திருவள்ளுவர்
சோமசுந்தர பாரதியார்

பகுதி 6: வள்ளுவர் வணிகன் வளத்துணையால் வாழ்ந்த வரலாற்றுண்மை

இனி மயிலாப்பூரில் தனவணிகர் ஏலேலசிங்கரின் வண்மைக்கு வள்ளுவர் மிகவும் கடப்பட்டவரெனவும், இளமை தொட்டு எஞ்ஞான்றும் ஏலேலசிங்கரின் நட்பு நலமும் ஈகை வளமும் துணைக்கொண்டு வள்ளுவர் தம் மனையறம் வளர்த்து வாழ்ந்தனரெனவும் நாமறியும் நாடொடிக்கதை நவில்கின்றது. இது மேற்குறித்த வள்ளுவப் பெயர் வரலாற்றுண்மை விளக்கத்தாற் பொய்படும். அன்றியும் இவ்வரலாறு வள்ளுவரை வணிகர் பாற்பெறுவிக்கும் பெருநலத்தில் ஒரு சிறிது சடையப்பரிடம் பெற்ற கம்பர் அவரையும், அவ்வாறே கூத்தர் காங்கேய முதலியாரையும், புகழேந்திப் புலவர் சந்திரன் சுவர்க்கியையும் அழிவிலா அமரராக்கித் தமது ‘என்று முளதென்றமிழ்’ நூல் நின்று வளர் புகழுரிமை உவந்து அவருக்கு உதவியுள்ளார். பவபூதியனைய பல பாவாணரும் வடமொழியில் இவ்வாறே வள்ளியரை வழுத்தியுள்ளார். ‘உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு’ எனும் அறந்தெரித்த வள்ளுவரோ அந்நன்றிகொன்று , அனவரதம் அளி செய்த தனவணிக முதலோனை மறவியெனும் மறலிக்கும்-தொல்லரும் பாவலர் நல்லறமரபிறந்து தம்மைப் பெரும்பழிக்கும்-பலியாக்கும் பான்மையுடையார்? திருமயிலைப் பெருவணிகன்றரும் உதவி ஒரு சிறிதும் பெற்றிருப்பின், வள்ளுவர் அதனைப் பாராட்டி நன்றிக்கடனாற்ற மறக்க மாட்டுவரோ? யாண்டும் எனைத்தளவும் நம்முதற் பாவலராற் சுட்டப் பெறாத ஏலேலசிங்கற்கு அவர் நெடுந்தொடர்பு சொல்லும் இக்கதையே அதன் ஒல்லாமை காட்டற்கு நல்லசான்றாம்.

இதுகாறும் எடுத்த்க் காட்டியவற்ரால், நாயனார் புலைமகளின் பழிமகவல்லரெனவும், கடைச்சங்கக் கடைக் காலத்தவரால் வறியராய் ஏலேலசிங்கரின் வண்மையால் வாழ்ந்தவரல்லரெனவும், மயிலாப்பூரில் வாழ்ந்து மதுரை வந்து சங்கபங்கஞ்செய்து மீண்ட தறுகண்ணரல்லரெனவும், மூன்றாஞ்சங்கத்தின் முற்காலத்தே மதுரைவாசியாய் மாதானு பங்கியரின் மணவாளராய்க்-குறளடிகளால் அறம்பாடி யுலகுய்யவுதவிய வள்ளன்மையுடையராய்ப்-பண்டைப் பாண்டியருக்கு அருங்கடம்பூண்டு அவருள் படுகருமத்தலைமைவகித்துயர்ந்த பெருந்தகையாய் – அருந்தமிழ் வேளிர்பெருங்குடிப்பிறந்து சிறந்த பெரியருமாவரெனவும் ஒருவாறு தெளியலாகும். தேரா ஊரார் ஒராதுரைக்குங் கதையளவிற் கூறப்படும் புலைக்குலப்பிறப்பும், மயிலாப்பூர் வணிகன்கீழ்த் “தொழுதுண்டுபின்செல்லும்” வாழ்வும், சங்கபங்கத்தருக்கும் தக்கசான்றெதுவுமின்றித் தேவர்க்கீவது உண்மையுணரும் ஒண்மையுடையோர்க்குச் சால்பன்றென்பது நடுநிலையாளருக்கு ஒப்பமுடிவதொன்றாம்.



★ ★ ★


இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *