
சிலம்பில் ஈடுபட்டதெப்படி
ம. பொ. சிவஞானம்
சிலம்பில் ஈடுபட்டதெப்படி ?
அன்னையின் தூண்டுதலால்
அம்மானை இலக்கியம் படித்தேன்!
என் இளமைப் பருவத்திலே அன்னையின் தூண்டுதலால் புகழேந்திப் புலவர் பெயராலுள்ள ‘கோவலன் கதை’ என்னும் அம்மானை இலக்கியத்தைப் படித்தேன். வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் திரும்பத் திரும்பப் படித்தேன்.
‘முன் கண்ணகி‘யாக……
நான் எட்டு வயது சிறுவனாக இருந்தபோது என்னொத்த சிறுவர் சிலர் சேர்ந்து சங்கரதாசர் எழுதிய கோவலன் நாடகத்தை நடிக்க சபை அமைத்து பயிற்சிக்குப் பின் நடத்தவும் செய்தனர். அப்போதெல்லாம் கோவலன் நாடகத்தில் ‘முன் கண்ணகி’-‘பின் கண்ணகி’ என இரு வேறு கண்ணகிகள் தோன்றுவார்கள். சிலப்பதிகாரத்திற்கு பலவகையிலும் வேறுபட்ட அந்த நாடகத்திலே கண்ணகிக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடைபெறும். அதனால், எனக்கு ‘முன் கண்ணகி’ பாத்திரம் தரப்பட்டது. புகழேந்திப் புலவரின் கோவலன் கதையைப் படித்ததும், சங்கரதாசர் சுவாமிகளின் கோவலன் நாடகத்திலே முன் கண்ணகியாக நடித்ததும் சிலப்பதிகாரத்தோடு இறைவன் எனக்கு பிள்ளைப் பருவத்திலேயே ஏற்படுத்தித் தந்த தொடர்பு போலும்!
நாடகமும் பார்த்தேன்!
அதன் பின்னர் பருவமடைந்தவர்கள் நாடகக் கம்பெனிகள் நடத்திய கோவலன் நாடகத்தையும் பலமுறை பார்த்தேன். அந்த நாடகத்திலே நான் பார்த்த,’கோவலன் கதை’யோடு நான் பிள்ளைப் பருவத்தில் நடித்த-பருவமடைந்த பின் பார்த்த கோவலன் நாடகத்தோடு இளங்கோ படைத்த சிலப்பதிகார காப்பியத்தை ஒப்பிட்டுப் பார்க்க எனக்கு வாய்ப்பிருக்கவில்லை. சிலப்பதிகாரம் என்ற ஒரு காப்பியம் இருப்பதை நான் அறிந்திராத காலமது!
அந்த நிலையிலும் கதையிலும் நாடகத்திலும் பாண்டியனை கண்ணகி கொலை புரிவது எனக்குப் பிடிக்கவில்லை. வெறுக்கவும் செய்தேன். பெண்ணொருத்தி ஆண் மகனை – அதுவும் அரசனைக் கொல்வதை என்னால் ரசிக்க முடியவில்லை.
காலம் சிலம்பை உணர்த்தியது
பிற்காலத்தில் சிலப்பதிகாரத்தைப் படித்த பின்னர் புகழேந்தியின் கதையும் சங்கரதாசரின் நாடகமும் இளங்கோவின் காப்பியத்தை ஒட்டியதாக இல்லை யென்பதை- பண்பாட்டில் முரண்பட்டிருப்பதை உணர்ந்தேன். ஆனால், அந்தக் காலத்தில் புகழேந்தியின் கதைக்கும் சங்கர தாசரின் நாடகத்துக்கும் தமிழ் மக்களிடையே நல்ல செல்வாக்கிருந்தது. அது காலத்தின் கோலம்!
ஆனால், நான் சிலப்பதிகாரத்தின் செந்நெறிகளைப் பரப்பிய பின் புகழேந்தியின் கோவலன் கதையும் சங்கர தாசரின் கோவலன் நாடகமும் மக்களிடையில் மதிப்பற்றுப் போயின. இளங்கோவின் கண்ணகியே மக்கள் மனங்களில் இடம் பெற்று விட்டாள். இதை எனக்கு முன் புலவர் பெருமக்களே செய்திருக்க வேண்டும். அவர்கள் சாமான்யர்களுக்கு நெடுந்தொலைவிலிருந்தார்களாதலால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை! அப்படி ஒரு கடமை தங்களுக்கிருப்பதை உணருஞ் சக்திகூட அவர்களுக்கு இருக்கவில்லை.
சிறையில் சிலப்பதிகார வகுப்பு
சிறையில் சிலம்பைப் படித்த போதே சக அரசியல் கைதிகள் சிலருக்கு வகுப்பு நடத்தினேன். அதுவரை மக்களிடையில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘கதை’க்கும் ‘நாடக’ த்துக்கும் சிலப்பதிகாரம் வெகு தொலைவிலிருக் கின்ற தென்பதை வகுப்பு நடத்தி வந்தபோதுதான் மிகத் தெளிவாக உணர்ந்தேன்.
நான் 1943 நவம்பரில் சிறையிலிருந்து மீண்டதும் என் உறவினர் குடும்பத் திருமணம் ஒன்றிற்கு நானும் என் மனைவி இராசேசுவரியும் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் சிறையிலிருந்து மீண்டும் எனது உடல் மிகமிக இளைத்துப் போய் இருந்ததால் பார்ப்பவர்கள் என் வாழ்வு நாள் கணக்கில் இருப்பதாகக் கருதி என் மனைவியிடம் அனுதாபங் காட்டுவார்கள். அவளுடைய சகோதர சகோதரிகளோ, ‘ஜெயிலுக்குப் போகக் கூடிய காங்கிரஸ்காரனைக் கட்டிக் கொள்ளாதே” என்று அப்போதே சொன்னோமே கேட்டியா?’ என்று சொல்லி அவளைப் பயமுறுத்தினார்கள்.
அதனால் என் மனைவியுடன் சேர்ந்து உறவினர் குடும்ப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல அஞ்சுவேன். ஏதேனும் சமாதானம் சொல்லி என் மனைவியை மட்டும் அனுப்பி விடுவேன்.
மனைவி கற்பித்தது!
என் மனைவியின் தாய் வீடு சம்பந்தப்பட்ட மங்கல நிகழ்ச்சி யொன்றுக்கு நான் சென்றாக வேண்டிய நிர்ப் பந்தமிருந்தது. தவிர்க்கக் கூடாத நிகழ்ச்சி. அப்படியிருந்தும், ‘நான் வரவில்லை’ என்று என் மனைவியிடம் சொன்னேன். அவள் நானும் வந்தாக வேண்டும் என்று பிடிவாதம் காட்டினாள்.
அப்போது ‘நான் சிறையிலேயே செத்திருந்தால்’ என்று ஆரம்பித்து ஏதோ சொல்ல இருந்தேன். அதற்குள் அவள், ‘நீ சிறையில் மாண்டிருந்தால் நான் கண்ணகி போன்று இந்த அரசை எதிர்த்துப் போரிட்டு நானும் சிறைப்பட்டு செத்திருப்பேன்’ என்று முகத்தில் சினத்தைக் காட்டி சொன்னாள்.
இது நிகழ்ந்தபோது பிட்ரிடிஷ் ஆட்சி வெளியேறவில்லை. அது வெளியேறும் நம்பிக்கை கூட உதயமாகவில்லை. அதனால், என் மனைவியின் வீரவாசகம் சிலப்பதிகாரத்தின் கருப்பொருளை எனக்கு உணர்த்தியது.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்
அதன்பின், இளங்கோவின் சிலப்பதிகாரக் கதையை படித்தவர்களிடையிலும் பாமரர்களிடையிலும் பரப்பும் பிரசாரப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்ற ஆவலும் எனக்குப் பிறந்தது. எனது நினைவிலுள்ளபடி எனது முதல் பேச்சு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்தான் அமைந்தது. அப்போது பன்மொழிப் புலவர் தெ. பொ. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அந்தப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தார். அவரால் அழைக்கப்பட்டுத்தான் அங்கு சென்று நான் பேசினேன். ஒரு சிறிய வகுப்பறையில்தான் அந்தக் கூட்டம் நடந்தது. அநேகமாக பல்கலைப் புலவர்கள் அதிகமாக வந்திருந் தனர். ஆனால், எனது பேச்சுக்கிருந்த வரவேற்பு, புலவர்கள் ரசித்த முறை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடலாமென்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.
கண்ணகியின் வரலாற்றைச் சொல்லியே தமிழ்ப் பெண்களை தேச விடுதலைப் போரில் ஈடுபடுத்த முடியுமென்ற நம்பிக்கை எனக்குப் பிறந்தது. சிலப்பதிகாரம் ஒரு அரசியல் புரட்சிக் காவியம் என்பதை ஐயமற அறிந்தேன்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் நான் தில்லை இளங்கோ கழகத்திலும் சிலப்பதிகாரம் பற்றி முதன் முதலாகப் பேசினேன்.
முதல் நூல்
அந்தப் பேச்சை ‘சிலப்பதிகாரமும் தமிழரும்’ என்னும் தலைப்புடன் யான் நடத்திய ‘தமிழ் முரசு’ மாத இதழில் வெளியிட்டேன். அதன்பின் அதே பெயரில் இன்ப நிலையத்தாரால் 1948-ல்நூலாகவும் வெளியிடப் பட்டது.
எனது பேச்சு ‘தமிழ் முரசி’ல் வெளியானதுமே அப்போதைய சென்னை மாகாண அரசு அதைத் தடை செய்யவும் பிரசுராலயத்திடமுள்ள பிரதிகளைப் பறிமுதல் செய்யவும் ஆலோசனை நடத்தியதாக தக்கார் வாயிலாக அறிந்தேன். ஆனால், அதற்குள் மத்தியில் நேருஜி தலைமையில் இடைக் கால அரசு ஏற்பட்டுவிட்டதால் எனக்கு அந்தப் பேறு கிடைக்கவில்லை.
சிலப்பதிகாரம் பனடத்த, ஆசிரியர் இளங்கோவடிகள் தம் காலத்தில் தமிழகத்தில் நிலவிய அனைத்துச் சமயங்களையும் சமமாகக் கருதினார். இந்த வகையில் அவர் தான் தேசிய ஒருமைப்பாட்டிற்கு முதலில் வழி காட்டினார். புறச்சமயங்களை அவர் விரும்பி ஏற்றார். எதையும் வெறுத்து ஒதுக்கவில்லை. தம்சமயம் இன்னதென அவர் கூறவில்லை; அவரை சமணர் என்று சொல்வோருமுண்டு. அவர் தம் அண்ணன் செங்குட்டுவன் சைவனென்று அடிகள் வெளிப்படையாகக் கூறியிருப்பதால், தம்பியின் சமயமும் அதுவாகத்தான் இருக்க வேண்டு மென்று அனுமானித்துக் கூறியிருக்கிறார் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர். ஆனால், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களைப் பக்தி பூர்வமாக அடிகள் பாடியிருப்பதைப் பார்த்தால் அவரை வைணவரென்றும் கருத வாய்ப்பிருக்கிறது.
சர்வசமய சமரசம்
இளங்கோ தம்முடைய சமயத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள விரும்பினால் சிலப்பதிகார காப்பியத் திற்கும் சமய வண்ணம் பூசப்பட்டு விடுமென்று ஐயுற்றே காப்பியத்தில் மறைந்து கொள்ளுகிறார். பெரும் புலவர்கள் பலர் அடிகளை சமணர் எனக் கருதி அவர் படைத்த காப்பியத்தை சமண நூற்கள் பட்டியலிலே சேர்த்து வைத்துள்ளனர்.
ஆதிசங்கரர் வேதமதப் பிரிவுகளான அறுவகைச் சமயங்களையும் ஒன்றுபடுத்துவதற்கு முயன்று ஷண்மத ஸ்தாபகர் என்ற பட்டமும் பெற்றுள்ளார். ஆனால், சங்கரருக்கு 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தவரான இளங்கோவடிகள் சமணம், பௌத்தம் ஆகிய இரண்டையும் சேர்த்து இந்திய மதங்களை மக்கள் சமமாக மதித்துப் போற்ற வழிகாட்டினார்.
சங்கரர் காலத்து அறுவகைச் சமயங்கள் – சைவம் (சிவனை வழிபடுவது), வைணவம் (திருமாலை வழி படுவது), காணாபத்யம் (கணபதியை வழிபடுவது), கௌமாரம் (குமரக் கடவுளை வழிபடுவது), சாக்தம் (சக்தியை வழிபடுவது), ஐந்திரேயம் (இந்திரனை வழி படுவது) எனப்பட்டன.
சங்கரர் சாதிக்காதது
சங்கரர் காலத்தில் சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களும் வலுப்பெற்றிருந்தன. இந்தியாவின் சில பிரதேசங் களில் சமணரும் பௌத்தரும் ஆட்சி புரிவோராகவும் இருந்தனர். அப்படியிருந்தும் அவ்விரண்டும் வேதசமயத்துக்குப் புறச்மயங்கள் எனக் கருதி அவற்றைப் புறக்கணித்து விட்டார் சங்கரர்.
இளங்கோவடிகள் சேர இளவரசராதலால்-சமணரும் பௌத்தரும் சேர நாட்டின் குடிமக்களாதலால் அவர்களை ஒதுக்காமல், சமணமும் பௌத்தமும் இந்து மதத்தின் பிரிவுகளல்லவென்றாலும் இந்திய மதங்களாத லால் சிலப்பதிகாரத்தில் வேதமதத்திற்குரிய மதிப்பைத் தந்து சமணத்திற்கு கவுந்தியடிகளையும் பௌத்தத் திற்கென கூலவாணிகள் சாத்தனாரையும் பாத்திரங் களாக்கி சிலம்பில் சேர்த்து விட்டார்.
ஆனால், சிலம்பில் கணபதியை மூர்த்தியாகக் கொண்ட காணாபத்ய மதத்தைச் சேர்த்து வைக்கவில்லை. காரணம், இளங்கோவடிகள் காலத்தில் கணபதி வழிபாடு தமிழ்நாட்டில் இல்லாததுதான். அது தமிழர் வாழ்வில் பிற்காலத்தில் புகுந்ததுதானே!
ஐந்திரேய சமயத்திற்கு இந்திர விழவூரெடுத்த காதையைப் படைத்து புகார் நகரத்தார் அனைவரும்-அனைத்து சமயத்தினரும் – கொண்டாடுவதைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
சக்தி வழிபாட்டுக்கென கொற்றவை வழிபாட்டை இசைப் பாட்டாகவும், குமரன் வழிபாட்டிற்கென இசைப் பாட்டாக ‘குன்றக் குரவை’யையும் வைணவர் திருமால் வழிபாடு நடத்துவதையும் இசைப்பாட்டாகக் காட்சிப் படுத்தியுள்ளார். இம்மூன்றும் கூட்டு வழிபாடாகவும் அமைந்துள்ளது. சிவனை வழிபடுவதற்கென தனிப் பாடலோ தனிக்காதையோ அடிகள் படைக்கவில்லை. காரணம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக இளங்கோ கருதியதுதான். ஆயினும் புகாரில் சிவன்கோயில் இருந்ததனை நாடு காண் காதையில் கூறியுள்ளார். ‘பிறவாயாக்கைப் பெரியோன்’ என்னும் வாசகத்தாலும் சிவபெருமானை நினைப்பூட்டுகிறார்.
சமணப் பள்ளியும் பௌத்த மடமும் புகாரிலிருந்ததையும் வேதமதக் கடவுளர் கோயில்களுடன் சேர்த்து சமண – பௌத்த மடங்களையும் வலம் வந்து வழிபட்டு கோவலனும் கண்ணகியும் புகார் நகரிலிருந்து வெளியேறுவதாகக் கூறுகிறார்.
இந்த சமய ஒருமைப்பாடு காரணமாகவும் சிலப்பதிகாரம் என் சிந்தனையைக் கவர்ந்தது.
இந்திய ஒருமைப்பாட்டையேயன்றி, அதற்கு அடிப் படையாக மூவேந்தர்களாண்ட சேர-சோழ-பாண்டிய மண்டலங்களையும் தம் காப்பியத்தில் அடிகள் ஒன்று படுத்திக் காட்டியிருக்கிறார்.
புதிய தமிழகம்
இளங்கோவும் சாத்தனாரும் சேர்ந்திருந்த போது, ‘முடிகெழுவேந்தர் மூவர்க்குமுரியது அடிகள் நீரே அருளுக’ என்று சாத்தனார் கூறக் கேட்கிறோம் பதிகத்திலே! ‘தமிழினமே ஒன்றுபடு’ என்னும் கோஷத்துடன் தமிழரசுக் கழகத்தைத் தோற்றுவித்து புதிய தமிழகம் படைக்கப் புறப்பட்ட காலத்தில் சிலப்பதிகாரத்தைப் படித்தேன். அதனாலும் மன்னர்வழி மூவேறு மண்டலங்களாகப் பிரிந்து கிடந்த தமிழகத்தை அடிகள் ஒன்றுபடுத்தியது ஐக்கிய தமிழகம் படைக்க விரும்பிய எனக்கு வழிகாட்டியாக இருந்தது. அதனால், சிலம்பை எழுத்தெண்ணிப் படித்தேன்; இன்னமும் படித்துக்கொண்டே இருக்கிறேன்.
சிலப்பதிகார காப்பியத்தில் தலைமை கோவலனுக்கு அல்ல. சிலப்பதிகார நாயகியான கண்ணகி நம்மைப் போன்றே தந்தையின் விந்துக்கு தாயின் வயிற்றில் பிறந்த மானுடப் பெண்ணே. தெய்வாவதாரமல்ல. ராமாயண -பாரதக் காப்பியங்களிலே தெய்வங்கள் மானிடராக வருகின்றனர். சிலம்பிலோ மானிடர்கள் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வங்களாகின்றனர். அதை அறிவியல் வாதிகளும் ஏற்கின்றனர்.
வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என்னும் குறட்பா வழித்தான் காப்பிய நாயகியை இளங் கோவடிகள் படைத்துள்ளார்.
சிலம்பில் தலைமை கண்ணகிக்கே!
வடமொழியில் காப்பிய நாயக-நாயகியர் கடவுள் அவதாரமாக இருக்க வேண்டும். இல்லையேல் நால் வருணங்களில் மேல் வருணங்களான அந்தணராகவோ அரசராகவோ இருக்க வேண்டும். இதுதான் இலக்கண விதி.
இந்த விதிக்கு விலக்காக மிகவும் அரிதாக வணிக வருணத்தவராக இருக்கவும் வடமொழி அனுமதிக்கிறது.
ஆனால், நான்காம் வருணத்தவன் காப்பிய நாயகனாக வர அனுமதிக்கவில்லை.
விலக்காக வைத்ததை விதியாக்கி, வணிக கண்ணகியை காப்பிய நாயகியாக்கி விதிக்கு வருணத்தவளானனார் இளங்கோ.
இராமாயண காப்பியத்தில் தாயகத் தன்மை சீதைக் கல்ல; இராமனுக்குத்தான்! இராமன் காப்பிய நாயகனாவதற்காக சீதை சிறைப்பட்டுத் துன்புறுகிறாள்.
சிலம்பிலே, காப்பியத் தலைமை கோவலனுக்கல்ல; கண்ணகிக்குத்தான்! கண்ணகி கற்பின் தெய்வமாவதற் காக- மாந்தர் வழிபடுவதற்காக கோவலன் கொலை யாகிறான்.
தலைவிக்குத் தலைவன்
சிலம்பில் கோவலனுக்குள்ள அந்தஸ்து காப்பியத் தலைவியான கண்ணகிக்கு நாயகன் என்பதுதான்!
கண்ணகி இருநிதிக்கிழவனான மாநாய்க்கன் மகள்; கோவலன் பெருநிதிக்கிழவன் மாசாத்துவான் மகன். ஆயினும், அவர்கள் வறியரான பின்னரே காப்பியத்தில் சிறப்பிடம் பெறுகின்றனர். மனைவியின் காற்சிலம்பை விற்றுப் பிழைக்கவே கோவலன் மதுரை செல்கிறான்.
சிலம்பின் கருப்பொருள் மதுரைக் காண்டத்தில்தான் இருக்கிறது; புகார்க் காண்டம் முன்னுரைதான்; வஞ்சிக் காண்டம் முடிவுரை எனலாம்.
நான், பிள்ளைப் பருவ முதற்கொண்டே பாரத தேச முழுவதையும் தாய்நாடாகக் கருதும் தேசியவாதியாக இருந்து வருகிறேன் காந்தியடிகள்பால் கொண்ட பக்தியும் இந்த ஒருமைப்பட்டுணர்வை உறுதிப்படுத்தி வந்துள்ளது.
காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்து விடுதலைப் போரில் ஈடுபடத்தொடங்கிய பின், ‘வந்தேமாதரம்’-‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று முழங்கத் தொடங்கிய பின் தேசியம் என்பதே எனது மதமாகி விட்டது.
பாரதியாரின் தேசியப் பாடல்களைப் படித்தும் காங்கிரஸ் மேடைகளிலும் காங்கிரஸ் ஊர்வலங்களிலும் சகோதரத் தொண்டர்களோடு சேர்ந்து பாடியும் வந்த பின் தேசிய ஒருமைப்பாடு எனது ஊனிலே உணர்விலே உயிரிலே கலந்து நானே அதுவாகி விட்டேன்.
ஆகவே, பிற்காலத்தில் தமிழ் இலக்கியங்களிலே பயிற்சி ஏற்பட்ட போது, எந்த இலக்கியத்தைப் படித்தாலும் அதிலே தேச ஒருமைப்பாட்டுக்கான கருத்துக்களைத் தேடுவதையும் திரட்டுவதையும் அவற்றை எழுத்தாலும் பேச்சாலும் பிரசாரம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டு விட்டேன்.
தேசியமும் தமிழும்
அந்த வகையில் என்னைப் பெரிதும் சவர்ந்தது, எனது தேசியத் தொண்டுக்குப் பேருதவியாக வருவது சிலப்பதிகார காப்பியந்தான். சிலம்பின் ஆசிரியரான இளங்கோ வடிகள் சேர மண்டலத்தின் இளவரசராதலால் அவர் அரசியல் ரீதியிலும் தேசிய ஒருமைப்பாட்டைப் போதிக்கிறார். இவ்வளவும் சேர்ந்துதான் என்னை ‘சிலம்புச் செல்வர்’ ஆக்கியதெனலாம்.
தேசத் தலைவரான காந்திஜி மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் இணைத்து வைத்தே விடுதலைப் போரை நடத்தி வந்தார். அவர்கள் தந்த 14 அம்சங்களைக் கொண்ட நிர்மாணத் திட்டத்திலே தாய்மொழி வளர்ச்சிக்குப் பாடுபடுவதும் ஒன்றாகும். அதனாலும் தேசபக்தனாக இருந்து கொண்டே என் தாய்மொழியான தமிழிடத்தும் பக்தி செலுத்த என்னால் முடிகிறது.
காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக என் மனத்தில் தமிழ்ப் பற்றை வளர்த்தவர்-வலுப்படுத்தியவர் தேசியக் கவி சி. சுப்பிரமணிய பாரதியாவார்.
பாரதியார் தம்முடைய கவிதைகளிலே ஆங்காங்கே சிலம்பின் பெருமையை எடுத்துக் காட்டியிருப்பதும் நான் சிலம்பில் பற்றுக் கொள்ள பேருதவி புரிந்தது.
பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ என்னும் குறுங்காப்பி யத்திலே வரும் பாஞ்சாலிகூட எனக்கு வீரக் கண்ணகியாகவே காட்சியளிக்கிறாள். கவிஞரும் இந்த உணர் வோடுதான் ‘பாஞ்சாலி சபதம்’ எனப் பெயர் தந்தா ரென்பது யான் செய்த ஆய்வின் முடிவாகும். ‘நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம்’ என்ற கவிஞரின் வாசகமே இதற்குச் சான்று. இதை சிலப்பதிகாரம் பற்றி யான் எழுதிய ஆய்வு நூல்களிலே விரிவாக எடுத்துக் காட்டியுள் ளேன்.
பாரதி வழிகாட்டினான்
புகழேந்தியின் பெயராலுலவும் ‘கோவலன் கதை’யும் தவத்திரு சங்கரதாசரின் கோவலன் நாடகமும் காந்தி அடிகளிடம் பெற்ற தமிழ்ப் பற்றும் பாரதியார் போதித்த பாடமும் யான் சிலப்பதிகாரத்திடம் பற்றுக் கொள்ளப் பயன்பட்டிருந்தாலும் அந்தப் பெருங்காப்பியத்தைப் பயில தமிழ்ப் பேராசிரியர் துணையும் தேவைப்படுகிறதல்லவா? அந்தப் பேராசிரியர் எல்லாம் வல்ல இறைவன்தான்! என்னைப் புலவனாக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கொண்டு சிலப்பதிகார அரும்பதவுரை, அடியாருக்கு நல்லாருரை ஆகியவற்றைக் கொண்டு அமராவதிச் சிறைச் சாலையில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி சிலம்பைப் பயின்றேன். நான் தமிழன்; தமிழ் என் தாய்மொழி. ஆதலால் தமிழ்க் காப்பியங்களைப் பயில்வது எனக்கு எளிதாகத்தான் இருந்தது. அந்தவகையில் தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களையும், திருத்தொண்டர் புராணம் போன்ற சில புராணங்களையும், நந்திக்கலம்பகம் – கலிங்கத்துப் பரணி ஆகிய சிற்றிலக்கியங்களையும் நானே முயன்று பயின்றேன். இவற்றில் எனக்கேற்பட்ட புலமையை “இலக்கியங்களில் இனவுணர்ச்சி” என்னும் இதழில் யான் எழுதி பூங்கொடி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு நூலைப் படித்து அறியலாம். இந்த வகையில் சிலப்பதிகாரம் என்னைக் கவர்ந்தது மொழிப்பற்று நாட்டுப்பற்று- சமயச்சார்பற்ற சமரச சுத்த சன்மார்க்கம் ஆகியவற்றாலாகும்.
இனி, ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு ஆராய்வோம். முதலில் தமிழ்ப்பற்றையே எடுத்துக் கொள்வோம்.
முத்தமிழ்க் காப்பியம்
சிலப்பதிகாரம் இயல் – இசை-நாடகம் ஆகிய முத்தமிழையும் கொண்ட முதற் காப்பியங்களில் எதுவும் இதற்கிணையில்லை யெனலாம். ஐம்பெருங் காப்பியங்களில் மற்ற நான்கான மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவையுந்தான்.
சிலம்பு தமிழ்க் காப்பியங்களில் தலைக்காப்பியம் என்பதோடு இசைப் பாடல்களைக் கொண்ட வகையிலும் முதற்காப்பியந்தான்! அதனாற்றான், ‘உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றார் ஆசிரியர் இளங்கோ.
காணல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை ஆகியவை சந்த வேறுபாடுகளோடு கூடிய இசைப் பாடல்களாகும். தமிழ் மொழிக்கு இசையும் சொந்தமென்று சொல்ல சங்க இலக்கியங்களிலே சான்று வெள்ளத்தில் மறைந்தொழிய விட்டிருந்தால் தமிழுக்கும் இசைக்கும் தொடர்பு காட்ட வேறு நூல் எது?
‘இதோ; பரிபாடல்’ என்று சொல்லலாம். அதிலே பாட்டுக்குப் பண் சொல்லப்பட்டிருப்பினும் பாடும் வழக்க மில்லையே!
‘தமிழில் இசைப்பாடல்கள் உண்டா?’ என்று கேட்கும் ‘கர்நாடகங்களு’க்கு, ‘உண்டு’ என்று சொல்ல சிலம்புதானே கை கொடுக்கிறது.
இதனாலும் தமிழிடத்துப் பற்றுள்ள நான் சிலப்பதி காரத்தைக் காதலித்தேன். இந்தக் காதல் காரணமாகக் சிவஞானம் எனப் பெயர் பெற்றுள்ள யான் இசைஞானம் பெறவில்லையே என்ற குறை கூட, எனக்கு உண்டு.
சிலப்பதிகாரத்தை சேர முனி இளங்கோ இசைக்கும் இடம் தந்தினால்லையால் தமிழுக்கும் இசைக்கும் தொடர் பில்லையென்பதோடு, தேசியத்தோடு தொடர்புடைய தமிழ்க் காப்பியம் ஏது? என்று கேட்டு உலகம் எள்ளி நகையாட இடம் ஏற்பட்டிருக்கும்.
நான் சிலப்பதிகாரப் பிரசாரத்திலீடுபட்டது, ஒரு சுவையான செய்தியாகும். சிலப்பதிகாரத்தை படித்துப் புலமை பெற்றதோடு நான் நின்றிருக்கலாம். மற்ற புலவர்களைப் போல் ஊர்தோறும் சிலப்பதிகார மாநாடு நடத்தி அந்தக் காப்பியஞ் சொல்லும் சுவையான கதையை மக்கள் மத்தியில் பரப்புவதை ஏதோ பிறவிக் கடனைப் போலக் கருதியிருக்க வேண்டியதில்லையல்லவா!
நேரமேது? அரசியலும் சிலம்பும்
நான் அரசியல் பிரசாரகன். நான் என்றைக்கு காங்கிரஸ் மேடை யேறினேனோ, அன்று தொட்டு முதல் வரிசைப் பிரசாரகர்களிலொருவனாகி விட்டேன். ஆகவே, இலக்கியப் பிரசாரத்திலீடுபட நேரமேது?
கண்ணகி மதுரையில் நிகழ்த்திய அரசியல் புரட்சியை எடுத்துச் சொல்லி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற் கெதிரான புரட்சியில் ஈடுபட தமிழ்ப் பெண்களைத் தூண்டி விட நினைத்தேன் என்று முன்பே சொன்னேனென்றாலும் அதற்கு அவசியமில்லாமல் நான் சிலப்பதிகாரம் பயின்ற மூன்றாண்டுகளுக்குள் பிரிட்டிஷ் பேரரசு வெளியேறி விட்டது. ஆகவே அதற்காகவும் நான் சிலப்பதிகாரப் பிரசாரத்தில் ஈடுபட அவசியமில்லாமற் போய்விட்டது.
நான் சிலப்பதிகாரப் பிரசாரத்திலீடுபடத் தொடங்கியதும் புலவர் பெருமக்கள் என்னை வரவேற்றுக் கை கொடுக்கவில்லை. அப்படி வரவேற்றவர்கள் பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை, பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு. வரதராசனார் ஆகிய மூவர்தான்! எதிர்த்தவர்களை- நான் பழகு தமிழிலே மேடையில் பேசுவதைக் கேலிசெய்த புலவர்கள் பெயர்களை- சொல்ல வேண்டிய அவசியமில்லை.
புலவர்களின் ஏளனம்! பாணியை மாற்றினேன்
சிலப்பதிகாரம் போன்ற பேரிலக்கியங்களைப் பேசுகிற பாணியே – ‘பாஷை’யே வேறு என்று புலவர்கள் முடிவு கட்டிக் கொண்டிருந்தனர், பல நூற்றாண்டுகளாக! அதாவது அகப்பொருள்- புறப்பொருள், ஐந்திணை- நெய்தல், குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை; தலைவன்- தலைவி; வேனிற் காலம் கூதிர்காலம், கார்காலம் என்றெல்லாம் தொல்காப்பியர் சொன்ன கலைச் சொற்களையே மேடைப் பேச்சிலும் பயன்படுத்தினர் புலவர் பெருமக்கள். அந்த மரபுக்கு மாறாக, பாமரர்களுக்குப் புரிகின்ற பழகு தமிழிலே நான் பேசியது புலமையின்மையின் விளைவு என்று புலவர்களில் பெரும்பாலோர் கருதினார்கள்.
கட்சி அரசியல் வாதிகளும் நான் தேவையற்ற வேலையை மேற்கொண்டுள்ளதாகக் கருதி, என்னை நிந்தித்தார்கள். ‘காங்கிரஸ்காரர்களுக்கு சிலப்பதிகாரப் பிரசாரம் தேவையா?’ என்று வினா எழுப்பினார்கள்.
கதையும் நாடகமும்
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘கோவலன் நாடகமும்’ சிலப்பதிகாரக் காப்பிய நாயகியாம் கண்ணகி- மாதவி ஆகியோரையும், அவர்கள் நாயகனான கோவலனையும் இழிவுபடுத்துவதாகவே இருந்தன. ஆகவே, ‘கதை’யை யும் ‘நாடகத்தை’யும் மக்கள் முற்றிலும் மறக்கும்படிச் செய்யும் கடமையையும் மேற்கொண்டேன். கதையும் நாடகமும் அறிமுகப்படுத்திய பாணியிலான சிலப்பதிகாரக் கதையைக் கொண்டு தமிழர் பெருமை பெற முடியாது.
‘கோவலன் கதை’ நளவெண்பா படைத்த புகழேந்தி என்ற பெரும் புலவர் பெயரால் மக்கள் மத்தியில் நடமாட விடப்பட்டதால் மக்கள்-ஏன், புலவர்களிலே சிலரும் அதை மதித்தனர்.
கோவலன் நாடகத்திலே சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள கல்வியறியற்ற சாமான்யர்கள் ரசிக்கத் தக்க காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தமையாலும் அக்காலத்தில் நாடக மேடையில் செல்வாக்குப் பெற்றிருந்த ஓரடி சந்தங் களால் பாடல்களும் சேர்க்கப்பட்டிருந்தமையாலும் நாடகம் மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
கலைமகள் விலைமகளானாள்!
சிலப்பதிகார மாதவியாளை ஒழுக்கத்திற் சிறந்தவளாக, ஒருத்தனையே காதலித்து அவனோடு வாழ்ந்து அவன் மதுரையில் கொலையுண்ட பின்னர் புத்த மதத்தில் சேர்ந்து துறவியானவளாக இளங்கோ கூறியுள்ளார்.
ஆனால், கோவலன் நாடகத்திலோ இந்த நூற்றாண்டின் முற்பாதிக் காலத்திலும் அதற்கு முன்னும் வாழ்ந்த விலை மாதர்களை விடவும் மோசமானவளாக நாடகாசிரியர்கள் படைத்திருந்தனர்.
கோவலனை படுமோசமான காமுகனாக, பத்தினிக்குத் துரோகம் செய்து பரத்தைக்கு அடிமைப்பட்ட கீழ்த்தர மகனாகப் படைத்தனர்.
‘கதை’யிலும் நாடகத்திலும் சொல்லப்பட்ட பாத்தி ரங்களோடு சிலப்பதிகாரப் பாத்திரங்களை ஒப்பிட்டுக் காட்டவும் நாணத்தக்க வகையில் அவை தாழ்ந்த தரத்திலிருந்தன. ஆகவே, அசல் சிலப்பதிகாரத்தை மட்டுமே தமிழருடைய பண்டைய பெருமைக்கேற்ப மக்களிடையில் பிரசாரம் செய்யும் பணியை மேற்கொண்டேன்.
எங்கெங்கும் சிலம்பொலி!
இதற்காக தமிழ் நாடெங்கணுமுள்ள உயர்நிலைப் பள்ளிகள் – கல்லூரிகள்-பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றி லெல்லாம் சிலப்பதிகாரம் பற்றி மாணவ – மாணவி யரிடையில் பேசிப் பிரசாரம் செய்தேன்.
திருமண இல்லங்களில் மணமக்களை வாழ்த்திப் பேசும் போதெல்லாம் சிலப்பதிகாரப் பிரசாரத்தை மேற்கொண்டேன். எனது இல்லத்திலும் இலக்கிய மன்றங்கள் சிலவற்றிலும் வகுப்புகள் நடத்தினேன்.
கை கொடுத்த புலவர்கள்!
நான் அணுகிய முறையிலேயே சிலப்பதிகாரத்தை எனது பாணியிலேயே பிற்காலத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ம. ரா. போ. குருசாமி, டாக்டர் ந.சஞ்சீவி, புலவர் கீரன் ஆகியோரும் கல்லூரி வகுப்புகளிலும், பொது விழாக்களிலும், மாணவர் மன்றங்களிலும் சிலப்பதிகாரப் பிரசாரத்தில் ஈடுபட்டு எனக்குக் கைகொடுத்தனர். இவர்களில் சிலர் சிலப்பதிகாரத்தை யொட்டி ஆய்வு நூல்கள் எழுதியும் வெளியிட்டுள்ளனர்.
கவி கா. மு. ஷெரிப் தமது ‘தமிழ் முழக்கம்’ வார இதழில் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார். சிலப்பதிகாரத்தை யொட்டி இளங்கோ-கண்ணகி- மாதவி என்னும் பெயர்களில் தமிழில் நூல்கள் எழுதியும் அவைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் டில்லி சாகித்திய அகடமி வாயிலாக வெளியிட்டும் டாக்டர் மு. வரத ராசனார் அருந்தொண்டு புரிந்தார். அவருக்கு தமிழரசுக் கழகப் பிரசார மேடை பெரிதும் பயன்பட்டது.
இனி, கோவலன் கதை- கோவலன் நாடகம் ஆகியவை இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரத்தோடு மாறுபடும் இடங்களை அறிய முயல்வோம்.
தலைமை யாருக்கு?
கோவலன் கதை-கோவலன் நாடகம் இரண்டுமே நூற்பெயரளவில்கூட இளங்கோ படைத்த சிலப்பதிகாரம் என்னும் காப்பியப் பண்பிற்கு எதிரானவையாகும். இளங்கோ, கண்ணகியையே தமது காப்பியத்தின் நாயகி யாக்கியுள்ளார். கண்ணகியை வஞ்சிக் காண்டத்தின் இறுதியிலுள்ள காட்சிக் கதையில் தாமும் வழிபடப் போகி றாராதலால் கண்ணகி காப்பியம் எனப் பெயர் சொல்லாமல் பக்தி மிகுதியால் அவளது காற்சிலம்பின் பெயரையே காப்பியத்திற்குச் சூட்டக் கருதி சிலப்பதிகாரம் என்றார்.
ஆனால், வடமொழி வழக்குப்படி இராமன் கதையைக் கூறும் காப்பியத்திற்கு இராமாயணம் என்று வால்மீகி பெயர் சூட்டினாற் போல, கோவலன் கதையென்றும் ‘கோவலன் நாடகம்’ என்றும் பெயரிட்டனர். இதனாலும் இந்த கதையாசிரியரும் நாடகாசிரியரும் பண்பிலே இளங்கோவுக்கு நெடுந் தொலைவிலுள்ளனர் என்பது புலப் படும்.
புகழேந்தியின் பெயரால் உலவ விடப்பட்டுள்ள “கோவலன் கதை” யானது நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவரியற்றியதன்று என்பது புலவருலகத்தின் ஒருமித்த கருத்தாகும். அல்லியரசாணியமாலை, புலந்திரன் கதை, பவளக்கொடி ஆகிய நூல்களனைத்துக்கும் அம்மானை இலக்கியம் என்னும் பெயர் பொதுப்படையாக வழங்கப்படுகிறது.
நளவெண்பா மிகச் சிறந்த இலக்கியமாகும். அதனால் “வெண்பாவில் புகழேந்தி” என்னும் சிறப்பு பெயர் புகழேந் திக்குரியதாயிற்று. நளவெண்பாவைப் படித்து விட்டு கோவலன் கதையைப் படித்துப் பார்த்தால் பின்னது இரண்டாந்தரமான கவிஞர் இயற்றிய தென்பது புலனாகும்.
திரைப்படங்கள் படுத்தியபாடு
திரைப்படக்காரர்களின் கவனம் சிலப்பதிகாரக் கதையின் பக்கம் முதன் முதலில் திரும்பியது நானறிந்த வரை 1934-லாகும். அதன்பின் இரண்டாவது படம் 1946-ல் வெளியானது. எனது சிலப்பதிகாரப் பிரச்சாரத்தின் விளைவாக 1966-ல் ஒரு படம் வெளியானது.
முதல்படம் ‘நவீன கோவலன்’ என்னும் பெயரைக் கொண்டது. இது, அநேகமாக புகழேந்தியின் ‘கோவலன் கதை’யையும் தவத்திரு சங்கரதாசரின் ‘கோவலன் சரித்திரம்’ என்னும் நாடக நூலையும் தழுவியதாகும். அதனால், அதைத் தயாரித்தவர்கள் வழக்கிலிருந்து தப்புவதற்காக ‘நவீன’ என்னும் சொல்லை அடைமொழியாகக் கொண்டு தயாரித்து திரையிட்டனர். அந்த நாளில் ‘டாக்கி’ என்ற ஆங்கிலப் பெயரிலும் ‘பேசும் படம்’ என்னும் தமிழ்ப் பெயரிலும்தான் திரைப்படங்கள் வெளியாகும்.
அப்போதுதான் பேசும்படம் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ‘நவீன கோவலன்’ படம் திரையிடப் பட்டது. அந்தப் படத்தில் கண்ணகியை விட மாதவிக்கே பிரதான்யம் தரப்பட்டதாக நினைவிருக்கிறது. ‘மாதவி’ என்னும் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு இளங்கோ காட்டிய ஒழுக்கத்திலிருந்து அவளை விடுவித்து படம் எடுக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த விலைமாதரின் வாழ்க்கையை மேற்கொண்ட மாதவியையே காட்டினர். அந்தப் படம் வெளிவந்த காலத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டமோ, விபசாரத் தடைச் சட்டமோ பிறந்திருக்கவில்லையாதலால் நவீன கோவலன் வெற்றி நடை போட்டது!
‘நவீன கோவலன்‘
அக்காலத்தில் புகழ்மிக்க திரைப்பட நட்சத்திரமாக விளங்கிய திருமதி டி. பி. ராசலட்சுமி மாதவியாக நடித்தார். கோவலனாக வி. ஏ. செல்லப்பா நடித்தார். அந்நாளில் விலைமாதர் வீடுகளில் ‘மாமா’ என்னும் பெயரில் விபசாரத் தொழிலுக்குத் துணைபுரிவோர் இருப்பதுண்டு. அந்த மாமாதான் கதையில் காமடியன் பாத்திரம்.
இந்த ‘நவீன கோவலன்’ படம் பற்றி ‘ஆனந்த. விகடன்’ 21-10-34 இதழில் ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி ‘கர்நாடகம்’ என்னும் புனைப்பெயரில் எழுதியிருந்த நீண்ட விமர்சனத்தில் படத்திற்கும் இளங்கோவின் சிலப் பதிகாரக் கதைக்குமுள்ள வேற்றுமையைக் காட்டும் பகுதி களை மட்டும் பார்ப்போம்:
“கோவலன்” எவ்வாறு மரணமடைந்தான் என்பதைப் பற்றி கதை என்ன சொல்லுகிறது ஞாபகமிருக்கிறதா? சிலம்பு திருடிய குற்றத்திற்காக பாண்டியன் அவனை வெட்டுப் பாறையில் வைத்து வெட்டி விடும்படி உத்தர விடுகிறான். கொலையாளிகள் அவ்வாறே செய்துவிடுகிறார்கள். இது சாதாரண காரியந்தான். அதிசயம் ஒன்றுமில்லை.
ஆனால் கெயிட்டி தியேட்டரில் நான் பார்த்த கோவலன் டாக்கியில் இந்த இடத்தில் ஒரு மாறுதல் செய்திருக்கிறார்கள். கொலையாளிகள் கோவலனை வெட்டப் பார்க்கிறார்கள். ஆனால், எவ்வளவு முயன்றும் முடியவில்லை. கத்திகள் மேலேயே நின்று விடுகின்றன.- கோவலன் கழுத்தில் விழ மறுத்து விடுகின்றன.
‘அப்போது கோவலன் ‘அடா கொலையாளிகளா! என்னை யாராலும் கொல்ல முடியாது. என்னை நானே மாய்த்துக் கொள்ளுகிறேன் பாருங்களடா!’ என்று வீம்பு கூறி ஒரு கொலையாளியிடமிருந்து ஒரு கட்டாரியை வாங்கிக் குத்திக் கொண்டு உயிர் விடுகிறான்.’
‘கர்நாடகம்‘ விமர்சனம்
இது, ‘கர்நாடகம்’ கூறுவது போல சிலப்பதிகாரத்திலில்லாத செய்தி! ‘வெள்வாளெறிந்தனன் விலங்கூடறுந்தது!” என்கிறார் இளங்கோ.
திரைப்பட கதாசிரியர் கண்ணகியின் கற்புக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்து கற்பரசியின் கணவனா தலால் வெட்டுப்படவில்லை யென்று காட்டினார்.
சிலப்பதிகாரக் கதையில் கொலைக் களத்தில் கோவலன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அரசன் அனுப்பிய காவலர்களிடம் கோவலனைக் காட்டி, ‘அரசியின் சிலம்பைத் திருடிய கள்வன் இவன்தான்’ என்று பொற்கொல்லன் கூறியதுமே தன்மானியான கோவலனின் உயிர் போய் விட்டது. அவனது உடம்பைத்தான் காவலர்களில் ஒருவன் வெட்டினான்’ என்கிறார் இளங்கோ வடிகள்.
நாடகத்திலே, கோவலன் காவலர்கள் தன்னை வெட்டுவதற்கு முன்பு தன் சரித்திர முழுவதையும் கூறும் நீண்ட பாட்டொன்றைப் பாடுவான். அதிலே, மாசாத்துவான் மகனாகப் பிறந்தற் கழுவனோ! எனத் தொடங்கி, அதற்காக அழுவனோ இதற்காக அழுவனோ?-என்று நீண்ட ஒப்பாரிப் பாடலைப் பாடுவான். அரசன் அனுப்பிய காவலர், பாட்டு முழுவதையும் கேட்டு ரசித்து விட்டு அப்புறம் வெட்டுவார்கள்.
‘கர்நாடகம்’ மேலே கூறுகிறார் பார்ப்போம் :
“எதற்காக இப்படி இவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்பது முதலில் எனக்கு விளங்கவேயில்லை. ‘அட அசடே’ சற்று நேரம் சும்மாயிருந்தால் கொலையாளிகள் ஓடிப் போய் அரசனிடம் சொல்லுவார்கள்; குருட்டு நம்பிக்கைகளின் பொக்கிஷமான அரசன் இதில் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறதென்று அறிந்து விடுதலை செய்து விடுவானே! என்று நினைத்தேன். பிறகு யோசித்ததில் உண்மை விளங்கிற்று.’
மாற்று யோசனை
விளங்கிய உண்மையை மேலே விவரிக்கிறார் ‘கல்கி’ யார். அதையும் பார்ப்போம் :
“கோவலனுடைய நிலையை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பெண்டாட்டிக் காரனுடைய திண்டாட்டத்தைப் பற்றி நாமெல்லோரும் பரிதாபப்பட்டிருக்கிறோம்? அதைவிட ஓர் மனைவியும் ஓர் ஆசை நாயகியும் உள்ளவனுடைய நிலை எவ்வளவு சோக ரசம் பொருந்தியது? மனமோ மாதவியின்பால் செல்கிறது. கடமையோ கண்ணகியின் பால் இழுக்கிறது. இரண்டு பேரும் பொய்யிலும் சூழ்ச்சியிலும் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். இவள், ‘ஐயோ! செத்துப் போய்விட்டேன் வந்து பார்த்துவிட்டுப் போங்கள்’ என்று கடிதம் எழுதுகிறாள். அவளோ ‘பாம்பு கடித்துவிட்டது’ செத்துக் கொண்டிருக்கிறேன். உடனே வாருங்கள்’ என்று சொல்லி அனுப்புகிறாள். அந்தோ இதென்ன வாழ்வு! என்று வருந்தியிருக்க வேண்டும். எனவே பாண்டியனுடைய உத்தரவைக் கேட்டதும் ‘நல்ல வேளை’ உயிரைவிட்டு இந்தத் தொல்லையிலிருந்து தப்பலாம், என்று அவன் சந்தோஷப்பட்டிருப்பான். ஆகவேதான் கொலையாளியின் கத்தி கழுத்தில் விழ மறுத்ததும் அத்தகைய அரிய சந்தர்ப்பத்தைக் கைநழுவ விடக்கூடாதென்று தானே குத்திக் கொண்டு சாகிறாள்.
‘கதைக்குக் கால் இல்லை! என்பார்களே, அது கோவலன் சரித்திரத்துக்குத்தான் ஏற்பட்டது என்று தோன்றும். இந்தக் கதைக்குக் காலைப் பார்க்க வேண்டுமானால் பூர்வ ஜென்மத்துக்குப் போகவேண்டும். கதையே அப்படியென்றால் இந்த டாக்கிக்காரர்கள் கதையின் மூக்கு காது இவைகளைக்கூடச் சிதைத்துவிட்டுப் பொய் மூக்கு பொய்க் காது வைத்திருக்கிறார்கள்.”
காது, மூக்கு மட்டுமல்லாமல், ‘கோவலன்’ தலை யையும் மொட்டை அடித்து அவன் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி மாதவி விரட்டி விடுகிறாள் கண்ணகி வீட்டுக்கு. ஒன்றை விளக்கியாக வேண்டும். சிறந்த இலக்கிய வாதியான ‘கர்நாடகம்’ என்னும் புனைபெயர் கொண்ட கல்கியார் மாதவியை மாதகி என்றார். ஆம்; கோவலன் நாடகத்தில் ‘வி’_’கி’யாகிறது.
முரண்பாடு
அந்தக் காலத்தில் காட்சிக்கும் கதைக்கும் தொடர் பில்லாமலிருப்பதுமுண்டு. நவீன கோவலன் படத்திலும் அப்படி ஒரு சுவையான காட்சியை ‘கர்நாடகம்’ கூறுகிறார்:
“கோவலனாக நடித்த ஸ்ரீமான் வி. ஏ. செல்லப்பா அவர்கள் சங்கீத வித்வான் என்று விளம்பரத்தில் போட் டிருப்பது சரியாக இருக்கலாம். இதை நிரூபிப்பதற்காகவே அவர் கோவலன்- மாதவி காதல் சீன்களுக்கு நடுவில் ‘சிவசிவசிவ என ராதா என்னும் தியாகையர் கிருதி பாடுகிறார் போலும்.
கடந்த நூற்றாண்டில் தியாகையர் தெலுங்கு மொழியில் புனைந்த பாடலை 1800 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிலப்பதிகாரக் கதையில் வரும் கோவலனும் பாடுகிறா னென்றால் தியாகையர் கீர்த்தனை எந்த அளவுக்கு தமிழர் மீது ஆதிக்கம் செலுத்திவருகிறதென்பதை அறிய லாந்தானே! ‘நவீன கோவலன்’ படத்திலே தியாகையரின் தெலுங்குப் பாடலைப் பாடுவதைக் கூட அக்காலத்து மக்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்களென்றால், இந்த நூற்றாண்டில் தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்த ராசா சர். அண்ணாமலை செட்டியாரை எவ்வளவு போற்றினாலும் தகுந்தானே!
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட புராண நாடகத்தில் தோன்றும் பாத்திரங்களின் ஒப்பனைக்கும் கதைக்கும் பொருத்தமில்லாமலிருப்பதுமுண்டு. அப்படி ‘நவீன கோவலன்’ திரைப் படத்தில் தோன்றிய மாதவியின் மாமாவின் கதைக்குப் பொருத்தமற்ற ஒரு ஒப்பனைக் கோலம் பற்றியும் ‘கர்நாடகம்’ சுவைபடச் சொல்லு கிறார். அது வருமாறு:
‘மாமா‘ படுத்திய பாடு
“நவீன கோவலன் டாக்கியில் மாதவியின் மாமாவாக நடிக்கிறவரிடமிருந்து அறிய வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. ‘மூக்குக் கண்ணாடி முதன் முதல் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது?’ என்று விஞ்ஞான நிபுணர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மாது ஸ்ரீமாதவியம்மாளின் மாமாவாய் இருக்கும் பாக்கியம் பெற்ற அந்த மரம புருஷனே மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாரென்றால் சிலப்பதிகார காலத்துக்கு முன்னமேயே அது சர்வ சாதாரணமாயிருக்கிற தென்று தெரிகிறதல்லவா?”
‘கர்நாடகம்’ என்னும் புனைப் பெயரில் ‘நவீன கோவலன்’ பற்றி விமர்சனம் எழுதியவர் தமிழரிடையில் செல்வாக்கோடு உலவி வரும் ‘கல்கி’ வார இதழைத் தோற்றுவித்த திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான்.
1946-ல் சிலப்பதிகாரக் கதை சம்பந்தமான இரண்டாவது திரைப்படம் வெளியானது. அது ‘நவீன கோவலன்’ போலல்லாமல் சுமாராக இளங்கோ படைத்த சிலப்பதிகாரத்தோடு தொடர்புடையதாகவே இருந்த தெனலாம். இதற்கு நான் சிலப்பதிகாரப் பிரச்சாரத்தைத் தொடங்கியபின் வந்த படம் என்பது காரணமாகலாம்.
“நவீன கோவலன்” திரைப்படம் வெளியான பின் 12 ஆண்டுகள் — ஆம்; ஒரு மாமங்கம்- கடந்த “கண்ணகி” என்னும் பெயரிலே சிலப்பதிகாரத்தை யொட்டிய இரண்டாவது திரைப்படம் வெளிவந்தது.
இதற்கு, திரு. இளங்கோவன் என்னும் புகழ்மிக்க எழுத்தாளர் திரைப்படக் கதை-வசனம் எழுதியிருந்தார். இது, பெரும்பாலும் சிலப்பதிகாரத்தையொட்டியே தயாரிக்கப்பட்டிருந்தது. காரணம் ஆசிரியர் இலக்கிய ஞானமுடையவராக இருந்தது தான். “நவீன கோவலன்” படத்தைப் போலல்லாமல் கதையிலே கண்ணகிதான் பிரதான பாத்திரம். இந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
திருமதி யூ.ஆர். ஜீவரத்தினம் கவுந்தியடிகள் பாத்தி ஈரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருந்தார்.
கண்ணாம்பாளின் நடிப்புத் திறன்
பிரபல நட்சத்திர நடிகையான கண்ணாம்பாள் -கண்ணகியாக நடித்து படத்திற்குப் புகழ் தேடினார். கோவலனாக திரைப்பட உலகில் புகழொளி வீசிய திரு.பி. யூ. சின்னப்பா நடித்தார்.
திரு. சோமுவை உரிமையாளராகக் கொண்டிருந்த ஜுபிடர் பிக்சர்சின் தயாரிப்பு இது.
கண்ணகி-கோவலன் பாத்திரங்களை ஏற்றவர்கள் இருவருமே அந்தப் பாத்திரங்களாகவே மாறி அற்புதமாக நடித்தார்கள்.
இந்தப் படத்திலும் சிலப்பதிகாரத்தில் இயற்பெயர் சொல்லப்படாத பொற்கொல்லன் “இஞ்சிப்பத்தன்” என்னும் பெயரில் தோன்றி பொற்கொல்லர் சாதிக்கே இழுக்கு தேடும் வகையில் நடித்ததாக நினைவிருக்கிறது. இந்தப் பாத்திரத்தைக் கலைவாணர் ஏற்றிருந்தார். ‘பத்தர்’ என்னும் சொல் நகைகள் தயாரிக்கும் ஆசாரி சாதிக்குரியதாகி விட்டதால் அந்தச் சாதியார் திரைப் படத்தையே தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். புலவர் சுப்பிரமணிய ஆச்சாரியார், சிலப்பதிகாரத்தையும் அதன் ஆசிரியர் இளங்கோவடிகளையும் கடுமையாகத் தாக்கி நூல் எழுதியது இந்தச் சந்தர்ப்பத்தில்தான்.
கொலைக் களத்தில் நின்று கண்ணகி பாண்டியனை வழி வாங்கப் போவதாக சபதம் செய்யும் காட்சியிலே நடிகை கண்ணாம்பாள் அற்புதமாக நடித்தது என் மனதைக் கவர்ந்தது.
‘மணிமேகலை‘ மதம் மாறினாள்
இதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து “மணிமேகலை” என்னும் படம் திரையிடப்பட்டது. இதற்கும் கதை- வசனம் எழுதியவர் திரு. இளங்கோவன்தான். மணிமேகலை புத்தமதத் துறவி. தமிழ்நாட்டின் வரலாற்றிலே சைவ-புத்த மதங்களிடையில் நடந்த போர் அரசியல் கலந்த சரித்திரமாகும்.
இந்தப் போரில் சைவம் வெற்றியடைந்து பெளத்தம் தோல்வியுற்ற தென்பது வரலாறு. இந்த உண்மையை நினைவில் கொள்ளாமல் மணிமேகலைப் பாத்திரத்தை நெற்றி நிறைய திருநீறணிந்த பெண் சந்நியாசியாக்கியிருந்தார் கதாசிரியர்.
திரைப்படம் வெளியான அன்று காலைதான் எனக்காக தனியாக போட்டுக் காட்டப்பட்டது. அப்போது மணிமேகலையை சைவத் துறவியாக்கியுள்ள தவறை படத் தயாரிப்பாளருக்கும் கதை-வசனகர்த்தாவுக்கும் எடுத்துக் காட்டினேன். நான் கூறியபடி மாறுதல்கள் செய்ய அவகாசமில்லாததால் சைவ சந்நியாசினியாகவே மணிமேகலை தமிழகத்தில் உலாச் சென்றாள். பொது மக்களோ அவர்களில் மதவாதிகளோ கூட ‘மணிமேகலை’ மதமாற்றப்பட்டு திரையிடப்பட்டதை ஆட்சேபிக்க வில்லை. சிலப்பதிகாரக் கோவலன் போன நூற்றாண்டில் வாழ்ந்த தியாகையர் தெலுங்கில் புனைந்த பாடலைப் பாடியதையே சகித்துக் கொண்டவர்கள்தானே தமிழர்கள்!
1966-ல் மூன்றாவதாக சிலப்பதிகாரக் கதை திரைப் படமாக்கப்பட்டது. அதன் பெயர் “பூம்புகார்” என்பதாகும். நான் சிலப்பதிகாரப் பிரசாரத்திலீடுபடுவதற்கு முன்னர் ‘பூம்புகார்’ என்ற பெயர் சாமான்யர்களிடையில் வழக்கத்திலில்லை. ‘காவிரிப்பூம்பட்டினம்’ என்றுதான் அழைக்கிறார்கள். பூம்புகாரை கடல் விழுங்கிவிட்டதும் அதற்கு ஒரு காரணமாகும்.
ஆயினும் சிலப்பதிகாரக் கதை சாமான்யர்களிடை இளங்கோ படைத்தபடி வழக்கத்திற்கு வந்து விட்டதால் பூம்புகார் என்னும் இலக்கிய ஏட்டளவிலுள்ள பெயரும் வழக்கத்தில் வந்துவிட்டது. அதனால் அந்தப் பெயரால் திரைப்படம் எடுக்கும் துணிவும் திரைப்படத் தயாரிப்பாளருக்கு ஏற்படலானது.
கலைஞரின், ‘பூம்புகார்‘
இந்தப் படத்திற்கு கதை- வசனமெழுதியவர் நாடறிந்த அரசியல் தலைவரும் என் அரிய நண்பருமான கலைஞர் மு. கருணாநிதியாவார். அதிலே கோவலனாக திரைப்பட நட்சத்திர நடிகர் எஸ். எஸ். இராசேந்திரனும் கண்ணகியாக திரைப்பட நடிகை திருமதி விஜயகுமாரியும் நடித்தனர். சமணத் துறவியான கவுந்தியடிகளாக நாடக நட்சத்திரம் கே. பி. சுந்தராம்பாள் நடித்தார்.
கலைஞரும் இளங்கோவடிகளிடமிருந்து சில இடங்களில் வேறுபட்டு சிலப்பதிகாரக் கதையில் மாறுபாடுகள் செய்திருந்தார்.
அவற்றுள் கண்ணகி தானே விரும்பி தன் கணவனான கோவலனை நடனபரத்தையான மாதவியின் இல்லத்திற்கு அனுப்பினாளென்பதும், சிலம்பைத் திருடியவன் பொற் கொல்லன் என்பதற்கு மாறாக பாண்டி வேந்தனின் அமைச்சர்களுள் ஒருவன் என்பதும் முக்கியமானவை யாகும். பொற்கொல்லர் சாதியைக் காப்பாற்ற இந்த மாறுதல் செய்ததாகக் கலைஞர் சமாதானஞ் சொன்னார். இந்தப் படத்தைத் தயாரித்த போது அவர் பிற்காலத்தில் முதல் மந்திரியாக வரப் போகிராரென்பதை நினைத்துப் பார்க்கவில்லை.
பத்தினி யொருத்தி தானே விரும்பி தன் கணவனை பரத்தையின்பம் துய்க்க அனுமதிப்பது வடமொழி இலக்கியங்களிலுண்டு. ‘திராவிட பாஷை’யில் சொன்னால் அது ஆரியநாகரிகந்தான்.
அருளாளர் சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில் ஒரு இரவில் பரத்தை இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை பத்தினி வீட்டிற்கு வந்தவன் தன் மனைவியைத் தீண்ட முயன்றபோது ‘நீர் எம்மைத்- தீண்டுவீராயின், திருநீலகண்டம்’ என்கிறாள் பத்தினி.
வடமொழி கணவனிருக்க மற்றொருவனிடம் கற்பை விற்றவளை ‘விபசாரி’ என்கிறது. ஆனால் மனைவியிருக்க பரத்தையின்பம் துய்த்தவனைப் பழித்துரைக்கச் சொல்லே யில்லையாம்.
தமிழின் திறம்
தமிழில் ஒழுக்கங்கெட்ட பெண்ணை ‘பரத்தை’ என்றும், அதுபோல ஒழுக்கங்கெட்ட ஆணை ‘பரதன்’ என்று சொல்லலாம். பாரதி சொன்னது போல, கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாகும்.
திருக்குறளிலும் பரத்தையின்பம் துய்த்து வந்த கணவனை வெறுத்து ‘நண்ணேன் பரத்த நின்மார்பு’ என்கிறாள் மனைவி.
ஆரிய நாகரிகக் கலப்பிலிருந்து திராவிடரை விடுவிக்கும் கொள்கையுடைய திராவிடப் பேரியக்கத்தின் தலைவர்களிலொருவரான கலைஞர் கருணாநிதி கண்ணகியை ஆரிய நாகரிகப்படி காட்டும் வகையில் ‘பூம்புகார்’ படத்தை எடுத்தது புரிந்து கொள்ள முடியாத புதிர்தான்.
‘பூம்புகார்’ திரையிடப்படும் நாளன்று காலைபத்திரிகையாளருக்கெனக் காட்டப்பட்ட போது நானும் கலைஞரால் அழைக்கப்பட்டு படத்தைப் பார்த்ததோடு அவருடைய வற்புறுத்தலின் பேரில் படத்தை விமர்சித்துப் பேசவும் செய்தேன். அப்போது சிலப்பதிகாரத்திலிருந்து வேறுபடும் இடங்களைப் பற்றி எனது அதிருப்தியையும் வெளியிட்டேன். ஆயினும் சிலப்பதிகாரக் கதையை மக்கள் மத்தியில் பரப்புவதில் எனக்குள்ள ஆர்வத்தால் ‘பூம்புகார்’ படத்தை வரவேற்பதாகக் கூறினேன். என் பேச்சு சில நாளிதழ்களில் பிரமாதமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதற்காக நான் அரசியல் ரீதியில் கலைஞரை வெறுப்பவர்களால் கண்டிக்கப்பட்டேன்.
சந்தியால் சங்கடம்
சிலப்பதிகாரத்தை ஆசிரியர் உதவியின்றி தானாக முயன்று அரும்பதவுரை-அடியார்க்கு நல்லாருரைகளின் துணைகொண்டு படித்த போது வரிக்கு வரி-வார்த்தைக்கு வார்த்தை சந்திப்புணர்ச்சிகள் என்னைச் சங்கடப் படுத்தின.
உரையாசிரியர்களின் நடையிலும் மூலத்திலுள்ளதைப் போன்றே சந்திப்புணர்ச்சிகளுண்டாதலால் சாமான்யர்கள் படிக்க சந்திபிரித்துப் பதிப்பித்த நூல்கள் தேவைப்படுவதை உணர்ந்தேன். நான் எப்படியோ சிலம்பைப் படித்துப் புலமை பெற்று விட்டேனென்றாலும், என்னைப் போன்று பிறர் சங்கடப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால், சந்தி பிரித்த பதிப்பொன்று சிலப்பதிகாரத் திற்குத் தேவைப்படுவதை உணர்ந்தேன்.
சென்னை வாசியான திரு. எஸ். ராஜம் அவர்களால் நடத்தப்பட்டு வந்த ‘மர்ரே அண்டு கம்பெனி’யார் இந்தப் பணியை மேற்கொள்ள முன் வந்தனர். அவர்கள் இதில் என்னை விடவும் தீவிரங்காட்டி, சங்க இலக்கண – இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய அனைத்தையுமே மூல பாடங்களை சந்தி பிரித்து வெளியிட முன் வந்தனர். அதற்கெனத் தனியாக முர்ரே கம்பெனி நிதி ஒதுக்கிய தோடு, இந்தப் பணிக்கென புலவர் குழு ஒன்றையும் நிறுவியது. அவர்கள் திருவாளர்கள் பெ. நா. அப்புசாமி, வி. மு. சுப்பிரமணியம், அ. ச. ஞானசம்பந்தம், மு. சண்முகம் ஆகியோராவர். சிலப்பதிகாரத்தைச் சந்தி பிரிக்கும் பணியில் மட்டுமே அக்குழு எனது உதவியை கோரிப்பெற்றது.
முர்ரே வெளியீடு
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பி யங்களாதலால், 1959 ஏப்ரல் சித்திரா பௌர்ணமி நாளன்று இளங்கோ விழா நடத்தி அதில் இந்த இரட்டைக் காப்பியப் பதிப்புகள் வெளியிடப்பட்டன. அதற்கு முந்திய ஆண்டில் வந்த சித்ரா பௌர்ணமி நாளில்தான் தமிழரசுக் கழகம் அதிகாரபூர்வமாக சென்னை செயின்ட் மேரீஸ் மண்டபத்தில் இளங்கோ விழாவைக் கொண் டாடியது. 1956-ல் பழனியில் கூடிய தமிழரசுக் கழகப் பொதுக் குழுவில் சித்திரா பௌர்ணமி நாளில் ஆண்டு தோறும் இளங்கோ விழாவைக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.
இரண்டாவது விழாவாக 1957 ஏப்ரல் 14-ம் தேதி சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் மர்ரே அண்டு கம்பெனி சிலப்பதிகார-மணிமேகலைக் காப்பியங்களின் சந்தி பிரித்த பதிப்புகளை வெளியிட கழகம் ஒத்து ழைத்தது.
மர்ரே அண்டு கம்பெனியின் தலைமை நிர்வாகியான திரு. எஸ்.ராசம் தமிழ் மொழியிடத்து பற்றுடையவராதலால், பண்டைய தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து வெளி யிடுவதில் மிகுந்த உற்சாகம் பாராட்டினார். மலிவு பதிப்புகளாகவும் வெளியிட்டார்.
அந்த வெளியீட்டு விழாவுக்கு சென்னை வானொலியும் தமிழ் ஆங்கில நாளேடுகளும் நல்ல முறையில் விளம்பரம் தந்தன. இந்த விழாவில் நான் தலைமை வகித்தேன். உடல் நலக்குறைவு காரணமாக படுத்தபடியே தலைமையுரையை நிகழ்த்தினேன். இந்த விழாவில்தான் “நாட்டி லுள்ள மாரியம்மன் கோவில்களெல்லாம் கண்ணகி கோயில்களே” என்ற ஆராய்ச்சிக் கருத்தை வெளியிட்டேன். தமிழ் நாளேடாக வெளிவந்து கொண்டிருந்த “சுதேசமித்திரன்” எனது தலைமையுரையின் பெரும் பகுதியை வெளியிட்டுதவியது.
மர்ரே அண்டு கம்பெனியார் பன்னிரு திருமுறை, நாலாயிரப் பிரபந்தம் ஆகிய சமய இலக்கியங்களையும் சந்தி பிரித்து குறைந்த விலையில் மலிவுப் பதிப்புகளாக வெளியிட்டனர்.
தமிழ் இலக்கியங்கள் அவ்வளவுமே சாமான்ய மக்களிடத்துச் செல்ல வேண்டுமென்ற எனது புரட்சிகரமான கொள்கைக்கு மர்ரே அண்டு கம்பெனியார்தான் வெற்றி தந்தனர்.
மலிவுப் பதிப்பு
மலிவுப் பதிப்பாக வெளிவந்த சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வெளியீட்டு விழாவிலேயே ஒவ்வொன்றிலும் ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாக அறிந்தேன். இந்தப் பதிப்புகள் இளங்கோ தந்த குரவைப் பாடல்களை இசையரங்குகளில் பாட உதவி புரிந்தன. அதற்கு முன்பு இந்தப் பாடல்களை இசையரங்குகளில் பாடும் வழக்கம் இருந்ததில்லை.
சந்தி பிரிக்கப்பட்ட மலிவுப் பதிப்புகள் வெளியான பின்னருங்கூட வைணவர் மாநாடுகளிலும் சமய விழாக்- களிலும் ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் பாடி திருமால் – வழிபாடு நடத்தும் வழக்கம் நடைமுறைக்கு வரவில்லை. சிலப்பதிகாரம் சமண இலக்கியம் என்ற மயக்கம் போலும். சிலப்பதிகாரத்திலுள்ள இசைப் பாடல்களான கானல்வரி, கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை போன்றவைதான் தமிழின் மூலம் நமக்குக் கிடைக்கும் முதல் இசைப் பாடல் தொகுப்புகள். செய்யுட்களைச் சந்தி பிரிப்பது போல இசைப் பாடல்களைப் பிரித்துப் பதிப்பிப்பதை நான்கூட ஆதரிப்பதற்கில்லை. அது பாடுகின்ற இசை வல்லாரைச் சங்கடப்படுத்தி விடும்.
மு.வ.வின் முரண்பாடு
மர்ரே அண்டு கம்பெனியார் சிலப்பதிகாரம்- மணி மேகலைப் பதிப்புகளை வெளியிட்ட விழாவில் பேசிய பெரும் புலவர் ஒருவர் ‘இந்த மாதிரி சந்தி பிரித்து வெளி யிடும் பதிப்புக்களை பார்க்கவே என் மனம் சங்கடப் படுகிறது’ என்றார். அவரது கருத்தை மறுத்து நான் பேசியபோது, ‘இரண்டாயிர மாண்டுகளாக என் போன்ற சாமான்யர்களை சந்தியில் நிறுத்திச் சங்கடப்படுத்தியது போதாதா? சந்தி பிரித்து வெளியிட்டால்தானே சங்கதி புரிகிறது’ என்று கூறினேன். அவையில் பெருத்த கைதட்டல் ஆரவாரம் எழுந்தது. இதனால் சந்தி பிரித்து வெளியிடுவதை மக்கள் வரவேற்கிறார்கள் என்பது மேடையிலிருந்த புலவர்களுக்குப் புரிந்தது.
தமிழ் இலக்கியங்களில் மூலச் செய்யுட்களேயன்றி அரும்பதவுரை அடியாருக்கு நல்லாருரை போன்ற உரை களும் பழங்காலத் தமிழ் நடையாதலால் சாமான்யர்கள் புரிந்து கொள்வது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவற்றை சந்தி பிரித்து வெளியிடுவது பிழையாகும். புதிய உரைகள் வெளிவந்து கொண்டிருப்பதால் அவற்றின் துணை கொண்டு மூல நூலைப் படித்துப் பொருளுணரலாம்.
அஞ்சினேன்!
சிலப்பதிகாரத்தின் முகப்பிலுள்ள பதிகத்திற்கு உரைப்பாயிரம் என்னும் தலைப்பில் அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையை முதன் முதலாக நானே படித்துப் பொருள் உணர முயன்றபோது, இருளில் தவிப்பது போன்று இன்னலுற்றேன். அப்போது சிலப்பதிகார முழுவதற்குமே அடியார்க்கு நல்லார் இப்படித்தான் உரை எழுதியிருப்பாரோ என்று ஐயுற்று, ‘இந்தப் பிறவியில் நாம் சிலப்பதிகாரத்தை ஆசிரியர் துணையின்றி படித்தறிய முடியாது’ என்று கூட மலைத்துப் போனேன். பின்னர் ‘குணவாயிற் கோட்டத்தரசு துறந்திருந்த குடக்கோச்சேரலிளங்கோ வடிகட்கும் என வரும் முதலிரண்டு அடிகட்கு மட்டும் இலக்கணச் செறி வோடு உரை எழுதி முடிக்குங்கால், ‘இனிப் பதிகச் செய்யுளுள் முதலீரடியும் போல யாண்டும் விரியாதது உரை பெருகுமென்பதனைக் கருதியெனக் கொள்க’ என்று கூறி முடிக்கும் போது எனக்கு சற்று ஒளி பிறந்தது. பதிகத்தோடு மற்ற காதைகளையும் படித்தறியத் துணிவு பிறந்தது.
சிலப்பதிகாரத்திற்கும் புலவரல்லாதா ரிடையிலும் யானும் எனது தமிழரசுக் கழகமும் மதிப்பேற்படுத்திய போது திரு. வேங்கடசாமி நாட்டார், சர் ஆர். கே. சண் முகம் (புகார்க் காண்டத்திற்கு மட்டும்), புலியூர்க் கேசிகன் ஆகியோரின் உரை மக்களுக்குப் பெரிதும் பயன்படுபவையாக அமைந்தன.
உரையாசிரியர்
இவர்களில் புலியூர் கேசிகன் சிலப்பதிகாரம்-மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களுக்கேயன்றி சங்க இலக்கியங்கள் அனைத்துக்குமே தமிழில் ஓரளவு ஞானமுடையவர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் உரை எழுதி வெளியிட்டுள்ளார். அவரை தமிழுலகம் பாராட்டத் தவறியது பெரும் பாவமாகும்.
புலியூர் கேசிகனின் எளிய உரையும், மூலப்பாடம் சந்தி பிரித்து நிறுத்தல்-குறியீடுகளுடன் காதைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் துணைத் தலைப்பும் தந்து பிரசுரித்திருப்பது பாமரனையும் பண்டிதனாக்கும் தன்மையதாகும்.
சிலப்பதிகாரம் பற்றிய நாடகமொன்றை எழுதி, என் நெஞ்சகத்தே கோயில் கொண்டுள்ள வீரக் கண்ணகியைத் தமிழ் மக்களுக்குச் காட்சிப்படுத்த வேண்டுமென்ற ஆவல் நீண்ட காலமாக எனக்கு இருந்து வந்தது.
நினைவாகாத கனவு டி. கே. எஸ். சகோதரர் நாடகக் குழுவினரிலே ஒளவை டி. கே. சண்முகத்திடம் இதைக் கூறினேன். அவரும் எனது விருப்பத்தை ஏற்றார்.
“வீரக் கண்ணகியின் புரட்சி வரலாற்றினை நாடகமாக நடிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் வீரக்கனல் பொங்கும் வார்த்தைகளால் அது எழுதப்பட வேண்டும். இளங்கோவின் இதயத் துடிப்பும் அதோடு இணைய வேண்டும். அப்படி எழுதுவதற்கான ஆற்றல் தலைவர் ம. பொ. சி.க்குத்தான் உண்டு. அவர் எழுதிக் கொடுத் தால் நாங்கள் நடிப்பதற்குத் தயாராக இருக்கிறோம்”
இது, 19-10-55 அன்று கோவை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் தொழிலதிபர் திரு. சி. எஸ். இரத்தின சபாபதி முதலியார் தலைமையில் டி. கே. எஸ். சகோதரர் களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஒளவை டி. கே. சண்முகம் பேசி, 23-10-55 ‘செங்கோல்’ இதழில் வெளி வந்ததாகும்.
நானும் கோவை பூ.சா.கோ. கலைக்கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ம. ரா. போ. குருசாமி அவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினோம்.
பேசிய ஒளவை சண்முகத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் கூட்டத்திலேயே உறுதிமொழி கொடுத்தேன். அதன்படி, சிலப்பதிகாரக் கண்ணகி பற்றிய நாடக மெழுதுவதற்கென நானும் டி. கே. சண்முகமும் முயன்றோம். கவிஞர் கு. சா. கிருஷ்ண மூர்த்தி சிறந்த நாடக எழுத்தாளராதலால், அவரும் எங்களுக்கு உதவி புரிந்தார்.
புகார்க் காண்டத்திற்கு மட்டும் காட்சிகள் தொகுக்கப் பட்டு முடிந்திருந்த நிலையில் ஔவை சண்முகம் இருதய நோய்க்குள்ளாகி நடிப்புத் தொழிலிலிருந்து விலகிக் கொண்டார். அதனால், எனது விருப்பம் நிறைவேறவில்லை. எழுதி முடித்திருந்தால் “வீரக் கண்ணகி” எனப் பெயர் தருவதாக எண்ணியிருந்தேன். இளங்கோ படைத்த சிலப்பதிகாரத்திலிருந்து எந்த விதமான மாறுதலுமில்லாமல் நாடகத்தை உருவாக்கக் கருதியிருந்தேன்.
நான் சிலப்பதிகாரத்திற்குப் பெருமதிப்பு தேடிய பின்னர், ஆங்கிலத்தில் புலமை பெற்ற அறிஞர் பலரும் அந்த மாகாப்பியம் பற்றி ஆராயத் தொடங்கினர். அவர்களில் சிலர் காப்பியத்தின் பெருமையைக் குறைக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிட்டனர். அப்போதெல்லாம் அவர்களுடன் வாதிட்டு, காப்பியத்தின் பெருமையைக் காப்பாற்ற யான் முயன்றதுண்டு.
பி. பி. சி.யிலும் சிலம்பொலி
லண்டன் பி. பி. சியில் கூட பேராசிரியர் டாக்டர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார் வாயிலாக சிலப்பதிகாரம் பற்றிய ஆங்கிலச் சொற்பொழிவை பல வாரங்கள் ஒலி பரப்ப முன்வந்தது. இதற்கு எனது தூண்டுதலும் காரணமாகும்.
சென்னையில் புகழ்மிக்க ஆங்கில நாளேடாக வெளி வந்து நூற்றாண்டு நிறைவு விழாவோடு தன் வாழ்வை முடித்துக்கொண்ட “மதராஸ் மெயில்” என்னும் பெயருடைய ஆங்கில நாளேடு, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு. பஞ்சாபகேச ஐயர் ‘கோவலன் – கண்ணகி’ என்னும் பெயரில் உரை நடைத் தமிழில் ஒரு நூல் எழுதினார். அதன் ஆங்கிலச் சுருக்கத்தை ‘மெயில்’ பத்திரிகை வெளியிட்டு வந்தது. அதில் திருமணத்திற்கு முன்பே கண்ணகிக்கும் கோவலனுக்கும் களவியலில் மெய்யுறு புணர்ச்சி ஏற்பட்டு, அதன் விளைவாக கருவுற்ற பின்னரே திருமணம் நடைபெற்றதாக நீதிபதி எழுதினார். இதற்கு யான் மறுப்பெழுதி யனுப்பியும் அதை மெயில் பத்திரிகை வெளியிடவில்லை. அதனால் ‘செங்கோல்’ 16-6-57 இதழில் நீதிபதியாருக்குப் பதிலளித்து அதன் ஒரு பிரதியை அனுப்பி, ‘இதற்கு பதில் எழுதியனுப்பினால் எனது ‘செங்கோலி’ல் வெளியிடுகிறேன்’ என்று கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து பதிலே இல்லை.
நீதிபதிக்குப் பதில்
நீதிபதிக்குப் பதிலளித்து ‘செங்கோலி’ல் யான் எழுதிய நீண்ட கட்டுரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:
‘தமிழரசுக் கழகத்தாரின் பிரசாரத்தால் சிலப்பதிகாரக் காப்பியம் மக்களிடையே சிறப்புபெற்று வருகிறது. லண்டன் பி. பி. சி. யில் கூட சிலப்பதிகாரத்தைப் பற்றிய ஆங்கிலச் சொற்பொழிவு ஒலிபரப்பப்பட்டது. யு.என். ஓ சம்பந்தப்பட்ட கல்வி இலாகா சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லாரின் உரையோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகின்றது. அண்மையில் தெலுங்கிலும் – மலையாளத்திலும் சிலப்பதிகாரம் மொழிபெயர்க்கப் பட்டது.
“இவ்வளவு நல்ல பணிகளுக்கிடையே சில கோமாளித் தனங்களும் நடைபெறாமலில்லை. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் ‘கோவலன்-கண்ணகி கதை’ என்ற பெயரில் சிலப்பதிகார காப்பியத்தை உரைநடைத் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். அப்பெருமகன் பத்தினித் தெய்வமான கண்ணகியை திரைப்படத்தில் வரும் மட்டரகமான காதலியாக மாற்றிவிட்டிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு கண்ணகியும் கோவலனும் பள்ளி யறையிலே தெம்மாங்கு பாடி மகிழ்கின்றனர்.
இளங்கோவின் காப்பியத்தில் கண்ணகியுடைய அங்கங்களின் அழகை வாய் வலிக்க வருணிக்கிறான் கோவலன். கண்ணகியோ வாய்மூடி மெளனியாக காதலனின் வர்ணனையை ரசிக்கின்றாள். ஆனால், நீதிபதி பெருமகன் தந்துள்ள நூலில் கண்ணகி கோவலனோடு கூடி தெம்மாங்கு பாடுகின்றாள்.
“சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் மணவறையில் தான் முதன் முதலில் சந்திக்கின்றனர். ஆனால், நீதிபதியின் நூலில் திருமணத்திற்கு முன்னரே கண்ணகியும் கோவலனும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கலந்து விட்டனர்! கருத்தரித்த பின்னரே திருமணம்.”
களவா, களவியலா?
இளங்கோ கூறுவது கற்பியல். நீதிபதியார் களவியலிலே கண்ணகியைத் தள்ள முயல்கின்றார். எவ்வளவு தலைகீழ் மாற்றம்! இது, தமது மனவழிப்பட்ட கற்பனை என்று கூட குறிப்பிடவில்லை நீதிபதியார். இவருடைய சிலப்பதிகாரம் ஆங்கிலம் இந்தி முதலியவற்றிலும் மொழி பெயர்க்கப் படுகிறதாம்! தமிழுக்குச் செய்யும் தொண்டா இது!
”இனி, ‘மெயில்’ ஏட்டில் வெளியான திரு. க.ந.சு வின் கட்டுரையைப் பார்ப்போம்.
‘திரு. க. ந. சுப்ரமணியம் என்பவர் பிரபலமான தமிழ் எழுத்தாளர், மத்திய சாகித்திய அகாடமியிலும் இவருக்கு மிகுந்த செல்வாக்குண்டு. இவரும் ‘மெயில்’ ஏட்டில் 4-6-57 இதழில் எழுதிய சிலப்பதிகாரக் கட்டுரையில் அந்த மாகாப்பியத்தின் பெருமையைக் குறைக்கும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டார். அதற்கு நான் ‘செங்கோல்’ (16-6-57) இதழில் பதிலளித்து எழுதியது வருமாறு:
“இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் அரசவையில் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான். வலத்திலும் இடத்திலும் மூத்தவன் செங்குட்டுவனும் இளையர் இளங்கோவும் அருகிலிருக்கின்றனர். அரசவை நிமித்திகன் “நெடுஞ்சேரலாதனுக்குப் பிறகு இளைய மைந்தனே அரியாசனம் ஏறக்கூடும்” என்று கூறுகின்றான். அது கேட்ட இளங்கோ எழுந்து அரண்மனை வாழ்வைத் துறந்து அரியாசனத்தை முறைப்படி அண்ணனுக்கே உரிமையாக்குகின்றார். இது சிலப்பதிகாரக் கதை.
திரு. க.ந.சு. எழுதிய கட்டுரை
“திரு.க.ந.சு. எழுதிய கட்டுரையில் நிமித்திகனைக் காணோம். அவன் இடத்தில் மூன்றாந்தரக் குறத்தி ஒருத்தி சிருஷ்டிக்கப்படுகிறாள். நிமித்திகனைக் குறத்தியாக மாற்றியவர், அது தமது சிருஷ்டி என்று கூடக் கூறவில்லை.
“அத்துடன் இமயவரம்பன் அரசவையில் திடீரென இளங்கோவின் தியாக உணர்வைச் சந்தேகிக்கும் வகையில் சன்யாசி ஒருவன் குரல் கொடுக்கிறான். ஆனால், அவன் உருவம் தெரியவில்லை. இதுவும் கட்டுரையாளரின் கற்பனையே! “
“மதுரைக்கு சிலம்பு விற்கச் செல்லும் கோவலன், ‘எழு’ என்ற இரண்டெழுத்துச் சொல்லால் தன்னுடன் வரும்படி கண்ணகியை அழைக்கிறான். அவளும் பின் செல்கிறாள். மண்மகளறியாத வண்ணச் சீரடிகள் நோக கண்ணகி தேவியார் பாலைவனங்களைக் கடந்து பாண்டி நாடு செல்கிறாள். ஆனால், திரு. க.ந.சு. சிருஷ்டித்துள்ள கண்ணகி, கோவலன் பின்னே செல்லாமல் பூம்புகாரில் தங்கிவிடுகிறாள். நல்லவேளையாக கோவலன் கொலையுண்ட பின்னரேனும் கண்ணகி மதுரை சென்றதாக கட்டுரையாளர் ஒப்புக் கொள்கிறார்.
“இன்னும் தமிழினத்தின் பண்புக்கு மாறுபட்ட தரக் குறைவான கற்பனைகள் திரு. க.ந.சு.வின் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. ‘மதறாஸ் மெயில்’ வாசகர்கள் இளங்கோவின் கண்ணகியைக் காணாமல் திரு. க. ந சு. வின் கற்பனையில் பிறந்த கண்ணகியைக் காண என்ன பாவம் செய்தார்களோ!”
பன்மொழிப் புலவர் மனக்குறை
தொல்காப்பியர் கூறிய களவொழுக்கத்தின் வழி கற்பொழுக்கத்தைக் கடைப்பிடித்து மெய்யுறு புணர்ச்சி ஏற்படுவதற்கு முன் கண்ணகி-கோவலன் திருமணம் நடைபெற்றதாக பன்மொழிப் புலவர் டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் தம்முடைய “கானல் வரி” என்னும் நூலில் கொஞ்சம் விரிவாகவே எழுதியுள்ளார்.
பன்மொழிப் புலவர் எனது நன்மதிப்பிற்குரியவர்; புதிய தமிழகம் படைக்க யான் மேற்கொண்ட பணிகளுக் கெல்லாம் எனக்குத் துணை நின்றவர். 1941-ல் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை புகுந்த தேசபக்தர். களவியலில் கண்ணகி-கோவலன் காதல் அரும்பி, பெற்றோர் இசைவு பெற்று கற்பியல்வழித் திருமணம் நடந்த தாக எழுதியதை மறுக்காமல் இருக்க என்னால் முடிய வில்லை. அவரது கருத்தை மறுத்து, “கண்ணகி – கோவலன் திருமணம் முழுக்க முழுக்க களவியல் கலவாத கற்பியல் வழித்தான் நடந்தது” என்று எனது ‘செங்கோலி’ல் எழுதினேன்.
குறைதீர்க்கும் ‘செங்கோல்‘
பன்மொழிப் புலவர் தெ. பொ. மீயின் வாதத்தை மறுத்து “கண்ணகி-கோவலன் களவியல் காதலர்களா?” என்னுந் தலைப்பிட்டு 27-2-66, 6-3-66, ‘செங்கோல்’ இதழில் யான் எழுதிய தொடர் கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:
தொல்காப்பியர் காட்டும் பண்டைத் தமிழினத்தின் வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்ததுதான் சிலப்பதிகார காப்பியத்தைச் செய்துள்ளார் இளங்கோவடிகள் என்றே இதுவரை புலவர்கள் நம்பி வந்தனர். இதை விட்டு வேறு விதமாகச் சிந்தித்து கண்ணகி-கோவலன் தம்பதியரை களவொழுக்கத்தில் சந்தித்த காதலராகக் கற்பனை செய்து எவரும் பார்த்ததில்லை. எவரும் சொல்லாத புது வழியில் சென்று ஆராய்ந்து தாம் கண்ட முடிவுகளை நமக்கு அறிவித்துள்ளார் பெரும் புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார். அதையும் பார்ப்போம் :
“கோவலன் காண தான் கண்டு அவளே காதலித்தாள் என்று கூறுவதில் என்ன இடர்ப்பாடுண்டு?”
“திருமணமாவதற்கு முன் கண்ணகியை கற்புடை யவள் என்று பேசுவது என்னையோ?”
“தீதிலா வடமீனின் திறம் இவள் திறம், என்று பாடுவதன் நோக்கம் என்ன?”
“களவொழுக்கத்தில் வரும் கற்பாகப் பொருள் கொள்ளாமற் போனால், திருமணத்திற்கு முன் கண்ணகியிடம் கற்பெனப் பேசி நிற்பது எது?”
“கண்ணகியைக் ‘காதலாள், என்றே புலவர் பாடுகின்றார். பெருங்குணத்துக் காதலாள் என்பதற்குப் பெருங் குணங்களைக் காதலிப்பாள்” என்று அடியார்க்கு நல்லார் விளக்குகின்றார்.
“ஆனால், அரும்பதவுரைகாரர் பெருங் குணத்தால் காதலித்தவள் என்றே பொருள் எழுதுகின்றார். யாரைக் காதலித்தாள்? செயல்படு பொருளை அவர் விளக்கவில்லை ஆனால், அதில் ஐயம் எழ இடமுண்டோ? கோவலன் காணத் தான் கண்டு அவனையே காதலித்தாள் என்று கூறுவதில் என்ன இடர்ப்பாடுண்டு?”
(கானல்வரி நூலில்)
பெரும் புலவர் பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் கோவலனும் கண்ணகியும் களவொழுக்கத்திற்குப் புறம்பான தூய கற்பொழுக்கத்துடன் கணவனும் மனைவியுமாயினர் என்பதனை மறுத்துரைக்கின்றார்.
அது வருமாறு:
“மங்கல வாழ்த்துப் பாட்டில் களவு நிகழ்ச்சி விரியா விடினும் முன் ”தானே அவளே தமியர் கண்டு உள்ளங் கலந்து ஒத்த காதலுடையார் பின் மணவிழா வயர்ந்த தென்றுங் குறியாராயின் இளங்கோவடிகள் தமிழ் மர பிறந்த தவறுதலை தடுக்குமாறில்லை.” ஆழ்ந்து துருவி அளந்தறியாமல் அத்தவறு அவர்மேற் சுமத்தலும் அறமன்று.
“இளங்கோவடிகள் தமிழ் முறை மறைந்து பெற்றோர் பிணைக்க முற்றும் தாம் முன் பின்பறியாதார் வைதிக மன்ற கூடினதாகப் பாடினாரென்பது மாண்பறையாக பீடுதருமாமா, அன்றே!”
(‘பழந்தமிழ் நாடு, பக். 5)
ம.பொ.சியின் வினா?
மங்கல வாழ்த்துப் பாடலுள் கண்ணகியை பெருங் குணத்துக் காதலாள் என்று கோவலனை காதலால் கொண்டேத்துங் கிழமையான் என்றும் இளங்கோ வடிகள் கூறியுள்ளதைக் கொண்டு சிலப்பதிகாரத் தலைவியும் தலைவனும் திருமணத்துக்கு முன்பே களவொழுக்கத்தால் காதலித்தனர் என்று நாவலரும் பன்மொழிப் புலவரும் வாதாடுகின்றனர்.”
நாவலரும் பன்மொழிப் புலவரும் என்னால் பின்பற்றத் தக்க பெரும் புலவர்களாயினும் அவர்கள் வாதத்தால் பத்தினித் தெய்வத்தின் பெருமை குறைந்து விடுவதாகக் கருதி, அவர்களையும் மறுத்தெழுதினேன்; என் கருத்தை- அதாவது, கண்ணகி-கோவலன் தம்பதிகள் களவொழுக்கத்திற்குப் புறம்பான கற்பொழுக்கத்தினரே என்பதை- உறுதிப்படுத்த எண்ணி, “கண்ணகியும் கோவலனும் களவியற் காதலர்களா?” என்னும் தலைப்பிட்டு, ‘செங் கோல்’ 27-2-66, 6-3-66 ஆகிய இரு இதழ்களில் தொடர் கட்டுரை எழுதினேன்.
தமிழ் இலக்கியங்களைப் படிப்பதிலும் ஆராய்வதிலும் எனக்கென தனித்த பார்வை ஒன்று உண்டு. நான் பாரதம் முழுவதையும் தாயகமாக கொண்டுள்ளவன். பிள்ளைப் பருவந்தொட்டு ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று ஒலி எழுப்பி நாத்தழும்பேறியவன். அந்த வகையில் மொழிப் பற்று காரணமாகவும் தமிழரிடையில் பூசல் ஏற்பட அனுமதிப்பது என்னால் சாத்தியமில்லை. ஆகவே, 1946ல் தமிழரசுக் கழகத்தைத் தொடங்கிய போது அதனுடைய ஆறு கொள்கைகளில் நான்காவதாக இலக்கியக் கொள்கை இடம் பெறச் செய்தேன். அது ‘சாதி, சமய வேற்றுமை யற்ற தமிழினத்தின் பொதுக் கலைகள், இலக்கியங்கள் ஆகியவற்றைப் போற்றி, அவற்றின் வளர்ச்சிக்காகப் பாடு படுதல்’ என்பதாகும்.
இந்தக் கொள்கைவழித்தான் இளங்கோவடிகள் தந்த சிலப்பதிகாரத்திடம் நான் காதல் கொண்டேன்.
பல்கலைக் கழகங்களில் பாடங்கள்
சிலம்பை பல்கலைக் கழகப் படிப்பில் இலக்கியத்திற்காக எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் பார்க்கின்ற பார்வை வேறு; பாட்டாளியாக இருந்து சுய முயற்சியால் படிப்பாளியாக வளர்ந்து தாய்மொழியான தமிழை மட்டுமே கொண்டு வாழவும் வளரவும் வரம் பெற்று விட்ட எனது பார்வை வேறு.
“சிலப்பதிகாரமும் தமிழரும்” என்னும் தலைப்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக (1946) பேசியபோது யான் செய்த கொள்கைப் பிரகடனத்தை இங்கு தருகிறேன்:
“நான் ஓர் அரசியல்வாதி, அது மட்டுமல்ல; ஆளப் பிறந்த மக்களை அடிமை கொண்ட அந்நிய ஆட்சியை, வாழப் பிறந்த மக்களைச் சாகவைக்கும் முதலாளித் துவத்தை எதிர்க்கும் போராட்டவாதி! ஆகவே, நான் சிலப்பதிகாரத்தை அரசியல் கண்கொண்டே நோக்குகின்றேன். அடிமையைத் தகர்க்கும் ஆண்மை மிக்க போராட்டத்திற்கு அது உணர்ச்சி ஊட்டுகிறதா என்றும் பார்க்கிறேன். சிலப்பதிகாரம் மட்டுமல்ல; வேறு எந்தக் காவியமாயினும் அவை அனைத்தையும் கூட இந்தக் கண் கொண்டே பார்க்கிறேன்.
”அந்தோ! நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. மக்கள் வாழ்விழந்து வதைகின்றனர். பஞ்சமும் பிணியுந்தான் பண்பாடு என்றாகி விட்டது. அன்னிய அரசின் கீழ் அல்லல்பட்டு ஆற்ற முடியாதழும் கண்கள் கோடானு கோடி. இந்நிலையில் ஆண்மைமிக்க ஒவ்வொரு தமிழனது கடமை என்ன? அன்னிய அரசை நீக்கி தன்னரசு காண்ப தன்றோ? இந்தக் கடமையைத்தான் நான் மேற் கொண் டுள்ளேன். ஆளப் பிறந்த நாம் அன்னியருக்கு அடிமைப் பட்ட நேரத்தில் அரசியல்தான் நமக்கு முக்கியம்; எனவே நமது தமிழ் இலக்கியங்களை சுதந்திரப் போராட்டத்திற்குப் பயன்படுமாறு செய்ய வேண்டியது நம் கடமை. அந்த உரிமை நமக்கு உண்டு. இதைத் தவிர பேரின்ப வீட்டிற்கு வழிகாட்டும் எந்தப் பேரிலக்கியமும் இப்போது நமக்கு தேவை இல்லை. நம்மவர் நாடும் நலியுங்காலை வானவர் நாடு வலியவரினும் அதை நான் வேண்டேன். கடவுளே என் கண்ணெதிர் நின்று கைகாட்டி அழைப்பினும் நான் பிறந்த நாட்டிலே கஞ்சிக்கும் கதியற்று கண்ணீரும் கம்பலையுமாகக் கலங்கியழும் ஏழைகளின் கவலையைப் போக்குவதே எனக்கு இன்பம். அதைவிட பேரின்ப வீடும் எனக்குப் பெரிதல்ல என்று பேசுவேன்.
“சிலப்பதிகாரத்தில் நான் காண்பது கதிரவனை சாட்சிக்கழைத்த, வெட்டுண்ட கணவனை உயிர் பெற்றெழச் செய்த அறக் கற்புடைய கண்ணகியன்று. குற்றமற்ற கோவலனைக் கொன்று குவித்த கொடுங்கோலரசை அழித்து மதுரையைத் தீக்கிரையாக்கிய மறக் கற்புடைய புரட்சிக் கண்ணகியே எனக்குக் காட்சியளிக்கிறாள்.
“சிலப்பதிகாரத்தில் அல்வழிப்பட்ட அரசை ஒழிப்பேன்’; என்று உறுத்தெழுந்து புரட்சி செய்த கண்ணகி போன்று இன்று நம் தமிழ்ப் பெண்கள் ஆகி விடுவார்களானால் இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமல்ல; வேறு எந்த ஏகாதிபத்தியத்தையும் கூட அரைநொடியில் அழித்து முடிக்கலாம். தமிழகத்தில் தமிழரசு நிறுவலாம்.
“இளங்கோவடிகள், அநீதியை எதிர்த்து நிற்கும் ஆண்மையை -அரசியல் நெறியை-புரட்சி வழியை போதிக்கத்தான் சிலப்பதிகாரத்தைச் செய்திருப்பார். மற்றபடி ஊழின் வலியை உணர்த்துவதற்கோ, செத்தாரை எழுப்பும் கற்பின் பெருமையைச் செப்புவதற்கோ செய்திருக்க மாட்டார். ஏனெனில் இத்தகைய கதைகள், நீதி நூல்கள் இளங்கோ காலத்திலும் இருந்தன. திருக்குறளைவிட இன்னொரு நீதிநூல் இயற்ற இளங்கோ எண்ணியிருப்பாரா?”
(‘சிலப்பதிகாரமும் தமிழரும்’; பக். 47)
இளங்கோவின் என்ன?
சிலப்பதிகாரத்தையும் அதைப் படைத்தளித்த இளங் கோவடிகளையும் சமயக் கண்கொண்டு பார்ப்பதை எனது தில்லைப் பேச்சிலேயே கண்டித்திருக்கிறேன். இதோ, அந்தப் பகுதி:
“இளங்கோ யார்? அவரது வரலாறு என்ன? என்பவற்றைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் வாதங்கள் இன்னும் அடங்கியபாடில்லை. இளங்கோ சைவர் என்பார் சிலர். சமணர் என்பார் வேறு சிலர். எதையும் சாதி, சமயக் கண்கொண்டு ஆராய்வதை நமது தமிழ் அறிஞர்கள் இன்னமும் விட்டபாடில்லை. இளங்கோவுக்கு சமய உணர்ச்சி உண்டு. என்றாலும், அவர் அதை வெளியில் காட்ட விரும்பினாரில்லை. சாதி சமய உணர்ச்சிகளைக் கடந்த அப்பெரியார் தம்மைக் காவியத்தில் மறைத்துக் கொண்டார். இந்த உண்மையை அறியாதவர்கள்தான் அவரைக் காவியத்திற்கு வெளியே காண முயலுகின்றனர். புலவர்களை வேண்டுகிறேன்; அவரைக் காவியத்தில் காணுங்கள். அதுதான் உங்கள் காரியத்திற்குப் பயனளிக்கும்.
“இளங்கோவிற்குப் பெருமை தந்தது அவரது சமயமல்ல; அவர் இயற்றிய காவியமேயாகும். இளங்கோவிற்கு மட்டுமல்ல. அவரைப் பெற்றெடுத்த தமிழுக்கும் தமிழி னத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் கூடச் சிலப்பதிகாரம் சிறப்பைத் தருகின்றது.”
(தமிழரும் சிலப்பதிகாரமும்; பக். 37)
ஒரு அரசியல் கட்சியோ, கட்சிச் சார்புடைய அரசியல் வாதியோ இலக்கிய மேடையில் நின்று பேசும்போது கட்சிக் காழ்ப்புகளை விட்டொழிக்க வேண்டும். தமிழினப் பற்றோடும் தமிழ்மொழி பற்றோடும்தான் பேசவேண்டும். இதை 1950-ல் சென்னை இராயப்பேட்டை காங்கிரஸ் திடலில் எனது முயற்சியால் தமிழின் வரலாற்றில் முதன் முதலாக நடந்த சிலப்பதிகார மாநாட்டில் விளக்கிப் பேசினேன். அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவர்! சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளையாவார். அதிலே தலைமை வகித்தவர் டாக்டர் மு. வரதராசனார் ஆவார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் திரு.கு. காமராசர் மாநாட்டை வாழ்த்திப் பேச மேடையிலிருந்தார். பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிறப்புரையாற்ற மேடையிலிருந்தார். திருவாரூர் வி.எஸ். தியாகராச முதலியார் மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்தார். அதிலே மாநாட்டுத் தலைவர் பெயரை பிரேரேபித்துப் பேசிய போது நான் கூறிய செய்திகள் சிலவற்றை இங்கு தருகிறேன்:
“இந்த சிலப்பதிகார மாநாடு கூடுவதற்குக் காரணமாக இருந்தவன் என்ற முறையில் அதன் குறிக்கோளைப் பற்றி சில வார்த்தைகள் கூறவிரும்புகிறேன். மாநாட்டைக் கூட்டியுள்ள நானும் அதற்காக எல்லா வகையிலும் உதவி புரிந்த திரு. காமராசரும் மாநாட்டின் வெற்றிக்கு இரவு பகலாகப் பாடுபட்ட திரு. தியாகராச முதலியார், திரு. சின்ன அண்ணாமலை ஆகியோரும் காங்கிரஸ்வாதிகள் தான். ஆயினும் இம்மாநாட்டில் தமிழ்க் கொடியேற்றவும் தலைமை வகித்து நடத்தவும் காங்கிரசைச் சாராத அறிஞர்களையே அழைத்திருக்கிறோம். நாங்கள் விரும்பியிருந்தால் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் புலவர்களைக் கொண்டே இம்மாநாட்டை நடத்தியிருக்கலாம். பன்மொழிப் புலவர் மீனாட்சிசுந்தரனார் உட்பட பல புலவர்கள் காங்கிரசிலேயே உண்டு. எனினும் தமிழ் மொழியை கட்சி என்னும் வேலிக்குள் சிறைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. சிலப்பதிகார மாநாடு கூட்டி காங்கிரசுக்கு ஆதரவு தேட வேண்டிய அவசியமும் எங்களுக்கில்லை.
“நாளை இதே ‘கண்ணகி பந்தலி’ல் ஒரு அரசியல் மாநாடும் கூட இருக்கிறது. ஆனாலும் அம் மாநாட்டிற்கும் சிலப்பதிகார மாநாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இரண்டுக்கும் தனித்தனி வரவேற்புக் குழுவினர் உளர். நெடுநாட்களாகவே இப்படி ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்து வந்தது. இந்தச் சந்தர்ப்பம் அதற்குச் சாதகமாக இருந்தது. கூட்டி விட்டேன். நானும் புலவர் மீனாட்சிசுந்தரனாரும் திரு. காமராசரும் காங்கிரசார் என்ற முறையிலல்லாமல் தமிழ் இனத்தினர் என்ற முறையிலேயே இந்த மாநாட்டில் பங்கு கொள்ளுகிறோம். ஆம்; தமிழ் அன்னைக்கு எங்கள் உழைப்பைக் காணிக்கையாக்கவே இம்மாநாட்டில் கலந்து கொள்ளுகிறோம்.
“இம்மாநாட்டில் குழுமியுள்ள மக்களில் அரசியலில் எங்களோடு மாறுபட்டோர் இருக்கலாம்; ஆயினும் நாம் எல்லோரும் தமிழர் என்ற உணர்ச்சியோடு இம்மாட்டில் பங்கு கொள்ளுவோமாக!”
இலக்கியத்தில் கட்சி வெறி
“காங்கிரசுக்கு மாறுபட்ட கட்சியினரும் இலக்கிய மாநாடுகளில் பேசுகின்றனர். ஆனால் நானறிந்தவரை கட்சி மாநாட்டிற்கும் அரசியல் மாநாட்டிற்கும் அங்கே வேற்றுமை காண முடியவில்லை; கட்சிக் கருத்துக்களை வற்புறுத்துவது பிழையன்று. ஆயினும் பிடிக்காத சாதியினரை கட்சியினரை பழித்துப் பேசுவதற்கென்றே இலக் கியங்களைப் பயன்படுத்துவது கேவலமான செயல் என்பதை கூறித்தான் ஆகவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கும் நல்வழி காட்டுவதற்காகவே தேசியவாதிகளாகிய நாங்கள் இந்த இலக்கிய மாநாட்டைக் கூட்டி யிருக்கிறோம்.
“இன்றைய மாநாட்டுப் பேச்சாளர்கள் எந்த ஒரு தனிமனிதருடையவும் மனத்தைப் புண்படுத்தும் வகையில் ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள் என்று நான் உறுதி கூற முடியும். இலக்கியத்தைத் தவறான வழிகளில் பயன்படுத்துவோரை திருத்தும் வகையில் பேசுவோமேயன்றி திட்டிப் பேசமாட்டோம்.”
(‘தமிழ் முரசு’, ஏப்ரல் 1951)
தமிழ்நாட்டில் 1967-ய் தி. மு. க. அரசு தோன்றிய பின் அதற்கு முன் தமிழரசுக் கழகம் தொடங்கி வைத்த சித்திரா பௌர்ணமி நாளில் இளங்கோவடிகள் விழாவைக் கொண்டாடும் வழக்கத்தை 1969-ல் பூம்புகாரில் மேற்கொண்டது.
காவிரிப்பூம் பட்டினத்தில் சிலப்பதிகார கலைக்கூடம் ஒன்றையும் எழுப்பியது. அதன் திறப்புவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. எல்லாம் தி. மு. க. அமைச்சர்கள் என்ற போக்கில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு நான் விரும்பாத ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில் பேச்சாளனாக அழைக்கப்பட்டேன்.
தி.மு.க. அரசு திட்டமிட்டே என்னைப் புறக்கணித்ததாகக் கருதி நான் விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட வேண்டும் என்று தமிழரசுக் கழக முன்னணித் தலைவர்கள் என்னை வற்புறுத்தினர். அவர்களுக்கெல்லாம் சமாதானம் சொல்லி அரசின் அழைப்பை ஏற்று, அது தந்த மூன்றாந் தரமான பணியை ஏற்றுப் பங்காற்றினேன்.
அந்த விழாவில் ஒரு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பேற்றினைப் பெற்ற அமைச்சர் ‘தினத்தந்தி’ திரு. எஸ். பி ஆதித்தனார் காவிரிப்பூம்பட்டின நிகழ்ச்சியின் போது என்னுடன் தனித்து உரையாடிய நேரத்தில் ‘சிலப்பதி காரத்தையும் உங்கள் கையிலிருந்து தி. மு. க. வினர் பறித்துக் கொண்டு விட்டனர். இனி, உங்களை இலக்கிய உலகமும் மறந்துவிடும். என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்றார்.
தி.மு.க. அரசே திகைத்தது!
தனித்து உரையாடியபோது அவர் சொன்ன இதனை விழாவில் நான் பேசியபோது சொல்லி ‘சிலம்புச் செல்வர் என்னும் பட்டம் பறிபோகாதபடி தொடர்ந்து எனது சிலப்பதிகார ஆராய்ச்சிப் பணி நீடிக்கும்’ என்றேன். அரங்கிலிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரித்து வர வேற்றனர்.
இதைக் கேட்டதும் முதல்வரும் தி. மு. க. முன்னணித் தலைவர்களிலே சிலரும் திரு. எஸ். பி. ஆதித்தனார் மீது சீற்றங் காட்டினர். காவிரிப்பூம் பட்டின விழா முடிந்த மறுநாள் சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இளங்கோ விழா நடத்தி, காவிரிப்பூம்பட்டினத்தில் சிலப்பதிகார விழாவை சிறப்பாக நடத்தியதற்காக முதல்வரவர்களுக்குப் பாராட்டு நடத்தி, ஒளவை தி க. சண்முகத்தின் கரத்தால் விலையுயர்ந்த வெள்ளித்தட்டு ஒன்றை தமிழரசுக் கழகத்தின் சார்பில் பரிசளிக்கச் செய்து நானும் பாராட்டுரை வழங்கினேன்.
சிலப்பதிகாரப் புகழ் பரப்பும் பணி எனக்கு ஏகபோகமாக இருக்க வேண்டுமென்று நினைத்ததுகூட இல்லை. அதனாற்றான் காவிரிப்பூம்பட்டின விழாவில் மூன்றாவது இடத்தில் வைத்து ஆளுவோர் என்னை அவமதித்த பின்னும் அந்த ஆட்சியின் முதல்வருக்கு மறுநாளே சென்னையில் பாராட்டு விழா நடத்தி பரிசும் அளித்தேன். இதற்கு முன்கூட்டியே விளம்பரப்படுத்தப்பட்டது.
சென்னை காவிரிப்பூம்பட்டின விழாவிற்குச் செல்வதற்கு முன்பே மயிலையில் கற்பகாம்பாள் மண்டபத்தில் முதல்வர் கலைஞருக்கு பாராட்டு விழா நடத்திட ஏற்பாடு செய்துவிட்டேன்.
என் பணி தொடர்கிறது!
எனது நண்பர் எஸ். பி. ஆதித்தனார் நினைத்தபடி யல்லாமல் இன்னும் நான் ‘சிலம்புச் செல்வர்’ என்னும் பட்டத்திற்குரிய சிலப்பதிகாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.
காவிரிப்பூம்பட்டின விழாவிற்குப்பின் சிலப்பதிகாரத்திற்கு முழுசாக ஆராய்ச்சி ரீதியில் உரை எழுதி முடித்தேன். இது, சாதாரண பணியல்ல. மற்றும் பேராசிரியர் மெய்கண்டாரைத் தலைவராக கொண்ட மயிலை இலக்கிய வட்டத்தின் சார்பில் மயிலை பாரதீய வித்யாபவன் மண்டபத்தில் பாரதி இலக்கியம் பற்றி மாதமொரு சொற்பொழிவாக தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி அது மிகப் பெரிய நூலாக பூங்கொடிப் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டது.
எனது பேச்சு மாதந்தோறும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இதழில் மாதந்தோறும் விமர்சிக்கப்பட்டது. ‘கல்கி’யில் வாரந்தோறும் கடைசிப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
தி.மு.க. அரசு மறைந்த பின் திராவிட வட்டாரம் சிலப்பதிகாரப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டது. என் பணி தொடர்கிறது; என் வாழ்நாள் வரை தொடரும்.
சிலப்பதிகாரக் கதையை டில்லி தொலைக்காட்சியில் இந்தி மொழியில் 13 வாரங்கள் வாரத்திற்கு ஒருநாள் ஒரு மணி நேரம் வெளிவர ஏற்பாடு செய்து படமும் தயாராகி வருகிறது. அதற்கு முதல் முயற்சி எடுத்தவனே நான்தான். கிருஷ்ணசாமி அசோசியேட் சார் படமாக்கி வருகின்றனர். டாக்டர் கிருஷ்ணசாமியும், திருமதி மோகனா கிருஷ்ணசாமியும் அதில் ஈடுபட்டுள்ளார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் திமுக அரசு சிலப்பதிகார விழா நடத்திய பின்னும் தி. மு. க. வாழ்கிறது. இரண்டாவது முறையாகவும் 1989-ல் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் அதில் நீடித்தது. ஆனால், அந்தக் காலத்தில் காவிரிப் பூம்பட்டினத்திலே சிலப்பதிகார விழா அரசால் நடத்தப்படவில்லை. திரும்பவும் சொல்கிறேன், இலக்கிய மேடைகளிலே – ‘செங்கோல்’ வார இதழ்களிலே எனது சிலப்பதிகாரப் பணி தொடர்கிறது.
தலையெழுத்து ஒன்றுதானே!
சிவஞானம் என்ற எனது பெயரின் தலையெழுத்தும் சிலப்பதிகாரத்தின் தலையெழுத்தும் ஒன்றுதானே!
ஒளவை தி.க. சண்முகத்தைத் தலைவராகவும் கலைஞர் ஏ. பி. நாகராசனைச் செயலாளராகவும் கொண்டு இளங்கோ மன்றம் நிறுவி, அதன் பெயரில் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமியையொட்டி, இளங்கோ விழாவை நடத்தி வரச் செய்தேன். அந்த மன்றம் விடுத்த வேண்டு கோளின் விளைவாகத்தான் தி. மு. க. அரசு சென்னை கடற்கரைச் சாலையில் இளங்கோவுக்கு சிலை நிறுத்தியது. திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன், என் சிலப்பதிகாரப் பணி தொடர்கிறது. அதை எந்த இயக்கமும் என்னிடமிருந்து பறித்துவிட முடியாது.
நேருஜி எழுதிய ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ என்னும் பெயருடைய நூல் இந்தி மொழியில் திரைப்படமாக்கப் பட்டு சமீப காலத்தில் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் அரைமணி நேரம் காட்டப்பட்டபோது நான் தூண்டியதன் விளைவாக இரண்டு ஞாயிறுகளில் சிலப்பதிகாரமும் சேர்த்துக் காட்டப்பட்டது. காட்சிகள் என்னைக் கவர்ந்தன.
நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருந்தபோது எனது தூண்டுதலால் டாக்டர் சங்கரராஜு நாயுடு சிலப்பதிகாரத்தை இந்தியில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
இன்னும் எஞ்சியுள்ள என் வாழ்நாட்களிலே இந்திய மொழிகளில் எல்லாம் சிலப்பதிகாரம் டி. வி. யில் காட்சியளிக்கப் பாடுபடுவேன். கண்ணகியின் காற்சிலம்பு அந்த வீராங்கனையின் புகழை வளர்ப்பது போல அதே சிலம்பு என் புகழையும் வளர்க்கும். கடந்த மாதத்தில் கூட கடற் கரையிலுள்ள கண்ணகி சிலைக்கு உலகத் தமிழ் பெண்கள் சங்கத்தார் என்னைக் கொண்டு மாலையணிவித்தனர். அது தனி விழாவாக நடந்தது. திருமதி தெய்வநாயகி ஜோதி அதற்கு முயற்சி மேற்கொண்டார். நான் சிலைக்கு மாலையணிவித்து வாழ்த்தி வணங்கினேன்.
ஆட்சியின் வழியில்……
ஒரு அரசியல் கட்சி தான் ஆட்சிக்கு வந்த பின்பு புரியும். சாதனைகளை விடவும் ஆட்சிக்கு வராத அரசியல் கழகம் புரியும் சாதனைதான் பெரிது. உண்மையில் சிலப்பதி காரத்தின் புகழ் பரப்புவதிலே தி.மு.க. ஆட்சிக்கு வரு முன் நானும் என் தமிழரசுக் கழகத்தின் தோழர்களும் புரிந்த சாதனைகள் இருந்தில்லையானால் ஆட்சிக்கு வந்த பின் தி. மு. க. வும் அந்தக் காப்பியம் பற்றிச் சிந்திந்திருக்கவும் முடியாது. ஆம்; மார்பைப் பிய்த்தெரிந்தால் மதுரை எரித்து விடுமோ?’ என்று கேலியாகக் கேட்டவர்கள் தானே தி. மு. க. வினர்.
அதுபோல, இன்று கட்டபொம்மன் பெயரும் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் பெயரும் மாவட்டங் களுக்குச் சூட்டப்பட்டனவென்றால், அதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர யான் உழைத்ததால்தானே அது முடிந்தது. ஆகவே கடந்த அரை நூற்றாண்டு காலமாக நானில்லாமல் சிலம்பில்லை என்று சொல்லத்தக்க நிலை உருவாகி விட்டது.
மாதவி வீசிய மாலை
கண்ணகி-கோவலன் திருமணத்தில் நாட்டியமாட வந்த மாதவி, ‘நாட்டிய முடிவில் நான் வீசும் பொன் மாலை யார் கழுத்தில் விழுகிறதோ அவர் என் கணவர் ஆவார்’ என்று கூறியதை ஒரு பாடல் வடிவத்தில் தவத்திரு சங்கரதாசர் புனைந்திருந்ததை ஏற்கெனவே பார்த்தோம். அதை வசனநடையிலும் அவரே தந்திருக்கிறார். அதையும் பார்ப்போம் :
மாதவி: ”இதோ, இந்தப் பொன்னுரு மாலை நான் பிறக்கும் போது கூடவே அணிகலனாகப் பிறந்திருக்கிறது. இம்மாலையை நான் நடனம் முடிந்தபோது கழற்றி எறிவேன். அது யாருடைய கழுத்தில் விழுகிறதோ அவரை எனது கணவனாக அழைத்துச் செல்வேன். இது என்னுடைய கோரிக்கை. ஆகையால் உங்களுடைய சம்மத மிருக்கும் பட்சத்தில் நான் நடனஞ்செய்யச் சித்தமாயிருக்கிறேன்.”
(சபையோர் சம்மதிக்கிறார்கள்)
மா நாய்க்கன் (கண்ணகியின் தந்தை): என் கழுத்தில் விழுந்ததானால்?
மாதவி: உங்களையே கூட்டிக்கொண்டு செல்லுவேன்.
மாசாத்துவான் (கோவலன் தந்தை): என் கழுத்தில் விழுந்ததானால்?
மாதவி: உங்களையே அழைத்துச் செல்வேன்.
(நட்டுவனார் உதவியுடன் மாதவி நாட்டியமாடி முடிந்ததும் முன் சொன்னபடி பொன்னுருவி மாலை யொன்றை அவையின் நடுவே நின்றவண்ணம் கழற்றி எறிகிறாள்)
மாதவி: மாலையைக் கழற்றி எறிந்தேன். அது யார் கழுத்தில் விழுந்ததென்று தெரியவில்லை! இருக்கட்டும். (பின்னர் கோவலன் கழுத்தில் மாலை விழுந்திருப்பதைப் பார்த்து ஆனந்தப்பட்டு நட்டுவனாரைக் கூப்பிட்டுத் தெரிவிக்கிறாள்)
மாதவி: மாமா! மாலை யாருடைய கழுத்தில் விழுந் திருக்கிறது என்று பார்த்து வாருங்கள்.
‘மாமா’வின் தொழில் சங்கரதாசரின் கோவலன் நாடகத்தில் மாதவியாள் தாசித் தொழில் நடத்தவும் நடனத்திற்கு ஏற்பாடு செய்யவும் உதவியாக ஒரு பிராமணர் இருந்தார். அவர் மாதவி உள்பட எல்லோராலும் ‘மாமா’ என்று அழைக்கப் படுவார். அதனாற்றான் அந்தக் காலந்தொட்டு ‘மாமா’ என்ற சொல் தாசி வீட்டு ‘மாமாவாகக் கேலியாக அழைப்பது வழக்கம்.
கழற்ற முடியாத மாலை
மாதவி எறிந்த மாலை மணவறையில் கண்ணகியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கோவலன் கழுத்தில் விழுந்திருப்பதை மாதவியே கண்டுவிடுகிறாள். தான் வீசிய மாலை கோவலன் கழுத்திலிருப்பதைக் கண்டு உடனே கோவலனை அணுகி அவனை தன்னுடன் வரும்படி அழைக்கிறாள். அதுவும் ஒரு பாடல் மூலம்தான். சங்கீத கோவலனல்லவா நாடகத்தின் பெயர்! அதையும் பார்ப்போம்.
மாதவி: எழுந்தென்னுடன் வாரும் என்துரையே.
கோவ: என்னை எங்கு நீயழைக்க வந்தாய் சொல்வாய் காமியே!
மாதவி: என் ஊருக்குச் சென்றிட அழைக்கிறே னிப்போது.
கோவ: உன் ஊருக்கு நான் வந்து செய்வதை நீ யோது,
மாதவி: எப்போது மென் வீட்டிலிருப்பதுவே தோது.
கோவ: உன் வீட்டி லெப்போது மிருக்கவேலை யாது?
மாதவி: இதையறியாத மனிதரு முண்டோ, விரைவில் என்னுடன் வாரும் வாரும்!
கோவ: சீ சீ கிட்டி யிங்கு யிங்கு வந்து தொட்டுப் பேசாதே! செல்லடி; செல்லடி! சினமது பெருகுது விரைவிலே விலகி வெகுதூரம் செல்லடி!
விருத்தம்
வர்த்தகர் குலத்தி லுதித்தவன் நான் நீ
வந்தவர் போரபேர்க் கெல்லாம்
நித்தமும் படுக்கை விரித்துடன்பட்டு
நேசமாய் புணர்ந்த நுபவிக்கும்
சித்தம துடையார் குலத்தனிலுதித்த
சேயிழை யாலைகயா லேநான்
இத்தின முன் பின் வருவதற் கிசையேன்
எனை விடுத்தகலடி நீயே!
கோ.வசனம்: பெண்ணே! விலகிநில், நான் சொல்வதை கவனி. ஏ, மாதே! நானோ வர்த்தகர் குலத்திலுதித்தவன்! நீயோ பொருள் கொடுப்பவரையெல்லாம் அனுதினமு மாகக் கூடும் தாசிகுலத்தில் பிறந்தவள். அன்றியும் இத்த விடத்திற்கு நடனஞ் செய்ய வந்தவள், மேலும் நானோ கலியாண மாப்பிள்ளையாகக் கையில் காப்புக் கட்டியிருப்பதோடு வெளியில் காரணமின்றி உன்னோடு வரக் கூடாத நிலையில் இருப்பதால் இங்குள்ளவர்களிது விஷய மறியமுடியாத முன்சென்றுவிடு.
அக்காலத்தில் கோவலன் நாடகத்தை ஒன்றுக்கு மேற் பட்ட கம்பெனியார் நடத்தினர். அதனால் பாத்திரங்களின் உரையாடலும் பாடல்களும் கம்பெனிக்குக் கம்பெனி மாறுபட்டிருக்கும்.
‘ஸ்பெஷல் நாடகம்‘
இது தவிர ‘ஸ்பெஷல் நாடகம்’ என்று பெயரிட்டு சில பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிப்பதுமுண்டு. காட்சிகளில் மாறுதலிருக்காது. ஆனால், உரையாடல் அவரவர் திறமைக்கேற்ப மாறிவிடுவதுண்டு. அப்படியே பாடலிலும் மாறுதலுண்டு. மேலே தந்தவை சங்கரதாசர் படைத்தவை.
மணமகன் கோவலனை மாதவி அழைப்பதன் பாடலிலேயும் மாறுதலுண்டு. இதோ, மாதவி எறிந்து மாலை கோவலன் கழுத்தில் விழுந்தது கண்டதும் மாதவிக்கும் கோவலனுக்கும் கவிதை வடிவில் நடக்கும் வாதம் வருமாறு:
மாதவி: எழுந்தென்னுடன் வாரும் என் துரையே!
கோவ: எங்கென்னை யழைக்கிறாய் இயம்பு மங்கையே!
மாதவி: என்னூருக்குப் போக நானுன்னை யழைக் கிறேன்.
கோவ: உன்னூருக்கு வந்து நான் என்னை செய்வது?
மாதவி: இது தெரியாத மனிதருளரோ எழுந்தென் னுடன் வாரும் வாரும்.
நடனப்பரத்தை யொருத்தி தன்னூருக்கு அழைத்தால் ‘உன்னூருக்கு வந்தங்கு நான் என்ன செய்வது?’ என்று கோவலன் அப்பாவித்தனமாகக் கேட்கும் போது அவை முழுவதும் சிரிப்பொலி எழும்.
முற்கால நாடகத்தில் வசனத்தையே ‘ஓரடிச் சந்தம்’ என்னும் பெயரில் சந்தத்தோடு பாடுவார்கள். ஹார்மோனியம், மத்தளம், தாளம் அத்தனையும் தேவை. இப்போது புதுக் கவிதை என்னும் பெயரில் ‘தனிச்சீர்’ என்பதுபோல தனிச் சொற்களைக் கொண்டு எழுதுகிறார்களே அது போலத்தான்.
மாதவி– கோவலன் வாதம்
சங்கரதாசர் பாய்ஸ் கம்பெனி நாடகத்தைத் தவிர வேறு சில பாய்ஸ் கம்பெனிகளில் கோவலன்- கண்ணகி திருமணத்தில் கோவலனுக்கும் மாதவிக்கும் நடக்கும் ஓரடிச் சந்த விவாதம் வேறுவிதமாக இருக்கும். வெறும் சொல் ஜாலந்தான்.
மாதவி: எழுந்தென்னுடன் வாரும் என்துரையே!
கோவ: எங்கெனை யழைக்கிறாய் இயம்பு மங்கையே!
மாதவி: என்னூருக்குப் போக நானுன்னை யழைக் கிறேன்.
கோவ: உன்னூருக்கு வந்தங்கு நானென்ன செய்வது?
மாதவி: இது தெரியாத மனிதருளரோ எழுந் தென்னுடன் வாரும் வாரும்.
கோவ: செல்லடி செல்லடி ‘சினமது மிகுகுது செல்லடி’
இதற்குமேல் மாதவியாள் தன் கோரிக்கையைக் குறைத்துக் கொண்டு தான் வீசிய பொன்மாலையைத் திருப்பித் தந்துவிட்டால் தான் போய் விடுவதாகக் கூறுவாள்.
மாதவி: மன்னா தந்திடுவீர்!
கோவ: என்னதான் கேட்கிறாய்?
மாதவி: என்றன் மாலைதனை?
கோவ: மாலை எங்கேயடி!
மாதவி: உன் கழுத்தில் பாரு.
கோவ: (தன் கழுத்தைப் பார்த்துவிட்டு கழுத்தில் மாலை இருப்பதறிந்ததும்) ஓஹோஹோ ஈதேது?
மாலையைக் கழற்றி மாதவியிடம் தர கோவலன் முயல்வான். ஆனால், மாலையைக் கழற்ற முடியாமல் தவிப்பான். பின்னர் மாலையோ கழுத்தைவிட்டு வருவதற் கேதுவில்லை. மாலை வாங்காமலிந்த மங்கையும் போவ தில்லை. மாலையாய் வந்த ஈசா வந்தென்னை ரட்சிப் பாயே- என்று இறைவனிடம் வேண்டுவான்!
(அவர் வரமாட்டார்)
திருக்கடையூர்; தேரோடும் வீதியில்
பின்னர், மாதவியாள் மனமாற்றமடைந்து, அறிவை மயக்கும் மை தடவிய வெற்றிலை தாம்பூலத்தை கோவலன் கையில் தர அவன் அருந்துவான்.
மாதவி: போய் வருவேன்; சபையோரே போய் வருவேன் நான்.
கோவ: பூவையே நீ என்னை விட்டுப் போகலாமோ தான்.
மாதவி: நியாயமில்லை என்று நீரும் முன் சொல்லிய தேன்?
கோவலன்: (மாதவி தந்த மயக்க மருந்து கலந்த தாம்பூலத்தை அருந்தியதால் தன் முந்தைய நிலையை மறந்தவனாகி) ‘நான் எப்போது சொன்னேனடி நாரியே பொய்யே!
மாதவி: நாட்டிலுள்ளோர் ஏசிடுவார் கூட்டி யான் போகேன்.
கோவலன்: வாட்டுதடி. உன் ஆசை தோட்டி யானேன் நான்!
மாதவி: வம்பு செய்யாதே!
கோவலன்: மனத்தெம்புதான் மானே!
மாதவி: (இந்த வாதத்தை முடித்துவிடக் கருதி) “திருக்கடை யூர் தேரோடும் வீதி!” என்று தன் விலாசத்தை அவையோரனைவரும் அறிய கோவலனுக்குத் தந்து விட்டுப் போய்விடுகிறள்.)
பின்னர் கோவலன் சற்றுமுன்தான் தாலி கட்டி மணந்த கண்ணகியைக் கைவிட்டு மாதவியைத் தேடி ஓடுவான்.
சோழநாட்டில் புகார் நகரையடுத்துள்ளது திருக் கடையூர் என்னும் சிற்றூர். அங்கு கோவலன் சென்று தேரோடும் வீதியைத் தேடிப்பிடித்து மாதவியைக் கண்டு அவளிடம் அடைக்கலம் புகுவான்.
கண்ணகி-கோவலன் பிறப்பு பற்றி சிலப்பதிகாரத்திற்கு மாறுபட்ட செய்திகளை புகழேந்தியின் பெயராலுள்ள கோவலன் கதை கூறுகின்றது.
இளங்கோவடிகள், கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்க்கன் என்றும் கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான் என்றும் கூறிவிட்டு தாய்மார் இருவர் பெயரையும் கூறாமல் விட்டுவிட்டார். ஏனென்பதை உணர்ந்தறிய முடியவில்லை. ஆனால் புகழேந்தியின் கோவலன் கதையில் கோவலன் தாயின் பெயர் வர்ண மாலையென்றும் கண்ணகியின் அன்னை பெயர் கோவிலிங்கி என்றும் கூறப்பட்டுள்ளது.
தாயார் பெயரில்லாததேன்?
முதல் நூலான சிலம்பில் பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவியின் பெயர் கோப்பெருந்தேவியென்று கூறியிருக்க கோவலன் கதையில் புகழேந்தி ‘தீக்கநாக்காள்’ என்று மாற்றியிருக்கிறார். சிலம்பில் வரும் கோப்பெருந்தேவி என்ற பெயரில் தமிழின் அழகு வெளிப்படுகிறது. இந்த மாறுதல் தேவையென்று பெரும்புலவர் புகழேந்தியார் நினைக்கக் காரணமென்னவோ? ‘தீக்கநாக்காள்’ என்பதன் பொருள் வெளியிடப்படவில்லை.
மதுரை சொக்கலிங்கப் பெருமான் காளிமாதேவியைக் கனி வடிவிலாக்கி அதை கோவிலிங்கியிடம் தர, அந்தக் கனியே-அதாவது,அந்தக் காளிகாதேவியே கண்ணகியாகப் பிறப்பதாகக் கோவலன் கதை கூறுகின்றது.
நல்ல வேளையாக தவத்திரு சங்கரதாசர் நமது நாடகத்தில் கண்ணகியை காளியின் அவதாரமென்று கூறவில்லை. சிலப்பதிகாரத்திலும் அடியார்க்கு நல்லார் புராண பாணியில் கண்ணகியை துர்க்கையின் அவதார மென்று விளக்கந் தருகிறார்.
சங்கரதாசர், கோவலன்- கண்ணகி திருமணக் காட்சியில் நடனமங்கை மாதவிக்கே பிரதான்யந் தந்து விட்டார். அது அவர் காலத்தில் திருமணமென்றால் தாசியின் நடனமிருந்தாக வேண்டுமென்ற நியதி நடை முறையிலிருந்தது போலும்! இளங்கோ நடனமாடும் நங்கையான மாதவிக்கு முதன்மை தராமல் நடனக் கலைக்கே முதன்மை தந்துள்ளார் அதற்கெனவே அரங்கேற்று காதை என ஒரு தனிக்காதையைப் படைத்து தமிழருக்கேவுரிய நடனக் கலையின் சரித்திரமாகவும் சாத்திரமாகவும் அந்தக் காதையைப் படைத்து விட்டார். கோவலன்- கண்ணகி திருமணத்திற்கும் மாதவியின் நடன அரங்கேற்றத்திற்கும் தொடர்பில்லாமல் செய்து விட்டார்.
கண்ணகியின் அதிசயப் பிறப்பு
புகழேந்தியின் கோவலன் கதையில் கண்ணகியின் பிறப்பு பற்றி சுவையான மூடநம்பிக்கைகளில் முதலிடம் பெறத்தக்க செய்தியையும் புகழேந்தி சேர்த்து வைத்துள்ளார். அதையும் கோவலன் கதையிலுள்ளபடி பார்ப்போம்! நல்லவேளையாக, கண்ணகி பிறப்பதற்கு முன்பே கோவலன் பிறந்ததாகத்தான் கதை கூறுகிறது. அந்தக் கதையை புகழேந்தி வருணித்துள்ள படியே பார்ப்போம்:
அப்போது சொக்கலிங்கம் ஆண்டவ ரேதுசெய்வார் முத்துச்செட்டி யின்தேவி பொய்குழலான் வர்ணமாலை வர்ணமாலை மயில் னக்குமைந்தன்வரந்தான் கொடுத்தார் வர்ணமாலை கர்ப்பமதில்மைந்தரையுண்டு பண்ணார் பத்துமாதம் சென்றபின்பு பாலகனும் தான்பிறந்தான் கோவலனென்றவர்க்குக் கொடுத்தார்கள் பேருமப்போ அட்டாளுஞ் சொக்கரைப்போல் அழகுடைய மன்னவனும் தேமல் பிறையழகன் தென்ளுமணி வாசகனார்
உருமாலைக் கட்டழகன் உத்தமனார் கோவலனும் அள்ளித் தெளித்ததுபோல் அழகுசிறுதேம்பல் மாங்கா வடிவழகன் மாதளம்பூ மேனியனாம் செக்கச் சிவந்தவன்காண் செங்கீரைத் தண்டழகன் அட்டாளுஞ் சொக்கரைப்போல் அழகுடைய மன்னவன்காண்
சோமன் கட்டிவீதிவந்தால் சுவாமிசொக்க ரேசரென் பார்கள் மண்டைகட்டி வீதிவந்தால் மதுரைவாழ் சொக்க பார்த்தால் முதலியென்பார் பார்ப்பாரச் ரென்பார் சாதியென்பார் கண்டால் முதலியென்பார் கன்னடிய சாதியென்பார் இப்படிக்கு கோவலனும் இருந்துவரும் நாளையிலே
இளங்கோவடிகள் தாம் படைத்த சிலப்பதிகார காப்பியத்திலே முதற்காதைக்கு மங்கல வாழ்த்து காதை எனப் பெயரிட்டு அதற்கேற்ப கண்ணகி-கோவலன் திருமணத்தை மட்டுமே கூறுகிறார்.
இளங்கோவின் சித்திரம்
அதற்கு முன்னுள்ள வரிகளில் அவர்கள் பிறப்பு பற்றிச் சில வார்த்தைகளிலே சொல்லிவிட்டு மணவறையில் அவர்களைக் காட்டுகிறார். இதோ அந்த வரிகள் :
நாகநீள் நகரொடு நாகநா டதனொடு,
போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னின் மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்,
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள் அவளுந்தான்,
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்,
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள், பெயர்மன்னுங் கண்ணகியாள் மன்னோ;
ஆங்கு,
பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்: அவனுந்தான்,
மண்தேய்த்த புகழினான், மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினர் ராயத்துப் பாராட்டிக் கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற் கொண்டேத்துங் கிழமையான், கோவலனென்பான் மன்னோ;
அவரை,
இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் மணவணி காண மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி,
யானை எருத்தத்து அணியிழையார் மேலிரீஇ,
மாநகர்க் கீந்தார் மணம்.
அவ்வழி,
முரசியம்பின; முருடதிர்ந்தன; முறையெழுந்தன;
பணிலம்; வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள்மங்கல அணியெழுந்தது;
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்,
வான்னூர் மதியம் சகடணைய வானத்துச் சாவி யொருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்கள் நோன்பென்னை; விரையினர்,
மலரினர், விளங்கு மேனியர், உரையினர்,
பாட்டினர் ஒசித்த நோக்கினர், சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர் போதொடு விரிகூந்த பொலனறுங்கொடியன்னார் காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதறு கெனஏத்திச் சின்மலர் கொடு தூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி யேற்றினார் தங்கிய
இப்பால் இமயத் திருத்தீய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டுழையதா; எப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோ னெனவே.
கண்ணகியை மறந்தான்!
சிலப்பதிகாரத்திலே மாதவியின் வீடு சென்று தங்கிய பின் கோவலன் அங்கிருந்தவண்ணம் கடிதமெழுதி தந்தை மாசாத்துவானிடமிருந்தோ மனைவி கண்ணகியிட மிருந்தோ பொருள் பறித்ததாகவோ, தாசி மாதவி வீட்டி லுள்ள ‘மாமா’வை அனுப்பிப் பொருள் வாங்கி வரச் செய்ததாகவோ செய்தி இல்லை. மாமா என்ற அசிங்கப் பாத்திரமே சிலம்பில் கிடையாது.
கோவலன் வறுமை யெய்தியதற்குக் காரணம் தன்குலத் தொழிலான வாணிபத்திலீடுபட்டுப் பொருள் பெருக்காது மாதவியின் மையலில் சிக்கி அவளுடன் ஆடியும் பாடியும் மயங்கியிருந்ததுதான் என்று இளங்கோ படிப்போரை உய்த்துணரச் செய்கிறார்.
கோவலன் பொருளை ஈட்டாததோடு, செலவழித்ததும் தான தரும வழிகளில்தான் என்பதை அவனுடைய பார்ப்பனத்தோழன் மாடலன் அவனிடமே கூறுகிறான்.
புகழேந்தியாரின் கோவலன் கதையிலும் சங்கர தாசரின் கோவலன் சரித்திர நாடகத்திலும் தன் தந்தை மாசாத்துவானிடமிருந்து கப்பல் கப்பலாகப் பொருளைக் கொண்டு வந்து மாதவியாள் சொன்னபடி யெல்லாம் செலவழித்து வறுமையுற்றதாகக் கூறப்படுகிறது. நாடகாசிரியர் தம் காலத்துத் தாசியாக்கி காட்டுகிறார் உத்தமி மாதவியை.
இளங்கோவடிகள் ‘மாதவி மனைக்குக் கோவலன் சென்றபின் கண்ணகியின் இல்லத்தையே மறந்து விடுகிறான், என்கிறார். ஆம்; ‘விடுதலறியா விருப்பினன் ஆயினன்; வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்து’ என்கிறார்.
யாழால் வந்த வினை
‘கானல் வரி’ காதையில் மாதவி பாடியபோது வெளி யிட்ட இரு பொருளுடைய கருத்தை வெறுத்து அவளைக் கைவிட்டு கண்ணகி இல்லம் வரும்வரை மாசாத்துவான் மகன் தன் பத்தினியின் நினைப்பற்றவனாகவே இருந் தான்.
20-ம் நூற்றாண்டின் தாசியாக மாதவியையும் தாசியின் மையலில் சிக்கிய காமவெறியனாக கோவலனையும் காட்டுவதே சங்கரதாசரின் குறிக்கோள். இல்லையேல், நாடகத்தைப் பார்க்க கொட்டகையிலே ரசிகர்கள் திரள மாட்டார்களல்லவா! அதனால்தான், ‘சங்கீத கோவலன்’ எனப் பெயரிட்டு விளம்பரப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திருக்கடையூரில் கோவலன்-மாதவியின் நிலை இதுவாக, காவிரிப்பூம்பட்டினத்தில் கண்ணகியின் நிலையை தவத்திரு சங்கரதாசர் கோவலன் சரித்திர நாடகத்தில் எழுதியுள்ளபடி பார்ப்போம் :
கண்ணகி ஒருநாள் வழக்கம்போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு நிலைக் கண்ணாடியின் முன்பு நின்று பார்க்கிறாள். கணவன் கோவலன் திருமண நாளன்று தன் கழுத்தில் கட்டிய மங்கல நாண் இருப்பதை அப்போது தான் முதன்முதலாகப் பார்க்கிறாள். உடனே தன் தோழி தேவந்தியைப் பார்த்து,
‘கழுத்தினில் மாங்கல்ய மிருக்குதடி எனக்குக் கணவ னெங்கே சொல்லடி‘ (கழுத்)
என்று பல்லவி பாட ஆரம்பித்து அடுத்து அநுபல்லவியும் பாடி அதையுமடுத்து சரணம் என ஒரு கீர்த்தனையையே பாடி முடிக்கிறாள். ‘கழுத்தில் தாலியிருக்க கணவ னெங்கே?’என்ற அதிர்ச்சி மிக்க செய்தியைக் கூட கீர்த்தனை வாயிலாகத்தான் பாடி முடிக்கச் செய்வது அந்நாளைய நாடகாசிரியர் வழக்கம். ஆனால், அந்தக் கீர்த்தனையின் பொருளையும் தாசர் வசனத்தில் தந்திருக்கிறார் அதையும் பார்ப்போம் :
பாட்டு! பாட்டு! பாட்டு!
தோழி தேவந்தியும் இசைப் பாட்டொன்றின் மூலந் தான் கண்ணகிக்கு பதிலளிக்கிறாள்.
“அடி, தேவந்தி! இது என்ன ஆச்சரியமாக இருக்கிறது? என் கழுத்தில் தாலி எப்படி வந்தது? இல்லறமென்னும் குடும்ப பாரத்தைச் சுமந்து நடத்தக் கூடிய பெரிய மனுஷி போலல்லவா காணப்படுகிறேன்? உண்மையில் எனக்கொரு நாயகன் வாய்த்திருக்கிறாரா? அப்படியானால், இதுவரை அவரெங்கே போயிருக்கிறார்? இவ்விஷயத்தைப் பற்றிய சமாச்சாரம் உனக்குத் தெரிந்தால் சீக்கிரம் சொல்?”
‘கோவலன்’-‘அரிச்சந்திரா’ ஆகிய இரண்டு நாடகங்களில் இசைப் பாடல்களை அதிகமாகப் பயன்படுத்துவார்கள் நாடகக்காரர்கள். ஆனால், ‘சங்கீத கோவலன்’ என்பது போல சங்கீத என்ற அடைமொழி கொடுத்து அரிச்சந்திரா நாடகத்தை விளம்பரப்படுத்துவதில்லை.
சோழநாட்டில் மாதவியின் ஊரான-அதாவது நடன மாடும் பரத்தையர் வாழும் முகாமான திருக்கடையூருக்குச் சென்ற பின் அங்கு அவன் பல ஆண்டுகள் தங்கி விடுகிறான் என்கிறார் இளங்கோவடிகள்.
‘கண்ணகியோடு கோவலன் வாழ்ந்த காலத்தைக் குறிப்பிடுமிடத்து யாண்டு சில கழிந்தன’ என்கிறார் இளங்கோ. மாதவியுடன் அவன் வாழ்ந்த ஆண்டுகள் பலவாக இருக்கலாம் என்றும் உணர்த்தாமல் உணர்த்துகிறார்.
கண்ணகியும் கோவலனும் துய்க்க வேண்டிய இன்பங் களையெல்லாம் குறைவறத் துய்த்தனர் என்றும் சிலப்பதிகார ஆசிரியர் கூறுகிறார். அதையும் பார்ப்போம் :
தூமப் பணிக ளொன்றித்
தோய்ந்தா லென வொருவார்
காமர் மனைவி யெனக்
கைகலந்து—நாமம்
தொலையாத இன்பமெலாந்
துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல்
நின்று
என்று வெண்பாவால் விளக்குகிறார். ஆம்; காமனும் ரதியும் போல வாழ்க்கை இன்பங்கள் எத்தனையுண்டோ அத்தனையையும் துய்த்தார்களாம்.
கணவனுக்கு காதலின்பங்களைத் தராத அப்பாவிப் பெண்ணாக கண்ணகி இருந்ததனாற்றான் கோவலன் மாதவியிடம் சென்றான் என்று கூறுவோருமுண்டு.
இதற்கு மாறாக புகழேந்தியின் கோவலன் கதையில் கண்ணகிக்கு ஐந்து வயதிலேயே திருமணம் நடந்ததாகச் சொல்லுகிறார் புகழேந்தியார். அது வருமாறு:
மாலைத ரிக்கையிலே வாய்விட்டு தானழுதாள் மாங்கனியைக் கொடுத்து மாலையிட்டார் கோவலனார்
சங்கரதாசர் தாம் புனைந்த நாடக நூலில் கண்ணகிக்கு ஐந்து வயதாக இருந்தபோது திருமணம் நடந்ததாகச் சொல்லுகிறார்.
இங்கு கண்ணகியின் பிறப்பு பற்றி கோவலன் கதை தருகிற செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டியிருக் கிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு 12 வயதில் திருமணம் நடக்கிறது. கோவலனுக்கு வயது 16. திருமணம் முடிந்த பின் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்து விடுகிறாள் கோவலன் தாய். அவர்கள் அனுபவித்த முதலிரவும் கூறப்படுகிறது சிலப்பதிகாரத்திலே!
அதற்கெனவே ‘மனையறம் படுத்த காதை’ எனத் தனியாக ஒரு காதையையே படைத்து மணமக்கள் முதலிரவு இன்பம் துய்த்ததைக் கூறுகிறார். அப்போது கோவலன் கண்ணகி அழகை வருணித்ததையும் சற்று விரிவாகவே கூறுகிறார் துறவி நிலையிலுள்ள இளங்கோவடிகள். இதோ அந்த வருணனை :
‘முதலிரவு’
எழுநிலை மாடங்களைக் கொண்ட மாளிகையில் நிலா முற்றத்தில் (மேல் மாடியில்) முதலிரவுக்கென்றே மணமகனின் பெற்றோர் தந்த கட்டிலில் ஒருவரை ஒருவர் தழுவிய நிலையில்,
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
தீராக் காதலிற் றிருமுகநோக்கிக்
கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை
என்கிறார் சிலப்பதிகார ஆசிரியர். இனி, மணமகளான கண்ணகியை மணமகனான கோவலன் வருணிப்பதைப்
பார்ப்போம் :
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே யென்கோ!
அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ?
யாழியிடைப் பிறவா விசையே யென்கோ?
தாழிருங் கூந்தல் தையால் நின்னை…
(சிலம்பு. 2: 73-80)
நான் சிலப்பதிகாரப் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் புலவர் புகழேந்தியின் பெயராலுள்ள கோவலன் கதையும் தவத்திரு சங்கரதாச சுவாமிகள் பெயரால் அவரது நாடகக் குழுவினராலேயே நடத்தப்பட்டு வந்த கோவலன் சரித்திரமும் நாட்டு மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தது.
கதையைப் பரப்பிய தொண்டு
புலவர் புகழேந்தியார் நளவெண்பா, என்னும் பெயரால் நிடத தேசத்து மன்னன் நளனையும் அவன் மனைவி தமயந்தியையும் கொண்டு புனைந்ததாகும். வெண்பாவிற் புகழேந்தி என்ற சிறப்புப் பெயர்பெற்று வெண்பாக் களாலேயே நளன் கதையைப் பாடி வைத்தார் புகழேந்தி. ஆனால், நளவெண்பாவிலும் சரி; கோவலன் கதையிலும் சரி; புலமை கொஞ்சங் கூடப் பொருந்தவில்லை. புலமையில் புகழேந்தியின் இரண்டு வெண்பாக்களையும் கோவலன் கதையின் சில வரிகளையும் பார்ப்போம்.
கதையை யொட்டிய சில படங்களும் என்னிடமுள்ள நூலில் தரப்பட்டுள்ளன. ‘ஐதீகப் படங்களுடன்’ என்று முகப்புப் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
‘அம்மானை இலக்கியம்’ என்று பெயர் பெற்ற நூல்கள்தான் முற்காலத்தில் தமிழிலுள்ள பழைய இலக்கியங் களை குறிப்பாக, இராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்களை சாமான்யர்களும் தாங்களே படித்தோ, படித்தோர் சொல்லக் கேட்டோ அறியலாயினர். இது, ஒரு பேரியக்கமாகவே நடந்ததெனலாம். அந்த வகையில் சிலப்பதிகாரத்தை யொட்டிய புகழேந்தியின் கோவலன் கதை மூன்றாந் தரமானதாயினும் கண்ணகியின் கதையை அழியவிடாமல் காத்ததெனலாம். அதற்காக தமிழர் அந்த நூலைப் படைத்தவர்களுக்கு நன்றி யுடையவர்களாவோம்.
தெருக் கூத்துக்கள்
பிற்காலத்தில் வந்த நாடகங்கள் பலரால் இயற்றப்பட்டன. அவர்களுள் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்று நாடக உலகினரால் போற்றப்பெறும் டி. டி. சங்கரதாஸ் சுவாமிகளே முதலிடம் பெறுகிறார். உண்மையில் சிலப்பதிகாரத்தை கதையளவிலே தரக்குறைவாகவேனும் பாமர மக்களிடம் பரப்பி வந்தவர்கள் தெருக்கூத்துக் காரர்களேயாவர். சங்கரதாசர் நடத்திய நாடகம் வேறு; தெருக்கூத்து வேறு. எப்படியோ, சிவஞானம் தோன்றி தமிழரசு இயக்கமும் பிறக்கும் வரை கண்ணகி கதை காப்பாற்றப்பட்டதற்காக மகிழ்ச்சியடையலாம்.
புகழேந்திப் புலவரின் கோவலன் சரித்திரம் சிலப்பதிகாரத்தை விடவும் மிகவும் தரக்குறைவான தெருக் கூத்துக் காட்சிகள். அவற்றிலே சிலப்பதிகாரப் பாத்திரங்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டன. கோவலன் கோவிலனாகவும் கண்ணகியாள் ‘கர்ணகை’யாகவும் மாதவியாள் ‘மாதகி’யென்றும் அழைக்கப்பட்டனர். பொதுமக்களின் உரையாடலிலும் இந்தப் பிழைபட்ட பெயர்களே வழங்கலாயின.
இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம் கண்ணகியின் தந்தையை ‘மாநாய்க்கன்’ என்கிறது. அதுபோல, கோவலன் தந்தையை ‘மாசாத்துவான்’ என்கிறது. ஆனால், புகழேந்தியின் அம்மானை நூலில் மாநாய்க்கன் மாநாய்கன் எனப்படுகிறான். கோவலனின் தந்தை ‘மாசாத்துவான்’ எனப்படுகிறான்.
நல்லவேளையாக, கோவலன் கண்ணகி பெயர்கள் மட்டும் சங்கரதாசரின் நாடகத்தில் மாற்றப்படவில்லை.
ஆனால், அதில்கூட கண்ணகியின் தந்தை பெயர் மாநாகன் செட்டி என்றும் கோவலன் தந்தையின் பெயர் மாச்சோட்டான் செட்டி என்றும் சொல்லப்பட்டிருக் கின்றன.
வில்லன் பாத்திரத்தை ‘பொற்கொல்லன்’ என்றே சொன்னார் இளங்கோவடிகள் ஆம்; தொழிலின் பெயரால் தான் குறிப்பிட்டார்! ஆனால் புகழேந்தியின் பெயராலுள்ள அம்மானை இலக்கியத்தில் ‘வஞ்சிபத்தன்’ என புதுப்பெயர் தந்திருக்கிறார் புகழேந்தி. சங்கரதாசரும் அதே பெயரைப் பயன்படுத்துகிறார். நாடகத்திற்கு வில்லனுக்கென ஒரு பெயர் தேவைதானே! பெயரின் பின் பகுதியிலுள்ள பத்தன் என்பது இக்கால வழக்குப்படி தொழிற்பெயர்தான். அதற்கு முன்னேயுள்ள ‘வஞ்சி’ என்னும் அடைமொழி வஞ்சகன் எனப் பொருள் தரும். அது வில்லனுக்குரிய பெயர்தானே. இந்தப் பெயரை புகழேந்தியின் அம்மானை இலக்கியத்திலிருந்து இரவல் பெற்றுக்கொள்கிறார் நாடக ஆசிரியர் சங்கரதாசர்.
விசாரணைக்குப் பின் தண்டனை
தாசரின் நாடகத்தில் பொற்கொல்லன் கோவலனுக் கெதிராகக் கொண்டுவந்த வழக்கை தீர விசாரித்துத்தான் பாண்டியன் நெடுஞ்செழியன் தண்டிக்கிறானாதலால் நன்மதி (முதல் மந்திரி)— துன்மதி (2வது மந்திரி) என சிலப்பதிகாரத்திலல்லாத பெயர்களால் இரண்டு புதிய பாத்திரங்களை தாசர் புகுத்தியுள்ளார்.
சிலப்பதிகாரத்தில் கோவலன் விசாரணையின்றி பொற்கொல்லன் சொல்லை நம்பி கோவலனுக்கு பாண்டியன் மரண தண்டனை தருகிறான். ஆகவே புகழேந்தியும் சங்கரதாசரும் செய்துள்ள மாறுதல் அதாவது, இரு மந்திரிகளைப் புகுத்தி அவர்களுடைய ஆலோசனையைக் கேட்ட பின் தண்டித்தது அரச நீதி தானே! இந்த மாறுதல் சிலம்பின் தரத்தை உயர்த்தி விடுகிறதல்லவா!
புகழேந்தியின் செந்தமிழ்ப் புலமைக்கு- கற்பனைத் திறத்திற்கு இரண்டு வெண்பாக்களைச் சான்று பார்ப்போம்:
நாற்குணமும் நாற்படையாய் ஐம்புலனும்
நல்லமைச்சாய்
ஆர்க்குஞ் சிலம்பே அணிமுரசாய்–வேற்படையும்
வாளுமே கண்ணாய் வதன மகிக்குடைகீழ்
ஆளுமே பெண்மை அரசு.
மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டாது இடையென்று வாய்விட்டு–நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு
வெண்பாவிற் புகழேந்தி!
‘வெண்பாவிற் புகழேந்தி’ என்பது பொருந்துந்தானே! அவர் பெயரை இரவல் பெற்று எழுதிய கோவலன் கதையிலும் சில வரிகளைப் பார்ப்போம்:
பட்டணமாம் பட்டணமாம் காவிரிப்பூம் பட்டணமாம் கஞ்சிகொண்டு மதவடைக்கும் காவிரிப்பூம் பட்டணமாம் காவிரிப்பூம்பட்டணத்தில் கனகமணி வர்த்தகர்கள் மாநாகன் செட்டி என்றும் மாச்சோட்டான்செட்டி என்றும் அத்தானும் அத்தானும் அழகுகப்பலோட்டிவந்தார் மைத்துனனும் மைத்துனனும் வர்ணகப்பலோட்டி வந்தார் இரவோடு ராத்திரித் திரும்பும் ஏலலட்சம் சோங்குகப்பல் பகலோடுபகல் திரும்பும் பத்துலட்சம் சோங்குகப்பல் படவிலரிசிவரும் பட்டணத்துமாலைவரும் சோங்குமிளகுவரும் சொர்ணகப்பலேறிவரும் இப்படிக்குத்தாமிருந்தார் இன்பமுடன் வர்த்தகர்கள்
இந்நூலில் புகழேந்திப் புலவர் இயற்றிய ‘பெரிய எழுத்து கோவலன் கதை’ என்று முகப்பில் தரப்பட்டிருக் கிறது. ஸ்ரீமகள் கம்பெனியாரால் பிரசுரிக்கப் பெற்றது. ‘பெரிய எழுத்து’ என்று தரப்பட்டுள்ளதால் அந்நாளில் பார்வை குறைந்த முதியவர்களும் படிக்கப் பயன்பட்ட தென்பது புலனாகும். எனக்குக் கிடைத்த நூல் மிகவும் பழையது. 104 பக்கம் வரைதானுள்ளது. அதற்குமேல் இல்லை.
வீட்டிற்கு விடுகதை!
நான் சிறுபிள்ளையாக இருந்தபோது வீட்டிற்கு வீடு இரவு நேரத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கூடுவார்கள் ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பார்கள். என் வீட்டில் என் அன்னையார் சிவகாமி அவர்கள்தான் படிப்பார். நானும் படிப்பதுண்டு.
அது நாட்டியம் முடிந்ததும் நான் ஒரு பொன் மாலையைச் சுற்றி எறிவேன். அது யார் கழுத்தில் விழுகிறதோ அவரை மணவாளராக ஏற்று என்னுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதாகும். அது அவையோராலும் மணமக்களின் பெற்றோராலும் ஏற்கப்படுகிறது. பின்னர் மாதவியின் நாட்டியம் தொடங்குகிறது.
சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணமான சில ஆண்டுகளுப் பின் சோழ மன்னன் அவையில் நடன அரங்கேற்றம் நடக்கிறது. அரங்கேற்றும் காதை என்று தனியாக ஒரு காதையில் நடன அரங்கேற்ற பற்றி இளங்கோவடிகள் விரிவாகக் கூறுகிறார். அதிலே யாழாசிரியர் முழவாசிரியன் நடன ஆசிரியன் தமிழாசிரியர் ஆகியோரின் புலமைத் திறன் பற்றி இளங்கோ விரிவாகக் கூறுகிறார். தமிழாசிரியரைப்பற்றிக் கூறுங்கால்,
“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய தமிழ்முழு தறிந்த தன்மையன்“
என்கிறார். இப்போதெல்லாம் நாட்டியம் பயில்வோருக்கோ பயிற்றுவிப்போருக்கோ தமிழில் இலக்கிய – இலக்கண அறிவு தேவை இல்லையென்றாகிவிட்டது.
வணிகப் பிரமுகனான மாசாத்துவான் மகன் கோவலனும் அரசவைக்கு வந்திருந்ததாக அறிய முடிகிறது சிலம்பிலே! தாசர் நாடகத்திலோ கோவலன் மணமகன் கோலத்தில் அவையிலிருந்தது வெளிப்படையாகவே கூறப் படுகிறது.
மாதவி நாட்டியம் முடிந்து முன்கூட்டியே அறிந்த நிபந்தனைப்படி பொன்னுருவி மாலை யொன்றை கழற்றி எறியுமுன் மாதவி பாடும் பாடல் வருமாறு:
மாலை யொன்று கையில்கொண்டு சுழற்றிடும்
மண்டபத்தில் நின்று வீசிடுவேன்–அது
வந்து கழுத்தில் விழுந்தவரை மண
வாளனெனக் கொண்டகன்றிடுவேன்
இது சம்மத மெனில்
பதில் மொழி தந்திடுமின்
இப்போதே நடனமாடுவதற்கு நான்
எத்தனஞ் செய்திடுவேன்.
புகழேந்திப் புலவர் பெயரால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள கோவலன் கதை என்னும் அம்மானை இலக்கியமும் நாடகப் பேராசிரியர் தவத்திரு சங்கரதாசர் எழுதி நாடகமாக நடிக்கப்பட்ட கோவலன் சரித்திரமும் பாமர மக்களிலிருந்து பண்டிதப் பெருமக்கள் வரை செல்வாக்கு பெற்றிருந்ததை நினைவில் கொண்டால் அவற்றிற்கு காலத்தால் 1800 ஆண்டுகள் முற்பட்டதான சிலப்பதிகாரத்தை மக்களிடையில் பரப்புவதில் உள்ள கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அழிவிலிருந்து சிலப்பதிகார ஓலைச் சுவடிகளை தேடிக் கொடுப்பதற் கென்றே அவதரித்தார் என்று சொல்லலாம். ஆனால், அதற்குப்பின் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டதே தவிர பொதுமக்களிடையில் இளங்கோ தந்த வடிவில் சிலப்பதிகாரம் பரவவில்லை என்பதை ஆட்சேபணை யின்றி எவரும் அங்கீகரிப்பரென்பதில் ஐயமில்லை.
தாசரின் நாடக இலக்கியத்தைவிட அம்மானை இலக்கியமான கோவலன் கதை காலத்தால் சில தலைமுறைகள் முற்பட்டதாகவே இருக்க வேண்டும். இதை கோவலன் கதை புகழேந்திப் புலவரால் அல்லாமல் வேறொருவர் எழுதி மக்கள் மத்தியில் விடப்பட்டதென்ற முடிவின்படி சொல்கிறேன். புகழேந்திப் புலவர்தான் தாசரின் எழுதினார் என்றால் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாக கோவலன் கதை யைக் கொள்ள வேண்டும்.
பிழைகள் மலிந்த கதை
கதையிலும் சரி, நாடகத்திற்கு நாடகத்திலும் சரி; பாத்திரங்களின் பெயர்கள் கூட பிழையின்றி காணப்படவில்லை. கோவலன் என்பதனை கோவிலன் எனவும் கண்ணகியை கர்ணகி என்றும் மாதவி என்பதனை மாதகி என்றும் தரப் பட்டுள்ளன. இந்தப் பிழைகளிலும் ஒருமைப்பாடு இல்லை. சில இடங்களில் மாதகி என்றும் வேறு சில இடங் களில் மாதவி என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. கண்ணகி- கோவலன் பெயர்களும் இப்படித்தான்.
தவத்திரு சங்கரதாசர் காட்சி சீன் முறைப்படி தமது பல காட்சிகளாக உருவாக்கியிருக்கிற நாடக நூலை படியால் பிழைகள் குறைத்து காணப்படுகின்றன. புகழேந்தியின் கதையில் எங்கும் பிழை என்ற அவலத்தையே பார்க்கிறோம். ‘பிழை’ என்றால் எழுத்துப்பிழை சொற்பிழை மட்டுமல்ல அமைப்பிலும் கூட பிழைகள் மலிந்துள்ளன.
சிலப்பதிகாரத்தை சமுதாயத்திலுள்ளபடி இயற்கை வழியில் இளங்கோவடிகள் படைத்திருக்கிறார். கற்பனை கதைகளும் உண்டு என்றாலும், அவை காப்பியத்தில் அழகை மிகுவிக்கும் வகையிலே அமைந்துள்ளன. சேரமுனிவர் தமிழர் சமுதாயத்தின் பண்பாட்டிற்கேற்ப சிலம்பைப் படைத்துள்ளார். வடமொழியாளரின் அவதாரச் செய்திகளை இளங்கோ பின்பற்றவில்லை.
வான்மீகி ராமாயணத்தில் சீதை மண்ணிலிருந்து பிறக்கிறாள். ராமனும் அவனுடைய சகோதரர் மூவரும் யாகத்திலிருந்து கிடைத்த அமிழ்தத்தை பங்கிட்டுக் கொடுத்ததன் விளைவாகவே பரதன், சத்துருக்கன், இலக்குவன் ஆகிய மூவரும் பிறக்கின்றனர். உண்மையைச் சொன்னால் இராமன், பரதன், இலக்குவன், சத்துருக்கன் உள்ளிட்ட நால்வரும் தசரதனுடைய விந்துக்கு பிறந்தவர்களல்லர். ஆனால், நல்ல வேளையாக கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோர் வயிற்றில் கருவுற்றுதான் பிறக்கின்றனர். அந்த அளவிலேனும் ராமன் ஆகிய நால்வரும் இயற்கையோடு ஒத்த பிறப்பாகவே கூறப்பட்டுள்ளனர். வியாச பாரதத்திலே பாஞ்சாலி நெருப்பிலே பிறக்கின்றாள்.
அவதாரங்கள்
இத்துடனன்றி, ராமாயணம்-மகாபாரதம் ஆகிய காப்பியங்களில் பாத்திரங்கள் அனைவருமே திருமாலின் திட்டப்படி அவதாரப் பிறவிகளாவர்.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலே கண்ணகியும் கோவலனும் அவரவர்கள் தந்தையின் விந்துக்கு தாயின் வயிற்றில்தான் பிறக்கின்றனர். இதிலே விசேஷம் எதுவு மில்லை. மனித சமுதாய நியதிப்படித்தான் இளங்கோவடிகள் தம்முடைய காப்பிய பாத்திரங்கள் அனைத்தையும் படைத்திருக்கிறார். இதிலே வான்மீகியையும் வியாசரையும் அவர் பின்பற்றவில்லை. இத்தனைக்கும் வான்மீ கிக்கும் வியாசருக்கும் காலத்தால் மிகவும் பிற்பட்டவர் தான் இளங்கோவடிகள்.
ஆயினும், தமிழரின் மரபைக் காப்பதிலும் தொல்காப்பியரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதிலும் இளங்கோவடிகள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறார்.
மதுரை நகரை பாண்டிய மரபைச் சார்ந்த நெடுஞ்செழியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் தான் ஆண்டிருக்கிறான்! சிலப்பதிகாரக் கதை நிகழ்ந்த காலத்திலே ஆனால், புகழேந்தியின் கோவலன் கதையிலே பாண்டியர் ஆறாயிரவர் என்று கணக்கிட்டுக் கூறப்பட்டிருக்கின்றது. வான்மீகி ராமாயணத்திலே தசரதனுடைய மனைவியர் பதினாயிரவர் என்றும், அமைச்சர்களும் அந்த எண்ணிக்கையினர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் திருப்தியடையாத தென் தமிழ் நாட்டு மகாகவியான கம்பர் பெருமான் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவரையன்றி, அறுபதினாயிரம் மனைவியரை மணந்தோ, மணக்காமலோ தசரதன் கொண்டிருந்ததாக கூறுகிறார்.
மந்திரிகளா; மந்தைகளா?
அமைச்சர்களும் சுமந்திரரோடு சேர்த்து அறுபதினாயிரவர் என்று சொல்கிறார், கம்பர். கோசலை நாட்டை தசரதன் ஆண்ட காலத்தைச் சொல்வதிலும் வான்மீகியை விட பலபடி தாண்டுகிறார் கம்பநாடர். ஆம்; வான்மீகி பதினாயிரவர் என்கிறார்.
கம்பருடைய கணக்குப்படி கோசல நாட்டு அமைச்சர்கள் அறுபதினாயிரவர். இந்தக் காலத்து அரசியலில் நிகழும் அலங்கோலங்களைப் பார்த்தால் தசரத சக்கரவர்த்தி இந்த அறுபதினாயிரம் மந்திரிகளை-மந்தைகளை எப்படித்தான் மேய்த்தாரோ என்று அனுதாபப்பட வேண்டியிருக்கிறது.
புகழேந்திப் புலவர் மந்திரிகளின் எண்ணிக்கையைப் பெருக்காமல் மன்னர்களின் எண்ணிக்கையையே பெருக்க முயன்று பாண்டி நாட்டை ஆண்ட மன்னர்களின் எண்ணிக்கை ஆறாயிரம் என்கிறார். நல்ல வேளையாக தவத்திரு சங்கரதாசர் பாண்டியர்களையும் அவர்களின் மனைவியர்களையும் அரசன் ஆண்ட காலத்தையும் மலை மலையாகப் பெருக்கி காட்டவில்லை. தமிழருடைய பண்பாட்டிலே ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’-என ஆண்கற்பு போதிக்கப்படுகின்றது. அதுபோலத்தான் ‘ஒருத்திக்கு ஒருத்தன்’ என்ற பெண்கற்பும் வற்புறுத்தப்படுகிறது.
சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் மதுரை மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் நீதியற்ற முறையில் கோவலனுக்கு மரணதண்டனை விதித்ததற்காக வருந்தி உயிர்விடுகிறான். ஆனால், தவத்திரு சங்கரதாசர் நாடகத்தில் மதுரை மன்னன் கண்ணகியின் சீற்றத்திற்கு அஞ்சி வழக்குரை காட்சியிலே தன் உயிரைக் காத்துக் கொள்ள சுற்றிச் சுற்றி ஓடுகிறான்.
காளிதேவி
சங்கரதாசரின் நாடகத்திலே முதலில் கோவலனுடைய மனைவி கண்ணகியாக தோன்றி மன்னனிடம் வழக்குரைத்து அவனுடைய தவறை உணர்த்திய பின்னர், காளிதேவியாக மாறி பயங்கரத்தோற்றத்துடன் மன்னனை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு அவனுடைய வயிற்றை தன் கைவிரல் நகங்களால் கிழித்து அதனுள் ளிருந்த குடலை தன் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொள்கிறாள். இந்த காட்சி வருமுன்னர் மேடையிலிருந்து ஒரு அறிக்கை பிறக்கும்!
தியேட்டரில் உள்ள பெண்களில் கர்ப்பிணிகள் யாரேனும் இருப்பின் கண்ணகி காளிதேவியாக மாறும் காட்சியிலே அவர்கள் தியேட்டரில் இருக்கக்கூடாது. அதற்கு முன்பே வெளியேறி விடவேண்டும் என்பதே அந்த அறிக்கை. கர்ப்பிணிகள் மட்டுமின்றி பத்தினிப் பெண் ணொருத்தி பாண்டியனை கொலை புரியும் காட்சியை காண பயந்தவர்கள் எல்லோருமே நாடகக் கொட்டகை யிலிருந்து வெளியேறுவது வழக்கம்.
கோவலன் கதையிலோ ஆறாயிரம் பாண்டியரும் கண்ணகியால் கொல்லப்பட்டுப் பழிவாங்கப்படுகின்றனர். அது காட்சிப்படாத படாத காதையல்லவா! ஆம்; கவிஞனுடைய தமிழில் வரிவடித்தில் வரும் படுகொலைதான்!
பொதுவாக சொன்னால் சிலப்பதிகார காப்பியத்தை அசிங்கப்படுத்தி அதன் கட்டுக்கோப்பையே குலைத்து, தமிழர் நாகரிகத்திற்கு முற்றிலும் மாறாக படைக்கப் பட்டுள்ளது.
சிலம்புக்கு விடுதலை
கோவலன் கதையும் சங்கரதாசரின் கோவலன் சரித்திரமும் தோற்றுவித்த இந்த அசிங்கத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் சிலப்பதிகாரத்தை மீட்டு இளங்கோ படைத்தபடி மக்களுக்கு காட்சிபடுத்த ஐம்பது ஆண்டு காலம் பாடுபட வேண்டியிருந்தது.
தலைநகரான சென்னையில் முதன் முதலில் ஒரு மாபெரும் மாநாடும் தமிழ்நாடு முழுவதிலும் எண்ணற்ற மாநாடுகளும் கண்ணகியும் கோவலனும் பிறந்த பூம்பு காரிலேயே மிகவும் சிறப்பாக மூன்று நாள் மாநாடும் நடத்த வேண்டியிருந்தது.
சென்னையில் மயிலை இலக்கிய வட்டத்தின் சார்பில் அதன் தலைவரும் மாநிலக் கல்லூரி தமிழாசிரியருமான திரு.தி.வ. மெய்கண்டார் முயற்சியால் சிலப்பதிகார வகுப்பும் (மாதத்திற்கொன்றாக தொடர்ந்து 10 மாதம்) யான் நடத்த வேண்டியிருந்தது.
சென்னை நகரில் என் இல்லத்திலும், திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டிலும் ஜார்ஜ் டவுனில் பாரதி மன்றத்திலும் வட சென்னையில் தண்டையார்பேட்டையில் மாதர்கள் சங்கத்திலுமாக சிலப்பதிகார வகுப்புகள் நடத்த வேண்டி யிருந்தது.
இந்தப் பணிக்காகவே ‘தமிழரசுக் கழகம்’ என்ற பெயரால் ஒரு கலாச்சார அமைப்பையே தோற்றுவிக்க வேண்டியிருந்தது. புலவர்கள் செய்ய வேண்டியதை- ஆனால், செய்யத் தவறியதை அரசு ஆற்றவேண்டியதை- ஆனால், ஆற்றத் தவறியதை தனியொரு மனிதனாக நானும் தனி ஒரு அமைப்பாக தமிழரசுக் கழகமும் உழைக்க வேண்டியிருந்தது.
அப்படி பணிபுரிந்தும் புலவர்களிலே சிலர் கோவலன் கதையையும் சங்கரதாசரின் நாடகத்தையும் மெய்யென்று நம்பி தமிழரசு இயக்கத்தாருடன் வாதிட்டதும் உண்டு. இந்த வாதங்களையெல்லாம் வென்ற பின்னர் இன்று மக்களிடையில் புகழேந்தியின் கோவலன் கதை மறைந்தே போயிற்று. தவத்திரு சங்கரதாசரின் கோவலன் நாடகம் மக்களிடம் மதிப்பற்று விட்டது. இப்பொழுதும் பாண்டி மண்டலத்தில் பழைய நாடகங்கள் பல நடத்தப்படுகின்றன.
தெருக்கூத்து என்ற பெயரால் பவளக்கொடி, வள்ளித் திருமணம், வீர அபிமன்யூ, அல்லி அரசாணி ஆகிய நாடகங்களெல்லாம் நடத்துவதற்கென பாண்டி மண்டலத்தில் பல நடிகர்கள் குழுக்கள் நடமாடி வருகின்றன. ஆனால், அவர்கள் கூட கோவலன் கதையை பழைய பாணியில் நடத்துவதில்லை. சிலப்பதிகாரத்தை இளங்கோ படைத்தபடி அறிமுகப்படுத்தியதன் வெற்றி இது!
முடிவு
புகழேந்தியின் கோவலன் கதைக்கும் சங்கரதாசரின் கோவலன் சரித்திரம் என்னும் நாடகத்திற்கும் இளங்கோ படைத்த சிலப்பதிகாரத்திற்குமுள்ள வேற்றுமைகளை இதற்கதிகமாக விரித்துரைக்க எனக்கு மனமில்லை. அவை மக்கள் மத்தியில் இனி செல்வாக்கு பெற முடியவே முடியாதாதலால் இத்துடன் முடிக்கின்றோம்.
முற்றும்.
★ ★ ★



