
இன்ப மாலை
கி. வா. ஜகந்நாதன்
6. நகைத்த தலைவி
அவன் அவளை யாரும் அறியாமல் கண்டு அளவளாவி வந்தான். நெடுநாள் அவ்வாறு களவின்பம் துய்க்க இயலாது என்று உணர்ந்து திருமணம் செய்து கொள்ளத் துணிந்தான். காதலன் தானே ஈட்டிய பொருளைப் பரிச மாகக் கொடுத்து மணம் செய்து கொள்வது வழக்கம். ஆதலால் தன் காதலிக்குக் கொடுக்கும் பொருளை ஈட்டுவதற்கு அவன் சிறிது காலம் வெளியூர் போயிருந் தான்.
விரைவில் வந்து விடுவான் என்பது தெரிந்தும் அந்த இளம் பெண்ணுக்கு ஒருநாள் போவது ஒரு யுகமாக இருந்தது. அந்தச் சிறு பிரிவையும் தாங்காமல் தவித்தாள். அவளுடைய உயிர்த் தோழி அவள் நிலையைக் கண்டாள். நெடுந்தூரம் நடந்தவனுக்குச் சேரும் இடம் அருகில் வரும்போதுதான் மிகுதியாகக் கால் வலி தெரியும். அவன் மணம் புரியும் நோக்கத்துடன் சென் றிருக்கிறான், இன்னும் சில நாட்களில் வந்து விடுவான். உடனே திருமணம் நிகழும். இவ்வளவு காலம் காத்திருந்தவளுக்கு இப்போது பிரிவுத் துன்பம் மிகுதியாயிற்று.
தோழிக்கு அவள் படும் வேதனையைப் பார்க்கப் பொறுக்கவில்லை. “அவர் ஏன் இவ்வளவு நாள் போன இடத்தில் தங்கியிருக்கிறார்? ஆண்களுக்குப் பெண்களின் உள்ளமே தெரிவதில்லை. உன்னுடைய மென்மையை இன்னும் அவர் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. என்று தான் தோன்றுகிறது” என்றாள்.
காதலியின் காதில் இது விழுந்தது அவள் தன் காதலனைப் பிரிந்து துன்புறுவது உண்மைதான். ஆனால் அதற்கு யார் காரணம்? காதலன் உரிய முயற்சியைச் செய்யத் தான் போயிருக்கிறன். அவன் கடமையை உணர்ந்தவன்; அதை நன்கு நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவன், அவனைக் குறை கூறுவது தவறு. அவளுடைய அன்பு நுட்பமாக இருக்கிறது. அதையல்லவா குறைகூற வேண்டும்?
தன் தோழி தன் காதலன் இயல்பைப் பழிப்பதை அந்த மங்கை விரும்பவில்லை. அவள் எண்ணம் தவறு என்பதை அவளுக்குச் சொல்லிலிட வேண்டும் என்று தோன்றியது.
”என்ன தோழி சொல்லுகிறாய்? நான் படும் வேதனைக்கு அவரை ஏன் குறை கூறுகிறாய்?”
”அவரால் தானே உனக்கு இந்தத் துன்பம் வந்தது?”
“அவர் என்னை மணம் புரிய வேண்டும் என்பதற்காகவே போயிருக்கிறார். இந்தப் பிரிவு, இனி எப்போதும் பிரியாமல் உலகறிய இணைந்து வாழ்வதற்கு வகை செய்வதல்லவா?”
*அப்படியானல் நீ ஏன் இப்படி வேதனைப்படுகிறாய்? உவகையல்லவோ அடைய வேண்டும்?”
“நீ சொல்வது அறிவுக்குத் தெளிவாகும். ஆனால் என்னிடம் உணர்ச்சி அல்லவா மீதூர்கிறது? அறிவின் எல்லையைக் கடந்து நிற்பது உணர்ச்சி, அதைத்தான் குறைகூற வேண்டும்.”
“அப்படியானால் அவரைக் குறைகூறக் கூடாதென்ற சொல்கிறாய்?”
“ஆம்; அவரை நாம் வாழ்த்த வேண்டும். அவர் செய்த நலத்தை எண்ணி நன்றியறிவுடன் வாழ்த்தவேண்டும். அன்று ஒருநாள் நிகழ்ந்ததை நீ மறந்து விட்டாயா?”
“எதைச் சொல்கிறாய்?”
அதைக் காதலி நினைப்பூட்டினாள்.
காதலன் கனவிலே வந்து அளவளாவிச் சென்று கொண்டிருந்தான். அவன் ஒரு மலைநாட்டுக்குத் தலைவன். அவனுக்குரிய மலை மிக உயர்ந்தது. அதன் உச்சியில் தெய்வங்கள் வந்து விளையாடுமாம். அணங்குடை நெடு வரை அது. அதன் உச்சியிலிருந்து பல ஊற்றுக்கள் புறப்பட்டு அருவியாகிப் பாயும். அந்த அருவி சோ என்று வீழும் சாரலில் எல்லாம் அடர்ந்த காடுகள் வளர்ந்திருக்கும். அந்தக் கான்கெழு நாடன் அவளைக் காதலித்தான். அகன்ற மார்பில் சந்தனம் பூசி மாலை அணிந்து வருவான். தன் மணங்கமழ் மார்பில் அவளை அனைத்துக் கொள்வான். அதன் அகலத்தையும் மணத்தையும் அவள் ஒரு கணமும் மறந்தறியாள், அவனைக் காணாப் பொழுதெல்லாம் அதுவே நினைவாக இருப்பாள். மறுபடியும் அந்த மார்பை அணைவது எப்போது என்று ஏங்குவாள். அவனுடைய மார்பு இப்படி ஒரு வேதனையை அவளிடம் உண்டாக்கி விட்டது.
சுறுசுறுப்பாக மான் குட்டியைப் போலத் துள்ளிக் குதித்து விளையாடிய பெண் இப்போதெல்லாம் சோர்ந்து கிடந்தாள். ஏதோ பிரமை பிடித்தவளைப் போல இருந்தாள். இதை முதலில் அவளை வளர்த்த செவிலித் தாய் பார்த்தாள். “ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள். “எப்படி இருக்கிறேன்? எனக்கு ஒன்றும் இல்லையே!” என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டாள் அவள். ஆனால் அவள் சரியாக உண்பதில்லை; உறங்குவதில்லை. செவிலிக்குச் சமாதானம் உண்டாகவில்லை. அந்தப் பெண்ணைப் பெற்ற தாயும் இதைக் கவனித்தாள் “ஏதாவது நோயாக இருக்குமோ?” என்று யோசித்தாள். நோய் வரக் காரணம் ஒன்றும் இல்லை. இன்ன காரணத்தால் சேர்ந்திருக்கிறாள் என்பதை உணராமல் அவர்களுடைய மனம் கலங்கியது; மறுவந்தது (சுழன்றது.)
பெண்களுக்கு ஒன்று தெரிந்தால் அது ஊர் முழுவதும் பரவிவிடும் அல்லவா? பலர் தாயிடம் வந்து, “உன் மகளுக்கு உடம்பு சரி இல்லையாமே?” என்று கேட்கத் தொடங்கினர். சில முதிய கிழவிகள் வந்தார்கள் அவர்கள் கேட்டபோது, “ஒரு காரணமும் தெரியவில்லை, இவள் இப்படி இளைத்துப் போகிறாள்’ என்றாள் தாய்,
அந்தக் கிழவிகள், “ஏதாவது தெய்வக் குற்றமாக இருக்கும். நம்முடைய குலதெய்வமாகிய முருகனுக்குப் பூசை போடுங்கள். பகைவர்களை அழித்தருளிய பெருமான் அவன். வீரத்தாலும் கருணையாலும் பல புகழை உடையவன். அந்த நெடுவேளை வழிபடுவது நல்லது. இவள் நோய் தீர்வாள்” என்று சொன்னார்கள்.
அவர்கள் காலங்கண்ட முதியவர்கள். அவர்கள் சொன்னது உண்மையாக இருக்கும் என்று நினைத்த செவிலியும் பெற்ற தாயும் முருகனுக்குப் பூசை போட எண்ணினர்கள். மலையையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்துக்குச் சிறந்த தெய்வம் முருகன். அவனைப் பூசை செய்து திருவுள்ளம் குளிரும்படி செய்ய முயன்றார்கள்.
முருகனைப் பூசைசெய்யும் பூசாரி ஒருவன் உண்டு. அவன் முருகனுடைய வேலையே தெய்வமாக வைத்துப் இசை புரிபவன். அதனைப் பாதுகாத்து வைத்திருப்பதனால் அவனுக்கு வேலன் என்று பெயர். யார் வீட்டில் அழைத்தாலும் அங்கே சென்று வேலுக்குப் பூசை செய்து முருகனைப் பாடி ஆடி அழைப்பான். முருகன் ஆவேச உருவத்தில் வந்து அருள் புரிவான்.
தாயும் செவிலியும் அவனை அழைத்துவரச் செய்தார்கள். முருக பூசை போட வேண்டும் என்று சொன்னார்கள். முருகனுக்குப் பலி கொடுத்து ஆடுவதனால் அந்தப் பூசையை வெறியாட்டு என்று சொல்வது வழக்கம். வெறியாட்டெடுக்க வேலன் இப்போது வந்து விட்டான்.
பூசை போட இடத்தைச் செப்பம் செய்தார்கள். குப்பை கூளம் இல்லாமல் செதுக்கி அங்கங்கே தோரணங்களையும் மாலைகளையும் கட்டித் தொங்க விட்டார்கள். வெறியாட்டுக்குரிய களத்தை நன்கு இழைத்தார்கள். வேலன் அவ்விடத்தைத் தூய்மை செய்து வேலைக் கொண்டு வந்து நட்டான். அதற்குக் கண்ணியைச் சூட்டினான்; பாடினான். மற்றவர்களும் பாடினார்கள். அந்த இடமே இப்போது வளப்பம் பொருந்திய கோயிலாக விளங்கியது. எல்லோரும் முருகனை வாழ்த்தும் வாழ்த்து எதிரொலித்தது. மலைப்பகுதியானமையின் வளநகர் சிலம்பும்படியாக அந்தப் பாட்டு எழுந்தது,
பிறகு வேலன் ஆட்டைப் பலிகொடுத்தான். பூவைத் தூவினான். நன்றாக முற்றி விளைந்த அழகிய சிவந்த தினையைக் கூடை கூடையாகக் கொண்டுவந்து வைத்தார்கள். இரத்தம் கலந்த தினையை அவன் அட்சதையைப் போலத் தூவினான்.
இப்படியெல்லாம் செய்து முருகனை அழைத்தான்; வர வேண்டுமென்று ஆற்றுப் படுத்தினான். வேலனுக்கே ஆவேசம் வந்துவிட்டது. கையையும் காலையும் அசைத்துக் கொண்டு ஆடினன். ‘இவ்வளவு நாள் என்னை மறந்து விட்டீர்களே!’ என்று குறை கூறினன். வீட்டில் உள்ளவர்கள் நடுங்கினர்கள். “கடவுளே! எங்கள் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இனிமேல் மறவாமல் பூசை போடுவோம். எங்கள் அருமைக் குழந்தைக்கு எந்தக் கேடும் வராமல் காப்பாற்ற வேண்டும்” என்று பணிந்து வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் கண்களில் நீர் வழிந்தது.
அந்தக் கூட்டத்தில் அந்த இளம் பெண்ணும் இருந்தாள்; அவள் தோழியும் இருந்தாள். எங்கே தன் இரகசியம் வெளியாகிவிடுமோ என்ற அச்சத்தோடே காதலி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தாள். முருகனை நேரே வேலன் வருவிக்கப் போகிறான் என்று கேள்வியுற்று, “அந்தப் பெருமானுக்குத் தெரியாதது என்ன? அவன் நம்முடைய காதலன் இங்கே வருவதை வெளிப்படுத்தி விட்டால் நம் மானம் போய்விடுமே!” என்று அஞ்சி நடுங்கினாள். அவள் நடுங்குவதைக் கண்ட சுற்றத்தார், ”கடவுளைக் கண்டு நடுங்குகிறாள்” என்றே எண்ணிக் கொண்டார்கள்.
ஆனால் காதலி அஞ்சியபடி ஒன்றும் நடக்கவில்லை. பூசாரி ஆட்டம் போட்டதுதான் மிச்சம். ஆடு உயிரை விட்டதுதான் பயன். வேலன் பொதுவகையில், “நீங்கள் என்னை மறந்து விட்டீர்கள்” என்று சொன்னனே ஒழிய, இன்ன காரணத்தால் அவள் இப்படி இருக்கிறாள் என்று சொல்லவில்லை.
பூசை ஒரு வகையாக முடிந்தது. அவள் பெரு மூச்சு விட்டு ஆறுதல் பெற்றாள். ஒரு பெரிய கண்டத்தினின்றும் தப்பிப் பிழைத்ததாக ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. உண்மையில் முருகன் அவள் பக்கத்தில் இருந்து காப்பாற்றினான்; வேலனுக்கு உண்மை தெரியாமல் மறைத்து விட்டான்.
இரவு வந்தது. நிகழ்ந்த நிகழ்ச்சிகளை எண்ணிக் கொண்டு படுத்திருந்தாள் தலைவி. ஒரு விதத்தில் அவளுக்கு அச்சம் தீர்ந்தாலும் மற்றொரு வகையில் ஒரு புதிய அச்சம் தலைப்பட்டது. “இங்கே முருகனை ஆற்றுப் படுத்திய செய்தியை அவர் அறிவாரோ? மலைப்பக்க மெல்லாம் எதிரொவிக்கும்படி அல்லவா கூத்தாடிப் பூசை போட்டார்கள்? இந்த ஆரவாரம் அவருடை காதில் விழுந்திருக்குமோ? அப்படி விழுந்திருந்தால் அவரும் உண்மை வெளிப்பட்டுவிடுமே என்று அஞ்சி யிருப்பாரோ?” என்று எண்ணினாள். அவள் உடம்பு சிறிதே நடுங்கியது.
”வெறியாட்டைப் பற்றி அவர் அறிய நியாயம் இல்லை. இங்கே பகலில் அவர் வந்திருந்தால் நமக்குத் தெரியாதா?” என்ற எண்ணம் அடுத்தபடி வந்தது.
வேறு ஒர் எண்ணம் இடை நுழைந்து மீண்டும் அச்சத்தை எழுப்பியது. “இங்கேதான் பெரிய கூட்டம் வந்திருந்ததே. அம்மா ஊரைக் கூட்டி அமர்க்களப் படுத்தி விட்டாளே! எங்கெங்கிருந்தோ உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இங்கே பூசை நிகழ்ந்த செய்தியை அங்கங்கே சொல்லியிருப்பார்கள். அந்தச் செய்தி அவர் காதுக்கும் எட்டியிருக்கும், அரை குறையாக விழுந்தாலும் விழுந்திருக்கலாம். ஒருகால் அவர் தம்களவு தெரிந்து போயிருக்குமென்று எண்ணி வாராமல் இருந்து விடுவாரோ!” – அவள் உள்ளம் கவலையால் துடித்தது.
இப்படி அவள் சிந்தனைப் புயலில் திணறிக் கொண்டிருந்தபோது ஓர் ஒலி அவள் காதில் விழுந்தது. கூர்ந்து கவனித்தாள். ஆம்; அவளுக்குத் தெரிந்த ஒலி. நள்ளிரவில் அவளை நாடி வரும் தலைவன் குறிப்பாக இப்படி ஓர் ஒலியை எழுப்புவான். அந்தச் சங்கேத ஒலிதான் அது. அவள் இதுகாறும் எண்ணி எண்ணி ஏங்கி மனம் புண்ணானதற்கு மாற்று மருந்தாக உதவும் ஒலி அது.
அந்த ஒலியை அருகிலே படுத்திருந்த தோழியும் கேட்டாள். அவளுக்கும் அந்த ஒலி எங்கிருந்து வருகிற தென்று தெரியும். அந்த இளங் காதலர்கள் நடத்திய களவுக் காதலுக்கு அவள்தானே துணை? அவளையே கொழு கொம்பாகப் பற்றிக் கொண்டு அந்த அழகிளங்கொடி காதலன்மேல் படர்ந்தது.
நள்ளிரவில் காதலியைச் சந்திக்கக் காதலன் வந்து விட்டான். தான் வந்திருப்பதை அவன் இந்த ஒலியால் புலப்படுத்தினான், தோழியும் தலைவியும் அதைக் கேட்டார்கள். செவிலியும் தாயும் கேட்டார்களோ? இல்லை; அவர்கள் நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கினார்கள். அதைத் தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா? தோழி மெல்ல, ”என்ன இது? புறக் கடைத் தோட்டத்துக் கிணற்றில் ஏதோ விழுந்து விட்டதுபோல் இருக்கிறதே!” என்று குரல் கொடுத்தாள். தலைவி, ’தெரியவில்லையே!’ என்றாள். வேறு யாரும் பேசவில்லை. யாவரும் துரங்குகிறார்கள் என்பதை அறிந்த தலைவியும் தோழியும் மெல்ல எழுந்தார்கள். தோழி தலைவியை அழைத்துச் சென்றாள். வழக்கம் போல் தலைவி தன் காதலனைச் சந்தித்தாள்.
பகல் நேரமெல்லாம் அவள் பட்ட பாட்டை அந்த முருகனே அறிவான். தன் காதலன் வருவானோ, வரமாட்டானோ என்று ஏங்கித் தவித்தாள். அந்தத் தவிப்பைப் தெரிந்து கொண்டவனைப்போல அவன் அன்றே வந்து விட்டான். என்ன வியப்பு. அவன் மார்பில் சந்தன மணம் வீசியது. மலைச்சாரற் பிளப்பில் எழுந்து வளர்ந்து செறிந்த பலவகையான மலர்களைச் சூடிக்கொண்டிருந்தான். அந்த மலர்களின் மணம் வண்டுகளைக் கூட்டியது. தன் காதலியை நாடி அந்த நள்ளிரவில் வந்தான். அவனுடைய உடம்புதான் எவ்வளவு வலிமை உடையது! வேங்கைப் புலிபோல இருந்தான். யானையை இரையாக உண்ணுவதற்குக் காட்டில் புலி நடமாடும். தன் கூரிய பார்வையை நாற்புறமும் செல்லவிட்டுத் தான் நடக்கும் ஒலி கேளாதபடி ஒளிந்து நடக்கும். அப்படித்தான் அவனும் மறைந்து மறைந்து வந்தான். அந்த ஊரைக் காக்கும் காவலர் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். அந்தக் காவலர்களுக்கும் தெரியாமல் அவன் தன் அருமைக் காதலியைச் சந்திக்க வந்திருத்தான்.
அந்த இளம் பெண் அவனையே நினைந்துகொண்டிருந்தாள்; தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய வேதனையைப் போக்குவதற்கு அவன் வந்து விட்டான்.
காதலி காதலனைக் கண்டாள். காலையிலே நடந்த அமர்க்களத்தினால் ஏங்கியிருந்த அவளுக்கு நெடுநாள் பாராமல் பார்த்ததுபோன்ற உணர்ச்சி எழுந்தது. தலைவன் வந்து இறுகப் புல்லினான். அவள் உடம்புக்கு இனித்தது என்ற சொல்வது? உள்ளம் குளிர்ந்தது என்று சொன்னால் போதுமா? அவள் உயிரே குளிர்ந்தது; தழைத்தது. அன்று வராமல் இருந்தால் அவள் பறித்துப்போட்ட தளிரைப் போல வாடிக்கிடப்பாள். வாடின பயிருக்கு மழை போலவும் பசித்த வயிற்றுக்கு உணவு போலவும் அவன் வந்து முயங்கினான்.
அப்போது அவள் உள்ளம் பூரித்தது; உடல் பூரித்தது. அவனுடைய முயக்கம் கனவோ என்று சிறிதே ஐயம் தோன்றியது. கையால் அவன் திருமேனியைப் தடவிப் பார்த்தாள். அவன் அவளைத் தழுவியிருந்தது முக்காலும் உண்மை,
பகலில் நடந்த கேலிக்கூத்து அவள் நினைவுக்கு வந்தது. அடேயப்பா அந்தப் பூசாரி போட்ட ஆட்டம் அவளுடைய நோய்க்கு அவனா மருந்து சொல்கிறவன்? அவள் உடம்பு துரும்பாக இளைக்கும் நோயைத் தணிக்கும் காதலன் இதோ முன்னே நின்றான். அவன் வந்து போகிற செய்தியைப் பூசாரி உணரவில்லை. பூசை போட்டு ஆரவாரம் செய்த அவனுக்கு இந்த இரகசியம் புலனாக வில்லை. அவள் என்ன ஆகுமோ என்று நடுங்கினாள்; இரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சினாள். நடுங்கவும் அஞ்சவும் காரணமே இல்லை. பூசாரி எதையோ உளறினான். அவளுக்கு மருந்துதவும் ஆருயிர் மருத்துவன் இதோ இருக்கிறான். அவனைப்பற்றியும் அவனுடன் ஒட்டி யிணைந்த உறவுபற்றியும் வேலன் அறியவில்லை. காதலன் வரவு சிறிதுகூட அவனுக்குத் தெரியவில்லை. பைத்தியக் காரன்! பயனில்லாமல் ஆட்டம் போட்டான்!
இதை எண்ணியபோது காதலிக்குச் சிரிப்பு வந்து விட்டது; வாய்விட்டே சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறாய்?” என்று தலைவன் கேட்டான்.
”ஒன்றும் இல்லை” என்று அவள் முதலில் சொன்னாள். பிறகு அவன் வற்புறுத்திக் கேட்கவே, அவள் தாய் வெறி யாட்டெடுத்த விந்தையைச் சொன்னாள், அதைக்கேட்டு அவனும் புன்முறுவல் பூத்தான். ஆணுல் அவன் ஒரு தீர்மானமும் செய்துகொண்டான். “இப்படியெல்லாம் இவளை வேதனை அடையும் படி செய்யக்கூடாது. இவளை மணப்பதற்கு ஆவன செய்யவேண்டும்” என்று முடிவு செய்தான்.
இந்த நிகழ்ச்சியை இப்போது தலைவி தன் தோழிக்கு எடுத்துச் சொன்னாள். “என் வேதனை நீங்கும் வண்ணம் அன்றைக்கே வந்து அருள் செய்தாரே! நிகழ்ந்ததை நான் சொல்லக் கேட்டு என்னை இத்தகைய இடர்ப்பாட் டில் சிக்க வைக்கக் கூடாதென்றுதானே போயிருக்கிறார்? இத்தகைய அன்புடையவரை நீ குறை கூறலாமா?” என்று கூறி நிறுத்தினாள். தோழி மேலே ஒன்றும் பேசவில்லை.
தலைவி கூற்றாஅக வருவது பின்வரும் பாடல்.
அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்
இதுஎன அறியா மறுவரற் பொழுதில்
’படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை 5
நெடுவேள் பேணத் தனிகுவள் இவள்’ என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக்
களம்நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியொடு தூஉய் 10
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
ஆரம் நாற அருவிடர்த் தகைந்த
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல 15
நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமை
தன்கசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப
இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
நக்கனென் அல்லனோ யானே? எய்த்த
நோய்தணி காதலர் வரவுஈண்டு 20
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே.
[ (தோழி) தெய்வத்தை உடைய உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து விழும் ஊற்றுக் கூட்டங்களைக் கொண்ட அருவியினால் வளர்ந்த காடுகள் பொருந்திய நாடனாகிய தலைவனது, நன்மணம் கமழும் அகன்ற மார்பு வருத்தியதனால் உண்டான துன்பம் இது என்று (செவிலியும் தாயும்) அறியாத, மனஞ்சுழலும் சமயத்தில், பகைவர்களை அழித்த பலவகையான புகழ்களையும் பரந்த கைகளையும் உடைய நெடிய முருகவேளை வழிபட இவள் (நோய்) தனி வாள் என்று முதுமையான வாயையுடைய பெண்டிர் அதுவே உண்மையாகக் கூற, (அதைக் கேட்ட தாய்மார் வேலனைக் கொண்டு) வெறியாடும் களத்தை நன்றாக அமைத்து முருகனுக்குக் கண்ணியைச் சூட்டி வளப்பமுடைய கோயிலில் எதிரொலிக்கும்படி பாடச்செய்து, பலியைக் கொடுத்து அழகிய சிவந்த தினையை இரத்தத் தோடு தூவி முருகனை வழிப்படுத்தி வருவித்த அச்சம் நிரம்பிய நடு யாமத்தில், சந்தனம் மணம் வீச அரிய மலைப் பிளப்பிலே தழைத்துப் பூத்த மலைச்சாரலுக்குரிய பலவகை மலர்களை வண்டுகள் மொய்க்கும்படி தலையில் அணிந்து, யானையாகிய இரையைத் தேடிய பார்வையையும் நடையையும் ஒளித்து இயங்கும் வழக்கத்தையும் வலிமையையும் உடைய புவியைப்போல, நல்ல மனைகளையுடைய நீண்ட ஊரைக் காக்கும் காவலர் அறியாமல், தன்னை விரும்பும் விருப்பத்தை உடைய உள்ளத்தைப் பெற்ற நம்முடைய விருப்பம் நிறைவேறும்படியாக, இனிய உயிர் வாடாமல் தளிர்க்கும் படி (தலைவர்) அனையுந்தோறும், உடம்பு பூரித்துச் சிரித்தேன் அல்லனோ யான், என் உடம்பு இளைத்தற்குக் காரணமான காமநோயைத் தணிக்கும் காதலரின் வரவு இங்கு அயலானாகிய வேலனுக்குத் தெரியாமற் போனதைக் கண்டு?
நாடன் (2) மார்பு அணங்கிய செல்ல்லை (3) அறியா மறுவரற் பொழுதில் (4), எனப் பெண்டிர் கூற (6-7), இழைத்து, சூட்டி, பாடி, கொடுத்து, தூஉய், ஆற்றுப் படுத்த நடுநாள் (8-11), நாற, வாய்ப்ப, குழைய, முயங்கு தொறும் மலிந்து (12-18), யான் (19), வரவு உலந்தமை கண்டு (20-21), நக்கனென் அல்லனோ? (19) என்று கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.
- அணங்கு-தெய்வம், நெடுவரை-உயர்ந்த மலை,
- கணம்-தொகுதி, ஊற்றுக் கால்களின் தொகுதி. கான்-காடு.
- வியன் மார்பு – அகன்ற மார்பு. அணங்கிய – வருத்திய, செல்லல்-துன்பம். மார்பை அணையாமல் அதையே நினைந்து வருந்தினாளாதலின் இவ்வாறு கூறினாள்.
- மறுவரல்-சுழற்சி; இங்கே மனக்கலக்கம்.
- படியோர்-பகைவர்; “படியோர் என்றது பிரதியோர் என்னும் வடமொழித் திரிவு” என்பது பழைய உரை. “பல்புகழ்-வென்றியும் தியாகமும் முதலாயினவற்றான் ஆய புகழ்” (பழைய உரை.)
- நெடுவேள்-முருகன். தணிகுவள்-நோய் நீங்குவாள்.
- முதுவாய்ப் பெண்டிர்-முதிய வாயையுடைய பெண்டிர். “முதுவாய் பெண்டிர்” என்பதும் ஒரு பாடமாக இருத்தல் கூடும். அப் பாடத்துக்கு “அறிவு வாய்ந்த பெண்கள்” என்று பொருள் கொள்ளவேண்டும். அது வாய்கூறஅதை மெய்யாகச் சொல்ல; வாய்-உண்மை.
- களம்-வெறியாடும் களம், இழைத்து-அமைத்து. சூட்டி-தலையில் அணிந்து; ’சூட்டி-சூட்டர் என்றது வேலிற்கு; அவ்வேலன் முருகனை இங்ஙனம் ஆற்றுப் படுத்தான் என்க’ (பழைய உரை.)
- நகர் -கோயில்; ஊருமாம். சிலம்ப – எதிரொலி செய்ய, பலி – ஆட்டுப்பலி. கடவுளுக்கு நிவேதனம் செய்யும் எல்லாப் பொருளுமே பலி என்று சொல்லப்பெறும்.
- உருவம்-அழகு. தூஉய்-தூவி,
- முருகு ஆற்றுப்படுத்த-முருகனை வருவித்த, ஆற்றுப்படுத்த-வரும் வழிகாட்டி அழைத்து வந்த, ’அவ் வேலன் முருகனை இங்ஙனம் செய்து ஆற்றுப்படுத்தான்’ என்க. ஆற்றுப்படுத்தல்-மனையிற்கொண்டு புகுதல் பழைய உரை.) உருகெழு-அச்சத்தை உடைய. நடுநாள் – நள்ளிரவில். ஆற்றுப்படுத்தின நாளின் இரவில்,
- ஆரம்-சந்தனம். விடர்-மலைப் பிளப்பு. த்தைந்த -தழைத்த.
- சாரல்-மலைச்சாரல். பட-மொய்க்க.
- களிற்றிரை-களிறாஅகிய இரையை. தெரீஇய – தேர்ந்த; நாடிய. பார்வல்-பார்வை, ஒதுக்கின்-நடத்தலை யுடைய.
- ஒளித்து இயங்கும் மரபின்-மறைந்து இயங்கும் வழக்கத்தையுடைய; வய-வலிமை,
- நகர்-ஊர். அறியாமை-அறியாமல்.
- தன் நசை உள்ளம்-தன்னை நச்சு தலையுடைய உள்ள மென்று உள்ளத்திற்கு அடை. அதில் நம் நசை யென்றது வேட்கையை. நசை-விருப்பம். வாய்ப்ப-நிறை வேற.
- குழைய-தளிர்க்க. மெய் மலிந்து-உடல் பூரித்து.
- நக்கனென்-சிரித்தேன்; வேலனுடைய பேதைமையை நினைந்து சிரித்தாள். எய்த்த-இளைப்பதற்குக் காரணமாகிய,
- நோய்-காம நோய். வரவு:எழுவாய்.
- ஏதில்வேலன்-அயலானாகிய பூசாரி, உலந்தமை – தப்பியமை; அறியப்படாமை.
’வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி தலைமகனை இயற் பழிப்பத் தலைமகள் இயற்பட மொழிந்தது’ என்பது இந்தப் பாடலின் துறை.
“திருமணம் செய்வதைக் காரணமாக வைத்து அதற்குரிய பொருளை ஈட்டுவதற்குத் தலைவன் பிரிந்த காலத்தில், அவன் பிரிவைத் தலைவி தாங்காமல் வருந்த, அது கண்ட
தோழி தலைவனுடைய இயல்பைப் பழித்துக் கூற, அது கேட்ட தலைவி அவன் இயல்பு பொருத்தமானதென்று எடுத்துக் காட்டியது” என்பது இதன் பொருள்.
’நான், வருவானோ வாரானோ என்று அஞ்சியிருக்கும் போது வெறியாட்டு நிகழ்ந்த அன்றே வந்து அன்பு காட்டின பெருமை உடையவன்; என் அச்சத்தை உணர்ந்து திருமணம் செய்து கொள்ள முந்தியவன்’ என்று அவன் மேல் பழி சாராவாறு அவனுடைய நல்வியல்புகளைத் தலைவி எடுத்துரைத்தாள். “வெறியெடுத்துத் தீராத வழியில், அஃது யாராலே வந்ததென்று அயிராத படி வரைய வந்த பேருதவியினுரைப் பொல்லாங்கு சொல்லக் கடவையோ? என இயற்பட மொழிந்தது?” என்பது பழைய உரையாசிரியர் கூறும் விளக்கம்.
தலைவனுடைய இயலைத் தவறாகக் கூறுதலை இயற் பழித்தல் என்று கூறுவர். அவன் செயலுக்குச் சமாதானம் கூறி அவன் நல்லவன் என்பது தோன்றக் கூறுதலை இய, பட மொழிதல் என்பர்.
இந்தப் பாடலைப் பாடிய புலவர் வெறி பாடிய காம கண்ணியார். அவர் பெண் புலவர் என்று தோன்றுகிற இந்தப் பாட்டில் வெறியாடும் களச் இழைத்து வேல் முருகனை வழிபட்ட செய்தியை அழகாகச் சொன்னமையால் “வெறி பாடிய” என்ற சிறப்பு அப்புலவர்க்கு அமைந்தது.
குறிஞ்சி நில மக்கள் பூசாரியாகிய வேலனையும் பூசாரிச்சியாகிய குறமகளையும் கொண்டு முருகனை வழிபடுவது வழக்கம். திருமுருகாற்றுப்படையில் முருகனை ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சியைப் பின்வரும் அடிகள் விரி துரைக்கின்றன.
”மதவலி நிலைஇய மாத்தாட் கொழவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிச்
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துனையற அறுத்துக் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் கிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட”
இந்த அகநானுற்றுப் பாடலிலும் திருமுருகாற்றுப் படைப் பகுதியிலும் சொல்லப் பெறும் முருக பூசையில் பல செய்திகள் பொதுவாக இருத்தலைக் காணலாம்.
இப்பாட்டில் அணங்குடை நெடுவரை, சாரல் என்பன குறிஞ்சித் திணைக்குரிய நிலம். உருகெழு நடுநாள் என்பது அதற்குரிய காலம், இவை இரண்டும் முதற் பொருள்.
- மிக்க வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுத்த ஆட்டுக்கிடாயின் இரத்தத்தோடு கலந்த தூய வெள்ளையரிசியைச் சிறு பலியாக இட்டு, பல தானியக் கூடைகளை வைத்து, பசிய சிறிய மஞ்சள் நீரோடு மணமுடைய பண்டங்களைத் தெளித்து, தன்மையையுடைய அலரியின் மணமுடைய மாலையை அளவு சரியாக இருக்கும் படி, நறுக்கி, எங்கும் தொங்கப்படி அலங்கரித்து, மணமுடைய தூபம் எடுத்துக் (குறிஞ்சிப் பண்ணைப் பாடி, ஒலிக்கின்ற இசையையுடைய அருவியின் ஓசையோடு இனிய வாத்தியங்கள் முழங்க, பல நிறங்களையுடைய மலர்களைத் தூவி, யாரும் அஞ்சும்படி மிகச் சிவந்த தினையைப் பரவ வைத்து, குறமகளாகிய பூசாரிச்சி முருகனுக்குரிய துடியையும் தொண்டகப் பறையையும் வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லை யென்பவரும் அஞ்சும்படியாக முருகனை வருவித்த அழகையுடைய விசாலமான கோயிலில், வெறியாடும் இடம் எதிரொலிக்கும்படி பாடி, பலவாகிய கொம்புகளை ஒருங்கே ஊதி, வளைந்த மணியை அடித்து, ஓடாத வீரத்தையுடைய முருகனுடைய வாகனமாகிய பிணி முகம் என்னும் யானையை வாழ்த்தி, வேண்டியவர்கள் வேண்டியபடி யெல்லாம் வந்து முருகனை வழிபட.
நெடுவேளாகிய தெய்வமும், நாடன் ஆகிய தலைவனும், அருவியாகிய நீர் நிலையும், தினையாகிய உணவும், ஆரமாகிய மரமும், சாரற் பல்பூ வாகிய பூவும், களிறு வயப்புலி ஆகிய விலங்குகளும், நன்மனை நெடு நகராகிய ஊரும் வெறியாட் டெடுத்தலாகிய தொழிலும் வந்தன. இவை கருப் பொருள்.
முயங்குதொறும் என்பதனால் புணர்ச்சியாகிய உரிப் பொருள் கூறப்பெற்றது.
அகநானூற்றில் 22-ஆம் பாட்டு இது.
★ ★ ★



