
இன்ப மாலை
கி. வா. ஜகந்நாதன்
3. காரும் தேரும்
கார் காலம் வந்தது.
வருவார் வருவார் என்று தம்மைப் பிரிந்துசென்ற காதலரை நினைந்து தம் இல்லிலே இருந்து கடமையாற் றும் காதலிமாரின் அகத்திலே உவகையும் முகத்திலே முறுவலும் தழைக்கக் கார்காலம் வந்தது.
காதலர் தம் காதலியரைப் பிரிந்து செல்லுவதற்குக் காரணமான செயல்களை நிறைவேற்றிவிட்டுத் தம் காதலியரைக் காணும் அவாவோடு மீள்வதற்கு உரிய காலம் அது.
வெம்மை நிறைந்த காலத்தில் வெம்மையான நிலத்தைக் கடந்து வெம்மையான வறுமையையும் பகையையும் போக்க எண்ணித் தலைவியருடைய உள்ளம் வெதும்பத் தம் உள்ளமும் வெம்மை பெறப் பிரிந்து சென்றவர்கள் மழையால் நிலம் குளிர்ந்து வளம்பெறக் காடு கவின் பெறத் தம் முயற்சி நிறைவு பெற வீடு நலம்பெற மீண்டு வரும் காலம் அது.
கார்காலம் எங்கும் அழகைச் செய்திருக்கிறது. காடு முழுவதும் கண்கொள்ளாக் காட்சி. ஆவி இடி மின்னல் ஆகியவையெல்லாம் சேர்ந்து தொகுதியாகவுள்ள மேகங்கள் நன்றாக மழை பெய்தன. வேகமாகத் தாரைகளைப் பொழிந்தன. அதனால் நாடெங்கும் இருந்த வெப்பம் தீர்ந்தது. நீரில்லாமல் தவித்த இடங்களெல்லாம் இப்போது பொலிவு பெற்றன. அந்தப் புலம்பு (வருத்தம்) முதுகுகாட்டி ஓடியே போய்விட்டது. அது புறங்கொடுத்துப் போய்விட்டதென்றால் ஞாலம் முழுவதும் மலர்ச்சி அடையத் தடை என்ன? மலர்ந்த ஞாலத்தில் புலம்பானது புறங் கொடுப்பக் கருவி வானம் (தொகுதியாகிய மேகம்) கதழ்கின்ற (விரைகின்ற) பெரிய உறைகளை (துளிகளை)ச் சிதறக் கார் காலமானது கவின் பெற்ற கானத்தை உண் டாக்கியிருக்கிறது.
கானத்தின் கவினைச் சிறிது பார்க்கலாமா?
அதோ முல்லைக் கொடி. கானமும் அதைச் சார்ந்த நிலமும் முல்லைத் திணையின் பாற்படும். அந்தத் திணைக்குப் பெயர் வந்ததே முல்லையினால்தான். அந்த முல்லை நன்றாக வளம் பெற்றால்தானே முல்லை நிலம் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்? முல்லை நிலத்துக்கு வாய்ப்பான பருவம் கார் காலம். அந்தக் காலத்தில் அந்நிலம் தன் முழு அழகோடு பொலிந்து விளங்கும்.
இப்போது கவின் பெற்ற காணத்தில் முல்லை அரும்பு விட்டிருக்கிறது, செடி முழுவதும் முல்லை அரும்பு கூர் கூராகத் தலை நீட்டிக்கொண்டிருக்கிறது. அதன் கூரிய நுனி விளக்கமாகத் தோன்றுகிறது. இனி மலர்ந்து காடு முழுவதும் முல்லை மணம் கமழப்போகிறது.
கார் காலத்திலே மலரும் வேறு மரங்களும் இங்கே இருக்கின்றன. தேற்றா மரத்தின் மலர்களும் மலர்கின்றன; மெல்லிய அரும்புகள் அவிழ்ந்து மலர்ந்து மணக்கின்றன. தேற்றாவுக்கு இல்லம் என்று ஒரு பெயர் உண்டு. பச்சைக் காம்பையுடைய கொன்றை மலர்களும் மென்பிணி (மெல்லிய அரும்புக் கட்டு) அவிழ்கின்றன. மணமும் நிறமும் வளமும் மென்மையும் உடைய மலர் செறிந்த காட்டுக்கு இப்போது உண்டான அருகே தனிச் சிறப்பு டையது. முல்லையும் தேற்றா மரமும் கொன்றையும் முன்பே இங்கே வளர்ந்திருந்தாலும், இப்போதுதான் அவை அழகாகப் பூத்துக் குலுங்குகின்றன. செறிந்த தழையும் மலர்ந்த மலரும் நிர்ம்புவதற்குக் காரணம் கார் காலந்தான். ஆகவே இந்த அழகை அந்தக் கார் காலந் தான் உண்டாகிக்கியது என்று சொல்லுவது பிழை
யாகுமா?
காட்டிலே வாழும் விலங்குகள் பல. முல்லை நில வாசிகளாகிய விலங்குகளில் மான்களும் சேரும். கார் காலம் வந்துவிட்டால் வீட்டிலுள்ள மானனைய மகளிருக்கு மகிழ்ச்சி உண்டாகிறதோ இல்லையோ, காட்டிலுள்ள மான்களுக்கு உண்டாகும் களிப்புக்கு எல்லையில்லை. மழை பெய்தமையால் நிலப் பரப்பு முழுவதும் புல் நன்றாக முளைத்து வளரும். சலசலவென்று நீர் ஓடும். நல்ல பசிய புல்லை உண்டு தெள்ளிய நீரைப் பருகுவதுதான் மான்களுக்கு விருந்துண்ட மகிழ்ச்சியைத் தரும். மற்றப் பருவங்களில் ஏதோ கிடைத்ததை உண்டு வாழும்; கார் காலத்திலோ பச்சைப் பசேலென்று வளர்ந்த அருகம் புல்லைக் கறித்து உண்பதும், ஓடும் தண்ணிரைப் பருகுவதும், ஆண் மானும் பெண் மானும் கூடி விளையாடுவதுமாக அவற்றின் வாழ்க்கையிலே திருவிழாக் காலம் வந்ததுபோல இருக்கும்.
தண்ணீர் அரித்துக்கொண்டு ஓடுவதனால் அங்கங்கே பள்ளங்களில் பருக்கைக் கற்கள் இருக்கும். அத்தப் பரல்களையுடைய பள்ளத்திலெல்லாம் மான்கள் துள்ளி ஒடும். கவலையின்றிப் புல்லும் நீரும் உண்ணக் கிடைத்துவிட் டால் அந்தப் பேதை மான்களுக்கு வேறு என்ன வேண்டும்? ஆடை வேண்டுமா? அணி வேண்டுமா? வீடு வேண்டுமா? வித்தை வேண்டுமா? எளிதிலே மனம் நிறைவு பெறும் குழந்தைகளைப்போல அவை களித்துக் கலந்து குலாவிக் குதித்து ஓடுகின்றன.
அவற்றின் உடம்புகள் மென்மையாகப் பட்டுப்போல இருக்கின்றன. ஆனால் அந்த மென்மையான விலங்குகளுக்கு இறைவன் மிகவும் வன்மையான பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறான்; ஆண் மான்களுக்குப் பெரிய கொம்புகளைக் கொடுத்திருக்கிறான். அவை மிகவும் வலிமையுடையவை. அவற்றின் பலத்துக்கு இரும்பை உவமையாகச் சொல்லலாம். அது மாத்திரமல்ல; இரும்புக் கம்பியை முறுக்கினால் எப்படி இருக்குமோ, அப்படி அந்தக் கொம்புகள் தோன்றுகின்றன. தோற்றத்தாலும் வன்மையினாலும் இரும்புபோல உள்ள பெரிய கரிய மருப்புக்களை உடைய இரலைகள் கார் காலத்தில் காணத்தில் பரலையுடைய பள்ளங்களிலெல்லாம் துள்ளி விளையாடு கின்றன.
கார்காலம் மலர்க் கொடிக்கும் மரத்துக்கும் ஊட்டந் தந்து, மானினத்துக்கும் உவகையைத் தந்திருக்கிறது. மழையைப் பொழிந்து அதனாலே காட்டில் அழகைப் பொழிந்திருக்கிறது.
முல்லை வைந்நூனை தோன்ற, இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ,
இரும்புதிரித் தன்னமாயிரு மருப்பின் –
பரல் அவல் அடைய-இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்புபுறங் கொடுப்ப,
கருவி வானம் கதழ்உறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்.
இந்தக் கார் காலத்தை எதிர்நோக்கி யிருந்தாள் ஒரு காதலி. இல்வாழ்விற்கு வேண்டிய பொருளை ஈட்டும் பொருட்டு அவளுடைய காதலன் வேறு ஊருக்குச் சென்றான். “கார் காலத்தில் வந்துவிடுவேன்” என்று உறுதி மொழிகூறி அகன்றான். காதலி இல்லற வாழ்வில் செய்தற்குரிய கடமைகளை நன்கு நிறைவேற்றுகிறவள். அறத்திற்கும் இன்பத்திற்கும் பொருள் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்தவள். தன் காதலனைச் சிலகாலம் பிரிந்திருக்க நேர்ந்தாலும், அந்தப் பிரிவு பின்னால் மிகுதியான பயனைத் தருவதற்கு ஏதுவாக இருப்பதைத் தெளிந்து அவன் செல்வதைத் தடுக்கவில்லை. தனக்கும் பிரிவினால் துன்பம் உண்டானாலும் அறத்தைக் கருதிப் பொறுத்திருக்க வேண்டும் என்று எண்ணினாள்,
அவன் பிரிந்து சென்ற பிறகுதான் பிரிவின் துன்பம் அவளுக்கு அநுபவத்தில் தெரிய வந்தது. ஆயினும் கடமையை உணர்ந்து அதை வெளிப்படுத்தாமல் பொறுத்து ஆற்றிக்கொண்டிருந்தாள். கற்புடைய மகளிர் இவ்வாறு தம் கணவர் பிரிந்த காலத்தில் கடமையுணர்ச்சியோடு வீட்டிலே இருந்து வாழ்வதுவே முல்லை நிலத்துக்குரிய நிகழ்ச்சி. அதை முல்லைத் திணையின் உரிப்பொருள் என்று புலவர்கள் சொல்வார்கள்.
இங்கே காதலி தன் துயரை வெளிக்காட்டாமல் இருந்தாலும் அவளுடன் நெருங்கிப் பழகும் ஆருயிர்த் தோாழிக்கு உண்மை தெரியும். தலைவன் தான் கூறிய உறுதிமொழிப்படியே கார் காலத்தில் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே கார் காலத்தை அவர்கள் எதிர்நோக்கி யிருந்தார்கள்.
கார் காலம் வந்துவிட்டது. முன்னே சொன்னபடி கவின் பெற்ற கானத்தை உண்டாக்கும் கார்ப்பருவம் வானம் மழை பொழியவும் ஞாலம் வெப்பத்துக்கு விடை கொடுக்கவும் வந்துவிட்டது. அதைக் கண்டாள் தோழி. அவர்கள் வாழும் ஊர் முல்லை நிலத்து ஊர். ஆகவே கவின் இழந்து வாடிய கானம் இப்போது கவின் பெற்றதைக் கண்ட தோழிக்கு, “இனித் தலைவர் வந்துவிடுவார்” என்ற மகிழ்ச்சி உண்டாயிற்று.
அதோடு தலைவன் வந்துகொண்டிருக்கிறான் என்ற செய்தியும் அவளுக்குக் கிடைத்தது. இனி அவள் சும்மா இருப்பாளா? தன் தலைவியிடம் ஓடினாள்.
“அவர் வந்துவிட்டார்” என்று குதித்துக் கொண்டே சொன்னாள்.
“எங்கே வந்து விட்டார்?” என்று கேட்டாள் தலைவி.
“இதோ வந்துகொண்டே இருக்கிறார்” என்று தோழி கூறினாள்.
“எப்படி உனக்குத் தெரியும்?”
“கார் காலம் வந்துவிட்டது.”
“அதை யார் சொன்னார்கள்?
“இதோ கவின் பெற்ற காணம் சொல்கிறதே!
தலைவி : அவர் வருகிறார் என்றால் தேரில் அல்லவா வர வேண்டும்?
தோழி: ஆம், தேரில் தான் வருகிறார், இல்லையென்று யார் சொன்னார்கள்?
தலைவி : தேரில் வந்தால் மணியோசை நெடுந் தூரம் கேட்குமே! அதுவும் அவர் தேரின் மணி ஒலி எனக்கு நன்றாகத் தெரியுமே ஒன்றும் கேட்கவில்லையே!
தோழி: மணியின் ஒசை கேட்காதபடி அவர் செய்து விட்டார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும்; நாம் தலைவனிடம் போவோம்.
பொருள் ஈட்டும் பொருட்டுச் சென்ற அவன் குறித்த காலத்துக்குள் போதிய பொருளை ஈட்டினான். பொருளை மாத்திரம் எண்ணியவனாக இருந்தால் அவன் மேலும் மேலும் பொருளைத் தேடிக் கொண்டே இருப்பான். பொருளாசைக்குத்தான் எல்லை” என்பது இல்லையே! அவனோ அறத்தையும் இன்பத்தையும் மறவாதவன். பொருளைக் கருவியாகக் கொண்டு அறல் செய்யவும் இன்பம் நுகரவும் எண்ணியவன். ஆகவே அவனுக்கு ஒரளவு பொருள் கிடைத்தவுடன் போதும் என்ற மன நிறைவு உண்டாயிற்று. தன் பிரிவால் தன் காதலி துன்புறு வாளாதலின் அந்தப் பிரிவை எத்தனைக்கு எத்தனை குறுக்கிக் கொள்ளலாமோ அத்தனைக்கு அத்தனை நல்லது என்பதை அவன் உணர்ந்தவன். ஆகவே பொருள் போதிய அளவு கிடைத்தவுடன் தன் ஊருக்கு மீள எண்ணினான்.
அவனுடைய உள்ளத்தில் அவன் காதலி எப்போதும் இடம் கொண்டிருந்தாள். அவளுடைய அழகையெல்லாம் ஓய்வு நேரங்களில் எண்ணி எண்ணி இன்புறுவான்.
அவள் தன் கையிலே அழகான வளைகளை அணிந்திருந்தாள். வளைச் செட்டி வந்தால் எதையோ எடுத்தோம், போட்டுக் கொண்டோம் என்று இருக்க மாட்டாள். நன்றாக ஆராய்ந்து பொறுக்கி எடுத்து அணிந்து கொள்வாள். அவள் உடம்பு முழுவதும் இயற்கையாகவே கம்மென்று ஒருவகை நறுமணம் கமழும். அதற்கு உவமையாக எதை சொல்வது? உவமை இல்லாதது அந்த நறுமணம். ஆனாலும் எதையாவது உவமை சொல்லிப் பார்க்கலாமே என்ற விருப்பம் உண்டாயிற்று.
ஒருநாள் அவன் உறையூருக்குப் போயிருந்தான். தன் காதலியையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். அங்கே பங்குனி உத்தரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். சோழனுடைய தலைநகரம் ஆதலின் விழாவின் சிறப்புக்குச் சொல்ல வேண்டுமா? பல ஊர்களிலிருந்து ஆயிரக் கணக்கான மக்கள் அங்கே அந்த விழாவைப் பார்க்க வருவார்கள். முரசு முழக்கமும், இன்னி சைக் கருவிகளின் ஒவியும், மக்களுடைய ஆரவாரமும் எங்கும் நிறைந்திருக்கும்.
அந்த விழாவுக்குச் சென்ற தலைவன் சுற்றுப் புறத்தில் உள்ள இடங்களையும் போய்ப் பார்த்து இன்புற்றான், உறந்தைக்குக் கிழக்கே உயர்ந்த பெரிய குன்றம் இருக் கிறது. இப்போது திருச்சிராப்பள்ளிக் குன்றமென்று வழங்குவதுதான் அது, அக்காலத்தில் அந்தக் குன்றத்தில் இயற்கை இளம் நன்றாக அமைந்திருத்தது. அந்தக் குன்றத்துக்குச் சென்று அதன் அழகைப் பார்த்தான். அவனுடைய காதலியும் உடன் வந்திருந்தாள். அங்கே எங்கே பார்த்தாலும் காந்தள் மலர் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தது. மலைப் பாங்கில் வளர்வது அது. அதைப் பார்த்தான். சில மலர்களைப் பறித்துக் கையில் வைத்து மோந்து பார்த்தான். அப்போதுதான் தன் காதலியின் திருமேனிக்கு அதை ஒருவாறு உவமையாகச் சொல்லலாம் என்று அறிந்து கொண்டான்.
அவளிடமே அதைச் சொன்னான்; அவள் நாண முற்றுத் தலை கவிழ்ந்தாள். அன்று முதல் அவன் அந்தக் கறங்குகின்ற (ஒலிக்கின்ற) இசை நிரம்பிய விழாவை யுடைய உறந்தையை மறக்கவில்லை; அதற்குக் குண (கிழக்கு) திசையில் உள்ள நெடும்பெருங் குன்றத்தையும் அதில் அடர்த்து பூத்திருந்த காந்தளின் போது அவிழ்ந்த அலரையும் மறக்கவில்லை; அந்த மலரின் மணத்தை வீசும் ஆய் தொடியையுடைய அரிவையாகிய தன் காதவியின் அழகையும் பண்பையும் நினைந்து நினைந்து இன்புற லானான்.
தலைவியைப் புகழும்போது அவள் மேனியின் நறுமணத்துக்குக் காந்தளை உவமை கூறுவான். இதை எப்படியோ தலைவியின் தோழிகூட ஒருநாள் கேட்டு விட்டாள். ‘என்ன இப்படி, பக்கத்தில் மனிதர்கள் இருப்பதையே தெரிந்து கொள்ளாமல் நீங்கள் உங்கள் வருணனையை விரிக்கிறீர்களே’ என்று காதலி அவனை அப்போது பொய்க் கோபத்தோடு கடிந்து கொண்டாள்.
இப்போது அந்த நிகழ்ச்சிகளெல்லாம் தலைவனுடைய நினைவுக்கு வந்தன. தன் காதலியின் மாட்சிமைப்பட்ட அழகை நேரிலே சென்று நுகராமல் இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது என்று நிச்சயித்துக் கொண்டான்.
அவன் ஒரு தேர் வைத்திருந்தான்; அதை ஒட்டும் வலவனும் இருந்தான். அந்தச் சாரதி அவனுக்கு ஏவலாளன்; தோழன்; துணைவன். அவன் அழகான குதிரைகளை நன்றாகப் பாதுகாத்து வைத்திருந்தான். குதிரைகளின் பிடரி மயிரை யெல்லாம் ஒழுங்காகக் கத்தரித்து மட்டஞ் செய்தான். வர்ண மயிரமைந்த கவரியை அவற்றின் தலையில் அணிந்தான். அதற்குத் தலை யாட்ட மென்றும் உளை யென்றும் பெயர். அதை வைத்துவிட்டால் குதிரை போகும்பொழுது அழகாகத் தோன்றும். வாரெல்லாம் புதிதாகப் போட்டிருந்தான். அதன் நிறம் நரம்பைப் பார்த்தாற்போல இருந்தது.
“இன்று ஊருக்குப் புறப்பட வேண்டும். தேரை அலங்கரித்து ஆயத்தம் பண்ணுக’ என்று தலைவன் வலவனை ஏவினன். அவன் மிக விரைவில் ஆவனவற்றைச் செய்து விட்டான்.
“எத்தனை வேகமாகப் போகவேண்டும்?” என்று கேட்டான் சாரதி.
”குதிரை போகிற வேகத்தில் போகட்டும். அவற்றைத் துன்புறுத்த வேண்டாம். கடிவாள வாரை இறுக்கிப் பிடிக்க வேண்டாம். தளர விடு. யாழ் நரம்பைப்போல மெல்லப் பிடித்து விடு” என்றான்.
குதிரைகள் தாமே வேகமாகப் போகும்; ஆனாலும் தேர்வலவன் தன் தலைவன் பேச்சைக் கேட்டு வியந்தான், தன் காதலியைப் பார்க்கப்போகும் ஆர்வத்தில், “உன்னால் எவ்வளவு வேகத்தில் ஒட்ட முடியுமோ, அவ்வளவு வேகமாக ஒட்டு” என்று தலைவன் சொல்வான் என்று எதிர் பார்த்தான். தலைவன் உயிர்களிடத்தில் அன்புடையவன். அந்த இயல்பு என்றும் மாறுவதில்லை. காதலியைக் காணப் போகும் இந்த அவசரத்திலும் அவன் குதிரைகளைத் துன்புறுத்த விரும்பவில்லை.
”குதிரைகளின் கடிவாள வாரைத் தளரப் பிடி?” என்று சொன்னதைக் கேட்டு வியந்த வலவனுக்கு, அடுத்தபடி இன்னும் பெரு வியப்பை அளிக்கத் தக்க ஒரு செய்தியைத் தலைவன் சொன்னான்.
“தேரின் மணிகள் நாம் போகும்போது ஒலிக்கக் கூடாது” என்றான் தலைவன்.
”ஏன்? தேரின் வருகையை வழிப்போவருக்குத் தெரிவிக்கத்தானே மணிகள் கட்டியிருக்கின்றன?”
“அது உண்மைதான். ஆனால் மக்கள் நிரம்பிய நகரத்தில்தான் மணி வேண்டும். இப்போது நாம் காட்டு வழியாகப் போகப் போகிறோம். அங்கே மணியின் ஒலி வேண்டியதில்லை. ஆகையால் மணிகளின் நாக்கைக் கட்டி விடு”.
இதைக் கேட்ட வலவனுக்குத் தலைவன் கருத்து விளங்கவில்லை. நகரத்தில் மணிகள் அவசியம் என்பது விளங்கியது. காட்டில் வேண்டாம் என்பதற்குக் காரணம் என்ன? காட்டில் ஒலித்தால் என்ன குறைந்து விடும்? அவன் தன் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பினான்.
”காட்டில் மணிகள் ஒலித்தால் என்ன?” என்று தலைவனைக் கேட்டான்.
”இப்போது எங்கே பார்த்தாலும் மழை பெய்திருக்கிறது. கானத்தில் இந்த மழையினால் எங்கும் மரங்கள் பூத்துப் பொலியும். காட்டு வழியின் இருமருங்கும் பூத்த மரங்கள் நிற்பதை நாம் பார்த்து மகிழலாம், மலர்ந்த மலர்களில் தாதை ஊதித் தேனுண்ணும் வண்டுகள் இருக்கும், நம்மைப்போல வேண்டிய பொருளை ஈட்டுவதற்குப் பிரிந்து செல்லும் நிலை அவற்றுக்கு இல்லை. ஆண் வண்டும் பெண் வண்டும் சேர்ந்து சேர்ந்து இரட்டையாகத் தாதையும் தேனையும் உண்டு அந்த மலராகிய மெத்தென்ற படுக்கையிலே நெடுநேரம் தங்கியிருக்கும். என்ன, நான் சொல்கிறது தெரிகிறதா?” என்று தலைவன் சொல்லிச் சிறிது நிறுத்தினான்.
தலைவனுடைய உள்ளம் தன் துணைவியோடு ஒன்று படும் வேட்கையுடையதாக இருப்பதை அந்தப் பேச்சினுாடே வலவன் உணர்ந்து புன்னகை பூத்தான். “ஆம், தெரிகிறது. ஆனால்- ” என்று முடிப்பதற்குள் தலைவனே பேசலானான்.
”அச்சமின்றிச் சுதந்திரமாக இன்ப வாழ்வு நடத்தும் வண்டுகளின் அமைதி நமக்கு இருக்கிறதா? இல்லையே! பொருளுக்காக அன்புடையவர்களைப் பிரிந்து ஊர் கடந்து நாடு கடந்து வரவேண்டியிருக்கிறது. பிரிவின் வருத்தத்தை நன்கு உணர்ந்த நாம், அமைதியாக இருக்கும் வண்டினங்களின் இன்ப வாழ்க்கைக்கு உதவி ஏதும் செய்ய இயலாவிட்டாலும் கெடுதலாவது செய்யாமல் இருக்கலாமல்லவா? மணியோசையைக் கேட்டுப் பயந்து அவை மலரை விட்டுத் துணையைவிட்டுச் சிதறுண்டு போகாமல் இருப்பதற்காகத் தான் மணிகளின் நாவைக் கட்டச் சொன்னேன்.”
தலைவனுக்குள்ள ஜீவகாருண்யத்தின் சிறப்பை வலவன் தெரிந்துகொண்டு வியப்பே மயமானான். ஆனால் மறுபடியும் அவனுக்கு ஓர் ஐயம் தோன்றிற்று.
”நீங்கள் நினைப்பது சரிதான். வண்டினங்களின் இன்ப வாழ்வைக் குலைப்பது தவறு; பாவம். ஆனால் நம்முடைய தேரின் ஒசையும் குதிரைகள் ஓடும் ஓசையும் வண்டுகளைப் பேதுறச் செய்யாவா?” என்று வலவன் கேட்டான்.
“நல்ல கேள்வி நான் அதை நினைக்காமலா இருப்பேன்? காடு என்பது ஓசை ஒலிகளே இல்லாத தனி மோன ராஜ்யம் அல்லவே? அங்கே மரங்கள் காற்றால் அசைகின்ற ஒலியும், விலங்கினங்களின் முழக்கமும், பறவைகளின் ஓசையும், மான் முதலியவை ஓடும் சத்தமும் இருக்கின்றன. அந்த ஒலிகளினிடையேதான் வண்டுகள் தேனை நுகர்ந்து இன்புறுகின்றன. அவை காட்டு ராஜ்யத்துக்குரிய ஓசைகள் வண்டுகளுக்குப் பழக்கமான ஓசைகள்; அவற்றைக் கேட்டு அவை அஞ்சுவதில்லை. தேர் ஓடும் ஒலியும் குதிரையின் குளம் பொலியும் அந்த ஓசைகளைப் போலவே இருக்கும் ஆகையால் அவற்றைக் கேட்டும் வண்டுகள் அஞ்சா, ஓசையே இல்லாமல் இருக்கவேண்டும் என்பது என் நோக்கம் அன்று. வண்டுகளின் காதில், கணிரென்ற புதுவகையான ஓசை விழவேண்டாம் என்ற எண்ணத்தால்தான் மணியின் ஓசையை விலக்க நினைத்தேன். அந்த ஓசைதான் நெடுந்தூரம் சென்று கிண்னென இயம்பும். வண்டுகள் முன்பு கேளாத ஓசை அது. துணை யொடு வதிந்த தாது உண் பறவைகளாகிய அவற்றைப் பேதுறச் செய்யும். நான் பிரிந்து சிலகாலம் இருந்தவன்; இப்போது என் காதலியோடு சேரப் போகிறேன். இந்த நிலையில் தம் துணைகளோடு ஒன்றியிருக்கும் வண்டுகளைப் பிரிக்கும் செயலைச் செய்யலாமா?”
வலவன் தலைவனுடைய பேரன்பையும் நுண்ணறிவை யும் அறிந்து வாய்பேச இயலாமல் நின்றுவிட்டான். தலைவனுக்குத்தான் எத்தனை கூரிய அறிவு! இப்படியெல்லாம் நடக்கும், இதற்கு இப்படிப் பாதுகாப்புச் செய்யவேண்டும் என்று ஆராய்ந்து செய்கிறனே! உயிர்களிடத்தில் அவனுக்கு உள்ள அன்புதான் எவ்வளவு சிறந்தது! குதிரையை வருத்தக்கூடாது என்கிறான், வண்டுகளின் இன்பத்துக்கு இடையூறு செய்யக்கூடாது என்கிறான். அவனுடைய அருள் தன்மையை வலவன் வியந்தான். பிற உயிர்களின் இன்பத்தை எண்ணி வாழும் மகனுக்கு, வேண்டிய இன்பம் எளிதிலே கிடைக்கும் என்ற உண்மை நிச்சயமாகத் தலைவன் திறத்தில் பலிக்கும் என்ற உறுதி கொண்டான். உள்ளத்துக்குள் தலைவனையும் தலைவியையும் வாழ்த்தினான்.
தேர் புறப்பட்டுவிட்டது. வளைந்த உளையையும் (தலை யாட்டம்), கத்திரிகையினாலே கொய்த பிடரிமயிரையும் உடைய புரவிகளின் வாயிலே பூட்டிய கடிவாள வாரைத் தளரவிட்டுத் பிடித்தான் வலவன். மணிகளின் நாவைக் கட்டிவிட்டான்.
தேர் தலைவனுடைய ஊரை அணுகியது. அதைக் கண்டவர்கள் தலைவன் வரும் செய்தியைத் தோழிக்குச் சொன்னார்கள். அதைக் கேட்டே தோழி தலைவிக்குச் சொல்லலானாள்.
குதிரையின் வாரைப் பரிய (தளர) விட்டதையும் மணி நாவை ஆர்த்ததையும் தோழி சொன்னாள்.
”அழகான வேலைப்பாடுள்ள தேர்மீதில் அதோ வருகிறார் தலைவர்; இந்த முல்லை நிலத் தலைவராகிய குறும்பொறை நாடர் வருகிறார்; உன் ஆருயிர்க் காதலர் வருகிறார், இனி உன் பிரிவுத் துன்பம் ஒழியும். உன் மாட்சிமைப்பட்ட நலத்தை விரும்பி வந்துவிட்டார். அவர் தாம் முன்பெல்லாம் சொல்வாரே! சிராப்பள்ளிக் குன்றத்தில் வளர்ந்த காந்தளைப் போன்ற நறுமணம் உன் மேனியில் வீசுகிற தென்று. அந்த நறுமணமும் பிற நலங்களும் அவர் உள்ளத்திலே என்றும் இருக்கின்றன அல்லவா? அதனால் சொன்னபடியே கானத்தைக் கவின் பெறச் செய்த இந்தக் கார் காலத்தில் வத்துவிட்டார்.”
தோழி கூறி முடித்தாள்; வாயிலில் தேரும் வந்து நின்றது.
தோழி தலைவியிடம் கார்காலம் வந்ததையும் தலைவன் வந்ததையும் சொல்வதாக அமைந்தது பின்வரும் பாட்டு,
முல்லை
முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்புபுறம் கொடுப்பக் 5
கருவி வானம் கதழ்உறை சிதறிக்
கார்செய் தன்றே, கவின்பெறு கானம்;
குரங்குஉளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பு ஆர்த் தன்ன வாங்குவள் பரியப்,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும், குறும்பொறை நாடன்,
கறங்குஇகை விழவின் உறங்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட் 15
போதுஅவிழ் அலரி நாறும்
ஆய்தொடி அறிவை! நின் மாண்நலம் படர்ந்தே,
[ முல்லை யரும்பின் கூர்மையானமுனை தெளிவாகத் தெரியவும், தேற்றாவின் மொட்டோடு பசுமையான காம்பையுடைய கொன்றையின் மொட்டு மலரவும், இரும்புக் கம்பியை முறுக்கினதுபோன்ற கரிய பெரிய கொம்புகளையுடைய ஆண் மான்கள் பருக்கைக் கற்களையுடைய பள்ளம் முழுவதும் துள்ளவும், விளக்கம் பெற்ற உலகத்தில் வெப்பமாகிய வருத்தம் ஓடவும், தொகுதி யாகிய மேகங்கள் வேகமான துளிகளைச் சிதறும்படி செய்து கார்காலம் அழகு பெற்ற காட்டை உண்டாக்கியது; வளைந்த தலையாட்டத்தையும் கத்தரித்த பிடரி மயிரையும் இடைய குதிரைகளின் நரம்பைக் கட்டியது போன்ற தோற்றத்தையுடையதும், கையினலே இழுப்பதுமாகிய வார் தளர, மலர்ந்த மரங்களில் பெடை வண்டுகளோடு தங்கிய தாதை உண்ணும் ஆண் வண்டுகள் கலங்குவதற்கு அஞ்சி, மணிகளின் நாக்கைக் கட்டியதும் மாட்சிமை பெற்ற சிற்பத் தொழிலையுடையதும் ஆகிய தேரையுடையவனாகி, சிறிய கரடுகளையுடைய முல்லை நிலத் தலைவனாகிய உன் காதலன், அங்கே தோன்றுகிறான்; நீ பார்ப்பாயாக; ஒலிக்கின்ற இசைகளை உடைய விழவைப் பெற்ற உறையூர்க்குக் கிழக்கே உள்ளதாகிய உயர்ந்த பெரிய குன்றத்தில் நெருங்கி வளர்ந்த காந்தளினது பேரரும்பு மலர்ந்த மலரின் மணத்தை வீசும், ஆராய்ந்தெடுத்த வளையை அணிந்த பெண்ணே, நின் சிறப்பை உடைய அழகை நினைந்து விரும்பி.
விரும்பித் தோன்றுகிறான் என்றபடி.
கானம் கார் செய்தன்று; குறும்பொறை நாடன், வள் பரிய, அஞ்சி ஆர்த்த தேரனாகி, நின் நலம் படர்ந்து தோன்றும் என்று கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்,
- வை-கூர்மை-நுனை-முனை. இல்லம்-தேற்றா மரம், இதன் கொட்டையைக் கலங்கல் நீரைத் தெளிய வைக்க உபயோகிக்கிறோம்.
- கால்-காம்பு பிணி-மொட்டு. அவிழ-மலர.
- திரித்தன்ன-திரித்தது அன்ன என்பதன் விகாரம்; திரித்தாலன்ன என்பதன் விகாரம் என்று கூறுவதும் உண்டு. மா-கரிய. இரு-பெரிய. மருப்பின்-கொம்பை உடைய,
- பரல்-பருக்கைக் கல்; கூழாங்கல். அவல் -பள்ளம், அடைய-முற்றும். இரலை-கலைமான். தெறிப்ப -துள்ளிக் குதிக்க,
மாயிரு மருப்பின் இரலை பரல் அவல் அடையத் தெறிப்ப என்று கூட்டிக்கொள்ள வேண்டும். மருப்பின் இரலை என்று தொடரும் சொற்களுக்கு இடையே வந்த “பரலவ லடைய” என்ற தொடரை இடைப் பிறவரல் என்று கூறுவர்.
- மலர்ந்த-மலர்ச்சி பெற்ற, ஞாலம்-உலகம், புலம்பு-வருத்தம்; மழையில்லாமையால் உண்டான வெப்பமாகிய வருத்தம் புறங்கொடுப்ப-புறங்காட்டி ஒட, ‘புறக் கொடுப்ப” என்றும் பாடம் உண்டு; ‘புறத்தேபோக” என்று அதற்குப் பொருள் எழுதுவர் பழைய உரையாசிரியர்.
- கருவி-ஆவி, இடி, மின்னல் முதலியவற்றின் தொகுதி. வானம்-மேகம். கதழ்-விரையும், உறை-நீர்த் துளி.
- கார்-கார்காலம்; எழுவாய். செய்தன்று-செய்தது. கவின்-அழகு. கானம்-காட்டை.
- குரங்கு-வளைந்த, உளைப் பொலிந்த-தலையாட்டத்தால் விளக்கம் பெற்ற, கொய்-கத்தரிகையால் கத்தரித்த, சுவல்-பிடரி மயிர், புரவி-குதிரை,
- ஆர்த்தன்ன – ஆர்த்தது அன்ன; கட்டினது போன்ற, வாங்கு- கையினால் இழுக்கும். வள்-வார்; இங்கே கடிவாள வார். பரிய-தளர,
- பொங்கர்-மரத்தில், துணை-பெடை வண்டு. வதிந்த-தங்கிய, தாது உண் பறவை என்றதனால் வண்டாயிற்று.
11 பேதுறல்-கலங்குதலுக்கு.
நரம்பு ஆர்த்தன்ன பறவை என்று கூட்டுவர் பழைய உரையாசிரியர்; யாழ் நரம்பு ஒலித்தாற் போன்ற இசையையுடைய வண்டு என்று பொருள் கொள்ள வேண்டும்.
- ஆர்த்த-கட்டிய. மாண் வினை-மாட்சிமைப் பட்ட வேலைப்பாட்டை உடைய; இது தேருக்கு அடை. தேரன்-தேரை உடையவனாகி.
- உவக் காண்: அங்கே பார் என்னும் பொருளை உடையதோர் இடைச்சொல். இதை, ஒட்டி நின்ற இடைச்சொல் என்று பரிமேலழகர் கூறுவர். குறும்பொறை நாடன் என்பது முல்லை நிலத் தலைவனைக் குறிக்கும் பெயர். சிறிய சிறிய கரடுகள் முல்லை நிலத்தில் இருப்பதால் அப்படிப் பெயர் வந்தது.
- கறங்கு-ஒலிக்கின்ற இசை-ஒலி. விழவு உறையூரில் பங்குனி உத்தரம் மிகச் சிறப்பாக நடைபெற்றதென்று இறையனரகப் பொருளின் உரையினால் தெரியவருகிறது. உறந்தை-உறையூர், குணாது-கிழக்கில் உள்ளதாகிய,
- நெடுமை-உயரம். உறையூருக்குக் கிழக்கே உள்ள குன்றம் என்று சொன்னமையால் திருச்சிராப்பள்ளி மலையாயிற்று, அமன்ற-நெருங்கி வளர்ந்த,
- போது-மலரும் பருவத்தில் உள்ள பேரரும்பு, அலரி நாறும்-மலரின் மணத்தை வீசும். அலரின் நாறும் என்பதும் ஒரு பாடம்; “மலரைப் போல மணம் வீசும்” என்று அதற்குப் பொருள் கொள்ள வேண்டும்,
17 ஆய்தொடி – ஆராய்ந் தெடுத்தவளை, அரிவை என்பது மகளிர் பருவங்களில் ஒன்றாயினும் இங்கே அச்சொல் பருவத்தைக் குறியாமல் பெண் என்னும் அளவில் நின்றது. மாண் நலம்-மாட்சிமைப் பட்ட அழகு. படர்ந்து-நினைத்து, விரும்பி.]
முல்லைத் திணைக்குரியதாகிய இப் பாட்டில் காணம் என்றதனால் நிலமும், கார் என்றதனால் காலமுமாகிய முதற் பொருள்கள் வந்தன. முல்லை, இல்லம், கொன்றை, இரலை, குறும் பொறை நாடன் என்ற கருப்பொருள்கள் வந்தன. தலைவி தன் மனையின்கண் இருக்கும்போது நிகழ்ந்தது. இது. ஆதலின் இருத்தல் என்னும் உரிப் பொருளும் வந்தது.
இதன் துறை “தோழி தலைமகளைப் பருவங்காட்டி வற்புறுத்தியது” என்பது. வற்புறுத்தியது-துணிவு பெறச் செய்தது.
இதைப் பாடியவர் குறுங்குடி மருதனார், இது அகநானுாற்றில் 4-ஆவது பாட்டு.



