

நல்ல சேனாபதி
கி. வா. ஜகந்நாதன்
தமிழ்நாட்டில் பல காலமாகவே புலவர்களும் புரவலர்களும் வாழ்ந்து தமிழை வளர்த்திருக்கிறார்கள். புலவர்கள் வீரத்தைப் பாராட்டுவார்கள்; கொடைத் திறத்தைப் பாடிப் புகழ்வார்கள். பெரிய போரில் வெற்றி பெற்ற பெரு மன்னர்களுடைய வரலாற்றை நாட்டு வரலாறுகளில் காணலாம். ஆயினும் சிறிய போர்களில் தம்முடைய வீரத்தைக் காட்டிய வீரர்களையும், மிகவும் சிக்கலான சமயங்களில் சாதுரியமும் வீரமும் தோன்றச் செயல் செய்த தீரர்களையும் அத்தகைய பெரு வரலாறுகளில் காணமுடியாது. புலவர்கள் பாடிவைத்த நூல்களிலும், பழைய குறிப்புகளிலும், வாய்மொழியாக வழங்கி வரும் செய்திகளிலும் அவர்களைப் பற்றிய வரலாற்றுத் துணுக்கு கள் மிடைந்திருக்கின்றன. கொடை, மானம், வீரம், அறிவு நுட்பம், பண்பு, புவமை ஆகிய பெருங் குணங்களை விளக்கும் வரலாறுகளாக விரிப்பதற்குரிய வகையில் அந்தத் துணுக்குகள் உள்ளன. அவற்றை வைத்துக் கொண்டு எழுதியவையே இந்தப் புத்தகத்திலுள்ள நிகழ்ச்சிகள்.
சிறிய சிறிய வரலாற்று நிகழ்ச்சிகளானாலும் ஒவ் வொன்றிலும் ஒவ்வொரு பண்பின் விளக்கத்தைக் காணலாம். புலவனுடைய அறிவுத் திறத்தைச் சில நிகழ்ச்சிகள் விளக்குகின்றன; கொடையாளரின் கொடைச் சிறப்பைச் சில வரலாறுகள் புலப்படுத்துகின்றன; வீரர்களின் வீரச் செயல்கள் சிலவற்றால் புலனாகின்றன.
இவற்றை அறிந்து எழுதத் தனிப் பாடல்களும், மண்டல் சதகங்களும், வாய்மொழியாகக் கேட்டவையும் எனக்குத் துணையாக இருந்தன. இந்தப் பன்னிரண்டு நிகழ்ச்சிகளில் முதலில் உள்ள எட்டும் கொங்கு நாட்டில் நடந்தவை. கொங்கு மண்டல சதகத்திலுள்ள பாடல் களைக் கொண்டும், அவற்றிற்கு மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ள செய்யுட்களைக் கொண்டும் இவற்றை உருவாக்கினேன். மணல் பரப்பிய வள்ளலைத் தொண்டை மண்டல சதகத்தால் உணர்ந்தேன். ஓர் அன்பர் கூறிய செய்தியிலிருந்து ‘ஆயிரம் வேலி அதம்பார்’ உருவாயிற்று. புதுத்தாலி என்பதும் வாய்மொழியாகக் கேட்டு அறிந்ததே. சொக்கம்பட்டியாருடைய சரித்திரத்திலிருந்து தெரிந்துகொண்டது, ‘தளவரிசை’ என்பதிலுள்ள நிகழ்ச்சி.
ஆர்வத்துடன் இளைஞரும் பிறரும் படித்து மகிழ வேண்டும் என்னும் நோக்கத்தோடு, இடையிடையே உரை நடையை விரவ வைத்தும், வருணனைகளை இணைத் தும் சிறு கதையுருவத்தில் இந்த வரலாறுகளை எழுதினேன். இத்துறையில் இதற்கு முன் நான்கு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன் என்பதை அன்பர்கள் அறிவார்கள்.
கி. வா. ஜகந்நாதன்
நல்ல சேனாபதி
கி. வா. ஜகந்நாதன்
நல்ல சேனாபதி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழையகோட்டை என்ற ஊர் இருக்கிறது. அங்கே இருக்கும் கொங்கு வேளாளத் தலைவருக்குப் பழைய கோட்டைப் பட்டக் காரர் என்று பெயர். கொங்கு வேளாளர்களின் நலம் கருதி, நாட்டாண்மை செலுத்தும் பரம்பரையினர் அவர்கள்.
முன் காலத்தில் அந்த ஊருக்குக் காரை என்ற பெயர் வழங்கியது. நத்தக்காரையூர் என்று உலக வழக்கில் அதனைச் சொல்வார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் அவ்வூரில் சர்க்கரை மன்றாடியார் என்ற தலைவர் வாழ்ந்து வந்தார். மன்றாடியார் என்பது குலப் பெயர். மன்று என்பது நியாய சபைக்குப் பெயர். தம் குலத்தினர்களின் வழக்கைத் தீர்க்கும் சிறப்பால் அந்தப் பெயர் வந்தது. சர்க்கரை என்பதே இயற்பெயர்.
சர்க்கரை மன்றாடியார் பெரிய செல்வர்; பெருவீரர். அவருடைய செல்வம் தமிழ் நாட்டுப் புலவர்களுக்குப் பயன்பட்டது. அவரது வீரம் தமிழ் நாட்டுப் புரவலர் களுக்குத் துணை நின்றது. மன்றாடியார் குலத்தில் உதித்த யாருமே நாட்டுக்கு நலம் செய்யும் இயல்புடை யவர்கள். அவர்கள் நா அசைத்தால் நாடு அசையும். சிறந்த வீரர்
கூட்டம் ஒன்று எப்போதும் அவர் களுடைய ஆணையின்படி ஒழுகக் காத்திருக்கும்.
கொங்கு நாட்டில் தனியாக அரசர்கள் இருந்து ஆண்ட காலம் சிறியதே. சில காலம் அதன் பகுதிகள் பாண்டி நாட்டைச் சார்ந்திருக்கும்; சோழர் வலிமையுற்ற நாளில் அது சோழர் ஆட்சிக்கு அடங்கியும் இருக்கும்.
மேலே சொன்ன சர்க்கரையின் காலத்தில், கொங்கு நாட்டின் பெரும்பகுதி பாண்டிய நாட்டின் ஆட்சியில் இருந்தது. காரையூர் வள்ளல், பாண்டிய மன்னனது ஆட்சிக்கு உட்பட்டவராகவே இருந்தார். அவருடைய பெரு வீரத்தை உணர்ந்த பாண்டியன், அடிக்கடி அவரை அழைத்துப் பாராட்டிச் சிறப்புச் செய்வது வழக்கம். அக் காலத்தில் ஆண்ட பாண்டியன், புகழ் பெற்றுச் சிறந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்று தெரிய வருகிறது.
சோழப் பேரரசு வரவரக் குறுகிக் கொண்டு வந்த காலம் அது, பாண்டியன் வீறுகொண்டு வீரங்காட்டி நாட் டைப் பெருக்கி, சோழ மண்டலத்தின் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்டு வந்தான். மேலும் மேலும் போர் மேல் நாட்டம் உடையவனாய் நான்கு திசையிலும் படை யெடுத்துச் சென்று, வெற்றிமேல் வெற்றி பெற்று வந்தான். போரிலே காதலுடைய அவனுக்குப் படை யைப் பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் இருந்தது இயல்பே.
சர்க்கரை மன்றாடியாரின் வீரத்தையும், அவருடைய ஆணையின்படி ஒழுகும் வீரர் கூட்டத்தையும் பற்றிப் பாண்டியன் கேள்வியுற்றிருந்தான். சர்க்கரையோடு பழகியதனால் அவருடைய வீரமிடுக்கை நன்கு உணர்ந் தான். தன்னுடைய படைத் தலைவர்களுள் ஒருவராக அவரை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று.
ஒருநாள் நத்தக்காரையூரிலிருந்து சர்க்கரை மன்றாடியார் வந்திருந்தார். பாண்டியனும் அவரும் அளவளாவிக் கொண்டிருந்தன பேச்சின் இடையே பாண்டியன், “செல்வத்தை வைத்திருப்பவர்கள் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பாகுமா?” என்று கேட்டான்.
“செல்வம் ஈவதற்கும் நுகர்வதற்குமே உரியது. அதை வைத்துப் போற்றும் உலோபியைப் போன்ற பைத்தியக்காரன் வேறு ஒருவனும் இல்லை” என்றார் சர்க்கரை.
பாண்டியன் சற்றே புன்முறுவல் பூத்தான். “செல்வம் என்று பொருட் செல்வத்தை மட்டும் சொல்வதில்லை. கல்வி, வீரம், கருணை ஆகிய எல்லாமே செல்வந்தான். இவற்றுள் எதுவானாலும் அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதன் பெருமை மங்கிவிடும்.”
“உண்மைதான்.”
‘முக்கியமாக ஆடவர்கள், நாட்டுத் தலைவர்கள் தம்முடைய வீரத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது பணத்தைப் புதைத்து வைப்பது போன்றது தான்” என்று பாண்டியன் சொல்லும்போது, மீண்டும் புன்னகை பூத்தான்.
“சற்றே தெளிவாகச் சொல்ல வேண்டுகிறேன்.”
“உங்கள் வீரம் நாடு அறிந்தது. நீங்கள் விரலை அசைத்தால் மறுகணமே தம் வீரத்தைக் காட்ட முன் வரும் படையின் பெருமையையும் பலர் அறிவர். அப்படி இருந்தும், அந்த வீரம் பயன்படாமல் ஒடுங்கி நிற்கிறது,”
“எப்படிப் பயன்பட வேண்டும்?”
“போரில்தான்.”
“என்னிடம் போருக்கு வருவார் யாரும் இல்லையே! வலியச் சென்று ஒருவரோடு போரிடுவதும் அறமாகாது. வீரத்துக்குப் போக்கு இல்லையே என்பதை நானும் உணர்கிறேன். என் நாட்டு வீரர்கள் தோள் தினவுடன்தான் இருக்கிறார்கள். போர் நேர்ந்தால் அவர்களுடைய வீரம் புலப்படும்.”
பாண்டிய மன்னன் சிறிது பேசாமல் இருந்தான். “உங்கள் வீரத்தை மற்றவர்களுக்குத் துணையாக நிற்பதில் காட்டலாமே! நான் இப்போது படைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். பாண்டிப் பெரும் படையில் கொங்குப் படைப் பகுதி ஒன்றை அமைக்க வேண்டும் என்பது என் ஆவல். அதனை அமைத்து, அதற்கு ஒப்பற்ற படைத் தலைவர் ஒருவரையும் நிறுவி விட்டால், எந்த நாட்டையும் எளிதில் வென்று விடலாம்.”
பாண்டியனுடைய கருத்து மன்றாடியாருக்கு விளங்கியது. அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
‘சோழ அரசர்களுக்குத் துணையாகக் கொங்குப் படை சென்றது. அப்பொழுதெல்லாம் அது கூலிப் படையாகவே போயிற்று என்று தெரிகிறது. அந்த முறையில் நான் படை சேர்க்க விரும்பவில்லை. பாண்டிப் பெரும்படையின் பகுதியாக அது இருந்து விளங்கும்” என்று பாண்டியன் தன் கருத்தைப் பின்னும் விளக்கினான்.
“படை வீரர்களைப் பாண்டிப் படையில் சேரச் சொல்லலாம். ஆனால், அவர்களுக்கு ஏற்ற படைத் தலைவன் வேண்டும். அவர்கள் மிடுக்குடையவர்கள் அவர்கள் விரும்பும் தலைவனாக இருந்தாலன்றி அவர் களை நடத்த முடியாதே!” என்றார் சர்க்கரை,
அதைப் பற்றி எனக்குச் சிறிதும் கவலை இல்லை. நான் தக்க சேனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். முதலில் தலைவரை நிச்சயம் செய்துகொண்ட பிறகே, படையைக் கூட்டும் எண்ணம் எனக்கு வந்தது.”
“அந்தத் தலைவர் கொங்குப் படைக்கு உகந்தவர் என்று நன்றாகத் தெரிந்து கொண்டீர்களா?”
“நன்றாகத் தெரியும்.”
“படையைக் கூட்டுவதற்கு முன்பே இதனைத்
தெரிந்துகொள்ள முடியாதே! தாங்கள் எப்படித்
தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார் கொங்கு நாட்டுத் தலைவர்.
“தலைவர் இன்னார் என்று சொன்னால் நீங்களே அவர் ஏற்றவர் என்று ஒப்புக் கொள்வீர்கள்.”
“யார் அவர்?”
“சர்க்கரை மன்றாடியார்!”
மன்றாடியாருக்கு வியப்பு உண்டாயிற்று. சிறிது நேரம் பேசவில்லை. அவர் தோள் பூரித்தது.
“மன்னர் பிரான் என்பால் வைத்துள்ள அன்பை நான் பெரிதும் பாராட்டுகிறேன். கொங்கு நாட்டு வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை முன்பே தெரிவித்திருக்கலாமே!”
“இப்போது அதற்கு ஏற்ற செவ்வி வந்திருக்கிறது. சோழனுக்குத் தான் முந்திய போர்களில் தோல்வியுற்ற அவமானம் தாங்கவில்லை. கொங்கு நாட்டின் ஒரு பகுதியையாவது பற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருப்பதாகத் தெரிகிறது. நம்முடைய ஒற்றர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். உங்கள் கொங்கு நாட்டைப் பாதுகாக்கும் கடமையைக்
கொங்குப் படை முதலில் செய்ய வேண்டி நேர்ந்தாலும் நேரலாம்.”
இருவரும் தங்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். பாண்டியனுடைய விருப்பத்தின் படியே சர்க்கரை மன்றாடியார் தம் படை வீரர்களைத் தொகுத்து, அப் படைக்குத் தாமே சேனாபதியானார்.
பாண்டியன் சர்க்கரை மன்றாடியாரின் மதிப்பை நன்கு உணர்ந்தவனாதலின் அவரை உரிமையை உடைய தனி வீரராகவே எண்ணிப் பழகி வந்தான். வேறு ஒரு படையின் பகுதியாக இருப்பதால், எந்த விதமான இழுக்கும் இல்லை என்ற எண்ணம் கொங்குப் படை வீரர்களுக்கு உண்டாயிற்று.
2
கொங்குப் படை ஒன்று பாண்டிப் படையில் உரு வாகிறது என்ற செய்தி இன்னும் வெளி நாடுகளுக்குத் தெரியாமல் இருந்தது, அப்போது ஒரு நாள், நத்தக் காரையூருக்குச் சோழனிடமிருந்து ஒரு தூதுவன் வந்தான். சர்க்கரை மன்றாடியாருக்குச் சோழனிடமிருந்து ஓர் ஓலை கொண்டு வந்திருந்தான். பல காலமாக அந்தக் குடியினர் சோழனுக்குப் படைத் துணையாக இருந்தனர் என்றும், இப்போதும் அப்படிச் செய்தால் தக்க ஊதியம் கிடைக்கும் என்றும், கொங்கு நாட்டு ஆட்சியே கிடைக்கும்படி செய்வதாயும் ஓலை கூறிற்று.
அதைக் கண்ட மன்றாடியாருக்குச் சிரிப்பு வந்தது. “என்னிடம் கூலிப்படை ஒன்றும் இல்லை” என்று மறு மொழி சொல்லி அனுப்பி விட்டார்.
இதனைச் சோழன் எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் ஓலை போக்கினான். “என் விருப்பப்படி நடவாவிடில் கொங்கு நாட்டின்மேல் படையெடுத்து அழித்து விடுவோம்” என்று அதில் வீறு பேசியிருந்தான். அது கண்டு சினந்த மன்றாடியார், “கொங்கு நாடு பாண்டியன் அரசாட்சியில் இருப்பதைச் சோழன் மறந்து
விட்டானோ? இந்த ஓலை மதுரைக் கல்லவா போகவேண்டும்?” என்று சீறினார்.
சோழனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அடிபட்ட புலி போல் ஆனான். கொங்கர் தலைவன் தன்னை அவமானம் செய்து விட்டதாக எண்ணித் துடித்தான். கொங்கு நாடு பாண்டியனுக்குரிய தென்பதை அவன் நினைவூட்டும்படியாயிற்றே என்று நாணினான்.
இப்போது சர்க்கரை மன்றடியார் பாண்டியன் படைத் தலைவர்களில் ஒருவராக, அம்மன்னனுடைய மதிப்புக்கு உரியவராக விளங்கினார். சோழ மன்னன் ஓலை விடுத்ததையும், பிறவற்றையும் அவர் பாண்டியனுக்குச் சொன்ன பொழுது அம் மன்னன், “நான் தக்க சமயத்தில் என் கருத்தை நிறைவேற்றிக் கொண்டேன். சற்றே தாமதம் செய்திருந்தால்?…” என்று சொல்லிப் பேச்சை முடிப்பதற்கு முன், “ஒன்றும் ஆகியிராது. சோழனுக்குக் கூலிப் படையாகப் போக நான் துணிந்தாலும், எங்கள் வீரர்கள் இசைய மாட்டார்கள்” என்றார் சேனாபதி.
கொங்கர் தலைவரின் வீரம் வெளிப்படும் நாள் வந்தது. பாண்டிய மன்னன் நடத்திய அடுத்த போரில் கொங்கு நாட்டு வீரர் முன்னணியில் நின்று வெற்றியை வாங்கித் தந்தனர். பாண்டியனுக்கு உண்டான பெருமிதத்துக்கு அளவில்லை.
எதிர்பார்த்தபடி சோழன் கொங்கு நாட்டின்மேல் படையெடுத்து விட்டான். கருவூருக்குக் கிழக்கே அவன் படை வந்து கொண்டிருந்தது. கருவூருக்குள் நுழைந்தும் விட்டது. பாண்டிய அரசனுக்கு அந்தச் செய்தி தெரிந்தது. சோழனுக்கு இனித் துணிவு வராது என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். கொங்கர் தலைவரைத் துணையாகப் பெறாததனால் சோழன் போரிடத் துணியான் என்பது மாத்திரம் அன்று; பாண்டியன் பெரும்படையில் கொங்கு வீரர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்ட பிறகு, முன்பு சிறிதே இருந்த ஆசையும் ஓடி ஒளிந்திருக்கும் என்று அவன் எண்ணினான். அவன் எண்ணம் பொய்யாயிற்று.
சோழன் போர் செய்யத் துணிந்தது கண்டு, அவனை விரட்டப் பாண்டியன் தானே செல்ல எண்ணினான். மற்ற மன்னர்களை வெல்ல அவனுக்கு உண்டாகும் மிடுக்கைவிட, சோழன் என்றால் உண்டாகும் வேகம் அதிகம். இரண்டு குலமும் ஒன்றையொன்று மாறாகவே கருதி வந்தது வரலாறு கூறும் உண்மை. “நானே நேரிற் சென்று சோழனை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் செய்து வருகிறேன்” என்று பாண்டியன் துடித்தான். படைத் தலைவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு ஆராய்ந்தான். தன் கருத்தையும் வெளியான், படைத் தலைவர்களுள் ஒருவர் மன்னன் கருத்தை ஆமோதித்தார். மற்றவர்கள் ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டே வந்தார்கள். சர்க்கரை மாத்திரம் பேசாமல் இருந்தார்.
பாண்டியன் அவரை நோக்கினான். நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்களே!’ என்றான்.
பல காலமாகப் பாண்டிப் படையில் இருந்து அனுபவம் அடைந்தவர்கள் பேசும்பொழுது நான் குறுக்கே பேசலாமா? அவர்கள் சொல்வதையெல்லாம் சொல்லட்டும் என்று இருக்கிறேன்” என்றார் அவர்.
“உங்கள் கருத்துத்தான் மிகவும் முக்கியமானது. இப்போது வந்திருக்கும் ஆபத்து உங்கள் நாட்டுக்குத் தான்” என்றான் பாண்டிய மன்னன்.
“உங்கள் நாடு, எங்கள் நாடு என்ற வேற்றுமைக்கே இடம் இல்லை. பொதுவாகப் பாண்டிய நாட்டுக்கு வந்த ஆபத்து என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். மன்னர் பெருமான் ஆட்சியில் அமைந்த நிலப் பகுதி முழுவதும் ஒரே உடம்பு போன்றது. அதில் எந்த மூலையில் தீங்கு நேரினும் அதைப் போக்க யாவருமே முற்பட வேண்டும். அன்றியும், இப்போது வந்திருப்பதை அப்படி ஒன்றும் பெரிய ஆபத்தாக நான் கருதவில்லை.”
சோழன் மன்றாடியாருடைய சொற்களில் இன்பம் கண்டான். எல்லாருமே அவர் முகத்தைப் பார்த்தார்கள்.
“சோழனுக்குப் பாண்டிய மன்னருடைய பெருமை தெரியாதா? கோபம் அறிவை மறைத்துவிட்டது. நான் சொல்லி அனுப்பிய விடையினால் அவனுக்குச் சினம் மூண்டிருக்கவேண்டும். அதனால்தான் இந்தப் பைத்தி யக்கார வேலையில் ஈடுபட்டிருக்கிறான். குறுமுளையைத் தறிக்கக் கோடரியா வேண்டும்? மன்னர்பிரான் அடியேனுக்கு உத்தரவு கொடுக்கட்டும்; ஒரு வேளையில் சோழனை விரட்டிவிட்டு வருகிறேன்” என்று மிடுக்கோடு சொன்னார் மன்றாடியார்.
நானே நேரில் படையெடுத்துச் செல்லலாம் என்று அல்லவா யோசிக்கிறேன்?”
“மன்னர் பிரான் திருவுள்ளம் தெரிந்தும் அதை மறுக்கிறேன் என்று எண்ணக் கூடாது. சோழன் படை வலிமை இன்னதென்று யாவருக்கும் தெரியும். அவ னுக்கு உண்மையான வீரமும் படை வலிமையும் இருந்தால் இப்படி ஓரக் காலிலே போயா முட்டுவான்? தைரியம் இருந்தால் நேரே மதுரைப் பக்கம் அல்லவா வர வேண்டும்? அவலை நினைத்துக்கொண்டு அவன் உரலை இடிக்கிறான். அவனை அடக்கப் பெரிய படை ஒன்றும் வேண்டியதில்லை.”
“கொங்குப் படை ஒன்று மட்டும் இருந்தால் போதுமா? வேறு படைகளையும் துணைக்கு அழைத்துச் செல்லலாமே!” என்றான் மன்னன்.
வேண்டியதில்லை. கொங்கு வீரர்கள் தனியே போரிட்டுத் தனியே வெற்றி கண்டார்கள் என்ற பெருமையைக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் என் தோழர்களுக்கு இராதென்று நினைக்கிறேன்.”
”சே! சே! என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? அப்படி வேறு வேறாக நினைக்க மாட்டோம்” என்று மற்றத் தலைவர்கள் இடைமறித்துக் கூறினார்கள்.
3
கொங்கப் பெரும் படை பாண்டியன் ஏவலினால் காரைக்கோவாகிய சர்க்கரை மன்றாடியார் தலைமையில் எழுந்தது. தங்கள் நாட்டுக்கு வந்த ஏதத்தைப் போக்கும் பெரும் பேறு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்ற எண்ணம் கொங்கு வீரர்களுக்கு ஊக்கத்தை- ஏற்படுத்தியது. கருவூரை அடைந்தது படை, சோழர் படைக்கும் கொங்கர் படைக்கும் போர் மூண்டது.
சோழன் எதையோ நினைந்து படையெடுத்து விட்டாலும், பிறகு பாண்டியன் படை வந்து எதிர்த்தால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றியது. ஆனால் இப்போது பாண்டியன் படை முழுவதும் வரவில்லை.
என்று உணர்ந்து ஆறுதல் பெற்றான். கொங்கர்களின் வீரத்தைக் கண்டறியாதவன் அவன்.
போர் இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று சோழன் எதிர்பார்க்கவில்லை. சர்க்கரையின் படைத் தலைமையில் கொங்க வீரர்கள் எத்தனை கட்டுப்பாட்டுடன் போரிட்டார்கள்! ஒவ்வொரு வீரனும் ஓர் யானையைப் போல இருந்தான். அவர்களுடைய ஆற்றலுக்கு முன் சோழ வீரர் எம்மாத்திரம்? சோழர் படை தளர்ச்சி யுற்றது. மெல்ல மெல்லக் கருவூரின் எல்லையினின்றும் பின் வாங்கியது.
சோழர் படையில் பலர் அழிந்தனர். சோழ வீரர்களின் குருதி ஆறாக ஓடியது. படைக்குத் தலைமை தாங்கி நின்றான் சோழன். கொங்கர் படைத் தலைவரான சர்க்கரையும் சோழனும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். சர்க்கரை விட்ட அம்பு சோழனது தலைக் கவசத்தைத் தள்ளியது. அடுத்த அம்பு அவன் கேசத்தைப் பிய்த்துக் கொண்டு சென்றது. ‘தலைக்கு வந்தது தலைப்பாகை யோடு போயிற்று’ என்று அவன் புறங்காட்டி ஓடத் தொடங்கினான். சோழப் படை தன் வேகத்தை ஓட்டத்தில் காட்டியது. அந்தப் படையை நெடுந்தூரம் கொங்குப் படை துரத்திச் சென்றது. இனி மீள மாட்டார்கள் என்று எண்ணிச் சர்க்கரை திரும்பினார்.
மதுரையில் பாண்டிய மன்னன் வெற்றி வீரராகத் திரும்பிய மன்றாடியாரை எதிர்கொள்ள ஆர்வத்தோடு காத்திருந்தான். போரில் தோள் வலி காட்டிய சிங்கக் குட்டிகளாகிய படை வீரர்களுடன் சர்க்கரை வந்து கொண்டிருந்தார். வரும் வழியெல்லாம் அவருக்குப் பாராட்டு. மதுரையை வந்து அடைந்ததும் மன்னன்,
படைத் தலைவர்களோடும் அமைச்சர்களோடும் அவை கூட்டி, அவரை வரவேற்றுச் சிறப்புச் செய்தான்,
“சர்க்கரை மன்றாடியார் இன்று தம்முடைய நாட்டைக் காப்பாற்றிப் புகழ் பெற்றார்” என்று பாண்டியன் சொல்லும்போது, “இல்லை, இல்லை; பாண்டிய மன்னர் ஏவலின்படி அவர் பாதுகாப்பிலுள்ள பகுதியைப் பல வீரர்களின் துணை கொண்டு ஓரளவு காவல் புரிந்தனர் என்று சொல்லுவதுதான் முறை” என்றார் மன்றாடியார்.
“உங்கள் பணிவும், என்பால் உள்ள அன்பும் உங்கள் பெருமையை உயர்த்துகின்றன.உங்கள் வீரம் பாண்டி நாட்டின் செல்வம். உங்களால் இன்று சோழன் நம் படையின் பெருமையை உணர்ந்தான். அவன் எடுத்த ஓட்டம் புகார் நகரத்து அரண்மனையின் அந்தப்புரத்தில்தான் போய் முடிந்திருக்க வேண்டும்” என்று புகழுரை கூறினான் பாண்டியன்.
“இனிச் சோழ மன்னன் தன் ஆயுள் முழுவதுமே போரைப் பற்றி நினைக்கமாட்டான்” என்றார், படைத் தலைவர் ஒருவர்.
“நீங்கள் பாண்டிய நாட்டுக்குக் கண். நாட்டுத் தலைவராக இருந்த உங்களைச் சேனாபதி ஆக்கினேன். அதற்கு நீங்கள் எவ்வளவு பொருத்தமானவர்கள் என்பதை இன்று உலகம் உணர்ந்துகொண்டது. உங்களை வெறும் சேனாபதி என்றா சொல்வது? நீங்களே நல்ல சேனாபதி. இத்தகைய நல்ல சேனாபதி இருக்கும்பொழுது எனக்குப் பகையைப் பற்றி என்ன கவலை?” என்றான் பாண்டியன்.
அவன் பேருவகையோடு சொன்ன வார்த்தை நிலைத்து விட்டது. நல்ல சேனாபதி என்று பாராட்டியதே சர்க்கரை மன்றாடியாருக்குச் சிறப்புப் பெயராகி விட்டது. அன்று முதல் அவரை யாரும் பெயர் சொல்லி அழைப்பது இல்லை. நல்ல சேனாபதி என்றே வழங்கினார்கள். அவர் குலத்தில் வந்த வழித் தோன்றல்களில் பலர், நல்ல சேனாபதிச் சர்க்கரை மன்றாடியார் என்ற பெயரோடு விளங்குகிறார்கள்.
நல்ல சேனாபதி செய்த போரின் சிறப்பை ஒரு தனிப் பாடல் அழகாகச் சொல்லுகிறது.
ஆறெல்லாம் செந்நீர்;
அவனியெல்லாம் பல்பிணங்கள்;
தூறெல்லாம் சோழன்
சரிகுஞ்சி:- வீறுபெறு
கன்னிக்கோன் ஏவலினால்
காரைக்கோன் பின்தொடரப்
பொன்னிக்கோன் போன
பொழுது.
(செந்நீர்-இரத்தம். தூறு – புதர், சுரிகுஞ்சி – சுருண்ட தலைமயிர். கன்னிக்கோன் – கன்னியாகுமரிக்குத் தலைவனான பாண்டியன். காரைக்கோன் – நத்தக்காரையூர்த் தலைவரான சர்க்கரை மன்றாடியார். பொன்னிக்கோன் – காவிரிக்கு உரியவனான சோழன்.
சோழனுடைய தலையின் மீது மன்றாடியார் அம்பு தவழ்ந்து சென்றதாதலின், ‘தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி’ என்று பாட்டுச் சொல்கிறது. பொன்னிக் கோன் போனான் புகார் என்பதும் ஒரு பாடம்.]



