
பவள மல்லிகை
கி.வா. ஜகந்நாதன்
கதைக்குக் கால் உண்டு
சில வருஷங்களுக்கு முன் ‘கலைமக’ளில் ‘கதையின் கதை” என்று ஒருபகுதி தொடங்கினோம். எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய கதைகளின் கதையைத் தொடர்ந்து எழுதினார்கள். கதை உருவானதற்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகள், எண்ணங்கள், அவை மேலும் மேலும் வளர்ந்த வகை, கதைப்பகுதிகள் உருவெடுத்த முறை, கதையின் கட்டுக்கோப்பு முழுவதும் ஒருவகையாக நிறை வேறினது – இப்படியாகக் கதையின் கதையை எழுத் தாளர்கள் எழுதினார்கள். அவற்றை யாவரும் சுவையோடு படித்து இன்புற்றார்கள்.காரணம், எழுத்தாளன் கதையை எப்படிச் சிருஷ்டிக்கிறான் என்ற உண்மை நிகழ்ச்சியை அறிய முடிந்ததுதான். எழுத்தாளனுடைய சிருஷ் டித் தொழிலில் உள்ள விநோதம் இனித்தது.
கம்பன் இராமாயணம் பாடினது, வில்லிபுத்தூரார் பாரதம் பாடினது, குணாட்யன் பிருகத் கதை பாடியது முதலியவை மிகவும் சுவரரஸ்யமான கதைகள். இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்களின் வரலாறுகள் அவை என்பது மட்டும் அன்று; இலக்கியத்தின் கதையையே அவை சொல்லு கின்றன. இக்காலத்துச் சிறுகதைகளுக்குக் கம்பராமா யணத்தை உவமை சொல்வது பொருத்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கம்பராமாயணம் உருவான யும், இக்காலத்தில் சில சிறுகதைகள் உருவான வரலாறும் சமானமான சுவையுடையன அரசகுமாரி கருவுயிர்ப்ப தும், ஏழைப் பெண் குழந்தை பெறுவதும் ஒரே வகை வேதனை, ஒரே வகை நிகழ்ச்சி, ஒரே வகை இன்பம் உடையன அல்லவா? தாய்மை என்னும் பொதுமையுடன் ஒட்டியவை அவை.
வாழ்க்கையில் ஊறிப்போன மனசுக்குத் தன் அநுபவங்களை நினைப்பதற்குச் சர்வ சுதந்தரம் உண்டு, அதைத் தடுக்க எந்த ஹிட்லராலும் முடியாது. அப்படி நினைத்த அநுபவங்களை வாயினாலே சொல்வதற்கு, வேறு இடத் தில் வேறு சந்தர்ப்பத்தில் பழைய அநுபவத்தை இணைத் துச் சொல்வதற்கு முயல்வது மனிதன் இயல்பு. பழைய கிழவர்கள் அதிகமாகப் பேசுவதற்குக் காரணம் இந்தப் பழங்கதைகள் அவர்கள் திறத்தில் நீண்டிருப்பதுதான். எந்த நிகழ்ச்சியானாலும், அதற்குச் சமானமாகவோ,கூடு தல் குறைதலாகவோ மற்றொரு நிகழ்ச்சி அவர்களுடைய நினைவேட்டிலிருந்து புறப்படும். அதைக் கேட்பதற்கு நமக்குச் சிரத்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கோ இப்போது நிகழும் நிகழ்ச்சியைக் காட்டிலும் அந்தப் பழைய நிகழ்ச்சிதான் கலா ரஸ்யம் உடையது. அது வெறும் நினைவளவிலே நின்று, இன்பதுன்பம் நேரடியாக வாழ்க்கையைப் பாதிக்கும் நிலையைக் கடந்து விளங்குவதால் காவியம் போல் அவர்களுக்குச் சுவைக்கிறது.
காலமென்னும் தேனில் ஊறி நின்று தன்னுடைய துவர்ப்பையெல்லாம் போக்கி விட்டுத் தித்திக்கும் பண்டமாக ஆகிவிடுகிறது அது.
எழுத்தாளர்களும் இந்த மனித இயல்புக்கு விலக் கானவர்கள் அல்ல. எழுத்தாளர்கள் என்ன? கவிஞர்களுக்கும் இந்தப் பழைய அநுபவ வாசனையைத் தாம் பாடும் கவிகளிலே இணைப்பது என்பது இயற்கைதான். ஆகவே கதாசிரியர்கள் தம்முடைய கதைகளில் பழைய உண்மைக் கதைகளாகிய தம் அநுபவ வரலாற்றை இணைத்து எழுது வதுண்டு. எல்லாக் கதைகளிலும் இந்த அம்சம் இருக்க வேண்டுமென்ற நியதி இல்லை. அந்த அம்சம் இருக்கும் கதைகளிலும் வெவ்வேறு அளவில் வெவ்வேறு வகையில் அது அமைந்திருக்கும். அந்த அம்சத்தைத் தனியே எடுத்துக்காட்டினால் ‘கதைக்கும் கால் உண்டு’ என்பது தெரியவரும். ‘கதைக்குக் கால் இல்லை’ என்ற பழைய வசனம் எதனால் ஏற்பட்டிருந்தாலும் சரி, அது முற்றும் சரியானது என்து சொல்லமுடியாது.
கதையின் பிறப்பு எல்லாரிடமும் ஒரேமாதிரி இருப்ப தில்லை. சிலருக்குச் சில சில வழக்கம் இருக்கும். சில எழுத் தாளர்கள் தலைப்பை முதலில் போட்டுக்கொண்டு கதையை எழுதத் தொடங்குவார்கள். வேறு சிலர் கதை முழுவதையும் எழுதிவிட்டுத் தலைப்பைப் போடுவார்கள். கதையின் மையத்தை நிச்சயப் படுத்திக்கொண்டு எழுதத் தொடங்கி விட்டால், எழுதும்போதே சில சுழிப்புக்கள், சில திருப்பங்கள் கதையில் அமைந்துவிடும். முன்னாலே யோசிக்காமல் அந்தச் சந்தர்ப்பத்தில் உண்டாகும் ‘எழுத்துச் சூட்டில்’ உற்பத்தியாகின்ற பகுதிகள் அவை, சொற்பொழிவு ஆற்றுபவர்களுக்கும் இத்தகைய அனுபவம் உண்டு.
சில சில சமயங்களில் முதலில் ஒருவிதமாகச் சில்லறை நிகழ்ச்களை முடிவு கட்டியிருந்தாலும், பேனாவின் போக்கிலே அந்த நிகழ்ச்சிகள் மாறும்; முடிவே மாறுவதும் உண்டு. எதிர்பார்த்ததைவிடச் சிறந்த முடிவாக அமைவதும், எதிர்பார்த்த அளவுக்குக் கதையில் கட்டாமல் போவதும் உண்டு. அவரவர்கள் அநுபவத் தோடு ஒட்டிப்பார்த்தால் இந்த நிலைகளுக்குத் தக்க உதா சணங்கள் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும்.
சிலர் ஒரு கதையின் சில பகுதிகளை முதலில் எழுதி விடுவார்கள்; பின்பு முதல் முடிவு எல்லாம் எழுதி ஒட்டுப் போட்டுப் பூர்த்தி செய்வார்கள். முதல் முறை
எழுதுவதோடு கதையை உலகத்தில் தள்ளி விடுபவர்கள் சிலர். ஒரு தடவைக்குப் பல தடவை பார்த்து நகாசு செய்கிறவர்கள் சிலர்.
சில கதைக்குரிய கரு எழுத்தாளனுடைய உள்ளத்திலே தோன்றிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு கதையுரு வெடுக்கலாம். சில கதைகளோ, ரிஷிகர்ப்பம் போலக் கருத்தோன்றியவுடனே உருத் தோன்றிவிடும். சில கதை களுக்குக் கருத்தோன்றி உள்ளத்துக்குள்ளே நலிந்து செத்துப்போய் விடுவதும் உண்டு.
இவை பொதுவாக எழுத்தாளர் உலகத்தின் அனுபவங்கள். இவற்றிற் பல என்னுடைய அனுபவங்கள் என் றும் சொல்லவேண்டுமா, என்ன?
இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் எல்லாமே உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என்று சொல்ல முடியாது. சிலவற்றில் உண்மை நிகழ்ச்சி களின் பகுதிகள் கலந்திருக்கின்றன.
பவளமல்லிகை உண்மையும் கற்பனையும் கலந்து உருவான கதை. ஒருநாள் மாம்பலத்தில் என் நண்பர் ஒருவர் நடத்திய பஜனைக்குப் போய் வந்தேன். கோகுலாஷ்டமி பஜனை. அஷ்டபதியை மிகவும் அருமையாகப் பாடினார்கள். கண்ணனுடைய அழகிய உருவமும் லீலைகளும் வார்த்தைகளும், கண்ணன் ராதை காதலும் மனத்திலே தேங்கி நின்றன்.
உள்ளம் கண்ணன் மயமாக இருந்தது. உடம் பிலே ஒருவகையான மதமதப்பு; ஒரு புதிய மின்சார போதை புகுந்து கொண்டது போன்ற அநுபவம். அந்த நிலையில் மயிலாப்பூருக்குத் திரும்பிவந்தேன். கண்ணனுடைய நினைவிலே பவளமல்லிகைக் கதைக்குக் கருத் தோன்றியது, கண்ணன் நினைவாகவே வாழும் ஒரு பாத்திரம் என்கதையின் முக்கியப் பாத்திரமாக இருக்கவேண் டும் என்று திட்டமிட்டேன். சின்னப் பெண்ணாக அந்தப் பாத்திரம் உருவாயிற்று; அம்புஜம் தோன்றினாள். வருஷங்களுக்கு முன் நான் திருவல்லிக்கேணியில் அதே குப்பமுத்துத் தெருவில் குடியிருந்தேன். அந்த வீட்டுக்குப் பின்புறத்தில் பவளமல்லிகை மரம் இருந்தது. ஒவ்வொரு நாளும் பூப்பொறுக்கப் பல குழந்தைகள் வருவார்கள். பெரும்பாலும் பெண் குழந்தைகளே வருவார்கள். அந்தக் காட்சி என் கதைக் கருவுக்கு ஊட்டம் அளித்தது. மற்ற நிகழ்ச்சிகளெல்லாம் கற்பனை.
இந்தக் கதை கலைமகளில் வந்தபோது இதைப் பாராட்டிப் பலர் எழுதினார்கள். முக்கியமாக ஓர் அன்பர்,” நான் உங்களுக்கு என்ன அபராதம் செய்தேன்! என்னை அழும்படி செய்துவிட்டீர்களே! என் கண்ணில் நீர் மல்குவதைக் கண்டு எங்கள் வீட்டுக் குழந்தைகள் கூடச் சிரித்தார்கள்” என்று ரஸமாகத் தம் அநுபவத்தை எழுதியிருந்தார்.
கூன் பாண்டியன்’ என்ற கதையில் வரும் தந்தையின் மனமாற்றம் பல குடும்பங்களில் நிகழ்வதுதான். எனக்குத் தெரிந்த ஒருநண்பர், கதையில் வரும் ‘கூன்பாண்டியரைப் போன்றவர். அவரை நினைத்த போதுதான் கதையின் கரு முளைத்தது. கதையின் ஆரம்பமும் முடிவும் பெரும்பாலும் உண்மை நிகழ்ச்சியை ஒட்டினவே, மற்றவை கதைக்கு வேண்டிய கையும் காலும் மூக்கும் முழியுமாகக் கற்பனை யால் படைத்தவை.
