நல்ல சேனாபதி
கி. வா. ஜகந்நாதன்

துழாவிய கொம்பு

    பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்து வந்த குலம் அது. அக்குலத்தில் பிறந்து சித்தர்கள் இயற்றிய நூல்களை ஆராய்ந்து மருத்துவம் செய்து வந்தான் மூலன் என்னும் அந்தணன். தன் தந்தையாரிடம் கற்றதோடு, தன்னுடைய ஆராய்ச்சியாலும் அவன் பல நுட்பங்களை உணர்ந்திருந்தான்.

    மூலிகைகளின் இயல்பை ஆராய்வதில் அவனுக்கு மிகுதியாக ஊக்கம் இருந்தது. மலையை அடுத்த இடங்களுக்குச் சென்று, அங்கே உள்ள மூலிகைகளை ஆராய்ந்து தொகுத்து, பற்பம் செய்வதற்கும் பிற மருந்துகள் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்வான்.

    கொங்கு மண்டலத்தில் திருச்செங்கோட்டைச் சார்ந்து கஞ்சமலை என்ற சிறிய மலை இருக்கிறது. அதில் மிகவும் அரிய மூலிகைகள் உள்ளன. அங்கே பழங் காலத்தில் கஞ்சமலைச் சித்தர் என்பவர் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தார் என்று சொல்லுவார்கள். மூலனுக்கு இந்தச் செய்திகள் காதில் விழுந்தபோது, அங்கே போய்ப் பார்த்து வரவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

    மூலன் முதுமைப் பிராயம் உள்ளவன். ‘பால சோதிடம், விருத்த வைத்தியம்’ என்றபடி, அவனுக்கு மருத்துவ நூல் அறிவு நிரம்பியிருந்தது. அவனிடம் சில மாணாக்கர்கள் மருத்துவம் பயின்றார்கள். அவர் களுக்குள் மிகவும் நெருங்கிப் பழகும் மாணாக்கன் ஒருவன் இருந்தான். குருவை நோக்க அவள் இளையவனானாலும், அவனும் முதியவன்தான். அவன் குற்றேவல்கள் செய்து குருவை வழிபடுபவன்.

    கஞ்சமலைக்குச் செல்ல வேண்டுமென்று விரும்பிய மூலன், அந்த மாணாக்கனையும், துணையாக இருப்பான் என்று எண்ணி அழைத்துக் கொண்டு

    சென்றான். அங்கே மரங்கள் மிக அடர்த்தியாக இல்லாவிட்டாலும், மூலிகைகள் நிரம்ப இருந்தன. காட்டு விலங்குகள் வாழும்படி காடு அவ்வளவு நெருக்கமாக இல்லை.

    மூலனுக்கு உள்ளூற ஓர் ஆசை இருந்தது. சித்த வைத்தியத்தில் துறை போனவர்கள் பலருக்கு அந்த ஆசை இருப்பதுண்டு. தாமிரத்தைத் தங்கமாக்கும் இரச வாத வித்தையில் உள்ள ஆசைதான் அது. இரசத்தைக் கட்டி இரசமணி செய்தல், முப்பூ முடித்தல் முதலிய சில திறங்களில் அவர்களுக்கு வெற்றி கிடைத்து விட்டால், அடுத்தபடி இரசவாதம் செய்யவேண்டும் என்ற ஆசை உண்டாகிவிடும். ஆனால், அதைச் சாதித்தவர் உண்டோ, இல்லையோ தெரியாது. மூலனுக்கும் அந்த ஆசை இருந்தது வியப்பன்று. அதற்கு வேண்டிய மூலிகைகள் கஞ்சமலையில் இருப்பதாக ஒரு பரதேசி கூறியதைக் கேட்டதனால்தான் அங்கே போக வேண்டும் என்ற அவா அவனுக்கு உண்டாயிற்று. மலையின் மேல் ஏறி, பல இடங்களையும் பார்த்தான் மூலன். உண்மையிலேயே பல அருமையான மூலிகைகள் இருந்தன. சித்தர்கள் வாழும் இடமாக இருக்க அந்த மலை பல வகையிலும் தகுதியுடையதே என்பதை உணர்ந்தான். அவன் கற்பனை விரிந்தது. நிச்சயமாக இரசவாத வித்தையைச் சாதித்துவிடலாம் என்று நம்பினான்.

