
திருவள்ளுவர்
சோமசுந்தர பாரதியார்
பகுதி 5: வள்ளுவப் பெரியாரின் இல்லறக்கிழவியார்
இன்னும், இவ்வெண்பாவை உற்றுநோக்கின் இவர் மனை மாண்ட வாழ்க்கைத் துணைவியின் பெயரும் ஒருகால் ஊகித்தறிதற் கிடம்பெறலாமென்று எண்ணக் கிடக்கின்றது. முன்னிரண்டடிகளில் தமிழில் வடமதுரை என வழங்கப்பெறும் மதுராபுரிக்குக் கண்ணன் அச்சாகி நின்ற விவரம் விளக்கப்படுகிறது. சரவணப்பெருமாளையாவர்கள் இவ்வடிகளுக்குப் பார்வதியை மணந்த சிவபிரான் வடமதுரையிலிருந்து சிறந்தபடி’ என்றுரைத்து இடர்ப் படுவதறிவேம். இடைக்காடர் பிணக்குத் தீர்க்கப் பெருமான் தமதாலயம் தவிர்த்து அதன் வடக்கே வைகையின் தென் கரையில் மதுரையின் வடபாக்கத்திலேயே கோயில் கொண்டிருந்ததாக மட்டும் விளையாடற் புராணம் உரைக்கின்றது. மதுரைக்கும் வையைக்கும் வடக்கே வடமதுரை என்றதோர் பிறிதூரிற் கடவுள் சென்றிருந்த கதை யாண்டுங் கேட்டிலேம். மேலும் திருமாலுக்குக் கேசியெனும் பெயரின்மையால், உபகேசி, யென்பது உமையவள் பெயராமாறில்லை. நீலகேசி, பிங்கலகேசி என்பன போல உபகேசி எனும் பெயர் நப்பின்னையையே குறிப்பதாம். இதனை விசதமாக சேதி சமஸ்தான முதற்பாவலரான பிரும்மக்ஷ்ஸ்ரீ ரா. இராகவையங்காரவர்களும், காலஞ்சென்ற ஈழத்துப்பாண்டிதர் ஸ்ரீ. அ. குமாரசுவாமிப் புலவரவர்களும் செந்தமிழ் முதற்பகுதியில் இனிது விளக்கியுள்ளார்களாகையால் ஈண்டு விரித்தல் வேண்டா.
இனி;-
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை”
[திருப்பாவை-5]
“மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கு
மதிரப் புகுதக் கனாக்கண்டேன்”
(நாச்சியார் திருமொழி 6-5)
“வாச மலர்ப்பொழில்சூழ் வடமாமதுரைப்பிறந்தான்”
(பெரிய திருமொழி – 9-9-6)
“வடமதுரைப்பிறந்தாற்கு” (திருவாய்மொழி – 9 -1 -3)
“மதுவார் சோலையுத்தர மதுரைப் பிறந்த மாயனே” (ஷ 8-5-9)
என்னும் பல பழம்பிரயோகங்களாற் கண்ணன்மதுராபுரியைத் தமிழில் “மதுரை” எனவும், கூடற்றென் மதுரையினின்று பிரித்து “வடமதுரை” எனவும் வழங்குவ தறிவோம். இதனாலும், வள்ளுவமாலைச் செய்யுள்பிறவும் இப்படியே தேவரைத் திருமாலுக்கு உவமித்துச் செல்லுவதாலும், “ஏர்ப்பின்னை தோண்முன் மணந்தான்” எனக் கண்ணனைத் திருக்கோவையிற் குறிப்பதாலும். உத்தரமாமதுரைக்கு அச்சாகி உபகேசிதோண்மணந்தவன் – கண்ணனேயாமெனத் துணியப்படும். அன்றியும், இவ்வெண்பாவைச் சொல்லி “இதனுள் உபகேசியார் நப்பின்னைப்பிராட்டியார்” என நேமிநாத விருத்திகாரர் கூறிவைத்துள்னமையானும். இவ்வடிகட்கு இப்பொருளின் இயைபுடைமை வலிபெறுவதாகும். இன்னும், மேற்செய்யுளிற் “பின்னையை மணந்த கண்ணன் வடமதுரைக்கு அச்சாணியானாற்போல், வையைவளந்தரு தென்மதுரைக்குத் தமிழ்ப்பெருநாவலர் அச்சாகிநிற்பர்” என நல்கூர் வேள்வியார் பாராட்டிப்பாடியுள்ளார். இதிற் கீதைபாடிய கண்ணனால் வடமதுரை சிறந்தவாறு, குறளால் அறம்பாடிய வள்ளுவரால் தென்மதுரை சிறந்த தென. உவமான உவமேயப் பொருத்தமும் விசதமாகிறது. இவ்வளவு பொருத்தமுடனியங்கும் இப்பாவிற் குறளும் கீதையும் உறழும் நயந்தெரித்த புலவர்-வாளா “உபகேசிதோண்மணந்தான்” என உவமானத்தில் அடைகொடுத்து உவமேயத்தில் அதற்கு ஒப்புமை குறியாமல்-உவமையடை பொருளில் சொற்றொடராக நிற்க வைத்திருப்பரென்பதினும், அவ்வடைக்கேற்ப உவமேயத்திற் குறளாசிரியரும் விசேடணஞ் சொல்லியிருப்பரெனக் கொள்ளுதல் இழுக்கா தன்றே? மூன்றாமடியில் ‘மறுவில்’ என்பது ‘மருவு’ என்பதன் திரிபாடமாகக் கொள்ளிற் செய்யுளிற் சொல்லிசையும் பொருணயமும் சிறப்பதுடன், முற்றுவமை முழுநலமும் பெறுவதாகும்.
இனி ‘மறுவில்’ என்பதன் இரண்டாம் வல்லெழுத்தை மாற்றி மருவில் என இடையெழுத்தாக்கி நிறுத்தினும் இழுக்காது. உண்மையான பாடம் இதுவெனத் துணிதற்கில்லை. எதுவாயினும், “பின்னையை மணந்து கீதை பாடிய கண்ணன் வடமதுரைக்கு அச்சாவது போலவே மாதானுபங்கியை மருவிக் குறணூல் பாடி உலகுய்ய உதவிய பெரு நாவலர் தென் மதுரைக்கு அச்சாவார்” எனக்கொள்வது பொருத்தம் மிகவுடைத்தென்பதில் ஐயமில்லை. மாதானுபங்கியென்பதைத் தேவர் பெயராக்குவதினும் மனை மாண்ட அவர் அறமனையாளின் பெயராக்குவது மிகப்பொருந்தும். அன்னை போலொழுகுபவர் என வலிந்து பொருள்கொண்டு நாயனாருக்காக்க வேண்டு மிப்பெயரில், அப்பொருள் கொள்ளுமாறில்லையென ஸ்ரீ அ. குமாரசுவாமிப் புலவரவர்கள் முன்னமே செந்தமிழில் விளக்கியுள்ளார்கள். மாதம்=மதம்+பங்கி=கெடுத்தவன் எனப் பிரித்துச் “சுய கர்வத்தைப் பங்கஞ் செய்தடங்கியவர்” என்னும் பொருளுடையதாக்கி, வள்ளுவருக்கு இப்பெயர் கொள்ளுவதும் சிறப்பும் செவ்வியும் உடையதில்லை. வேதங்களுக்குப் பின் பாவலர் யாவருக்கும் முன் முதற் கவியாவாரான வான்மீகியாரை ‘ஆதிகவி’ என வடமொழியாளர் காரணச்சிறப்பியற்பெயரால் வழங்குவது போலவே, தமிழகத்திற் பழம்பண்டைப் பெருநாவலரான வள்ளுவரை “முதற்பாவலரென” வழங்கி வருதல் பொருத்தமும் சிறப்பும் உடைத்தாம்.
அத்தொல்லை நல்லாசிரியர்க்கு இடர்ப்பட்டமைவதாகும் வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதில் நயனும் பயனும் இல்லை. அன்றியும் பொருளொடுசிறந்த பயனுடை மொழிகளால் யாப்புறவுற்ற மேற்கவியில் திருவள்ளுவர்க்கு மட்டும் இரு வெறும்பெயர் பெய்துவைத்து, உவமான உவமேய விசேடணங்களுக்கு இயைபுகுன்றும்படி நல்கூர் வேள்வியார் செய்யுள் செய்திருக்கமாட்டார் அன்றே. ‘மாதானுபங்கி’ என்பது தேவர் திருத்தேவியாருக்கு இயற்பெயராயினும் – அன்றிச் சிறப்புப்பெயராயினும் ஆகுக. அத்திரி முனிவரின் மனைவி அனசூயை போல அறவோரும் அறிவருமான குறளாசிரியர்மனையறத் துணைவியாரும் அவர்காலத்தே அறந்தலைநின்று சிறந்த பெருந்தேவியாராகையால், அவ்வம்மையாரை மணந்து உயர்ந்த தேவரின்பெருமை இவ்வினிய பழைய வெண்பாவிற் பாராட்டிப் பாடப்பெற்றுள்ளது. வாசுகி யென்பது அவர் இயற்பெயர் என்பதற்கு நாம் கேட்டுவரும் அடியற்ற கதையொழியப் பிறிது பிரமாணமில்லை. ஒருகால் அதுவே அவ்வம்மையாரின் பெயராமேனும், தேவரை வள்ளுவரெனும் இயற்பெயராற் சுட்டாது செந்நாப் போதார் எனும் அவர் சிறப்புப்பெயரால் இக்கவியிற் புகழும்புலவர், இவர் தேவியாரையும் அவருக்கேற்ற சிறப்பியற்பெயர்கொண்டு ‘மாதானுபங்கி’எனப் புனைந்து பாராட்டுவதும் பொருத்தமேயாம்.



