
நல்ல சேனாபதி
கி. வா. ஜகந்நாதன்
கல்யாண வரி
காவிரியாறு குடகு நாட்டில் தோன்றி, கன்னட நாட்டு வழியே படர்ந்து, கொங்கு நாட்டில் புகுந்து வளம் பெருக்கி, பின்பு சோழ நாட்டை ஊட்டிக் கடலில் புகுகிறது. அதன் நீரால் மிக்க வளத்தைப் பெறுவது சோழ நாடு. அதனால்தான் அருணகிரி நாதர். “ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலம்” என்று பாடி யிருக்கிறார். கொங்கு மண்டலத்திலுள்ள சில பகுதிகளும் ஓரளவு காவிரியினால் விளைவு பெறுகிறது.
முன் காலத்தில் சில ஆண்டுகளில் காவிரியாற்றில் பெரு வெள்ளம் வந்து விடும். கரை சில இடங்களில் உடைந்து போகுமோ என்ற அச்சம் உண்டாகும். அங்கங்கே உள்ள மக்கள் அந்தச் சமயங்களில் கரையை உயர்த்தி வலி பெறச் செய்வார்கள்.
மூன்றாம் குலோத்துங்கன் அரசாட்சி செய்திருந்த காலத்தில் ஒருமுறை காவிரியாற்றில் கட்டுக் கடங்காத வெள்ளம் வந்து விட்டது. வெள்ளம் வந்தால் அரசன் ஆணையை எதிர்பாராமலே அந்த அந்த ஊரிலுள்ள மக்கள் வேறு வேலைகளை யெல்லாம் விட்டு விட்டுத் திரண்டு வந்து கரையை வலியுறுத்தத் தொடங்குவார் கள். அப்படியே இப்போதும் மக்கள் செய்தார்கள்.
ஆனால் இந்த முறை வந்த வெள்ளம் மிகப் பெரிதாக இருந்தது. தங்கள் முயற்சிக்குள் வெள்ளம் அடங்காது என்று அஞ்சினார்கள் குடிமக்கள்.
கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் சேரும் எல்லையில் கருவூர் இருக்கிறது. அதற்கு ஒரு காத தூரத்திற்குள் காவிரி ஓடுகிறது. அந்தப் பகுதிகளில்தான் கரை மிகவும் குறைபாடுடையதாக இருந்தது. அங்கே உடைப்பெடுத்துக் கொண்டால் கொங்கு மண்டலப் பகுதியும் சோழ மண்டலப் பகுதியும் ஒரே மணற் காடு ஆகி விடும்.
அந்த இடத்தைச் செப்பஞ் செய்யாவிட்டால் இரண்டு மண்டலங்களுக்கும் ஊறுபாடு நேரும்.இதை மக்கள் உணர்ந்தார்கள். முயற்சியும் உடலுமும் பெற்ற கொங்கு நாட்டு மக்களுக்குத் தங்கள் மண்டிலத்தில் காவிரிக்கரை உடையும்படி விடக்கூடாது என்ற எண்ணம் உண்டாயிற்று.
வெள்ளத்தின் நிலையைக் காவிரிக் கரையில் இல்லாத ஊர்களிலுள்ள குடி மக்களும் உணர்ந்து கொண்டார்கள். அங்கங்கே இருந்த கொங்கு நாட்டுத் தலைவர்களும் நாட்டாண்மைக்காரர்களும் தங்கள் ஆட்சிக்குட் பட்ட இடங்களிலுள்ள மக்களை அழைத்து வந்தனர். காவிரிக் கரையில் தழையும் மண்ணும் கல்லும் போட்டு அதை உயர்த்தினார்கள். உடைப்பு எடுக்கும் என்று தோன்றிய இடங்களிலெல்லாம் வைக்கோலைக் கொண்டு வந்து போட்டுக் குதிரை மரங்களை நட்டு மண்ணை நிரப்பி அணை போலக் கரையை உறுதிப்படுத்தினார்கள். கொங்கு மண்டலத்தின் கீழ்ப் பகுதி முழுவதுமே இந்தப் பெரிய காரியத்தில் ஈடுபட்டிருந்தது என்று சொல்லலாம்.
அப்போது கவிச் சக்கரவர்த்தி கம்பர் கொங்கு நாட்டுப் பகுதிகளில் உள்ள ஊர்களைப் பார்த்துக் கொண்டு வந்தார். அந்த நாட்டில் புலவர்கள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்கள் பரம்பரை பரம்பரை யாகத் தமிழில் புலமை படைத்தவர்கள். கவி பாடும் திறமை உள்ளவர்கள். சிறிய ஊரில் உள்ள தலைவனாக இருந்தாலும் அவனைக் கவி பாடிச் சிறப்பித்தார்கள்; சிறிய நூல்களை இயற்றினார்கள். அதனால் கொங்கு நாட்டில் வாழ்ந்த சிறிய வள்ளல்களைப் பற்றிப் பல பல சிறு நூல்கள் எழுந்தன; குறவஞ்சி, காதல், பள்ளு, தூது, கோவை என்னும் பிரபந்தங்கள் பல தோன்றின.
ஆயினும் அந்தப் புலவர்கள் வறியவர் களாகவே இருந்தார்கள். நிலையான வருவாய் ஏதும் அவர்களுக்கு இல்லை. யாரேனும் வள்ளலை அவர்கள் பாடினால் அவன் பரிசு அளிப்பான். அதை வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்கு வாழ முடியும்?
கம்பர் கொங்கு நாட்டில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது அங்கங்கே உள்ள வள்ளல்களைக் கண்டார். புலவர் பரம்பரையினரைக் கண்டு அளவளாவி அவர்கள் நிலையை உணர்ந்து வருந்தினார்.
இவ்வாறு அவர் சென்று கொண்டிருந்த போது தான் திடீரென்று காவிரியில் வெள்ளம் வந்தது. நாடு முழுவதும் அதே பேச்சாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் காவிரிக் கரையைக் கட்டச் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியைக் கம்பர் கேள்வியுற்றார். அங்கே போய்ப் பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. தம்முடன் வந்த கூட்டத்தோடு போனார்.
அங்கே நடந்து கொண்டிருந்த வேலையையும் மக்களுக்கு உள்ள அச்சத்தையும் கண்டார். அவர்கள் ஒன்றுபட்டு அந்தப் பெருந் தொண்டைச் செய்வதை அறிந்து வியந்தார். கம்பர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அரசாங்க அதிகாரிகளும் கொங்கு நாட்டுத் தலைவர்களும் அவரை மரியாதையுடன் வரவேற்றனர்.
“வெள்ளத்தின் நிலை எப்படி இருக்கிறது? கரை போதிய வலிமையுடையதாக இருக்கிறதா?” என்று கேட்டார் கம்பர்.
“எங்களால் இயன்ற அளவு பாடு பாடுகிறோம் மக்களும் வஞ்சகம் இல்லாமல் உழைக்கிறார்கள். வெள்ளம் ஒரே நிலையில் இருந்தால் அச்சம் இல்லை. எப்படியோ பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் மிகுதியானால் இந்தக் கரை போதாது. எல்லாம் புதிய மண்; ஆகையினால் எளிதில் கரைந்து போகும்; உள் வாங்கிவிடும். வெள்ளம் பெருகாமல் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணமும் இறைவனை வேண்டிக்கொண் டிருக்கிறோம்” என்றார்கள் அதிகாரிகள்.
“இத்தகைய வெள்ளம் முன்பு வந்தது இல்லையோ?” என்று மீட்டும் கேட்டார் கம்பர்
“வெள்ளம் வருவது வழக்கந்தான். ஆனால் இவ்வளவு பெரிய வெள்ளம் எங்கள் நினைவு தெரிந்து வந்த தில்லை.”
அப்போது கொங்கு நாட்டுத் தலைவர் ஒருவர் முன்னே வந்தார். கம்பருடைய திருவடியில் வீழ்ந்து எழுந்தார். கம்பர் தெய்விக ஆற்றல் படைத்த பெருங் கவிஞர் என்று யாவரும் சொல்வார்கள். ஆகையால் அவர் வணங்கத் தக்கவரென்ற எண்ணத்தால் அந்தக் கொங்குத் தலைவர் அவரை அடிபணிந்தார். பிறகு மிகவும் குழைவோடு, “ஒரு விண்ணப்பம்” என்றார்.
” என்ன, சொல்லுங்கள்.”
“இந்த வெள்ளம் கட்டுக் கடங்காமல் போனால் இந்தப் பகுதியில் உள்ள கரை நெடுந்தூரம் உடைந்து விடும். அப்போது இதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இதன் பின் உள்ள சோழ நாட்டின் பகுதிகளும் ஒரே வெள்ளக்காடு ஆகி விடும். உடைப்பு எடுப்பதற்கு முன் கரையைக் காப்பாற்றினால் தான் நலம். எங்காவது ஓரிடத்தில் சிறிய உடைப்பு எடுத்தாலும் போதும்; பிறகு ஆபத்துத்தான். மிக விரைவில் உடைப்புப் பெரிதாகி நாடு பாழாகி விடும்.”
“நீங்கள் சொல்வதைக் கேட்கும்பொழுது இப்போது உள்ள நிலை மிகவும் அபாயமானது என்று தெரிகிறது.”
“அதைத்தான் இங்கே விண்ணப்பித்துக்கொள்ள வருகிறேன். மனிதர்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து பார்க்கிறோம். வெள்ளம் வந்தது மனித சக்திக்கு அப்பாற் பட்ட இறைவன் செயல். அது மேலும் பெருகாமல் தடுக்க நம்மால் ஆகாது. இறைவன் திருவுள்ளம் இரங்கி வெள்ளத்தை மட்டுப்படுத்த வேண்டும். அந்த இறைவனை நாங்கள் கண்டறியோம். அருள் பெற்ற பெரியவர்களே எங்களுக்குக் கண் கண்ட தெய்வம். இப்போது தங்கள் வரவால் நாங்கள் பெரிய பேறு பெற்றோம். தாங்கள் அருள் வாக்கு உடையவர்கள். தாங்கள் நினைத்தால் நலமும் செய்யலாம்; தீங்கும் புரியலாம்”
அந்தத் தலைவருடைய பேச்சின் போக்கை உணர்ந்துகொண்டு அருகில் இருந்தவர்களும் தங்கள் கைகளைக் குவித்துக் கும்பிட்டவர்களாய், “ஆம், ஆம்!’ என்றார்கள்.
முன்னவர் மறுபடியும் பேசலானார்:
“தங்கள் திருவாக்கால் ஒரு கவி பாடி இந்தக் காவிரியன்னையின் சீற்றத்தைத் தணிக்கவேண்டும். தங்கள் நாவில் விளையாடும் கலைமகள் அருளால் எங்கள் வேண்டுகோள் நிறைவேற வேண்டும்” என்று மன முருகிச் சொன்னவர் மறுபடியும் கம்பர் திருவடிகளில் வீழ்ந்தார். அருகில் நின்றவர்களும் அப்படியே வீழ்ந்து பணிந்தார்கள்.
கம்பருடைய உள்ளம் உருகிவிட்டது. இத்தனை கவலை உள்ள இவர்களுடைய வேண்டுகோளை இறைவன் புறக்கணிக்கமாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டாயிற்று. உடனே அவர் வாக்கிலிருந்து ஒரு கவிதை பிறந்தது.
காவிரி மாநதியைப் பார்த்து இரந்து வேண்டிக் கொள்ளும் முறையில் அந்தப் பாடல் அமைந்தது. நல்ல தீர்த்தமெல்லாம் கங்கையின் அம்சம் என்று சொல்வது இந் நாட்டு வழக்கம். ஆதலால் பொன்னியாகிய காவிரி யும் கங்கையின் அம்சம் உடையதென்றே கொள்வர்.
இதையும் கம்பர் நினைந்து பாடினார்.
கன்னி அழிந்தனள்; கங்கை திறம்பினள்;
பொன்னி கரை அழிந்து போயினள்
என்று – இந்நீர் உரைகிடக்க லாமோ?
உலகுடைய தாயே!
கரைகடக்க லாகாது காண்
என்று வந்தது பாட்டு. “கன்னியாகிய பெருமாட்டி தன் வரம்பை மீறினாள்; கங்காதேவி தன் போக்கினின் றும் மாறினாள்; காவிரித்தாய் கரை அழிந்து போனாள். என்று இந்த நீர்மையை உடைய வார்த்தை உன் திறத்தில் நிலை பெறலாமா? உலகையெல்லாம் பாதுகாக்கும் தாயே! இத்தகைய பழிச் சொல் வராவண்ணம் நீ அருள் செய்யவேண்டும்; நீ இந்தக் கரையைக் கடப்பது முறையன்று” என்று கம்பர் மனம் உருகிப் பாடினார்.
அவர் பாடிய பிறகு காவிரி வெள்ளம் குறையத் தொடங்கியது. காக்கை ஏறப் பனம்பழம் விழுந்த கதையாக அது நிகழ்ந்திருக்கலாம். ஆனாலும் கம்பர்
பாடவும் வெள்ளம் மீறாமல் மெல்ல மெல்ல அடங்கவும் கண்ட மக்கள் கம்பருடைய தெய்வத் திருவாக்கின் பெருமை அது என்றே கொண்டாடினார்கள். எந்தக் கணத்தில் கரை உடையுமோ என்று அஞ்சிக்கொண்டிருந்த அவர்களுக்கு வெள்ளம் மிகாமல் சிறிதே வடிவு கண்டவுடன் போன உயிர் வந்தது போல இருந்தது.
அப்புறம் அவர்கள் சும்மா இருப்பார்களா? கூட்டத்தினர் அத்தனை பேரும் ஒருவர் பின் ஒருவராக வந்து கம்பர் காலில் விழுந்தார்கள். பின்னும் இரண்டு மூன்று நாட்கள் கம்பர் அந்தக் கரையில் தங்கினார். ஒருவாறு கரையை உறுதிப்படுத்திய மக்கள் வெள்ளம் நன்றாகக் குறைந்தது கண்டு, சிலரை மாத்திரம் காவலுக்கு வைத்துவிட்டுத் தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள்.
நாட்டுக்கு வந்த அபாயத்தையும், மக்கள் அஞ்சிய அச்சத்தையும், அவர்கள் செய்த முயற்சியையும், கம்பர் வந்து பாடியதையும், காவிரி வெள்ளம் கட்டுக்குள் அடங்கியதையும் அரசன் கேள்வியுற்றான். அவன் அப்போது கருவூர் அரண்மனையில் தங்கியிருந்தான். அரசாங்க அதிகாரிகள் கம்பரை அழைத்துக்கொண்டு அவனிடம் சென்றார்கள். சோழ மன்னன் அவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
அதிகாரிகளும் கொங்கு நாட்டுத் தலைவர்களும் கம்பரை அழைத்துக்கொண்டு சென்று சோழ மன்னன் அவைக் களத்தை அடைந்தார்கள். கொங்கு நாட்டையும் சோழ நாட்டையும் ஒருங்கே காத்த பெருமை இந்தப் புலவர் பெருமானைச் சார்ந்தது” என்று மன்னனிடம் சொன்னார்கள்.
“நாட்டு மக்கள் பெரு முயற்சியுடன் கரையைக் செப்பஞ் செய்தார்கள். உள்ளன்போடு மேற்கொண்ட அவர்கள் உழைப்புப் பலித்தது. இறைவன் அருள் செய்தான்.நான் மனம் உருகி வேண்டிக் கொண்டது. உண்மைதான். ஆயினும் மக்களுடைய உழைப்பும் இறைவன் திருவருளும் இணைந்து நன்மையை உண் டாக்கின. நான் என்ன செய்தேன்! ஒரு கை மண்ணைக் கூட அள்ளிப் போடவில்லை. எல்லோரும் மனமுருகி வேண்டிக்கொள்வதையே நான் கவியாகச் சொன்னேன். இறைவன் திருவருள் தக்க சமயத்தில் என்னைப் பாடச் செய்து. எனக்கும் ஒரு பெருமதிப்பை உண் டாக்கி வைத்தது.”
கம்பருடைய பணிவைக் கண்டு வியந்தனர் கொங்கு நாட்டுத் தலைவர்கள். அரசன் அப்புலவர் பிரானை மிகவும் பாராட்டிப் பலவகைப் பரிசில்களை வழங்கினான். அப்போது கொங்கு நாட்டுத் தலைவர்கள், ”மன்னர் பெருமானுக்கு ஒரு விண்ணப்பம்” என்றார்கள்.
“என்ன?”
“இந்தக் கவிஞர் பெருமான் செய்த காரியம் நாட்டு மக்கள் எப்போதும் நன்றியறிவோடு நினைப்பதற்குரியது. இப்போது சில பரிசுகளைக் கொடுத்ததனால் இவர் செய்த உதவிக்குக் கைம்மாறு செய்துவிட்ட தாகாது. எப்போதுமே இந்த அருட் செயலை நினைத்து. வாழ ஒரு வகை செய்யவேண்டும்” என்றார், அவர்களுள் பெரிய தலைவர்.
“என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள்?* என்று மன்னன் கேட்டான்.
“சோழ நாட்டைப்பற்றிச் சொல்ல எனக்கு உரிமை இல்லை. எங்கள் கொங்கு மண்டலத்து மக்கள் இப் பெருமானை எப்போதும் மறவாமல் நினைந்து பாராட்ட
ஒன்று செய்யலாம் என்று அடியேனுக்குத் தோன்றுகிறது. அந்த நன்றியறிவுச் செயலுக்கு மன்னர்பிரான் இசைந்தருள வேண்டும்.”
“நீங்கள் விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“கொங்கு நாட்டு வேளாளர்களாகிய நாங்கள் எங்கள் வீட்டில் திருமணம் நடைபெறும்போது அரசாங்கத்துக்கு ஒரு வரி செலுத்தி வருகிறோம். அந்த வரியை இனிமேல் இந்தக் கவிச் சக்கரவர்த்திக்குச் செலுத்தும்படி இங்கே உத்தரவாக வேண்டும்.”
“குடிமக்கள் இசைவார்களா?”
‘அவர்கள் இப்பெருமானைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். இந்தச் செய்தியை அறியாதவர்களுக்கு நாங்கள் சொல்லி இசையச் செய்கிறோம். மன்னர் பிரான் கட்டளையிட்டுவிட்டால் யாவரும் செய்வார்கள்.
அரசன் சிறிதே யோசனை செய்தான். “சரியான யோசனை கூறினீர்கள். நாடு முழுவதும் பாராட்டும் அற்புதமான செய்கை செய்த கவிஞருக்கு ஏற்ற மரியாதை இது அப்படியே செய்துவிடலாம்’ என்று சோழ மன்னன் இசைந்தான்.
அப்போது கம்பர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அகக் கண்ணில் கொங்கு நாட்டுப் புலவர்கள் வந்தார்கள். அவர்களுடைய வறிய நிலை நினைவுக்கு வந்தது. புலவர்பிரான் எழுந்தார்; “அடியேனுடைய சிறிய விண்ணப்பம் ஒன்றுக்குச் செவி சாய்த்தருள வேண்டும்” என்றார். அருகில் இருந்தவர் அனைவரும் கம்பர் திருமுகத்தையே நோக்கினர். அரசன் மலர்ந்த முகத்துடன் அவரைப் பார்த்தான்.
“கொங்கு நாட்டில் வழக்கில் இருக்கும் கல்யாண வரிப்பணத்தை அடியேனுக்குத் தரும்படி கட்டளை
பிறப்பிக்க இருப்பதை அடியேன் நன்றியறிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் கொங்கு நாட்டில் புலவர்கள் பலர் வறுமையினால் வாடுகிறார்கள். நான் புலவன் என்ற சிறப்பினால் இந்த வரிப் பணத்தைப் பெற இருக்கிறேன். நான் பெறுவதை அந்த நாட்டுப் புலவர்கள் பெறும்படி ஆணை பிறப்பிக்க வேண்டும். இதனால் அவர்களுடைய வறுமையும் தீரும்; என்னையும் மக்கள் நினைக்க வழி ஏற்படும்” என்றார்.
கம்பருடைய பெருந்தன்மை யாவரையும் வியப்புக்கு ஆளாக்கியது. மன்னன் கம்பர் விருப்பப்படியே செய்தான். அது முதல் கொங்கு நாட்டு வேளாளர் வீட்டுக் கல்யாணங்களில் அந்த நாட்டுப் புலவர்கள் மரியாதை பெறலானார்கள். அவர்கள் கல்யாணத்துக் குச் சென்று வாழி பாடுவார்கள். பின்பு மணமனையினர் அளிக்கும் பாலை உண்டு கல்யாண வரியைப் பெறுவார்கள்.புலவர் வாழி பாடாவிட்டால் திருமணம் நடந்ததாகவே மக்கள் கருதுவதில்லை. நாட்டுக்குத் தீங்கு புரிபவர்கள் வீட்டுக்குப் புலவர்கள் போவதில்லை. அவர்கள் வாழி பாடாவிட்டால் அந்த வீட்டினரை மக்கள் புறக்கணித்து இழிவு செய்வார்கள், என்றும் கொங்குநாட்டில் வாழும் புலவர் என்னும் மரபினர் கம்பரால் கிடைத்த இந்தக் கல்யாண வரியைப் பெற்று வாழி பாடி வாழ்ந்து வருகிறார்கள்.