    ஒவ்வொரு நாளும் மாணாக்கனுடன் விடியற் காலையில் எழுந்து மலையின் மேற்சென்று, மூலிகை ஆராய்ச்சி செய்வான் மூலன். போகும்போது, சமையலுக்கு வேண்டிய பண்டங்களையும் பாத்திரங்களையும் கொண்டு போவான். ஓரிடத்தில் அவற்றைப் போட்டு விட்டு மூலிகை ஆராய்ச்சி செய்வான். அவனுடைய மாணக்கன் சமையல் செய்து வைப்பான். குரு பல இடங் களுக்குப் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவான். வந்து இருவரும் உணவு கொள்வார்கள். மாலை நேரம் ஆனவுடன் மலையை விட்டு இறங்கி, அடிவாரத்தில் உள்ள ஊருக்குச் சென்று விடுவார்கள்.

    ஒரு நாள், அவர்கள் மலையின்மேல் ஏறிச் சென்றார்கள். வழக்கம்போல் மூலன் மூலிகையைத் தேடிச் சென்றான். அவன் மாணாக்கனும் சில இடங்களைப் பார்த்துவிட்டு, ஓரிடத்தில் சமையல் செய்யத் தொடங்கினான்.

    ஒரு பாளையில் உலை வைத்து அரிசியைப் போட்டு அது கொதிக்கும்போது அதைக் கிளற வேண்டி யிருந்தது. அருகில் ஒரு கொம்பு கிடந்தது. அதை எடுத்து அதனால் கிளறினான். அந்தக் கொம்பின் சம்பந்தத்தால் சாதம் முழுவதும் கறுப்பாக மாறி விட்டது. அதைக் கண்டவுடன் மாணாக்கனுக்கு அச்சம் உண்டாயிற்று ‘ஐயோ! நம் ஆசிரியர் வந்தால் சோற்றைக் கெடுத்துவிட்டாயே என்று வைவாரே!’ என்று அஞ்சினான். நல்ல வேளையாகக் கையில் இன்னும் சிறிது அரிசி இருந்தது. அந்தக் கறுப்புச் சோற்றைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, பானையை நன்றாக அலம்பிப் புதிதாகச் சோற்றை வடித்தான் அந்தச் சோறு குருவுக்கு மாத்திரம் போதுமானதாக இருந்தது.

    கெட்ட சோற்றைக் குரு கண்டால் கோபிப்பார் என்பதாலும்,தனக்குச் சோறு இல்லாமற் போனதாலும் அவன் ஒரு யோசனை செய்தான். எப்படி ஆனாலும்

    சரி என்று அந்தக் கருஞ்சோற்றை அவன் உண்டான். தன் குருவின் கண்ணில் சிறிதுகூடப் படவேண்டாம் என்பது அவன் கருத்து.

    சோற்றை உண்ட பிறகு, வழக்கமாகக் களைப்பு உண்டாகும். ஆனால், இப்போது அவனுக்கு உடம்பிலே ஒரு கிளர்ச்சி தோன்றியது. பத்து ஆள் பாரத்தைச் சுமக்கலாம் என்பது போன்ற மிடுக்கு உண்டாயிற்று. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை தான் தின்ற சோற்றில் ஏதோ சிறப்பு இருக்கவேண்டும் என்று உணர்ந்து கொண்டான். தன் குருவுக்கு இது தெரிந்தால் வருந்துவாரே என்று அஞ்சினான்.

    சாதத்தை நன்றாக மூடி வைத்துவிட்டு, அருகிலே ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தான்.

    சிறிது நேரம் கழித்து மூலன் உண்ணும் பொருட்டு வந்தான். அங்கே பானையில் சோறு இருந்தது. அருகில் மற்ற உண்டிகள் இருந்தன. ஆனால்,மாணாக்கனைக் காணவில்லை. பானையைப் பார்த்தபோது வழக்கமாக இருக்கும் அளவுக்குச் சோறு இல்லை.

    தன் மாணாக்கன் முன்னே உண்டிருக்க வேண்டும் என்று ஊகித்தான் மூலன். அதனால்தான் சோறு குறைந்திருக்கிறது என்பது அவன் எண்ணம். ஏன் அவன் முதலில் உண்ண வேண்டும்? அவ்வாறு செய்கிறவன் அல்லவே ! இப்போது எங்கே போய் விட்டான்?’ இந்த யோசனைகளிலே ஆழ்ந்துவிட்டான் குரு. பின், மாணாக்கனைப் பெயர் சொல்லிக் கூவினான். நாலு திசையும் பார்த்தான். அவன் உரக்கக் கூவுவதைக் கேட்டும் இன்னும் உண்ணாமல் இருப்பதை அறிந்தும் அந்த மாணாக்கனுக்கு ஒளிந்துகொண்டிருக்க மனம் இல்லை. மறைவிடத்திலிருந்து வெளி வந்து தன் குருவை அணுகினான்.

    அவன் உடம்பு வளம் பெற்றிருந்தது. அவன் மயிர் நன்றாகக் கறுத்திருந்தது. முகத்தில் ஒரு புதிய உண்டாகியிருந்தது. அவனைக் கண்டவுடன் அவனே தன் மாணாக்கன் என்பதை மூலன் உணரவில்லை. ”சுவாமி’ என்று மாணாக்கன் அருகில் வந்து நின்றான்.

    “ஐயா, என் மாணாக்கன் ஒருவன் இருந்தானே. அவனைக் கண்டீர்களா? நீங்கள் யார்?” என்று கேட்டான் மூலன்.

    “சுவாமி, என்னைத் தெரியவில்லையா?” என்று மாணாக்கன் கேட்டான். மூலன் அவன் குரலைக் கேட்டான். உருவத்தை நோக்கினான். தன் மாணாக்கனின் அடையாளங்கள் இருந்தன. ஆனால், இவன் கட்டிளமை உடையவனாக அல்லவா இருக்கிறான்?

    “உம்மைப் பார்த்தால் என் மாணாக்கனுடைய அடை யாளமாக இருக்கிறது. ஆனால்….”

    மாணாக்கன் தன் குருவின் காலில் விழுந்து, “சுவாமி, நான்தான் உங்கள் மாணாக்கன். நான் பண்ணிய குற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி அழுதான்.

    மாணாக்கன் கூரிய அறிவாளி அல்ல. அவன் இயல்பை நன்கு அறிந்தவன் குரு.

    ”நீயா?” என்று கேட்ட மூலன், “நரை திரை போய் இப்படி ஆகியிருக்கிறாயே! எவ்வாறு இப்படி மாறினாய்?” என்று வியப்போடு கேட்டான்.

    சுவாமி, நான் சமையல் பண்ணும்போது அருகில் இருந்த கொம்பு ஒன்றை எடுத்துக் கிளறினேன். சாதம் முழுதும் ஒரே கறுப்பாகிவிட்டது. உடனே பயந்து போய் வேறு சாதம் பண்ணி வைத்துவிட்டு அதை உண்டேன், அதனால் இப்படி ஆகியிருக்கும் ” என்றான்.

    அந்தச் சாதத்தில் மிச்சம் இருக்கிறதா?’

    “உங்கள் கண்ணில் படக்கூடாதென்று அவ்வளவும் நானே சாப்பிட்டுவிட்டேன். பானையையும் நன்றாகக் கழுவிப் புதிதாகச் சமையல் பண்ணினேன்.”

    கைக்கெட்டியது தன் மாணாக்கன் வாய்க்கெட்டியது என்றும், தனக்கு எட்டவில்லை என்றும் எண்ணி ஏங்கி னான் குரு. “சரி, அந்தக் கொம்பு எங்கே இருக்கிறது? எந்த மரத்தில் ஓடித்தாய்?” என்று கேட்டான்.

    “நான் எந்த மரத்திலும் ஒடிக்கவில்லை. இங்கே கிடந்தது.

    அதனால் கிளறிவிட்டு அதை அடுப்பில் வைத்துவிட்டேன்” என்று மாணாக்கன் கூறினான்.

    ‘அட பாவி!” என்று சொல்லிய குரு அப்படியே பிரமை பிடித்து உட்கார்ந்துவிட்டான். இளமைக் கோலத்துடன் முன்னே நின்ற தன் மாணாக்கனைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு வயிறு பற்றி எரிந்தது. அப்படியே சிந்தனையில் மூழ்கிவிட்டான்.

    திடீரென்று அவனுக்கு அவனுக்கு ஏதோ தோன்றியது. “வெல்லம் வைத்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

    ”கொஞ்சம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லிப் பையிலிருந்து அதை எடுத்துக் கொடுத்தான் மாணாக்கன்.

    ஆசிரியன் அதை வாங்கிச் சிறிது நேரம் வெளியில் வைத்தான், ஈக்கள் வந்து வெல்லக் கட்டியை மொய்த்தன. குரு அந்த ஈக்களை அப்படியே வெல்லத்தோடு அடித்துக் கொன்றான். வெல்லக் கட்டியை ஈக்களோடு

    உருட்டி, “இந்தா, இதை அப்படியே விழுங்கு என்றான்.

    அந்தப் பரமானந்த சீடன் தன் குரு சொன்னபடியே அதைக் கண்ணை மூடிக்கொண்டு விழுங்கினான். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தான்.

    அது கண்டு குருவுக்கு முக மலர்ச்சி உண்டாயிற்று. வாந்தி எடுத்ததை அப்படியே துண்டில் ஏந்திக்கொண்டான். சோறும் தண்ணீருமாக வந்தது. அதைக் கழுவி, அந்தச் சோற்றைக் குரு உண்டான். எப்படியாவது தானும் இளைஞனாக மாறவேண்டும் என்ற ஆசை!

    மாணாக்கன் உண்ட சோறு முற்றும் சீரணமாகாமல் இருந்ததனால், அவன் குருவுக்கும் அந்தப் பிரசாதம் கிடைத்தது. அவனும் இளமையைப் பெற்றான்.

    இந்த வரலாறு கரபுர நாதர் புராணத்தில் வருகிறது.

    அந்த மாணாக்கன் றன்னை
    அடுகைநீ செய்என் றோதிப்
    புந்தியின் மருந்து தேடிப்
    போயினள்: அயலில் சீடன்
    உய்ந்திடக் கருநெல் லிக்கொம்
    பொன்றினால் அனமது ழாவி
    வெந்தனம் கரிபோல் ஆக
    வெருவி அன் னத்தை உண்டான்.

    (அடுகை – சமையல். புந்தி – புத்தி. வெந்து கரிபோல் ஆக. வெருவி – அஞ்சி)

    நரைதிரை மாறி மேனி
    நடந்தா ரெட்டாண் டேபோல்
    புரையிலா அழகு பெற்றுப்
    புடமிடு பொன்போல் ஆனான்.

    (திரை – தோல் சுருக்கம். புரை இலா- குற்றம் இல்லாத)

    துழாவிய கொம்பெங் கென்றான்;
    சுள்ளியிற் போட்டேன் என்ன,
    வழாதுநீ உண்ட சோற்றை
    வாயினிற் கக்கென் றோத
    ழாதசோ றதனைக் கக்க,
    மிச்சிலைக் குருவும் உண்டான்;
    தொழார் எவர் இவர்கள் தம்மைச்
    சுந்தரப் பால ரானார்.

    (சுள்ளி – சிறு கோல்கள்: மிச்சிலை – எச்சிலை.)

    இந்த வரலாற்றை வேறு ஊர்களிலும் சொல்வதுண்டு, கருநெல்லி மரத்துக்கு இளமையை உண்டாக்கும் இயல்பு உண்டென்று மேலே சொன்ன பாடல்களால் தெரியவருகிறது. அதிகமான் ஒளவையாருக்கு இளமை மாறாமல் இருக்கும் தன்மையுள்ள நெல்லிக் கனியை அளித்தான் என்ற வரலாறு சங்க நூல்களில் வருகிறது. அந்த நெல்லிக்கனி கருநெல்லிக் கனியே என்பர். அந்தக் கனியை ‘அமிழ்து விளை தீங்கனி’ என்று ஒளவையார் பாராட்டுகிறார்.அமிழ்து இறப்பை நீக்குவது.

    மேலே சொன்ன கதையைக் கொங்கு மண்டல சதகமும் கூறுகிறது.

    உலையில் அமுது படைத்துண்ட
    சீடன் ஒளித்திருப்பத்
    தலையில் மயிரும் கறுக்கக்கண்
    டேஅவன் சற்குருவும்
    நிலையுடன் கக்குவித் துண்டடைந்
    தான்நன் னெறியிற்கஞ்ச
    மலையில் அதிசயம் கண்டது
    வும்கொங்கு மண்டலமே.

    “நீங்கள் எல்லாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு இருக்கிறீர்கள். உங்களால் கொடுக்க முடிந்தவற்றையெல்லாம் கொடுத்து வருகிறீர்கள்” என்றார் அன்பர்.

    “இறைவன் திருவருளால் கிடைத்ததைப் பலருக்கும் கொடுப்பதில்தான் இன்பம் இருக்கிறது. அதைப் பாதுகாத்து வைத்துக்கொண்டு நாமே உண்பதில் என்ன நன்மை இருக்கிறது?” என்றார், ஈகையினால் ஏற்றம் பெற்ற செல்வர்.

    “இங்கே வருகிறவர்களும், பிறந்தகம் வந்த பெண் பிள்ளை தன் ஆசையை யெல்லாம் தாயிடம் சொல்லித் தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெற்று இன்புறுவது போலக் கேட்கிறார்கள்.”

    “இதில் என்ன வியப்பு இருக்கிறது? தங்களுக்கு வேண்டியதைக் கேட்கிறார்களே; அதுவே என் பாக்கியம் அல்லவா? இன்னாருக்கு இன்னது வேண்டும் என்று குறிப்பினால் அறிந்து, அதனை வழங்குவதே உண்மையான கொடையாகும். அப்படியின்றி, வருகிறவர்கள் வாய்விட்டுக் கேட்க அதன் பிறகு நான் கொடுக்கிறேனே, அது உயர்ந்த கொடையாகுமா?குறிப்பறிந் தீதலே கொடை என்று சொல்வார்கள் அல்லவா?”

    தொண்டை நாட்டில் காஞ்சீபுரத்துக்குத் தெற்கே பத்து மைலில் உள்ள மாகறல் என்ற ஊரில் இருந்த புண்ணியகோடி என்னும் பெயரை உடைய வேளாண்

    குலச் செல்வர் அவர். பெற்ற செல்வத்தைப் பிறருக்கு வழங்கி அவர்கள் பெறும் இன்பத்தைக் கண்டு மகிழ்வதே வாழ்க்கையில் சிறந்த இன்பம் என்று எண்ணி வாழ்பவர். அவரிடம் பலவகையான மக்கள் வருவார்கள். தொழிலாளிகள் வருவார்கள்; வேளாளர் வருவர்; அந்த ணர் வருவர்; புலவர்கள் வருவார்கள். அவரவர்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து, விருந் துணவு வழங்கிச் சில நாள் இருக்கச் செய்து விடை தருவது புண்ணியகோடியின் வழக்கம்.

    இறைவன் திருவருளால் அவருடைய செல்வம் பெருகியது. அவருடைய நிலங்கள் நன்கு விளைந்தன. அவ்வளவுக்கு அவ்வளவு அவருடைய அறச் செயல்கள் வளர்ந்தன.

    தம்மை அண்டி வந்தவர்களுக்குப் பசியாற உணவு வழங்குவதே பெரிய அறம். ஆனால், புண்ணிய கோடிக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஒரு வேளைச் சோறு போட்டால் அப்போதைக்கு உண்பவர்கள் வயிறு நிரம்பிவிடும். ஆனால், அவரவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ வகையான இன்னல்கள் உண்டாகின்றன. ஒரு வேளை உணவு உண்டு வயிறு நிரம்புவதனால் அந்த இன்னல்கள் நீங்கி விடுவதில்லை. சிலருக்கு வாழ வீடு இல்லாமல் திண்டாடலாம். சிலர் திருமணம் செய்துகொள்ள வழியில்லாமல் வாடலாம். இன்னும் சிலர் வீட்டில் குழந்தைக்குப் பால் தரும் பசு இல்லாமல் குறையுறலாம். இப்படி மனிதர்களுக்கு உள்ள குறைகள் பல. அவற்றைக் கூடிய வரையில் கேட்க முடிந்தால், அதுவே பெரிய பாக்கியம் என்று எண்ணினார். இறைவி காஞ்சீபுரத்தில் முப்பத்திரண்டு வகையான அறங்களைச் செய்தாள். அவற்றில் ஒன்று தானே அன்னதானம்?

    இத்தகைய எண்ணமுடையவ ராதலின் அந்த உபகாரி தம்பால் யாரேனும் வந்தால் அவருடைய பசியை ஆற்றி அவருடைய குடும்ப நலனைப்பற்றி விசாரிப்பார். அவருக்கு ஏதேனும் குறை என்பதை அந்தப் பேச்சிலிருந்து தெரிந்துகொள்வார். உடனே அந்தக் குறையை நிறைவேற்றுவார். அவருடைய இயல்பை அறிந்த பலர், தமக்கு இன்னது வேண்டுமென்று கேட்பதற்குத் தயங்குவதில்லை.

    ஒரு நாள் யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து மாகறலுக்கு வந்தார். புண்ணியகோடி என்னும் தர்மவான் அவ்வூரில் இருப்பதை நாடியே வந்தார். அவ்வூர் எங்கே இருக்கிறதென்று வழி கேட்டு வந்துவிட்டார். ஊருக்குள் வந்தவர் வள்ளலின் வீட்டையும் அடையாளம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டபோது, அவர் கால் எழவில்லை. ஏதோ வருத்தம் அவர் உள்ளத்தில் இருந்ததென்று தெரிந்தது. முகத்தில் பொலிவில்லை. நடந்துகொண்டே இருந்தவர், திடீரென்று நின்றார். வந்த வழியைத் திரும்பிப் பார்த்தார். மறுபடியும் அந்த வழியே திரும்பிப் போய்விடலாம் என்று அவர் நினைத்தார் போலும்!

    மறுபடியும் நாலு அடி எடுத்து வைத்தார். அவருக்கு மேலே நடக்க ஊக்கம் உண்டாகவில்லை. சிறிது நேரம் நின்றார். மீண்டும் நடந்தார். எப்படியோ புண்ணியகோடியின் வீட்டுக்குப் போய்விட்டார். அவரைக் கண்டவுடன் அந்தச் செல்வர் வரவேற்று உபசரித்தார். வந்தவர் அதிகமாகப் பேசவில்லை. ஏதோ அரைகுறை மனத்தோடு உபசாரங்களை ஏற்றுக் கொண்டார்.

    அவர் மிகவும் வாட்டமுற்றிருப்பதை அறிந்து புண்ணியகோடி, “உங்களுக்கு ஏதோ வருத்தம் இருக்கிறதுபோலத் தோன்றுகிறது. ஏதாவது இல்லாத குறையானால் தெரிவியுங்கள், நான் அதைப் போக்க முயலுகிறேன்” என்றார். வந்தவர், “ஒன்றும் இல்லை” என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. புண்ணியகோடி உபசரித்து உணவு வழங்கினார். மிகவும் நாணத்தோடு அந்த உணவை உட்கொண்டார் வந்தவர். மற்றவர்கள் மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் விருந்துண்டார்கள். அவர் மாத்திரம் யாரோடும் பேசவில்லை. எதையோ இழந்து விட்டவர்போல இருந்தார்.

    விருந்து உண்டவுடனேயே அவர் வள்ளலிடம் விடை பெற்றுக்கொண்டார். அவர் புறப்படும்போது புண்ணியகோடி, “உங்களுக்கு ஏதேனும் வேண்டுமா?” என்று கேட்டார். “ஒன்றும் வேண்டாம். இங்கே சாப்பிட்டதே போதும்!” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார். சோழநாட்டில் உள்ள ஓர் ஊரை அவர் தம்முடைய ஊரென்று சொன்னார். வேறு எதுவும் அவரைப் பற்றித் தெரியாது.

    இரண்டு நாட்கள் சென்றன. ஒரு புலவர் புண்ணிய கோடியை நாடி வந்தார். அவர் பலமுறை வள்ளலிடம் வந்து பழகியவர், வள்ளலுடைய ஈகைச் சிறப்பை வாய் கொண்ட மட்டும் போகிற இடங்களில் எடுத்துரைப்பவர். அவர் மாகறலுக்கு வந்து புண்ணியகோடியைக் கண்டார்; கண்டவுடன், “இரண்டு நாட்களுக்குமுன் சோழநாட்டில் இன்ன ஊரிலிருந்து ஒருவர் இங்கே வந்தாரா?”என்று கேட்டார்.

    வள்ளல், “ஆம், வந்தார். எப்போதும் வாடிய முகத் தோடு இருந்தார்” என்றார்.

    “அவர் உங்களிடம் ஏதாவது கேட்டாரா? நீங்கள் அவருக்கு என்ன கொடுத்தீர்கள்?” என்று கேட்டார் புலவர்.

    ”அவர் தமக்கு ஒன்றும் வேண்டாம் சொல்லிவிட்டார். ஆனால், அவர் முகம் மிகவும் வாட்ட முற்றிருந்தது.’

    “ அவர் ஒன்றும் கேட்கவில்லையா? வியப்பாக இருக்கிறதே! நான் படித்துப் படித்துச் சொன்னேனே! வாயைத் திறந்து கேட்டால் இங்கே எல்லாம் கிடைக்கும் என்றேனே; அதை அவர் நம்பவில்லையா?”

    “உங்களுக்கு அவரைத் தெரியுமா? அவர் யார்? அவர் ஏன் அப்படி வாட்டத்தோடு இருக்கவேண்டும்?”

    அவரைப்பற்றி நான் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவரும் உங்களைப்போலச் செல்வராக இருந்தவர். ஊழ்வினையினால் அவர் நிலை மாறியது. இப்போது தம்மிடம் இருந்த பொருள் முழுவதும் போய், வறிய நிலையில் இருக்கிறார். கொடுத்துக் கொடுத்துச் சளைத்த கை; உயிர் போனாலும் பிறரிடம் நீளாத கை.”

    “அப்படியா? அவர் தம்மைப்பற்றி ஒன்றும் சொல் கொள்ளவில்லை. மற்றவர்களைப்போல வந்தார்” உணவு கொண்டார். புறப்பட்டு விட்டார்!”

    “அடடா! நான் எவ்வளவு வற்புறுத்திச் சொன்னேன்! நீங்கள் அங்கே போனால் தாராளமாக உங்களுக்கு வேண்டியதைச் சொல்லலாம் என்று ஊக்க மூட்டினேன்.

    “அப்படியெல்லாம் செய்ய என்ன அவசியம் நேர்ந்தது?”

    அவர் கொடுத்து இளைத்தவர். இப்போது அவரைக் கவனிப்பவர் யாரும் இல்லை. எனக்குப் பழக்கமானவர். அவருடைய வீடு மிகவும் சிதைந்து போயிற்று. அதைக் கட்டமுடியாமல் திண்டாடுகிறார். தமக்குத் தெரிந்தவர்களிடம் உதவி பெற அவர் நாணுகிறார். அவர் நன்றாக வாழ்ந்தபோது அவரிடம் உதவி பெற்றவர்கள் இப்போது ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.”அப்படியா? நான் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லையே!”

    “அவருடைய நிலை எனக்கு மிக்க துயரத்தைத் தந்தது. சோழநாட்டுக்காரராகிய அவருக்குத் தொண்டை நாடு புதியது. நீங்கள் எல்லோருக்கும் வேண்டியது தருவதை நான் அவரிடம் சொன்னேன். பேசிக்

    கொண்டிருக்கும் போது உங்களைப்பற்றிச் சொல்ல நேர்ந்தது. அதைச் சொல்லும்போது எனக்கு எந்த நினைவும் இல்லை. ஆனால், அதைக் கேட்ட அவர், அப்படியும் ஒரு செல்வர் இந்த உலகத்தில் இருக் கிறாரா?'”என்று கேட்டுப் பெருமூச்சு விட்டார். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது; அவரை உங்களிடம் அனுப்பினால் என்ன என்ற எண்ணம் வந்தது.”

    “நீங்கள் அனுப்பித்தான் அவர் வந்தாரா? அவர் அதைச் சொல்லவில்லையே!”

    ‘அவர் இங்கே வந்ததே பெரிய காரியம். எப்படியாவது இங்கே அவரை வரச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு பல நியாயங்களைச் சொன்னேன்; வற்புறுத்தினேன். அவர் இறுதியில், வருவதாக ஒப்புக் கொண்டார். நானே அழைத்து வருவதாகச் சொன்னேன். அவர் இசையவில்லை. அவர் இங்கே வந்ததைக் கேட்டதும், முதலில் எனக்கு அளவற்ற களிப்பு உண்டாயிற்று. ஆனால், அவர் எதற்காக வந்தாரோ, அது நிறைவேறவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன்.”

    “எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலும் ஏதாவது செய்திருக்கலாம். இப்போதுதான் என்ன? ஒன்றும் தவறு நேர்ந்து விடவில்லை. அவரைத் தான் உங்களுக்குத் தெரியுமே. உங்களையே அவராக நினைத்துக் கொண்டு பொருள் தருகிறேன். நீங்கள் அதை எடுத்துச் சென்று அவருடைய வீட்டை நன்றாகக் கட்டிக் கொடுத்து விட்டு வாருங்கள். இது எனக்குச் செய்த பேருதவியாக இருக்கும்.”

    வள்ளலின் வாய் மொழியைக் கேட்டுப் புலவர் பிரமித்துப் போனார். இப்படியும் உபகாரம் செய்பவர்கள் இருப்பார்களா என்று வியந்து பாராட்டினார். புண்ணியகோடி வழங்கிய பொருளைப் பெற்றுக் கொண்டு, மானமுடைய சோழ நாட்டு அன்பரிடம் சென்றார்.

    வள்ளல் புண்ணியகோடியின் விருப்பப்படியே புலவர் செய்தார். சோழ நாட்டு அன்பர் எவ்வளவு மறுத்தும் கேளாமல், அவருடைய வீட்டைச் செவ்வையாகக் கட்டிக் கொடுத்தார். பின்பு, மீட்டும் மாகறலுக்கு வந்து தாம் செய்ததைச் சொன்னதோடு, வாய் நிரம்பப் புண்ணியகோடியின் புகழைப் பாடினார்.

    அந்த வள்ளல், ”புலவரே, இப்படி வாருங்கள்,ஒரு புதிய ஏற்பாடு செய்திருக்கிறேன்; அதை வந்து பாருங்கள்” என்றார்.

    புலவர் அவருடன் சென்றார். அவர் தம் வீட்டு வாசலில் ஒரு பக்கத்தைக் காட்டினார். அங்கே புதியதாக மணலைப் பரப்பி யிருந்தார்கள். அந்த மணலைக் காட்டினார் புண்ணியகோடி. “இது எதற்காகத் தெரியுமா?” என்று கேட்டார்.

    “இங்கே ஏதேனும் கொட்டகை போட்டுத் திருமணம் செய்யப் போகிறீர்களா?” என்றார் புலவர்.

    “அதெல்லாம் இல்லை. இந்த மணல், பள்ளிக் கூடத்து மணலைப் போன்றது.

    “எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லையே!”

    ‘பள்ளிக்கூடத்து மணலில் பிள்ளைகள் எழுதிப் பழகுவார்கள் அல்லவா? இங்கே வருபவர்கள் தங்களுக்கு வேண்டியது இன்னதென்று இந்த மணலில் எழுதட்டும் என்று இதைப் பரப்பச் சொன்னேன்.”

    “இது என்ன புதுமையாக இருக்கிறதே. அவர்களை ஏன் அவ்வாறு செய்யச் சொல்ல வேண்டும்?”

    ‘இந்த யோசனை உங்களால் தான் வந்தது. இங்கே வருகிறவர்கள் யாவருமே தமக்கு வேண்டியவை என்று சொல்வார்கள் என்று நான் நினைத் திருந்தேன். அது தவறான எண்ணம் என்பதை உங்களால் உணர்ந்து கொண்டேன். அந்தச் சோழ நாட்டு அன்பர் இங்கே வந்ததும் தம்முடைய குறையைச் சொல்லவில்லை; என்னாலும் தெரிந்து கொள்ள முடிய வில்லை. அவருக்கு மான உணர்ச்சி மிகுதி; அதனால் தான் வாய் திறந்து எதையும் கேட்கவில்லை. பிறரிடம், எனக்கு இன்னது வேண்டும் என்று வாயாற் சொல்லக் கூசும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அத்தகையவர் களுடைய குறையை அறிய வழி இல்லையே என்று நான் வருந்தினேன்; யோசித்தேன். அப்போது, இந்தத் தந்திரம் செய்யலாம் என்று தோன்றிற்று.”

    “என்ன தந்திரம்?”

    “நேரே ஒரு பொருள் வேண்டுமென்று கேட்க நாணுகிறவர்கள், தமக்கு வேண்டியதை இந்த மணலில் நான் அதை அறிந்து வேண்டியதை எழுதினால்,

    வழங்குவேன். மானம் உள்ளவர்கள் வாய் திறந்து, ‘ஈ’ என்று சொல்ல மாட்டார்கள். ஆனாலும், அவர்களுக்குக் குறைகள் இருந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டுமானால், அவர்கள் நாணம் அடையாத வழியில், நாம் அவர்கள் குறையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த முறையை மேற் கொண்டேன். என்னைப் பாராமலே தங்களுக்கு வேண்டியதை மணலில் அவர்கள் எழுதி விடலாம். நான் அதைப் பார்த்து வேண்டியதை வழங்குவது எளிது, இந்த ஏற்பாடு எப்படி?”

    புலவருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. பிறருடைய உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியை அவர் எவ்வளவு நுட்பமாகக் கவனிக்கிறார் என்று எண்ணி எண்ணி வியந்தார். “இப்படி யெல்லாம் செய்து பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிற நீங்கள் மனிதர் அல்ல; தெய்வமே!” என்று பாராட்டினார்.

    அதுமுதல் புண்ணியகோடியிடம் வருபவர்கள் யாவரும் தமக்கு வேண்டியதை அந்த மணலில் எழுதித் தெரிவிக்கலானார்கள். யாரும் செய்யாத இந்த முறையைப் புலவர் உலகமும் புரவலர் உலகமும் வியந்து பாராட்டியது.

    புண்ணியகோடி பிறர் மானத்தை உணர்ந்து இவ்வாறு ஒரு வழி செய்ததைப் பாராட்டும் பழம்பாட்டு ஒன்று உண்டு. அது வருமாறு:

    “நீள்நி லத்திலுறும் ஏழை மாந்தரீர்!
    நீவிர் வேண்டுவன் இன்புறீஇ
    நேரில் கேண்மின் அவை தருவன்யான்; அலதும்
    நினைவில் உன்னுமவை நவிலநீர்
    நாணில் எம்முடைய மனைமுன் வாயில்தனில்
    நன்ம் ணல்மிகுதி கொட்டியே
    நாம்ப ரப்பியும் இருக்கிறோம்; அதனில்
    நாடி வந்ததனை எழுதுமின்;
    காணில் அங்குடனே அருள்வம்” என்ன அவன்
    கட்ட ளைப்படியே திட்டமாய்க் கையி னால்
    எழுத உவகை யோடுபொருள்
    கண்ட ளித்தபிரபு ஆர்எனின்,
    பூண்இ லங்குவர நதிகு லத்தில்வரு
    புண்ய னான அதி கண்யனாம்,
    புலவர் போற்றுமா கறலின் மேவும் எழில்
    புண்ய கோடிஎனும் பூபனே.


    [இன்புறீஇ – இன்புற்று அலது உம் நினைவில். வர நதிக்குலம் – கங்காகுலம்; அந்தக் குலத்தில் வந்தவர் வேளாளர்.]

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *