
திருவள்ளுவர்
சோமசுந்தர பாரதியார்
பகுதி 4: வள்ளுவர் வாழ்ந்த இடம்
இனித் திருவள்ளுவர் மயிலாப்பூர்வாசியென்பதும், அவரைப் புலையராகப் பாவிக்கும் அடியற்றகதையையே ஆதாரமாகவுடைத்து. சங்க நூல்களில் மயிலாப்பூர் எனும் பெயரே எங்கும் வழங்கப்காணோம். சங்ககாலத்தில் அவ்வூரிருந்ததற்கு வேறு தக்க சான்று காணப்படவுமில்லை. பிற்காலச் சைவ சமயகுரவர் தம்தேவாரத் திருமயிலைப் பதிகப்பாக்களில் மயிலாப்பூருக்கு வள்ளுவர் சார்புடைமை சுட்டவுமில்லை. இக்கதை அவர்காலத்து வழங்கியிருப்பின், சைவப்பெரியார் திருமயிலாப்பூரைத் திருவள்ளுவர் தொடர்பாற் சிறப்பியாது வெறுக்கவும் மறுக்கவும் நியாயமில்லை. சங்கத்தாராற் பாடப்பெறாவிடினும் நீண்டகாலமாய் அப்பெரியார் பெயரால் வழங்கி வரும் நீட்சியான ஆட்சியுடைய திருவள்ளுவ மாலையுளட்செய்யுளொன்று, “பொய்யில் புலவரை” மயிலாப்பூருக்குரியர் ஆக்காமல் மதுரைக்குரியராகப் பேசுகின்றதும் ஈண்டுக் கவனிக்கத்தக்கது. அக்கவி வருமாறு:-
“உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தான்
உத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம்
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு (21)
நாம் கேட்கும் கதை-‘”அவர் மயிலாப்பூரிலே பிறந்து அவ்வூரிலேயே வளர்ந்து மணந்து வாழ்ந்து முத்தியடைந்தவர்’-எனக் கூறுகின்றது. கடைச் சங்கத்தாரை வென்றடக்குவதற்காக மட்டும் மதுரைக்கு ஒரு முறை வந்த தாயும் வந்து தம் இறவாக்குறணூலை அரங்கேற்றிய காலை அவமதித்த தருக்குடைய சங்கத்தார் செருக்குடையத் தாமும், சத்தியலோகத்தில் மனைவியும் தரணியில் தம் தமக்கையுமாய்த் தம்மோடு புலைச்சி ஆதியின் வயிற்றில் அவதரித்திருந்த கலைமகள் ஔவையும், தம் வைகுண்டத்தந்தை வையத்திற் புலைத்தமையனாயிருந்த இடைக்காடருமாகத் தந் தெய்விகத்தன்மையாற் றமிழ்ப் புலம் புணர் கூட்டுண்ட புலவரைக் கோயிற்குளத்திற் குப்புற வீழ்த்தி வென்ற பின்னர் மதுரை விட்டு மயிலாப்பூருக்கு இவர் மீளச் சென்றுவிட்டதாயும் இக்கதை பேசுகிறது. இஃதுண்மையாயின் வள்ளுவர் மயிலாப்பூருக்கே உரிய புலவரும், மதுரைக்கு ஒரு முறை வந்து மீண்டதன்றி மற்றைய தொடர்ச் சிறப்பற்றவருமாவார்.
இக்கதையே ‘இவரால் வெல்லப்பட்ட சங்கத்தார் தாமரைக்குளத்திற்றள்ளப்பட்டுத் தத்தளித்த தறுவாயிற்பாடியது ‘திருவள்ளுவமாலை’ யெனவும் வற்புறுத்துகிறது. எனவே, சங்கத்தாருக்கு நாயனார் மதுரைக்குத் தம்மொடு வாதிடவந்த ஏதிலரென்பது தெரிந்திருக்கவேண்டும். அஃதறிந்த சங்கத்தார், தம் வள்ளுவமாலைச் செய்யுளிலேயே, இவரைப் “புனற்கூடற்கச்சு” என மதுரைக்கே இவர் சிறப்புரிமை கூறுவது கதைப்பவர் கற்பனைத் திறத்தை விளக்குதற்குதவும்.
கதை கிடக்க;இவ்வள்ளுவமாலைச் செய்யுள் நம் முதற்பாவலரை வளம்படு கூடலான தென் மதுரைக்கு அச்சாணி போன்றவரென விதந்து கூறுவதால், மதுரைக்கு ஒருமுறை வாதிடவந்து மீண்டாரெனுங் கதைக்கு மாறாக, நாயனார் மதுரைக்கு விசேட நெருக்கமும் தொடர்பும் உடையவராக வேண்டுமெனத் தோன்றுகிறது. சங்கத்தைத் தாழ்த்த வந்து, வென்றதும் மீண்டுசென்ற வள்ளுவரை-நல்கூர்வேள்வியார் ‘மதுரைக்கச்சு’ என வழுத்துவதன் நயனும் பயனும் என்னோ? இச்செய்யுளால் அஃதியற்றப்பெற்ற பழங்காலத்தில் வள்ளுவர் கூடலிற் பீடு பெற வாழ்ந்த பெரியாரெனும் வழக்குண்மை வலி பெறுகின்றது. இதனாலும் இக்கதையின் கற்பின்மை தெளியப்படும். இதனால் தமிழெழுந்தநாளெழுந்த பழம் பழையர் பாண்டியரின் மூதூரில் தமிழிசைத்துப் புகழ் சிறந்த கடைச்சங்கத்தாரும் பரசும் நெடும் பழைய முதற் பாவலராய் அறம்பாடி அளிசெய்த தெள்ளியரே வள்ளுவர் என்றறியலாகும். எனவே, தென்மதுரைப் பெரியாரை வடமயிலைக்குரியரென வழுத்து கதைப்பொய்ம்மை யினி விரிக்கவேண்டா.



