

இன்ப மாலை
கி. வா. ஜகந்நாதன்
சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் வரிசை யில் ஒன்றாகிய அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது. இதனை அகமென்றும், அகப்பாட்டென்றும் சொல்வது உண்டு. பல புலவர்களின் அகத்துறைப் பாடல் தொகுதிகளாகிய குறுந் தொகை, நற்றினை, அகநானூறு என்ற மூன்றில் அடியளவினால் நீண்ட பாடல்களை உடையதாதலால் இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் வழங்கும். பதின்மூன்றடி முதல் முப்பத்தோரடி வரையில் அமைந்த பாடல்கள் இந்தத் தொகை நூலில் இருக்கின்றன. இதற்கும் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பெருந்தேவனார் இயற்றிச் சேர்த்திருக்கிறார், அது அகப்பாட்டாகிய நானூற்றில் அடங்காதது. அதையும் சேர்த்தால் அகநானூற்றின் பாடல் தொகை 401 ஆகும்.
இந்தத் தொகையைத் தொகுக்கும்படி செய்தவன் உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டிய அரசன். அவன் விருப்பத்தின் படி இதனை ஒழுங்குபடுத்தித் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர். இறையனாரகப் பொருளுக்குச் சங்கப் புலவர்கள் பலர் எழுதிய உரைகளைக் கேட்டு அவற்றில் நக்கீரர் உரை சிறந்ததென்று நிறுவியவர் இவர் என்றும், பிறவி ஊமை யென்றும், முருகனுடைய அமிசம் உடையவரென்றும் ஒரு வரலாறு வழங்குகிறது.
அகநானூற்றை மூன்று பகுதிகளாகப் பகுத்திருக்கிறார்கள். முதல் நூற்றிருபது பாடல்களைக் ’களிற்றியான நிரை’ என்றும், அவற்றின் பின் உள்ள நூற்றெண்பது பாடல்களை ‘மணிமிடைபவளம்’ என்றும், கடைசியில் உள்ள நூறு பாடல்களை “நித்திலக் கோவை” என்றும் பகுத்துப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவுக்குரிய காரணம் இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை. பழைய குறிப்பொன்று, களிற்றியான நிரை என்பது பொருள் காரணமாக வந்ததென்றும், மணிமிடை பவளம் என்பது செய்யுளும் பொருளும் ஒவ்வாமையால் வந்த பெயரென்றும், நித்திலக்கோவை என்பது செய்யுளும் பொருளும் ஒக்கும் காரணத்தால் வந்ததென்றும் தெரிவிக்கின்றது. இந் நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைந்து பேர்.
இதில் ஒற்றை எண்களையுடைய பாடல்கள் யாவும் பாலைத் திணையில் அமைந்தவை. இரண்டு, எட்டு என்ற எண்களைப் பெற்றவை யெல்லாம் குறிஞ்சித் திணைப் பாடல்கள். நான்கு என்ற எண்ணுடையவை முல்லைத் திஔக்குரியவை. ஆறு என்ற எண்ணை உடையவை மருதத்துக்கும், பத்து என்ற எண்னை உடையவை நெய்தலுக்கும் உரியவை. இந்த வரையறை இருப்பதனால் பாட்டின் எண்ணைக் கொண்டே அது இன்ன திணைக் குரியது என்று சொல்லிவிடலாம். 391-ஆம் பாட்டு என்ன திணை யென்றல், அது ஒற்றைப்படை எண் ஆகையால் பாலைத்திணை யென்று சொல்லிவிடலாம். அப்படியே 296-ஆம் பாட்டு ஆறு என்ற எண்ணை இறுதியில் உடைமையால் மருதத்தினைப் பாட்டென்று சொல்லிவிடலாம். இந்த நூலில் மிகுதியாக உள்ளவை பாலைத்திணைக்குரிய பாடல்கள்; அவை இருநூறு. அடுத்தபடி குறிஞ்சிக்கு எண்பது பாட்டும், மருதத்துக்கு நாற்பதும், முல்லை நெய்தல் என்பவற்றிற்கு நாற்பது நாற்பது பாடல்களும் இருக்கின்றன.
நீண்ட அளவுள்ள பாடல்களாக இருப்பதால் சொல்ல வேண்டியவற்றை விரிவாகச் சொல்வதற்கு இடம் இருக்கிறது. ஒவ்வொரு தினைக்கும் உரிய முதல் கரு உரிப்பொருள்களை நன்றாக அமைத்துச் சொல்ல முடிகிறது. கவிஞனுடைய கற்பனை படர விரிந்த இடம் இருப்பதனால் எதையும் நன்றாகவும் அழகாகவும் சொல்ல இயல்கின்றது.
இப் புத்தகத்தில் அகநானூற்றிலிருந்து எடுத்த ஐந்து பாடல்களுக்குரிய விளக்கம் இருக்கிறது. கடவுள் வாழ்த்து ஒன்றும், அகத்துறைப் பாடல்கள் நான்கும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அந்த நான்கில் இரண்டு குறிஞ்சியைச் சார்ந்தவை; இரண்டு முல்லைத் திணைக் குரியவை. குறிஞ்சித் திணைப் பாடல்கள் இரண்டும் களவுக் காலத்து நிகழ்ச்சிகளையும், முல்லைத் திணைப் பாடல்கள் இரண்டும் கற்புக்காலத்து நிகழ்ச்சிகளையும் கூறுகின்றவை. அந்த நான்கு பாடல்களில் தோழி கூற்றாக இரண்டும் (2,3), தலைவி கூற்றாக ஒன்றும் (4), பாணன் கூற்றாக ஒன்றும் (5) அமைந்திருக்கின்றன.
சிவபெருமான வாழ்த்தும் பெருந்தேவனார் அப்பெருமானுடைய தோற்றத்தையும் இயல்பையும் விரித்துரைக்கிறார். அப்பெருமானுடைய திருமுடி, திருமார்பு, திரு நுதல், நெற்றிக்கண், திருக்கரம், திருமேனி, பல், சடை திருக்கழுத்து, திருத்தாள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்கிறார். அவன் அணிந்திருக்கும் கொன்றை மாலை, பூணூல், பிறை, புலித்தோலாடை என்பவற்றையும், அவன் எடுத்த படைகளாகிய கணிச்சி, மழு, சூலம் என்பவற்றையும், அவனுடைய இடபவாகனத்தையும் பாடுகிறார், உமாதேவியார் எப்போதும் எம்பெருமானேடு சேர்ந்திருப்பதைக் குறிப்பிக்கிறார். அவன் எப்போதும் இசை பாடுவதைச் சொல்கிறார்.
இப்படி அங்க அணி அடையாளங்களால் இறைவனை அன்பு கொண்டு சுட்டிக் கூறித் துதித்தாலும் அவனுடைய மிகப் பழமையான இயல்புகள் இன்னவென்று யாராலும் திட்டமிட்டுச் சொல்வது முடியாதாம். அமரரும் முனிவரும் பிறரும் அறியாத தொன்முறை மரபாம் அது. இறைவனுடைய அருள் மயமாகிய தாளின்கீழ் உயிர்க் கூட்டங்களெல்லாம் எப்போதும் இருந்து வாழ்கின்றன.
சங்ககாலத்துத் தமிழர்கள், அடியார்களுக்கு இரங்கி ஆண்டவன் திருக்கோலங் கொண்டு எழுந்தருளுகிறான் என்பதையும், அப்படி அங்க அடையாளங்களைச் சுட்டிக் கூறுவதற்குரியவனாக அவன் இருப்பினும் அவன் இயல்பு முற்றும் உணர்தற்கரியது என்பதையும், இறைவனுடைய அருளிலே எல்லா உயிரும் வாழ்கின்றன என்பதையும் உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு இந்தக் கடவுள் வாழ்த்து ஒரு தக்க சான்று.
இறைவன் கருணையை நினைந்து அன்பு செய்யும் தமிழர்கள், உலகில் வாழ வேண்டிய வகையில் வாழ்ந்து வந்தார்கள். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் வளர்த்தார்கள். இல்வாழ்க்கையின் பயனே அறம் என்று எண்ணினார்கள். அதற்குப் பொருள் வேண்டுமாதலின் அதனை நல்வழியில் ஈட்டினானர்கள். அறத்தினின்றும் பிறழாத வகையில் பொருளின் உதவியால் இன்பம் துய்த்தார்கள்.
காதலின்பத்தைத் துய்ப்பதில் இரண்டு நிலைகளை அகப் பொருட் பாடல்களிலே பார்க்கிறோம், அவற்றைக் களவென்றும் கற்பென்றும் சொல்வார்கள். காதலனும் காதலியும் நல்லூழின் வன்மையால் முன்பின் அறியாதவர்களாயினும் ஓரிடத்தில் சந்தித்துக் காதல் கொள்கின்றனர். இந்தச் சந்திப்பு இயற்கையாக, ஒருவருடைய முயற்சியும் இன்றி நிகழ்வதாதலின், இதனை இயற்கைப் புணர்ச்சி என்று சொல்வார்கள். ஒருவருடைய முயற்சியும் இல்லாவிட்டாலும் காதலன் காதலியரிடையே வேறு வகையில் தொடர்பு உண்டு. அவர்கள் இப்பிறவியில் எங்கெங்கோ பிறந்து ஓரிடத்தில் சந்தித்துக் காதல் பூண்டாலும், அந்தக் காதல் பிறவிதோறும் வருவது. கண்டதும் காதல் என்று சொல்லும் வேற்று நாட்டுக் களவுக் காதலுக்கும் தமிழ் நாட்டுக் களவுக் காதலுக்கும் இதுதான் உயிர் நிலையான வேற்றுமை. பிறவிதோறும் காதலன் காதலியராக இருக்கும் இரண்டு உயிர்கள் வெவ்வேறு பிறவியில் வெவ்வேறு நிலத்தில் வெவ்வேறு குடியிலே பிறந்தாலும் அவ்வுயிர்களை அவ்வப் பிறவியிலே தெய்வம் இடை நின்று கூட்டி வைக்கிறது. காதலர் தம் முயற்சியின்றியே சேர்வதனால் இயற்கைப் புணர்ச்சி என்று இதனைக் குறித்தாலும் தெய்வத்தின் திருவருள் இடை நின்று கூட்டுவிப்பதனால் இதனைத் தெய்வப் புணர்ச்சி என் றும் சொல்வதுண்டு.
இவ்வாறு திருவருளால் சந்தித்துக் காதல் செய்யும் காதலர்கள் அடுத்தடுத்துக் கூடுகிறார்கள். அவர்களுடைய சந்திப்புக்குப் புதிய துணை ஒன்று அமைகிறது. தலைவியின் உயிர்த் தோழி தலைவியின் மனநிலையை நன்கு உணரும் இயல்புடையவள். அவள் தலைவனத் தலைவி சந்திப்பதற்கு உரிய உதவிகளை-யெல்லாம் செய்கிறாள். பகற் காலத்தில் சோலையிலும் தினைப்புனத்திலும் காதலர்கள் சந்திக்கிறார்கள், திணைப்புனம் காத்தல் முதலிய வேலைகள் இல்லாதபோது தலைவி தாயின் பாதுகாப்பில் வீட்டிலே இருப்பாள். அப்போது தலைவன் இரவுக் காலத்தில் வந்து தலைவியின் வீட்டுக்கருகில் நின்று தன் வரவைச் சில குறிப்பான ஒலிகளால் புலப்படுத்துவான். தலைவி அவன் வரவை அறிந்து தோழியின் உதவிகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து அவனைக் கண்டு அளவளாவுவாள். இவ்வாறு பிறர் அறியாமல் காதலர்கள் ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவி இன்புறும் ஒழுக்கத்தைக் களவு என்று சொல்வார்கள். ஒழுக்கத்தைக் கைகோள் என்றும் வழகிகுவதுண்டு. களவுக் காலத்தில் இன்பம் ஒன்றே காதலர் களின் தனி நோக்கமாக இருக்கும்.
அகத்துறையில் களவு, கற்பு என்னும் இரண்டு கை கோள்கள் உள்ளன. அவற்றில் களவுக் காதல் செய்பவர்கள் பின்பு மணந்து கொள்வார்கள். முதலில் கள வொழுக்கத்தில் ஈடுபட்டு அப்பால் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையாகிய கற்பொழுக்கத்தை மேற்கொள்வதைக் களவின் வழிவந்த கற்பு என்று சொல்வார்கள். களவுக் காதலின்றிக் கல்யாணம் செய்து கொண்டு கணவன் மனைவியராக வாழும் நிலையைக் களவின் வழி வாராக் கற்பு என்பர். இந்த இரண்டு வகையிலும் களவின் வழி வந்த கற்பே சிறப்புடையது என்று தமிழர்கள் கொண்டார்கள்.
வேதத்தில் எட்டுவகை மணங்கள் கூறப்பெறுகின்றன. அவற்றில் ஒன்றாகிய காந்தர்வ மணம் என்பதைப் போன்றது களவுக் காதல். தலைவியின் தாய் தந்தையரும். உலகத்தாரும் அறியாமல் காதலர் இன்புறுவதனால் அதனைக் களவு என்று சொன்னார்கள். மறைவாக நிகழ்வதனால் மறையுறு புணர்ச்சி என்றும் ஒரு பெயர் அதற்கு அமைந்திருக்கிறது. பிறருக்குரிய பொருளை அவர் அறியாதவாறு தனக்கு உரியதாக்கிக் கொள்ளும் களவு அன்று இது, மறைவான ஒழுக்கம் என்ற பொருளில் களவு என்ற பெயர் வந்தது.
தமிழ் இலக்கணத்தைப் பழங்காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்றாகப் பகுத்துக் கூறினார்கள், இந்த மூன்றில் பொருளிலக்கணம் சிறந்தது. அது அகப்பொருள், புறப்பொருள் என்ற இரண்டு பகுதிகளை உடையது. அந்த இரண்டிலும் அகப்பொருள் சிறந்தது. அகப்பொருள் களவு, கற்பு என்ற இரு வேறு பிரிவுகளைப் பெற்றது. அந்த இரண்டில் களவு சிறந்தது. தமிழுக்கே உரியது இந்தக் களவுக் காதல் என்று சொல்வார்கள். களவுக் காதலைப் பற்றிய காட்சிகள் உலகத்து மொழிகளிலுள்ள கவிதைகளில் இருக்கின்றன. ஆனால் தமிழில் உள்ள இரண்டு சிறப்புக்கள் அந்தக் களவுக் காதற் கவிகளில் இருப்பதில்லை. ஒன்று: வரையறையாகச் சில – இலக்கண வரம்புடன் காதல் நிகழ்ச்சியைக் கூறுவது தமிழ் மரபு. திணை, துறை முதலிய ஒழுங்குகள் தமிழர் காதலில் உண்டு. அந்த ஒழுங்குகள் மற்ற மொழி இலக்கியங்களில் இல்லை.
இரண்டாவது: தமிழர்கள் காதலை மிகமிகத் தூயதாக வைத்துப் போற்றினர். அதனை லட்சிய வாழ்வாகக் கொண்டனர். இத்தகைய உயர்ந்த நெறியில் அமையும் காதல், உலகத்தில் நிகழக்கூடுமா என்ற ஐயங்கூடச் சிலருக்கு ஏற்படுவதுண்டு. அதனால் இதை, “இல்லது இனியது, நல்லோரால் நாட்டப்படுவது” என்று இறையனார் அகப்பொருள் உரைகாரர் கூறுவர். தொல்காப்பியர், ”இந்த வரையறை அவ்வளவும் உண்மை அல்ல; இந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் பொய்யும் அல்ல” என்று நினைக்கும்படியாக இலக்கணம் கூறுகிறார், புனைந்துரை வகையினல் அழகான அமைப்புக்களை யெல்லாம் ஒன்று சேர்த்துச் சொல்வதை நாடக வழக்கு என்பார்கள், அகப் பொருள் நிகழ்ச்சிகள் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இணைந்த ஒன்று என்று தொல்காப்பியர் சொல்கிறார், இதனைக் கொண்டு ஆராய்ந்தால், உலகியலில் நிகழும் நிகழ்ச்சிகளையும் இலட்சிய வாழ்வுக்குரிய நிகழ்ச்சிகளையும் இணைத்துக் கவிஞர் அகப்பொருள் உலகத்தைப் படைத்தனர் என்று தோன்றுகிறது. நனவும் கனவும் இணைந்தது அது.
இந்த வரையறையோடு தமிழ்க் கவிஞர் சொல்வது நடத்தற்கு அரியதுபோலச் சில இடங்களில் தோன்றும். ஆயினும் காதலின் தூய்மையையும் சிறப்பையும் அத்தகைய நிகழ்ச்சிகளின் வாயிலாகவே கவிஞர்கள் புலப்படுத்தினர். காதல் நித்தியமானது; தூயது. அவ்வாறே காதல் செய்யும் காதலனும் காதலியும் நித்தியமானவர்கள்; தூயவர்கள். இலட்சியக் காதலர்களாகிய அவர்களை உலகில் நாம் கண்டு பழகிய மக்களாக நினைக்கக்கூடாது. அழுக்கும் தவறும் நிறைந்த உலகத்துப் புழுதியிலே நடமாடும் மக்களை நினைத்து அந்தக் காதலர்களை நினைத்தால் அவர்களுடைய தூய்மை கெட்டுவிடும். காதல் என்ற தெய்விக உணர்ச்சியையே காதலனென்றும் காதலியென் றும் உருவாக்கி அமைக்கும்போது அவர்களுக்கு எந்தப் பெயரை வைப்பது? ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருப்பவர்களானல் இன்றார் என்று சுட்டிக் கூறலாம். ஆதலினுல் காதல் செய்யும் காதலர்களைப் பெயர்கூறிச் சுட்டுவது தவறு என்று வரையறை செய்தனர் தமிழர். உருவும் பெயரும் உடையவராகி வாழும் மக்களைக் காதலராக வைத்துப் பாடுவது காதலின் நுட்பத்தையும் தூய்மையையும் குலைத்துவிடும் என்பது அவர் கொள்கை, ஆகவே அகப்பொருட் பாட்டில் சுட்டிப் பெயர் கூறும் பாத்திரங்கள் வருவதே இல்லை. அப்படிப் பெயர் கூறி அவர்களைக் காதலராகவோ காதலியராகவோ வைத்தால் அந்தப் பாடல்கள் அகத்திணைப் பாடல்கள் ஆகா, புறத்தினைப் பாடல்கள் ஆகிவிடும். கடவுளிடம் காதல் கொள்வதாக வைத்துப் பாடினலும் அப்பாடல் புறத்துறைப் பாடலே ஆகும். தூய காதல் நிலவும் எல்லைக்குள் பெயர் சுட்டும் விவகாரமே இல்லை. இதுவும் தமிழுக்கே சிறப்பாக அமைந்த இலக்கணம்.
தாம் இயற்றிய அகத்துறைப் பாடல்களில் யார் புகழையேனும் இணைக்க வேண்டுமானால் அதற்குத் தமிழ்ப் புலவர்கள் ஒரு வழி வைத்திருக்கிறார்கள். பாட்டில் வரும் அகத்துறை நிகழ்ச்சியில் அந்த மனிதரை ஒரு பாத்திரமாக்காமல் எப்படியாவது ஒரு தொடர்பை உண்டாக்கிப் பாட்டில் அவர் பெயரை நுழைத்து விடுவார்கள்,
அகநானூற்றின் முதற் பாட்டை மாமூலனார் என்ற புலவர் பாடியிருக்கிறார், மாமூலனாருக்குப் பழனியில் வாழ்ந்த சிற்றரசனுகிய ஆவியென்பவனைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, “என் காதலர் என்னைப் பிரியமாஃடேன் என்று முன்பு சொன்னரே; அதை இப்போது மறந்து விட்டாரோ?” என்று தன் தோழியிடம் சொல்வதாகப் பாட்டு அமைந்திருக்கிறது.
“பிரியாமல் இருப்போம்” என்று தலைவன் சொன்ன போது, அதற்கு ஓர் உவமையும் சொன்னதாகத் தலைவி கூறுகிறாள். ’சாணை’ பிடிக்கிறவன் அரக்கையும் பிசின் முதலியவற்றையும் சேர்த்து இரண்டு கல்லை ஒட்டிச் சாணைக் கல்லை அமைப்பான், அந்தக் கற்கள் முன்பு தனித் தனியே இருந்தாலும் ஒட்டின பிற்பாடு பிளவு படாமல் ஒன்றுபட்டே இருக்கும், “அந்தச் சாணைக் கல்லேப்போல நாமும் வெவ்வேறாக இதுகாறும் இருத்தாலும் இனிமேல் பிரியாமல் இருப்போம்” என்று தலைவன் சொன்னானாம்.
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியலம் என்ற சொல்தாம்
மறந்தனர் கொல்லோ
என்று தலைவி கூறி வருந்துகிறாள்.
இந்த இடத்தில் புலவர் தம்முடைய அன்புக்கு உரியவனான ஆவியின் பெயரை ஒட்ட வைக்க வழி செய்கிறார். பழனி மலைக்குப் பழங்காலத்தில் பொதினி என்ற பெயர் வழங்கியது. அது ஆவிக்குரிய மலையல்லவா? ’ஆவிக்குரிய பொதினி மலையில் சாணைக்காரன் பிசினைக்கொண்டு சேர்த்திய கல்லைப்போல’ என்று சானைக்காரனுக்குப் பொதினியையும் பொதினிக்கு ஆவினையும் அடைகளாக்கிப் பாட்டுக்குள் ஆவியை நுழைத்துவிடுகிறார். பிறகு அவனைப் புலவர் பாராட்டுவதற்குச் சொல்ல வேண்டுமா? “வண்டுகள் மொய்க்கும் கண்ணியையும், வீரக்கழலையும் உடையவன்; அச்சத்தைத் தரும் குதிரை வீரர்களாகிய மழவரோடு பொருது அவரை ஒட்டியவன்; முருகனைப் போலப் போர் செய்கிறவன்; இத்தகைய சிறப்புக்களை உடையவன் ஆவி, அவனுக்குரியது பொதினி மலை; அந்தப் பொதினி மலையிலே சாணைக்காரன் ஒட்டிய சாணைத் கல்லைப்போலப் பிரியமாட்டோம் என்று அழகாக இணைத்து ஆவியின் புகழைப் பாடி விடுகிறார், இரண்டு கல்லும் ஒட்டி இணைந்தது போல, காதலனும் காதலியும் பிரிவின்றி இணைந்ததுபோல, பாட்டில் ஆவியின் புகழ் இணைந்து விளங்குகிறது. பாட்டின் ஆரம்பமே ஆவியின் புகழைச் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது.
வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர், நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கற்போற் பிரியலம்
என்ற தலைவன் கூற்றிலே வரும் உவமையில் ஆவியின் புகழும் வருகிறது.
கடவுளின் புகழைச் சொல்ல வேண்டுமானலும் இவ்வாறு சார்த்து வகையால் அமைப்பதே அகப்பொருளுக் குரிய மரபு. ஒருவருடைய பெயரையும் புகழையும் சார்த்திச் சொல்லும் பாடல்களில் அவரைப் பாட்டுடைத் தலைவர் என்றும், பாட்டில் வரும் தலைவனைக் கிளவித் தலைவன் என்றும் சொல்வது மரபு. பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாக வைத்துப் பாடினால் அது அகத்துறையாகாது; புறத்துறை யாகிவிடும்.
மாணிக்கவாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவையாரில் நடராசப் பெருமானுடைய புகழ் ஒவ்வொரு பாட்டிலும் வருகிறது. அவரைப் பாட்டுடைத் தலைவராக வைத்துப் பாடுகிறாரே யன்றிக் கிளவித் தலைவராகப் பாட வில்லை. அதாவது நடராசப் பெருமான்மேல் ஒரு தலைவி காதல் கொண்டதாகப் பாடவில்லை. அதனால் அக்கோவை அகப்பொருட் கோவையாக விளங்குகிறது. ஆனால் தேவாரத்திலும் திவ்யப் பிரபந்தத்திலும் கடவுளையே நாயகனாகவும், பாடுவார் தம்மை நாயகியாகவும் வைத்துப் பாடிய பாடல்கள் அகப்பொருட் பாடல்கள் அல்ல. அவை யாவும் புறப்பொருளின் பகுதியாகிய பாடாண் திணையைச் சார்ந்தவை. இந்த நுட்பமான வேறுபாடு தமிழுக்கே உரிய சிறப்புக்களில் ஒன்று.
இப் புத்தகத்தில் உள்ள அகத் துறைப் பாடல்கள் நான்கிலும் அவ்வத் திணைக்குரிய முதல் கரு உரிப்பொருள்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அவற்றை விளக்கத்தில் காணலாம். இயற்கையின் அழகை விரித்துரைப்பதற்குரிய வாய்ப்பைப் புலவர்கள் உண்டுபண்ணிக் கொள்கிறார்கள். இப்புத்தகத்தில் உள்ள இரண்டாவது பாட்டு, தலைவனைப் பார்த்துத் தோழி பேசுவதாக அமைந்திருக்கிறது. அங்கே தலைவனை மலை நாட்டையுடையவனே என்று அவள் விளிக்கிறாள். சுருக்கமாக மலை நாட என்று சொல்லி விடாமல் அந்த மலையின் வளப்பத்தை எடுத்துரைக்கிறாள். பதினெட்டு அடிகளைக் கொண்ட இந்தப் பாட்டில் முதல் ஒன்பது அடிகளும் மலைப் பக்கத்தில் உள்ள எழிலை அழகாக எடுத்துக் காட்டுகின்றன. வாழை மரங்கள் பெரிய குலைகள் ஈன்று நிற்பதையும், அவற்றின் காய்கள் கனிந்து உதிர்வதையும், பலா மரத்திலே பழம் கனிந்து வெடித்து வழியிலே போகிறவர்களை யெல்லாம் அவர்கள் போகிற போக்கிலே போக விடாமல் தடுப்பதையும், தேன் சொரிந்த சுனையில் அத் தேன் புளித்து விளை தலையும், வாழைப் பழத்தையும் பலாப் பழத்தையும் வயிறு நிறைய உண்ட ஆண் குரங்கு மரத்திலே ஏறுவதற்கு முடியாமல் உதிர்ந்த மலர் குவியலாகக் கிடக்கும் மெத்தென்ற படுக்கையிலே தூங்குவதையும் அந்தப் பகுதியிலே பார்க்கிறோம். குறிஞ்சி நிலத்தின் எழிலையும் இன்பத்தையும் அந்த ஒன்பது அடிகள் காட்டுகின்றன. நாம் மலைச் சாரலிலே நிற்பது போன்ற உணர்ச்சி உண்டாகிறது. வாழைப் பழமும் பலாப் பழமும் தேனும் அகக் கண்முன் வந்து நம் நாவிலே நீருறச் செய்கின்றன. “அந்தக் குரங்கு பெற்ற சுகமே சுகம்” என்று மனத்துக்குள் சொல்லிக்கொள்கிறோம். இது குறிஞ்சி நிலத்தின் இன்பக் காட்சி.
மற்றொரு பாட்டில் பயங்கரமான மலைக் காட்சிகள் வருகின்றன. பாதி ராத்திரியில் அந்த மலையில் புலவர் நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகிறார். இதில் உள்ள நான்காவது பாட்டில் வரும் மலைச் சாரலில் இரவில் பயங்கரம் தாண்டவமாடுவதைக் காண்கிறோம். பதினெட்டு வரியுள்ள அந்தப் பாட்டில் பன்னிரண்டு அடிகளில் அச்சச் சுவை ததும்பும் வருணனையைப் புலவர் அமைத்திருக்கிறார். ஈசல் நிறைந்த புற்றிலே புற்றாஞ்சோற்றைத் தின்ன வந்த கரடி புற்றுக்குள்ளே கையை விட்டுத் தன் நகத்தால் அதற்குள்ளே கிடக்கும் பாம்பை உசுப்பி விடுகிறது. “நடு இரவிலே சுற்றிலும் உள்ள இருள் குட்டி போட்டாற் போன்று தோன்றும் கரடியைக் குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை என்று புலவர் சொல்கிறார், இது ஒரு பக்கம் நிகழ்கிறது. மற்றொரு பக்கம் பெரிய காட்டுப்பன்றியை ஒரு புலி அடித்துக் கொன்று தரதர வென்று இழுத்துச் செல்கிறது. அப்பப்பா! அந்த இடம் முழுவதும் ஒரே புலால் நாற்றம். வேறு ஒரு பக்கத்தில் ஆண் யானை வாழை வனரும் பள்ளத்தில் விழுந்து பிளிறுகிறது. அதை மீட்பதற்காக அதன் பிடி, மரங்களை யெல்லாம் முறித்துப் பள்ளத்திலே படியாகப் போடுகிறது. இந்தச் சத்தத்தால் மலைச்சாரல் முழுதும் கிடுகிடாய்க்கிறது.
இப்படி இயற்கைத் தேவியின் எழிலில் இரண்டு வகைகளை இந்த இரண்டு பாடல்களிலும் காண்கிறோம். ஒன்று இனிய அழகு; மற்ருறொன்று பயங்கர அழகு. முதலிலே சொன்னது அற்புதம் அல்லது மருட்கைச் சுவையைத் தருவது; இரண்டாவது பயானகம் அல்லது அச்சச் சுவையைத் தருவது. இரண்டும் சுவையைத் தருவனவே. பராசக்தியே கண்கவர் அழகுத் திருக் கோலத்தில் காமாட்சியாகவும், உள்ளத்தை நடுங்கச் செய்யும் பயங்கரக் கோலத்தில் காளியாகவும் காட்சி அளிக்கிறாள். இயற்கைத் தேவியும் ஓரிடத்தில் பழமும் தேனும் கடுவனும் மலர்ப் படுக்கையுமாக எழில் திருக்கோலம் கொண்டிருக்கிறாள். மற்றேரிடத்தில் ஈசலும் பாம்பும் கரடியும் இருளும் பன்றியும் புலியும் யானையுமாகப் பயங்கரக் கோலம் பூண்டு விளங்குகிறாள். உண்மை உலகத்தில் இரண்டு கோலங்களும் இருவேறு அழகை உடையன, கவிதை யுலகத்தில் இந்த இருவகைக் கோலங்களின் சொல்லோவி யங்கள் பின்னும் அதிக அழகைப் பெற்று ஒளிர்கின்றன: போற்றிப் பாராட்டும் வகையில் இலங்குகின்றன.
இப்படியே கார் காலத்தில் முல்லை நிலத்தில் பொலியும் அழகை இரண்டு பாடல்கள் சொல்கின்றன. முல்லை மலரும் தேற்றா மலரும் கொன்றை மலரும் மலர்கின்றன; காயாம் பூ மலர்ந்து உதிர்கின்றது. இந்திர கோபப்பூச்சிகள் பவளத்தைப் போல ஊர்கின்றன. மான்கள் புல்லை அருந்தி இன்புறுகின்றன. வண்டுகள் தாதை உண்ணு கின்றன. பசுக்கள் அறுகம் புல்லை வயிறார மேய்கின்றன.
காதலுலகத்தைக் கோலம் செய்து காட்டும் அகப் பாட்டுக்களில் விலங்கினங்க-ளிடையிலும் காதல் இருப்பதை விளக்கும் காட்சிகளைப் புலவர்கள் காட்டுவது வழக்கம்.
கார் காலத்தில் தழைத்துப் பூத்த மரங்களில் உள்ள மலர்களில் வண்டுகள் தாதை உண்ணுகின்றன. ஆண் வண்டுகள் பெடை வண்டுகளோடு அந்த மலராகிய மாளிகையில் வதிகின்றன. அந்த வண்டுகளின் காதலுக்கு ஊறுபாடு நேராமல் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறான் தலைவன். தன் தேரிலுள்ள மணிகளின் நாக்கைக் கட்டிவிடுகிறான். மணியின் ஒலியைக் கேட்டு அந்த வண்டுக் காதலர் அஞ்சிப் பிரிந்து போகக் கூடாதே என்ற எண்ணம் அவனுக்கு. பன்றியைக் கொன்ற புலி அதை அவ்விடத்திலேயே தின்பதில்லை. அதை இழுத்துச் செல்கின்றது. தன் இருக்கையில் உள்ள பெண் புலிக்கும் இரையூட்ட எண்ணியே அவ்வாறு இழுத்துச் செல்கிற தென்ற கருத்துப் பாட்டிலே குறிப்பாகப் புலப்படுகிறது. பள்ளத்தில் விழுந்த ஆண் யானையை மீட்க அதன் காதலியாகிய பெண் யானை படாதபாடு படுகிறது. மழை பெய்த முல்லை நிலத்தில் புல்லை அருந்தும் பொருட்டுக் குதித்தோடும் இரலை தனியே செல்லவில்லை. தன் மடப் பினையைத் தழுவிச் செல்கிறது. இவ்வாறு காதலன் காதவியர் உலவும் காதலுலகத்தின் நிலைக்களத்திலும் காதற் காட்சிகளைப் புலவர்கள் அமைத்திருக்கிறார்கள்.
மக்களுடைய உணர்ச்சிகளின் நுட்பத்தையும், தூய காதலின் திறத்தையும், பிற உயிர்களைத் துன்புறுத்தாமல் வாழும் இயல்பையும், இவைபோன்ற பல அரிய செய்திகளையும் இந்தப் பாடல்களில் காணலாம்.
இத்தகைய சுவை மிக்க பாடல்களை உடைய அகநானுாற்றின் முதல் எண்பது பாடல்களுக்குப் பழைய உரை ஒன்று இருக்கிறது. அதை எழுதியவர் இன்ன ரென்று தெரியவில்லை. அது பெரும்பாலுல் குறிப்புரையாக இருக்கிறது. சில இடங்களில் இறைச்சிப் பொருளையும் உள்ளுறைப் பொருளையும் உரைகாரர் எடுத்துக் காட்டியிருக்கிறார்,
அகநானூறு மூலத்தையும் பழைய உரையையும் ஸ்ரீ வே. இராஜகோபாலையங்கார் என்னும் தமிழறிஞர் பதிப்பித்திருக்கிறார், அப்பதிப்புக்குச் சேது சம்ஸ்தான வித்துவானக விளங்கிய மகா வித்துவான் ஸ்ரீ ரா. ராகவையங்காரவர்கள் பாடல்களைப் பரிசோதித்து உதவினார்கள். இப்போது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் ஒரு பதிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
சங்கநூற் காட்சிகள் என்னும் வரிசையில் இது ஆறாவது புத்தகம், இன்னும் எஞ்சியுள்ள இரண்டு புத்தகங்களையும் முருகன் திருவருள் நிறைவேற்றி வைக்கும் என்றும், தமிழன்பர்களின் ஆதரவு இந்த வரிசைக்குப் பெரிய அளவில் கிடைக்கும் என்றும் எண்ணுகிறேன்.
கி. வா. ஜகந்நாதன்



