
இன்ப மாலை
கி. வா. ஜகந்நாதன்
5. “தேரைக் கண்டேன்”
கார் காலம் வந்துவிட்டது. எங்கும் மழை பெய்து நிலம் குளிர்ந்திருக்கிறது. காடும் அதைச் சார்ந்த பகுதியு மாகிய முல்லை நிலத்தில் எங்கே பார்த்தாலும் ஒரே பசுமைக் காட்சி. இயற்கையாகவே அழகுடைய முல்லை நிலம் இப்போது பின்னும் பேரழகு பெற்று விளங்குகிறது. பூமியெல்லாம் செம்மண் நிலம். எங்கே வெட்டினாலும் செவ்வரக்கைப் போல இருக்கும் மண்ணைக் காணலாம். அரக்கைப் போன்ற செந்நிலத்தில் பெரிய வழிகள் இருக்கின்றன. வழிகளின் இரு மருங்கும் மரமும் செடியும் கொடியும் வளர்ந்திருக்கும். காயா மரங்கள் முல்லை நிலத்துக்கு உரியவை. அவை மழை பெய்தமையால் நன்றாகத் தளிர்த்துப் பூத்துக் குலுங்குகின்றன. மலர்ந்த மலர்கள் உதிர உதிரப் புதிய மலர்கள் பூக்கின்றன. அப்படி உதிர்ந்த மலர்கள் செந்நிலப் பெரு வழியில் படர்ந்து கிடக்கின்றன. செம்மண் தரையில் நீலநிற மலர் பரவிக் கிடந்தால் அது எடுப்பாகத் தெரியுமல்லவா?
மழைக் காலத்தில் காடுகளில் இந்திர கோபப் பூச்சிகள் தரையில் ஊரும் செக்கச் செவேலென்ற நிறமும் பட்டுப் போன்ற மென்மையும் உடைய அந்தப் பூச்சிகளைப் பட்டுப் பூச்சி யென்றும் சொல்வதுண்டு. ஈயல் மூதாய் என்று புலவர்கள் சொல்வார்கள். அந்த இந்திர கோபப் பூச்சிகள் முல்லை நிலத்து வழி முழுவதும் ஊர்கின்றன. ஊரும் பொழுது கோடு கிழித்தாற் போன்ற சுவடுகள் உண்டாகின்றன; கோலம் போட்டாற் போன்ற கீற்றுகள் அமைகின்றன. சேற்றிலும் மணலிலும் நண்டும் நத்தையும் ஊர்ந்து செல்லும்போது சுவடுகள் கோடு கோடாக அமைவதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? இங்கே செந்நிலப் பெருவழியில் பல இந்திர கோபப் பூச்சிகள் ஒரே கூட்டமாக ஊர்கின்றன; ஒருங்கே ஊர்கின்றன; வரி (கோடு) அமைய ஊர்கின்றன. அப்படி ஊர்வதை வரித்தல் என்று சொல்வார்கள். ஈயல் மூதாய் பல இந்தப் பெரு வழியில் வரிக்கின்றன. முன்பே காயா மலர் உதிர்ந்து பரவிக் கிடக்கும் அந்த வழியில் இந்திர கோபப் பூச்சிகள் ஊர்கின்றன. காயாம் பூ கரு நீல நிறமானவை; இந்திரகோபப் பூச்சியோ இரத்தம் போல நல்ல சிவப்பு நிறம் உடையவை. இவை இரண்டையும் கலந்து பார்க்கும்போது நீல மணியும் பவளமும் ஒன்றாகக் கிடப்பது போலத் தோன்றுகின்றன. நீல மணியையும் பவளத்தையும் இடையிடையே கோத்து, வளை, மாலை முதலிய அணிகளை இயற்றுவதுண்டு. அப்படி நீலமணியும் பவளமும் இணைந்த இணைப்பை மணிப்பிரவாளம் என்றும் மணிமிடை பவள மென்றும் சொல்வது வழக்கம். காயாம் பூவும் ஈயல் மூதாயும் கலந்து மணிமிடை பவளம் போலக் காட்சி அளிக்கின்றன.
இத்தகைய காட்டு வழி, தன்னுடைய எல்லையிலே ஒரு குன்றத்தைக் கொண்டிருக்கிறது. சிறிய குன்றை வளைந்து அந்த முல்லை நிலம் இருக்கிறது. அழகிய காடு அது. மரங்கள் செறிந்து வளர்ந்திருப்பதனால் மற்ற இடங்களில் எளிதிலே செல்வது போல அந்தக் காட்டுக்குள் செல்ல இயலாது; அது செல்லுதற்கு அரிய இடங்களை உடையது. இன்னும் மக்கள் புகாமல், அவர்கள் காற்றே படாமல் உள்ள பல இடங்கள் இந்த அடர்ந்த காட்டுக்குள் இருக்கின்றன. குன்றத்தைச் சூழ்ந்த அழகிய காட்டு நிலத்தின் அரிய இடங்களிலே மான்கள் உல்லாச மாக வாழ்கின்றன. ஆண் மானும் பெண் மானும் ஒருங்கு இயைந்து வாழ்கின்றன. மென்மையான பிணையைத் தழுவி ஆண் மானாகிய இரலை அங்கும் இங்கும் ஓடுகின்றது. ஆண் மானுடைய கொம்பு முறுக்கினது போல இருக்கிறது; திரிந்த மருப்பை உடைய இரலை அது. மழை பெய்தமையால் புதிய புல் முளைத்து வளர்ந்திருக்கிறது. புல்லை உண்ணுவதற்காகப் பிணை மானும் கலை மானும் துள்ளிக் குதித்து ஒடுகின்றன. பிணை மானை விட்டு விடாமல் தன் அருகிலே அது வருகிறதா என்று கவனித்துக் கொண்டே ஆண் மான் குதித்துக் குதித்து ஒடுகிறது. தனக்கு விருந்தாகிய புல்லை உண்ணுகையில் தன் பிணையை விட்டு உண்டால் அதற்கு உண்டதாகவே தோற்றாதே! ஆகவே புல்லை அருந்தும் பொருட்டுச் செல்லும் கலைமான் மடப் பிணையைத் தழுவிக் கொண்டே, துள்ளிக் குதித்துச் செல்கிறது.
காட்டில் மற்றொரு பகுதியில் மக்கள் வந்து பயன் பெறும் இடங்கள் இருக்கின்றன. முல்லை நிலத்தில் வாழும் கோவலர்கள் விரிந்த நிலப் பரப்பில் மேய்வதற்குரிய மாடுகளை அழைத்துச் சென்று மேயச் செய்கிறார்கள். அங்கங்கே பரவலாக அவற்றைக் காலாற நடந்து மேய விடுவார்கள். அந்த நிலப் பரப்பு முழுதும் ஆக்கள் பரவி யிருக்கின்றன. ஆயர்கள் பசுக்களை அப்படிப் பரப்பி விட்டுத் தாங்கள் காட்டின் அழகிலே மனத்தைப் பறி கொடுத்து உலாவுகிறார்கள். முல்லை நிலத்தில் அங்கங்கே கரடுகள் இருக்கும். அவற்றைக் குறும்பொறை என்று சொல்வார்கள். அவற்றின் அருகில் முல்லைக் கொடி படர்ந்திருக்கிறது. கார் காலத்தில் முல்லை பூத்துச் சொரியும். வேறு மலர்களும் மலர்ந்திருக்கின்றன. ஆயர்களுக்கு மலரென்றல் மிகுதியான விருப்பம். அப்படியே பறித்துத் தம் தலையிலே வைத்துக் கொள்கிறார்கள். மணமுள்ள மலர்களைப் பறித்து விளையாடுகிறார்கள்.
அவர்கள் மேயும்படி விட்ட நல்ல பசுக்கள் நன்றாக வளர்ந்த அறுகம் புல்லை வயிறு நிறைய மேய்கின்றன. கட்டும் காவலும் தனியுரிமையும் இல்லாத அந்த நிலத்துப் புல்லெல்லாம் ஆவுக்குச் சொந்தம். வயிறு நிறையப் புல்லைத் தின்று அசை போட்ட பசுக்கள் மாலை நேரம் ஆனவுடன் வீட்டுக்குப் போக அவாவுகின்றன். வீட்டைப் பற்றி அவற்றிற்குக் கவலை இல்லை. வீட்டிலே உள்ள கன்றுகளை நினைத்துக் கொள்கின்றன. காலையில் வந்தவை அவை. வேண்டிய மட்டும் அறுகம் புல்லைத் தின்று அசை போட்டு விட்டன. அவற்றின் வயிறு மாத்திரமா நிரம்பியிருக்கின்றன? மடியும் நிரம்பிவிட்டன. அவற்றின் கனம் அந்த மாடுகளாலேயே தாங்கமுடியவில்லை. அந்தக் கனம் கன்றுகளை நினைப்பூட்டுகின்றன. நினைத்தவுடன் மடியில் இனிய பால் பிலிற்றுகிறது.
கோவலர்கள் தலை நிறையப் பூவை அணிந்து கொண்டார்கள். மாலையிலே மலர்ந்த முல்லைப் பூ அவர்கள் குழலிலே மணக்கிறது. பசு மாடுகளை யெல்லாம் ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். வீங்கிய மாட்சிமையுடைய மடியிலிருந்து தீம்பால் பிலிற்ற அந்த மாடுகள் “அம்மா!” என்று தம் கன்றுகளை அழைத்துக்கொண்டே மாட்டுக் கொட்டிலில் புகுகின்றன.
இப்படித் தம் கன்றுகளைப் பயிரும் (அழைக்கும்) குரலை உடையனவாய்ப் பசுக்கள் கொட்டிலுக்குள்ளே புகுவதைக் காதலி அறிந்தாள். அவள் வீட்டுக்குள்ளே இருந்தாலும் ஆவினம் கன்றை அழைக்கும் குரல் அவள் செவியில் பட்டு மாலை வந்ததைத் தெரிவிக்கிறது. வெளியிலே வந்து பார்க்கிறாள். கோவலர் நறும் பூக்களைச் சூடி வருவதைக் காண்கிறாள். “இது வெறும் மாஜ அல்ல; கார் காலத்து மாலை” என்ற எண்ணம் உண்டாகிறது. மன்று (கொட்டில்) நிறையப் புகுதரும் பசுமாடுகளின் வரவை எதிர்நோக்கி வீட்டிலே கட்டப்பெற்றிருக்கும் கன்றுகள் இருக்கின்றன. வயிறு நிறைய மேய்ந்து மடி நிறையப் பால் ததும்பப் பசுமாடுகள் மாலையில் வந்து விட்டன. தலைவி அந்தக் காட்சியைக் காணும்போது அவள் உள்ளம் வருந்துகிறது. கன்றையும் பசுவையும் கண்டு வருந்தவில்லை. அவற்றின் நிலையோடு தன்நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள். அப்போது அவளுக்குத் துயரம் பெருகியது.
அவளுடைய காதலன் வெளி நாடு சென்றிருக்கிறான். இல்லறத்துக்கு இன்றியமையாத பொருளை ஈட்டும் பொருட்டுச் சென்றிருக்கிறான். இல்லறத்துக்குரிய கடமைகளை ஆற்றிக்கொண்டு காதலி வீட்டில் இருக்கிறாள். சென்ற காதலன், கார் காலம் வந்தவுடன் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிச் சென்றான். பசு மாடுகள் வயிறு நிறைய மேய்ந்து குறித்த காலத்தில் கன்றை அழைத்துக்கொண்டே வந்துவிட்டன. தலைவனும் தான் ஈட்ட வேண்டிய பொருளை ஈட்டிக்கொண்டு உரிய காலத்தில் காதலியை நாடி வரவேண்டியவன் அல்லவா? மாலை வந்துவிட்டது; பசு மாடுகள் வந்துவிட்டன. அது போலக் கார்காலம் வந்துவிட்டது; காதலனும் வந்து விட்டான் என்று சொல்வதற்கில்லையே! இதுதான் தலைவி வருத்தத்தை அடைவதற்குரிய காரணம்.
காதலனும் காதவியும் இல்வாழ்க்கையிலே சிறந்து நின்றனர். தன் முன்னோர் ஈட்டிய பொருளைச் செலவிட்டு வாழ்வது அறிவுடைமையன்று என்று எண்ணும் ஆண் மகன் அந்தக் காதலன். தன்னுடைய முயற்சியால் ஈட்டிய பொருளால் செய்யும் அறமே முழுப் பயனைத் தரும் என்றும், அதனால் வரும் இன்பமே நல்லின்பம் என்றும் நினைப்பவன்.
அவன் இசை, ஓவியம், காவியம் ஆகிய கலைகளில் ஈடுபட்டவன். இசை வல்ல பாணர்களும் கவி வல்ல புலவர்களும் அவனுக்கு நண்பர்கள். அடிக்கடி பாணரை அழைத்து இன்னிசை யாழ் வாசிக்கச்செய்து காதவியுடன் கேட்டு இன்புறுவான். அவருக்குள் மிகவும் வல்லவனாகிய பாணன் ஒருவன் தலைவனோடு நெருங்கிப் பழகுபவன், தலைவனுக்கும் தலைவிக்கும் எப்போதும் நன்மையையே விரும்புபவன், அந்தப் பாணன். சில சமயங்களில் அவர்கள் ஏவும் குற்றேவல்களையும் அவன் செய்வதுண்டு. தலைவன் ஊரில் இல்லாதபோதும் அடிக்கடி அவன் வீட்டுக்கு வந்து தலைவியைப் பார்த்துப் பேசியிருந்து விட்டுச் செல்வான்.
தலைவி தன் காதலன் பிரிவைத் தாங்கவேண்டும் என்ற உள்ளம் படைத்தவளாக இருந்தாலும் அவன்பால் இருந்த காதல் அவளைப் படாத பாடு படுத்தியது. அவளை அறியாமலே சோர்வு உண்டாகியது. முகத்தில் இயற்கையாக இருந்துவந்த பொலிவு இல்லை. ஆயினும் செய்ய வேண்டிய கடமைகளைத் தக்கவண்ணம் செய்து வந்தாள். எப்படியும் தன் காதலன் குறிப்பிட்ட காலத்தில் வந்து விடுவான் என்ற நம்பிக்கை இருந்தமையால் பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து வந்தாள். கார்காலம் எப்போது வரும் வரும் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.
கார் காலம் மெல்ல மெல்ல வந்தது. அதன் அடையாளங்களாகிய மழையும் முல்லை மலரும் காயாம் பூவும் வந்தன. தலைவன் இன்னும் வரவில்லை. ‘இப்போது தானே கார் காலம் அடியெடுத்து வைக்கிறது? இன்னும் சரியானபடி வந்து புகவில்லை’ என்றுதானே சமாதானம் செய்து கொண்டாள்.
கார் காலம் நன்றகவே வந்துவிட்டது. காட்டுக்குப் போய் வந்தவர்கள் எல்லாம் கார் காலத்துக்குரிய அடையாளங்கள் அனைத்தும் தோன்றியிருப்பதைப் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் பேச்சுத் தலைவியின் காதில் விழுகிறது. அதோடு முல்லைப் புலத்தில் ஆக்களைப் பரப்பிக் கோவலர் நறும் பூவைச் செருகிக் கொண்டு வருவதையும், அறுகம் புல்லை வயிறு நிரம்பத் தின்று விட்டுக் கம்பீரமாக நடை போட்டுக்கொண்டு நல்ல ஆக்கள் தம் மடியினின்றும் பால் சோரக் கன்றைப் பயிரும் குரலோடு மன்றுகள் நிறையப் புகுவதையும் பார்த்தாள். “கார் காலம் வந்துவிட்டது. இக்காலத்தில் பகலாக இருந்தால் கடமை செய்வதில் மனம் ஈடுபட் டிருக்கும். மாலை வந்துவிட்டது. இனி எப்படி நான் பொழுது போக்குவேன்? வரவேண்டிய என் காதலர் வராமல் இருக்கிறாரே! இதை எண்ணாமல் இருக்க முடிய வில்லையே! இரவெல்லாம் தூக்கம் வராதே! நம்முடைய உறுதியெல்லாம் மாலையைக் கண்டவுடன் போய் விட்டதே! இந்த இரவு முழுவதையும் கழித்துக் காலையில் எழுந்திருக்க வேண்டுமே! காலையில் எப்படி இருப்போமோ!” என்று அவள் துயரச் சிந்தனையிலே மூழ்கி விட்டாள்.
அப்போது அவர்களுடைய நன்மையை விரும்பும் பாணன் வந்து சேர்ந்தான். அவனைக் கண்டவுடன் தலைவிக்கு அதுகாறும் இருந்த பொறுமை தளர்ந்து விட்டது. உணர்ச்சி எல்லை கடந்து நின்றது. ஒருவருக்குத் துயரம் மிகுதியாக இருந்தால் அதை தமக்கு வேண்டியவரோடு சொன்னால் ஆறுதல் உண்டாகும் என்பார்கள். பாணனைக் கண்டாளோ இல்லையோ, வேறு ஒன்றும் பேசவில்லை.
”பாணனே, உங்கள் தலைவர் செயலைப் பார்த்தாயா? கார் காலம் வந்துவிட்டதே காடும் வழியும் மழையும் கார் காலம் வந்துவிட்டதென்று சொல்கின்றன. ஆணினம் கன்றுகளை அழைத்துக்கொண்டு கொட்டிலுக்குள் புகும் மாலைக் காலத்தில் நான் அவரை நினைந்து நினைந்து வாடுகிறேன். அவர் இந்தக் கார் காலத்து மாலையிலும் நான் எவ்வளவு துன்பப்படுவேன் என்பதைச் சிறிதும் நினைக்கவில்லையே! இனி விடிந்தால் என்ன ஆவேனோ!” என்று தலைவி தன் துயரத்தைக் கொட்டி விட்டாள்.
பாணன் என்ன சொல்வான்? அவளுக்குச் சமாதானமாகச் சொல்ல என்ன இருக்கிறது? இதற்கு முன்பெல்லாம், “கார்காலம் வந்தால் வருவார்’ என்று சொல்ல முடிந்தது. அந்தக் கார் காலம் வந்துவிட்டது என்று அவள் நன்றாக உணர்ந்த பிறகு, அவளுக்கு ஆறுதல் கூற ஒரு வகையும் இல்லை. பாணன் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளுடைய சோகக் குரல் அவன் உள்ளத்தை வெதுப்பியது. தன் கடமையை உணர்ந்த பெருமாட்டி அவள்; அறத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காகத் தன் துன்பத்தை எண்ணாமல் தலைவனைப் போய் வா என்று சொன்ன மனையாட்டி; யார் என்ன சொன்னலும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தன் காதலன் சொன்ன சொல் தவறாமல் உரிய காலத்தில் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையையே பற்றுக்கோடாகக் பற்றிக் கொண்டு பொறுமையாக இருந்த மடவரல்; காதலனுடைய பிரிவினால் உள்ளம் நைந்தாலும் செய்யவேண்டிய அறங்களைச் செவ்வனே செய்து வந்த இல்லற அரசி. அத்தகையவள் வாய் விட்டு இப்படிச் சொல்ல வேண்டுமென்றால் அவள் மனத்தில் எவ்வளவு துன்பம் குமுறிக் கொந்தளிக்க வேண்டும்! இத்தகைய நிலையில் ஆறுதல் சொல்ல இயலுமா?
பாணன் அவளைப் பார்த்துப் பார்த்து வருந்தினான், அவள் வருத்தத்தை மறப்பதற்கு ஏதேனும் வழியிருந்தால் அதைச் செய்யலாமென்று எண்ணினான். அவனிடம் எந்தத் துயரத்தையும் மாற்றுவதற்குரிய ஒன்று இருக்கிறது. யாழை வாசித்தால் எல்லாவற்றையும் மறந்து கேட்டுக் கொண்டே இருக்கலாமே! தலைவியும் தலைவனும் தன்னுடைய யாழிசையிலே ஈடுபட்டு நின்றதைப் பலமுறை கண்டவன் அவன்.
ஆகவே தன் யாழை உறையினின்றும் எடுத்தான். இராகங்களைப் பண் என்று தமிழில் சொல்வார்கள். இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன பண்ணைப் பாடவேண்டும் என்ற வரையறை உண்டு. காலை நேரமானல் மருதப் பண்ணையும், மாலை நேரமானால் செவ்வழிப் பண்ணையும் பாடுவார்கள். இப்போது மாலைக் காலமாதலின் பாணன் யாழிலே சுருதி கூட்டிச் செவ்வழிப் பண்ணை ஆலாபனம் செய்தான், விரைவாக அந்தப் பண்ணில் ஒரு பாட்டை வாசித்தான்; கடவுளை வாழ்த்தும் பாட்டு அது. இத்தகைய சமயங்களில் இசையும் கடவுள் நினைவும் நல்ல ஆறுதலை அளிக்கும் என்ற எண்ணத்தால் நல் யாழில் செவ்வழியை இசைத்துக் கடவுளை வாழ்த்தினான்.
மற்றக் காலங்களிலானால் இந்த இசையைக் கூர்ந்து கேட்பாள் தலைவி. இப்போதோ இசை அவளுக்கு ஆறுதலைத் தரவில்லை. அவள் காதுகள் காதலனுடைய தேர் வரும் ஓசை கேட்கிறதா என்றே கவனித்தன. இசையினால் தலைவி சிறிதும் ஆறுதல் பெறாததைக் காணக் காணப் பாணனுக்கு ஊக்கம் குறைந்து விட்டது. அவனுக்கே முகம் வாடியது; ஏதோ மாதிரி இருந்தது.
அடுத்தபடி என் செய்வது? “அவர் இருக்கும் ஊருக்குச் சென்று இந்தப் பெருமாட்டியின் நிலையைச் சொல்வது தான் இனிச் செய்யத்தக்க காரியம்?” என்று அவனுக்குத் தோன்றியது. ஆகவே தலைவன் பால் செல்லப் புறப்பட்டான். அவன் முகத்திலும் நடையிலும் சோர்வு இருந்தது. தலைவியின் நிலையை உணர்ந்ததனால் அவனுக்கு உண்டான துயரம் அவன் உடம்பிலே தோன்றியது.
வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான். எங்கே போவது, எப்படிப் போவது என்பதை எண்ணினானோ என்னவோ! இங்கேயிருந்து இவள் படும் வேதனையைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அவரிடம் சென்று இவள் துன்பத்தைத் தீர்க்க வழி செய்வது மேல் என்ற நினைவினால் அவன் புறப்பட்டான்.
தலைவனுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டவன் அந்த வீதியைக் கூடத் தாண்ட வில்லை. அதற்குள்ளே அவன் கண்முன்னே தலைவன் தேர் தோன்றியது. தேரைப் பார்த்தான். அதிலே கட்டியிருந்த குதிரைகளைப் பார்த்தான், அவை வாயு வேகமாக வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. உடம்பெல்லாம் வேர்க்க, வாயில் நுரை தள்ளப் படபடப்போடு வந்த அவற்றின் நிலையே தலைவனுடைய மனம்போல முடுகி வந்திருக்க வேண்டுமெனத் தெரிவித்தது. காட்டுவழி எப்படி எப்படியோ இருக்கும். வளைந்து வளைந்து வரவேண்டியிருக்கும், மேடும் பள்ளமுமான வழியில் வரவேண்டியிருக்கும். இப்படி மாறுபாடான வழியில் வேகமாக வந்திருக்கின்றன அந்தக் குதிரைகள், வருகிற வேகத்தில் வழியிலேயுள்ள சிறு கற்களையெல்லாம் தேர்ச் சக்கரம் மோதி அரைத்துச் சடசடவென்ற ஒலியை எழுப்பியிருக்கும். பல ஆரக் கால்களையுடைய அந்தச் சக்கரங்கள் இறுதியானவை. தேர் தூரத்தில் வரும் போதே அதன் ஓசை அதன் வரவைத் தெரிவித்து விட்டது. கார் காலத்து மழை பெய்யும்போது சடசட வென்று முழங்குவதுபோல அந்த ஓசை இருந்தது.
ஊருக்குள்ளே புகுந்தால் நல்ல இடங்கள் முன்னே இருந்தன. நல்ல முன்னிடங்களை உடைய அந்த ஊருக்குத் தலைவன் தேரில் வரும் காதலன், தேர் பக்கத்தில் வந்த பிறகு அதன் அலங்காரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன . அழகான தேர்; பல வகையான சிற்ப வேலைப்பாடுகளை உடையதாய் வேறு அலங்காரங்களும் புனைந்ததாய் இருந்தது. அதைக் கண்டான் பாணன். “நாம் கடவுளைப் பாடியது வீண் போகவில்லை” என்று எண்ணி ஆறுதல் பெற்றான்.
தலைவன் தன் வீட்டை அடைந்தான்.
பாணன் புறப்பட்டபோது அவனோடு இருந்த தோழர்களிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான், போன வேகத்தில் அவன் திரும்பி வந்ததை அவர்கள் கண்டார்கள். “ஏன் வந்துவிட்டாய்?” என்று அவனருகிலே இருந்து பழகும் தோழர்கள் கேட்கவே, தான் புறப்பட நேர்ந்த காரணத்தையும், தலைவன் தேர் வந்துவிட்டதையும் கூறித் தான் போகவேண்டிய அவசியம் இல்லாமற் போனதைப் புலப்படுத்தினான். அவன் கூறுவதாக அமைத்திருக்கிறது பாட்டு.
முல்லை
“அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி
காயாஞ் செம்மல் தா அய்ப் பலஉடன்
ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு
மணிமிடைக் தன்ன குன்றம் கவைஇய
அங்காட்டு ஆரிடை, மடப்பிணை தழீஇத் 5
திரிமருப்பு இரலைபுல் அருந் துகள,
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்,
பதவுமேயல் அருந்த மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக் 10
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்குஆ குவங்கொல்? பாண” என்ற
மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்,
செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக் 15
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து
அவர்திறம் செல்வேன், கண்டனென் யானே:
விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்
கார்மழை முழக்குஇசை கடுக்கும் 20
முனைநல் ஊரன் புனைநெடுந் தேரே.“
[ செவ்வரக் கைப் போன்ற சிவந்த நிலமாகிய முல்லை நிலத்தின் பெரிய வழியிலே காயாமரத்தின் பழம்பூப் பரவவும், பலவாக ஒருங்கே இந்திரகோபப் பூச்சிகள் ஊர்ந்து கோடு கிழிக்கவும், பவளத்தோடு நீலமணி கலந்தது போன்ற காட்சியைத் தருவதற்கு இடமாகிய, குன்றத்தைச் சூழ்ந்த, அழகிய காட்டின் புகுவதற்கரிய இடங் களில் மென்மையை உடைய பெண் மானை உடனழைத்துக்கொண்டு முறுக்கிய கொம்பையுடைய ஆண் மானானது புல்லை அருந்தும் பொருட்டுத் துள்ளிக்குதித்துச் செல்லவும், முல்லையாகிய பெரிய நிலப்பரப்பில் பசுக்களைப் பரவச் செய்து இடையர்கள் சிறிய கரடுகளின் பக்கத்திலே மலர்ந்த மணமுடைய பூக்களைக் கொண்டு விளையாடி இன்புறவும், அறுகம்புல்லை மேய்ந்து அசைபோட்ட செருக்குள்ள நடையையுடைய நல்ல பசுக்கள், புடைத்த சிறப்பையுடைய மடி இனிய பாலைச் சோரவிடக் கன்றுகளே அழைக்கும் குரலை உடையனவாய்க் கொட்டிவிலே நிறையப் புகுகின்ற மாலைக் காலத்திலும், (இங்கே வந்து என் துயரத்தைக் களைய வேண்டும் என்று என் தலைவர்) நினை யாரானால், காலையில் நாம் எப்படி ஆவோம்? பாணனே என்ற வீட்டுத் தலைவியின் வார்த்தைகளுக்கு எதிரே ஒன்றும் சொல்லாமல், செவ்வழிப் பண்ணை நல்ல யாழில் இசைத்து விரைவில் கடவுளை வாழ்த்தி, என் உடம்பிலே துன்பத்தை நிற்கும்படியாக வைத்து, தலைவர் பால் செல்லப் புகும்பொழுது யான் கண்டேன். ஒட்டுகின்ற வேக முள்ள குதிரைகள், வெவ்வேறு வகையாக மாறுபட்டுச் செல்லும் கதியிலே வேகமாகச் செல்ல, வழியிலே உள்ள கற்களிலே மோதி ஒலிக்கும் பல ஆரக்கால்களையுடைய சக்கரத்தைப் பெற்றதும், கார்காலத்தில் பெய்யும் மழையின் முழக்கத்தை யொத்த ஓசையையுடையதும் ஆகிய, நல்ல முன்னிடங்களை-யுடைய ஊர்க்குத் தலைவனது அலங்கரிக்கப்பெற்ற உயர்ந்த தேரை.
(3-4) பவளமொடு மணி மிடைந்தன்ன காடு, (4-5) குன்றம் கனவஇய காடு என்று கூட்டவேண்டும். (18-21) பல்லார் நேமித்தோர், (20-21) முழக்கிசை கடுக்கும் தேர், (21) ஊரன் தேர், (2) புனை நெடுந் தேர் என்று கூட்டவேண்டும். யான் செல்வேன் (17), தேரை (21)க் கண்டனன் (17) என்று முடிக்கவேண்டும்.
- அரக்கம்-அரக்கு; அம் என்பது சாரியை; அதற்குத் தனியே ஒரு பொருளும் இல்லை. முல்லை நிலம் சிவப்பாக இருப்பதாகச் சொல்வது மரபு. தேர் வரும் வழி ஆதவினாலும் நெடுந்தூரம் செல்வதாதலினாலும் பெரு வழி ஆயிற்று.
- காயாம்பூவைக் காசாம்பூ என்று இப்போது வழங்குவார்கள். செம்மல்-பழம்பூ, தாஅய்-தாவி; தாவ என்று கொள்ளவேண்டும். தாய் என்பது செய்யுள் ஒசைக்காக அளபெடுத்தது. உடன்-ஒருங்கே.
- ஈயல் மூதாய்-இந்திரகோபப் பூச்சி. வரிப்ப – ஊர்ந்து செல்ல; ஊரும்போது வரிவரியாகச் சுவடு உண்டாவதனால் வரிப்ப என்றார்,
- மிடைந்தன்ன-கலந்து செறிந்தது போன்ற; மிடைந்தது அன்ன என்பது இப்படி விகாரமாயிற்று. கவைஇய-சூழ்ந்த,
3-4. ஈயல் மூதாய் பவளம் போலச் சிவந்த நிறம் உடையது. இது கார் காலத்தில் முல்லை நிலத்தில் ஊர்வ தென்பதை, “தண்பெயல் எழிலி, அணிமிகு காணத்து ஆன்புறம் பரந்த, கடுஞ்செம் மூதாய்” (362:3-5) என்று நற்றிணையிலும், ‘தண்பெயல் பொழிந்த பைதுறு காலைக் , குருதி உருவின் ஒண்செம் மூதாய். பெருவழி மருங்கிற் சிறுபல வரிப்ப” (24:3-5) என்று அகநானூற்றில் வேறிடத்திலும் வந்திருக்கும் பகுதிகளால் உணரலாம்.
கார்காலத்தில் காயாம்பூக்கள் உதிர்ந்து கீழே இறைந்து கிடக்க, ஈயல்மூதாய் அவற்றினூரட ஊரும் போது மணியும் பவளமும் கலந்து கிடந்ததுபோன்ற தோற்றத்தை அளிப்பதாக இங்கே கூறினார் புலவர். இப்படியே அகநானூற்றுல் வேறு பாடல்களிலும் இந்தக் காட்சியும் உவமையும் வந்திருக்கின்றன: “மணிமிடை பவளம் போல அணிமிகக், காயாஞ் செம்மல் தாஅய்ப் பல உடன், ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்பப், புலன் அணி கொண்ட கார் எதிர் காலை” (304:13-6); பெயல்வெய்து கழிந்த பூநாறு வைகறைச் செறிமணல் நிவந்த கள ந்தோன்று இயவிற், குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி, மணிமண்டு பவழம்போலக் காயா, அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக், கார் கவின் கொண்ட காமர் சோலை” 374 10-15.)
- அம்-அழகிய ஆரிடை: அரு இடை, இடை – இடம். மடப்பினை-மெல்லிய பெண்மான், தழிஇ-தழுவி; உடன் கொண்டு.
- திரிமருப்பு-முறுக்கினாற் போன்ற கொம்பு. இரலை -ஆண்மான் அருந்த உகள என்றது அருந்துகள என விகாரமாயிற்று. உகள-துள்ளிக் குதிக்க.
- வியன் புலம்-பெரிய நிலம், பரப்பி-பரவச்செய்து. கோவலர்-மாடு மேய்ப்போர்; இவர்கள் முல்லை நிலத்து மக்கள்,
- குறும்பொறை-சிறு கரடுகள். பூ அயர-பூவை வைத்துக் கொண்டு விளையாட செருகி மகிழ என்றுமாம்.
- பதவு-அறுகம்புல். மேயல்-மேய்ச்சல், மேயல் அருந்த-மேய்ந்ததை அசைபோட்ட அருந்த – அருந்திய, “மேயலாக ஆர்ந்த” என்பது பழைய உரை. “அருந்து” என்பது ஒரு பாடம், மதவுநடை-செருக்குடைய நடை.
- மாண்-மாட்சிமையையுடைய. செருத்தல்-மடி. தீம்பால்-இனிய பால். பிலிற்ற-சோர.
- பயிர்தல்-அழைத்தல். குரல்-குரலையுடையன வாய். மன்று-மாடுகள் இருக்கும் கொட்டில், நிறையப் புகுதரும் என்பது நிறைபுகுதரும் என நின்றது.
- உள்ளார்-நினையார். தலைவர் என்ற எழுவாயை வருவித்துக் கொள்ள வேண்டும். காலை என்பதற்கு ’இக்காலத்து’ என்று பொருள் எழுதுவர் பழைய உரைகாரர்.
- யாங்கு – எவ்வாறு.
- மனையோள் – தலைவி; வீட்டில் இருந்து அறங்காத்தலின் இவ்வாறு சொன்னான். சொல்லல் செல்லேன் – சொல்லேனாகி; முற்றெச்சம், செல் என்பது பொருளொன்றும் இல்லாத துணை வினை.
- செவ்வழி-மாலைப்பண், இசையினென் – பாடி னேனாகி; பாடி, முற்றெச்சம். பையென-விரைவாக.
- பாணனுடைய துயரம், அவன் மெய்யிலே தோற்றிய பாவங்களால் பிறருக்குத் தோன்றினமையால் ‘பையுள் மெய்ந் நிறுத்து’ என்றான்; பையுள்-துன்பம், அதனை உடம்பிலே நிறுத்துவதாவது உடம்பு படபடத்தல் முதலிய மெய்ப்பாடுகள் தோற்றுவது.
- அவர் என்றது தலைவரை. இன்னாரென்றுலாமல் அவர் என்றாலே உடன் இருப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர் இன்னர் என்பதைப் பாணன் நெஞ்சு அறியும். இதனை நெஞ்சறி சுட்டு என்று கூறுவர். அவர் திறம்-அவர் பக்கல். செல்வேன்-செல்ல; முற்றெச்சம். யானே; ஏகாரம் அசைநிலை; அதற்குப் பொருள் ஒன்றும் இல்லை,
- விடுதல்-ஒட்டுதல்; தானே செல்லும் குதிரை யாதலின் அதன் போக்கிலே விட்டாலே போதுமாதலால் ‘விடுவிசைக் குதிரை’ என்றார், விரை-வேகம். விலங்குதல் குறுக்கும் நெடுக்கும் போதல்; ஒருமுறைக்கொருமுறை மாறுபடுதல், பரி-கதி; முடுக-விரைந்து செல்ல; பரிமுடுக – ஒட்டம் வேகமாக
- கல்பொருது – வழியிலுள்ள கல்லை மோதி. இரங்கும்-ஒலிக்கும். கல்லின்மேல் மோதியதனால் ஒலி உண்டாயிற்று. ஆர்-ஆரக்கால், நேமி-சக்கரம்.
- கார் மழை-கார் காலத்து மழை. கடுக்கும் – ஒக்கும்.
- முனை-முன்னிடம். முன்னிடம் நல்லதாக உள்ள ஊரை யுடையவன், புனை-அலங்கரிக்கப் பெற்ற. நெடுமை . உயரம்,
இது, “பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல் லியது” என்னும் துறையின் பாற் படும். பாங்காயினார் – பக்கத்திலிருந்து பழகும் தோழர்கள்; பாங்கன், பாங்கி என்ற பெயர்களைப் போன்றது இது.
தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும்போது தலைவிக்குத் தூதாகப் பாணன் செல்வதுண்டாதலின், இங்கே பாணன் தலைவனிடம் போகப் புறப்பட்டான்.
இந்தப் பாட்டு முல்லைத் திணைக்குரியதாதலின் செந்நிலம், முல்லை வியன் புலம் என அதற்குரிய நிலம் வந்தது. காயாவும் முல்லையும் மலருங் கால மென்றதனால் கார் காலமும், மாலையும் உள்ளார் என்று மாலையும் வந்தன; இவை முல்லைக்குரிய பெரும் பொழுதும் சிறு பொழுது மாகும். காயாம்பூ, குறும்பொறை மருங்கின் நறும்பூ எனப் பூவும்; மடப்பிணை, இரலை, நல்லான், கன்று என விலங்கும்; கோவலர் என மக்களும் ஆகிய கருப் பொருள்கள் வந்தன. ஊரன் தேர்வர மனையோள் அதுகாறும் பொறுத்திருத்தலின் இருத்தலென்னும் உரிப்பொருள் வந்தது.
இதைப் பாடின புலவர் ஒக்கூர் மாசாத்தனார். இது அகநானுாற்றில் 14-ஆம் பாட்டு.



