நல்ல சேனாபதி
கி. வா. ஜகந்நாதன்

ஆயிரம் வேலி அதம்பார்

    தஞ்சை மாவட்டத்தில் அதம்பார் என்ற ஓர் ஊர் உள்ளது. அங்கே உள்ள இராமர் திருவுருவம் மிக அழகியது. வடுவூர், தில்லைவளாகம் என்னும் இடங்களில் உள்ள இராமபிரானுடைய திருவுருவங்களோடு அதையும் சேர்த்துச் சொல்வது வழக்கம்.

    ஆங்கிலேயர் இந்த நாட்டுக்கு வந்த காலத்தில் இந்த நாட்டில் உள்ள நிலங்களைக் கணக்கெடுத்து, வரி விதிக்கலானார்கள். இதை ‘ஸெட்டில்மெண்ட்’ என்று சொன்னார்கள். அக்காலத்தில் அங்கங்கே அதிகாரிகளை நியமித்து இந்த வேலையைக் கவனிக்கச் செய்தார்கள். அதிகாரிகள் ஊர் ஊராகச் சென்று மணியகாரரை யும் கணக்கப் பிள்ளையையும் பார்த்து அங்கே எத்தனை நிலங்கள் உள்ளன என்றும், அவற்றில் என்ன விளைகிற தென்றும், எப்படி விளைகிறதென்றும் விசாரணை செய்தார்கள். நிலத்தின் தரம், விளைவின் சிறப்பு ஆகிய வற்றுக்கு ஏற்றபடி வரி விதிப்பதற்காக இத்தகைய கேள்விகளை அதிகாரிகள் கேட்டு வந்தார்கள்.

    இந்த விசாரணையின் பொருட்டு ஸெட்டில்மெண்டு அதிகாரி ஒருவர் அதம்பாருக்கு வந்தார். அதம்பார் வளமுள்ள ஊர். சோற்றால் மடையடைக்கும். சோணாட்டைச் சேர்ந்தது அல்லவா? அது மட்டும் அன்று. அந்தப் பகுதிகளே உரம் பெற்ற நிலம் பரந்த இடங்கள்.

    அதிகாரி வந்தவுடன் அவரை மணியகாரரும் ஊரில் உள்ள செல்வர்களும் வரவேற்று உபசரித்தார்கள்.

    நல்ல விருந்தளித்தார்கள். விருந்துண்டு இளைப்பாறினார். அதிகாரி. பிறகு ஊரின் நிலங்களைப் பற்றிய விவரங்களை அறியத் தொடங்கி ஊர்க்காரர்களைக் கூட்டினார். ஊரில் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களான நிலக் கிழவர்களை அழைத்து வைத்துக் கொண்டார். புதிதாக நடைபெறும் விசாரணை ஆதலால் ஊராருக்கே விநோதமாக இருந்தது.

    மணியகாரரும் செல்வர். அவர் வீட்டு வாசல் திண் ணையில் அதிகாரி அமர்ந்து கொண்டார். மற்றொரு திண்ணையில் ஊர்ப் பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மற்றவர்கள் திண்ணைக்குக் கீழே மரியாதையுடன் நின்று கொண்டிருந்தார்கள். ஊர்க் கணக்கப்பிள்ளை

    அதிகாரிக்கு முன்னே சிறிது விலகி மேல் துண்டை இடுப் பில் கட்டிக்கொண்டு கையைக் கட்டினபடியே நின்றார். அரசாங்க அதிகாரி என்றால் அந்தக் காலத்தில் அவ்வளவு மரியாதை; பயங்கூட உண்டு.

    அதிகாரி என்ன கேட்பாரோ என்று எல்லோருக்கும் ஒரு விதமான பயம். அவர், “இந்த ஊர் நிலங்கள் எல்லாம் எப்படி? நல்ல வளப்பம் உடையவையா? எத்தனை வேலிகள்?” என்று கேட்டார். கணக்கப் பிள்ளையைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

    யாருக்கும் தம்முடைய ஊரின் வளப்பத்தைப் பற்றிச் சொல்வதென்றால் உற்சாகம், வானம் பார்த்த பூமியுள்ள ஊர்களில் இருப்பவர்களைப் போய்க் கேட்டுப் பாருங்கள். “காவேரிப் பாசனம் எதற்கு ஆயிற்று? இங்கே சரியானபடி விளைந்தால் பொன்னைக் குவிக்கலாமே!” என்று சொல்வார்கள். அப்படியானால் நீர்வளம் படைத்த சோழ நாட்டைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இலக்கியங்கள் சோழ நாட்டு வளத்தைப் பலவகையில் பாராட்டுகின்றன. ‘ஒரு பெண்யானை படுத்திருக்கும் சிறிய இடத்தில் விளையும் விளைவைக் கொண்டு ஏழு ஆண் யானையைப் பாதுகாக்கலாம்” என்று ஒரு புலவர் பாராட்டுகிறார். நாடோடிப் பாவலனோ, “கட்டுக் கலங்காணும்; கதிர் உழக்கு நெல் காணும்” என்று அந்த வளத்துக்கு அளவு கூறுகிறான். ‘மற்ற நாடுகளில் ஏரிப் பாசனத்தாலும் இறைவையாலும் விளையும் நெல்லும் சரி, சோழ நாட்டில் அரிகாலின் கீழே சிந்தும் நெல்லும் சரி” என்று சங்க காலத்துப் புலவர் ஒருவர் சொல்கிறார்.

    அதம்பார் நிலவளத்தைக் கணக்கப்பிள்ளை சொல்லத் தொடங்கினார். அந்தப் பக்கங்களில் அவ்வூர் நிலவளத்தை யாவரும் அறிவார்கள். அதைப் பழ மொழியாகவே வழங்கி வந்தார்கள். அதனால் கணக்கப் பிள்ளை எளிதிலே அவ்வூர் நிலப் பரப்பையும் அதன் வளத்தையும் சொல்லி விட்டார்:

    “ஆயிரம் வேலி அதம்பார்;
    ஆனை கட்டும் தாள்;
    வானம் முட்டும் போர்.”

    பழமொழியைப் போல வழங்கும் இதை கணக்கப் பிள்ளை சொன்னார். அதம்பாரில் ஆயிரம் வேலி நிலம். அங்கே விளையும் நெல்லின் தாளில் ஆனையைக் கட்டலாம்.என்றால் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்! அறுப்புக்கு முன்னால் காணும் காட்சி அது. அறுவடையான பிறகு களத்தில் போய்ப் பார்த்தால் நிலவளத்தை நன்கு உணரலாம். வானத்தை முட்டும் போரால் உணர்ந்து கொள்ளலாம்.

    எல்லோருடைய வாயிலும் அடிபடும் பழமொழியைத் தான் கணக்கப் பிள்ளை சொன்னார். எதிரே இருந்த திண்ணையில் உட்கார்ந்திருந்த செல்வர்களில் ஒருவருக்குக் கணக்கப்பிள்ளை என்ன சொல்லப் போகி றாரோ என்று கவலை உண்டாயிற்று. அவர் கொஞ்சம் உண்மை தெரிந்தவர். வளமான நிலம் என்றால் அதற்கு வரி அதிகமாகப் போட்டு விடுவார்கள் என்பதை அறிந்தவர். அந்த ஊரில் அதிகமான நிலங்களை உடையவர் அவர். ‘இந்தப் பைத்தியம் இந்த நாடோடிப் பழ மொழியை உளறி வைத்தால் இங்கே பொன் விளைகிறதென்ற நினைப்பில் கணக்கில்லாமல் வரியைப் போட்டு விடுவானே!’ என்று அவர் அஞ்சினார்.

    அவர் அஞ்சியபடியே ஆகிவிட்டது. கணக்கப் பிள்ளை,’ஆயிரம் வேலி ஆதம்பார்” என்று சொல்லத் தொடங்கும் போதே அந்தச் செல்வர் சற்றே கனைத்துக் கொண்டார். கணக்கப்பிள்ளை கடைக்கண்ணால் அவரைப் பார்த்தார். அப்போது செல்வர் தம் வலக்கையை மூடி மோதிரம் தெரியும்படி உயர்த்திக் காட்டினார்.

    கணக்கப்பிள்ளைக்குத் தெரியாத தந்திரமா? நிலத்தின் மதிப்பை உயர்த்தினால் வரியும் உயரும் என்பதை அவரும் அறிவார். தம்முடைய வார்த்தைகளால் நிலம் படைத்தவர்களுக்கு அதிக வரி போடும்படி நேரும் என்பதை உணர்ந்தே சொல்லலானார். செல்வர் தம் இறுக்கிய கையை உயர்த்திக் காட்டியபோது அதில் இருந்த கல்மோதிரம் பளிச்சென்று ஒளிவிட்டது. ‘எனக்கு ஆதரவாகச் சொல்: அப்படிச் சொன்னால் உனக்கு இந்த மோதிரத்தைத் தருகிறேன்’ என்று குறிப்பிடுகிறார் என்று கணக்கப்பிள்ளை தெரிந்து கொண்டார். நிலங்கள் அதிக வளப்பமுள்ளவை என்று சொல்லப் புகுந்த பிறகு எப்படி மாற்றுவது?

    ஒரு கணந்தான் கணக்கப்பிள்ளை சிந்தித்தார். அவருக்குத் தந்திரம் உதயமாகிவிட்டது. வழக்கமாக வழங்கும் பழமொழியைச் சொன்னார்.

    “ஆயிரம் வேலி அதம்பார்
    ஆனை கட்டும் தாள்
    வானம் முட்டும் போர்”

    என்று அந்தப் பழமொழி முழுவதையும் சொன்னார். முன்னே அமர்ந்திருந்த செல்வருக்குக் கண்கள்

    சிவந்தன. ஆனால் கணக்கப் பிள்ளை அதனோடு நிற்க வில்லை. மேலேயும் அந்தப் பழமொழியோடு புதுமொழியைச் சேர்த்துச் சொல்லத் தொடங்கினார்.

    “நிலம் என்னவோ வளம் பொருந்தியதுதான். ஆனால், அந்த விளைச்சலால் உண்டாகும் பயன்தான் சரியாகக் கிடைப்பதில்லை” என்று காட்டும் புதுமொழியைச் சேர்த்தார்.

    “ஆயிரம் வேலி அதம்பார்.
    ஆனை கட்டும் தாள்.
    வான முட்டும் போர்;
    ஆறு கொண்டது பாதி
    தூறு கொண்டது பாதி;
    கொட்டாங்கச்சியில் நெல்லு,
    குடங்கையிலே வைக்கோல்,”

    ஆயிரம் வேலிதான். ஆனை கட்டும் தாள்; போர் போட்டால் வானத்தை முட்டும். ஆனால் இப்போது என்ன கிடைக்கிறது தெரியுமா? ஆற்றால் அரிப்புண்டு நிலம் வீணாகிறது. தூறுகள் அடர்ந்து வீணாகும் நிலம் வேறு. இவை போக மிஞ்சுகிறது கொட்டாங்கச்சியில் நெல். வைக்கோல் ஒரு பிடித்த பிடி; உள்ளங்கையில் யற்றிப் பிடிக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது. (குடங்கை – உள்ளங்கை.)

    செல்வரே அயர்ந்து போனார். ‘பயல் என்ன இருந் தாலும் கெட்டிக்காரன்!? என்று மனத்துக்குள் வியந்து கொண்டார்.

    அதிகாரி ஊரை விட்டுப் புறப்பட்டார். அவரை எல்லோரும் உபசாரத்துடன் வழியனுப்பினார்கள். அவர் போன பிறகு கணக்கப்பிள்ளை கிடைக்க வேண்டிய பரிசைப் பெறலாமென்று, மோதிரத்தைக் காட்டிய செல்வரிடம் போனார்.

    செல்வர் தம் வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். கணக்கப்பிள்ளை கும்பிடு போட்டார்.

    “அப்படி உட்காரும்” என்றார் செல்வர். கணக்கப்பிள்ளை உட்கார்ந்தார்.

    “எங்கே காலை நேரத்தில் வந்தீர்? அதிகாரி ஒன்றும் வேலை வைத்துவிட்டுப் போகவில்லையா?”

    “ஊர்ப்பட்ட வேலையை வைத்திருக்கிறான். இப் போதே இவ்வளவு வேலை இருக்கிறதே; இன்னும் நான் உள்ளவை உள்ளபடியே சொல்லியிருந்தால் எத்தனை வேலை செய்ய வேண்டியிருக்குமோ!”

    ”எத்தனை வேலையிருந்தால் உமக்கு என்ன? நீர் மனம் வைத்தால் எல்லாம் முடித்து விடுகிறீர்.”

    “ஆமாம். அன்று நீங்கள் குறிப்புக் காட்டவே ஒரு கணத்தில் மாற்றித் கொள்ளவில்லையா ? எல்லாம் புத்தி யிருந்தால் சாதித்து விடலாம்.”

    ” நல்ல வேளை: என் குறிப்பை உணர்ந்து கொண்டீரே!”

    “நீங்கள் குறிப்புக் காட்டுவது, நான் அதைக் கவனிக்காமல் போகிறதாவது. அதை நினைப்பூட்டத் தான் இப்போது வந்தேன்.”

    “எதை?”

    “மோதிரம் தருவதாகக் குறிப்பித்தீர்களே, அதைத்தான்.”

    ”நான் மோதிரம் தருவதாகத் தெரிவித்தேனோ? என்ன ஐயா உளறுகிறீர்?”

    “என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? ஆயிரம் வேலி என்று ஆரம்பிக்கிற போதே நீங்கள் கைமோதிரத்தைக் காட்டினீர்கள். அதையே நீங்கள் எனக்குப் பரிசாக அளிக்கிறதாகச் சாடை காட்டினீர்களே! அதனாலல்லவா நான் சாமர்த்தியமாகப் பேச்சை மாற்றினேன்?”

    “ஓகோ! அப்படியா சமாசாரம்? நான் என்ன அர்த்தத்தோடு கையைக் காட்டினேன் என்பதைத் தெரிந்து கொண்டு, நீர் சரியாக நடந்துகொண்டீர் என்றல்லவா நான் நினைத்தேன்?””

    “நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லையே!”

    “இனிமேல் விளங்கினால் என்ன, விளங்காவிட் டால் என்ன? நீர் வேறு விதமாகச் சொல்லியிருந்தால் அப்போது விளங்கும்படி செய்திருப்பேன். ‘சாக்கிரதை யாகப் பேசும்; இல்லாவிட்டால் உம் தலையில் உழக்கு ரத்தம் வருவிப்பேன்’ என்றல்லவா நான் கைச் சாடை காட்டினேன்? உமக்கு மோதிரந்தான் தெரிந்ததோ? குட்டுப்பட்டாலும் மோதிரக் கையில் குட்டுப்பட வேண்டும் என்று நினைக்காமற் போனீரே.-பிரமாத காரியம் பண்ணிவிட்டாராம்!’- இவருக்கு மோதிரப் பரிசு வேண்டுமாம். இதற்கு எங்கேயாவது போய்க் கொள்ளை யடிக்கலாமே!”

    அந்தப் பணக்காரருக்குக் கோபம் ஏறிக்கொண்டே வந்ததை உணர்ந்தார் கணக்கப்பிள்ளை, “சரி, நான் போய் வருகிறேன்” என்று விடை பெற்றுக்கொண்டு, பெற்றேன் பிழைத்தேன் என்று புறப்பட்டு விட்டார்.

    (இந்த வரலாற்றை எனக்குச் சொன்னவர் கே.சி. நடராஜன்.)

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *