
நல்ல சேனாபதி
கி. வா. ஜகந்நாதன்
சிறு தேர் ஈந்த செல்வன்
சோழர் படையும் பல்லவ அரசன் படையும் பொருதன. ஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ மரபினனாகிய அவன் சோழ அரசு வரவர மங்கி வருவது தெரிந்து, அந்நாட்டின்மேற் படையெடுத்துக் கைப்பற்றலாம் என்று துணிந்து போர் செய்யத் தொடங்கினான்.
அக் காலத்தில் மூன்றாம் இராசராசன் சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு முன்பு அரசாண்ட சோழர்களுடைய வீரமும் விறலும் அவனுக்கு இல்லை. சோழ நாடு வரவரச் சுருங்கி வந்தது.
கோப்பெருஞ்சிங்கன் போரிடத் தொடங்கியவுடன், சோழ மன்னன் எதிர் நிற்க முடியாதென்று கருதிப் பிறருடைய துணையை வேண்டினான். அவனுடைய ஆட்சியின் கீழ் காவிரி வட பகுதிகளை ஆண்டு வந்த போசள வீர நரசிம்ம தேவன் என்பவனுக்குச் செய்தி சொல்லியனுப்பி, எப்படியேனும் படையுடன் சென்று கோப்பெருஞ்சிங்களைச் சோழநாட்டிற்குள் புகாமல் ஓடும்படி செய்யவேண்டும் என்று பணித்தான்.
வீர நரசிம்ம தேவன் தன்னிடம் உள்ள படைகளையும், சோழன் படைகளையும் கொண்டு எதிர்க்கப் புகுத்தால் சிங்கனை வெல்லுவது அரிது என்பதை உணர்ந்தான். துணையாக வேறு படைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தான்.
அக் காலத்தில் கொங்கு நாட்டில் பல வேளிர்கள் வீரமுடையவர்களாய் வாழ்ந்திருந்தனர்.
ஒவ்வொருவரும் திண்டோள் படைத்த வீரர்கள் பலரை வைத் திருந்தனர். யாரேனும் பெருமன்னர் துணைக்கு அழைத்தால், படையுடன் சென்று அவர்களுக்குப் போரில் துணை செய்து வெற்றி பெறும்படி செய்தனர்.
அந்நாட்டில் காங்கேயம் என்று ஓர் ஊர் இருக் கிறது. அதற்குச் சிங்கை என்றும் ஒரு பெயர் உண்டு. அங்கே லிங்கையர் என்ற வேளாண் செல்வர் வாழ்ந்திருந்தார். பரம்பரை பரம்பரையாக வீரமும், செல்வமும், வள்ளன்மையும் உடைய மரபில் வந்தவர் அவர். அவரிடம் பல பெருவீரர்கள் இருந்தனர்.
இந்தச் செய்தியை அறிந்த வீர நரசிம்ம தேவன், லிங்கையருக்கு ஆள் அனுப்பித் தனக்குப் போர்த் துணை யாக வரவேண்டும் என்று வேண்டினான். போர் என்றாலே பூரித்துப் பொலியும் தோளைப் பெற்ற வீரர் களுக்குத் தலைவராகிய அவர், நரசிம்ம தேவனுடைய விருப்பத்துக்கு இணங்கித் தம் படையுடன் சென்றார்.
போர் கடுமையாக நடந்தது. சோழநாட்டு வீரர்களை விடப் பன்மடங்கு வீறுடன் கொங்கு நாட்டு வீரர்கள் போர் செய்தனர். அவர்களுடைய பெருவிறலால் சோழர் படைக்கு வெற்றி கிட்டியது. கோப் பெருஞ்சிங்கன் தன் ஊர்ப் போய்ச் சேர்ந்தான். பெரும் படையுடனும் சோழநாட்டைக் கைப்பற்றலாம் என்ற பேராசையுடனும் வந்த அவன், மீண்டு சென்றது வீர நரசிம்ம தேவனுக்குப் பெருவியப்பாக இருந்தது. கொங்குநாட்டுப்படையின் உதவி இராதிருந்தால், இந்த வெற்றி தனக்குக் கிடைக்க வழியில்லை என்பதை அவன் நன்கு தெளிந்தான்.
சோழநாடே வெற்றி ஆரவாரத்தில் மூழ்கியிருந் தது. வீரநரசிம்ம தேவன் கொங்குத் தலைவராகிய லிங்கையரையும் அழைத்துக்கொண்டு, சோழ அரசனிடம் சென்றான். அவனை எதிர்பார்த்திருந்த சோழன் அவனைக் கண்டவுடன் பலபடியாகப் பாராட்டினான்.
அப்போது நரசிம்ம தேவன், “எல்லாப் பாராட்டும் இந்த மாவீரரைச் சேரவேண்டும். இவரும் இவருடைய வீரர்களும் நம் படைக்குத் துணையாக வராமல் இருந்தால் கோப்பெருஞ்சிங்கன் இந்தத் தலைநகருக்கே வந் திருப்பான். அவன் வர முடியாமல் தோற்று ஓடினான். கொங்கர் வீரம் சிங்கன் நெஞ்சில் பசுமையாக இருக்கும்” என்றான்,
சோழ அரசன் அது கேட்டு நன்றியறிவுடன் லிங்கையரைப் பார்த்தான். “இத்தகைய பெருவீரருக்கு நாம் என்ன கைம்மாறு செய்யவல்லோம்! நாடறிய இவரைக் கொண்டாடி ஏதேனும் சிறப்புப் பெயர் வழங்கலாம்” என்றான்.
தன் விருப்பப்படியே வீரரும், குடிமக்களும்,புலவரும் மல்கிய பேரவையிலே, அரசன் காங்கேயத் தலைவருக்கு ‘மும்முடிப் பல்லவராயர்’ என்ற பட்டத்தை அளித்துப் பரிசுகள் பலவற்றையும் வழங்கினான். அது முதல் லிங்கையர் என்ற வழக்கு மாறி அவ் வீரரை யாவரும் மும்முடிப் பல்லவராயர் என்றே வழங்கலாயினர்.
சில நாட்கள் சோழர் தலைநகரில் மும்முடிப் பல்லவராயர் தங்கினார். ஒவ்வொரு நாளும் சோழ அரசனோடு பேசி அளவளாவினார். அரசன், அவருடைய நலம் தீங்குகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவருக்கு ஒரு புதல்வன் இருப்பதை அறிந்தபோது, “அந்தப் பிள்ளையும் நம்முடைய படைக்கு ஒரு பெரிய துணையாக வரும் காலத்தை எதிர்பார்க்கிறேன்” என்று கூறினான்.
அப்போது பல்லவராயர் சிரித்தார். “பையனுக்கு மூன்று ஆண்டு நடக்கிறது. இப்போதுதான் மெல்லத் தளர் நடையிட்டு நடக்கிறான்” என்றார்.
“அப்படியா! தளர் நடையிடும் குழந்தைக்குச் சின்ன நடை வண்டி வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா?” என்று கேட்டான் சோழன்.
“இல்லை; இனிமேல்தான் செய்து தரச் சொல்ல வேண்டும்” என்றார் வீரர்.
“இங்கே நல்ல வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு அழகான சிறு தேர் ஒன்று செய்து அனுப்புகிறேனே!” என்றான் சோழன்.
“இந்தச் சிறிய பண்டத்துக்கு அரசர் பெருமான் தொல்லையை மேற்கொள்வானேன்?”
“தொல்லையா? ஏதோ என் அன்பின் அறிகுறியாக இருக்கட்டும் என்று நினைக்கிறேன். வயசு வந்த பிள்ளை யானால் குதிரை கொடுக்கலாம். யானையையே வழங்கலாம். இப்போது சிறு தேர்தான் பயன்படும்.”
மேலே மறுக்க வழியில்லாமல் பல்லவராயர் ஒப்புக்கொண்டார்.
“நீங்கள் ஊருக்குப் போய் வாருங்கள். நான் பின்பு சிறு தேரை அனுப்புகிறேன்” என்று சொன்ன சோழன், வேறு வகையான பரிசுகளையும் பொருளையும் அவருக்குக் கொடுத்து அனுப்பினான்.
சில காலம் கழித்துச் சோழன், மும்முடிப் பல்லவ ராயருடைய குழந்தைக்கு நடைவண்டி செய்வித்து அனுப்பினான்.மரத்தால் செய்தவண்டியா அது? அவன் தன் சிறப்புக்கு ஏற்றபடி, ஒரு சிறு தேரையே, குழந்தை கள் இழுக்கும் தேரையே, அனுப்பிவிட்டான். தங்கத்தால்செய்து, நடுநடுவே நவமணிகளைப் பதித்து அழகு மின்னியது. படுத்தியிருந்த அது, தகதகவென்று
அதைக் கண்டபோது காங்கேய வள்ளலுக்குப் பெரு வியப்பு உண்டாயிற்று.
“இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாம் அறிவர் தம்கொடையின் சிர்”
என்ற ஒளவையார் பாட்டு அவருடைய நினைவுக்கு வந்தது. சோழன், பல்லவராயருடைய குழந்தையின் நிலையை எண்ணி அதை அனுப்பவில்லை. தன் நிலையை எண்ணி, முடிமன்னனிடமிருந்து வரும் பரிசு என்று யாவரும் கண்டு போற்றும் வகையில், அதைச் செய்து அனுப்பியிருந்தான்.
மும்முடிப் பல்லவராயருடைய குழந்தை அந்தச் சிறு தேரை வைத்து விளையாடினான். அதைப் பார்ப்பதற்குப் பலர் கூடினார்கள். சோழனுடைய பெருந் தகைமையைப் பாராட்டினார்கள்.
2
ஒரு நாள் பல்லவராயருடைய குழந்தை வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். வழக்கம்போல வேறு இளம் பிள்ளைகள் அந்தக் குழந்தையுடன் இருந்து, அவன் சிறு தேரை இழுக்கும்போது தாமும் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தார்கள்.
அப்போது ஒரு புலவர் வந்தார். மும்முடிப் பல்லவ ராயருடைய வீரப்புகழையும், கொடைப்புகழையும் கேட்டவர் அவர். வறுமையால் வாடிய அவர், காங்கேயத்துக்குப் போய்ப் பரிசுபெற்று வரலாம் என்று வந்தார். அன்று பல்லவராயர் ஊரில் இல்லை. அவருடைய வீட்டுக்குச் சென்ற புலவர் அவர் இல்லாமையை உணர்ந்து வாட்டமுற்றார். என்ன செய்வது என்று தோன்றாமல் சிறிது நேரம் மயங்கி நின்றார். அப்போது வீதியில் குழந்தைகளின் விளையாட்டு ஆரவாரம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தார். ‘இதென்ன, தங்கத் தேர்போல அல்லவா இருக்கிறது!’ என்று வியந்து அருகில் சென்றார். பல்லவராயருடைய மகன் அதை மிடுக்குடன் இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தார்.
சோமன் என்பவன் சிறு குழந்தையாக இருந்த போது, தன்னை வந்து இரந்த புலவனுக்குத் தன் முன்னுச்சி மயிரில் அணிந்திருந்த சுட்டியைத் தந்தானாம். இந்தக் கதை இப்போது புலவர் நினைவுக்கு வந்தது. நாம் பல்லவராயரைத் தேடிக்கொண்டு வந்தோம். நம் பொல்லாத காலம் அவர் ஊரில் இல்லை. அவர் புதல்வனாகிய இவனிடம் கைநீட்டுவோம். சோமனைப் போல் இவன் ஏதாவது தந்தால் பெற்றுப் போகலாம். என்று எண்ணினார். ஆசைக்கு இது நடக்கும், இது நடக்காது என்ற ஆராய்ச்சி தோன்றாது அல்லவா?
குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். புலவர் அவன் முன்னே போய் நின்றார். “நான் ஏழைப் புலவன்; எனக்கு ஏதாவது தா” என்று சொல்லிக் கையை நீட்டினார். அந்தக் குழந்தைக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, சிறு தேரைக் கட்டியிருந்த கயிற்றைத் தன் கையிலிருந்து அப்புலவர் கையில் கொடுத்து விட்டான். புலவர் கை அதைப் பெற்றுக் கொண்டது. அவர் வியப்பில் ஆழ்ந்தார், அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. குழந்தை அதை இழுத்துத் தன்னோடு விளையாடச் சொல்கிறானா? சோமன் கொடுத்தது போல இதுவும் குழந்தையின் கொடையானால், இதை வாங்கிக் கொள்ளலாமா? குழந்தை விளையாடும் பொருட்டு அருமையாக வைத்திருக்கும் பொருளாயிற்றே! இதை வாங்கிச் செல்வது முறையா? குழந்தைக்கு ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பார்கள். அப்படி இருக்க அவன் விளையாடும் தேரை வாங்கிச் செல்வதா? அது என்ன சாதாரணமான தேரா? தங்க மும்மணியும் வைத்து இழைத்தது அல்லவா? குழந்தை தான் கொடுத்து விட்டதென்றால், விலைபெறும் அதை அவர் எடுத்துச் செல்லலாமா? குழந்தையின் தாய் தந்தையர் அதை அறிந்து அவரைத் திருடன் என்று.. எண்ணிவிட்டால் என் செய்வது?-இப்படியாக அவர் உள்ளம் பல எண்ண அலைகளினிடையே கிடந்து தடுமாறியது.
‘குழந்தை அவர் கையில் தேரைக் கொடுத்தானே’ யன்றி மறுபடி கேட்கவில்லை. மற்றக் குழந்தைகள் இந்த விநோதத்தைக் கண்டு அப்படி அப்படியே நின்று விட்டன. அருகில் இருந்த சிலர் குழந்தையைப் பெற்ற தாயினிடம் போய் நிகழ்ந்ததைச் சொன்னார்கள். அவளும் பிற பெண்மணிகளும் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார்கள். புலவர் தேரை இழுக்கும் கயிற்றைக் கையில் பிடித்தபடியே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தார்.
தாயும் பிறரும் வந்து பார்த்தபோது அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. புலவரிடம் சென்று, “நீங்கள் யார்?” என்று கேட்டாள், குழந்தையின் அன்னை. புலவருக்குச் சற்றே உணர்வு வந்தது. “நான் இந்த வீட்டு வள்ளலிடம் ஏதாவது பெற்றுப் போக வந்தேன். அவர் இல்லையென்று அறிந்து இந்தக் குழந்தையிடம் வந்து கையை நீட்டினேன். இவன் என் இந்தத் தேரைக் கயிற்றோடு தந்துவிட்டான். குழந்தை யின் அருங்குணத்தைக் கண்டு வியந்து நின்றேன்” என்று சொல்லிவிட்டு, “இந்தா, இந்தத் தேரை நீயே
இழுத்து விளையாடு” என்று கூறிக் குழந்தையிடம் கொடுக்கச் சென்றார். அச் சிறுவன் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் தலையை அசைத்தான். தன் மழலைச் சொல்லால், “எடுத்துக்கொண்டு போ!” என்றான்.
அருகில் இருந்தவர்கள் அதைக் கேட்டு வியந்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். குழந்தையின் அன்னை குழந்தையை அதட்டவில்லை; ‘பைத்தியமே!’ என்று சொல்லவில்லை. கொடுக்கும் குலத்தில் வாழ்க்கைப்பட்ட அவளுக்கு, தன் குழந்தை யின் இயல்பை எண்ணிப் பெருமிதமே உண்டாயிற்று.
சோழன் தந்த தேரின் அழகையும் சிறப்பையும் பாராட்டியவர்கள், இப்போது சிறுவனுடைய ஈகைக் குணத்தை அறிந்து வியந்தார்கள். புலவர், “அம்மணி, இதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கயிற்றை அவள் கையில் அளிக்க வந்தார். அவளோ, “வேண் டாம். என் மகன் கொடுத்ததை நான் வாங்குவதா?” என்று தயங்கி நின்றாள்; தலையை ஆட்டி மறுத்தாள்.
இந்தச் சமயத்தில் மும்முடிப் பல்லவராயரே வந்து விட்டார். தம் வீட்டு வாசலில் கூட்டம் நிற்பதைக் கண்டு விரைந்து வந்தார். “என்ன?” என்று கேட்டார். அங்கே நின்றிருந்த ஒருவர் நிகழ்ந்ததைச் சொன்னார்.
புலவர் கண்ணீர் வழிய, ‘நான் தவறு செய்துவிட்டேன். இந்தக் குழந்தையிடம் கை நீட்டினேன். இவனிடம் ஒன்றும் கொடுக்க இராதே என்ற அறிவின்றி என் வறுமைக் கொடுமையால் அப்படிச் செய்தேன். இந்தக் குழந்தை தேரையே என் கையில் கொடுத்து விட்டு நிற்கிறான். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என்று மெலிந்த குரலில் கூறினார்.
மும்முடிப் பல்லவராயர் புன்னகை பூத்தார். “நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் தவறு செய்யவில்லை. வாருங்கள்,வீட்டுக்குள் போகலாம். உங்களை வாசலில் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறார்களே; என்ன பைத்தியக் காரத்தனம்!” என்று சொல்லிவிட்டுத் தம் குழந்தையை வாரி அணைத்து உச்சி மோந்தார். “இந்தக் குணம் உனக்கு என்றுமே இருக்க வேண்டும்” என்று சொல்லி உடலம் பூரித்தார்.
புலவரும், வள்ளலும், குழந்தையும், அன்னையும் வீட்டுக்குள் சென்றனர். “முதலில் உணவு உண்டு விட்டுப் பிறகு பேசுவோம்” என்றார் பல்லவராயர். தேரை அவர் வாங்கிக்கொண்டார் என்ற நினைவிலே, புலவருக்கு ஆறுதல் உண்டாயிற்று.
உண்ட பிறகு பல்லவராயரும் புலவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். “அந்தச் சிறு தேர் உங்களுடையதுதான். இனி அதை நான் திரும்பப் பெற மாட்டேன்” என்று பல்லவராயர் கூறியபோது, புலவர் திடுக் கிட்டார்.
“சின்னக் குழந்தை தெரியாமல் கொடுத்துவிட்ட தென்று நினைக்காதீர்கள். நீங்கள் கை நீட்டியவுடன் கையில் இருந்ததை உடனே கொடுத்தானே, அதை நான் மதிக்கிறேன். அந்த இயல்பை அவனுக்கு அளித்த இறைவனை வாழ்த்துகிறேன். இந்தக் கொடை யியல்பு அவனிடம் வளரட்டும் என்று ஆசி கூறி வாழ்த்துங்கள்” என்றார் புரவலர்.
“எனக்கு எதற்கு இது?” என்று கேட்டார் புலவர்.
‘இதுசோழ அரசன் என் மகனுக்குப் பரிசாக அளித்தது. அது உங்களுக்கு உரிய பொருள் ஆகிவிட்டது. தை யாருக்கேனும் விற்றுப் பயன் அடையுங்கள்.
இதை விடும் செல்வக் குழந்தை எங்கே இருக்கிறது? நீங்கள் இதை விலைக்கு வாங்குவார் யார் என்று தேடிச் செல்ல வேண்டாம். இது தங்கத்தாலும் மணிகளாலும். அமைந்தது. அவை உங்களுக்குப் பயன்படும்”
புலவர் உணர்ச்சி மிக்கவரானார். அவர் கண்களில் இப்போது ஆனந்தக் கண்ணீர் ததும்பியது. அவர் வாயிலிருந்து பல்லவராயரையும் அவர் மகனையும் பாராட்டும் பாடல்கள் ததும்பி வந்தன. “சுட்டி ஈந்த சோமனையும் மிஞ்சிவிட்டான், தேரை ஈந்த திருவாளன்” என்று தமிழுலகமே போற்றியது.
இந்த அரிய நிகழ்ச்சியைக் கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பின்வரும் பாட்டுப் புலப்படுத்துகிறது.
சங்கிராம் சோழன் மரகதம்
முத்தொடு தங்கு இரதம்
சிங்கையிற் பல்லவன் சிறுவனுக்கு
ஈயச் சிறுவன்மனம்
புங்கம தாகச் சிறுதேர்
உருட்டிப் புலவனுக்கு
மங்களம் மேவக் கொடுத்த அன்
னான்கொங்கு மண்டலமே.
(சங்கிராம் சோழன். போர் செய்த சோழன், இரதம்
(சிறு தேர். சிங்கை – காங்கேயம். பல்லவன் – மும்முடிப்பல்லவராயன். புங்கம்- தூய்மை.)



