கண்ணடக்கம்
கலைஞர் மு. கருணாநிதி

நெருப்பு


நண்பர்கள் எனப்படுவோர், இன்பத்தில் பங்கு பெற்றுத் துன்பத்தில் துயர் துடைக்கும் துணைவர்கள்! ஆனால் எனக்கு வாய்த்த நண்பர்களில் சிலரோ என்னோடு மிக அதிகமாகப் பழகிவிட்டு-இப்போது என்னைத் தணலில் போட்டு வாட்டுகிறார்கள், ‘வதக்கு’கிறார்கள். சாதாரணப் பிரச்சனைகளை யெல்லாம் பெரிதாக்கிக் கடுகை மலையாக்கி…அப்பப்பா ; அவர்கள் என்னைச் சித்ரவதை செய்வது சகிக்கவில்லை. அவர்களை என்னால் வெறுத்து ஒதுக்கிவிட முடியவில்லை. காரணம்; அந்த அளவுக்கு அவர்களிடம் பற்றும் பாசமும் கொண்டு விட்டேன். அந்தப் பற்று, பாசம் என்ற அடிப்படையையே சில நேரம் தகர்த்துவிட முனைகிறார்கள் ; என் நண்பர்கள்! என் சிந்தனை ஓட்டத்திற்கேகூட சில சமயம் தடையாக நின்று கொண்டு, மிக அலட்சியத்தோடு என் வேதனையைக் கவனிக்கிறார்கள். தாங்கள் செய்யும் தவறுகளை மறந்து விட்டுத், தங்களை யொருமுறை திரும்பிப் பார்த்துக்கொள்ள மறுத்துவிட்டு, என் இருதயத்தை மிதித்துத் துவைக்கிறார்கள். என்றென் றும் என் இருதயக் கோயிலிலே அவர்கள் அழியாத சிற்பங்களாக இருப்பார்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் போது; அந்தச் சிற்பங்களே வெடித்து மூளியாகி விட்டால்… பிறகு எனக்கு ஏது நிம்மதி…எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது; நான் தவறு செய்யவில்லையென்று! பெருமளவுக்கு அவர்களுக்கு விட்டுக் கொடுத்து நடந்திருக்கிறேன் என்பதையும் அவர்கள் அறிவார்கள் !

அவர்களுக்காக நான் சந்தித்த ‘பகை’யின் வகைகள் எத்தனை யென்பதும் அவர்கள் அறியாததல்ல! ஆனாலும் என்னை அழவிடுகிறார்கள் ; ஏனோ தெரியவில்லை… இந்தக் கடுமையான தண்டனை எனக்கு!

‘நண்பன்’ என்ற கதைப்புத்தகத்தைப் படித்து முடித்த அருள், மேற்கண்ட வாசகங்களை மட்டும் திருப்பித் திருப்பிப் படித்துக் கொண்டு, தனது ரயில் பயணத்தை நடத்தினான்; மூன்றாம் வகுப்பில் இருந்தவாறு! சென்னையிலிருந்து மாயவரம் நோக்கி வரும். ரயிலில்… நல்ல இருளில்…அவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.

‘நண்பன்’ புத்தகத்தை சென்னையில் அவன் வாங்கும் போதே…அவன் மனக்கண் முன்னே பூபதி நின்றுகொண்டு அலட்சியமாக சிரித்தான். கலங்கிய கண்களைத் துடைத்த வாறு, புத்தகத்தை வாங்கி எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறி உட்கார்ந்ததும் படிக்க ஆரம்பித்தான். படித்து முடிந்துங் கூட திருப்பித் திருப்பிப் பல இடங்களை அவன் மனப்பாடம் செய்துகொள்ள முனைந்தான்.

“என்னை அழவிடுகிறார்கள்; ஏனோ தெரியவில்லை; இந்தக் கடுமையான தண்டனை எனக்கு?”

இந்த வாக்கியத்தைப் படிக்கின்ற ஒவ்வொரு முறையும் அவன் மேனி புல்லரித்தது. ரோமக்கால்கள் எழுந்து நின்றன. சிலிர்த்த உடலை அமைதிப் படுத்திக்கொண்டு சிந்தனையை ஓடவிட்டான்.

பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், அருளும் பூபதியும் சிதம்பரம் கல்லூரியில் மாணவத் தோழர்கள். தில்லையை அடுத்த வல்லம் படுகைதான் அருளின் சொந்த ஊர். வல்லம் படுகையை அடுத்த கொள்ளிடம் கிராமம். தான் பூபதியின் சொந்த ஊர்.

பூபதி- பெயருக்கேற்ப பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளை. அருள்; அன்பு வடிவினன். நட்புக்கோர் இலக்கணம்.

கல்லூரித்தொடர்பு அருளையும் பூபதியையும் ஆருயிர்த் தோழர்களாக்கியது. அருளைத் தனியே கணடவர்கள், “பூபதி எங்கே;’ எனக் கேட்பதும், பூபதியைக் காண்பவர்கள், ” அருள் நலந்தானே?” என்று கேட்பதும் வழக்கமாகிவிட்டது. அந்த அளவுக்கு அவர்களின் நட்பும் வளர்ந்தது. வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்ளத் தான் அருள், பூபதியை அண்டிக் கிடக்கிறான் என்ற சொல் வந்துவிடக் கூடாதே என்பதற்காக அருள் மிக எச்சரிக்கையாக இருந்து கொண்டான். படிப்பதற்குப் பணமில்லாமல் கடைசியாக மிஞ்சியிருந்த சில ஏக்கர் நிலங்களையும் தந்தை விற்றுவிட முடிவு கட்டிய வேளையில்கூட அருள், பூபதியிடம் அந்தச் செய்தியை வெளியிடவில்லை. அப்படி விற்கப்பட்ட நிலத்திலேயிருந்து கிடைத்த பணத்தில் ஒரு நூறு ரூபாயை

பூபதிக்கு அவசரக் கடனாகக் கொடுத்து-பிறகு அவன் திருப்பித் தந்தபோது வாங்கிக் கொண்டான். எந்த நேரத்திலும் எதையாவதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதும்… புத்தர் காந்தி, சாக்ரடீஸ் போன்ற பெரியவர்களின் அற வாழ்வைப்பற்றி ஆராய்ச்சிகள் நடத்திக்கொண்டிருப்பதும் அருளின் வாடிக்கையாக இருப்பது பூபதிக்குப் பிடிக்கவில்லை யென்றாலும் எப்படியோ ஒரு பாசம் அவர்களை நண்பர்களாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தது.

அருள் விரும்பு கின்ற நிறம் ஆகாயத்தின் நீலமென்றால், பூபதி விரும்புகின்ற நிறம் எலுமிச்சம்பழத்தின் மஞ்சளாக இருக்கும். அருள் படிப்பது “உலகைத் திருத்திய உத்தமர்கள் ”என்ற நூலாயின் பூபதி உலகப் பேரழகி கிளியோ ” என்னும் ஏட்டில் மூழ்கியிருப்பான். புராணக் கதைகளுக்குப் புது மெருகு தரப்பட்டுப் பொன் வண்ணத்தில் முகப்புச் சித்திரமும் தீட்டிய புதிய மொந்தையில் பழைய மது தரப்படுகிற தல்லவா ; அந்த மதுமயக்கத்தில் பூபதி ஆழ்ந்துவிடுவான். சந்திரனும் தாரையும், இந்திரனும் அகலியையும், கண்ண னும் ராதையும் இப்படிக் குவிந்தன அவனது நூலகத்தில் ஏடுகள்! தாபத்தால் தவிக்கின்ற தாரையின் உடற்கொதிப்பையும் உள்ளத் துடிப்பையும் ஒரு நொடியில் குளிரச் செய்த சந்திரனின் தழுவலிலே அவள் மெய் மறந்து கிடந்த விதந்தன்னை எப்படித்தான் வர்ணிக்கிறானப்பா மாமேதையெனப் பாராட்டி மகிழ்வான் பூபதி!…

அந்த வேளை அருளோ, சந்திரனில் மனிதர் உண்டா என்ற ஆராய்ச்சி நூலிலே கருத்தைப் பதிய வைத்திருப்பான். இந்திரன் என்று தெரிந்த பிறகும் அகலிகை பேசாதிருந்தாள் எனக் குறிப்பிடும் திறமை காம நூல் வல்லார் ஒருவருக்கே ஏற்பட முடியும். இதுவரை பெற்றிடாத பெறற் கரிய இன்பத்தைப் பெறும்போது இந்திரனா? இழி மகனே! … இது தகாது!” என இடித்துரைக்கும் செயல் அகல்யாவுக்கு ஏற்படாதது நியாயந்தான்!… என விமர்சனம் செய்வான் பூபதி! அவனுக்கு இந்தமாதிரி விமர்சனங்களைத் தன் நண்பனிடம் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. ஆனாலும் அவர்கள் நட்பு இதுபோன்ற வேறுபாடுகளால் தேய்பிறை ஆகவில்லை…மாறாக வளர்ந்தது….

தந்தைக்கு இயற்கையின் அழைப்பு நெருங்கிவிட்ட காரணத்தால் கல்லூரிப் படிப்பை அரைகுறையாக முடித்துக் கொண்டு அருள், கிராமத்திற்கே திரும்பினான். தந்தையின் கடைசி ஆசையை அவன் எப்படியும் நிறைவேற்றி வைக்க வேண்டிய நெருக்கடியில் தூக்கி எறியப்பட்டான். மகனை மனக்கோலத்தோடு பார்த்துவிட்டுத்தான் சாகவேண்டு மென்று தந்தை தவித்தார்.

கொள்ளிடத்திலே ஒரு பெண் இருப்பதாகவும் நல்ல அழகி யென்றும், ஆனால் அவள் தாயார் ஒருமாதிரியென்றும் அருளிடம் சில ஊர்ப் பெரியவர்கள் கூறினார்கள். சேற்றிலே செந்தாமரை – சிப்பியிலே முத்து – முள்ளிலே ரோஜா- என்று பலப்பல படித்திருக்கிற அவனுக்கு அந்தப் பெண் மீது வெறுப்பு ஏற்படவில்லை. அனுதாபம் பிறந்தது.

தன்னுடைய வாழ்க்கைத் தவறுகளுக்கு, மகள் திருமணமாகாமல் தண்டனை அனுபவிக்கிறாள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த கொள்ளிடம் கோமதியம்மாள் தன் பெண் பிரபாவை அவனுக்குத் துணைவியாக்கச் சம்மதிக்காமலிருப் பாளா?… திருமணம் நிச்சயமாயிற்று.

தன்னுடைய சொந்தக் கிராமத்தில் இதுவரை தன் பார்வையில் படாமல் இவ்வளவு சிறந்த எழிலரசியொருத்தி யிருந்தது பூபதிக்கே ஆச்சரியத்தை அளித்தது. திருமணத் தன்று நண்பர்களிருவரும் ஒருவரை யொருவர் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். எந்த வேறுபாடுகளும் – இதுவரையில் நண்பர்களுக்கிடையே எழுப்பாத ஒரு பெரும் புயலை இப்போது அந்தத் திருமணம் எழுப்பி விட்டது என்றுதான் கூறவேண்டும். தன் நண்பனுக்குத் திருமணம் ஆனதிலே பூபதிக்கு மகிழ்ச்சிதான்! ஆனால்… அழகுப் பதுமையாக அச்சடித்த சிலைபோல….ஆரணங்கு ஒருத்தி அருளுக்குக் கிடைத்தது…அதன் மூலம் தன் உள்ளத்தில் ஒரு சூறாவளியைக் கிளப்புவாள் என அவன் எதிர் பார்க்கவில்லை.

நண்பனின் மனைவி, அவனுக்குத் தங்கை போல!…அவனும் அந்த எண்ணத்தை இழுத்து இழுத்துப் பிடித்து நிறுத்திப் பார்த்தான். அந்தக் கொள்கை இருத யத்திலேயிருந்து வழுக்கி வழுக்கி ஓடிற்று.

“அய்யோ அருள் எவ்வளவு தூய்மையானவன்! களங்கமில்லாது பழகுகிற நண்பனாயிற்றே….அவன் மனைவியைப்பற்றியா நாம் இப்படி நினைக்கிறோம்…” -பூபதிக்கு மனசாட்சி குடைந்தது!…புராணமோ இடையிலே நுழைந்தது! குருபத்தினி தாரையையே தாரமாக்கிக்கொண்டான் சந்திரன்…அவனுக்குத்தான் அனைவரையும்விட உயர்ந்த இடம்; சிவனாரின் தலையிலே!

அண்ணன் மனைவியை கூடி மகிழ்ந்தான் சுக்ரீவன்…. அவன்தான் அயோத்தி ராமனுக்கு ஆருயிர்த் தோழன்!…

பூபதி, துணிந்துவிடவில்லை. தாபமும் தணிந்துவிடவும் இல்லை. மணமக்களை வாழ்த்திவிட்டுக் கொள்ளிடத்திற்குப் புறப்பட்டான்.

சிலமாதங்களுக்குப் பிறகு, அருளின் தந்தை இறுதியாகக் கண்ணை மூடினார். அப்போது துக்கம் விசாரிக்க வந்த பூபதி, ‘நீத்தார் நினைவு’ முடிந்த பிறகும்கூட ஊருக்குப் போகவில்லை. நண்பனுக்கு ஆறுதல் அளிப்பதற்காக

அங்கேயே தங்கிவிட்டான். அருள், வெள்ளை மனங் கொண்டவன். பூபதியின் உள்ளத்தில் மூண்டிருக்கிற நெருப்பை அவன் உணரவில்லை. பிரபா மட்டும் அதை உணர்ந்து கொண்டு வருந்தினாள். நெஞ்சிலே கொழுந்து விடும் தீ ஜூவாலை பூபதியின் கண்களின் வழியாக வெளி வந்தது அவளைப் பலமுறை சுட்டிருக்கிறது…

“அவர் ஏன் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறார்?… பணக்கார வீட்டுப்பிள்ளை…நம்முடைய வீட்டு எளிய உணவை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொள்ள முடியும்? ஊருக்கு அனுப்பிவையுங்களேன்!”- என்று கணவனிடம் ஜாடையாகச் சொல்லிப் பார்த்தாள். அதற்குப் பரிசாக அருளின் கோபத்தைத்தான் பெற்றாள்.

பூபதியின் உள்ளப் போராட்டம் அவனை வதைத்துக் கொண்டே யிருந்தது. தவறு செய்கிறோம் என்று தெரிந்தும் அதைச் செய்யாமலிருக்க முடியவில்லையே எனத் தன்னையே நொந்து கொண்டான். இயற்கையமைப்பு தனக்கு அப்படி யொரு பிரத்தியேக மன அரிப்பைப் படைத்திருப்பதாகவும் அதைத் தீர்த்துக்கொள்ள தான் தேர்ந்தெடுக்கும் மார்க்கம் சரியான தென்றும் சில சமயங்களில் முடிவுக்கு வந்தான். பிரபாவை அவன் காணாத நேரங்களில் அவ்வளவாகப் பித்தம் முதிர்வதில்லை. நண்பன் அருளுடன் ஆற்றோரம் செல்லும் போதும் மணல் மேட்டில் அமர்ந்து பழைய கதைகளைப் பேசும்போதும் “சே சே; நண்பனுக்குத் துரோகம் செய்யக்கூடாது!” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேயிருப்பான். வீட்டுக்கு வந்ததும், பிரபா உணவு பரிமாற வரும் எழிலைக் கண்டதும் மணல் மேட்டு முடிவுகள் மண்ணாகவே போய்விடும். பள்ளித்தோழன், பாசம் மிக்கான் – பற்றுடையோன் – அருகிருக்கிறான்; அவன் அன்புத் துணைவியைப்பற்றி அற்ப எண்ணங்களை அலைய விடுகிறோம் என்ற பயங்கரத்தையே மறந்து விடுவான். அவளும் அவ்வளவு அழகாக இருந்தாள். உணவு பரிமாறும்போது அவனை யறியாமலே அவன் கண்கள் அவளைச் சுற்றும். அவளை அண்ணாந்து பார்ப்பதற்காக வேண்டி அடிக்கடி தண்ணீர் குடிப்பான். உறிஞ்சிக் குடித்தால் பார்வை மேலே போகாது என்பதற்காக மிகவும் சுத்தக்காரன் போலக் குவளையை மேலே தூக்கிக் குடிப்பான். அந்த இழி பண்பு தெரியாத அருள், “சும்மா எச்சில் செய்து குடிடா பூபதி!’ என்று களங்கமின்றிக் கூறுவான். பூபதி அவளை ரசிப்பான். அருளோ, பூபதியின் இலையில் என்ன இல்லை என்பதைக் கவனித்து, அடிக்கடி பிரபாவைக் கூப்பிட்டு இல்லாததைப் பரிமாறச் சொல்வான்.

செய்வது தவறுதான்! நன்றாகத் தெரிகிறது; பூபதிக்கு! அதற்காக வருந்தவும் செய்கிறான். அனுசூயா நிர்வாணமாகவே வந்து பரிமாற வேண்டும் என்று ஆசைப்பட வில்லையா மும்மூர்த்திகளும்!…அதைவிட இது பெரிய தவறா என்று முடிவுகட்டி விட்டான் போலும்!…

அருள், பணமில்லாமல் கஷ்டப்படுகிறான் என்பதையும் பூபதி புரிந்துகொண்டான். பண உதவி செய்தாலோ அருள் பெற்றுக்கொள்ள மாட்டான். அந்தச் சுபாவமும் பூபதிக்குத் தெரியும். வேலைகளுக்கு விண்ணப்பம் போட்ட இடங்களில் இருந்தெல்லாம் ‘இல்லை’ என்ற ஏகோபித்த பதிலே வந்தது. பூபதி, அருள் எதுவும் சந்தேகப்பட்டுவிடக்கூடா தென்றும் பயந்து ஊருககுப் புறப்பட்டு விட்டான். நினைத்தது நடக்க வில்லையே என்ற கவலையோடு !

அருளும், பிரபாவும் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப் படுகிறார்கள் என்ற சேதியைப் பூபதியின் பண்ணைக் காரியஸ்தன் மூலமாகத் தெரிந்து கொண்ட கோமதியம்மாள் மருமகன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள். மருமகனுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரையில், மகள் கொள்ளிடத்திலேயே வந்து இருக்கட்டும் என்று சொல்லி அழைத்துப் போய்விட்டாள். பிரபா, அருளைப் பிரிய மனமின்றி ஒரு நாள் இரவு முழுதும் அழுதாள். அருளோ, தன் நிலைமையை எடுத்துக் கூறி “எங்காவது வெளியே சென்று வேலைக்கு

முயற்சித்து வெற்றியோடு வந்து உன்னை அழைத்து வருகிறேன், கவலைப்படாதே!” என்று உறுதி மொழி தந்தான்.

அதன்படி அருள் வேலை தேடிப் புறப்பட்டான்… ஒரு நாள் இரண்டு நாளல்ல; பல மாதங்கள் வேலைதேடி அலைந்தான்.

பிரபா, கொள்ளிடத்திற்கு வந்திருக்கிற சேதி கேள்விப் பட்ட பூபதி, அடிக்கடி அவள் வீட்டுக்குப் போய் அருளின் சுகத்தைப்பற்றி மிக அக்கரையோடு விசாரித்து வந்தான். பிரபாவின் தாயாருக்குப் பூபதியின் மீது மரியாதையும் அன்பும் அதிகமாயிற்று. பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை, தன் குடும்பத்திலே இவ்வளவு அக்கரையாக இருக்கிறதே என்று வியந்தாள். அருளுக்கும், பூபதிக்குமுள்ள நட்பைக் கேள்விப்பட்டு, அவனைப் பரிபூரணமாகக் கோமதி நம்பியும் விட்டாள். பணமுடை ஏற்படுகிற நேரங்களில் பத்து, அஞ்சு என்று அவனிடம் கோமதியம்மாள் வாங்கிக்கொண்டாள்.

ஒரு நாள்…… சிதம்பரத்திலே மார்கழித் திருநாள். கோமதியம்மாள் வழுக்கி விழுந்தவளானாலும் பக்தி அனுஷ்டானங்களில் பெரும் ஈடுபாடு உடையவாள் ; மார்கழித்திரு நாள் காணுவதற்கு சிதம்பரத்திற்குப் புறப்பட்டாள். பிரபா வர மறுத்துவிட்டதால் அவளைத்தனியே விட்டு விட்டுக் கிளம்பினாள்.

கோமதி,சிதம்பரம் போயிருப்பதைத் தெரிந்துகொண்ட பூபதி, பிரபாவிடம் படையெடுத்தான். “அருளிடமிருந்து கடிதம் ஏதாவது வந்ததா?” என்று விசாரணையைத் துவக்கி திடீரெனக் கதவைத் தாளிட்டு அவளது கரம்பற்றி இழுத்தான்.

பிரபா, கூச்சல் போட அஞ்சினாள். கூச்சல் போட்டு ஊர் கூடிவிட்டால் பெரிய மனுஷன் விரோதம் வருமேயென்று நடுங்கினாள். அதனால், பணிவோடு பூபதியைப் பார்த்து, “நண்பருக்குத் துரோகம் செய்யாதீர்கள்!” என்று கெஞ்சினாள். பூபதியோ நெருப்பாக நின்று கொண்டிருந்தான்.

கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது. பூபதிக்குபீதி மேலிட்டது. எப்படியாவது ஓடிவிட வேண்டுமென்று

கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு ஓடினான். தெருக் கதவைத் தட்டியது அருள் !…கொல்லைப்புறமாக யாரோ ஓடுவதை அருள் கவனித்தான். ஓடிப்போய்ப் பார்த்தான், பூபதிதான் என்பதைப் புரிந்துகொண்டான். தெருக் கதவு திறக்கப்பட்டது. அருளைக்கண்ட, பிரபா ஓடிப்பாய்ந்து அத்தான்” என்று தழுவிக்கொண்டாள். “விடு என்னை! நான் பூபதியல்ல!” என்று அவளை உதறிவிட்டு அருள் எங்கேயோ வேகமாக நடந்தான்.

இருண்ட வானத்தைப் பார்த்தவாறு நினைவுச் சுழலிலே சிந்தனையைச் சிக்கவைத்திருந்த அருள், தான் வரும் ரயில் வண்டி “கிள்ளை” என்ற புகைவண்டி நிலையத்திற்கு அருகாமையில் வந்துவிட்டதை உணர்ந்தான். அடுத்தது சிதம்பரம் அடுத்தது வல்லம் படுகை; அதற்கடுத்தது கொள்ளிடம்!.. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற தன் மனைவியைப் பார்க்கப்போகிறான். பூபதியின் ஆசை நாயகியாகி விட்டாள் என்று தவறான முடிவு செய்து நண்பன் மீதும், அவள் மீதும் ஆத்திரத்தைக் காட்டாமல் அமைதியோடு மலேயா நாடு நோக்கிப் பிழைக்க ஓடிவிட்ட ‘பெருந்தகை’ ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு திரும்பி வருகிறான் மனைவியைச் சந்திக்க! ஏதோ ஒருவகையான இன்பப் பெருமூச்சு!.. அதோடு பெட்டியைத் திறந்தான் அருள். ஒரு நீண்ட கடி தத்தை எடுத்துப்படித்தான். அந்த வழிப்பயணத்தில் அதை அவன் பதினேழாவது தடவையாகப் படிக்கிறான்.

‘அன்புள்ள அத்தான்! உங்கள் பிரபாவின் வணக்கம். பலமுறை யோசித்து யோசித்துக் கடைசியாக நான் செய்த முடிவுதான் இந்தக் கடிதம். நண்பன் உங்களுக்குத் துரோகியாகிவிட்டான். நானும் துரோகியாகிவிட்டேன். அன்றொரு நாள் அப்பழுக்கற்ற என்மீது சந்தேகப்பட்டு, சந்தர்ப்பம் செய்த சதியால் எனக்குக் களங்கம் கற்பித்து பிரிந்தீர்கள். சுமார் எட்டு ஆண்டுகள் உருண்டுவிட்டன இந்த இடைக்காலத்தில் பிரபாவின் வாழ்க்கையிலே ஏற்பட்ட சுழற்சிகள் எப்படிப்பட்டவை; அதற்கு யார் காரணம் என் பதை நீங்கள் உணரவேண்டாமா?

மாசுபடிந்த ஒரு மாதாவின் வயிற்றிலேதான் பிறந்தேன். தாய் செய்த குற்றம் என் தலைமீது விழுந்து எனக்குத் தாலி கட்ட யாருமே முன் வராதபோது தாங்கள் வந்தீர்கள்; தெய்வம்போல! தேன் மணக்கும் வாழ்விலே என்றுதான் நம்பினேன். தீக்காடு சூழுமென்று எதிர்பார்க்கவில்லை. என்னைச் சந்தேகப்பட்டுத் தெளிவற்ற நிலையில் எதையும் தீர விசாரிக்காமல் போய்விட்டீர்கள். எங்கு போனீர்கள் என்றே தெரியாமல் தவித்தோம்.

இரண்டு ஆண்டுகள் ஏங்கிக்கிடந்தோம், நானும் என் தாயும்!… தங்கள் ஆருயிர் நண்பன் பூபதியும் தங்கள் இருப்பிடத்தைக் கூறவில்லை. நீங்கள் என்னைச் சந்தேகப்பட்டீர்களே, அன்றைய தினம் நடந்ததுதான் என்ன? ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேனே ;

மாமாவின் சாவின்போது ஊருக்கு வந்த பூபதி, சிதம்பரம் கல்லூரிக்குக்கூடப் போகாமல் நம் வீட்டில் தங்கியிருந்தானே: அது எனக்காகத்தான் !…அப்போதே அவனைப் பற்றி ஜாடை காட்டினேன்- என் மீது சீறிவிழுந்தீர்கள். அம்மா, தில்லைத் திருவிழாவுக்குப் போன நேரம் என்னைக் கெடுத்துவிட வந்தான். தக்க சமயத்தில் தாங்கள் வந்தீர்கள் கொல்லைப்புறம் ஓடினான். தாங்களோ அந்த நிகழ்ச் சியை வேறு விதமாகக் கற்பனை செய்துகொண்டீர்கள்.

இரண்டு வருட காலம் தங்களை நான் தேட…அவனோ என்னை நாடிவரத் தொடங்கினான். அம்மாவைப்பற்றித்தான் உங்களுக்குத் தெரியும். சீரழிந்தவர்கள்!…இந்த நிலையில் அவர்களைக் காசம் பற்றிக்கொண்டது. அம்மாவைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பு என்மீது விழுந்தது. அம்மா குடும்பத்தின் க்ஷேமத்திற்கு அறிவுரைகள் வழங்க ஆரம்பித்தார்கள். அந்த உரைகளில் தூய்மை இல்லாவிட்டாலும், அம்மா உயிர்வாழ்வதற்கு அதை நான் கடைபிடிக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டது.

“பூபதிக்கு இணங்கிவிடடி என் கண்ணே!” என்று தாடையைப் பிடித்துத் தாய் கெஞ்சினாள் தன் நோயைப் போக்கிக்கொள்ளப் பணம் கிடைக்குமென்று ! பிறகு, நான் என்ன எழுத இருக்கிறது; அத்தான்!

நீங்கள் கூடப் பூபதிக்கு எழுதியதாக ஒரு கடிதத்தை என்னிடம் காட்டினான். அதில் எங்களிருவரையும் வாழ்த்தியிருந்தீர்கள்…அக் கடிதம் அவனுக்கு வரும்போதெல்லாம் நான் உங்களுடையவளாகத்தான் இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவளுடைய வெள்ளாட்டியானேன் ; வைப்பாட்டியானேன்! நேரம் காலம் ஓய்வு ஒழிச்சல் இல்லாத காமப் பதுமையாக அவனுக்கு நான் மாறினேன். அதன் விளைவாகக் காசு குவிந்தது. அம்மாவின் காசம் குறைந்தது. இதோ! அந்தக் காசம் என்னைத் தொத்திக்கொண்டது!… அம்மாவுக்குக் காசம் தீர நான் சம்பாதித்துக் கொடுத்தேன்-இப்போது எனக்கே – காசம் என்னைக் காப்பாற்ற எந்த வாரிசும் இந்த வீட்டில் இல்லை. எனக்குக் காசம் என்று கேள்விப்பட்ட மறுநாளே பூபதி விலகிவிட்டான்.

சென்னையிலே ஒரு நீதிபதி வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, நிம்மதியாக வாழுகிறான். நானோ, நித்யகண்டம் பூரண ஆயுசாக இருக்கிறேன்!

அத்தான், தங்களுக்குத் துரோகம் புரிந்த நண்பனுக்கு வாரந்தோறும் தாங்கள் எழுதிய வாழ்த்துக் கடிதங்களைப் படித்தேன். அதிலிருந்துதான் மலேயாவில் தாங்கள் விலாசத்தையும் தெரிந்துகொண்டேன். எவ்வளவு பெரிய உத்தமர் நீங்கள். உங்களுக்கு நான் எத்துணைப் பெரிய பாவம் புரிந்திருக்கிறேன். இனியும் என்னைத் தாங்கள், மனைவியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டவில்லை. நான் விரைவில் மறைந்துவிடுவேன். இந்த மண்ணைவிட்டு! அதற்குள் ஒரு முறை தாங்கள் முகத்தைப் பார்த்துவிட்டால் அதுவே, நான் செய்த குற்றங் களுக்குப் பிராயச்சித்தமாக இருக்கும்!

நான் தங்கள் காலடிகளை என் கண்ணீரால் குளிப்பாட்டி விட்டுக் கண்ணை மூடுவதில்தான் எனக்கு நிம்மதி!…. வருவீர்களா?

அன்புள்ள,
பிரபா.

கடிதத்தை மடித்துப் பெட்டியிலே வைத்தான், கண்கள் நீர்வீழ்ச்சிகளாக மாறின. தனக்குத்தானே சற்று உரக்க, ஆகாயத்தைப் பார்த்து, “உன்னை மன்னித்துவிட்டேன் பிரபா!” என்று கதறினான். அந்த ஒலி புகை வண்டியின் ஒலியோடு காற்றில் கலந்தது.

வண்டி, சிதம்பரம் நிலையத்தில் நின்றது. அருள், ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தான். யார் அது ? ….. பூபதி! ஆம் அவனே தான் – முதல் வகுப்பு வண்டியிலேயிருந்து எட்டிப்பார்த்தான். அருள் தன்னை மறந்துவிட்டான். “பூபதி” என்றவாறு, ஓடிப்போய் முதல் வகுப்பில் ஏறிக்கொண்டான், பூபதிக்கு ஒன்றும் புரியவில்லை அதற்குள் ரயிலும் புறப்பட்டுவிட்டது.

மௌனமாக இருந்த பூபதியைப் பார்த்து… யார் இது ?” என்று பக்கத்திலேயிருந்த ஒரு பெண்ணைக் காட்டினான் அருள்!

“இதுதான் என் மனைவி!”

“ஓகோ…அப்படியா? . ! . ம்… என் மனைவி சௌக்கிய

மாக இருக்கிறாளா பூபதி?”

.

பூபதி, திடுக்கிட்டான். முகம் வெளுத்தது! பூபதியின் மனைவியும் விழித்தாள் எதுவும் புரியாமல்!

“என்னடா விழிக்கிறாய்? என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லையாம் -அதைப் பார்க்கத்தானடா போகிறேன். இப்பொழுது அவள் உனக்கு வைப்பாட்டியாக இல்லையா?… சாறற்ற சக்கையாகி விட்டாளாக்கும்!”

“ஏய் அருள், போதும் நிறுத்து! என்ன உளறுகிறாய்?”

”அடப்பாவி; என்னிடமிருந்து அவளைப் பிரித்தாய்! நானும் அனுமதித்தேன், உன்னிடம் நட்பின் காரணமாக நான் ஒரு பயனும் பெறவில்லை. நானோ மானத்தையே நட்புக்காகப் பரிசளித்தேன்! பரிசளிக்கப்பட்ட பொருள் எவ்வளவு விலை உயர்ந்தது! அதையாவது காப்பாற்றினாயா பாவி ! …

வெள்ளிக்கூஜா நசுங்கிவிட்டால் உருக்கிப் புதுக் கூஜா செய்துகொள்வார்கள். நீயோ, கூஜாவையே குப்பையில் எறிந்துவிட்டு இன்னொரு கூஜா வாங்கிவிட்டாய் அவ்வளவு பணத் திமிர் உனக்கு!”

அருளின் பேச்சிலே ஆத்திரம் குமுறியதைப் பூபதி உணர்ந்து,நடுங்கினான்.

“என்னிடமும் வாழவிடாமல் நீயும் வாழ வைக்காமல் பிரபாவைக் கெடுத்துவிட்டாய்….. இதுவரையில்தான் நீ எனக்கு நண்பன்-இனி என் எதிரி! எதிரி!” என்று அலறியவாறு இடுப்பில் செருகியிருந்த ஒரு கத்தியை எடுத்துப் பூபதியின் நெஞ்சிலும் வயிற்றிலும் முகத்திலும் மாறி மாறிக் குத்தினான் அருள்…

பூபதி, சுருண்டு விழுந்தான் மூச்சற்று!…அதற்குள், பூபதியின் மனைவி, அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தாள். ரயில் நின்றது. கொள்ளிடம் பாலத்தைத் தாண்டி!…ரயில் நின்றவுடனே அருள் குதித்து ஓடினான்; இருளில் திசை தெரியாமல்!…

அதோ… ஒரு வெளிச்சம்…அங்கு ஓடினான்…சுடுகாட்டில் ஒரு பிணம் எரிந்துகொண்டிருந்தது. அந்த நெருப்பு வெளிச்சத்தில் அவன் சட்டை முழுதும் ரத்தக்கரையாக இருப்பதைக் கண்டான். அதோடு ஊருக்குள் ஓடினால் கொலைகாரனைக் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று பயந்து, சட்டையைக் கழற்றி அந்த நெருப்பின் மீது வீசினான். பிணத்தைப் பொசுக்குவதற்கு அந்த சட்டையும் பயன்பட்டது.

அங்கிருந்து பிரபாவின் வீடு நோக்கி ஓடினான். கோமதியம்மாள் வாசலில் உட்கார்ந்திருந்தாள் வானத்தைப் பார்த்தவாறு!… விளக்கு ‘மினுக் மினுக்’ என்று எரிந்து கொண்டிருந்தது!

“அத்தே; பிரபா எங்கே?…” ‘என்றான். கோமதி யம்மாள் ஓவென அலறினாள்..,

“தம்பி… பிரபா, இன்று காலையில் போய் விட்டாள்…. இரவு பத்து மணிக்குத்தான் என் கண்மணியின் உடலுக்கு நெருப்பு மூட்டினார்கள்” என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டாள்!…

அப்படியானால், அருள், ரத்தக்கரை படிந்த சட்டையைக் கழற்றிப் போட்டது பிரபாவைப் பொசுககும் நெருப்பின் மீதுதானா?…

அவளைப் பொசுக்கிய இரு நெருப்புகளுமே அணைந்து விட்டன..

….

அருள் மட்டும் அலைந்து கொண்டிருந்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *