திருவள்ளுவர் 
சோமசுந்தர பாரதியார்

திருவள்ளுவர்
சோமசுந்தர பாரதியார்

தமிழகத்தில் தலைநின்ற தமிழ்ச்சான்றோர் பலரையும் பற்றி அவர் குடிப்பழிப்பான பல ஆபாசக் கதைகள் சமீப காலங்களில் எழலாயின. திருவள்ளுவர், நக்கீரர், கம்பர் முதலிய பெரியாரை யெல்லாம் எளிதில் வேளாப் பார்ப்பன ஆண்டிகளுக்கு இழிகுலப் பெண்டிரீன்ற மக்களெனச் சிலர் கதைக்கின்றனர். எனினும் இக் கதைப்பவர் துணிவைவிட, அக்கதைகளைச் சிறிதும் தடையின்றியேற்கும் தமிழ்மக்களின் தற்கால நிலை வியப்பும் விசனமும் விளைக்கின்றது. வள்ளுவரைப் பற்றிய கதைகளை ஆன்ற நூற்சான்று கொண்டு ஒருவாறாக நான் சிறிது ஊன்றி விசாரிக்கலானேன். என் ஆராய்ச்சியிற்கிடைத்த சில கருத்துக்களை முதலிற் சில நண்பர் வேண்டுதலின்படி பண்டிதர் சிலர் முன்பு திருச்சிராப்பள்ளியில் 1952 ஆம் வருடக் கடைசியில் வெளியிட்டேன். அப்போது அவர்கள் என் கருத்துக்களை ஆதரித்து ஊக்கினார்கள்.

பிறகு, மதுரைத் தமிழ்ச்சங்கம், வாலிப கிறித்தவ சங்கம் என்பவற்றின் துணையாதரவில் மதுரை ஐக்கிய கிறித்தவ கலாசாலையில் சில உபந்நியாசங்கள் நிகழ்த்தப்பெற்றன. அவற்றுள் ஒன்று 1926ஆம் வருடம் சனவரி மாதம் 25ஆம் தேதி ரெவரண்டு எச்.எ. பாப்லி துரையவர்களின் தலைமைக் கீழ்க் கூடிய பெருங்கூட்டத்தில் திருவள்ளுவர் சரிதத்தைப் பற்றி நான் செய்ய நேர்ந்தது. அங்கு அப்போது விசயம் செய்திருந்த சேது சமத்தான மகா பண்டிதரான உயர்திரு உவே.ரா. இராகவையங்காரவர்கள், சோமேசர் முதுமொழி வெண்பா ஒன்றைச் சுட்டி, அதனால் வள்ளுவர் கீழ்க் குலத்தவர் என்னுங் கதை வலிபெற நிற்பதைக் குறிப்பிட்டார்கள். என்னிடமிருந்து தக்க சமாதானங்கொண்டு என்னை ஊக்கும் அவர்களின் நன்னொழுக்கத்துக்கு நான் பண்டிதவரவர்களுக்கு நன்றி கூறி, அக்கதை அப்பாட்டால் எவ்வித ஆதரவையும் பொறாமையையும், அப்பாட்டு அக்கதையின் உண்மையை ஆராய்ந்து அங்கீ கரிக்கும் நோக்குடையதன் றென்பதையும் எடுத்துக் காட்டினேன். பிறகு பண்டிதவரவர்களும் பிறரும் வேறு ஆட்சேபம் ஒன்றுமின்றி என் கருத்துக்களை ஆமோதித்தார்கள். அன்று அங்கு அவ்வுபந்நியாசத்தைக் கேட்டிருந்த தமிழ்ச் சங்கத்துத் தலைமைக் கணக்காயர் உயர்திரு. நாராயணையங்காரவர்கள் விரும்பியபடி பின் அக்கருத்துக்களைச் செந்தமிழில் 24ஆம் தொகுதி 9,10 பகுதிகளில் எழுதி வெளியிட்டேன்.

சமீபத்தில் சென்னைச் சர்வகலாசாலையார் வேண்டிக் கொண்டபடி இவ்வாண்டில் சென்ற மார்ச்சு மாதம் 11,12ஆம் தேதிகளில் நான் பச்சையப்பன் கல்லூரியிற் செய்த இரண்டு உபந்நியாசங்களில் முதலது திருவள்ளுவரைப் பற்றியதாகும். அப்போது சர்வகலாசாலைப் பிரதிநிதிகள் யாருமே வரா விட்டாலும், மகாமகோபாத்தியாய உயர்திரு உ.வே. சாமி நாதையரவர்கள், பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள், சென்னைச் சர்வ காலாசாலைத் தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்கக் காரியதரிசி திருவாளர் டி.சி. சீனிவாசையங்காரவர்கள் போன்ற தகவுடைப் பெரியார் பலர் கேட்டு உடன்பாடு கூறி என்னை ஊக்கினார்கள். உபந்நியாச முடிவில் மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் என்னை ஆசீர்வதித்து அன்போடு ஆதரவு கூறினார்கள்.

நான் எதிர்பாராத வண்ணம் என்னை ஊக்கிய பெரியார் களுக்கும், என் கட்டுரைக்கு மதிப்புரை தந்துதவிய புலவர்கட்கும், இக்கட்டுரை வெளியீட்டை விரும்பி மேற்கொண்ட தமிழ்ச் சங்கக் காரியதரிசியவர்கட்கும் நான் என்றும் கடப்பாடுடையேன்.

என் கருத்துக்கள் துணிந்த முடிபுகளென்று கொள்ள வேண்டா . வழங்கும் பல கற்பனைக் கதைகளையும் நம்பி அவற்றை அப்படியே பரப்பிவரும் குணத்தைச் சிறிது மறந்து,

 “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எனும் பொய்யில் புலவர் பொருளுரையைக் கையாளத் தமிழ் மாணாக்கரை என் கட்டுரை எனைத்தளவும் தூண்டுதற்கு உதவுமாயின், அனைத்தளவு என் சிறு முயற்சிக்குப் போதிய கைம்மாறு பெற்றவனாவேன்.

 ச. சோமசுந்தர பாரதி

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *