தமிழர் கண்ட காந்தி
ம. பொ. சிவஞானம்

தமிழர் கண்ட காந்தி

“காந்தியடிகள் கொல்லப்பட்டார்!”, என்ற திடுக்கிடும் செய்தி கேட்டு, உலகமே அதிர்ந்து விட்டது.

இந்திய சமுதாயத்தின் வரலாற்றிலேயே இம்மாதிரி வேதனை தரும் செய்தி வேறொன்றில்லை. அதிலும், எந்த நாட்டினர் சுதந்திரமடையவும் சுக வாழ்வு பெறவும் காந்தியடிகள் உழைத்தாரோ, அதே நாட்டின் சதிகாரக் கூட்டம் ஒன்றின் தூண்டுதலால் அவர் கொல்லப்பட்டது, உலகத்தின் முன்னர் இந்தியாவைத் தலைகுனியச் செய்துவிட்டது. கடந்த முன்னூறு ஆண்டு அடிமைத்தனத்தால் நாம் அடைந்த வெட்கத்தையும் துக்கத்தையும் காந்தியடிகள் தோன்றிப் போக்கிவிட்டார். ஆனால், காந்தியடிகளைக் கொன்ற பாதகத்தால் நேர்ந்துள்ள வெட்கத்தையும் துக்கத்தையும் போக்குவார் யார்?

பொழுது சாயும் அந்தி நேரத்தில் கடிகாரத்தைப் யார்த்துவிட்டு, “போய் வருகிறேன்” என்று புறப்பட்ட கர்மவீரர், வராமலேயே போய்விட்டார்! ஆம்; அடிகளாரின் வாழ்க்கைப் பொழுதும் சாய்ந்து விட்டது! கடிகாரம் காட்டிய நேரம், ஐயனின் மண்ணுலக வாழ்விற்கே இறுதி நேரமாகி விட்டது! நாடு வாழ்வதற்குப் பிரார்த்தனை செய்ய மேடையை நாடிச் சென்றார் அடிகளார். ஆனால், அந்த மேடையின் அருகில் அவர் வாழ்வைப் பறிக்க, கொலை பாதகன் ஒருவன் கூற்றுவன் வடிவில் நின்று கும்பிடுவது போல் பாசாங்கு செய்து கொலை புரிந்தான்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

என்றார் வள்ளுவர். ஆம்; அந்தக் கூற்றுவன், அடிகளை நோக்கிக் கும்பிட்ட கரமே கொலைக்கரமானது!

நாள்தோறும் வந்து குவியும் அகதிகளுக்கு ஆறுதல் கூற, அவர்கள் கண்ணீரைத் துடைத்துக் கவலையைப் போக்க, பழிவாங்கும் கொடியவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க அண்ணல் காந்தி டெல்லியில் தங்கினார். ஆனால், அகதிகளின் காவலர் கொல்லப்பட்டதன் விளைவாக, இந்தியா முழுவதுமே ‘அகதிகள் முகாம்’ ஆகிவிட்டது. நமக்கு ஆறுதல் கூறுவார் யார்?

காந்தியடிகளின் சேவை இல்லாவிடில், இந்தியா இந்நேரம் எந்த நிலையில் இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் நமது நெஞ்சு திடுக் கிடுகிறது. இனியும் அவரது சேவை தேவைப் பட்டி ருக்கும் நேரத்தில் நாம் அவரை இழந்து விட்டோம்.

ஆஸ்தி அஸ்தியாகிவிட்டது.

அந்தோ! காந்தியடிகளின் பொன்னுடல் செந்தீயில் வெந்துவிட்டது. இந்திய மக்களின் – ஏன்? – மனித வர்க்கத்தின் ‘ஆஸ்தி’யெனத் திகழ்ந்த ஐயனின் உடல், ‘அஸ்தி’ எனப் பெயர் பெற்றது. அதுவும், பல கூறாகப் பங்கிடப் பெற்றுக் கடலில், காவிரியில்ல கங்கையில் கரைக்கப்பட்டுவிட்டது.

கேட்டதைத் தரும் கற்பகத் தருவைக் கதையில் படித்தோம்; கருணை பொழியும் காமதேனுவைக் காவியத்தில் பார்த்தோம். ஆனால், அரசியலிலே அற்புதம் செய்யும் கற்பகத்தருவாய், அரிஜனமக்களுக்கு அபயம் அளிக்கும் காமதேனுவாய் அண்ணல்காந்தி நம்மிடையே வாழ்ந்து வந்தார். ‘வாழ்கின்றார்’ எனக் களிப்படைந்தது உலகம், ‘வாழ வேண்டும்’ எனத் தவம் புரிந்தது இந்தியா.’125 ஆண்டுகள் வாழ்ந்தே தீருவேன்’ என்று வாக்குறுதி தந்தார் மகாத்மா. ஆனால் மாபாதகன் ஒருவன் எல்லோரது நம்பிக்கையையும் தகர்த்துத் தவிடு பொடியாக்கி விட்டான்.

ஏசுவைக் கொன்றதை ஏட்டில்தான் படித்தோம். சாக்ரடீஸ் மடிந்ததைச் சரித்திரத்தில் தான் பார்த்தோம்; அந்தோ காந்தியடிகள் கொல்லப்பட்டார்’ ‘கொளுத்தப் பட்டார்’ என்ற கொடுமை மிக்க செய்திகளை, அவை நிகழ்ந்த மறுகணத்திலேயே நம் காதுகளால் கேட்டோம். அவரது பிரேதத்தை அது எரிந்து கரிந்த அஸ்தியைக் கண்களால் பார்த்தோம். ஜன சமுத்திரத்தின் மத்தியில் நடமாடிக் கொண்டிருந்த அவ்வுத்தமரின் உருவத்தை ஒரு பிடி சாம்பலாக்கி, ஜல சமுத்திரத்தில் கரைத்து விட்டோம். நம்மைவிட துரதிர்ஷ்ட சாலிகள் வேறு யாரிருப்பர்? மறக்க முயலுகிறோம், முடியவில்லை. ஐயனின் திருமேனி கணத்திற்குக் கணம் நம் அகக்கண் முன் தோன்றுகிறது. கதியற்ற அரிஜன மக்களுக்கு நிதி தேடிய கைகள்; ‘உப்பு வரியை உடைத்தே தீருவேன்” என்று தண்டி நோக்கி ஓடிய கால்கள்; பாட்டாளி மக்களுக்காகப் பரிந்துபேசிய வாய்; படைக்கஞ்சாப் பகைவனும் பார்த்த உடனே நடுங்கும் வீரத்திருமார்பு; அறிவு-கருணை-அன்பு-அறம், அத்தனை நல்லியல்புகளும் கைகோத்துக் களிகூத்தாடும் திருமுகம்; இவற்றை நாம் மறக்க முயன்றாலும் நம் மனம் மறக்கமாட்டேனென்கிறது.

காந்தியடிகளை மறக்க முடியாது; மறக்கவும் கூடாது. என்றாலும், அவரது மறைவைப் பற்றிய கவலையை நாம் மறந்தே ஆகவேண்டும். அவர் நாட்டுக்கு விடுதலை தேடித் தந்தது நாம் வாழ்வதற்கே யொழிய, வருந்துவதற்கல்ல. கவலைக்கு எவ்வளவு தான் காரணங்களிருப்பினும் அவற்றால் நாம் கடமையி லிருந்து தவறக்கூடாது.

காந்தியடிகள் வாழுங்காலத்தில் நாமும் வாழ்கிறோம். அவர் இட்ட கட்டளைப்படி கடமையைச் செய்கிறோம் என்ற பெருமை நமக்கு இத்தனை நாளும் இருந்து வந்தது.சென்ற காலச் சந்ததிக்குக் கிடைக்காத, வருங்காலத் தலைமுறையினருக்கும் கிடைக்க முடியாத அந்தப் பெரு வாய்ப்பை இந்தத் தலைமுறையினராகிய நாம் பெற்றிருந்தோம். ஆனால் கொடியவனின் செயலால் அந்தப் பெருமையெல்லாம் கணநேரத்தில், கண் மூடித் திறப்பதற்குள் மண்மூடிப் போயிற்று. நாம் காந்தியடிகள் வாழ்ந்த தலைமுறையினர் மட்டுமல்ல. அவரைக் கொன்ற தலைமுறையினருமாவோம்.

மதவெறியை மாய்ப்போம்!

காந்தியடிகளைக் கொன்ற சக்தி எது? மக்கள் சக்தியா? இல்லை. மதவெறி. மதவெறியுடன் ஒத்துழைக்க, மக்கள் தலைவர் மகாத்மா மனமொப்பவில்லை. சுதந்திர இந்தியாவை மதவெறியர்கள் ஆளாது மக்கள் சக்தி ஆளவேண்டுமென்பதே மகாத்மாவின் கருத்து. அவரது உபதேச மொழிகள் உண்ணாவிரதங்கள் அத்தனையும், இந்து சாம்ராஜ்யத்தை மீண்டும் காண விரும்பிய மதவெறியர்களின் எண்ணத்தில் மண்ணறைவதாயின. எனவே, அண்ணலின் ஆவியைப் பலிகொண்டு தமது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினர் மதவெறியர்கள்.

காந்தியடிகளைக் கொன்றது யார்? கோட்ஸேயா? ஆம், அவன் கொலைஞன் தான்; மதவெறியின் நேர் பிரதி நிதிதான். ஆனாலும், அவன் நமது அனுதாபத்திற்கு உரியவனே. மதவெறியால் மகானைக் கொல்வது இது தான் முதல் தடவையல்ல. கோட்ஸேயின் கொலைச் செயலுக்கும் பின்னே நீண்ட வரலாறு இருக்கிறது. அவ்வரலாற்று வழியேதான் அவனும் சென்றிருக்கிறான்.

சாக்ரடீசை விஷமூட்டிக் கொன்றது, ஏசுநாதரைச் சிலுவையில் அடித்துச் சித்திரவதை செய்தது எந்த மதவெறியோ, அதே மதவெறிதான் காந்தியடிகளையும் சுட்டுக் கொன்றது. ஆம், மதநெறி மகான்களைத் தோற்றுவிக்கிறது. மதவெறியோ அந்த மகான்களைக் கொலை செய்கிறது. மதவெறி தொலைந்து நெறிவளரும் நாள் எந்நாளோ!

ஏ! மதவெறியே! மகான்களைக் கொல்லும் மத வெறியே! மக்கள் குலத்திற்கு நாசத்தை விளைவிக்கும் மதவெறியே! நீ உனது கொலைக் கரங்களை மாற்றிக் கொண்டாய்! கொலைக் கருவிகளையும் மாற்றிக்கொண்டாய்! ஆனால், கொலைக் குணத்தை மட்டும் மாற்றிக் கொண்டாய் இல்லை.

உலகம் போற்றும் உத்தமர்; ஏழை பங்காளர்; அகதிகளின் காவலர்; காந்தியடிகளின் பிறந்த நாள், பலாத்காரத்தின் பகைவர் தோன்றிய நாள்; மதவெறியின் எதிரி தோன்றிய நாள், அதுபோலவே அவர் மறைந்த நாள் மதவெறியைக் குழியிலிட்டு மண் மூடும் நாளாக வேண்டும்.

மகாத்மாவின் கொலைக்குப் பிறகு போலீசார் துப்பறிந்ததில், உலகமே திகைத்துப் போகக்கூடிய அளவுக்குச் சதிச் செயல்கள் உருவாகி வந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. “இந்தியாவெங்கணும் படை திரட்ட, அதற்குப் பயிற்சி தர, கொலைக் கருவிகளை வாங்கிக் குவித்து வைக்க, அந்தச் சதிகாரக் கூட்டத்திற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது!” மதவெறியர்களுக்குப் பண மூட்டைகளின் தொடர்பு இருந்து வருகிறதென்று திண்ணமாகக் கூறலாம். இந்து மகாசபை, ராஷ்ட்ரீய சுயம்சேவச் சங்கம் இன்னும் இது போன்ற அரசியலில் தலையிடும் சாதி- மதவாதக் கட்சிகள் அனைத்தையும் ஒடுக்குவதுடன் அவற்றிற்கு மறைமுகமாக உதவி செய்யும் பண மூட்டைகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் மீதும் “கடுமையான நடவடிக்கை” என்பதற்குச் சரியான பொருளென்னவோ, அந்த அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்றைய அரசாங்கத்தையே ஸதம்பிக்கச் செய்துவிடக்கூடிய அளவிற்கு இந்தியாவெங்கணும் மதவெறி வளர்ந்து வருகிறது என்றாலும், இந்திய அரசாங்கம் நாட்டி லுள்ள முற்போக்குக் கட்சிகளின் துணையைப் பெற்றே னும் சாதி-மத கட்சிகளின் மூல வேரை அறுத்தெறியத் தயங்கக்கூடாது.

இடதுசாரிக் கட்சிகளும் கடந்தகாலப் பூசல் களை மறந்துவிட்டு, கட்சி நலனைவிட நாட்டின் நலனே பெரிதெனக்கொண்டு இந்திய அரசாங்கத்திற்கு நிபந்தனையின்றித் துணைபுரிய வேண்டும். சாதி – மதப் போராட்டங்களை மாய்க்காத வரையில் வர்க்க உணர்ச்சி பெறுவது முடியாத காரியம் மகாத்மா கொலையுண்ட பிறகேனும் இடதுசாரிக் கட்சியினர் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும்.

ஆளும் கட்சியான காங்கிரசின் பொறுப்பும் மகத்தானது. காங்கிரஸ் வலதுசாரித் தலைவர்கள் வகுப்புவாதிகளுக்கு வளைந்து கொடுப்பதும், இடது சாரிகளைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதும் தேசீயமென்று எண்ணிய பழங்காலப் போக்கை விட்டொழித்து முற்போக்குச் சக்திகளுடன் தொடர்பு கொண்டு வகுப்புவாதத்தை அடியோடு தொலைத்தாக வேண்டும். இன்றைய அவசரப் பிரச்சினை இந்தியாவை வலதுசாரிகள் ஆள்வதா? இடதுசாரிகள் ஆள்வதா? என்பதல்ல. மக்கள் ஆள்வதா? மதவெறி ஆள்வதா? என்பதேயாகும். சுதந்திர இந்தியாவைச் சுடுகாடாக்கத் திட்டமிட்டுவிட்ட வகுப்புவாதக் கொடியர்களை ஒழித்துக் கட்டினாலன்றி, மக்களுக்குச் சுக வாழ்வு தேடித் தருவது எந்தக் கட்சியினராலும் முடியாத காரியமாகும்.

மகாத்மாவின் கொலைக்குப் பிறகு மதவெறியர்களின் கோஷம் மாறியிருக்கிறது. “அரசியலில் புகாமல்; சமூக சீர்திருத்தத்திற்குப் பாடுபடுவோம்,” என்கின்றனர் கோட்ஸே கூட்டத்தினர். சமூகமென்பது சர்வ சமயத்தினரும் அடங்கியதே. அப்படி இருக்க, ஒரு சமயத்தின் பெயரால் கட்சியமைத்து சமூக சீர்சிருத்தத் திற்குப் பாடுபடுவோம் என்பது மனமாற்றமல்ல; மது. வெறியர்களின் வேஷமேயாம். இதை நம்பி இந்திய அரசாங்கம் ஏமாந்து விடக்கூடாது.

காந்தியடிகளைக் கொன்றதன் மூலம் மதவெறி தானே குற்றவாளிக் கூண்டில் ஏறிவிட்டது. பண்டித நேரு அரசாங்கத்திடம் பிடிபட்டிருப்பது கோட்ஸே அல்ல; மதவெறி. எனவே கோட்ஸேயை –அவனது கூட்டாளிகளைத் தண்டிப்பதோடு நில்லாது, மதவெறிக் கும் ‘மரண தண்டனை’ விதிக்கவேண்டும். மதவெறியின் நாடி, நரம்புகள் எவை என்பதை அறிந்து அவற்றை அடியோடு அழித்தாலொழிய, வெளிப்படையாக இயங்கும் மத ஸ்தாபனங்களை ஒடுக்குவதால் மட்டும் மத வெறியை மாய்ப்பதோ, மேலும் மேலும் மகாத்மாக்கள் கொலையாகாமல் தடுப்பதோ முடியாத காரியம்.

ஒன்றோடொன்று மாறுபட்ட மதக் கருத்துக்களை மக்கள் மனதில் புகுத்தும் நூல்கள், பத்திரிகைகள் ஆகியன மறைய வேண்டும்.

இந்துக்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும், அல்லது வேறு எந்த சமயத்தினராகட்டும் மதத்தின் பெயரால் அரசியல் ஸ்தாபனங்கள் அமைத்து மக்களிடையே பிரசாரம் செய்வதை இனி அனுமதிக்கக் கூடாது.

இன்னும் ஒரு தலைமுறைக்கேனும், ஸ்தாபன ரீதியான மதப் பிரசாரத்தை அரசாங்கத்தார் தடை செய்யவேண்டும்.

இவையே, மதவெறி போக்கும் மருத்துவம் இவற்றை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய அரசாங்கத்தின் மீது சுமந்துள்ளது.

காந்தியடிகள் கொலையுண்டதால் நமது சகிப்புத்தன்மை சோதனைக்கு உள்ளாகிவிட்டது. என்றாலும் நாம் ஆத்திரப்படக்கூடாது. பகைவர்களின் சதிச் செயலை நசுக்கும் திறமை தேசீய அரசாங்கத்திற்கு உண்டு. குடிமக்களாகிய நமது பொறுப்பு நாட்டில் அமைதி நிலவச் செய்வதே யாகும். தலைவரை இழந்துள்ள நேரத்தில் இதுவே நமது தலையாய கடமை. காந்தியடிகளின் ஆவி அமைதி பெறவும் அதுவே சிறந்த வழி.

காந்தீயம் வாழ்க!

காவிரி, கங்கை, யமுனை ஆகிய ஆறுகளின் பெருமையைத் தலைமுறை தலைமுறையாகப் போற்றி வந்தோம். அந்த ஆறுகள் பாயும் காரணத்தால், இந்திய மண்ணும் மகிமை பெற்றதாக நம் முன்னோர் நம்பினர். ஆனால், நாடு விடுதலை பெற்ற ஆறு மாதங்களுக்குள், விடுதலையைத் தேடித் தந்த வீரத் தலைவரைக் கொன்றதால், அவரது இரத்தம் மண்ணில் பாய்ந்தோடிய காரணத்தால் நமது பழம்பெருமை பழிப்புக்கிடமாகி விட்டது.

இந்தப் பழியைப் போக்கும் வழியாது? காந்தியடிகளின் அறநெறியை, அன்பு வழியைக் கடைப் பிடிப்பதேயாம். காந்தியடிகளைக் கொன்றாகி விட்டது; காந்தியடிகளின் அறநெறியையும் கொன்று விடவேண்டாம்: மருத்துவர் மறைந்தாலும், அவர் தந்த மருந்து இருக்கிறது. அதுதான் பகைப்பிணி தீர்க்கும் மருந்து; பலாத்கார வெறி போக்கும் மருந்து. சிகிச்சை முடியு முன்னர் மருத்துவர் கொல்லப்பட்டார். ஆனால், நாமேனும் உய்ய வேண்டு மானால் சிகிச்சை தொடர்ந்து நடக்க வேண்டும்.

மத வெறியற்ற நாடு, மகான்களைப் போற்றும் மக்கள் என்ற பெருமை தமிழகத்திற்கும் தமிழ் இனத் திற்கும் உண்டு. அந்தப் பண்புவழி நின் று மத வெறியால் அல்லலுறும் வட இந்தியாவிற்கு நாம் வழி காட்டுவோம்.

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு

என்றார் அருட்சோதி வள்ளலார். ஆனால் இன்று சமயச் சழக்கு பிள்ளை விளையாட்டாக மட்டுமல்ல,பேய் விளையாட்டாகவே மாறிவிட்டது.

இன்று நம்மிடையே தோன்றியுள்ள துக்க உணர்ச்சி, அதன் காரணமாக வெளியாகும் அனுதாப அறிக்கைகள் அத்தனையும் வெறும் மயான வைராக்கியமாகப் போய்விடக்கூடாது. பகைமை என்பது பலாத்காரத்தின் நுழைவாயில். எனவே, பலாத்காரத்தை அழிக்க விரும்பும் நாம்- பலாத்காரத்தின் கொடுமையைக் கண்டு அழும் நாம்-நம்மிடையே உள்ள சாதிப் பூசல், சமயப் பகைமை ஆகிய வெறியூட்டும் வேற்றுமைகளை ஒழித்துக் காந்தியடிகளின் பெயரால் ஒன்று படுவோம்.

அண்ணலார் ஆவி துறக்கும்போது இந்திய மக்களுக்கு இறுதிச் செய்தி எதுவும் தரவில்லை. என்றாலும், கொடியவன் சுட்ட குண்டு இதயத்தில் பாய்ந்தபோது, “ஹே ராம்!” என்று ஐயன் கொடுத்த குரலே, நம்மை ஒன்றுபடும்படி இறைவன் பெயரால் விடுத்த கூக்குரலாகக் கொள்வோம். அவர் உடலிலிருந்து பெருக் கெடுத்தோடிய இரத்தத்தால் நமது துவேஷ அழுக்கு களைக் கழுவித் தூய்மை பெறுவோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடி, அதற்காகத் தன் உயிரையும் அர்ப்பணிக்கத் துணிந்த அண்ணல் காந்தி மறைந்து விட்டார்.

தேசீயக் கோட்டையிலே, பாட்டாளி மக்களுக்காகப் பரிந்து பேசிய குரல் அடங்கிவிட்டது.

பெருமைமிக்க தமிழ் நாட்டில் பிழைக்க வழியற்று தென்னாப்பிரிக்கா சென்று அல்லலுற்ற தமிழ் மக்களுக்கு ஆதரவாக நின்ற-அவர்களுக்காகப் பரிந்து ஆளுவோர் மீது அறப்போர் தொடுத்த-தமிழ் இனத்தின் நண்பர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்களுக்கு அவர்செய்த சேவையை நாம் என்றென்றும் மறவோம். புகழுடம்பு பெற்று விட்ட அப்புண்ணியனுக்கு நமது நன்றியை அஞ்சலி செய்து அர்ப்பணிப்போம்.

வடநாட்டின் நிலைமை எதுவானாலும், தமிழ்நாட்டில் தமிழர் இதயத்தில் இதுவரை மதவெறி இடம்பெற்ற தில்லை. இனியும் இடம் பெறும்படி விடக்கூடாது. நாம் மத வெறியற்ற மக்களாய் வாழ்ந்து காந்தீயத்தின் பெருமையை வட இந்தியாவிற்கும் உலகத்திற்கும் உணர்த்தவேண்டும். நாம் பேசும் மொழியால் தமிழர்; பிறந்த நிலத்தால் இந்தியர். இவை தவிர வேறு எந்த சாதி சமயப் பெயர்களையும் ஏற்பது காந்தீய நெறி யல்ல. சமயமும், அச்சமய வழிப்பட்ட சடங்குகளும் தனி மனிதனின் விருப்பத்திற்கு விடப்பட வேண்டியவை. இதுதான் பண்டைத் தமிழரின் வாழ்க்கை நெறி. வள்ளுவர் குறளோடு, வள்ளலார் அருட்பாவோடு காந்தீயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் எவரும் இந்த தண்மையை ஏற்பது திண்ணம். எனவே, காந்தீய நெறியைக் கடைப்பிடித்து மதவெறியை எதிர்த்துப் போர் புரிவோமாக.

தமிழுணர்ந்த மகாத்மா

காந்தியடிகள் பிறப்பால், பேசும் மொழியால் குஜராத்தியாவார்; அம்மொழியில் அவருக்கு அதிகப் பற்றுமுண்டு. அவர் தமது வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியில் எழுதியதே இதற்குத் தக்க சான்று. ஆனால், மாகாண மொழிகளில் அவர் தம் தாய் மொழிக்கு அடுத்தபடியாகத் தமிழ் மொழியையே விரும்பினார். சமஸ்கிருதத் தொடர்புடைய பிற இந்திய மொழிகளினின்றும் முற்றிலும் வேறுபட்டு தனித்தியங்கும் தமிழ் மொழியை குஜராத்தியாகிய காந்தியடிகள் கற்பதென்பது எளிதல்ல. அப்படியிருந் தும் அவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது தமிழை வருந்திக் கற்றார். தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு, தமிழ் கற்பிக்க ஆசிரியர் கிடைக்காத குறையை அடிகள் போக்கிவிட்டார். தாமே ஆசிரியராக இருந்து தமக்குத் தெரிந்த சொற்ப எழுத்தறிவை ஏழைத் தமிழ் மாணவர்களுக்குப் புகட்டினார்.

அடிகளார், தமிழரிடம் பேசிப் பழகுவதற்காக மட்டும் தமிழ் கற்க விரும்பினாரில்லை. திருக்குறளை, தமிழ் மொழியின் மூலமே சுவைக்க ஆவல்கொண்டு தமிழ் கற்றார்.

“யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டுமென்று என் உள்ளத்தில் எழுந்த அவாவே யாகும்”

என்று அடிகள் 1927-ல் தமது தூத்துக்குடிச் சொற்பொழிவு ஒன்றில் வெளியிட்டார். ஆனால், அவர் மேல் சுமந்துவிட்ட அரசியல் பொறுப்புக் காரணமாக அவரது தமிழ்க் கல்வி முற்றுப்பெறாமல் இடையே முறிந்துவிட்டது.

“தமிழ் மொழியில் புலமை பெறுவதற்குரிய ஓய்வு எனக்கு ஆண்டவன் அருளினாரில்லை. அது குறித்து எனக்குள்ள வருத்தம் அளவற்றது.”

என்று தமது தமிழ்க் கல்வி தடைப்பட்டதற்கு வருந்தினார். தமிழின் ஆழத்தைக் காணுவதில் அடிகளார் வெற்றி பெறாவிடினும், அம்மொழியின் அருமை பெருமைகளை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதை,

“தமிழ் மொழி பயிலப் பயில, அதன் அழகு உணரலானேன். அஃதொரு மனங்கவரும் இனிய மொழி. தமிழ் மக்களுள் பண்டைநாளிலிருந்து இந்நாளிலுங்கூட பல அறிஞர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள் என்பது அம்மொழியின் அமைப்பா லும், அப்பயிற்சியாலும் அறியக் கிடக்கிறது.”

என்று அவர் தமது சுயசரிதையில் கூறியுள்ளதால் அறிகிறோம். இதை, வாய்மை தவறாத அண்ணல் தமிழுக்குக் கூறிய வாழ்த்துரையாகவே கொள்ளலாம்.

“இந்தியர் அனைவரும் ஒரே இனம்; இந்தியா முழுவதும் ஒரே நாடு என்ற ஒற்றுமைக் குரல்களை எழுப்பியவர், அவற்றை நாள்தோறும் வலியுறுத்தி வந்தவர் காந்தியடிகளைத் தவிர இன்னொருவர் இருக்க முடியாது. ஆனால், அவர் கூறும் ஒற்றுமைக்கு அடிப்படை அன்பேயொழிய, ஆதிக்கப் புத்தியல்ல. தமிழ் மக்கள் எனது இரத்தக் கலப்புற்ற உடன் பிறந்தவர்போல் தோன்றுகிறார்கள் ” என்று எத்தனையோமுறைகளில் காந்தியடிகள் கூறியிருக்கிறார். அவர் தமிழ் மக்கள் மீது அன்பு செலுத்தவும் தமிழ் மொழியைப் பயிலவும் காரணமென்ன ? இதை அவரே கூறக் கேளுங்கள் :

“தென்னாப்பிரிக்காப் போரில் தமிழ் மக்கள் புரிந்த துணைபோல வேறு எந்த இந்தியரும் புரியவில்லை. அவர்களுக்கு நன்றியறிதல் காட்ட அவர்கள் நூல்களைப் பயில வேண்டுமென்று நினைத்தேன்.”

இது அடிகளார் தமிழினத்தின் மீது வைத்த அன்புக் கோர் சான்று.

“இந்தியாவுக்கு ஒரே மொழி வேண்டும்; அம்மொழி இந்துஸ்தானியாகவே இருக்கவேண்டும்” என்பது காந்தியடிகள் தம் வாழ்நாள் முழுவதும் வற்புறுத்திய கொள்கை. ஆனால், வடஇந்தியர் தமிழ் மொழியை வேற்று மொழியாகக் கருதிப் புறக்கணிக்கும்வரை தமது எண்ணம் ஈடேறாதென்பதை அடிகள் உணர்ந்திருந்தார். ஆகவே,

“இந்தியாவில் ஒரே இனம் ஏற்பட வேண்டுமானால், சென்னை மாகாணத்துக்கு அப்புறம் உள்ளவர்களும் தமிழைக் கற்கவேண்டும்.”

என்று அவர் இடைவிடாது வற்புறுத்தி வந்தார்.

தமிழர் மீது இந்தி மொழியைக் கட்டாயமாக சுமத்த வேண்டுமென்பது காந்தியடிகள் கருத்தல்ல. அப்படிச் செய்வதை அவர் வெறுத்தார்.

“ஆண், பெண் அனைவருமே, ‘இந்தி-இந்துஸ் தானி’ கற்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. வடநாட்டு மக்களோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள் மட்டும் இந்தி கற்றுக் கொண்டுவிட்டால் நான் திருப்தியடைவேன்…… பிற மாகாணங்களிலுள்ளவர்கள் அனைவருமே இந்தி கற்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், இப்படி ஒரு காரியம் நிகழ்வது சாத்தியமில்லை என்பது, துரதிர்ஷ்டவசமாக முற்றும் உண்மையாகவே இருக்கிறது. எல்லோரும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமென்ற பிரச்சினை எழவே இல்லை. சரியாகச் சொன்னால் எல்லோருமே இந்தியைக் கற்றுக்கொள்ளவே மாட்டார்கள். தொண்டு செய்வதில் விருப்ப முள்ளவர்களுக்கும், பிரயாணம் செய்பவர் களுக்குமே இந்தி தேவைப்படும்.”

என்று அவர் எச்சரித்ததை நமது மாகாண ஆட்சி யாளரும் அவர்களுக்குத் தலைமை தாங்கும் மேலிடத் தாரும் உணர்ந்திருந்தால், பொதுமொழி பற்றிய சண்டை எப்பொழுதோ தொலைந்திருக்கும்.

காந்தியடிகள், இந்தியர் அனைவரையும் ஒரே குடும்பமாகக் கருதினாலும், அந்த ஒருமைக்குள் அடங்கியுள்ள பன்மையையும் அவர் மறந்துவிட வில்லை. மொழிவாரி இனங்களும், அந்த இனங்களுக்குரிய நாடுகளும் தனித்தியங்கும் தன்மையுடையன என்பதை உணர்ந்தே மொழி வழி மாகாணங்களைப் பிரிக்குமாறு காங்கிரசை வற்புறுத்தினார். ‘மொழிவழி மாகாணக் பிரிவினையைக் காங்கிரஸ் அமைப்பில் புகுத்தியதற்கு நானே பொறுப்பாளி’ என்று அடிகளார் அடிக்கடி கூறுவதுண்டு. மொழிவழி நாட்டுப் பிரிவினையைப் பற்றி 25-1-194848 பிரார்த்தனைப் பேச்சில் பின் வருமாறு கூறினார்:

“மொழிவாரி மாகாணப் பிரிவினை நாட்டின் கலை வளர்ச்சிக்கு ஏற்றது; மொழி வளர்ச்சிக்கும் அது தேவையே. மற்றும் கல்வி, வாணிபம் முதலியவற்றின் வளர்ச்சிக்கும் அதுவழி செய்யும். ஆனால், சுய ஆட்சி என்பதற்குத் தனித்தனியாகப் பிரிந்து செல்வது என்பது பொருளல்ல. அப்படிச் செய்தால் இந்தியாவின் சுதந்திரத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.”

ஆம்; மொழிவழி நாடுகளுக்கு உரிமை வழங்குவதன் மூலம் பூகோள வழிபட்ட இந்தியாவின் ஒற்றுமை சிதையக் கூடாதென்பதே மாகாணப் பிரிவினைக்கு அடிகள் விதித்த நிபந்தனை. இதை மறுப்பார் யார்?

பிரிக்கப்படும் மாகாணங்கள் சுயநிர்ணயம் பெற உரிமையுண்டு.என்பதும் காந்தியடிகளின் கருத்து.

“எந்த மாகாணமாயினும், பிறருக்குக் கட்டுப்படாமல் தனித்திருக்க விரும்பினால், அது அந்தக் கொள்கையை உறுதியுடன் கடைப் பிடித்து நிற்கவேண்டும். அப்படி நின்றால், அது சுதந்திரம் அடைவது திண்ணம்.”

சுயநிர்ணயம் பெற்ற மாகாணங்கள் எத்தகைய அரசியலை வகுத்துக் கொள்ள வேண்டுமென்ற கேள்விக்கு காந்தியடிகள் தந்த பதில்:

“இந்தியா முழுவதற்கும் எந்த விதமான பரிபூரண சுயேச்சை அரசியல் வகுக்கப்படுமோ அதுபோன்ற அரசியல்தான். பரிபூரண சுயேச்சைக்கு தான் கூறும் இலக்கணப்படி பார்த்தால் அதில் தவறு ஒன்றும் கிடையாது.”

தாம் கூறும் வழியில் உரிமைபெற்ற ஒவ்வொரு மாகாணமும் இந்திய சமுதாயத்துடன் உறவு கொண்டே இருக்குமென்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், மொழிவாரி சுதந்தர அரசுகளும், அந்த அரசுகள் விட்டுக் கொடுக்கும் அதிகாரங்களைக் கொண்டு அமைக்கப்படும் இந்திய சமஷ்டியுமே காந்தியடிகள் கண்ட ஐக்கிய இந்தியா.

காந்தீயம் நன்னெறி வளர்த்து, தீநெறி அழிக்கும் அறநெறியாகும். காந்தியடிகள் பலாத்காரத்தை வெறுத்தார். அதற்குப் பதிலாக, அரசியலிலே அகிம்சையைப் புகுத்தினார். இதன் விளைவாக, இந்திய சுதந்திரப் போரில், ஆண்-பெண், இளையோர் – முதியோர், ஏழை-பணக்காரர், பாமரர்-பண்டிதர் ஆகிய எல்லோரையும் ஈடுபடச் செய்தார்.

காந்தியடிகள் அந்நியக் கல்வியை வெறுத்தார். அதற்குப் பதிலாக, தேசீயக் கல்வித் திட்டத்தை நாடெங்கும் பரப்பினார். அரசாங்கக் கல்லூரிகளை பகிஷ்கரித்தார். அதனால், இளைஞர்களின் கல்வி கெடாமலிருக்க, இந்தியாவெங்கும் தேசியக் கல்லூரிகளைப் பெருக்கினார். அந்நிய ஆடையைத் தீக்கிரை யாக்கினார். அதற்குப் பதிலாக, கதராடையைப் பெருக்க, நூல் நூற்போர் சங்கத்தை நிறுவினார். மற்றும், ஏகாதிபத்தியத்திற்கெதிராக இந்திய மக்களை ஒன்று திரட்ட, தீண்டாமை விலக்கு, இந்து-முஸ்லிம் ஒற்றுமை போன்ற நல்ல திட்டங்களை நாடெங்கும் பரப்பி மக்களிடையே வேற்றுமை போக்கி ஒற்றுமையை வளர்த்தார்.

காந்தியடிகள் பிறந்த நாட்டால் தமிழரல்லர். ஆயினும், வாழ்க்கை நெறியால் தமிழராகவே வாழ்ந்து வந்தார். அவரது வாழ்க்கை வரலாறு திருக்குறளின் தெளிந்த உரை எனலாம். காந்தியடிகள் எந்தக் காலத்தில் பொது வாழ்க்கையில் இறங்கினாரோ, அப்போதே அவருக்குத் தமிழ் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது.

தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்ய பணம் தேடி வாழ்வாங்கு வாழ நினைத்த அவரை, இந்திய மக்களின் ஈன நிலையை எடுத்துக்காட்டி சத்யாக்ரகியாக்கியது யார்? தென்னாப்பிரிக்கத் தமிழனான பாலசுந்தரமேயாகும்.

தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் அடக்கு முறைக்குக் களபலியானவர் யாவர்? தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகப்பனும் வள்ளியம்மையுமன்றோ! இளமைப்பருவத்தினரான அவர்களது ஈடற்ற தியாகம், தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் இணையற்ற சேவை ஆகியவற்றால் தான் தென்னாப்பிரிக்க சத்யாக்ரகப் போரில் காந்தியடிகள் வெற்றி பெற முடிந்தது. “தென்னாப்பிரிக்காவில் யான் பெற்ற முதல் வெற்றிக்கு அங்குள்ள தமிழர்களே காரணம்” என்று காந்தியடிகளே தமது ‘சுய சரிதை’யில் கூறுகிறார்.

தென்னிந்தியாவில் காந்தியடிகள் சுற்றுப்பிரயாணம் செய்த போது தமிழ்நிலத்தின் வயல்களில் முழங்காலுக்கு மேல் இடுப்பில் ஓர் ஆடை, தோளின் மேல் மற்றொரு துண்டாடை இவற்றுடன் காட்சியளித்த தமிழ் உழவரைப் பார்த்தே தாம் உடுத்தியிருந்த பொதி போன்ற ஆடைகளைப் புறக்கணித்து இரண்டாடை உடுத்தும் வழக்கத்தை மேற்கொண்டார்.

ஆம். காந்தியடிகளின் உள்ளத்தைத் திருத்தியவன் தென்னாப்பிரிக்காவில் குடியேறிய தமிழகத்துத் தொழிலாளியான பாலசுந்தரம். அவரது உடையைத் திருத்தத் தூண்டியதும் தமிழ்நிலத்து விவசாயி..

சுருங்கக்கூறின் சத்யாக்ரக நெறியும், இரண்டாடை கட்டிய எளிய தோற்றமும்தான் மோகனதாஸ் காந்தியை மகாத்மா காந்தியாக்கியது. அதற்குத் துணை புரிந்தவர் தமிழர்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நெப்போலியனை வெற்றி கண்டது. ஹிட்லரை வீழ்த்தியது. முசோலினியை முறியடித்தது. ஆனால் காந்தியடிகளை வெற்றி காண முடியாமல் அவரது அறப்போரின் வலிமையால் வீழ்ச்சியுற்றது! இஃது காந்தியத்தின் வலிமைக்கோர் எடுத்துக்காட்டாகும். இனியும் சுதந்திர இந்தியா சுகம் பெற வேண்டுமானால், இந்திய மக்கள் காந்தீய நெறியைக் கைவிடக்கூடாது. எந்த அறவழியால் அரசியல் உரிமை பெற்றோமோ, அதே அறவழியால் அன்புநெறியால் – சுதந்திர இந்தியாவை ஆளுவோமாயின், நாம் காந்தி பிறந்த இந்தியாவுக்குப் பெருமை தேடியவர்களாவோம். ஆனால், நாம் காண்பதென்ன? காந்தியடிகள் மறைந்த ஓராண்டுக்குள்ளேயே, காந்தீயக் கோட்டை சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும் காட்சியேயல்லவா?

“அடிகள் தமது வாழ்நாள் முழுவதும், ஆக்க வழித் திட்டத்தில் பாடுபடும் தொண்டர்கள் அரசி யலில் ஈடுபடக்கூடாது” என்று எச்சரித்த வண்ணம் இருந்தார். அவர் தமது இறுதிக் காலத்தில், காங்கிரசை பார்லிமெண்டரி துறையில் பதவி வேட்டையாடும் ஸ்தாபனமாக இல்லாமல், உலக மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு ஒப்பற்ற ஸ்தாபனமாக மாற்றப் பின் வரும் அடிப்படையில் திட்டம் வகுத்தார்.

“காங்கிரஸ்” என்ற பெயரை மாற்றி, “லோக் சேவக் சங்கம்” எனப் புதுப் பெயர் தரவேண்டும்.

‘லோக் சேவக் சங்க’த்தினர், வேறெந்த அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகிக்கக்கூடாது. சுயநலச் சிந்தையை வளர்க்கும் பட்டம் பதவிகளை நாடாமல் பொதுநலப் பணிபுரிய வேண்டும்.

அடிகளின் எண்ணப்படி காங்கிரசைத் திருத்தி யமைத்திருப்பின், சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வீற்றிருக்கும் பெருமை மிக்க ஸ்தாபனமாகக் காங்கிரஸ் மாறி இருக்கும். ஆனால், அவர் எழுதி வைத்துப்போன திட்டத்தை அவரது கருத்துவழி அமுல் நடத்தத் தவறி விட்டனர் மேலிடத்துத் தலைவர்கள்.

ஆக்க வழியில் அடக்கமாகப் பணிபுரிந்து வந்த தொண்டர்கள் கூட, அடிகளின் மறைவுக்குப் பிறகு அரசியல் பதவிகளில் அமர்ந்துவிட்டனர்.

தட்சிண பாரத இந்திப் பிரசார சபையின் செயலாளர் திரு, சத்திய நாராயணா, இந்தியப் பாராளு மன்றத்தில் இடம் பெற்று விட்டார். தேசீயக் கல்வித் திட்டத்தைப் பரப்பி வந்த திரு. ஜி. ராமச்சந்திரன், திருவிதாங்கூர் அரசாங்கத்தில் அமைச்சராகி விட்டார். தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் செயலாளர் திரு.எல். என். கோபாலசாமி, சென்னை அசெம்பிளியில் அமர்ந்து விட்டார். நிர்மாணப் பணியில் ஈடுபட்ட தொண்டர்களின் நிலை இதுவானால் காந்தீயம் வாழுமா? ஒருபோதுமில்லை!

காந்தியடிகள் தமது பிறந்த நாளை ‘சர்க்கா’ தினமாகக் கொண்டாட வேண்டுமென்று தாம் வாழ்ந்த நாட்களில் கூறிவந்தார். ‘சுதந்திரம் பெற்ற பின்னும் சர்க்காவைச் சுற்றுவதா?’ என்பது சிலரது கேள்வி. “ஆலைத் தொழில்களை அடியோடு அழித்து, சர்க்காவையே நம்பி வாழவேண்டும்” என்பது தீவிர காந்தீயவாதிகளின் திட்டம். இந்த இரு தரப்பினர் கூற்றும் உண்மைக்குப் புறம்பானது. முன்னது அறியாமை; பின்னது அழிவு வேலை.

இயந்திரத்தையே நம்பி வாழவேண்டுமென்பது எப்படி நல்லதல்லவோ, அதுபோலத்தான் சர்க்காவையே நம்பி வாழ்வதென்பதும் நடக்காத காரியம். காந்தியடிகளும் அப்படிக் கூறியதில்லை. அவரது கருத்து, இயந்திரத்துக்கு மக்கள் அடிமைப் பட்டு விடக்கூடாது என்பதேயாகும்.

யுத்த காலத்தில் பகைவர்கள் பஞ்சாலைகளை அரை நொடியில் அழித்து விட முடியும். ஆனால் கைத்தறி நெசவுத் தொழிலை அழிக்க முடியாது. ஏனெனில், அது பரவலாக உள்ள குடிசைத் தொழில். யுத்த சமயத்தில் நமக்குக் கைராட்டைதான் கை கொடுக்கும். ராட்டையைச் சுற்றுவதால் கிடைக்கும் வருமானம் ஆடம்பர வாழ்க்கைக்குப் போதுமானதாய் இல்லாமலிருக்கலாம். ஆடம்பர வாழ்க்கையை விரும்புவோர் வேறு தொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பாரில்லை. வேறு தொழில்களில் ஈடுபடச் சக்தியற்ற மக்கள் இருந்த இடத்திலிருந்தே கைராட்டை சுழற்றிக் கஞ்சி உணவுக் கேனும், காசு தேட முடியும்.

காந்தீய நெறிப்படி காங்கிரஸ்காரர்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் எவ்வளவோ உண்டு.

சாதி வேற்றுமைகளை ஒழிக்கச் சட்டம் செய்யும் படி அமைச்சர்களை வற்புறுத்தலாம். சமூகத்தில் நிலைத்துவிட்ட அர்த்தமற்ற சடங்குகளை, அறிவுக்குப் புறம்பான பழக்க வழக்கங்களை ஒழிக்கப் பாடுபடலாம்.

அதிகாரத்திலிருப்பவர்களால்தான், ஆக்க வழியில் பணிபுரிய முடியுமென்று எண்ணுவது தவறு. அமைச்சர் பதவியில் இருப்பவரை விட, ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு உள்ள சக்தியே அதிகமானது. ஒவ்வொரு தொண்டரும் ஒரு ஸ்தாபனத்துக்குரிய சக்தியைப் பெற்று விளங்க வேண்டும் என்பதே காந்தீயத்தின் குறிக்கோள்.

தனிப்பெருந் தலைவர் காந்தி

ஒரு நாட்டின் அரசியல் இயக்கத்தில் மிக நீண்ட காலம் தலைவராக இருந்தவர் உலகில் காந்தியடிகளைத் தவிர வேறு எவருமில்லை. பல்வேறு மதத்தவரும் இனத்தவரும் வாழும் இப்பெரிய உபகண்டத்தில் 30 ஆண்டுகள் ஒப்பற்ற தலைவராகக் காந்தியடிகள் ஒருவரே இருந்து வந்தது அரசியல் உலகில் கண்டும் கேட்டும் அறியாத ஒரு புதுமை, இதற்குக் காரணம், ஆயுதமற்ற அறப்போரை நடத்தும் திறமை அவருக்கு இருந்ததைப் போன்று வேறு எவருக்கும் இல்லாததேயாம். கப்பற்படை, விமானப் படை, காலாட் படை என்று பல்வேறு படைபலம் பொருந்திய பிரிட்டிஷ் பேரரசை எதிர்ப்பதற்கு அவரது அறவழியொன்றே மக்களுக்கு ஆற்றல் தரும் வழியாயிற்று. எனவே காந்தியடிகளின் தலைமை காங்கிரசுக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அரசியல் – அகிம்சை-காங்கிரஸ் ஆகிய மூன்று சக்திகளையும் ஒன்றிலிருந்து, ஒன்றைப் பிரிக்கமுடியாதவாறு பிணைத்து வைத்த பெருமை காந்தியடிகளுக்கே உண்டு. காந்தியடிகளின் காலத்திலேயே இந்தியா விடுதலை பெற்றுவிட்டது. விடுதலைப் போரை துவக்கி வைத்த வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் இத்தகைய வாய்ப்புக் கிடைத்ததில்லை. காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை அமைத்தவர் காந்தியடிகள் அல்ல என்றாலும் அதை போராட்டப் பாதைக்குக் கொண்டு வந்தவர் காந்தியடிகளேயாவார். ஆனால், அதற்காகக் காந்தி யடிகள் களிப்படைந்தாரா? இல்லை, இல்லை. காரணம் என்ன? விடுதலை பெற்ற இந்தியா, அந்த விடுதலையை வாங்கித் தந்த தலைவரின் மனவழி செல்லாததேயாம். அகிம்சையைப் போதித்த அந்தப் பெரியார், தன் கண் முன்னேயே மதவெறியால் மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மாள்வதைக் கண்டார்.

ஆகஸ்ட் பதினைந்தில் இந்தியாவெங்கும் விடுதலை விழாக் கொண்டாடப்பட்டது. தலைநகரான டில்லியில் கண்கொள்ளாக் காட்சி. ஆனால், விடுதலையைத் தேடித்தந்த வீரத்தளபதி அவ்விழாவில் பங்குகொள்ளவில்லை. இந்தியாவின் தலைநகரில் பட்டேலும், நேருவும் படைவீரர் புடைசூழ பவனி வரும் அதே நேரத்தில், வங்கத் தலைநகரில் மதவெறியர்களால் தாக்குண்ட அகதிகளுக்குத் தொண்டு புரிந்து கொண் டிருந்தார் காந்தியடிகள்.

காந்தீய மதம்

காந்தியடிகள் நாத்திகரல்லர். பழுத்த ஆத்தீகர். ‘எல்லாம் இறைவன் செயல்’ என்றெண்ணும் இயல் புடையார் அப்பெரியார். ஆனால், அகத்தே கறுத்து புறத்தே வெளுத்த ஆத்தீகக் கூட்டத்தார் அவருக்கு உறவினத்தாரல்லர்; புறவினத்தார். ஒவ்வொரு மனிதனும் தனது இதயத்தைத் தூய்மையாக்கி அதை இறைவனின் இருப்பிடமாகச் செய்யவேண்டுமென்பது காந்தியடிகள் செய்த கடவுள் போதனை.

“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணியுள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்

யாவரவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியுமிடம்”

என்றார் வள்ளலார். அஃது காந்தியடிளுக்கும் உடன்பாடாகும். மீண்டும் பிறவாமை வேண்டினர் பெரியோ ரெல்லாம். ஆனால் காந்தியடிகள், மீண்டும் பிறப்புண்டேல், தொழிலாளியாய்ப் பிறக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்தார். அதுவும் நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்கும் தோட்டித் தொழிலாளியாகப் பிறக்க வேண்டுமென்பதே அவரது உள்ளக்கிடக்கை.

காந்தியடிகள் கண்ட மதம் ஒழுக்க மதம்; அவர் கண்ட கடவுளும் உயர்குணப் பண்புகளே யன்றி வேறல்ல. அடிகள் பொய்ம்மைக்கு எதிராக வாய்மையை வற்புறுத்தினார்.

வேற்றுமையை விலக்க ஒற்றுமையை உபதேசித்தார். தன்னலம் ஒழியப் பொதுநலப்பணியைப் போதித்தார். இம்சையை வேரறுக்க அகிம்சையை வலியுறுத்தினார். இதுவே மகாத்மா செய்துவந்த மதப்பிரசாரம்.

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாத இயற்கைச் சக்தியை “ராம்” என்ற திருநாமத்தின் மூலம் வழி பட்டார் காந்தியடிகள். ஆனால், யார் எப்பெயரிட்டு அழைப்பினும் உலக மக்கள் அனைவரும் வழிபடுவதற்கான பொருள் ஒன்றே என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். ராமன், சிவன், அல்லா, ஏசு, புத்தர் என்னும் எல்லாப் பெயர்களும் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக நிற்கும் அந்த ஒரே பேரொளியைக் குறிக்கும் பெயர்களாகவே எண்ணினார்.

இறக்குங்கால் இறைவனது திருநாமத்தைச் சொல்லும் திறம் வேண்டினர் ஆழ்வார்களும் அடியார்களும். அதற்காக அவர்கள் சுற்றாத கோயில் இல்லை; முழுகாத தீர்த்தமில்லை; பாடாத கடவுளில்லை; படிக்காத நூலில்லை; தொடுக்காத மலரில்லை;

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கமா நகருளானே.”

என்றார் ஒரு வைணவப் பெரியார்.

ஐயுந் தொடர்ந்து விழியுஞ் செருகி
அறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று
வேண்டுவல்யான்
செய்யும் திருவொற்றி யூருடை யீர்திரு
நீறுமிட்டுக்
கையுந் தொழப்பண்ணி ஐந்தெழுத்தோதவும்
கற்பியுமே.”

என்றார் ஒரு சைவ அடியார். இதற்காக மனைவியை மறந்தார்; மக்களைப் பிரிந்தார்; உலக இன்பங்களனைத்தையும் துறந்தார். ஏன் ? இந்தப் பற்றுக்க ளெல்லாம் இருப்பின், பற்றற்ற இறைவனை உள்ளம் பற்றாது என்ற பயத்தினாலேயே யாகும்.

ஆனால்,காந்தியடிகள் ஸ்தல யாத்திரை செய்யவில்லை; கோவில்களைச் சுற்றவில்லை; குளங்களில் முழுக் காடவில்லை; இறைவனுக்குப் பூமாலை சூட்டிப் புகழ் மாலை பாடவில்லை; இல்லறந் துறந்து இரந்துண்டும் வாழவில்லை. அவர் செய்ததெல்லாம் தினம் சில நிமிஷப் பிரார்த்தனைதான். அதுவும் மடத்தில் அல்ல ; மக்களின் மத்தியில். தான் வீடுபெற அல்ல ; தாயகம் விடுதலை பெற. நாட்டுப் பற்று, ஊர்ப் பற்று, மொழிப்பற்று, குடும்பப்பற்று, இவ்வாறாக அடிகளார் கொண்டிருந்த பற்றுக்கள் கொஞ்சமல்ல. அப்படியிருந்தும் கொடும்பாவி கோட்சே விடுத்த குண்டு இதயத்தில் பாய்ந்த மறுகணத்திலேயே, கும்பிட்ட கையுடன் “ஹே ராம் ” என்று இறைவனைக் கூப்பிட்ட குரலுடன் உயிர் விடுத்த காட்சியைக் கண்டோம். உடற் பற்றிலிருந்து உலகப்பற்றுவரை எல்லாப் பற்றுகளும் கொண்டிருந்த அவருக்கு இது எப்படி முடிந்தது? ஆம், தன்னலப்பற்று இல்லாத காரணத்தால்-உலகமே கோவில்; அதில் வாழும் மக்களெல்லாம் தெய்வங்கள், அவர்களுக்குப் பணி செய்வதே தெய்வத் திருத்தொண்டு என்று எண்ணி யிருந்த காரணத்தால் – முடிந்தது.

தமிழன் என்ற எண்ணத்தோடு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை உன்னுவோமாயின், தமிழகத்தில் தொன்றுதொட்டு இன்றுவரை தோன்றி மறைந்த தமிழ்ப் பெரியார்களில் ஒருவராக அவரைக் கருதுவோம்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவனும்’ என்ற உயர்நெறியில், அடிகள் திருமூலரின் திருத்தொண்டர். சமூக இயலில், வள்ளுவரின் வழித் தோன்றல்.

எம் மதத்தையும் சம்மதமாகக் கொள்ளும் சன்மார்க்க நெறியில் வள்ளலாரின் வாரீசு.

காந்தியடிகள் கொல்லப்பட்டு மறைந்தார். என்றாலும், அவருக்கு நேர்ந்த மரணம் அறிஞர் உலகம் பொறாமை கொள்ளத்தக்க பெருமைவாய்ந்த தாகும். எந்தக் கொள்கையை காந்தியடிகள் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தாரோ, அதே கொள்கைக்காக அவரது உயிர் அர்ப்பணமாயிற்று.

எனவே, உயிர்விடுங் கணத்தில், காந்தியடிகளின் உள்ளம் மகிழ்ந்திருக்குமே ஒழிய, வருந்தியிருக்காது.

காந்தியடிகளின் பருவுடல் மறைந்தது என்றாலும், அவரைப் பற்றிய எண்ணம் மறையவில்லை.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லா முளன்.

என்று வள்ளுவர் கூறியது போன்று உள்ளத்தால் பொய்யா தொழுகிய காரணத்தால் காந்தியடிகள் உலக மக்கள் எல்லோரது எண்ணத்திலும் இடம் பெற்றுவிட்டார்.

வாழ்க காந்தியடிகள் திருநாமம்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *