இன்ப மாலை
கி. வா. ஜகந்நாதன்

4. காட்டு வழி

    காதலன் வந்து மறைவிலே நிற்கிறான், அவனை வழக்கம்போல் கண்டு அளவளாவும் பொருட்டுத் தோழியைத் துணையாகக் கொண்டு காதலி போகிறாள். ஒருவரும் அறியாமல் காதலன் வருவதும், வீட்டில் உள்ளவர்கள் அறியாமல் கட்டுக் காவலைக் கடந்து சென்று காதலி அவனைச் சந்திப்பதும் எவ்வளவு இடர்ப்பாடான செயல்கள்! ஒவ்வொரு நாளும் என்ன துன்பம் நேருமோ என்றும், தம்முடைய களவுக் காதல் வெளிப்பட்டு விடுமோ என்றும் தலைவி அஞ்சிக்கொண்டே இருக்கிறாள். இந்த அச்சம் தலைவனைக் கண்டு அளவளாவும் பொழுது அவளுக்கு மறந்து போகிறது. அவனைக் காணாத பொழு தெல்லாம் அச்சமும் கவலையும் அவள் உள்ளத்தில் தோன்றித் துன்புறுத்துகின்றன.

    அவர்கள் இரவிலே வீட்டுப் புறத்திலே சந்தித்தார்கள். காடும் மலையும் கடந்து தலைவன் வரவேண்டும். இடையில் எவ்வளவோ இடையூறுகள் நேரலாம். மழை பெய்து வழிதெரியாமல் போகலாம். காட்டாற்றில் வெள்ளம் மிகுதியாக வரலாம். இரை தேடி உலவும் புலி முதலிய விலங்குகளால் துன்பம் உண்டாகலாம். இவற்றையெல்லாம் தலைவி நினைந்து பார்க்கிறாள். நினைக்க நினைக்க, அவளுடைய துயருக்கு முடிவே இல்லை யென்று தோற்றுகிறது.

    சில நாட்கள் தலைவனால் வர இயலாமற் போகும். அப்போதெல்லாம் அவனைச் சந்திக்காத துன்பம் அளவு கடந்து நிற்கும். சில நாட்களில் அவன் வந்து நிற்பான். காவல் மிகுதியால் அவள் போக முடியாது. அவன் வராத சமயத்தில் அவள் போய்ப் பார்த்து விட்டு ஏமாந்து வருவாள். இத்தகைய காரணங்களாலும் அவ் விருவரும் சந்திக்க முடியாமல் போவது உண்டு. இப்படி எத்தனை நாளைக்கு உறுதியில்லாத சந்திப்பிலே இன்பம் காணுவது?-தலைவிக்குக் கவலை அதிகமாயிற்று.

    தன் உள்ளக் கிடக்கையைத் தன் காதலனுக்கு எடுத்துச் சொல்லலாம் என்று காதலி நினைத்தாள். அவனைக் கண்டுவிட்டால்தான் எல்லாத் துன்பங்களும் மறந்து போகின்றனவே அவனைக் கண்டு அளவளாவும் நேரம் மிக அருமையானது. அந்த அரிய காலத்தில் மனத்துக்குத் துன்பத்தை உண்டாக்கும் இத்தகைய பேச்சையா பேசுவது? அவனுடைய முன்னிலையில் அவள் மெழுகுப் பொம்மையாக உருகிப் போகிறாளே! நின்று நிதானித்துத் தன் துயரத்தைச் சொல்ல முடியுமா என்ன? விளக்கை எடுத்துக்கொண்டு சென்று இருளைத் தேடிப் பிடிக்க முடியுமா? தலைவன் அருகில் இருக்கும் போது துயரத்தைப் பற்றிய நினைவு தலையெடுக்குமா?

    ஆனலும் தோழி தலைவிக்கு அடிக்கடி சொல்கிறாள்; ’நீ எப்படியும் அவரிடம் நம் நிலைமையை வற்புறுத்திச் சொல்லத்தான் வேண்டும்?’ என்று பல முறை கூறுகிறாள். தலைவியின் நன்மையை எண்ணியே அப்படிச் சொல்கிறாள். தலைவனைக் காணும் பொழுதைவிடக் காணாப்பொழுது அதிகமாதலால், தலைவனைச் சந்திப்பதால் உண்டாகும் இன்பத்தைவிட அவனைப் பிரிந்திருப்பதால் உண்டாகும் துன்பமே அளவில் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் எவ்வளவு காலத்துக்கு இருக்க முடியும்?

    எப்படியாவது தன் காதலனுக்குத் தான் பிரிவினால் படும் துயரத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள். தோழியும் அவளுக்கு ஊக்கம் ஊட்டினாள். “இன்று எப்படியாவது சொல்லி விடுகிறேன், பார்?” என்றாள் தலைவி.

    தலைவன் வீட்டுக்கு வெளியில் உள்ள சோலையில் வந்திருக்கிறான். வந்து குறிப்பாக ஓசை செய்கிறான். அவன் தான் வந்ததைத் தெரிவிக்கும் சங்கீதம் அது. அதைக் கேட்டவுடன் தலைவிக்கு ஒருவகையான பரபரப்பு உண்டாகிறது. தன் தாய் முதலியவர்கள் தூங்குகிறார்களா என்று கவனித்துவிட்டு மெல்ல எழுந்து வருகிறாள். அவளுடன் தோழியும் துணையாகச் செல்கிறாள். வீட்டுக்கு வெளியே வந்து விட்டார்கள்.

    “இன்று எப்படியாவது தலைவருக்கு நம்முடைய இன்னலைச் சொல்லிவிடு. நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போட்டுக்கொண்டே போனுல் நமக்குத்தான் துன்பம்” என்றாள் தோழி.

    “தோழி, நீ சொல்வது என் நன்மைக்குத்தான் என்பது எனக்குத் தெரியாதா? நன்றாகத் தெரிகிறது. ஆனால் அவருக்கு முன்னே நிற்கும்போது எல்லாம் மறந்து போகிறது. நான் என் செய்வேன்!” என்று தலைவி கூறினாள்.

    “அப்படியாளுல் இன்றைக்கும் உன் உறுதியெல்லாம் அவருக்கு முன்னே குலைந்துதானே போகும்? எப்படி நீ அவரிடம் துணிந்து சொல்லப் போகிறாய்?”

    ”சொல்லவேண்டு மென்றுதான் உறுதியுடன் தீர்மானம் செய்து கொள்கிறேன். சொல்லிவிடலாம் என்றும் தோன்றுகிறது. எல்லாம் வீட்டில் இருக்கும் போது; அவரைக் காணாமல் இருக்கும்போது. கண்டு விட்டாலோ நான் என்னையே மறந்து போகிறேன்?”

    “அப்படியானால் இதற்கு வழி என்ன…எனக்கு ஒன்று தோன்றுகிறது. அப்படிச் செய்யலாமா?”

    ”சொல், தோழி. என்ன செய்யலாம், சொல். எனக்கும் நம் நிலையை அவர் அறிய வேண்டும் என்ற ஆவல் இருக்கத்தான் இருக்கிறது. வழி தெரியாமல் திண்டாடுகிறேன். ஒரு வழியைச் சொல்.”

    “அவர் இதோ வந்திருக்கிறார். நீ நேரே அவரிடம் போக வேண்டாம். அவர் வத்தது தெரியாதது போல நாம் போவோம், அவர் நிற்கும் இடத்துக்கு அருகில், மறைவாக நாம் நிற்போம். என்னுடன் பேசுகிறவளைப் போல நீ உன் மனத்துயரத்தை எடுத்துச் சொல். அது அவர் காதில் விழும். அவருக்கு நம் நிலை தெளிவாகத் தெரிந்தால் இந்தத் துன்பத்தினின்றும் நம்மை மீட்க முயல்வார்.”

    *நீ சொல்வது தக்கதாகவே தோன்றுகிறது. அவர் சிறைப்புறத்தாராக – நடுவே மறைப்பு இருக்க அதற்கு அப்பாலே நிற்பவராக-இருக்கும்போது, என்னால் என் குறையைச் சொல்ல முடியுமென்றே படுகிறது. அவர் முகத்தைக் காணாமல் உன்னோடே தானே சொல்லப் போகிறேன்? சொல்லிவிடுகிறேன்.”

    இவ்வாறு அவ்விருவரும் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள். தலைவன் அருகிலே மறைவாக நிற்கிறான் சிறைப்புறத்தானாக நிற்கிறன். தலைவியும் தோழியும் அந்த மறைவுக்கு இப்பால் நிற்கிறார்கள். தோழி பேச்சை ஆரம்பிக்கிறாள்.

    தோழி: ஒவ்வொரு நாளும் தலைவரைப் பிரிந்திருக்கும் போது நீ எவ்வளவு அல்லற் படுகிறாய் அவரை ஒரு நாள் சந்திக்காமற் போனாலும் புழுவாகத் துடித்துப் போகிறாயே!

    தலைவி : நான் என்ன செய்வேன் தோழி! அவரைக் காணாத காலத்தில் என் உயிர் என் உடலில் இருக்கிற தில்லை. எப்போதும் அவர் அருகிலே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அவர் வராத நாட்களில் நாமே அவரைத் தேடிக்கொண்டு அவர் ஊருக்கே போய்விடலாம் என்று தோன்றுகிறது.

    தோழி: அவர் ஊருக்குப் போவதாவது! அது என்ன, எளிதிலே முடிகிற காரியமா?

    தலைவி : ஆம், அவரைச் சந்திக்காமல் போகும் இராக் காலத்தில் ஒருவரும் அறியாமல் அவர் ஊருக்குப் போகலாம் என்றே நினைக்கிறேன்.

    தோழி : பாதி ராத்திரியில் காட்டு வழியில் செல்ல வேண்டும். மலைப் பகுதிகளை யெல்லாம் கடந்து போக வேண்டுமே! அப்படிப்போவது விளையாட்டா? ஆடவர்களே செல்ல முடியாத அருமைப்பாடு உடைய தல்லவா அந்த வழி? அதில் நீ நள்ளிரவில் போகலாம் என்கிறாயே!

    தலைவி : இங்கே படும் துன்பத்தைக் காட்டிலும் அப்படிப் போவதனால் துன்பம் மிகுதியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அன்றியும் துன்பத்தின் முடிவில் இன்பம் இருந்தால், முன் பட்ட துன்பமெல்லாம் மறந்து போய்விடும்.

    தோழி: கங்குலில் காட்டு விலங்குகள் எங்கும் திரிந்து கொண்டிருக்கும் என்ற செய்தி உனக்குத் தெரியுமா?

    தலைவி : நன்றாகத் தெரியுமே! கறையான்கள் அணு அணுவாகக் கட்டிய புற்றில் அந்தக் கறையான்களே ஈசலாக மாறிப் பறக்கும். அந்தக் ஈசலுள்ள புற்றிலே பாம்பு வந்து குடியிருக்கும். புற்றிற்குள் கறையான் முட்டையும் கறையான் புழுவும் அடை அடையாக இருக்கும். அந்த அடையைப் புற்றஞ் சோறு என்றும் குரும்பி என்றும் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.

    தோழி : ஈசற் புற்றையும் அதனுள் இருக்கும் பாம்பையும் பற்றி நாம் அஞ்ச வேண்டியதில்லையே!

    தலைவி : பொறு, பொறு. அந்தப் புற்றஞ் சோற்றைத் தின்பதென்றல் கரடிகளுக்கு மிகுதியான விருப்பம், ஆகையால் பாதி ராத்திரியில் அவை ஈசற் புற்றை அடைந்து தம்முடைய கைகளைப் புற்றுக்குள்ளே விடும். பெரிய கையையுடைய ஆண் கரடிகள் அவை. தோல் உறைக்குள்ளே அமைந்த நகங்கள் கூர்மையாக இருக்கும். அந்தக் கைகளைப் புற்றுக்குள் விட்டு அங்குள்ள குரும்பியாகிய உணவை எடுத்து அவை உண்ணும். அப்படிக் கைகளை உள்ளே விடும்போது அதனாள் சுகமாகக் கிடக்கின்ற பாம்பை நகங்கள் குத்தும், அதனால் பாம்புக்குத் துன்பம் உண்டாகும்.

    தோழி: அதற்கும் நமக்கும் என்ன தொடர்பு?

    தலைவி : அந்தப் பாதி ராத்திரியில் இருட் பிழம்புபோலக் கரடிகள் புற்றுக்களைத் தேடிக் கொண்டு வந்தால், நாம் தடையின்றி வழியிலே செல்ல முடியுமா? புற்றிலே கையை விட்ட கரடியின் நகத்தால் குத்தப் பட்ட பாம்பு சீறியெழுந்து ஓடாதா? புற்றுக்குள்ளே கிடக்கும் பாம்புக்கு நாம் அஞ்ச வேண்டாம். கரடியால் துன்புறுத்தப்பட்ட பாம்பு சீறி ஒடும்போது அதற்கு அஞ்ச வேண்டாமா?

    தோழி : நள்ளிரவில் காட்டு வழியே போவது அரிது; போனால் கரடியும் பாம்பும் துன்புறுத்தும் என்று சொல்கிறாய். நானும் இரவில் காட்டு வழியே போவது அரிது என்றுதானே சொல்கிறேன்?

    தலைவி : நீ போகக் கூடாது என்று சொல்கிறாய், நானே இரவிலே காட்டிலே போவதனால் உண்டாகும் இடையூறுகளைத் தெளிவாக அறிந்திருக்கிறேன்; அப்படி அறிந்திருந்தும், போவது அரிதன்று என்று துணிவு கொள்கிறேன். இதுதான் உன் கருத்துக்கும் என் கருத்துக்கும் உள்ள வேறுபாடு.

    தோழி : போகிற வழியில் கரடி மாத்திரந்தானா இருக்கும்?

    தலைவி : கரடியைவிடக் கொடிய விலங்குகள் இருக்கும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். புலி முதலிய காட்டு விலங்குகள் இரவிலே தானே ஒடியாடி விளை யாடி உணவு தேடி அலையும்? காட்டுப் பன்றிகள் அங்கும் இங்கும் ஓடும் பன்றியைக் கண்ட ஆண் புலி அதை அடித்துக் கொல்லும். ஒரே வாயில் அதை விழுங்கும்படி அந்தப் புலிக்கு அவ்வளவு பெரிய வாய், ஆழமான வாய். பேழ் வாயையுடைய புலி, தான் கொன்ற கேழலை (பன்றியை)த் தன் மனைவிக்கும் குட்டிகளுக்கும் ஊட்டுவதற்காக இழுத்துச் செல்லும், பலா மரங்கள் நிறைந்த காட்டில் பலாப் பழம் கம்மென்று மணக்கும். புலி காட்டுப் பன்றி யைத் தரதரவென்று இழுத்துச் செல்லுவதனால் அந்த மலைச்சாரலெல்லாம் அதன் இரத்தமும் ஊனும் சிதறி விழுந்து புலால் நாற்றம் வீசும். மூங்கில்கள் வளர்ந்து ஓங்கிய மலையில் இந்தக் காட்சிகளை நேரில் கண்டவர்கள் இவற்றைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். முதல் நாள் பலாப்பழம் மணம் வீசின இடத்தில் அடுத்த நாள் முதல் சில நாள் புலால் நாற்றம் சகிக்க முடியாதாம். பேழ் வாயை யுடைய ஏற்றை(ஆண் புலி) கேழலை அட்டு அதைப் பலாஅமன்ற (செறிந்த) அடுக்கம் (மலைச்சாரல்) நாறும்படி ஈர்த்துச் சென்றதுதான் அதற்குக் காரணம். அங்கே மூங்கில்கள் ஒன்றேடு ஒன்று உராய்ந்து ஒலிக்கும். அந்த ஒலிகூடப் பயத்தை உண்டாக்கும். இவ்வளவு அச்சந்தரும் வழியாக இருந்தாலும் அந்த வழிகள் போவதற்கு அரிய அல்ல.

    தோழி: நீ சொல்வதைக் கேட்கக் கேட்க எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. “நெருப்புச் சுடும்; ஆளுல் அதை நான் தொடுவேன். தேள் கொட்டும் என்று எனக்கு நன்றகத் தெரியும்; ஆனால் அதை நான் தொடுவேன்? என்று சொல்வதுபோல இருக்கிறது உன் பேச்சு. காட்டு வழியைப் பற்றி இவ்வளவு தான் தெரியுமா? இன்னும் தெரியுமா?”

    தலைவி : இன்னும் எத்தனையோ தெரியும். கரடியும் பாம்பும் கேழலும் புலியும் உலாவும் மலைச் சாரலில் நள்ளிரவில் இன்னும் நிகழும் நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன் கேள். மலைச் சாரலில் சில பள்ளமான இடங்கள் உண்டு. அங்கே எப்போதும் நீர்வளம் மிகுந்திருக்கும். ஈரம் அரு த குழிகள் பல உண்டு. தாழ்ந்த இடங்களையுடைய அந்த அசும்புகளில் (பள்ளங்களில்) சுரபுன்னை மரங்கள் வளர்ந்திருக்கும். வாழை மரங்களும் செறிந்து வளர்ந்திருக்கும். வாழை மரம் என்றால் யானைகளுக்கு அதிக விருப்பம், வழையோடு வாழையும் ஓங்கிய அந்த இடத்தில் வாழையைத் தின்ன வந்த யானை பள்ளத்தில் விழுந்து, மேலே ஏறமாட்டாமல் தவிக்கும்; பிளிறும், அந்த முழக்கத்தைக் கேட்ட பெண் யானையானது அங்கே வந்து பார்க்கும். களிறு அசும்பிலே (குழியில்) விழுந்து மேலேற மாட்டாமல் இருப்பதைக் கண்டு அதை மீட்க முயலும், கைகொடுத்துத் தூக்க முடியுமா? பள்ளத்தில் அல்லவா யானை விழுந்து கிடக்கிறது? அதிலிருந்து தாவி ஏற முடியாது. படிகளின்மேல் காலை வைத்து மெல்ல ஏறலாம். காட்டு யானைகளுக்கு இப்படி உதவி செய்கிறவர்கள் யார்? மண்ணை வெட்டிப் படியாக்கும் மக்கள் யார் வரப் போகிறார்கள்? பிடி ஒரு தந்திரம் செய்யும். அருகிலுள்ள மரங்களை முறித்து அந்தக் குழியில் போடும். அந்த மரங்களையே படிகளாகக் கொண்டு களிறு மேலே ஏறி வந்துவிடும். ஆண் யானை பிளிறுவதும், அதைக் கேட்டு வந்த பிடி கத்துவதும், மரங்களை முறித்துப் போடுவதுமாகிய ஓசை நெடுந்தூரம் கேட்கும். மலையின் மேலே உள்ள குகையிலே சென்று மோதி எதிரொலிக்கும். வானை முட்ட வளர்ந்த சிகரத்தின் விடர்களில் (குகைகளில்) சென்று தாக்கிய ஒலி நாலு திசையிலும் சிலம்பும். அந்த ஓசையைக் கேட்டால் உள்ளம் நடுங்கும்.

    தோழி : அப்படி இருந்தாலும் போவது அரிதன்று என்று நீ சொல்லுகிறாய். அப்படித்தானே?

    மறைவிலே நின்று இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிற தலைவனுக்கே சிரிப்பு வருகிறது. மலைச் சாரலைப் பற்றியும் அதனூடே செல்லும் வழியின் அருமையைப் பற்றியும் இத்தனை செய்திகளைத் தலைவி எப்படி அறிந்தாள் என்று வியப்படைகிறான், இத்தனை இடையூறுகளை அறிந்தும் அவற்றைக் கடந்து செல்வது அரிதன்று என்று சொல்கிறாளே! அதற்கு காரணம் இன்னது என்று அவனுக்குப் புலனாகவில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது.

    தலைவி பேசிக்கொண்டே இருக்கிறாள்.

    தலைவி : ஆம்; அவருடைய நாட்டில் மலையில் இரவில் இத்தனை நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. இத்தனை இடையூறுகளுக்கும் இடையே எப்படிப் போவது என்று நீ நினைக்கிறாய். காட்டு விலங்குகளின் தொல்லை இருக்கட்டும். பகலிலே போனல்தான் அந்த வழிநெடுக ஒரே மாதிரி நேராக இருக்குமா? வளைந்து வளைந்து செல்லும், நடுநடுவில் ஏறியும் இறங்கியும் போகும். இடையிடையே குண்டுக் கற்களும் பாறைகளும் குறுக்கிடும். அந்தக் கற்களுக்குக் கணக்கே இல்லை. பத்து எட்டு நடந்தால் அங்கே ஒரு கல் குறுக்கிடும். அப்புறம் கொஞ்ச தூரம் சென்றால் அங்கே ஒரு பாறை நிற்கும். இப்படியாகப் பிறங்கல் (உயர்ந்து நிற்கும் கல்) இடையிடையே கிடக்கும் வழி அது.

    தோழி : என்ன துணிவோடு இந்த வழியில் நீ போவாய்?

    தலைவி : இவ்வளவு இன்னலையும் தாண்டிக்கொண்டு, இத்தனை சிக்கலான வழியில், இருளும் இடையூறும் கொடுமையும் அருமையும் நிறைந்த இந்த அருவழியில், மெல்லிய விலங்கு ஒன்று போவதை நான் அறிவேன். மெத்தென்ற மேனியும் மருண்ட நோக்கும் மென்மையே உருவெடுத்தது போன்ற தோற்றமும் உடைய அவ்விலங்கு போகும்போது நான் போகக் கூடாதா?

    தோழி: அது என்ன விலங்கு?

    தலைவி : எந்த விலங்கை மெல்லியலாராகிய மங்கை மாருக்கு உவமை சொல்லுகிறார்களோ, எந்த விலங்கின் கண்களைப் பெண்மணிகளின் கண்களுக்கு ஒப்புக் கூறுகிறார்களோ, எந்த விலங்கு பிற பிராணிகளைக் கொன்று உண்ணும் கொடிய விலங்குகள் நிரம்பிய காட்டிலே புல்லையும் நீரையும் உண்டு வாழ்கிறதோ, அந்த விலங்கைத் தான் சொல்கிறேன்.

    தோழி : மட மான் போன்ற பெண்ணே உன் கருத்து எனக்கு விளங்கிவிட்டது.

    தலைவி : ஆம், மான் அந்த வழியில் போகும்போது, மடமானே, எழில் மானே என்றெல்லாம் அழைக்கும் என் போன்ற பெண் போகக் கூடாதா? மான் செல்லும் வழியிலே மான் போன்ற நானும் மெல்ல மெல்லப் போகலாமே!

    தோழி : இருட்டில் வழி எப்படித் தெரியும்?

    தலைவி : மின்னல் மின்னுமே; அந்த மின்னலின் ஒளியிலே மெல்ல மெல்லச் சிறுக அடியிட்டு நடந்து போகலாம்; மயங்காமல், வழி தட்டுக் கெடாமல் நடந்து போய் விடலாம்.

    தோழி : எல்லாவற்றையும் தண்ணீர் குடிப்பது போல எளிதிலே சொல்லி விட்டாய். செயலில் செய்யும் போதல்லவா துன்பம் தெரியும்?

    தலைவி: துன்பம் இல்லாமல் இன்பம் ஏது? எவ்வளவுக்கு எவ்வளவு துன்பத்தின் கடுமை மிகுதியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதன் பின் கிடைக்கும் இன்பத்தின் சுவை மிகுதியாகும். இங்கே, தலைவர் வருவார் வருவார் என்று காத்துக் கிடந்து, அவர் வராததனால் ஏமாந்து நைந்து சாம்புவதை விட, அவரை நிச்சயமாகக் காணலாம் என்ற நம்பிக்கை இருக்குமானால் எவ்வளவு இடையூறுகளானாலும் பொறுத்துக்கொண்டு செல்லலாம். ஆனால் ஒன்று மிகவும் முக்கியமானது.

    தோழி: என்ன அது?

    தலைவி : இத்தனை அல்லற்பட்டுக்கொண்டு நாம் போனல் தம்மை வா என்று அன்போடு வரவேற்கிறவர்கள் அங்கே இருக்க வேண்டும்.

    தோழி: ஏன்? நம் தலைவர் வரவேற்கமாட்டாரா?

    தலைவி : உரிமையுடன் வரவேற்க வேண்டுமே, “இவ்வளவு இடர்ப்பட்டு நீங்கள் இங்கே எப்படி வந்தீர்கள்? வழிதெரியாமல் குறுக்கும் நெடுக்குமாக நீங்கள் அலைந்திருப்பீர்களே! என்று சொல்லி அன்போடு விசாரிப்பவர்கள் இருந்தால் எவ்வளவு துன்பமானாலும் பொறுத்துக் கொண்டு போகலாம்.

    தோழி: உண்மை அன்பு உடையவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்களா? நிச்சயமாக விசாரிப்பார்கள்.

    தலைவி : தலையெல்லாம் மழைத் துளியால் நனைந்துவிடும். ஈரத் தலையோடு நாம் அங்கே போய் நிற்கும்போது, *நான்தான் வருகிறேன் என்றேனே! உங்களை யார் வரச் சொன்னர்கள்?” என்று கேளாமல், அன்போடு மெல்ல மெல்ல மழைத் துளியால் நனைந்த நீல மணி போன்ற கரிய நம்முடைய கூந்தலை அவிழ்த்துவிட்டு முதுகு மறையும்படியாகச் செய்து வாரிப் பிழிந்து, ”அடடா! எத்தனை அன்போடு என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!” என்று யாராவது சொல்வார்களா? ‘இந்தச் சிடுக்கான வழி உங்களுக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்?’ என்று கேட்பார்களா?

    தோழி : நாம் கரடியையும் பாம்பையும் புலியையும் யானையையும் கண்டு அஞ்சாமல் அவற்றைத் தாண்டிக் கொண்டு சென்ற அருமையை நிச்சயம் பாராட்டி நம் இளைப்பை ஆற்றப் புகுவார் நின் காதலர்.

    தலைவி :ஐந்து பகுதியாகப் புனையும் என் மணியை ஒத்த ஐம்பாலை (கூந்தலை)ச் சிறுபுறம் (முதுகு) புதைய வாரிக் கூந்தற் கொத்தைப் பிழிந்து, ”நீயிர் இச்சுரம் அறிதலும் அறிதிரோ” என்றுகூறி, அன்போடு உசாவி ஆறுதல் கூறுபவர்களைப் பெறுவதாக இருந்தால், இந்தக் கடிய வழியைக் கடந்து செல்வது அரிது அன்று; இது நிச்சயம். ஈயற் புற்றத்தின் ஈரமான பக்கத்தை அடுத்து வந்து குரும்பியாகிய வல்சியை (உணவை) உண்ணும் பெருங்கையையுடைய கரடியேற்றைக்கும் அஞ்சமாட்டேன். அந்தக் கரடியின் வள் உகிர் கதுவ லால் மதன் (பலம்) அழியும் பாம்புக்கும் அச்சம் கொள்ளேன். கங்குலின் பாதியென்றும் தளர்ச்சி அடையமாட்டேன். பெரிய கேழலை அட்ட பேழ் வாயை யுடைய ஆண் புலிக்கும் அஞ்சேன். கழைகள் நரலும் ஓசையைக் கேட்டு நெஞ்சம் கலங்கேன். அசும்பிலே பட்ட களிற்றின் ஆரவாரத்துக்கும், அதனை மேலே ஏற்றும்பொருட்டு மரத்தை முறித்துப்படியாக இடும்பிடியின் முழக்கத்துக்கும் என் உள்ளம் ஒடியாது. மான் செல்லும் வழியிலே நடப்பேன். தலைவர் நம் கூந்தலே வாரிப் பிழிவாரி என்பது உறுதியானால், அவர் நம்மை அன்போடு கண்டு பேசி ஆறுதல் கூறுவது திண்ணமானால்; அவற்றால் வரும் இன்பம் அளவிடற் கரியதல்லவா? அந்த இன்பம் கிடைக்குமானால், இத்தனை இடையூறுகளையும் கடந்து செல்வது அரிது அன்று.

    தலைவி ஆவேசம் வந்தவளைப் போலப் பேசினாள், தலைவன் காதில் அவள் கூறியவை யாவும் விழுந்தன. “நம்மிடத்தில் தான் இவளுக்கு எத்தனை காதல் நம்மைப் பிரிந்து இருப்பதைக் காட்டிலும் இரவிலே இந்தக் கடுமையான வழியைக் கடக்கும் துன்பத்தைப் பொறுப்பது மேல் என்றல்லவா சொல்கிறாள்? இவள் மனம் இவ்வளவு தூரம் வருந்தும்படி நாம் செய்தது தவறு. இனியும் இந்தக் களவு ஒழுக்கத்தை மேற்கொண்டு இவளைச் சந்திப்பது தவறு. விரைவில் முறைப்படி இவளுக்குப் பரிசம் போட்டு மணம் செய்து கொள்ள முயல வேண்டும். அப்பால் ஒரு கணமும் இவளை விட்டுப் பிரியாமல் உலகறியக் கணவன் மனைவியராக வாழலாம்’ என்ற தீர்மானத்தை அவன் செய்து கொண்டான். தலைவி விரும்பிய முடிவு அதுதானே?

    தலைவி தோழியிடம் கூறுவதாகப் பாட்டு அமைந் திருக்கிறது.

    குறிஞ்சி

    ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
    குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை
    தூங்குதோல் துதிய வள்உகிர் கதுவலின்
    பாம்புமதன் அழியும் பால்நாட் கங்குலும்
    அரிய அல்லமன்: இகுளை! பெரிய 5
    கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
    பலாஅமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
    கழைநரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு
    வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்
    படுகடுங் களிற்றின் வருத்தம் சொலியப் 10
    பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
    விண்தோய் விடரகத்து இயம்பும் அவர்நாட்டு,
    எண்ணரும் பிறங்கல் மான்அதர் மயங்காது
    மின்னாவிடச் சிறிய ஒதுங்கி மென்மெலத்,
    துளிதலைத் தலைஇய மணிஏர் ஐம்பால் 15
    சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ,
    ‘நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம்
    அறிதலும் அறிதிரோ?’ என்னுநர்ப் பெறினே.

    [ ஈசல் நிறைந்த ஈரமான பக்கத்தை அடைந்த, புற்றஞ் சோற்றை உணவாகக் கொண்ட, பெரிய கையை யுடைய ஆண் கரடியானது, தொங்கும் தோலாகிய உறையை யுடைய கூர்மையான நகத்தால் பற்றுவதனால் புற்றுக் குள்ளே வாழும் பாம்புகள் தம் வலிமை அழிந்து துன்புறும் ஒரு நாளின் பாதியாகிய நள்ளிரவிலும் செல்லும் செயல் அருமையை உடையதன்று; தோழி பெரிய வாயையுடைய ஆண் புலி பலா மரங்கள் செறிந்த மலைச் சாரலெல்லாம் புலால் நாற்றம் வீசும்படியாக அதை இழுக்கும் மூங்கில்கள் ஒலிக்கும் மலைச் சாரலையுடைய அவ்விடத்தே, சுரபுன்னை மரங்களோடு வாழை மரங்கள் ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய பள்ளத்தில் (அவ் வாழையைத் தின்னும் பொருட்டுச் சென்று) விழுந்த கோபத்தையுடைய ஆண் யானையின் வருத்தத்தை நீக்கும் பொருட்டு அதன் மனைவியாகிய பெண் யானை படியாவதற்காக முறித்து இட்ட பெரிய மரங்களால் உண்டான பெரிய ஓசை வானத்தைத் தொடும் மலையின் குகையிலே சென்று ஒலிக்கும் அவருடைய நாட்டில், எண்ணுவதற்கரிய, உயர்ந்து தோன்றும் பல கற்களினிடையே மான் செல்லும் வழியில் கலக்கமின்றி, மின்னல் ஒளி விட அதன் துணைகொண்டு குறுக அடியிட்டு மெல்ல மெல்லச்சென்று, மழைத்துளி தலையிலே பெய்த ஈரமான நீல மிணியைப் போன்ற கூந்தலை (அவிழ்த்துவிட்டு) மேல் முதுகு மறையும் படியாக வாரிக் கூந்தற் கொத்தைப் பிழிந்து, “வழி தெரியாமல் தடுமாறிக் குறுக்கும் நெடுக்கும் வந்த நீங்கள் இந்த அரிய வழியை அறிவீர்களோ?” என்று அன்புடன் உசாவுபவரைப் பெற்றால்.

    மென்மெல ஒதுங்கிப் பெறின் அரிய அல்ல என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். ஒதுங்கி என்பதை ஒதுங்க என்பதன் திரிபாகக் கொண்டு, பெறின், பானுட் கங்குலும் ஒதுங்க அரிய அல்ல என்று கூட்டிப் பொருள் உரைப்பார் பழைய உரையாசிரியர்.

    1. ஈயல்-ஈசல். புற்றம்-புற்று, ஈர்ம்புறம்-ஈரமான பக்கம். இறுத்த-வந்தடைந்த
    2. குரும்பிய – புற்ருஞ்சோறு. வல்சி-உணவு. ஏற்றை – ஆண் விலங்கு. குரும்பி வல்சி என்ற அடைமொழிகளால் கரடியென்று தெரியவருகிறது.
    3. துரங்கு-தொங்கும். துதிய- உறையையுடைய. வள்-கூர்மையான, உகிர்-நகம், கதுவலின்-பற்றுவதனால்,
    4. மதன்-வலிமை. பால் நாள்-நாளில் பாதி; என்றது நடு யாமத்தை. கங்குல்-இரவு.
    5. அரிய அல்ல-அரியவை அல்ல; செல்லும் செய்கைகள் பலவகையாக இருத்தலால் அரிய என்று பன்மையாகச் சொன்னாள். மன்: உறுதியை உணர்த்தியது. சொல்லு வாரில்லை யென்ற கழிவிரக்கத்தைக் குறித்ததாகப் பழைய உரைகாரர் சொல்வர். இகுளை-தோழியே.
    6. கேழல்-காட்டுப் பன்றி, அட்ட-கொன்ற, பேழ் வாய்-ஆழமான வாயையுடைய, கேழல் அட்ட என்ற அடை மொழிகளால் ஏற்றை என்பது இங்கே ஆண் புலி யைக் குறித்தது.
    7. அமல்-செறிந்த, அடிக்கம் – மலைப்பக்கம். புலாவ – புலால் நாற்றம் வீசும்படியாக, ஈர்க்கும்-தரையின்மேல் இழுத்துச் செல்லும்,
    8. கழை-மூங்கில், நரல்-ஒன்றனோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கும். சிலம்பு-மலை. ஆங்கண்-அவ்விடத்தில், வழை-சுரபுன்னை. இது மலையில் வளர்வது. “வழைய மல் வியன் காடு” (பதிற்றுப் பத்து, 41:13) என்றும், “வழை யமை நறுஞ்சாரல்” (கலித்தொகை, 53:1) என்றும் வேறு நூல்களிலும் வந்திருப்பது காண்க.
    9. தாழ் கண்-தாழ்ந்த இடத்தை உடைய, ’அசும்பு -மலையில் நீர் அறாத குழி’ (பழைய உரை.)
    10. படும்-விழுந்த, கடுமை-இங்கே கோப்ம் . சொலிய-போக்க,
    11. படி முறுக்கிய-படியாக ஒடித்து இட்ட, பூசல் – பெரிய ஓசை,
    12. விண் தோய்-வானத்தளவும் உயர்ந்த, விடர கத்து-குகைகளில், இயம்பும்-ஒலிக்கும். அவரென்றது தலைவனை.
    13. பிறங்கல்-உயர்ந்து தோன்றும் கற்கள். மான் அதர்-மான் செல்லும் வழி. மயங்காது-இதுவோ அதுவோ என்று கலங்காமல்.
    14. மின்னுவிட-மின்னல் ஒளியைவிட்டு விளங்க, சிறிய, குறுகிய எட்டு; சிறிய ஒதுங்கி-குறுக அடியிட்டு நடந்து; மெத்தென நடந்து என்பது பழைய உரை, ஒதுங்கி – நடந்து, மென் மெல ஒதுங்கி என்று முன்னே கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். மென்மெல வாரி என்று கூட்டுவர் பழைய உரையாசிரியர்,
    15. தலைத்தலைஇய-தலையிலே பெய்த மணி, ஏர் – நீல மணியின் அழகையுடைவ. ஐம்பால்-கூந்தல்; ஐந்து வகையாக முடிக்கும் பகுதியை உடைமையால் கூந்தலுக்கு இப் பெயர் வந்தது; பால்-பகுதி. அந்த-ஐந்தாவன-சூழல் அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்பன. கருமை நீளம், நெய்ப்பு, கடை குழன்றிருத்தல், வளைவு என்னும் ஐந்து தன்மையுடைமையால் ஐம்பால் என்னும் பெயர் வந்ததாகக் கூறுபவர்களும் உண்டு
    16. சிறுபுறம்-மேல் மிதுகு. புதைய-மறைய. குரல்; கூர்தல், பிழியூஉ-பிழிந்து.
    17. நெறிகெட-வழி தட்டுப்படாது போக, விலங்கிய-தப்பிக் குறுக்கும் நெடுக்கும் சென்ற, வழி, செலவு கெட விலங்கிய சுரம் என்று கூட்டுநர் உரைகாரர். சுரம் – கடத்தற்கு அரிய வழி.
    18. அறிதலும் அறிதிரோ-அறிவீர்களோ, என்னு நர்-என்று கூறி விசாரிப்பவரை. பெறின்-பெற்றால். பெறுவது நிச்சயமில்லை யென்ற குறிப்பை உடையது.

    “தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவா ளாய்த் தலைமகள் சொல்லியது” என்பது இதன் துறை. சிறை என்பது மறைப்பு. மறைவான இடத்திக்கு அப்புறத்தில் தலைவன் இருந்தபோது தலைவி கூறியது இது. அவன் அங்கே இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவன் காதில் விழவேண்டும் என்ற கருத்தோடே சொல்வது இது.

    இந்தப் பாட்டில் தலைவனுடைய நாட்டில் நிகழ்வனவாக மூன்று நிகழ்ச்சிகளைச் சொன்னாள் தலைவி, பாதி ராத்திரியில் கரடி புற்றஞ் சோற்றை எடுக்கும்போது புற்றுக்குள்ளே இருக்கும் பாம்பின்மேல் அதன் நகங்கள் பட்டு அப் பாம்பு துன்பத்தை அடைவது ஒரு நிகழ்ச்சி. இவ்வாறு சொல்வதற்கு உட்பொருள் ஒன்று உண்டென்றும், தலைவனுடைய செயலையே வேறு வகையில் மறைத்துச் சொன்னது இது என்றும் கொள்வது மரபு. இவ்வகையாக உள்ளடக்கிய பொருளை இறைச்சி என்றும் உள்ளுறை யுவமம் என்றும் புலவர்கள் சொல்வார்கள். அந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மிகவும் நுட்பமானது.

    கரடியின் செயலுக்கு உரிய இறைச்சிப் பொருளாகப் பழைய உரையாசிரியர் எழுதியிருப்பது வருமாறு:

    ஏற்றையானது பாம்பை வருத்தவேண்டும் என்னும் கருத்து இல்லையாயினும், அது தன் காரியம் செய்யவே வள்உகிர் படுதலாகிய அவ்வளவிற்குப் பாம்பு வலியழிந்தாற்போல, அவர் நம்மை வருத்த வேண்டும் என்னும் கருத்து இல்லையாயிருக்கவே, தமது காரியமாகிய களவின் பத்திலே ஒழுகவே, ஆறு இன்னாமை, ஊறு இன்னாமை[1] முதலாகிய இவ்வளவிற்கே நாம் வருந்தும்படியாய் விட் டது என்றவாறு’

    1. ஆறு இன்னாமை-தலைவன் வரும் பொல்லாங் குடையதாக இருத்தல், ஊறு இன்னாமை-அவன் வரும் போது உண்டாகும் இடையூறுகள் தீயனவாக இருத்தல்.

    அடுத்த நிகழ்ச்சி ஆண் புலி கேழலை இழுக்கும் செயல் அதற்குரிய உள்ளுறைப் பொருளைப் பின்வருமாறு உரை யாசிரியர் தெளிவுபடுத்துவார்.

    ’புலியானது தான் நுகர்தற் பொருட்டுக் கேழலை அட்டுப் பழ நாற்றத்தையுடைய பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்த்தாற்போல, அவரும் இன்பம் துய்த்தற் பொருட்டு வந்து நம்மைக் கூடி, அக்கூட்டத்தாலே புகழ்ச்சியை உடைத்தாகிய நம் குடியை இகழ்ச்சியுடைத் தாம்படி பண்ணினார்’ என்றவாறு.

    ஆண் யானை பள்ளத்தில் அது ஏறும்பொருட்டுப் பிடி மரத்தை முறித்துப் போடும் நிகழ்ச்சியின் உட் கருத்தை யும் பழைய உரைகாரர் தெரிவிக்கிறார்,

    ‘வாழை நுகர வந்த யானை அதன் அயலதாகிய அசும்பின் குழியிலே விழுந்ததாக, பின்பு அக்குழியினின்றும் ஏறமாட்டாது வாழையாகிய உணவையும் இழந்துழி, பிடி அது ஏறுதற்குப் படியாக மரம் முறிக்கின்ற ஓசை விண் தோய் விடரகத்து இயம்பினாற்போல, அவரும் நமது நலம் நுகர வந்து களவொழுக்கமாகிய குழியிலே விழுந்து இக் களவொழுக்கமாகிய இதனை விட்டு வரையவும் மாட்டாது நமது காவலருமையால் இக் களவொழுக்கினை நுகரவும் மாட்டாது துயரப்படுகின்று பூமி, அறத்தொடு நிலை முதலாகிய இவற்றால் மகளிராகிய நாமே வரைய முயலும் வழி, அம் முயற்சியானே ஊரெல்லாம் அறியும் படி பண்ணினார்,என்றவாறு.’

    இந்தப் பாட்டுக் குறிஞ்சித் தினையைச் சார்ந்தது. அடுக்கம், சிலம்பு, விண்டோய் விடரகம் என்பவற்றல் மலைப் பகுதி என்பது பெறப்பட்டது. இது குறிஞ்சித் திணையில் முதற் பொருளாகிய நிலம். காலம் சிறுபொழுது பெரும்பொழுது என இருவகைப்படும். பானுட் கங்குல் என்பதனால் யாமமாகிய சிறு பொழுதும், துளிதலைத் தலைஇய என்ற குறிப்பினுல் சிறு தூறல் தூறும் கூதிர்க் காலமாகிய பெரும் பொழுதும் சொல்லப் பெற்றன.

    கரடி, கேழல், புலி, யானை என்னும் “விலங்குகளும்” வழை, வாழை என்னும் மரங்களும் குறிஞ்சி நிலத்துக்குரிய கருப்பொருள்கள், இரவுக்குறியில் தலைவன் கேட்கப் பேசுவதாதலின் புணர்ச்சியின் நிமித்தமாகிய உரிப்பொரு ளாயிற்று.

    “இரவிலே காட்டில் நிகழும் இத்தனை நிகழ்ச்சிகளையும் தலைவி அறிந்திருக்கிறாள். ஆதலின் நாம் இவளைத் தேடி வரும்போது இந்த இடையூறுகளைத் தாண்டி ஊறு பாடின்றி வரவேண்டுமே என்ற அச்சம் இவளுக்கு இருக்கும்” என்ற எண்ணமும் தலைவனுக்கு உண்டாகும்படி இக்கூற்றுச் செய்கிறது.

    ஒரு பக்கம் புற்றெழுந்த இடத்தில் கரடியும் பாம்பும் காட்சி தரவும், மற்றொரு சார் புலி கேழலை அடுதலும் அட்டு இழுத்துச் செல்லுதலுமாகிய செயல்கள் நிகழவும், வேறொரு சார் களிறு குழியில் விழுந்து பிளிறப் பிடி மரத்தை ஒடித்துப்போட ஒரே ஆரவாரமாக இருக்கவும் எம்மருங்கும் அஞ்சுவதற்குரிய சூழலாக மலைச் சாரற் காட்டைப் புலவர் காட்டுகிறார்,

    இதனைப் பாடியவர் பெருங்குன்றுார் கிழார், அவருடைய இயற் பெயர் இன்னதென்று தெரியவில்லை. இது அகநானுாற்றின் எட்டாவது பாட்டு.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *