
பவள மல்லிகை
கி.வா. ஜகந்நாதன்
யார் தெய்வம்?
“டேய், சொக்கலிங்கம், எங்கேயடா கார்? கம்பெனிக்குப் போக நாழிகை ஆகிவிட்டதே!” என்று டிரைவரைக் கேட்டார் சங்கரலிங்க செட்டியார்.
“சின்ன எசமான் கொண்டு போயிருக்கிறார். இதோ அஞ்சு நிமிஷத்திலே வந்துவிடுவார்” என்று பதில் அளித்தான் சொக்கலிங்கம்.
“அஞ்சு நிமிஷமாவது, பத்து நிமிஷமாவது! அவன் எந்தச் சிநேகிதனை எங்கே கொண்டு போய்விடப் போயிருக்கிறானோ! கார் நமக்குச் சமயத்துக்கு உதவுகிறதில்லை; ஊராருக்கெல்லாம் உதவுகிறது. ஜம்பத்துக்கு நமக்கும் கார் இருக்கிறது, டிரைவர் இருக்கிறான் என்று சொல்லிக் கொள்கிறோம். இவன் என்னடா என்றால், பொழுது விடிந்தால் பொழுது போனால் காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவதும், ஊரார் கைங்கரியம் செய்வதுமாகவே இருக்கிறான். எப்படியாவது போகட்டுமென்றாலோ, மனசு கேட்க மாட்டேனென்கிறது. போகிற இடத்துக்கு டிரைவரைக் கூட்டிக்கொண்டு போனால் என்ன? சிறு பிள்ளைத்தனம், கண் மண் தெரியாமல் ஓட்டுகிறானாம். அந்த ‘ஸ்டீயரிங்’கைக் கையிலே பிடித்தாலே எல்லாப் பயல் களுக்கும் ஒரு வெறியல்லவா வந்து விடுகிறது ? நாள் தவறாமல் கார் விபத்து என்ற சமாசாரம் பத்திரிகையில் வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குப் பகீர் என்கிறது ….”
“சின்ன எசமான் வந்துவிட்டார்” என்று டிரைவர் இடையிலே அவர் பிரலாபத்தை நிறுத்தினான்,
“வந்துவிட்டானா? எங்கே, இப்படிக் கூப்பிடு.”
ராமமூர்த்தி வந்தான். கட்டிளங்காளை. ஒய்யாரமான கோலம். வாட்ட சாட்டமான மேனி.
“என்ன, கூப்பிட்டீர்களா?”
“ஆமாம்; இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?”
“என் சிநேகிதன் ஒருவனைப் பார்க்கப் போயிருந்தேன்,”
“தினமும் இந்தச் சிநேகிதர்கள் தாமா? போகிறது தான் போகிறாயே, இந்தச் சொக்கலிங்கத்தை ஓட்டச் சொல்லி அழைத்துப் போகக் கூடாதா?”
“அவனுக்கு ஓய்வு வேண்டாமா?”
“அவன் இங்கே என்ன, இருபத்துநாலு மணி நேரமுமா கார் ஓட்டுகிறான்?”
“நம் காரை நாமே ஓட்டுவதில் எத்தனையோ நன்மை உண்டு”
“நன்மை உண்டு என்று சொல்லுகிறாயே ஒழிய, அதில் இருக்கிற தீமையைத் தெரிந்து கொள்ளவில்லையே! பல வருஷம் டிரைவராக இருந்தவனெல்லாம் பிளாட் பாரத்தின் மேலே வண்டியை ஓட்டி ஆட்களைச் கொலை பண்ணிவிடுகிறான். நீ இன்னும் சரியாகக் கார் விடக் கற்றுக்கொள்ளவில்லை. ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது?”
“அப்படி யெல்லாம் முட்டாள் தனமாக நான் நடந்து கொள்வேனென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?”
“முட்டாள் தனமா? ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்களே! அப்படிப் போதாத காலமாக இருந்து ஏதாவது நேர்ந்தால் ஆபத்து , அவமானம், நஷ்டம் எல்லாம் வந்து விடுமே!”
“என்ன இப்படி ஒரே காபராப் படுகிறீர்களே; உலகத்தில் கார் வைத்திருக்கிறவர்களெல்லாம் தாங்களே ஓட்டுவதென்பது வழக்கமாக வந்து விட்டது இப்போது நீங்கள் கர்நாடகமாகப் பேசுகிறீர்களே! உங்கள் பேச்சை யாராவது கேட்டால் சிரிப்பார்கள்.”
சங்கரலிங்க செட்டியார் கர்நாடகப் பேர்வழி என்பது வாஸ்தவந்தான். ஆனாலும் அவர் பயப்பட்டதற்குக் காரணமும் இல்லாமற் போகவில்லை. டிரைவர் சொக்க லிங்கமே சொல்லியிருக்கிறான், “சின்ன எசமான் கையிலே காரு காத்தால்ல போவுது” என்று. அவன் ஆச்சரியப் பட்டுச் சொன்னான். செட்டியாருக்கோ அடிவயிற்றில் பகீரென்றது. ராமமூர்த்தி காரைக் கொஞ்சம் உற்சாகத்தோடு ஓட்டுவான். தனக்குப் பின்னால் யாராவது குழல் ஊதினால் போதும்; லேசிலே அவனுக்கு இடம் கொடுக்க மாட்டான். இந்த வெறி எப்படியோ குதிரை வண்டிக்காரன் முதல் கார் ஓட்டுகிறவர் வரையில் எல்லோருக்கும் பொதுவாகப் போய்விட்டது.
அன்று காலை சரியாக ஆறு மணி இருக்கும். அவசர அவசரமாக யாரையோ பார்ப்பதற்காகக் காரிலே புறப் பட்டான் ராமமூர்த்தி. ஐந்து மைல் போகவேண்டும். பத்து நிமிஷத்தில் போய்விடலாம், ரோட்டில் தடையில் லாமல் இருந்தால். அவன் வேகமாகப் போனான். இரண்டு மைல் போயிருப்பான், முன்னால் ஒரு குதிரை வண்டி போய்க்கொண்டிருந்தது. எதிரில் இருந்து ஒரு மொட்டை வண்டி மூங்கிற் கழிகளைப் பாரமாக ஏற்றிக்கொண்டு வந் தது. குதிரை வண்டிக்கு அருகில் கார் வரும்போது வலப் பக்கத்தில் மூங்கில் வண்டி வந்து விட்டது. வண்டிக்காரன் நேராக ஓட்டாமல் வண்டியை ஒடித்தால் மூங்கில் வழியைத் தடுத்துவிடும். ஆகவே அவன் கண்ணை மூடிக் கொண்டு நேரே ஓட்டினான்.
எப்படி நேர்ந்ததென்று தெரியாது; முன்னே போன குதிரை வண்டியின் மேல் கார் மோதிவிட்டது. குதிரை முன்னாலே தள்ளப்பட்டுக் கீழே விழுந்தது. வண்டிக் குள்ளே இருந்தவர்கள் கீழே விழுந்தார்கள்.
ராமமூர்த்தி ‘பிரேக்’ போட்டான். காருக்கு அவ்வளவு சேதம் இல்லை. ஆனால் இதுவரைக்கும் இத்தகைய விபத்து நேர்ந்ததே இல்லை. அதுவும் அன்று காலை நேரத்தில் யாரோ ஒரு காலேஜ் மாணவிக்கு உபகாரம் செய்வதற்காக அவன் போய்க்கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. வேர்த்து வெலவெலத்துப் போயிற்று.
மூங்கில் வண்டிக்காரனும் அவனுடன் இருந்த கூட்டாளியும் இறங்கி வந்துவிட்டார்கள். குதிரை வண்டிக் காரனும் வந்துவிட்டான்.
வண்டியிலிருந்து விழுந்தவர்கள் இரண்டு மூன்று பேர் . யாரோ ஒரு பெண்; இருபத்தைந்து வயசு மனிதன் ஒருவன்; மற்றொரு கிழவன். அவர்களுக்குப் பலமான அடி இல்லாவிட்டாலும் கொஞ்சம் சிராய்த்து விட்டது.
ராமமூர்த்தி கூட்டத்தைக் கண்டதும் அதிகமாகப் பயந்துவிட்டான்; எப்படித் தப்புவது என்று தோன்றவில்லை. சில நிமிஷ நேரம் அவன் நரக வேதனையை மானசிகமாக அநுபவித்தான். மெதுவாகக் குதிரை வண்டிக்காரனைக் கூப்பிட்டான். பத்து ரூபாய் நோட்டை அவன் கையில் அழுத்தினான். “அவர்கள் எங்கே போக வேண்டும்? கேட்டுச் சொல். இந்தக் காரிலேயே கொண்டு போய் விட்டு விடுகிறேன்” என்றான்.
ரூபாய் கையில் வந்தவுடன் வண்டிக்காரன் கோபமெல்லாம் எங்கேயோ ஓடி ஒளிந்து விட்டது. “அது கிடக்குது ஐயா! நீங்க வேணுமுன்னா வந்து மோதினீங்க? அந்த மூங்கி வண்டி வராட்டி நீங்க ராச பாட்டையாப் போயிருப்பீங்க” என்று சொல்லி, “நீங்க போங்க. அவங்களை நான் பார்த்துக்கிறேன்” என்று தைரியம் கூறினான். ராமமூர்த்தி மறு பேச்சுப் பேசாமல், தலை தப்பியது வியமென்று வீட்டுக்குக் காரைத் திருப்பி விட்டான். வரும்போது அவனுக்கு எவ்வளவோ யோசனை. ‘விழுந்தவர்கள் ஏன் நம்மிடம் வந்து ஒன்றும் பேசவில்லை அவர்கள் யாராவது போலீஸ்காரனுக்குச் சொல்லிவிட்டால் என்ன செய்வது?’ என்றெல்லாம் அவன் மனசு உதைத்துக் கொண்டது. அன்று ராத்திரி முழுவதும் அவனுக்குத் தூக்கமே இல்லை.
பிறகு நாலு நாள் காரின் முன் ஸீட்டில் கூட அவன் உட்காருவதில்லை. ஏதாவது கேஸ், கீஸ் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். தகப்பனாருடைய வாக்குப் பலித்துவிடுமோ என்ற எண்ணம் வேறு. பிறகு அவர் முன் தலை காட்டுவது எப்படி?
ஒரு வாரம் ஆயிற்று. ஒரு நாள் சாயங்காலம் வீட்டு வாசல் பக்கத்தில் உள்ள மேடைமேல் அமர்ந்து கொண்டிருந்தான் ராமமூர்த்தி. அப்போது யாரோ இரண்டு பேர் காம்பௌண்டுக்குள் நுழைந்து வந்தார்கள். ஆண் பிள்ளை ஒருவன்; பெண் பிள்ளை ஒருத்தி; அந்த ஆள் கையில் ஏதோ சிறிய கூடை வைத்திருந்தான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் எங்கேயோ கண்டமாதிரி இருந்தது. நினைத்துப் பார்த்தான் ராமமூர்த்தி. ‘ஆம், குதிரை வண்டியிலிருந்து விழுந்த பெண்தான்!’ அவனுக்கு மூச்சே ஒரு கணம் நின்று விட்டது.
“யார்?” என்று வாய் கேட்டது. மனமோ நடுங்கியது.
வந்தவன் ஒன்றும் பேசவில்லை. நேரே நெடுஞ்சாண் கிடையாக ராமமூர்த்தி காலில் விழுந்தான். பிறகு கூடையிலிருந்து வெற்றிலை பாக்குப் பழம் எடுத்து அவன் முன் வைத்தான். “ஹூம்! நீயும் உளுந்து கும்பிடு” என்று அந்தப் பெண்ணை ஏவினான். அவளும் வணங்கினாள். ராமமூர்த்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவன் பிரமையைப் போக்க அந்த ஆளே முன் வந்தான்.
“சாமி, எங்க அத்தை புருசன் சொக்கலிங்கம் சொன்னாரு, எசமான் தான் அந்தக் காரு ஓட்டினவருன்னு” என்று ஆரம்பித்தான்.
“அண்ணைக்கித் தெய்வம் மாதிரி நீங்க காரை இடிக்கங் காட்டியும் அந்தக் கெயவனுக்குப் புத்தி வந்துதுங்க. மறுநாளே இவளைக் காசுக்கு வித்துப்புடறதுன்னு கொண்டு போனானுங்க.”
“என்னா இப்படிச் சொல்றே? அவங்க ஏதாச்சும் நெனச்சுக்கப் போறாங்க.”
“பின்னே என்ன எசமான்? தாயில்லாப் புள்ளெயேத் தகப்பன் காரன் நல்லா வளத்து, அது இஸ்டம் போலக் கட்டிக் குடுக்கிறது நாயமுங்க. எவனோ ஒருத்தன் தன்னைக் காட்டியும் கௌவன், அவனுக்குப் பணம் இருக்குதுன்னு கொண்டு போய்த் தள்ளிடுறதுங்களா? அது என்னாங்க, யோக்கியமான காரியமா? வெலைக்கு விக்கிறமாதிரி இல்லேங்களா? சாமிக்கே பொறுக்கல்லே. வண்டி யெக் கொடெ சாச்சுப் பிடுத்துங்க. நீங்கதான் தெய்வமா வந்து ஒதவினீங்க.”
அவன் உற்சாகத்தில் தலைப்பு, நடு ஒன்றும் தெரியாமல் பேசினான். ராமமூர்த்திக்குத் தெளிவாகவில்லை,
“ஆமாம்! அந்தக் குதிரை வண்டியிலே இந்தப் பெண் எங்கே போனாள்?” என்று கொஞ்சம் தைரியம் பெற்றுக் கேட்டான்.
“அதுதானுங்க, இதோட தகப்பன்காரனும் சித்தப்பன்காரனும் சேந்துக்கிட்டுப் பண்ணின ரோசனைங்க. இவ தாயார்க்காரி போன வருசத்துக்கு முந்தின வருசம் பூவுங் குங்குமமுமாப் போயிட்டா. அவ இருக்கச் சேலே இவளை எனக்குக் கொடுக்கணு மின்னு பேச்சு இருந்துதுங்க. அப்பாலே பாருங்க, இந்தக் கெயவனுக்குக் காசாசை வந்திடுச்சு. அவன் தம்பிக்கு மச்சானாம் ஒரு கெயவன்; அவன் கிட்டே கொண்டு போய்த் தள்ளப் போனாங்க. அந்த மவராசி தெய்வமாயிருந்து தன்னோடெ ஆசையை நெறைவேத்திக்கினா.”
“விசயத்தே நல்லாத்தான் சொல்லேன்” என்றாள் அந்தப் பெண்.
“இன்னும் என்னாத்தைச் சொல்லுறது? வண்டி உயுந்ததும் கெயவனுக்குப் புத்தி வந்தது. சித்தப்பன் காரன் ஒபதேசம் பலிக்கல்லை.”
“ஆமா! நான் செஞ்சதையும் சொல்லேன். எனக்கு அப்பிடித் தோணாட்டி இதெல்லாம் நடக்குமா?” என்று மறுபடியும் அந்தப் பெண் பேசினாள்,
“இவ பெருத்த கில்லேடிங்க. அந்தக் கெயவன் இவ கிட்டே அம்பிடாமே தப்பிச்சிக்கினான். அது கெடக்குது. இவ ஒரு தந்தரம் பண்ணினா பாருங்க. கீயே உயுந்து எயுந்திருந்த உடனே அம்மா ஒன் வாக்குப் பலிச்சுதுன்னா. அதென்ன வாக்குன்னு அப்பன் காரன் கேக்க, நேத்துச் சொப்பனத்திலே அம்மா வந்து நான் பாத்துக்கிறேன், பயப்படாதேன்னு சொன்னதாக இவ சொல்ல, அதை அந்த அப்பாவி நெசமான் காட்டியுமுன்னு நம்பிக் கிட்டான்.
“அப்பாலே தம்பி பேச்சு காதிலே உயலை. சாமி எங்களைப் புருசன் பொஞ்சாதியா ஆக்கிட்டுது. எல்லாம் நீங்க நட்ட மரமுங்க.”
“அது சரி; நான் தான் அன்று வண்டியில் மோதினவனென்று உனக்கு எப்படித் தெரியும்?”
“அதென்ன அப்பிடிச் சொல்றீங்க? இந்தப் பொண்ணு அங்க அடையாளம் சொல்லிச்சு. எங்க அத்தை புருசன் உங்களைக் காட்டியிருக்காரு வண்டியோடே மாதிரியும் இவ சொன்னா. கண்டு பிடிச்சிட்டேனுங்க. நல்லா ஆசீர்வாதம் பண்ணுங்க.”
அவன் மறுபடியும் தன் காலில் விழும் பொழுது ராமமூர்த்திக்குத் தன் கண்களையும் காதுகளையும் நம்பவே தோன்றவில்லை.
பவள மல்லிகை
கி.வா. ஜகந்நாதன்
ஜோடி மரப்பாச்சி
“உங்களுக்கு மரப்பாச்சி விற்கும் கடை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டாள் கோமதி.
அப்போதுதான் சங்கரன், காரியாலயத்திலிருந்து வந்தவன் சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தான்.
“ஏன்? எதற்காகக் கேட்கிறாய்? நம் வீட்டில் இருக்கிற மரப்பாசிகள் போதவில்லை என்று கேட்கிறாயா? நேற்றுத்தானே பெட்டி நிறையக் கொலுச் சாமான்கள் ஊரிலிருந்து வந்திருக்கின்றன? அதில் ஊர்ப்பட்ட மரப்பாச்சி இருக்குமே; பார்த்தாயோ?”
“இன்றைக்குத்தான் பெட்டியை உடைத்துப் பார்த்தேன். ஒரு மரப்பாச்சிக்கு ஏற்ற ஜோடி வேண்டும். அதற்காகத்தான் கேட்டேன்.”
“ஜோடி வேண்டுமென்று சொல்கிறாயே; அது ஒற்றை மரப்பாச்சியாக இருக்கக்கூடாதோ?”
சங்கரன் சட்டையைக் கழற்றிவிட்டுத் துண்டை மேலே போட்டுக்கொண்டான். முகத்தை அலம்பிக் கொண்டு வந்து நாற்கலியில் உட்கார்ந்தான். கோமதி சுடச்சுடக் காபியைக் கொண்டுவந்து ஆற்றினபடியே பேசினாள்.
“ஜோடி மரப்பாச்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்த ஜோடியில் ஒன்று கால்பக்கம் கரிந்திருக்கிறது. முதல் முதலாகக் கொலு வைக்கிறோம். அந்தக் கரிந்த மரப் பாச்சியை வைக்கலாமா? பெரிய மரப்பாச்சிகள் அவை; ஆணும் பெண்ணுமாக இருக்கின்றன. ஆணுக்குப் பாசிச் சல்லடம் போட்டிருக்கிறது. பழைய காலத்தில் இந்த மரப்பாச்சிகளுக்குத்தான் மதிப்பு.”
ஒரு தம்ளரில் காபியைச் சங்கரன் கையில் கொடுத்தாள். அவன் அதைக் குடித்தான். தன் கையில் இருந்த டபராவிலிருந்து மிச்சக் காபியைக் கொஞ்சம் கொஞ்ச மாகத் தம்ளரில் விட்டாள்.
“என்ன யோசிக்கிறீர்கள்? மரப்பாச்சி விற்கிற கடை ஞாபகத்துக்கு வரவில்லையா?”
சங்கரன் நெற்றியைச் சுருக்கிக்கொண்டான். “நீ சொன்னாயே, அந்த மரப்பாச்சியில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; இல்லையா?” என்று அவன் கேட்டான்,
கோமதி சிரித்தாள். “அதைத்தானே நான் சொல்கிறேன்? நீங்கள் வேறு எங்கேயோ ஞாபகமாக இருக் கிறீர்கள் போலிருக்கிறது. இப்போது சாப்பிடுவது காபி என்றாவது தெரிகிறதா, இல்லையா?” என்றாள்.
சங்கரன் காபியின் கடைசிப் பகுதியைக் குடித்து விட்டுத் தம்ளரை அவள் கையிலே கொடுத்தான்; அதோடு புன்னகை பூத்தபடியே அவள் கன்னத்தை லேசாகத் தட்டி விட்டு, “அடே. நான் காபியா குடித்தேன்? அது தெரியவில்லையே! அமிர்தத்தையல்லவா ரம்பை கொடுத்துச் சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்?” என்றான்.
“போங்கள்; உங்களுக்கு எப்போதும் வேடிக்கை தான்” என்று கொஞ்சலாகச் சிணுங்கினாள் கோமதி.
“அந்தப் பொம்மைகளையெல்லாம் எங்கே வைத்திருக்கிறாய்? எல்லாவற்றையும் பார்த்துவிட்டாயா?” என்று கேட்டான் சங்கரன்.
“அடேயப்பா! ஒரு நாளில் முடிகிற காரியமா அது? ஒரே குப்பை, தூசி, அழுக்கு மண்டிக் கிடக்கின்றன. சோழி வகையராவே ஒரு கூடை இருக்கும். உங்கள் அப்பா எத்தனை தரம் ராமேசுவரம் போனார்?”
“என்னைப் பெறுவதற்கு முன்பு ஒரு தடவை போயிருக்கலாம்.”
“இல்லை, இல்லை. மாசத்துக்கு ஒரு தடவை போய், ஒவ்வொரு தடவையும் சோழி, சங்கு, ராவணன் விழி எல்லாம் வாங்கி வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இத்தனை சோழி எப்படி வரும்?”
“இருக்கலாம். எனக்கு அவ்வளவு தூரம் துப்பறியும் திறமை இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்குத் தெரியும். எங்கள் அப்பா ராமேசுவரம் போய்த் தவம் கிடந்து என்னைப் பெற்றார். உங்கள் அப்பா வேண்டாம் வேண்டாம் என்று இருக்கிறபோதே நீ பிறந்தாய்.”
கோமதிக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. “உங்களுக்கு ஞான திருஷ்டி உண்டோ?”
“இதற்கு ஞானதிருஷ்டி எதற்கு? நீ உங்கள் வீட்டில் ‘நாலாவது பெண். உன் அக்காவுக்குச் சம்பூர்ணம் என்று பெயர் வைத்திருக்கிறாரே உன் அப்பா. அதுவே சொல்லாதா, நீ வரவேற்பில்லாமலே உலகிற் குடி புகுந்தவள் என்று?
“அதற்காக, நான் பிறந்தவுடன் என் கழுத்தை முறித்துப்போடவில்லை என்று குற்றம் சுமத்துகிறீர்களோ?” கோமதியின் தொனியில் அழுகை கூடக் கலந்துவிடும் போல் தோன்றியது.
“சீ, பைத்தியம்! உன்னை யார் வரவேற்றாலும் வர வேற்காவிட்டாலும் எங்கள் வீடும் என் உள்ளமும் வரவேற்றன, ராணியாக ரம்பையாக ஏற்றுக்கொண்டு விட்டன என்பதை மறந்துவிட்டாயோ?”
“போதுமே உங்கள் ஸ்தோத்திரம்! கிள்ளுகிறது, பிறகு தொட்டிலை ஆட்டுகிறது. இந்தக் கலையில் நீங்கள் கெட்டிக்காரர்கள் தாம்.”
“அப்படிச் சொல்லாதே ! இதெல்லாம் இட்டிலிக்குச் சட்டினி போல, அல்வாச் சாப்பிட்ட வாய்க்கு மிக்ஸ்சர் தருவது போலே!” என்று சொல்லிச் சிரித்தான் சங்கரன்.
“ரொம்ப அழகு தான் போங்கள். கரிந்துபோன மரப்பாச்சியை மாற்றவேண்டுமென்று ஆரம்பித்தேன். பதில் மரப்பாச்சி வாங்கிவர வக்கில்லை. இட்டிலியாம் சட்டினியாம், அல்வாவாம் மிக்ஸ்சராம்”
“கோபங்கொள் ளாதடி மானே உன்றன்
குறிப்பை அறிந்து நான் ஏவல்செய் வேனே”
என்று முதல் நாள் பார்த்த சினிமாவில் இருவரும் கேட்டு ரசித்த பாட்டைப் பாடினான் சங்கரன். கோமதிக்கு இருந்த கோபமெல்லாம் எங்கேயோ போய்விட்டது. களுக்கென்று சிரித்துவிட்டாள்.
“சரி, விளையாடாதீர்கள். மரப்பாச்சி அகப்படுமா, அகப்படாதா, சொல்லுங்கள்” என்றாள் கோமதி.
மறுபடியும் சங்கரன் சிறிது யோசனையில் ஆழ்ந்தான். பிறகு, “எங்கே, அந்த இரண்டு மரப்பாச்சிகளையும் எடுத்துக்கொண்டு வா; பார்க்கிறேன்” என்றான்.
அவள் இரண்டு பெரிய மரப்பாச்சிகளையும் எடுத்துக் கொண்டு வந்தாள். ஒவ்வொன்றும் ஒரு முழ உயரம் இருந்தது. ஒன்று ஆண் ; ஒன்று பெண். ஆண் மரப் பாச்சியின் பீடத்திலும் காலிலும் நெருப்பில் எரிந்து பொக்கையான இடங்கள் இருந்தன. “பார்த்தீர்களா? இந்த ஆண் மரப்பாச்சிக்குப் பதில் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்கும்; கிடைக்குமா?” என்று கோமதி கேட்டாள்.
சங்கரன் அந்த இரண்டையும் பார்த்தான். கருகிய மரப்பாச்சியை வாங்கினான். கொஞ்ச நேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தான். ஏதோ யோசனையில் ஆழ்ந் தவனாய்ப் பிறகு பெருமூச்சுவிட்டான்.
“என்ன, இப்படி அடிக்கடி யோசிக்கிறீர்களே?” என்று கோமதி கேட்டாள்.
“ஒன்றும் இல்லை. இந்த இரண்டு மரப்பாச்சிகளையும் பிரிக்கக்கூடாது. இது கரிந்திருந்தாலும் குற்றம் இல்லை. ஆடை அலங்காரத்தால் பார்க்கிறவர் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துவிடலாம்” என்று சங்கரன் சொன்னான்.
“அதை மறைக்கலாம்; ஆனால் மூளி மூளிதானே?” என்று கேட்டாள் கோமதி.
“அது பார்க்கிறவர் கண்ணுக்கு மூளியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது வாழ்க்கையில் பெரிய மூளியை மறக்கச் செய்தது என்பதை உணர்ந்தால் மூளியாகத் தோன்றாது.”
“என்ன இது? புதிர் போடுகிறீர்களே!”
“ஆமாம். விஷயம் தெரிகிறவரைக்கும் அது புதிர் தான். எங்கள் அம்மா இந்த மரப்பாச்சியைக் கண்போல் பாதுகாத்து வந்தாள். இதையே கொலுவில் வைத்துக் கொண்டாடினாள். இதுதான் அவள் பிற்கால வாழ்க்கை யில் ஆறுதல் தந்தது. கதையைக் கேட்கிறாயா?”
“சொல்லுங்கள்; கேட்கிறேன்.” கோமதி அப்படியே கீழே உட்கார்த்துகொண்டாள்.
எங்கள் அப்பாவை நீ பார்த்ததில்லை. எனக்கே அவர் ஞாபகம் சரியாக இல்லை ; கனவில் கண்டது போல இருக்கிறது. எங்கள் ஊரில் அம்மா பிறந்த வீடும் எங்கள் வீடும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தன. இரண்டு குடும்பத்தினரும் பந்துக்கள். சின்ன வயசு முதற்கொண்டே இரண்டு குடும்பத்துக் குழந்தைகளும் பழகி வந்தன. அப்பா பெரிய குழந்தையாக இருந்தாலும் விளையாடுவதில் அதிக ஆசையாம். ஒரு நாள் இரண்டு வீட்டுக்காரர்களும் மரப்பாச்சி வாங்கினார்கள். ஒரு ஜோடி மரப்பாச்சியை வியாபாரி கொண்டு வந்திருந்தான். ஆண் பொம்மையை எங்கள் அப்பா வீட்டில் வாங்கினார்கள். பெண் பொம்மையை அம்மா வீட்டில் வாங்கினார்கள். இரண்டு குழந்தைகளும் அந்த மரப்பாச்சிகளை வைத்து விளையாடினார்கள். இரண்டையும் வைத்துக் கல்யாணம் செய்வது, விருந்து வைப்பது இப்படியாக விளையாடினார்கள்.
ஒரு நாள் என்ன தோன்றிற்றோ என்னவோ, இரண்டு குழந்தைகளும் மரப்பாச்சியை மாற்றிக்கொண்டார்கள். ஆண் பொம்மையை அம்மா வாங்கிக்கொண் டாள். பெண் பொம்மை அப்பாவிடம் போயிற்று ஒன்று சொல்ல மறந்து விட்டேனே: எங்கள் அம்மா வைப் பெற்ற ஒரு வருஷத்தில் பாட்டி காலமாகிவிட்டாள். ஆகவே தாத்தா இரண்டாந்தாரம் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அம்மாவிடம் அந்தச் சித்திக்கு அவ்வளவு பிரியம் என்று சொல்ல முடியாது. ஒரு நாள் அந்தச் சித்திப் பாட்டி அம்மாவைக் கூப்பிட்டிருக்கிறாள். அம்மா, மரப்பாச்சியை வைத்துக் கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். இரண்டு மூன்று முறை கூப்பிட்டும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குழந்தையின் மேல் சித்திக்குக் கோபம் வந்தது. ஏதோ அடுப்பில் காரியமாக இருந்தவள், வந்தாள். நறுக்கென்று அம்மா தலையில் ஒரு குட்டுக் குட்டி விட்டு, அந்த மரப்பாச்சியைப் பிடுங்கிக்கொண்டு போனாள். அதை என்ன செய்தாள் தெரியுமோ? அப்படியே அடுப்பில் வைத்துவிட்டாள்.
“ஐயோ! அடுத்த வீட்டு மாப்பாச்சி!” என்று குழந்தை கத்தினாள். சித்தி அதைக் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. தற்செயலாக ஒரு பாட்டி அப்போது வீட்டுக்குள் வந்தாள். குழந்தை அழுவதைப் பார்த்துவிட்டு உள்ளே போனாள். மரப்பாச்சி அடுப்பில் இருப்பதைப் பார்த்தாள்.
“அடி பாவி! என்ன காரியம் செய்துவிட்டாய் மரப்பாச்சியை அடுப்பில் வைப்பார்களோ? உனக்குக் குழந்தை குட்டி பிறக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லையோ?” என்று சொல்லி அதைப் பிடுங்கித் தண்ணீரைக் கொட்டி அவித்தாள். மரப்பாச்சியின் அடிப்பாகந்தான் எரிந்தது. அந்தப் பக்கத்தை அடுப்பிலே வைத்திருந்ததனால், நல்ல வேளையாக முகம் தீப்படவில்லை.
”இனிமேல் இந்த மாதிரி காரியம் செய்யாதே. உயிருடன் குழந்தையைக் கொளுத்துவதும் சரி; மரப்பாச்சியை எரிப்பதும் சரி” என்று சொல்லிவிட்டுப் போனாள் பாட்டி.
அது முதல் சித்திக்குப் பயம் பிடித்துக்கொண்டது. தான் செய்த அசட்டுக் காரியத்தால் என்ன கெட்ட பலன் உண்டாகுமோ என்று அஞ்சினாள். பாட்டி சொன்னது போலக் குழந்தை குட்டி பிறக்காமல் போய்விட்டால் -? அவள் மனசு தவியாய்த் தவித்தது. அந்த மரப்பாச்சியைப் பார்த்தாள். என் அம்மா மூலையில் விக்கி விக்கி அழுது கொண்டிருப்பதையும் கவனித்தாள், மரப்பாச்சியை நன்றாகத் தேய்த்து அலம்பி அம்மாவிடம் கொடுத்து, “அழாதே அம்மா; கூப்பிட்டால் உடனே வரவேண்டாமோ? அதனால் தான் சித்தி கோபித்துக்கொண்டாள். இனிமேல் கோபித்துக் கொள்ள மாட்டாள்” என்று சொல்லிக் குழந்தையைச் சமாதானப்படுத்தினாள். அது முதல் சித்தி அம்மாவைத் தன் குழந்தையைப் போலவே சீராட்டி வர ஆரம்பித்தாளாம்.
பகவானுடைய சோதனையைப் பார். பிறகு சித்திக்குக் குழந்தையே பிறக்கவில்லை. அம்மாவே அவளுக்குக் குழந்தையாய் விட்டாள். இந்தப் பொம்மைதான் சித்தியின் மனசை மாற்றக் காரணமாக இருந்தது. அதனால் அம்மாவுக்கு இதனிடம் ஒரு தனியான விசுவாசம்.
முதலில் அம்மா, இந்த மரப்பாச்சியை அப்பாவிடம் கொடுத்து விடலாமென்று தான் எண்ணியிருந்தாள். இது மூளியாகப் போனவுடன், அவரிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டாள். அவர்கள் விளையாட்டு மாத்திரம் எப்போதும் போலவே நடந்துகொண்டிருந்தது.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் ஆயிற்று. பெரியவர்களாகிக் குடித்தனம் நடத்தினார்கள். அப்பாவும் சரி , அம்மாவும் சரி, இந்தப் பொம்மை இரண்டையும் பிரிக்காமல் சேர்த்தே வைக்க வேண்டுமென்று நினைத்தார்கள். மூளி என்று மாற்றவில்லை. குழந்தைப் பருவ விளையாட்டுகளையும், கிடைக்காத அன்பைக் கிடைக்கப் பண்ணின சிறப்பையும் அவர்கள் எண்ணி எண்ணி மகிழ இந்தப் பொம்மைகள் காரணமாயின.
அப்பாவைவிட அம்மாவுக்கு இந்தப் பொம்மையிடம் பிரேமை அதிகம்; பிரேமை என்று சொல்வதைவிடப் பக்தி என்று தான் சொல்லவேண்டும். இரண்டு பொம்மைகளையும் அழகாக அலங்கரித்துக் கொலுவில் வைப்பாள். பார்க்கிறவர்களுக்கு இது மூளி மரப்பாச்சி என்று தெரியாது.
அம்மாவுக்கு இந்த மரப்பாச்சியினிடம் இருந்த பற்று ஆயிரம் மடங்கு அதிகமாவதற்கு ஒரு காரியம் நடந்தது. முன்னே நடந்தது சந்தோஷமான காரியம்; சித்தியின் அன்பைப் பெறக் காரணமாக இருந்தது அது. இதுவோ துக்கம் தரும் காரியம். சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன் எங்கள் ஊரில் நடந்த ஒரு பொருட்காட்சியில் திடீரென்று தீப்பற்றிக்கொண்டது. அதில் உயிர்ச் சேதங்கூட நேர்ந்தது. நான் பிறந்து ஐந்து வருஷங்கள் ஆகியிருந்தன. என் தகப்பனார் அந்தப் பொருட் காட்சியில் ஒரு கடை வைத்திருந்தார். தீ விபத்தில் அவர் சிக்கி உயிரிழந்தார். அம்மா எப்படித் துக்க சாகரத்துள் ஆழ்ந்திருப்பாளோ! அதை அறிந்துகொள்ளும் வயசு அப்போது எனக்கு இல்லை. இந்த மரப்பாச்சி தீப்பிடித்து வெந்ததையும், அப்பா தீ விபத்தில் இறந்ததையும் முடி போட்டுப் பார்த்தாள் அம்மா. பின்னாலே நடக்க வேண்டியதை முன்னாலே சித்தி காட்டினாளோ? அப்பா முதலில் வைத்திருந்த பொம்மை அது; அவராகத் தந்த ஆண் பொம்மை. அதாவது அவருடைய பிரதிநிதியாக இருந்த பொம்மை அது. அதை முதலில் வழங்கின அவர், பிறகு வாழ்க்கையில் தம்மையே அம்மாவுக்கு வழங்கினார். ஆனால் தெய்வம் இரண்டு பொருள்களுக்கும் ஊனத்தை உண்டாக்கிவிட் டது. அவருடைய பிரதிநிதியாக இருந்த பொம்மை தீப்பட்டு மூளியாயிற்று; அவரோ தீக்குப் பலியாகிவிட்டார்.
அம்மா அந்த நிலையில் எப்படி யெல்லாம் தத்தளித்தாளோ! யார் உதவி செய்தார்களோ! எங்கள் சிற்றப்பாவின் உதவியால் குடும்பம் குடும்பமாயிற்று, நானும் வளர்ந்து பெரியவனானேன்.
அப்பா காலமான பிறகு அம்மாவுக்கு இந்தப் பொம்மையிடம் அளவற்ற பற்று உண்டாகிவிட்டது. “கடவுள் ஒரு ஜோடியைப் பிரித்துவிட்டார். இந்த ஜோடியை நாம் பிரிக்கவேண்டாம்” என்று எண்ணி இந்த இரண்டையும் காப்பாற்றி வந்தாள். கொலுவில் இந்த இரண்டும் இல்லா விட்டால் அவளுக்குக் கொலுவாகவே இராது. என் சிற்றப்பா பெண்கள் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தார் கள். அம்மா கேட்கவே இல்லை. என்னிடம் ஒரு நாள் கதை கதையாக இந்த விஷயங்களையெல்லாம் சொன்னாள். எனக்கும் உபதேசம் செய்தாள். “நீ அப்பா அம்மாவைச் சேர்த்துப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. இந்த இரண்டும், நன்றாக இருந்தபோது நானும் அப்பாவும் எப்படி இருந்தோமோ அதை நினைப்பூட்டுகின்றன. ஆகையால் இந்த இரண்டையும் பிரிக்காதே” என்று எனக்குச் சொன்னாள். அந்த வார்த்தையை நாம் காப்பாற்ற வேண்டாமா?
கோமதி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். கதையோடு அவள் உள்ளம் ஒட்டி அதனால் ஏற்பட்ட உணர்ச்சியில் மிதந்தது. “என்ன, இப்பொழுது எனக்குப் பதில் நீ யோசனையில் ஆழ்ந்துவிட்டாயே!” என்றான் சங்கரன்.
“நீங்கள் மரப்பாச்சிக் கடைக்குப் போக வேண்டாம்” என்று தூக்கத்திலிருந்து விழித்தவளைப் போலப் பதில் சொன்னாள் கோமதி.
“ஓகோ! மறுபடியும் அம்மா வந்து பிறக்கப்போகிறாள். அவள் வந்து, எங்கே என் பொம்மை என்று கேட்டால் என்ன செய்வது என்ற விசாரமோ?” என்று புன் சிரிப்புப் பூத்தபடியே பேசினான் சங்கரன்
“உங்களுக்கென்ன? எப்போதும் விளையாட்டுத் தான்” என்று எழுந்தாள் கோமதி.



