்னும் இளஞ் செழியன் வந்து, அரியாசனம் ஏறிப் பொற்கொல்லர் ஆயிரம்பேரைப் பலியிட்டுக் களவேள்வியால் சாந்தி செய்து, கண்ணகியை வழிபட்டு விழாச் செய்தான். அது முதல் பாண்டி நாடு செழித்தது.
வையை வழிக்கொண்ட கண்ணகி, மலைநாட்டில் திருச்செங்குன்று என்னும் மலைமீது ஏறி, ஒரு வேங்கை மரத்து நிழலில் நின்றாள். மலையில் வாழும் குறத்தியர் அவளைக் கண்டு,”அம்மையீர், எங்கள் வள்ளியம்மையைப்போலக் காணப்படுகிறீர்; நீர் யாரோ?” என்றார்கள். அவள், “யான் ஊழ்வலியாலே, மதுரை நகரும் பாண்டியனும் கேடுற அந்நகரில் கணவரை இழந்துவந்த கடும்பாவி” என்றாள்; பின்னர், மதுரா, பதித் தெய்வம் உரைத்தபடி பதினான்காம் நாள் மாலையில் தெய்வ வடிவத்தோடு வந்த கோவலனைக்கண்டு, களிகூர்ந்து, அவனுடன் தேவ விமானத்தில் ஏறினாள் கண்ணகி. தேவர்கள் பூமழை பொழிந்து இருவரையும் எதிர் வந்து அழைத்துப் போயினர். கண்ணகி இவ்விதம் கணவனோடு விமானம் ஏறிச் சுவர்க்கம் புகுந்ததைக் கண்ட குறத்தியரும், குறவர்களும் மிக்க ஆச்சரியமுற்று, இங்கு வந்து நின்ற மாது நம் குலத்துக்கே ஒரு பெருந்தெய்வம். “இவள்பொருட்டு நாம் குரவையாடிக் கொண்டாடுவோம்” என்று துணிந்து, தம் இனத்தவரையெல்லாம் அழைத்து, “சிறு குடியீரே, சிறுகுடியீரே, இப்பறம்பின் தாழ்வரையில் வேங்கைமர நிழலில் இவளுக்குக் கோயில் எடுங்கள். குன்றின் வளம் குன்றாது பெருகுதற்கு இங்கங்கைக்குத் தொண்டகம், சிறு பறை கொட்டுமின் ; கொம்பை ஊதுங்கள்; கொடுமணி ஆட்டுங்கள் ; குறிஞ்சிப் பண் பாடுங்கள் நறும்புகையெடுங்கள் ; பல பூக்களைத் தூவுங்கள்” என்று கூறிக்குரவைக்கூத்து நிகழ்த்தினர்.



