இன்ப மாலை
கி. வா. ஜகந்நாதன்

1. மணிமிடற் றந்தணன்

      கடவுளுடைய தன்மையை முடிவு போக யாரும் அறிந்திலர். ஆயினும் அப்பெருமானைப் பற்றிச் சமய நூல்களும் ஞானியரும் அன்பர்களும் வெளிப்படுத்தி யிருக்கும் செய்திகள் அளவிறந்தன. கடவுள் ஒருவனே என்ற கருத்தே முடிந்த முடிபானாலும், மனத்தின் துணைகொண்டு நினைப்பதும், அப்படி நினைத்ததைக் கருவிகளின் துணைகொண்டு செய்வதுமாகிய இயல்பையுடைய மக்கள் கடவுளைப் பல உருவங்களை உடையவனாக வைத்து வழிபடுகிறார்கள். பல வீரச் செயல்களையும் அருட் செயல்களையும் உடையவனாகப் புகழ்கிறார்கள்.

      சிவபெருமானைப் பற்றிய உருவ வருணனையும் திருவருட் செயல்களைப் பற்றிய செய்திகளும் தேவாரம் முதலிய சைவத் திருமுறைகளில் கடல்போல விரிந்து பரந்துள்ளன. ஆயினும் அந்த நூல்களுக்கு முன்பே, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, சிவபெருமான் முதலிய கடவுளரைப் பற்றிய செய்திகள் பல தமிழ் நாட்டில் வழங்கி வந்தன. இன்று இந்த நாட்டில் சிவபெருமானுடைய திருக்கோலத்தை எப்படி எண்ணிப் பாடி அலங்காரம் செய்து வழிபடுகிறோமோ, அப்படியே அக்காலத்திலும் வழிபட்டார்கள். சிவபெருமானுடைய வீரச் செயல்களும் அருட்செயல்களும் இன்று வழங்குவனபோலவே அன்றும் வழங்கின. பிற்காலத்தில் அவை பின்னும் மிகுதியாக வழங்கலாயின.

      எட்டுத் தொகை நூல்களில் ஒவ்வொன்றுக்கும் கடவுள் வாழ்த்து உண்டு. அவற்றில் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து மாத்திரம் கிடைக்கவில்லை. மற்ற வற்றில் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற நான்கு நூல்களிலும் கடவுள் வாழ்த்தாக அமைந்த பாடல்கள் சிவபெருமானைப் பற்றியவை. தமிழ் நாட்டு மக்கள் திருமால் முதலிய கடவுளரை வேறுபாடின்றி வழிபட்டார்கள். ஆயினும் சிவபெருமானை வணங்குவார் தொகை மிகுதியாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

      அகநானூற்றில் வரும் சிவபெருமானைப் பற்றிய வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது. யாவரும் அறியாத தன்மையை உடைய பழம் பொருளாகிய சிவபெருமானுடைய திருவுருவம், அப்பெருமான் திருக்கரத்தில் ஏந்திய படைகள், அணிந்த ஆடையணிகள் முதலியவற்றை எடுத்துச் சொல்லுகிறார்.
      சிவபெருமானுடைய அடையாள மலர், கொன்றை. அது பொன்னைப் போன்ற மஞ்சள் நிறம் உடையது. அம்மலர் கார் காலத்தில் மலர்வது. காரில் விரியும் பொன்னுக்கு ஒப்பாகிய புதிய கொன்றை மலரை அப் பெருமான் பல உருவத்தில் அணிந்திருக்கிறான். இறைவனோடு சார்ந்த எந்தப் பொருளுக்கும் வாட்டம் இல்லை. ஆதலின் அவன் அணிந்திருக்கும் கொன்றை மலர் என்றும் வாடாத புது மலராகவே இருக்கிறது. மலரைத் தொடுத்தல் ஒரு கலை. பல வகையில் அதைத் தொடுத்து அணிவது உண்டு. பொதுவாக மாலை என்று சொன்னாலும் ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியே பெயர் உண்டு. மார்பிலே அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். சிறியதாகத் தொடுத்துத் தலையிலே செருகிக் கொள் வதற்குக் கண்ணி என்று பெயர். தலையில் வட்டமாகப் போடுவதற்கு இண்டை யென்று பெயர். பெரும்பாலும் தார் என்பது ஒற்றையாக இல்லாமல் இணை மாலையாகவே இருக்கும்.

      காரில் விரியும் கொன்றைப் புதுமலரைச் சிவபெருமான் இரட்டை மாலையாகிய தாராகவும் ஒற்றை மாலையாகவும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான்.

      பெருந்தேவனார் முதலில் மலர் புனைந்து விளங்கும் மாதேவனைக் காட்டுகிறார்,

      கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்த்
      தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்.

      [ கார் காலத்தில் மலர்கின்ற கொன்றையினது பொன்னை யொத்த புதிய மலராலாகிய தாரை அணிந்திருக்கிறவன்; அம்மலராலாகிய மாலையை உடையவன்; தலையில் சூட்டிக் கொண்டிருக்கும் அதே மலராலாகிய கண்ணியை உடையவன்.

      கார்-கார்காலம், விரிதல்-மலர்தல், நேர்-ஒத்த, மலைந்த-சூட்டிய.]

      கண்ணியை அடையாள மாலையென்றும் தாரைப் போகத்துக்கு உரியதென்றும் சொல்வார்கள். தார் ஓர் விசேடமாக இடுவது; மாலை அழகுக்கு இடுவது; கண்ணி போர்ப்பூ, இனித் தார் சேர்ப்பதாகவும், மாலை கட்டுவதாகவும், கண்ணி தனித்துத் தொடுப்பதாகவும் இவ்வேறுபாடுகளென உரைப்பாரும் உளர் என்பன பழைய உரையாசிரியர் எழுதியிருக்கும் குறிப்புக்கள்.

      சிவபெருமானுடைய திருமார்பிலுள்ள தாரையும் மாலையையும் திருமுடியிலுள்ள கண்ணியையும் கானச் செய்தபின் அப்பெருமானுடைய திருமார்பை மறுபடியும் ஊன்றிக் கவனிக்கச் செய்கிறார் பெருந்தேவனார், தாரும் மாலையும் கண்ணைப் பறிக்கும் வண்ணமுடையன; ஆதலின் கண்டவுடனே தெரிகின்றன. திருமார்பில் வேறு ஒன்று இருக்கிறது. அது நுட்பமானது; ஆதலின் கூர்ந்து கவனித்தற்குரியது; நிற வேறுபாடில்லாதது; தூய வெண்மையை உடையது. மார்பிலே அது புரளுகிறது. அதுதான் பூணூல்; சிறிதும் மாசுமறுவற்ற தூய வெள்ளிய நுண்ஞாண்.

      மார்பி னஃதே மையில் நுண்ஞாண்.

      [ மார்பிலே இருப்பது மாசற்ற வெண்மையான நுண்ணிய பூணூல்.

      மார்பினது என்பது செய்யுளோசைக்காக மார்பினஃது என விரிந்தது. மை-அழுக்கு. ஞாண்-கயிறு, நூல்; இங்கே பூணூலுக்கு வந்தது.]

      உருவினாற் பெரிய தாரையும் மாலையையும் பார்க்கும் போது அவர் திருமார்பில் உள்ள ஞாணாகிய பூணூல் நுண்ணியதாகத் தோன்றுகிறது. அதனால் நுண்ஞாண் என்றார்.

      சிவபெருமானுடைய திருமுகத்தில் வேறு யாருக்கும் இல்லாத சிறப்பு ஒன்று உண்டு. அதுதான் அவனுடைய நெற்றிக் கண், அந்த மூன்றாவது கண் ஞானத்தின் அடையாளம். தேவர்களுடைய கண்கள் இமையாதவை. அதனால்தான் இமையவர் என்ற பெயர் ஆவூர்களுக்கு வந்தது; இமையிலே யாருக்கும் இல்லாத சிறப்புடையவர் என்று பொருள் விரித்துக் கொள்ளவேண்டும். இறைவனுடைய நாட்டங்களும் இமையாதவை. “இமையாத முக்கண் மூவரிற் பெற்ற வன்” என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். ஆதலின் இந்த நுதற்கண்ணும் இமையாத நாட்டமே.

      நுதலது இமையா நாட்டம்.

      [ நெற்றியில் இருப்பது இமையாத கண். ]

      கொன்றை மலர்த் தாரையும் மாலையையும் கண்ணியையும் காட்டி, மார்பில் உள்ள நுண் ஞாணையும் காட்டி, நுதலில் உள்ள இமையாத நாட்டத்தையும் காட்டிய புலவர் சிவபெருமானுடைய திருக்கைகளில் உள்ள படைகளைக் காட்ட வருகிறார்.

      சிவபெருமான் திருக்கரத்தில் மழு இருக்கிறது. அது எப்போதும் வெப்பத்தோடு இருப்பது. “மழுவாகக் கொதிக்கிறது” என்று உலக வழக்கில் சொல்வதுண்டு, அந்த மழுவைப் பரசு என்று வடமொழியிலே சொல்லுவார்கள். மழுவை ஏந்தியிருக்கும் சிவபெருமான் ஒரு வகை அங்குசத்தையும் ஏந்தியிருக்கிறன். அதைக் கணிச்சி என்று சொல்வார்கள். மழு முதலிய படைகளால் இறைவன் பகைவரை அடுவான். அவனுக்குப் பகையும் இல்லை; நட்பும் இல்லை. ஆயினும் ஆருயிர்களுக்குத் தீங்கு விளைவிப் பவர்களைப் பகைவர்போல வைத்து ஒறுத்தல் அவனுடைய அருளுக்குரிய இயல்பு. அப்போது பயன்படுவன மழு முதலிய கருவிகள். அப் பெருமான் கையிலே கணிச்சியும் மழுவும் இருப்பதோடு முத்தலைச் சூலமும் இருக்கிறது. இறைவனிடம் உள்ன படைகளில் இதுவே சிறந்தது. சூலதரன் என்று அப்பெருமான் பெயர் பெருக வழங்கும். சில சமயங்களில் தெய்வங்களை அவர்களுடைய படைகளில் ஆவாகனம் செய்து வழிபடுவது உண்டு. வேலை நட்டு, அதனையே முருகனாக எண்ணி வழிபடுவது பழங்கால முதல் இருந்து வரும் வழக்கம். அப்படியே சூலத்தில் சிவபெருமான ஆவாகனம் செய்து வழிபடுவதும் உண்டு. ஆதலால் சிவபெருமானுடைய திருக்கரத்தில் உள்ள படைகளில் குலம் சிறந்தது என்று தெரிய வருகிறது. அதுபற்றியே சூலத்தைச் சூலதேவர் என்று உயர்வாகச் சொல்லும் மரபும் உண்டாயிற்று.

      சூலமும் ஒருவகை வேல்தான். வேலுக்கு ஒர் இலை உண்டு; சூலத்துக்கு மூன்று இலைகள் உள்ளன. ஆதலின் அதை மூவிலை வேல் என்று கூறுவர்; திரிசூலம் என்பது வடமொழி வழக்கு. மூன்று வாய்களை உடைய வேல் அது.

      இத்தனை படைகளை வைத்திருக்கின்ற இறைவனுக்கு எப்போதும் வெற்றிதான். அவனுக்கு எந்தக் காலத்திலும் தோல்வி என்பதே இல்லை. அவன் என்றும் தோலாதோன். தன் கையில் உள்ள படை வலிமையினால் இந்த நிலை அவனுக்கு வந்தது என்பது இல்லை. இயல்பாகவே அவனுக்கு அந்தத் திறல் உண்டு. யாவற்றையும் அழித்துத் தனி நிற்கும் பேராற்றலையுடைய பெம்மான் ஆதலின் பகைவர்களை வென்று நிற்பது அவனுக்கு ஒரு பொருள் அன்று. ஆதலின் கணிச்சியும் மழுவும் மூவாய் வேலும் கையிலே கொண்டமையால் அவன் தோல்வி யுறாதவன் ஆக வில்லை. இயல்பாகவே தோல்வியை அறியாதவன் அவன். அந்தத் தோலாதோனுக்குக் கையில் கணிச்சியோடு மழு இருக்கிறது; மூவாய் வேலும் உண்டு.

      இகல்அட்டுக்
      கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
      வேலும் உண்டுஅத் தோலா தோற்கே.

      [ பகைவரை அழித்துக் கையிலே இருப்பது கணிச்சியோடு மழு என்னும் படை; தோல்வியே இல்லாத அப்பெருமானது திருக்கரத்தில் மூன்று வாயை உடைய வேலாகிய சூலமும் உண்டு.

      இகல்-பகை. அட்டு-அழித்து கையது என்பது ஒருமை. மழு கையது என்று கூட்டவேண்டும். கணிச்சி என்பதைப் பெரும்பாலும் மழுவுக்கே சொல்வதுண்டு. இங்கே மழுவைத் தனியே சொல்லியிருத்தலின் கணிச்சி வேறுபடை ஆயிற்று. குந்தாலி என்று அதற்குப் பொருள் எழுதுபவர் பழைய உரையாசிரியர், குந்தாலி என்பது ஒருவகைக் கோடரி. குத்தும் இடத்தை வாய் என்று சொன்னார், வாளில்வெட்டும் புறத்தை வாய் என்று சொல்வது போன்றது இது. அஜிதன் என்று வடமொழியில் இறைவனுக்கு ஒரு பெயர் உண்டு. தோலாதோன் என்ற பொருளை உடையது அது.]

      எம்பெருமானுடைய ஊர்தி இடபம். மறையே இடபமாக வருமென்றும், அறமே ஏற்றுவாகனமாக வருமென்றும் நூல்கள் கூறும். திரிபுரத்தை எரித்த காலத்தில் திருமால் விடையாகி வந்து இறைவனைத் தாங்கினன் என்பது புராண வரலாறு.

      ஊர்ந்தது ஏறே

      [சிவபெருமான் எழுந்தருளும், ஊர்தி விடையாகும். ஊர்ந்தது – ஊர்ந்த பொருள், ஏறு- இடபம்.]

      இறைவன் உமாதேவிக்கு நாயகன். உமாதேவியாகியு சக்தி இறைவனுடைய அருளின் வடிவம். இறைவனாகிய் சத்தனிடம் உள்ள பண்பு அருள்; அதுவே சக்தி இறைவன் எப்போதும் அருள் நிரம்பியிருப்பவன், அது எப்போதும் வெளிப்படையாகத் தோன்றாது. சிலகாலம் அந்த அருள் மறைந்திருக்கும். சில சமயங்களில் ஓரளவு வெளிப்படும். வேறு சமயங்களில் முழுமையாக வெளிப்படும். சக்தி இறைவனோடு ஒன்றி மறைந்திருத்தலும் உண்டு; அவன் திருமேனியின் இடப் பகுதியிலே ஒன்றி விளங்குவதும் உண்டு; தனியே வேறாக இருத்தலும் உண்டு. எந்த நிலையிலும் சக்தியும் சிவனும் சேர்ந்தே இருப்பார்கள். அந்தச் சேர்க்கை புலப்படாமல் இருப்பதும், ஓரளவு புலனாதலும், தெளிவாக வெளிப்படுதலுமாக மூன்று வகையில் அமையும். எப்படி இருப்பினும் இறைவனேடு பிரியாமல் நிற்பவள் சக்தி; எக்காலத்தும் சேர்ந்திருப்பவள் அப் பெருமாட்டி.

      சேர்ந்தோள் உமையே.

      [ எக்காலத்திலும் இறைவனோடு சேர்ந்திருப்பவள் உமாதேவியாவாள்.

      உமாதேவி என்பது, இறைவி இமயமலை அரசன் புதல்வியாகத் திரு அவ்தாரம் செய்தபோது ஏற்ற பெயர். அப்பெருமாட்டி தவம் செய்து கொண்டிருந்தபோது இறைவன் எழுந்தருளி, “உன் தவம் போதும்” என்று குறிப்பித்தானாம். அந்தக் குறிப்பை உள்ளடக்கியது உமா என்ற திருநாமம். உமை என்று சொன்னாலும் இங்கே சக்தியையே கொள்ளவேண்டும் ]

      மேலும் பெருந்தேவனார். சிவபெருமான் திருக் கோலத்தை வருணிக்கிறார்.

      இறைவனுடைய திருமேனி செவ்வண்ணம் உடையது. ”சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி யம்மான்” என்பது அப்பர் வாக்கு. எல்லையில்லாது படர்ந்த செஞ்சோதிப் பிழம்பைப் போல அம்மேனி காட்சி அளிக்கும் அந்தி வேளையில் கதிரவன் மேல் கடலில் மூழ்கும்போது மேற்கு வானம் செம்மை நிறம் பெற்றுப் பார்க்கப் பார்க்கப் பேரழகை உடையதாக இருக்கும். அந்தச் செக்கர் வானத்தைப் போலச் செம்மையும் அழகும் உடையது சிவபிரான் திருமேணி.

      செவ்வான் அன்ன மேனி

      [ மாலை நேரத்தில் தோற்றும் சிவந்த வானத்தைப் போலச் செவ்வண்ணமும் அழகும் உடைய மேனி, மேனியையும் என்று கொள்ள வேண்டும். ]

      மேனியையும் பிறவற்றையும் உடைய இறைவன் என்று சொல்ல வருகிறார். இதுவரையில் தாரன், கண்ணியன் என்று நிறுத்தி, ஞாண் மார்பினஃது, நாட்டம் நுதலது, மழுகையது என்று கூறி, மூவாய் வேலும் உண்டு என்றும், ஊர்ந்தது ஏறு, சேர்ந்தோள் உமை என்றும் தனித் தனியே முடியும் வாக்கியங்களாக அமைத்து வருணித்தார். இனி, சிவபெருமானுடைய திருவடி நீழலில் உலகமெல்லாம் வாழ்கின்றன என்று சொல்ல வருகிறார். மேனி முதலியவற்றையுடைய சிவபெருமான் என்று அப்பெருமானுக்குரிய சிறப்புகளைச் சார்த்திச் சொல்கிறார். ஆதலின் இது முதல் வரும் எல்லாம் சேர்ந்து ஒரே வாக்கியமாக அமைகின்றன.

      இறைவனுடைய செவ்வண்ண மேனியிலே கண்ணைச் செருகிப் பார்க்கிறோம், தன்னைத் தியானிக்கின்றவர்களிடத்தில் அவனுக்கு அருள் உள்ளம் பிறக்கும். அப்போது அவன் முறுவல் பூக்கிறான். அந்த முறுவலின் வெண்மை யொளிவிட்டு விளங்குகிறது. மேனியின் செவ்வண்ணத்தனூடே அது நன்றாகத் தெரிகிறது. மாலை நேரத்துச் செவ்வானிலே வெள்ளிய பிறை முளைத்தாற் போல அந்தப் புன்னகை தோற்றுகிறது; திருமேனி நிறத்துக்கு மாறுபட்டு விளங்கும் வெள்ளிய கூர்மையான பற்களெல்லாம் சேர்ந்து வானில் இலங்கும் பிறைபோலத் தோற்றம் அளிக்கின்றன.

      அவ்வான்
      இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று.

      [ அந்தச் செக்கர் வானிலே தோன்றி விளங்கும் பிறையைப் போன்ற, திருமேனி நிறத்தோடு மாறுபட்ட வெள்ளிய கூரிய பற்களையும்,

      முன்னே செவ்வான் என்றமையால் அவ்வான் என்று சுட்டினர். இலங்கு-விளங்கும். விலங்கு-மாறுபட்ட, வால் – வெண்மையான ; தூய்மையான என்பதும் பொருந்தும், வை-கூர்மை. எயிறு-பல். எயிற்றையும் என்ற அர்த்தத்தில் பின்வரும் அந்தணன் என்பதோடு ஒட்டி நிற்பதால் எயிற்று என்று விகாரமாயிற்று. எயிற்று அந்தணன் என்று கூட்ட வேண்டும்.

      விலங்கு வால் வை எயிறு என்பதற்கு மற்றப் பற்களுக்கு மாறுபட்டுத் தோன்றும் கோரப் பற்கள் என்று பொருள் சொன்னால், அது இறைவனுக்குப் பொருந்தாது. ]

      சிவபிரானுடைய சடையைக் காட்டுகிறார் புலவர். அது செக்கச் செவேலென்று இருக்கிறது. நெருப்புக் கொழுந்துவிட்டாற் போலப் படர்ந்திருக்கிறது. ஒரே சடையாக இராமல் தனித்தனியே இருக்கிறது. அப்படி இருப்பதைப் புரி சடை என்று சொல்வார்கள். நெருப்புக் கொழுந்து விட்டாற் போன்ற சடை, பள பளவென்று ஒளிவிடும் சடை, புரிசடை என்று புலவர் சடையின் பெருமையைச் சொல்கிறார்,

      எரிஅகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை.

      [ நெருப்புக் கொழுந்து விட்டாற்போன்ற, விட்டு விளங்கும், தனித் தனியே உள்ள சடையையும்.

      அகைந்தன்ன சடை விளங்கு சடை, புரிசடை எனத் தனித் தனியே கூட்ட வேண்டும். எரி-நெருப்பு. அகைதல்-தழைத்தல். அகைந்தது அன்ன என்பது அகைந்தன்ன என்று செய்யுளுக்காக விகாரப்பட்டது. அவிர்ந்து விளங்குதல்-மிகுதியாக ஒளிர்தல். புரிசடை – ஒன்றாகச் சேராமல் தனித்தனியே புரிபுரியாக உள்ள சடை.

      மேனியையும் எயிற்றையும் சடையையும் இன்னும் சிலவற்றையும் உடைய இறைவன் என்று சொல்ல வருகிறார்.]

      மேனி முதலாக இறைவனுக்குரிய சிறப்புக்களை ஒரே வாக்கியத்தில் அடக்கிச் சொல்லவந்த பெருந்தேவனார், சடையைக் கூறியவுடன் அப்பெருமானுடைய திருமுடித் திங்களைப் பற்றிச் சொல்கிறார், வானத்திலே உள்ள திங்களுக்கும் இறைவனுடைய சென்னியிலே உள்ள திங்களுக்கும் வேறுபாடு உண்டு. இறைவன் பிறையை அணிந்திருக்கிறான். வானில் உள்ள பிறை மேலும்மேலும் வளரும். வளர்வது நல்லதுதான்; ஆனால் அது வளர்ந்து கொண்டே போவதில்லை. முழுமதியானவுடன் மறுபடியும் தேயத் தொடங்குகிறது. மக்கள் இளமை பெற்று வளர்ந்து பின் முதுமை பெற்று இறக்கிறார்கள். மறுபடி வேறு பிறப்பு எடுத்து வளர்ந்தும் தேய்ந்தும் சுழலுகிறார்கள். திங்களும் அப்படித்தான் வளர்வதும் தேய்வதுமாக இருக்கிறது. ஆனால் இறைவனேடு சார்ந்தபொருள்களுக்கு இந்த மாற்றம் இல்லை. அவனுடைய சென்னியிலே ஒளிரும் திங்கள் முதிர்வதே இல்லை; எப்போதும் பிறையாகவே இருக்கிறது; அப்பெருமான் திருவருளைப் பெற்ற மார்க்கண்டன் என்றும் பதினறாக இருப்பது போல, என்றும் இளமையோடு இருக்கிறது. அது என்றும் முதிர்வதே இல்லை. முதிர்வது இன்மையால் முற்றும் முதிர்ந்த பின்னர் நிகழும் தேய்வும் அதற்கு இல்லை.

      இறைவன் சென்னியிலே சடை நெருப்பின்கொழுந்து போல விளங்குகிறது; அதனோடு முதிராத் திங்களோடு அச்சென்னி ஒளி விடுகிறது.

      முதிராத் திங்களொடு சுடரும் சென்னி.

      [ முதிராத திங்களாகிய பிறையோடு ஒளிவிடும் திருமுடியையும்.

      முதிராத் திங்கள் என்றதனால் பிறை என்று கொள்ள வேண்டும். திங்கள் இருப்பதனால் அதன் சுடரும் சேர்ந்து சென்னி விளங்குகிறது.]

      சிவபெருமான் தன் கருணையால் மெய்ஞ்ஞானிகளாகிய அருளாளர்களுக்கு இவ்வாறெல்லாம் உருவம் கொண்டு முன் நின்று அருள் செய்கிறான், அவன் அருளை கண்ணுகக் கண்ட பெரியோர்கள் தாம் கண்ட காட்சியை ஏனையோர்க்கு எடுத்துச் சொன்னார்கள்; அவர்களுடைய அநுபவத்தை ஆதாரமாகக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவங்களும் அவற்றை வைத்து வழிபடும் கோயில்களும் உண்டாயின. அவை எழுந்தாலும் கடவுளை முற்றக் கண்டவர் யாரும் இல்லை. கடலில் ஒரு துறையில் மூழ்கினவர், “கடலில் ஆடினேன்’ என்று சொல்லிப் பெருமைப் படலாம். ஆனால் கடல் முழுவதையும் கண்டு, அவ்வளவிலும் மூழ்கினேன் என்று சொல்ல இயலாது. கடவுளின் திருக்கோலங்களைக் கண்டு வழிபட்டு அருள் பெற்றலும் அப்பெருமானை முற்றும் உணர்ந்தோம் என்று சொல்பவர் இல்லை.

      மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
      மயானத்தான் வார்சடையான் என்ப தல்லால்
      ஒப்புடையன் அல்லன்; ஒருவன் அல்லன்
      ஓர்ஊரன் அல்லன்; ஓர்உவமன் இல்லி;
      அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்
      அவன் அருளே கண்ணாற்கக் காணின் அல்லால்
      இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
      இவன்இறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

      என்னும் அப்பர் அருள்மொழி இங்கே நினைப்பதற்கு உரியது.

      ஆகவே, சிவபெருமானுடைய திருக்கோலத்தைப் பலபடியாகக் காட்டும் பெருந்தேவனார் இடையிலே ஓர் உண்மையை நினைப்பூட்டுகிறார். அவனுடைய வரலாறு யாராலும் அறிய ஒண்ணாதது என்று சொல்கிறார், அவன் எப்பொழுது உண்டானான், யாரால் வளர்க்கப் பெற்றான், அவனுக்கு ஆதி உண்டா?-இத்தகைய வினாக்களுக்கு விடையே இல்லை, அந்த வரலாறு மிக மிகப் பழமை யானது. தொல் முறை மரபு அது. திருவாசகத்தின் முதற் பகுதிக்குச் சிவபுராணம் என்பது பெயர். அதற்குப் பெரியோர்கள், “சிவனது அநாதி முறைமையான பழமை” என்று பொருள் எழுதியிருக்கிறார்கள். அந்த அநாதி முறைமையான பழமையையே பெருந்தேவனார் தொன்முறை மரபு என்று சொல்கிறார், அந்த மரபை யாரும் அறிந்திலர்.

      அமுதத்தை உண்டு நெடுங்காலம் வாழ்பவர்கள் தேவர்கள். அவர்கள் நெடுங்காலம் மூப்பை அடையாமல் வாழ்பவர்கள்; மூவாஅமரர். ‘மனிதர்களுக்குத் தெரியாத பலவற்றை அவர்கள் அறிவார்கள். இறைவன் மகாதேவன் ஆயிற்றே; ஒருகால் அவனை இந்தத் தேவர்கள் அறிந்திருக்கலாமே என்று எண்ணி அவர்களைக் கேட்டால், “எங்களுக்குச் சிவபிரானுடைய தொன்முறை மரபு தெரியாது” என்றே சொல்வார்கள்,

      புலன்களை அடக்கித் தவம் புரிந்து வாழும் முனிவர்கள், தேவர்கள் அறியாத ஞானம் பெற்றவர்கள் இறைவனை அறிந்து அவனுடைய அருள் பெற்றவர்கள். அவர்களைக் கேட்டால், “நாங்கள் அறிந்தது எவ்வளவு இறைவனை யாரால் அறிய முடியும்?” என்றே அவர்களும் சொல்வார்கள். இறைவன் அருளைப் பெருதவர்கள் சிறிதும் தடையின்றிப் போலியாக அவனை அறிந்து விடோமென்று கூறுவார்களேயன்றி, உண்மையில் இறைவன் அருளைப் பெற்றவர்கள், ‘இன்னும் அறிந்திலேம்” என்றே சொல்வார்கள்.

      இன்னும் யாரைக் கேட்கலாம்? சிவபெருமானோடு இருந்து அணுக்கத் தொண்டர்களாக வாழும் சிலரைப் பற்றிப் புராணங்கள் சொல்கின்றனவே, அவர்களைக் கேட்கலாமா? அவர்களிடம், “இறைவனுடைய தொன் முறை மரபு என்ன?” என்று கேட்டால் அவர்களும் ”ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை” என்றே கூறுவார்கள்.

      இப்படி யாரைக் கேட்டாலும், “எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது” என்று சொல்லும்படி அமைந்தது இறைவனுடைய வரலாறு; அது யாரும் அறியாத அநாதியான தொன்மையான முறையை உடையது.

      மூவா அமரரும் முனிவரும் பிறரும்
      யாவரும் அறியாத் தொன்முறை மரபின்

      [ மூப்பை அடையாத தேவர்களும் புலனை அடக்கித் தவம் புரியும் முனிவர்களும் மற்றவர்களும் யாவரும் அறிய இயலாத அநாதி முறையான பழைய வரலாற்றை யும் உடைய (சிவன் என்று சொல்ல வருகிறார். )
      மூவா-மூத்தல் இல்லாத; மூ என்பது இந்தச் சொல்லின் பகுதி. தொன்முறை மரபு-பழைய முறையான வரலாறு.]

      சிவபிரான் தன் இடையில் பட்டும் பொன்னாடையும் அணியவில்லை. புவித்தோலை உடுத்திருக்கிறான். புலியின் தோலில் வரிவரியாகக் கோடுகள் இருக்கும். தாருக வனத்து முனிவர் விடுத்த புலியைக் கொன்று அதன் தோலை உடுத்தான் என்று புராணம் கூறும். புலி கொடுமைக்கும் சினத்துக்கும் அடையாளம். சினத்தை அழிக்கும் தன்மை உடையவன் இறைவன் என்ற கருத்து. அவன் புலித்தோலை உடுத்தவன் என்பதனால் வெளியாவதென்றும் கொள்ளலாம்.

      வரிகிளர் வயமான் உரிவை தைஇய.

      (கோடு விளங்குகின்ற புலியினுடைய தோலை அணிந்த.

      வரி-கோடு, கிளர்தல்-மிக்குத் தோன்றல். வய-வலி. மான் என்பது விலங்குப் பொதுப் பெயர். வயமான என்பது மிக்க வலிமையை உடைய சிங்கம், புலி, யானை ஆகியவற்றுக்கு வரும். இங்கே “வரிகிளர்’ என்று அடை கொடுத்தமையால், புலிக்கு ஆயிற்று. உரிவை-தோல், தைஇய- அணிந்த, தைஇய அந்தணன் என்று அடுத்த அடியில் வரும் சொல்லோடு முடியும்.]

      வயமான் உரிவையை அணிந்த பெருமானுக்குச் சாம வேதத்தில் விருப்பம் அதிகம். நான்கு வேதங்களில் சாம வேதம் துதியாக அமைந்தது; இசையோடு பாடுவதற் குரியது. இராவணன் சாமகானம் பாடி இறைவனுடைய சினத்தை ஆற்றினான். அந்தச் சாம வேதத்தைப் பிறர் சொல்லக் கேட்பதோடு இறைவன்தானே எப்போதும் பாடிக் கொண்டும் இருக்கிறானாம். அறிந்து பாடுவார் பாட- அறியாதவர்களும் இப்படி ஒன்று இருப்பதை உணரட்டும் என்று அவன் பாடுகிறான். சாமவேத கானம் என்றும் அறாத மிடறு அப்பெருமானுடைய மிடறு. அந்த இசை மிக இனியது. யாழைப் போல இன்னிசை இசைக்கும் தன்மையை உடைய மிடறு இறைவனது கண்டம். அது நீல கண்டம்; நஞ்சை உண்டு கறுத்து நீல மணிபோல விளங்குவது; மணி மிடறு, காதிலே கேட்க இனிக்கும் இசையைப் பாடும் யாழைப் போன்றது; கண்ணிலே காண இனிக்கும் மணியைப் போன்றது. யாழின் தன்மையை உடைய மணி போன்ற மிடறு ஆதலால் “யாழ் கெழு மணி மிடறு” என்று புலவர் அதைப் பாராட்டுகிறார்,

      செவ்வானைப் போன்ற மேனியையும் பிறையைப் போன்ற எயிற்றையும் நெருப்பைப் போன்ற சடையை யும் திங்களொடு சுடரும் சென்னியையும் யாரும் அறியாததொன் முறை மரபினையும் உடையவனும், புலியுரிவையை அணிந்தவனும், யாழ்த் தன்மையை படைய மணி போன்ற மிடற்றை உடையவனுமாகிய சிவ பிரானை அந்தணன் என்று பெருந்தேவனார் சொல்கிறார், ’அறவாழி அந்தணன்’ என்று கடவுளைத் திருவள்ளு வர் கூறினார். அந்தணர் என்ற சொல்லுக்கு அழகிய தட்பத்தை உடையார் என்று பொருள் விரிப்பர் பரிமேலழகர். தட்டம் என்றது அருளை. தன்பால் சிறிதளவு அன்பு செய்தாலும் அவர் செய்த பழைய குற்றங்களை மறந்து அருள் செய்தலால் தட்பத்தைப் பின்னும் சிறப்பித்து அந்தண்மையாக்கி அந்தணன் என்றார். ’அளி வந்த அந்தணனை’ என்பது திருவாசகம்,

      அந்தணன் என்பதற்கு முனிவன் என்றும் ஒரு பொருள் உண்டு. தவக்கோலத்துக்குரிய ஆடையணிகளை உடைமையால் சிவபெருமான ”அருந்தவத்தோன்” என்று புறநானூற்றின் கடவுள் வணக்கத்தில் பெருந்தேவனார் கூறினார். ஆதலினால் இங்கே அந்தணன் என்பதற்கு, தவஞ் செய்யும் முனிவனுடைய திருக்கோலத்தை உடையவன் என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும்.

      கடவுளரில் சிவபெருமான் அந்தணன் என்றும் ஏனைய கடவுளர் அரசன், வணிகன், வேளாளன் என்ற மரபோ டொக்க நிற்பவரென்றும் கூறுவாரும் இருக்கின்றனர். அவர் கொள்கையின்படி சிவபெருமான் நால்வகைப் பிரிவில் முதலில் நிற்கும் அந்தணன் என்று பொருள் கூறுவதும் உண்டு.

      யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்.

      [ எப்போதும் சாமவேதத்தை இசைத்தலால் யாழின் தன்மை பொருந்திய நீலமணி போன்ற திருக்கழுத்தை யுடைய, அழகிய அருளை உடைய சிவபிரானுடைய (தாள் என்று சொல்ல வருகிறார்)

      யாழ்-யாழின் தன்மை, கெழு-பொருந்திய, மணி-நீல மணி. மிடறு-கழுத்து. யாழ்கெழு மணிமிடறு என்பதற்கு ‘சாமவேதம் பாடின மணிபோலும் நிறத்தையுடைய மிடறு’ என்று பொருள் உரைத்தார் பழைய உரையாசிரியர். ]

      இறைவனுடைய தாள் நிழலிலிருந்து எல்லா உலகங்களும் உண்டாயின என்று ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தில் பெருந்தேவனார் பாடியிருக்கிறார்,

      நீல மேனி வாலிழை பாகத்து
      ஒருவன் இருதாள் நிழற்கீழ்
      மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

      என்பது அந்தப்பாட்டு. அவ்வாறு தோன்றிய உயிர்க் கூட்டங்கள் எங்கே வாழ்கின்றன? எங்கே தம் செயலைச் செய்து தங்குகின்றன? இந்தக் கேள்விகளுக்கு இங்கே விடை கூறுகிறார், கடலிலே பிறந்த மீன்கள் வேறு இடத்திலே வாழ்வதில்லை, நீரிலே தோன்றி அந்த நீரிலேயே வாழ்கின்றன, அவ்வாறே எந்தத் திருவடி நிழலிலிருந்து உயிர்க் கூட்டங்கள் தோற்றினவோ அங்கே தான் தங்கள் தங்கள் வாழ்க்கையில் ஈடுபட்டுத் தங்குகின்றன. இறைவனே எல்லாவற்றிற்கும் மூலமாகி நிற்பவன். அவனே எல்லாவற்றையும் தன் அருள் நிழற் கீழ் வைத்துப் பாதுகாப்பவன். பட்சிகள் தம் குஞ்சுகளைத் தம் சிறகுக்குள் அடக்கிப் பாதுகாப்பதுபோல இறைவன் தன் தாள் நிழலில் உலகங்களையெல்லாம் தங்கச் செய்து பாதுகாக்கிறான், மரம் வைத்தவன் தண்ணிர் ஊற்றிக் காப்பாற்றுவதுபோல, தன் தாளிலிருந்து புறப்படவிட்ட உலகங்களை அதன் நிழற் கீழ் வைத்து வேண்டியவற்றை அருள் செய்து வாழச் செய்கிறான். அவனுடைய அருளாட்சியின் கீழ் உலகம் தங்குகின்றது. அவன் தாள் நிழலின் கீழே உலகம் தங்கி நிற்கிறது.

      தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே.

      [ அந்தணனுடைய கேடு இல்லாத திருவடி நிழலின் கீழே உலகு தங்கியது.

      தா-கேடு. தாள் நிழல் என்றது இறைவனுடைய அருளாட்சிக்கு அறிகுறியாக நின்றது. ‘அரசனுடைய குடை நிழலில் குடிமக்கள் வாழ்கிறார்கள்’ என்பதுபோல நிற்பது இது. தவிர்ந்தன்று – தங்கியது. ஆல்; அசை. உலகு – உயிர்க்கூட்டம். “ஆதலால் இவ்வுலகிற்கு இடையூறு இல்லை” என்று கருத்துரைப்பர் பழைய உரையாசிரியர்.]

      இந்தப் பாடலில், இறைவன் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபினை உடையவனாக இருப்பினும், அவன் அருளே கண்ணாகக் கண்ட பெரியோர்களுக்கு அவன் உருவுடையவனாகி எழுந்தருளுவான் என்பதும், அவ்வாறு எழுந்தருள்வது உருவத்தையே பற்றுக் கோடாகப்பற்றி நினைக்கும் மனத்தை உடைய ஆருயிர்களுக்கு அருள் செய்யும் நிமித்தம் என்பதும் குறிப்பாகப் புலப்பட்டன. அவன் திருவுருவச் சிறப்பைச் சொல்லும் வாயிலாக அவள் திருமுடியையும் அதில் உள்ள கண்ணி சடை பிறை ஆகியவற்றையும், அவன் திருநுதலையும் அதில் ஒளிரும் இமையா நாட்டத்தையும், திருக்கழுத்தையும் அதில் உள்ள நஞ்சையும் அதில் எப்போதும் இசைக்கும் சாம கீதத்தையும், அவன் புன்முறுவலையும், அவன் திருமார்பையும் அதன்கண் உள்ள தாரையும் பூணூலையும், அவன் அணிந்த புலித்தோலாடையையும், அவன் திருக்கரங்களையும் அவற்றில் உள்ள கணிச்சி மழு சூலம் என்பவற்றையும், மாதிருக்கும் பாதி யையும், இடப வாகனத்தையும் எடுத்துச் சொல்கிறார் புலவர். இத்தகைய அந்தணனது திருவடி நிழலின் கீழே உலகத்து உயிர்கள் யாவும் தங்கள் வாழ்க்கையை நடத்தித் தங்குகின்றன என்று முடிக்கிறார்.

      நாம் தங்கி வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. அது ஒரு தெருவில் இருக்கிறது. அந்தத் தெரு ஓர் ஊரில் இருக்கிறது. நாம் அந்த வீட்டில் இருக்கிறோம்; அந்தத் தெரு வில் இருக்கிறோம்; அந்த ஊரில் இருக்கிறோம் இன்னும் மேலே விரித்துக்கொண்டே போனல் தாலுகா, ஜில்லா, ராஜ்யம், நாடு, கண்டம், உலகம் என்று விரியும். அதற்கு அப்பால் புவனம், அண்டம் என்பன விரியும். இத்தனைக்கும் மேலாக இத்தனை விரிவான பகுதிகளையெல்லாம் தனக்குள் அடக்கி வைத்திருப்பது இறைவன் திருவடி. ஆதலின் எந்தப்புவனத்தில் வாழ்ந்தாலும் இறைவன் திருவடி நிழலுக்குப் புறம்பாக இருக்க முடியாது. இதன் உணர்ந்தே, “உலகம் யாவும் அவன் தாள் நிழலில் தங்கி யிருக்கின்றன” என்றார்,

      கார்வினி கொன்றைப் பொன்நேர் புதுமலர்த்
      தாரன், மாலையன், மலைந்த கண்ணியன்;
      மார்பி னஃதே மையில் நுண்ஞாண்;
      நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்
      கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் 5
      வேலும் உண்டுஅத் தோலா தோற்கே;
      ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே,
      செவ்வான் அன்ன மேனி, அவ்வான்
      இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று,
      எரி அகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை 10
      முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
      மூவா அமரரும் முனிவரும் பிறரும்
      யாவரும் அறியாத் தொன்முறை மரபின்,
      வரிகிளர் வயமான் உரிவை தைஇய
      யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் 15
      தாவில் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே.

      [ இறைவன் கொன்றைத் தாரையுடையவன், மாலையை உடையவன், கண்ணியை உடையவன்; அவன் மார்பிலே உள்ளது நுண்ஞாண்; நுதலிலே உள்ளது நாட்டம், கையிலே இருப்பது கணிச்சியொடு மழு; அத்தோலா தோனுக்கு மூவாய் வேலும் உண்டு; அவன் ஊர்ந்தது ஏறு; அவனைச் சேர்ந்தோள் உமை; செவ்வான் அன்ன மேனியையும் வையெயிற் றெயும் புரிசடையையும் சென்னி யையும் தொன்முறை மரபையும் உடைய, உரிவை தைஇய, மணிமிடற்றையுடைய அந்தணனுடைய தாள் நிழலில் உலகு தங்கியது. இவ்வாறு கூட்டிப் பொருள் செய்யவேண்டும். ]

      கொன்றைத்தாரன், கொன்றை மாலையன், கொன்றைக் கண்ணியன், நுண்ஞாண் மார்பன், கண்ணுதல், கணிச்சியங்கரத்தான், மழுவாட் படையோன், சூலபாணி, விடையூர்பெருமான், உமாபாகன், செக்கர் மேனியன், வாலெயிற்றோன், புரிசடையோன், மதிமுடித்தோன், அநாதி, அறிவரியான், அமரர்க்கரியான், புலியுரியாடையன், சாமகீதன், நீலகண்டன், அந்தணன், உலகுடைய கழலான் என்ற திருநாமங்களால் பெறப்படும் இயல்புகளை யெல்லாம் இந்தப்பாடல் சுட்டிக் காட்டுகின்றது.

      இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

      மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

      சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

      இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *