திருவள்ளுவர்
சோமசுந்தர பாரதியார்

பகுதி 3: வள்ளுவச் சொல்லின் வழக்கும் பொருளும்

இனி வள்ளுவப் பெயர் பறைக் குலத்தையே சுட்டுகின்றதா என்பதும் சிறிது ஆராயத்தக்கது. பறையரின் புரோகித வகுப்பினரே வள்ளுவராவர் – என்பதற்குச் சூடாமணி நிகண்டும் பிற்காலப் பிறநூல்களும் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன. பண்டைநூலொன்றில்லேனும் வள்ளுவப்பெயர் தீண்டாம லொதுக்கப்படும் புலையர்க்காமெனும் குறிப்பும் இல்லை. மணிமேகலையில், வள்ளுவனென்ற பெயரும் இல்லை. பெருங்கதை சிந்தாமணி முதலிய கடைச்சங்கத்துக்கு மிகப் பிற்பட்ட சில காப்பிய நூல்களுள் பெருவிழாக்களையும் மன்னர் மணமனைய நற்செய்திகளையும் பட்டத்துயானைப் பிடர்த்தலையிருந்து அகநகரில் அரசவீதிகளிற் றெரிவிப்போர் வள்ளுவரெனச் சுட்டப்படுவதுண்டு. ஆண்டும் ஆனைமேல் அணைமிசையமர்ந்து பெருவிழாக்களை அரசமுரசொலிக்க அறிவிக்கும் தொழிலுடையோரைச் சுட்டுதற்கன்றிப் புலையர்குலவகுப்பினர் யார்க்கும் வள்ளுவப்பெயர் வழங்கவில்லை. “அணைமிசை யமர்தந் தஞ்சுவரு வேழத்துப் பணையொருத் தேற்றிப் பல்லவர் சூழ”[1]  ஊரையும் தம்மையும் உலகையும் வாழ்த்தித் தம் மணம் முதலிய மங்கலவிழாக்களை அறிவிப்பதற்கு வேந்தர் புலையரைதேடிக் கொள்ளாரன்றே? மேலும், புறநானூற்றில் “துடி பாண் இடும்பனொடு குடியாப்” பேசும் பறையரொடுவைத்துப் பிற்காலப் பெருங்கதையும் வள்ளுவமுதியரைச் சொல்லுமாறில்லை. நன்குடிமக்களின் பின்னடிக்குடியான பறையர் சாற்றும் பறையும் அதை அவரறையும் முறையும்வேறு.

“அரசுகொற்றத் தருங்கடம் பூண்ட” வள்ளுவரோ, கோற்றொழில் வேந்தர் கொற்ற முரசம். பெரும்பணைக் கொட்டிலுள் அரும்பலியோச்சி, முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித், திருநாள் படைநாள் கடிநாளென்றிப், பெருநாட் கல்லது பிறநாட்கறையார்” எனப்பெருங்கதை பேசுகின்து.

பெருங்கதையுட் போலவே சாத்தனார் தம் மணிமேகலையிலும். –

“வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசங்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
முரசுகடிப் பிடூஉ முதுக்குடி பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஒளிறுவாண் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தரக் கண்முர சியம்பிப்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென”

(விழாவறைகாதை – வரி – 27, 28, 31. 32: 68-72. )

என்று கூறியுள்ளார்.