‘பாசம்’ என்பது முழுக்க முழுக்க உண்மைக்கதை என்றே சொல்லவேண்டும். கதையைச் சொல்லுகின்ற ‘நான்’ நான் அல்ல; என் மைத்துனன். அவன் திருக்கழுக் குன்றத்தில் நிகழ்ந்த இதை எனக்குச் சொன்னான். அவன் சொன்ன நிகழ்ச்சியையே சிறிது வருணனையும் கூட்டிக் கதையாக்கினேன். கதையைப் படித்தபிறகு என் மைத்துனன் என்ன சொன்னான் தெரியுமா? “இதைப் போன்ற முதல்தரமான கதை உலகத்திலே சிலவே உண்டு. நீங்கள் எழுதிய கதைகளில் அற்புதமான சிலவற்றில் ஒன்று இது” என்று உள்ளம் பூரித்துச் சொன்னான்.நான் அப்படி நினைக்கவில்லை. அவனுடைய உணர்ச்சிகளைச் சரியானபடி கதையில் உருவாக்கி விட்டேன் என்பதையே நான் தெரிந்து கொண்டேன். என்ன இருந்தாலும் அவரவர்கள் சொந்த அனுபவம் அவரவர்களுக்கு உயர்வு தானே?
மற்றக் கதைகளில் உண்மை நிகழ்ச்சிகள் இவ்வளவு அதிகமாக இழையவில்லை. ஒரு ‘விசித்திர உலகத்தில் வரும் கிருஷ்ணையரின் உருவமும் இயல்பும் நான் அறிந்த பக்தரிடம் கண்டவை; பஜனை செய்வதில் ஈடுபட்ட பக்தர் அவர். மற்றப்படிக் கதை முழுவதும் வெறும் கற்பனை. கதை நிகழும் இடமாகிய கிருஷ்ணராயபுரம் நான் பிறந்த ஊர் ஆகையால் அதைப் புகுத்தும் நினைவு வந்தது.
சில வருஷங்களுக்கு முன் முதல் முறையாகப் பம்பாய் போயிருந்தேன்.பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற இலக்கிய விழாவுக்காகப் போனேன். அந்த நகரத்தில் உள்ள காட்சிகளையெல்லாம் கண்டேன். எலிபெண் டாக்குகைகளையும் பார்க்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. அன்பர்கள் சிலரோடு காலையில் புறப்பட்டுச்சென்று மாலைவரையில் அந்தத் தீவில் தங்கி அங்கே உள்ள அற்புதமான சிற்பங்களைப் பார்த்து மகிழ்ந்தேன். என்ன அழகு! என்ன அழகு! அங்கிருந்த சுனையைப் போதுதான் சங்க நூல்களில் வரும் வருணனைகள் எனக்கு விளங்கின. “கற்பகம் அனைய அக் கவிஞர் நாட்டிய, சொற் பொரு ளாமெனத் தோன்றல் சான்றது” என்ற கம்பர் வாக்குத் தெளிவாயிற்று. இனிமையாக அங்கே பொழுது போக்கினோம். அந்தக் குகைச் சிற்பங்களைப் பொருளாகக் கொண்டு அன்று ஒரு கதையை நண்பர்களுக்குச் சொன் னேன். அந்தக் கதை, வண்ணம் பூசாத சித்திரம் போல என் உள்ளத்தின் மூலையிலே கிடந்தது. போன வருஷ ஆனந்தவிகடன், தீபாவளி மலருக்குக் கதை வேண்டுமென்ற கடிதம் வந்தபோது, அதை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்து புது மெருகிட்டுக் கதையாக்கினேன். அது தான் ‘ரத்தக் கண்ணீர்’.
பஞ்சகல்யாணிக் குதிரை முதலிய மூன்றும், கதை எழுதவேண்டும் என்ற சங்கற்பத்திலே தோன்றியவை, மதனகாமராஜன் கதைப்பாணியிலே எழுதவேண்டுமென்ற எண்ணம், பஞ்சகல்யாணிக் குதிரையை ஓடவிட்டது. ஆனந்த விகடன் தீபாவளி மலருக்காக எழுதின கதை; ஆகையால் கடைசியில் ஒற்றை வெடியைக் கொண்டு வந்தேன்.
என் நண்பர் ஒருவர் தம்முடைய காரை ஒரு குதிரை வண்டியின்மேல் மோதவிட்டார். நடுநடுங்கிப் போய் ஐந்து ரூபாய் நோட்டை வண்டிக்காரனிடம் வீசிவிட்டு வந்தார். வந்தது முதல் அவர் உள்ளம் படபடத்தது. இதுவரையில் இந்த அனுபவம் இல்லையாகையால் அவர் நடுங்கிக் கொண்டே இருந்தார். அவருடைய நடுக்கத்தையும், கீழே விழுந்தவர்கள் என்ன செய்து விடுவார்களோ என்று அஞ்சின அச்சத்தையும் நான் நேரிலே உணர்ந்தேன். இது சில வருஷத்துக்கு முன் நிகழ்ந்தது. ‘யார் தெய்வம்?’ என்ற கதை எழுத ஆரம்பித்ததற்கு அந்தப் பழைய நிகழ்ச்சியின் நினைவு சிறிது உதவியது. கதையின் மற்றப் பகுதிகள் வெறும் கற்பனை.
புரட்டாசி மாதக் ‘கலைமகள்’ இதழுக்கு நவராத்திரி சம்பந்தமாகக் கதை எழுதவேண்டும் என்ற நினைவிலே கொலுவும் மரப்பாச்சியும் தோன்றின. அதன் பிறகு மூளி மரப்பாச்சியும், அதற்கு ஜோடிமரப்பாச்சியும் வந்தன. எப்போதுமே கதை முழுவதையும் எழுதின பிறகே நாமகரணம் பண்ணுவது என் வழக்கம். இந்தக் கதைக்கு ‘மூளி மரப் பாச்சி’ என்றுதான் முதலில் பெயர் வைத்தேன்.பிறகு அது காதுக்கு நன்றாக இல்லை என்று மாற்றிவிட்டேன்.
இந்த எட்டுக் கதைகளில் ‘பவளமல்லிகை, ‘கூன் பாண்டியன், ஜோடி மரப்பாச்சி’ என்ற மூன்றும் ‘கலைமகளில் வெளியானவை,பாசம்’, ‘விசித்திர உலகம் என் னும் இரண்டும் ‘காண்டிபம்’ பொங்கல்மலர்களிலும், ‘ரத்தக் கண்ணீர்’, ‘பஞ்சகல்யாணிக் குதிரை’ என்பவை ‘ஆனந்த விகடன்’ தீபாவளி மலர்களிலும், ‘யார்தெய்வம்?? என்பது ‘தியாகி’யிலும் வெளிவந்தவை.
பழைய உணர்ச்சிகளும் நினைவுகளும் கதையிலே இணைத்து உருவாக்குவது எழுத்தாளர் உலகத்து வழக்கம். கதைகள் அதிகமாக எழுத எழுதச் சொந்த அநுபவங் களும் அதிகமாகப் பயன் படுகின்றன. அதிகமாகக் கதைகள் எழுதவேண்டிய வாய்ப்புப் பத்திரிகைகளினால் ஏற்படுகின்றன. ஆகவே பத்திரிகைகள் உள்ளவரைக்கும் கதைகள் வரும்; கதைகள் எவ்வளவுக் கெவ்வளவு தேவையோ, அவ்வளவுக் கவ்வளவு எழுத்தாளர்கள் தாங்கள் கண்டு கேட்டு அநுபவித்த வற்றைப் புகுத்த வாய்ப்புண்டு. கதையுலகம் வாழ, நாம் வாழும் உண்மையுலகம். வாழவேண்டும். இரண்டு உலகமும் வாழ்க!
★ ★ ★



