
நல்ல சேனாபதி
கி. வா. ஜகந்நாதன்
சிவிகை தாங்கிய வீரன்
தென்னார்க்காடு மாவட்டத்தில் ஆறகழூர் என்று ஓர் ஊர் உண்டு. அது முன் காலத்தில் பெரிய நகராக ஆறு அகழிகளையும் சிறந்த கோட்டையையும் உடையதாக விளங்கியது. ஆறு அகழிகளை உடையதனால் தான் ஆறகழூர் என்ற பெயரே உண்டாயிற்று. அதை ஆறை என்று புலவர்கள் செய்யுளில் பாடியிருக்கிறார் கள். அதைத் தலைநகராகக் கொண்ட நாட்டுக்கு மகத மண்டலம் என்று பெயர். அந்த நாட்டுக்குத் தலைவனாய்ப் பெரு வீரனாக இருந்த வாணகோவரையன் இராசராச தேவன் என்ற அரசனே ஆறகழூர் என்ற நகரை உண்டுபண்ணி அதில் இருந்து அரசாண்டு வந்தான். வாண அரசர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளார்.
அந்தக் குலத்தில் வந்தவன் ஆறைவாணன், அவன் மகத மண்டலத்துக்குத் தலைவனாக இருந்தமை யால் மகதேசன், மாகதர்கோன் என்று புலவர் அவனைப் பாடினர்கள். வீரத்திலே சிறந்திருந்ததுபோலவே அறத்திலும் அவன் சிறந்து நின்றான்.
பாண்டியனுக்கும் அவனுக்கும் ஒருமுறை போர் ‘மூண்டது. அந்தப் போரில் முடியுடை அரசனாக இருந்தாலும் பாண்டியன் தக்க படை வீரர்களைத் தொகுக்கா மையால் வாணனுக்கு எதிர் நின்று போரிட இயலவில்லை. சில நாட்கள் போர் நடந்தது. இறுதியில் பாண்டியன் தோல்வியுற்றான். அதுமுதல் அவன் ஆறைவாணனுக்கு அடங்கினவனாகி விட்டான்.
முடியுடை வேந்தனையும் அஞ்சச் செய்து வென்ற ஆறைவாணனுடைய வீரத்தைப் புலவர்கள் பாராட்டினார்கள். ஒரு சைவப் புலவர் பாண்டியன் தோற்றதை நயமாகப் பாடினார். “அந்தக் காலத்தில் வட மதுரையில் கண்ணனாகி மால் அரசாண்டான், வடக்கே உள்ள மகத நாட்டு அரசனாகிய சராசந்தன் என்பவனோடு பொருது தோற்று அவனுக்கு அஞ்சிக் கண்ணன் கடல் நடுவிலுள்ள துவாரகைக்குப் போய்விட்டான். அது வடக்கே நிகழ்ந்தது. இங்கே தெற்கே உள்ள மதுரையில் பாண்டியன் இருந்தான். மகதர்கோம னாகிய வாணன் சீறினமையால் அவன் தென் மதுரையை விட்டுத் தென் கடலுக்கு ஓடிப் போனான். மகதேசன் முனிந்தால் மன்னர்களுக்குப் புகும் இடம் கடல்தான் போலும்!” என்ற கருத்தை அமைத்து ஒரு பாடலைப் பாடினார்.
வன்மதுரை விட்டு
வடகடலான் மால்; வழுதி
தென்மதுரை விட்டின்று
தென்கடலான்;- நன்னுதலாய்!
மல்லார்தோள் மாகதர்கோ
மான்முனிந்தால் மன்னவருக்
கெல்லாம் கடலோ இடம்?
[மால் வடகடலான். மாகதர் கோமான். கோமான் என்பது சராசந்தளையும் ஆறைவாணனையும் குறிந்தது.]
ஆறைவாணனாகிய இராசராசதேவன் காலத்துக்குப் பிறகு வந்த வாண அரசர்கள் அவனைப் போன்ற பெரு வீரம் உடையவர்களாக இருக்கவில்லை. ஆயினும் அவர்களோடு போர் செய்வதற்கு மன்னர்கள் அஞ்சினார்கள். முக்கியமாகப் பாண்டிய மன்னர் மிக அஞ்சினர். ஆயினும் வாணனால் தோல்வியுற்ற பழங் கதையைப் பின்னே வந்த பாண்டியர்கள் எண்ணி, அதற்கு ஏதேனும் மாற்றாக ஒன்று செய்யவேண்டும் என்று எண்ணினார்கள்.
ஒரு பாண்டியன் அப்போதிருந்த வாண அரசனை வெல்ல வேண்டுமென்று கருதினான். ஆயினும் அதற் குப் போதிய தைரியம் இல்லை. பழைய வாணனிடம் தோல்வியுற்ற பாண்டியன் காலத்தில் இருந்த படையை விட இப்போது இந்தப் பாண்டியனிடம் அதிகமான படை இருந்தது. இப்போது அரசனும் பழைய வாணனைப் போன்ற வலிமை உடையவன் அல்லன். இருப்பினும் இந்தப் பாண்டியனுக்குப் போரில் தனக்கு வெற்றி கிடைக்கும் என்ற உறுதி உண்டாகவில்லை. அதனால் வஞ்சகமாக வாண அரசனைச் சிறையெடுத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் எழுந்தது. அந்த எண்ணத்தை நிறைவேற்ற என்ன வழி என்று அவன் ஆராய்ந்துகொண்டிருந்தான்.
பாண்டியனுடைய படையில் கொங்கு நாட்டு வீரர் பலர் இருந்தனர். அவர்களுடைய உடல் உரமும் நெஞ்சுரமும் பாண்டியனுக்கு வியப்பை உண்டாக்கின. ஒரு நாள் பாண்டியன் தன் படை வீரர்களுக்கு முன் இருந்த போது, ‘யாரேனும் வீரன் வாணனைப் பிடித்து வந்தால் அவனுக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்” என்றான். அந்தப் படையில் கொங்குநாட்டில் மோரூர் என்ற ஊரிலிருந்து வந்தவனாகிய சூரியன் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பாண்டியன் சொன்னதைக் கேட்டான். உடனே சற்றும் தடங்கலின்றி, “என்னை அனுப்பினால் நான் அவனைப் பிடித்து வருவேன்” என்று தலைநிமிர்ந்து சொன்னான்.
அவனுடைய உடல் மிடுக்கையும் பேச்சிலிருந்த உறுதியையும் கண்ட பாண்டியன் அவன் சொன்னபடியே செய்வான் என்று நம்பினான். அவனுக்கு என்ன என்ன வேண்டுமோ, அவற்றையெல்லாம் கொடுக்கும்படி கட்டளை இட்டான்.
ஆறகழூர் என்பது கொங்குநாட்டின் எல்லைக்கு அருகில் இருப்பது. சூரியனென்னும் வீரன் அந்த எல்லையில் பாண்டியனுடைய படை ஒன்றை வந்து இருக்கச் செய்தான். கொங்குநாட்டின் பெரும் பகுதி அக்காலத்தில் பாண்டியன் ஆட்சிக்குள் அடங்கியிருந்தது. சங்ககிரி என்ற ஊரில் ஒரு மலையும் அதில் ஒரு கோட்டையும் இருக்கின்றன. பாண்டிய மன்னன் அங்கே வந்து தங்கியிருந்தானானால், தான் ஆறகழூர் வாணனை அங்கே பிடித்துக் கொண்டுவந்து விடுவதாகச் சூரியன் சொன்னான். அப்படியே பாண்டியன் சங்ககிரியை அடைந்தான்.
சூரியன் வேறு சில நண்பர்களோடு கூலி வேலை செய்பவர்களைப் போல அழுக்காக உள்ள ஆடைகளைப் புனைந்துகொண்டு ஆறகழூர் போனான். அங்குள்ள மக்களிடம் தாங்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தம்மைக் காப்பாற்றிய செல்வர் திடீரென்று இறந்து போய்விட்டமையால் தம்மைப் பாதுகாப்பவர் இல்லாமல் அங்கே பிழைக்க வந்திருப்பதாகவும். அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
“உங்கள் நாட்டை விட்டு இவ்வளவு தூரம் ஏன் வந்தீர்கள்? அங்கேயே ஏதாவது தொழில் செய்து பிழைக்கக்கூடாதா?” என்று அந்த ஊர்க்காரர்கள் கேட்டார்கள்.
“எங்களுக்கு வேறு தொழிலே தெரியாது. பல்லக்குச் சுமக்கும் தொழில் ஒன்றுதான் தெரியும். ஆகையால் ஏருழவோ, வெட்டவோ, கொத்தவோ தெரியாமல் யாருக்காவது பல்லக்குச் சுமந்து வாழலாம் என்று வந்தோம்.”
“மற்ற இடங்களில் உங்களுக்கு வேலை கிடைக்க வில்லையா?”
“எங்கள் தலைவர் மிக்க வீரம் உள்ளவர் ; கருணை உள்ளவர்; பெருந்தன்மை உள்ளவர். அவருடைய சிவிகையைச் சுமந்த பிறகு சிறிய செல்வர்களைச் சுமக்க மனம் வரவில்லை. பெருந்தன்மை உடையவர்களை எளிதிலே காண முடியவில்லையே! இங்குள்ள வாண மன்னர் நல்லவரென்று கேள்வியுற்றோம். இவரிடம் வேலை கிடைத்தால் தொண்டு செய்யலாம் என்று வந்தோம்” என்றார்கள்.
இந்தச் செய்தி வாணகுல அரசன் காதுக்கு எட்டியது. அவன் சூரியனையும் அவன் நண்பர்களையும் அழைத்து வரச் செய்து பேசினான். சூரியன் பேச்சிலும் வல்லவனாக இருந்தமையால் அரசன் அவனிடம் மயங்கி விட்டான். அவனையும் அவன் நண்பர்களையும் தன் பல்லக்குத் தூக்கிகளாக நியமித்துவிட்டான். புதியதாக ஒரு சிவிகையை அப்போதுதான் செய்வித்திருந்தான். இவர்கள் வந்த சமயம் புதுச் சிவிகைக்கு ஆள் தேடும் சமயமாக இருந்தது. ஆகவே இவர்களுடைய விருப்பம் எளிதில் நிறைவேறியது.
சூரியனும் பிறரும் சிவிகை தூக்கும் ஏவலர்கள் ஆகிச் சில வாரங்கள் ஆயின. முன்னே தூக்கிப் பழக் கம் இல்லாவிட்டாலும் தோள் வலியுடையவர்களாதலால் அவர்கள் வருத்தமின்றித் தாம் மேற்கொண்ட செயலைச் செய்து வந்தார்கள். அரசனுக்கும் அவர்களிடம் அன்பு உண்டாயிற்று. சூரியனுக்கோ தான் பாண்டியனுக்குக்
கொடுத்த வாக்கை நிறைவேற்றும் செவ்வியை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் இரவு வாண அரசன் நெடுநேரம் மகளிருடைய ஆடல் பாடலைக் கண்டு இன்புற்றான். மறுநாள் விடியற்காலையிலே எழுந்து ஏதோ ஓர் இடம் போக வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். குதிரையிற் போகாமல் சிவிகையிலே போக எண்ணினான். முதல் நாள் தூங்காமல் இருந்த அலுப்பினால் தளர்வடைந் திருந்ததால் தூக்கம் தூக்கமாக வந்தது. ஆகையால் குதிரையில் போக விரும்பாமல் சிவிகையிலே ஏறிப் புறப்பட்டான்.
அரசன் முதல் நாள் சரியாகத் தூங்கவில்லை என்பதைச் சூரியன் உணர்ந்திருந்தான். சிவிகையில் அரசன் ஏறியவுடன் சூரியனும் அவன் நண்பர்களும் அதைத் தூக்கிக்கொண்டனர். சிவிகைக்கு முன் பக்கத்தில் சூரியன் இருந்தான். விடியற்கால வேளை; இன் னும் கருக்கல் வாங்கவில்லை. சிவிகையில் ஏறின மன்னன் அதிலே உறங்கிப் போனான்.
இதுதான் தக்க சமயமென்று அறிந்த சூரியன் மகத மண்டலத்தின் எல்லையை வெகு வேகமாகத் தாண்டிச் சிவிகையைக் கொங்கு நாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான். அங்கே இருந்த வீரர்களும் சேர்ந்து கொண்டனர். அவர்களும் மாறி மாறிச் சிவிகையைத் தூக்கிய தால் மிகவும் வேகமாக அவர்களால் போக முடிந்தது.
வாணன் கண் விழித்து வெளியே பார்த்தான். புதிய இடமாக இருந்தது. சிவிகையைச் சுற்றி ஆயுதம் ஏந்திய வீரர்கள் நடந்து வருவதைக் கண்டான். தனக்கு ஏதோ தீங்கு நேர இருக்கிறதென்பதை உணர்ந்து கொண்டான்.
“யார் அப்பா அவர்கள்?” என்று சிவிகை தாங்கு பவரைக் கேட்டான் வாணன்.
“எங்களைச் சேர்ந்தவர்கள்” என்றார்கள்.
“ஏன் இந்த வழியாகச் சிவிகையைக் கொண்டு போகிறீர்கள்?”
“இதுவரையில் உங்கள் விருப்பப்படி நாங்கள் போனோம். இப்போது நீங்கள் எங்கள் விருப்பப்படி வரவேண்டும்.”
“எங்கே போகிறீர்கள்?”
“பாண்டிய மன்னரிடத்தில். அவர் உங்களை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று ஒரு வீரன் சொன்னபோது யாவரும் நகைத்தார்கள்.
வாணன் கூண்டில் அடைபட்ட புலி போலானான். பெருந்திரளாகப் படை வீரர்கள் கூட்டம் அருகில் காவலாக வரும்போது அவனால் என்ன செய்யமுடியும்? தன் தலைவிதியை நொந்துகொண்டிருந்தான்.
சிவிகை இடையே சில இடங்களில் தங்கி இறுதியில் சங்ககிரியை அடைந்தது. யாரும் ஒரு துணை யின்றி ஆறகழூர் வாணன் தன்னந் தனியனாகப் பாண்டியன் முன் நின்றான்,
“இப்படி வஞ்சகமாகப் பிடித்து வருவதுதான் பாண்டிய மன்னருக்கு அழகோ?” என்று அவன் கேட்டான்.
“பல காலமாக எங்கள் குடிக்கு நேர்ந்த பழியை மாற்றிக்கொள்ளவே. இதைச் செய்தேன். இனி உம்முடைய ஆட்சி நமக்கு அடங்கி
நமக்கு அடங்கி நடக்கவேண்டும். இல்லையெனில் உம்முடைய உயிர் இந்த உடலில் நில்லாது” என்றான் பாண்டியன்.
வேறு வழியின்றி வாணன் பாண்டியனைப் புகலடைந்தான். தம் குலத்தாரை அஞ்சுவித்து நடுங்கச் செய்த பழைய வாணனால் பாண்டிய மன்னர் பெற்ற தோல்வி மாறிவிட்டதாக எண்ணி இந்தப் பாண்டியன் பூரித்து மகிழ்ந்தான்.
ஆறகழூர் வாணன் மீட்டும் தன் ஊர் சென்றான். அது முதல் அவன் பாண்டியன்கீழ் ஆட்சி புரியும் குறு நில மன்னனாகிவிட்டான்.
வாணனைத் தந்திரமாகப் பற்றி வந்த சூரியனிடம் பாண்டியனுக்குப் பெருமதிப்பு உண்டாகிவிட்டது. அவனைப் பலபடியாகப் பாராட்டினான். பல பரிசில்கள் அளித்தான். ஆகவராமன் என்ற பட்டப் பெயர் வழங்கினான். வெறும் சூரியன் என்று உள்ள பெயரை மாற்றிச் சூரிய காங்கேயன் வேளாளர்களைக் கங்கா புத்திரர்கள் என்பார்கள். காங்கேயன் என்பதற்குக் கங்கைக்கு மகன் என்று பொருள். வேளாளர் தலைவனாதலின் சூரியனைக் காங்கேயன் என்று சிறப்பித்தான் பாண்டியன். கொங்கு நாட்டின் ஒரு பிரிவாகிய எழுகரை நாடு என்ற பகுதியை அவனுக்கு வழங்கி, அதற்கு அவனைத் தலைவனாக்கினான். அது முதல் சூரிய காங்கேயன் எழுகரை நாட்டு அதிபனாக வளவாழ்வு பெற்று வாழ்ந்தான்.
அவனுடைய புகழைப் புலவர்கள் பாடினார்கள். ஆறை வாணனைப் பற்றிக் கொண்டுவந்து பாண்டியனுக்கு நேரே நிறுத்திய செயலை ஒரு புலவர் பின் வருமாறு பாடியிருக்கிறார்.
மிண்டாறை வாணளைமுன்
வெட்டாமல் பாண்டியன்நேர்
கொண்டுவந்து நிற்கவிட்ட
கொற்றவனும் நீ அலையோ?
தெண்டிரைசேர் மோரூரில்
தென்னன்மகு டாசலனே!
மண்டலிகர் தேர்ந்துமெச்ச
வாழ்சூர்ய காங்கெயனே!
(மிண்டு – செருக்குற்று நின்ற, தென்னன் மகுடா சலனே – பாண்டியன் சூட்டிய மகுடத்தை உடைய தளராத உறுதியை உடையவனே. மண்டலிகர் – மண்டலங்களுக்கு நாயகராகிய அரசர்கள்.]