இதில், தமிழ்முடியரச ரிமிழ்கடிமுரசை அரணுடையவர் கோயில்களில் வச்சிரக்கோட்டத்தினின் றெடுத்து யானைப்பிடர்த்தலையேற்றி அரசனையும் அனைவரையும் வாழ்த்திப் புகார் அகநகரிற் கரிகாற்சோழன் கட்டளையாற் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றினவனை ‘முதுக்குடிப்பிறந்தவனாக‘ வே சுட்டியுள்ளார். கொங்குவேளிரும் சாத்தனுரும், அரசன்கோட்டத்துக் கொட்டிலுள் முரசுத் தேவைப் பலியோச்சிப் பழிச்சி விழடவுணர்த்த யானையெருத்தத் தேற்றுவதைக் கூறுவதுபோலவே பாலைக்கெளதமனாரும், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் வண்மைவள முழங்கும் தம் பாட்டில், ‘முரசுறைகடவுளை’ இரும்பலியூட்டிப் பரசியேந்துபவனை “உயர்ந்தோன்” என விதந்து கூறுவதும் கவனிக்கத்தக்கது. இவ்வாறு “வேந்தன். . . பெரும்பணைக்கொட்டி” லுள்ளும் வச்சிரக் கோட்டத்துள்ளும் புலைப்பறையர்சென்று அரும்பலி ஓச்சுவரா? அன்றியும், கழுத்திலிட்டறைந்து காலானடந்து கரையும் பறையரின் பறை வேறு; வள்ளுவமுது மகன் ரசவேழத்தணை மிசையமர்தந்து மன்னர் மங்கலப் பெருநான் வழுத்தும் ‘கோதை முத்தொடு தாமம் ததைஇய’வேந்தர் கொற்றமுரசமும் வேறன்றோ?

மேலும், ஆஸ்தானமண்டபத்தில் கொலுவிருந்தபடியே, “அரசு கொற்றத் தருங்கடம் பூண்டமுரசெறி வள்ளுவ முதியனைத் தரீஇ[4] அரசரே நேரில் அவனுக்கு ஊருக்குரைப்பன கூறுகின்றதனாலும், வேந்தர் வெற்றி முரசைப் பலிதந்து பரசி ‘அரசுவரு வேழத்துப் பணையெருத்தேற்றி” ‘மறவருந் தேரும் மாவுங் களிறுஞ் சூழ்தர’உலகை அரசொடு வாழ்த்தி அணிவிழவறையும் வள்ளுவனைஅரசுகொற்றத் தருங்கடம் பூண்டவனாயும் முதுக்குடிப் பிறந்தோனாயும் உயர்ந்தோனாயும் பண்டைப் பனுவல்கள் பாராட்டுவதாலும், அரசருக் கருங்கடம் பூண்டதோருத்தி யோகம் உடையனே அவ்வள்ளுவனாக வேண்டுமென ஊகித்துணரக் கிடைக்கின்றது.

இனி, இதன் தொடர்பாகச் சேந்தனார் திவாகரத்தில் “வள்ளுவன் சாக்கையெனும்பெயர் மன்னர்க், குள்படு கருமத் தலைவர்க் கொன்றும்” என்று விசதமாக விளக்கியுள்ளமையும் ஈண்டுக் கவனிக்கற்பாற்று. இதனாலும் மன்னர்தம் உள்படுகருமத்தலைவர்க்கு வள்ளுவரென்பது உத்தியோகப் பெயராதல் தெள்ளிதிற் றெளியக் கிடக்கின்றது. தற்காலத்திலும் அரசனனைய பெருமக்களுக்கு அன்பும் நம்பிக்கையுமுடைய ஆப்தர் உட்கருமத்தலைவர் (Private Secretaries) ஆக அமரக் காண்கிறோம். எனவே, பண்டைக்காலத்திலும் தமிழரசர் தம்மகத்தே, புறக்கருமத்தலைவரான ஏனாதியரொத்த வரிசையும் பதவியுமுடைய அகக்கருமத் தலைவரான உத்தியோகத்தர்

இருந்தனரெனவும், அவர் வள்ளுவரென வழங்க்கப் பெற்றாரெனவும் தெளிகின்றோம். கடைச்சங்கத்துக்கு முற்பட்ட குறளாசிரியர் பழங்காலத்தில் வள்ளுவப்பெயர் சாதிகுறியாமல் மன்னருள் படுகருமத் தலைமைப்பதவியையே குறித்ததாக ஏற்படுகின்றது. எனவே, வள்ளுவப்பெயர் சங்ககாலத்திற் றமிழரசர் உள்படுகருமத் தலைமையுத்தி யோகப் பெயராயும் (Chamberlains), பெருங்கதையும் சிந்தாமணியும் எழுந்த இடைக்காலத்தே அவ்வுத்தியோகத்தரின் தொழிலிலொன்றான அரசவிழாக்களை அறிவிப்போர் (Heralds) பெயராயும் நின்று, பிற்காலத்திற் பறையருக்குப் புரோகிதரும் நிமித்திகருமான் ஒரு புலைவகுப்பினரின் சாதிப்பெயராய் வழங்கலாயிற்றெனத் தெரிகின்றோம். இப்படியே முன் சாதிகுறியாத குறிஞ்சித்திணை மக்கள் பொதுப்பெயராய் நின்ற ‘குறவர்’ எனுஞ்சொல் தற்காலத்திற் குறிசொல்லும் ஒரு பஞ்சம வகுப்பினரின் சாதிப்பெயராய் வழங்குவது அறிவோம். இவ்வுண்மையறியும் நாம், இக்காலத் தொருவனை வள்ளுவனெனில் வள்ளுவச் சாதியிற் பிறந்தவனைக் குறிப்பதெனக் கொள்ளுமுறை கொண்டு, பிறப்பாற் சாதிகுறியாத முன்சங்கத் தமிழுலகில் வள்ளுவரெனுஞ்சொல் பதவி-தொழில் குறியாது சாதிகுறிப்பதெனத் துணிதல்முறையாமா? வள்ளுவரென்று ஒரு சாதிவகுப்பே  தொல்லைத் தமிழகத்திலிருந்ததாய் அறிந்தபாடில்லை. பழம் பனுவல்களில் வள்ளுவப்பெயர் அரசரகம் படுகருமத்ததிபரையே சுட்டக் காண்கின்றோம். அதனால், அப்பெரும்பழங்காலத்துக் குறளாசிரியர் வள்ளுவரென்று வழங்கப்பெறுவது கொண்டு – அவரைத் தற்கால வள்ளுவச்சாதி வகுப்பில் தள்ளிவிட யார்க்கும் உரிமையில்லை. அப்பெயரால் நாம் கொள்ளற்குரியது, அவ்வாசிரியர் அவர்காலத் தமிழரசன் ஒருவன்பால் ‘உள்படுகருமத்தலைவ’ராக அமர்ந்தவராதல் வேண்டுமென்பதே, பிரித்தானியா(Britaain))வில் பேரமைச்சனாயிருந்த பேகன்(Bacon) பெருநூலெழுதிய பின்னர் அவனமைச்சனாயிருந்த வரலாறு முழுதும் மறந்து அவனை அறிஞர் கூட்டத்தில் வைத்தெண்ணப்படுவதனையே பெரும்பாலோர் அறிவர். சாணக்கியரால் அவர் பெயரால் நின்று நிலவும் நூலாசிரியரென அனைவரும், சந்திரகுப்தன் மந்திரி என்று அவரை வெகு சிலருமே கூறக்காண்பாம்.

இம்முறையில் நம் முதற் பாவலரும் அரசன் அகக்கருமத்தலைமை வைத்து வள்ளுவப்பதவியும் பட்டமும் பெற்று அவ்வுபசாரப்பெயரான் அழைக்கப்பட்டிருந்து, பின் அவர் தம் இறவாக் குறணூலை இயற்றிப் புகழ் சிறந்ததனால், கேவலம் உத்தியோகப் பதவியைப் பாராட்டி அவருக்குப் பெருமை கூறக்காரணமில்லாது, அப்பெயர்ப் பொருளை மறந்த மக்களின் நெடுவழக்கால் வள்ளுவப் பெயர் அவர்க்கு இயற்பெராக நின்று நிலவிவரவாய்த்தது போலும்.

மேலும், வள்ளுவப்பெயர் சங்ககாலத் தமிழகத்திற் பறையரினொரு வகுப்புக்கும் சாதிப்பெயராகாமல், தகவு உடைய முடிமன்னர்மகட் கொடைக்குரிய வேளிர்-குறுநில வேந்தரிடை வழங்கி வந்த செய்தியும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. கடைச்சங்க காலத்துக்கு முந்திய புலவர் சிலரின் முதுசுவைப்பாக்களையுங் கொண்டுளதாகக் கருதப்பெறும் புறப்பாட்டில், ஒரு சிறைப்பெரியனார், மருதனிளநாகனார், கருவூர்க் கதப்பிள்ளை எனும் பண்டைப் பாவாணர் பாடிய வேளிர்குலதிலகனாம் நாஞ்சிற்குரிசிலின் பெயர்”வள்ளுவன்” எனச் சுட்டப்படுகிறது. இஃதவனியற் பெயராதலொன்று; அன்றேல், அவன் சேரன்மாட்டன் புடையனாய் அவனுக்குப் படைத்துணை நின்றதாயறிகின்றோமாகையால், அக் குடச்சேர அரசன் கொற்றத் தருங்கடம் பூண்ட உள்படு கருமத்தலைவனாயிருந்த பதவியாலெய்திய பட்டப் பெயராதலொன்றாம். எதுவேயாயினும், வேளாண்மரபிற் குறுநில் வேந்தனுக்கு “வள்ளுவன்”எனும் பெயர் புறப்பாட்டில் வழங்குவதாலும், சங்கநூல்களில் அது புலைக்குலச் சாதிப் பெயராக யாண்டும் பயிலாமையானும் வள்ளுவப்பெயர் மன்னருள்படு கருமத் தலைவர்க்கொன்று மென்றே சேந்தனார் திவாகரத்திற் செப்புவதாலும், அப்பெயருடைமை கொண்டு அறப்பழங்காலக் குறளற நூலுடையாரை பறைக்குலத்தவராகக் கருதல் முறையன்றாம்.

இன்ன பலகாரணங்களாற் பொய்யில் புலவருக்கு “வள்ளுவர்” எனும் பெயர் இயற்பெயராகாமல், பதவியும் தொழிலும் உதவவந் தொன்றி நின்றதொரு சிறப்புப் பெயராகுமென்று நினைப்பது இழுக்கன்றாம். அன்றி இயற்பெயரெனவே இயம்பினும் இசையும். “சிறப்பினாகிய பெயர்நிலைக்கிளவிக்கும், இயற்பெர்க்கிளவி முற்படக்கிளவார்” எனும் தொல்காப்பியச் சூத்திரவுரையில்-யாருக்கும் காரணச்சிறப்புப்பெயரை முற்கூறி அவர் இயற்பெயரைப் பிற்படவழங்குவதே தமிழ் மரபென்பதை வலியுறுத்துவதற்குச் சேனாவரையர், நச்சினார்க்கினியர் இருவரும்”முனிவன் அகத்தியன்” “சோழன் வன்கிள்ளி” என்பவரோடு ‘தெய்வப்புலவன் திருவள்ளுவன்’என்ற தனையும் உதாரணமாக உடனெடுத்துக்காட்டிய செய்தியைச் சிந்திப்பின், ‘முனிவன்”சோழன்’ தெய்வப் புலவன்‘எனச் சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளவிகளுக்குப் பிற்படக் கிளக்கப்படும் ‘அகத்தியன்’ ‘வன்கிள்ளி’என்பன போலவே-திருவள்ளுவனென்பதும் நாயனாருக்கு இயற்பெயராமென்பது அவ்விரு பேராசிரியருக்கும ஒப்ப முடிந்த கருத்தெனத் தெளியலாகும். இவ்வாறு இவர்க்கு இஃது இயற்பெயாரென்பாரோடு எமக்கு வாதமில்லை; ஏனெனில், இயற்பெயரென்போர் அப்பெயர்கொண்டு வள்ளுவரைப் புலைக்குலம் புகுத்திப் பிழையார். வள்ளுவப்பெயர் காரணமாகத் தெய்வப் புலவரைப் புலைகுலத்தவராக்க விரும்புபவருடன் மட்டுமே ஈண்டு வாதமாதலானும், இயற்பெயராக்கொள்ளல் அவ்விருபுடையோர் வழக்குக்கு உதவாமையானும், காரணச்சிறப்புப்பெயராய் எழுந்து பின் இயற்பெயராய் நிலைத்தெனக் கொள்வார்க்கு மட்டும் அப்பெயர் நிலைக்கிளவி சாதிகுறியாது “வேத்தக வினைமை” யே குறிப்பதெனக் காட்டி யமைவேம்.

இனி வள்ளுவப்பெயர் தொழிலையே குறிக்குமாயின், குறளாசிரியரும் குறளுமே அப்பெயரான் வழங்கப் பெறுவது வழக்காறாமா? -என்பார்க்குக்கூறுவம் சால்பும் தகவுமுடைய பெரியாரை அவரியற்பெயராலழைத்தல் தமிழகத்தில் மரபன்று- என்பது யாவரும் அறிந்த தொன்றாம். தற்காலத்திலும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையைப் பிள்ளையவர்களென்றும், நல்லூர் ஆறுமுகநாவலரை நாவலரவர்களென்றும், இன்னும் இப்படியே அங்காங்கு அவ்விடத்துப் பெரியோர் சிலரைக் கலைக்டரவர்கள் திவானவர்களென்றுமே நம்மவர் சொல்லுவதை யாவரும் அறிவோம். பண்டைக்காலத்திலும் உவாத்திமைத் தொழிலுடைய கணக்காயர் பலரெனினும் அவருட் சிறந்த நக்கீரர் தந்தையை மதுரைக்கணக்காயரெனவும், சிந்தாமணி ஆசிரியரைத் தேவரெனவும், இளங்கோவை அடிகளெனவும் தொல்காப்பியத்திற்கு முதலுரை கண்ட பெரியாரைப் பேராசிரியர், உரையாசிரியர் எனவுமே அவரவர் தொழில் பதவிகளானும், தொல்காப்பியர் முதலிய பழம்புலவர் பலரைக் கேவலம் அவரவர் குடிப்பெயரானும் மட்டும் அழைக்கும் வழக்குண்மை அறியாதாரில்லை. கம்பர் என்பதும் அப்புலவர் பெருமானின் நாட்டினடிப் பிறந்ததொரு சிறப்புரிப் பெயராவதன்றி அவரியற்பெயராகாமை கம்பநாடர், கம்பநாட்டாழ்வார் என்ற பெருவழக்குக்களால் விசதமாகும். இப்பெரியோர் எல்லோர்க்கும் இயற்பெயரொன்றில்லையெனச் சொல்லலாமா? இப்போது அவ்வியற் பெயர்களொன்றேனும் அறியகில்லேம். பெரியார்பெயர் வழக்கின்மை மரபன்றே. இவ்வாறு இன்னவர்தம் இயற்பெயரை மறப்பித்துப் புதுப்பெயர்கள் புனைந்து இவர்க்குச் சூட்டிற்றாகும். எனவே பெரியோர்களியற்பெயர்கள் வழங்காமையும், அவரை அவர்தம் சிறப்புரிமைப்பெயரானே அழைப்பதுமே தமிழகத்தில் தொன்றுதொட்டு நின்றுவரும் மரபென்றே அறியலாகும். ஆகவே, தாமே தம் தகுதியாலாவது தம் முன்னோர் வரன்முறையுரிமையாலாவது தமிழ்முடி மன்னரிடம் அவருள்படுகருமத் தலைமை வகித்து, வள்ளுவப் பதவிப்பெயர் வழங்கப்பெற்று, அக்கால வள்ளுவ உத்தியோகம் வகித்த மற்றையோரினும் அறிவு திருஆற்றல்களிற் சிறப்பெய்திய காரணத்தால், நமது நாயனார் வள்ளுவரெனும் உத்தியோக உபசாரத் தனிப்பெயராலழைக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், பிறகு அவர் திருக்குறளீயற்றிப் பெரும் புகழெய்தப் பெற்று- நாளடைவில் ஆட்சியின்மையான் அவரியற்பெயர் அறவே மறக்கப்பட்டு அவருக்குத் திருவள்ளுவப் பெயர்மட்டும் நிலைநின்று வழக்காற்றில் வந்திருக்கவேண்டுமெனவும் ஈண்டு நாமறியலாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *