
இன்ப மாலை
கி. வா. ஜகந்நாதன்
2. இன்ப மலை
எங்கே பார்த்தாலும் காடு; பூமரங்கள்; பழ மரங்கள். வானை முட்டி வளர்ந்த மரங்கள் அடர்த்தியாக நின்றன. மழைக்கு அங்கே பஞ்சம் ஏது? மலைச்சாரலில் அருவி ஒல்லெனப் பாய்ந்து வருகிறது. குறிஞ்சி நிலத்தின் முழு அழகும் அங்கே களி நடம் புரிகின்றது.
எத்தனை வகையான மரங்கள்! மலையருவி நீரின் ஊட்டத்தால் மதமதவென்று வளர்ந்திருக்கும் வாழை மரங்கள் ஒருசார். வாழையின் இலையைப் பார்த்தாலே அதன் வளப்பம் தெரியும். மிகமிக நீளம்; மிகமிக அகலம். கொழுமைக்கு அடையாள மென்று அந்த இலையைச் சொல்லலாம். மலைச்சாரலில் வளரும் அத்தனை மரஞ் செடி கொடிகளின் வளத்தை எழுதிய ஏடு என்று கூட அதைச் சொல்லலாம். அத்தகைய கொழுவிய இலையையுடைய வாழை மரத்தின் குலை எப்படி இருக்கிறது? எவ்வளவு பெரிய குலை ஒரு குலையில் எத்தனை காய்கள் என்று எண்ணிப் பார்த்தால் அதன் பெருமை நன்றாகத் தெரியும், பெருங்குலை; காய்கள் பெரியனவாக இருப்பதோடு மிகுதியாகவும் இருக்கின்றன. கோழிலை வாழையின் பெருங்குலையை அங்கே வெட்டுவார் யார்? அந்த மலைக்காட்டு வளம் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளப் போதிய மக்கள் அங்கே இல்லை. வாழைக் குலை காய்த்து முதிர்ந்து பழுக்கிறது. பழுத்து ஒவ்வொரு கணியாக உதிர்கின்றது. தானே பழுத்த பழத்தின் இனிமையை எப்படி வார்த்தைகளால் சொல்வது?
அதோ மலைச்சாரலின் மற்றொரு பக்கத்தில் அடி முதல் நுனிவரையில் கொத்துக் கொத்தாகப் பழுத்த பலாமரங்கள் நிற்கின்றன. பலாப்பழத்தின் மணம் சாரல் முழுதும் கம்மென்று வீசுகிறது. நன்றாகக் கனிந்து வெடித்த பழங்கள் தொங்குகின்றன. பழத்தைக் கீறிச் சுளையை எடுக்கும் இடர்ப்பாடே வேண்டாம். வெடித்த பழத்திலிருந்து சுளையை எடுப்பது எளிது அல்லவா? இதைக் கண்டால் இரண்டு சுளையை யாவது உண்ணாமல் போக முடியுமா? யாரேனும் அந்த வழியே போனால் இந்தப் பலாப்பழங்கள் அவர்களை அழையாமல் அழைக்கும். எத்தனை அவசரமான காரியம் இருந்தாலும் பழத்தைக் கண்டுவிட்டால் அவர்களுக்கு மேலே கால் எழாது. நாவிலே நீர் ஊறும். உண்ணும் தன்மையையுடைய மனிதர்களைத் தங்கள் போக்கிலே செல்ல வொட்டாமல் தடுத்து நிறுத்துவது மலைச்சாரற் பலாப்பழம்.
பல பல பூமரங்களும் அங்கே நிறைய இருக்கின்றன. தேன் நிரம்பிய சிறு கிண்ணங்களைப் போன்ற அந்தப் பூக்களோடு உறவாடித் தாதுரதித் தேனுண்ணும் வண்டி னங்களுக்கும் அங்கே குறைவு இல்லை. மலர்தோறும் தேனைத் தொகுத்து மலைச்சாரலில் பெரிய பெரிய தேன் அடைகளை வைத்திருக்கின்றன. மலையிலே அச்சமின்றி மனம்போன போக்கிலே வண்டுகள் வைக்கும் தேனிழுல்கள் மிகப் பெரியனவாக இருக்கின்றன. அவற்றைப் பெருந்தேன் என்று புலவர்கள் சொல்வார்கள். அந்தத்தேன் முதிர்ந்து விளைந்து கீழே சொட்டுகின்றது. தேனிறால்களே அடை அடையாக விழுகின்றன. கீழே பாறையில் குழிவான இடங்களில் சிறிய சிறிய சுனைகள் இருக்கின்றன. அந்தச் சுனைகளில் மேலிருந்து ஒழுகிய தேனும் விழுந்த தேனடை களும் கலந்து நாளடைவில் முதிர்கின்றன; புளிக்கின்றன. உண்டவர்களுக்குக் கள்ளுண்ட மயக்கத்தைத் தரும்படி சுனைநீரோடு கலந்த தேன் இருக்கிறது. அதை நீர்ச்சுனை என்பதைவிடத் தேன்சுனை என்று சொல்வதே பொருத்தம்.
வாழையும் பலாவும் மலிந்த அந்த மலைச்சாரலிலே சந்தன மரங்களும் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. அவற்றின்மேல் மிளகு கொடிகள் படர்ந்துள்ளன. சந்தன மரங்களுக்கு அருகில் பலபல மலர் மரங்கள். மலர்கள் கீழே உதிர்ந்து எங்கும் பூப்படுக்கை விரித்தாற் போன்ற அழகிய தோற்றத்தைத் தருகின்றன.
என்ன அழகான இடம்! எத்தனை இன்பமான மலைச் சாரல்! இந்த இனிய பொருள்களைத் துய்க்க வருவார் யாரும் இல்லையா? மனிதர்கள் வருவது அருமை. ஆனால் மரம் இருக்குமிடத்திலே மரமேறும் குரங்குகள் இருப்பது இயற்கை. மரங்களை அரண்மனையாகவும் ஊசலாகவும் உணவுச்சாலையாகவும் கொண்டு வாழும் மந்திகளும் கடுவன்களும் இந்தக் காட்டில் இருக்கின்றன.
இதோ ஒரு குரங்கு; அது ஆண் குரங்கு; கடுவன். அதற்குக் கிடைத்த பேற்றை என்னவென்று சொல்வது! மிகவும் பசியாக இருந்தது போலும்! தானே பழுத்து உதிரும் வாழைக் கனியைத் தின்றது. ஒரே சுவையை உடைய உணவைத் தின்பது அவ்வளவு சிறப்பு அல்லவே. வாழையின் கோள் (காய்) மிகு பெருங்குலையிலிருந்து உதிர்ந்த தீங்கனியை உண்டவுடன் அருகிலே இருந்த பலாப்பழம் அதை அழைத்தது. பலாச்சுளையையும் வயிறு நிரம்பத் தின்றது.
இப்போது அதன் பசி போய்விட்டது. மிக இனிய கனிகளாதலின் அளவுக்கு மேலே தின்று விட்டது. அதனால் அதற்குக் கடுமையான தாகம் எடுத்தது. அங்கே பாறையிலே ஓர் ஆழமான சுனை இருந்தது. அங்கே சென்று அதன் நீரை உண்டது. அது நீரா? புளித்த தேன் அல்லவா. சுனையிலே முதிர்ந்து விளைந்த தேனைக் குடித்தது. மற்றச் சமயமானல் உணவு கொண்டவுடன் மரத்தின் மேல் ஏறித் தாவி விளையாடும்; இல்லையெனில் மரத்தில் ஒரு கவட்டிலே தூங்கும். இங்கே அயலில் சந்தன மரம் இருக்கிறது; ஏறலாம், வழுக்காமல் பற்றிக்கொண்டு ஏறுவதற்கு அந்த மரத்தின்மேல் மிளகு கொடி படர்ந்திருக்கிறது.
வயிறு நிரம்பப் பழங்களைத் தின்று சுனையிலே தேங்கி யிருந்த தேனைக்குடித்த கடுவனுக்கு மயக்கமாக இருந்தது. கண்ணிமைகள் கனந்தன; கீழே இழுத்தன. சந்தன மரத்தை ஏறெடுத்துப் பார்த்தது குரங்கு, அதன்மேல் ஏறலாம் என்று நினைப்பதற்கு முன் கண்ணைச் சுற்றியது, மயக்கம். அயலில் பல மலர்கள் உதிர்ந்து படுக்கை போட்டாற்போல் மெத்தென்று இருந்தன அல்லவா? மணமுள்ள மெத்தென்ற அந்த மலர்ப் படுக்கையிலே படுத்ததுதான் தாமதம்; அப்படியே உறங்கிவிட்டது, அது தேன் என்று தெரியாமலே சுனையிலுள்ள முதிர்ந்த தேனை உண்டது. தெரியாமல் உண்டால் என்ன? அந்தத் தேன் தன் வேலையைச் செய்யத் தொடங்கியது. கடுவன் இப்போது கனியும் தேனும் உண்ட மயக்கத்தில் ஆழ்ந்து மலர்ப்படுக்கையில் உலகையே மறந்து தூங்கியது.
இயற்கை எழில் பொங்கும் சூழலிலே பெரு முயற்சி இல்லாமலே கடுவன் இன்ப உறக்கத்தில் அழுந்திக் கிடக்கும் இத்தகைய அரிய காட்சியை எங்கே காணலாம்? தலைவனுடைய மலையிலே காணலாம். அந்த ஆணழகன் தன்னுடைய குறிஞ்சி நிலத்தைப் பற்றியும் மலைச்சாரற் பெருவளத்தைப் பற்றியும் தன்னுடைய காதலியிடம் அவ்வப்போது சொல்வதுண்டு. அவற்றையெல்லாம் கேட்டுப் பெருமிதம் கொண்ட தலைவி தன் தோழியிடம் அந்தக் காட்சிகளை எடுத்துச் சொல்வாள். இப்படி ஒருவர்க்கு ஒருவர் சொல்வதனால், தலைவனுடைய நாட்டுக்குச் செல்லாமல் இருந்தாலும் அந்த நாட்டின் வளப்பத்தைத் தலைவியும் தோழியும் நன்கு அறிந்திருந்தார்கள்.
திணைப்புனம் காக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாள் அந்த இள நங்கை. அப்போதுதான் அந்தக் கட்டிளங் காளை அவளைக் கண்டான். இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வின; உள்ளம் ஒன்றுபட்டன. பிறவி தோறும் வந்துள்ள தொடர்பாதலின் காந்தமும் இரும்பும் ஒன்று பட்டதுபோல அவ்விருவரும் ஒன்று பட்டனர். பகற்காலத் தில் காதலி தினைப்புனம் காக்க வருவாள். அப்போது காதலனும் அங்கே வந்து காதலியைக் கண்டு அளவளாவி விட்டுச் செல்வான். இந்த இரண்டு காதலர்களுக்கும் உறுதுணையாகக் காதலியின் தோழி இருந்தாள். காதலியின் இன்ப துன்ப உணர்ச்சிகளை உணர்ந்து காதலனிடம் குறிப்பாக அவற்றை எடுத்துரைக்கும் திறமை அந்தத் தோழியிடம் இருந்தது.
இத்தக் களவுக் காதல் நிகழ்ந்து கொண்டு வந்த போது காதலனும் காதலியும் உலகையே மறந்து எதிர் காலத்தையும் மறந்து காதல் உலகத்தில் உலவினர். தோழிக்கு மாத்திரம் எதிர்காலத்தைப் பற்றிய நினைவு இருந்து கொண்டே இருந்தது.
தன்னுடைய தலைவி தன் உள்ளத்துக்கு இசைந்த காதலனைப் பெற்றது பற்றி அவளுக்கு அளவற்ற உவகை உண்டாயிற்று. அது நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை யும் அவள் உணர்ந்தாள். ஆனால் உலகம் இந்தக் காதற் பயிர் வளர்வதற்குத் துணையாக இருக்க வேண்டுமே!
திணைப்புனத்தில் ஒவ்வொரு நாளும் காதலர்கள் சந்தித்தார்கள். ஆனால் இந்தச் சந்திப்பு எத்தனை நாளைக்கு நீட்டிக்கும்? தினைப் பயிர் விளைந்துவிட்டால் கதிர்களை அறுத்து விடுவார்கள். பிறகு அங்கே காவல் வேண்டிய தில்லை. தலைவிக்கு அவ்விடத்தில் வேலை இல்லாமற் போய் விடும்.
திணைப்புனம் காக்கும் வேலை உள்ளவரையில் தலைவன் பகற் காலத்தில் தலைவியைக் கண்டு பேசி அளவளாவ இயலும், அந்தக் காவல் நின்றுவிட்டால் தலைவி வீட் டோடு இருக்க வேண்டியவளே. தினப்புனத்தில் காதலர் இருவரும் சந்திப்பதற்கு வசதிகள் இருந்தன. தலைவி வீட்டுக்குப் போய்விட்டால் அவர்கள் எவ்வாறு சந்திக்க முடியும்? பகலில் சந்திப்பதென்பது மனத்தாலும் நினைப்பதற்கு உரியதன்று. இரவிலோ கட்டுக் காவலைக் கடந்து இருவரும் சந்திப்பது எளிதன்று. ‘என்ன செய்தால் நல்லது?’ என்ற சிந்தனையில் தோழி ஆழ்ந்தாள். இந்தக் களவுக் காதலை விட்டுவிட்டுத் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்வதுவே எல்லாவற்றிற்கும் மேலானது. அதுவே அச்சம் அற்ற வாழ்க்கை; அறம் நிரம்பிய வாழ்க்கை’ என்ற முடிவுக்கு அவள் வந்தாள்.
ஆனால் திருமணம் நிகழ்வதற்குத் தோழியின் விருப்பம் மாத்திரம் இருந்தால் போதுமா? தலைவனுக்கு அந்த எண்ணம் தோன்ற வேண்டும். அவன் தக்கவர்களை அனுப்பித் தலைவியின் தந்தையிடம் பெண் பேசும்படி செய்ய வேண்டும். “இனிமேல் இவளை இங்கே காண முடியாது, ஆதலால் இவளைத் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்க்கை நடத்தத் தொடங்குங்கள்” என்று தலைவனிடம் அவள் சொல்வது தக்கது அன்று. என்ன இருந்தாலும் அவள் தலைவியின் தோழிதானே? இனி இந்தக் களவுக் காதல் நீட்டிக் காது” என்று சொன்னால் தலைவன் உள்ளம் வருத்தத்தை அடையுமே!
வெளிப்படையாக, ”நீ மணம் புரிந்து கொள்” என்று சொல்வதைவிட, ‘இனிப் பகலில் இவளைக் காண முடியாது; இரவிலே வந்து காணலாம்; அப்படிச் செய்வதிலும் பல இடர்ப்பாடுகள் உள்ளன என்று குறிப்பாகச் சொன்னல் நல்லறிவுடைய காதலன், ‘இனி நம் காதலியை மணம் செய்து கொள்வதே முறை என்ற முடிவுக்கு வருவான்.
தோழியின் சிந்தனையிலே தெளிவு ஏற்பட்டது. இப்படி ஒரு வழி புலப்பட்டது. தினை விளைந்து விட்டமையால், ‘இனிமேல் நீங்கள் புனங்காவலுக்குச் செல்ல வேண்டாம்; வீட்டிலே இருங்கள்’ என்று தலைவியின் தாயும் சொல்லி விட்டாள், இன்னும் ஓரிரண்டு நாட் களில் அவர்கள் தினைப்புனத்துக்கு வருவது நின்றுவிடும். இதுவே தலைவனிடம் தன் கருத்தைப் புலப்படுத்துவதற்குரிய செவ்வியென்று தோழி தெளிந்தாள். தலைவன் வழக்கம்போல அன்று வந்தான்.
தலைவியைக் கண்டு அளவளாவிய பிறகு தோழி அவனைத் தனியே சந்தித்தாள். அவனிடம் இன்று எவ்வாறேனும் தன் கருத்தைப் புலப்படுத்திவிடுவது என்ற உறுதியோடு இருந்தாள். மெல்லப் பேசலானாள்.
தோழி: இன்று என் தலைவி சற்றுச் சோர்வு அடைந்தவளைப் போல இருக்கிறாள். அவள் மனநிலை சரியாக இல்லை.
தலைவன் : ஏன்? என்ன காரணம்? என்னிடம் யாதும் கூறவில்லையே!
தோழி : மகளிர் தம் உள்ளத் துயரை வெளிப்படையாக எடுத்துச் சொல்லமாட்டார்கள். குறிப்பால் அதை உணர்ந்து ஆகவேண்டியவற்றைச் செய்வது ஆடவர் கடமை.
தலைவன்: அவள் சோர்வுக்குக் காரணம் என்ன?
தோழி : இனி எம்பெருமான் அவளே இங்கே வந்து கண்டு அளவளாவ இயலாது.
தலைவன்: ஏன்? என் உள்ளம் தெருமரும்படி செய்யாதே. உள்ளதைத் தெளிவாகச் சொல்லிவிடு.
தோழி: நாங்கள் இங்கே நாள்தோறும் வருவது தினைப் புனத்தைக் காவல் புரிவதற்காகத்தான்.
தலைவன்: ஆம்; அது எனக்குத் தெரியாதா?
தோழி: இதோ தினைப் பயிரைப் பாருங்கள். கதிர்களெல்லாம் முற்றி விளைந்து விட்டன. இனி இவற்றை அறுத்து வீடுகொண்டு போய்ச் சேர்க்க வேண்டுவது தான். இனிமேல் எங்களுக்கு வேலை இல்லை. ஆகையால் நாளை முதல் நாங்கள் இங்கே வரமாட்டோம்.
தலைவன் : அப்படியானால்.?
தோழி : எங்கள் தாய், ”இனிமேல் நீங்கள் தினைப்புனம் காக்கப் போக வேண்டாம். வீட்டிலே இருங்கள்” என்று சொல்லி விட்டாள். இனி நாங்கள் இல்லிலே செறிந்து கிடப்போம்
தோழி : அப்படியானல் நான் எப்படி உங்களை வந்து காண்பது?
தோழி : தங்களுக்கு அரியது யாது? தாங்கள் மனம் வைத்தால் தாங்கள் குறிக்கும் இன்பத்தைப் பெறலாமே!
தலைவன்: எப்படிப் பெறுவது?
தோழி : தங்களுடைய நாட்டில் மலையிலே வாழும் பல் வேறு விலங்கும் தாம் குறியா இன்பத்தை எளிதிலே எய்தும் என்று சொல்கிறார்கள். அப்படி இருக்க, அந்த நாட்டுக்குத் தலைவராகிய தங்களுக்குத் தாங்கள் மனத்தாலே நினைத்து இன்னது செய்ய வேண்டு மென்று ஆராய்ந்து திட்டமிட்டு முயன்றால் தாங்கள் குறித்த இன்பம் எப்படி அரிதாகும்?
தலைவன் : என் நாட்டில் நிகழும் நிகழ்ச்சியை நீ எவ்வாறு அறிந்தாய்?
தோழி : அந்த நாட்டுக்கு உரியவர் தமக்கு உரியவரிடம் சொல்ல, அவர் எனக்குச் சொன்னார். வாழைப் பழத்தையும் பலாப் பழத்தையும் வயிறு நிறையத் தின்று விட்டுப் பாறை நெடுஞ் சுனையில் விளைந்த தேறலை அறியாது உண்ட கடுவன் அயலில் உள்ள மிளகு கொடி படரும் சந்தன மரத்தின்மேல் ஏறாமல், மணம் பொருந்திய பலர்க் குவியலில் மகிழ்ந்து கண்படுக்கும் மலைநாடு தங்கள் நாடு என்பதை உணர்ந்தேன். இவ்வாறு குறியா இன்பத்தை எளிதில் தங்கள் மலையில் பல்வேறு விலங்கும் எய்தும் என்றும் தெரிந்து கொண்டேன், ஆதலின் தாங்களும் இன்பத்தை எளிதில் அடைவதற்குரியவர்களே. தங்களுக்கு உண்டாகும் இன்பத்தைக் கருதி மாத்திரம் அல்ல; என் தலைவியின் நிலையை எண்ணியும் தாங்கள் தக்க முயற்சியை மேற் கொள்ள வேண்டும்.
தலைவன்: அந்தப் பேரழகியை நான் இனிமேல் எவ்வாறு வந்து சந்திப்பது?
தோழி : ஆம்; அவள் அளவுக்கு மிஞ்சிய அழகையுடையவள்தான். அவள் தோளின் அழகைப் பார்த்தாலே போதுமே; மூங்கிலைப் போலப் பருத்து வளர்ந்த தோளல்லவா? அதன் அழகு கெடாமல் மெலியாமல் இருக்க வேண்டுமே! அன்னையின் மொழிகளைக் கேட்டது முதல் அவள் தங்களையே நினைத்துக் கொண் டிருக்கிறாள். அவள் மனம் அவள் வசத்தில் இல்லை. அது ஓரிடத்தில் நில்லாமல் அலையோடிக் குமுறிக் கொந்தளிக்கிறது. நிறுத்த நிறுத்த நில்லாத நெஞ்சத்தோடு அவள் தங்களிடத்தில் அளவற்ற காதலை வளர்த்து இப்படி இருக்கிறாள்.
தலைவன் பெருமூச்சு விட்டான். சிறிது மெளனமாக நின்றான், “அப்படியானால்.’’ என்று ஏதோ சொல்ல வந்தான். மேலே பேச முடியாமல் திணறினான்.
“அப்படியானால் தாங்கள் எங்கள் இல்லத்துக்கு வந்து தங்கள் காதலியைச் சந்திக்கலாம்; அதுதான் வழி.”
காதலன் முகம் சிறிது மலர்ந்தது; “அப்படியா! எப்படிக் காண்பது?” என்று கேட்டான்.
தோழி மிக்க அறிவுடையவள். “வீட்டில் வந்து சந்திப்பதை எளிதென்று இவன் நினைக்கக்கூடாது. அதில் உள்ள இடர்களையும் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதைக் குறிப்பாகவே தெரிவிக்க வேண்டும்” என்று எண்ணினாள்.
“இரவுக் காலத்தில் வந்து காணலாம். தலைவியி னுடைய தந்தை இரவிலே வீட்டையும் ஊரையும் காவல் காப்பதற்காகக் காவலரை வைத்திருக்கிறார், அவர்களுடைய கட்டுக் காவலைக் கடப்பது எளிதன்று; கடப்பதற்கரிய அருங்கடிக் காவலர் அவர்கள் சேர்ந்திருக்கும் சமயத்தை அறிந்துகொண்டு தாங்கள் வரவேண்டும். அவ்வாறு வந்தால் இரவில் வருவதற்கும் உரியவர்கள் ஆவீர்கள்.”
தலைவன் இப்போது சிந்தனையில் ஆழ்ந்தான். இரவிலே காவலருடைய காவலைக் கடந்து செல்வது எப்படி என்ற ஆராய்ச்சியிலே இறங்கினன், தலைவியை இதுகாறும் எளிதிலே கண்டு அளவளாவிய மாதிரி இனிக் காண முடியாதோ என்று ஏங்கினான், அவன் மனம் தத்தளித்தது, அவன் உள்ளத்தே தோன்றிய துயரத்தை அவன் விட்ட பெருமூச்சு வெளிப்படுத்தியது.
தோழி அவன் நிலேயை உணர்ந்தாள். தான் எதை உணர்த்த வேண்டுமென்று எண்ணினாளோ, அதை உணர்த்த இதுவே சமயம் என்று அறிந்து குறிப்பாகச் சொல்லத் தொடங்கினாள்.
”தந்தை வைத்திருக்கும் காவலர் சோரும் பதத்தை (சந்தர்ப்பத்தை) அறிந்து கங்குலில் வருதலும் தங்களுக்கு உரியதே என்று சொன்னேன். காவலர் காவலின் கடுமையை எம்பெருமான் நினைத்துப் பார்க்கிறதாகத் தோன்றுகிறது. குறித்த இன்பத்தை எளிதிலே பெற வேறு சிறந்த வழியும் உண்டு”’ என்று தலைவன் கவனத்தைச் சிறிதே தன் பக்கத்தில் திருப்பினாள்.
”வேறு வழி என்ன?” என்று அவன் ஆவலோடு கேட்டான்.
”பசிய கொடிகளுக்கு இடையே நிற்கும் இந்த வேங்கை மரம் அதைச் சொல்லாமற் சொல்கிறதே?”
“எதைச் சொல்கிறது?”
“ஒரேயடியாகப் பூத்துக் குலுங்கும் இந்த வேங்கையைக் காணும்போதெல்லாம் எனக்கு மணவீடு நினைவுக்கு வருகிறது. அலங்காரம் செய்த மணவீடும் அணிசெய்த மணமகளும் போல ஒள்ளிய பூங்கொத்துக்கள் மலர்ந்து விளங்குகிறது. இந்த வேங்கை மரம். இதைக் கண்டு குறிஞ்சி நில மக்கள் தங்கள் தங்கள் பெண்களுக்குதி திருமணம் செய்ய முயல்வார்கள். மாலை நேரத்தில் திங்கள் தோன்றினால் அதைச் சுற்றி இந்த மாதத்தில் கோட்டை கட்டியிருப்பதைக் காணலாம். அந்தப் பரி வேடமும் இது கல்யாண காலம் என்பதைத் தெரிவிக்குமே! விலங்குகள்கூட எதிர்பாராத இன்பத்தை அடையும் நாட்டுக்குத் தலைவராகிய தாங்கள், எதிர்பாராத இன்பத்தை அடைய வழியா இல்லை? தங்களுக்கு அரிய தென்ற செயலும் உண்டா? எதுவானாலும் விரைவில் ஆராய்ந்து முடிவு கட்டிச்செய்ய வேண்டும். தலைவியின் உள்ளம் படும்பாடு எனக்குத்தெரியும். அவள் இன்புற வழி பிறக்க வேண்டும்,’
இப்படி அவள் சொல்லச் சொல்லத் தலைவனுக்கு, ‘இனி நம் காதலியை முறைப்படியே திருமணம் செய்து கொள்வதுதான் ஏற்ற வழி’ என்ற உறுதி உண் டாயிற்று.
தலைவன் பகலிலே தலைவியைச் சந்திக்கும் பகற் குறிக்கண் வந்தபொழுது, அவனுக்குத் தலைவியின் தாய் தலைவியை இல்லிலே இருக்க வைக்கும் செறிப்பை அறிவுறுத்தி, அவன் திருமண்ம் செய்து கொள்வதற்குரிய முயற்சியிலே முனையும்படியாகத் தோழி சொல்வதாக அமைந்திருக்கிறது பாட்டு.
குறிஞ்சி
கோழிலை வாழைக் கோள்மிகு பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சினை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன், அயலது 5
கறிவளர் சாந்தம் ஏறல்செல் லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்
குறியா இன்பம் எளிதில் நின்மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்குஎவன் அரிய? 10
வெறுத்த ஏஎர் வேய்டிரை பணைத்தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு
இவளும் இனையள்; ஆயின் தந்தை
அருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை: பைம்புதல் 15
வேங்கையும் ஒள்இணர் விரிந்தன;
நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே.
[ கொழுவிய இலைகளை உடைய வாழையின் காய்கள் மிக்க பெரிய குலையிலிருந்துதானே கனிந்து உதிர்ந்த இனிய கனியையும் உண்ணும் இயல்பையுடைய மக்கள் அருகில் சென்றல் அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்த மலைச்சாரலில் உள்ள பலாப்பழத்தின் சுளையோடு, முதிர்ந்து உதிர்ந்த, பாறையில் உள்ள ஆழமான சுனையிலே விளைந்த, தேனைத் தேனென்று அறியாமல் நீர் என்று எண்ணி உண்ட ஆண் குரங்கு, அயலிலே வளர்ந்துள்ளதாகிய மிளகு கொடி படர்ந்த சந்தன மரத்தின்மேல் ஏறாமல், மணம் மிக்க மலர்க் குவியலாகிய படுக்கையில் இன்புற்றுத் துயிலுவதற்கு இடமானதும், இவ்வாறே தாம் எதிர்பாராத இன்பத்தை எளிதிலே நின்மலையில் வாழும் பல வேறு வகைப்பட்ட விலங்குகளும் அடைவதற்கு இடமானது மாகிய நாட்டை உடையவனே! மனத்தால் நினைத்து எதிர்பார்க்கும் இன்பங்கள் உனக்கு ஏன் அரியனவாகும்? மிக்க அழகு, மூங்கிலையொத்த பருமையையுடைய தோள், நிறுத்த நிறுத்த வருத்தத்தை விட்டு நில்லாத நெஞ்சம் இவற்றோடு உன்னிடத்தில் இந்தத் தலைவியும் இத்தகைய ளானள்; ஆயினும் அவள் தந்தை வைத்த கடப்பதற்கு அரிய காப்புத் தொழிலையுடைய ஊர்காவலர் அயர்வு அடையும் சமயம் அறிந்து நீ இராக் காலத்தில் தலைவியி னிடம் வருவதற்கும் உரியாய்; பசுமையான செடிகளினிடையே ஓங்கிய வேங்கை மரமும் விளக்கத்தையுடைய பூங்கொத்துக்களை மலரச் செய்தன; நீண்ட வெள்ளிய சந்திரனும் பரிவேடத்தைக் கொண்டது. (ஆதலின் திருமணம் செய்துகொள்ள எண்ணினால் அதற்கு இதுவே காலம்.)
- கோழிலை-கொழுமையான இலை, கோள்-காய்.
- ஊழுறு-உதிர்கின்ற, தீங்கணி-இனிய பழம். உண்ணு நர்-உண்பார். தடுத்த-மேலே செல்லவிடாமல் தடுத்த,
- ஊழ்படு-உதிர்ந்த,
- நெடுஞ்சுணை-ஆழமான சுனை, விளைந்த-நாட்பட்டுப் புளித்த, தேறல்-தேன.
- அறியாது உண்ட-தேன் என்று அறிந்து கொள்ளாமல் நீர் என்று எண்ணி உண்ட, கடுவன்-ஆண் குரங்கு. அயலதுஅயலிலே உள்ளதாகிய.
- கறி-மிளகு கொடி. சாந்தம்-சந்தன மரம். ஏறல் செல்லாது-ஏழுமல், “சாந்தம் ஏறா தென்றது, மரமாயிற் சாந்தமே உள்ளதென்று” என்று குறிப்பெழுதுவர் பழைய உரைகாரர்.
- வீ-பூ அடுக்கம்-குவியல், கண் படுக்கும்-துயிலும்,
- குறியா-நினைக்காத, எளிதில்-எளிதாக, “குறியா இன்பம் என்பது முயற்சியும் உளப்பாடும் இன்றி வந்த இன்பமெனக் கடுவனுக்கும் தலைவனுக்கும் ஏற்பக் கொள்க’ என்பது பழைய குறிப்புரை.
- எவன்-ஏன், அரிய – கிடைத்தற்கரியனவாகும்.
- வெறுத்த-மிக்க. ஏர்-அழகு, செய்யுளின் ஒசை, நிரம்புவதற்காக அளபெடுத்தது. வேய்-மூங்கில, புரைஒத்த, பணை-பருமை, “ஏரையுடைய வேயை ஒத்த பெருந்தோள்” என்று கூட்டுவர் பழைய உரைகாரர்.
- நிறுப்ப-வருந்தாமல் நிறுத்தவும். நின் மாட்டு-உன்னிடத்தில். ‘நிறுப்ப நில்லா நெஞ்சம்-நின்ற நிலையி னின்றும் அழியாமல் நிறுத்தவும் அவ்வளவில் நில்லாத நெஞ்சம்’ (பழைய உரை)
- இணையள்-இத்தகையள்; உன்னை எண்ணி வருந்தும் இயல்புடையவள் என்றவாறு, ‘பனைத்தோள் இவள்’ என்று கூட்டுவார் பழைய உரைகாரர். ஆயின்-ஆயினும்.
- கடி-காவல். சோரி பதன்-சோருகின்ற செவ்வி. ஒற்றி-அறிந்து.
- கங்குல் – இரவில். இதுகாறும் பகல் வந்ததுபோல இரவில் வருவ தற்கும் உரியை என்று சொல்ல வருதலால் கங்குல் வருதலும் உரியை என்று கூறினாள். அந்த உம்மையைக் கங்குலும் வருதல் உரியை என்று பிரித்துக் கூட்டினால் பொருள் சிறக்கும். “கங்குல் வருதலும் உரியை என்றது, இவள் நின்னையின்றி அமையாளாய், நின்னைக் காண்டல் வேண்டி, நின்வர விற்கு உடன்பட்டிருத்தலான், வருதற்குரியை நீ என்றவாறு, பகற்குறியேயன்றிக் கங்குல் வருதலும் உரியை” (பழைய உரை.) பைம்புதல் – பசுமையான செடிகள். செடியைப் புதல் என்பது பழைய வழக்கு. அதிலிருந்து புதர் என்று வழங்கும் சொல் பிறந்தது.
- இணர் – பூங்கொத்து. விரிந்தன – மலர்ந்தன. ”வேங்கையும் விரிந்தன” என்றது, திணைப்புனம் அறுத்து இற்செறிப்புண்டாள் என்றவாறு; எனவே பகற்குறியும் மறுத்துக் காவலர் சோர்பதன் ஒற்றி எனவே இரவுக்குறி யருமைகூறி, அதுவும் மறுத்துத் தோழி வரைவு கடா யினவாறு’ (பழைய உரை).
- காதலரைப் பிரிந்தாருக்கு நீண்டபொழுதாகத் தோன்றுதலின், நெடு வெண்டிங்கள் என்றாள். ‘நெடு வெண்டிகள் என்றார், ஆதித்தனுக்கு மேலாகலான்’ என்று பழைய உரைகாரர் குறித்தார். சூரியமண்டலத்துக்குப் மேலே சந்திரமண்டலம் இருக்கிறதென்று பழங்காலத்தில் சிலர் கூறியுள்ளனர். அதை எண்ணி இவ்வாறு எழுதினர். ஊர்-பரிவேடம்; சந்திரனைச் சுற்றிக் கோட்டை கட்டி யிருக்கிறது என்று சொல்வதுண்டு. அதுதான் ஊர் அல்லது பரிவேடம். கொண்டன்று – கொண்டது வளர்தல் கொண்டது என்றுமாம். வளர் பிறையின்றிக் கல்யாண நாட் கொள்ளாராகலின், அதுவும் ஆயிற்று என்றாள்” (பழைய உரை.)
இந்த பாட்டின் துறை, “பகற் குறிக்கட் செறிப்பறி வுறீஇத் தோழி வரைவு கடாயது” என்பது. “பகலிலே தலைவன் தலைவியைச் சந்தித்த இடத்தில், தலைவியை அவள் தாய் வீட்டிலேயே இருக்கும்படி ஏற்பாடு செய்த தைத் தலைவனுக்கு உணர்த்தி, அதன் வாயிலாகத் திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைத் தோழி தலைவனுக்கு உண்டாக்கியது” என்பது இதன் பொருள்.
தலைவனுடைய நாட்டில் நிகழ்வதாகச் சொன்ன செய்திகளைத் தலைவனுடைய செய்கையை நினைப்பூட்டும் குறிப்பாகக் கொள்வது ஒருமுறை. அதை உள்ளுறை உவமம் என்பார்கள். நேராக, இது போன்றது இது என்று உவமையாக இராமல் அதை உள்ளே வைத்துச் சொல்வதால் உள்ளுறை உவமம் என்ற பெயர் வந்தது. உள்ளுறை-உள்ளே மறைந்திருப்பது. இந்தப் பாட்டிலே கடுவனுடைய செயல்களாகச் சொன்னவை தலைவனுடைய செயல்களைக் குறிப்பிக்கப் பயன்படுகின்றன. பழைய உரையாசிரியர் இதன் உள்ளுறையைப் பின் வருமாறு விளக்குகிறார் “கடுவனனது தேனை அறியாது நுகர்ந்து, பின்பு தனது தொழிலாகிய மரமேறவும் மாட்டாது, வேறு ஓரிடத்துச் செல்லவும் மாட்டாது, தனக்கு அயலாகிய சந்தனத்தின் நிழலிற் பூமேலே உறங்கு கின்றாற் போல, நீயும் இக் களவொழுக்கமாகிய இன்பம் நுகர்ந்து, நினது தொழிலாகிய அறநெறியையும் தப்பி, இக் களவினை நீங்கி வரையவும் மாட்டாது, இக் கள வொழுக்கமாகிய இன்பத்திலே மயங்கா நின்றாய் என்றவாறு.”
இந்தப் பாட்டுக்குக் குறிஞ்சி என்று திணை வகுக்கப் பெற்றிருக்கிறது. குறிஞ்சிக்கு உரிய முதற் பொருளில், ”நின்மலைப் பல்வேறு விலங்கும்” என்று நிலம் வந்தது. “நெடு வெண் திங்களும் ஊர் கொண்டன்று” என்பதனால் கூதிர்க்காலம் வந்தது.
வாழை, பலா, தேன், கடுவன், மிளகு கொடி, சந்தன மரம், வேங்கை, நாடன் என்னும் குறிஞ்சிக் கருப் பொருள்கள் வந்தன. புணர்ச்சிக்கு நிமித்தமாகிய வரைவு கடாயது, குறிஞ்சிக்குரிய உரிப்பொருள்.
இதைப் பாடியவர் கபிலர். அப் புலவர் பிரான் குறிஞ்சித் தினைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
இது அகநானூற்றில் உள்ள இரண்டாம் பாட்டு.



