தப்பிவிட்டார்கள்
கலைஞர் மு. கருணாநிதி

முந்நூறு ரூபாய்


அம்மாவுக்குக் கண் தெரியாது. அப்பா நடமாட முடியாதவர். ஒரு வருடமாகப் பக்கவாதம். அக்காள் ஒருத்தி,விதவை. ஒரு குழந்தையை விட்டுவிட்டு செத்து விட்டாள்.

“குடும்பத்தைத் தாங்கும் தூண் நான். வெற்றிலை பாக்குக் கடையொன்றில் பத்து ரூபாய் சம்பளத்தில் வேலை; அதுவும் போய்விட்டது. வேலையிருந்தபோதே வீட்டில் இரண்டு வேளைப்பட்டினி. இப்போது கேட்க வேண்டுமா? நீங்கள் ஏதாவது வழி செய்யுங்கள்,இல்லா விட்டால் ஒரு முழக்கயிறு தான் செலவு” என்று கூறிக் கண்ணீர் வடித்தான் அந்த ஏழை வாலிபன். பெயர் மாத்திரம் லக்ஷ்மி நாராயணன். ஆனால் தரித்திர நாராயணானாய்த் துடித்தான்.

அவன் வேலை கேட்ட இடமோ…பெரிய ஆபீஸ் அல்ல, அல்லது மில் முதலாளியிடமுமல்ல. மாதம் நூற்றைம்பது ரூபாய் வருமானமுள்ள ஒரு பள்ளிக்கூட ஆசிரியரிடம். தங்கப்பன் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர். நூற்றைம்பதைக் கொண்டு தன் பெரிய குடும்பத்தையே நடத்த கஷ்டப்படும்போது, லக்ஷ்மி நாராயணனைக் காப்பாற்ற எப்படித் துணிய முடியும். தங்கப்பன் இளகிய மனமுடையவர். சீர்திருத்தக்காரர். சீர்திருத்த உலகில் அவரது புனைப் பெயர் மார்க்ஸ். மேடையில் ஏறுகிறார் என்றாலே மக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் அவ்வளவுசிறந்த பேச்சாளி. ஏழை, ஈவு, இரக்கம் என்றெல்லாம் பேசுகிறாரே நாமும் கொஞ்சம் கை நீட்டிப் பார்க்கலாமே என்று எத்தனையோ பேர் தங்கப்பனை யாசகம் கேட்டிருக்கிறார்கள். தன் சம்பளத்தில் அவர்களுக்கென ஒரு பகுதியை செலவளித்துக் கொண்டிருந்தார், தங்கப்பன். அவர்களில் ஒருவன் தான் லக்ஷ்மி நாராயணன். அவன் கதை தங்கப்பனால் கேட்க முடியவில்லை, அவ்வளவு வேதனை யடைந்தார்.

‘பத்துநாள் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிரு. எங்கேயாவது, வேலை தேடிப்பார்க்கிறேன்” என்று உறுதியளித்தார். ஏழெட்டு நாட்களாகி விட்டன. இன்னும் வேலை கிடைத்தபாடில்லை.

ஒரு நாள் தங்கப்பனுக்கு, அவரிடம் ஆறுமாதத்துக்கு முன் கடன் வாங்கி யிருந்த ஒரு தோழரால் அனுப்பப்பட்ட, ரூபாய் முந்நூறு மணிஆர்டர் வந்தது. போன பணம் திரும்பி வந்த ஆனந்தத்தில் அதை பெட்டியில் கூட எடுத்துவைக்காமல் மேசை மேல் வைத்தபடிபே மறந்து விட்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்று விட்டார். பாடம் நடந்துகொண்டிருக்கும்போது பணத்தின் நினைவு வந்தது. லக்ஷ்மி நாராயணன் மேல் திடீரென சந்தேகமும் பிறந்தது. பாடத்தைச் சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார். வரும் வழி யிலேயெல்லாம் நல்ல உயிர் இல்லை. “என்னதான் நல்லவனா யிருந்தாலும் ரூபாய் முந்நூறு அல்லவா?” என்று எண்ணியவாறு நடந்தார். வீட்டுக்கு வந்தார். வாசலில் உட்கார்ந்திருக்கும் லக்ஷ்மி நாராயணனைக் காணவில்லை.உள்ளே போனார், பணத்தையும் காண வில்லை. வீட்டில் விசாரித்தார்… பணம் போய்விட்டது. தங்கப்பன் ஒரு அலட்சியமான புன்சிரிப்புடன் மீண்டும் பள்க்குத் திருப்பினார். சேலம் ரயிலடியில் பிற்பகலே வண்டியைப் பிடித்து ஈரோடு வந்து சேர்ந்தான் லக்ஷ்மி நாராயணன். ஈரோட்டில் ரெடிமேடு கடையில் நுழைந்து வெளியே வரும் போது மைனராய் மாறி வந்தான். அவன் மனம் ஏதோ பேசிக்கொண் டிருந்தது. ‘முந்நூறு ரூபாய்க்கு ஒரு வெற்றிலை பாக்குக்கடை; தானே முதலாளி’ என்று திரும்பத் திரும்பப் பேசிற்று. கடைத் தெருவில் ஒரு பொடிப் பையன். எலும்புந் தோலுமாய் அழுக்கு மயமாய் நின்று கொண்டு ‘ஐயா’ என்றான்.

லக்ஷ்மிநாராயணன் அவனைப் பார்த்ததுமே ஏதோ யோசனை செய்துவிட்டான். “டே பையா! என்னோடு வருகிறாயா? என் வெற்றிலை பாக்குக் கடையில் வியாபாரம் செய்யமுடியுமா?” என்று அவனைக்கேட்டான். பையன் சந்தோஷமாய்த் தலையாட்டினான். அவனைத் தன்னோடு கூட்டிக்கொண்டான். முதலாளி நடை தானாகவே வந்துவிட்டது. 10-30 மணிக்கு ஈரோட்டில் வண்டி ! ஒன்றரை டிக்கெட் எடுத்துக் கொண்டு இருவருமே ரயில் ஏறினார்கள். அந்த ஏழைச் சிறுவனுக்கு ஒரே மகிழ்ச்சி. லக்ஷ்மிநாராயணன் பிளேயர்ஸ் சிகரெட்டை புகைத்தவாறு கம்பீரமாக ரெயிலில் உட்கார்ந்திருந்தான், வண்டி திருச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

லக்ஷ்மிநாராயணன் வெற்றிலை பாக்குக்கடை துவக்க விழா, குதூகலமாய் நடைபெறுகிறது. முதலாளி ஸ்தானத்தில் லக்ஷ்மிநாராயணன். வேலைக்காரனாய் ஓடும் பிள்ளையாய் அந்தப் பயல். என்ன சுறுசுறுப்பாய் வேலை செய்கிறான் தெரியுமா? வெற்றிலைப் பாக்குக் கடையும் வியாபாரச் செழிப்பில் வளருகிறது. திருச்சியில் இந்தக் கடைக்குத்தான் அபார மதிப்பு…

லக்ஷ்மிநாராயணன் கண்ணை விழித்துப் பார்த் தான் திருச்சி ஜங்ஷனில் வண்டி நின்றது. மணிநாலு, பக்கத்திலிருந்த பயலைப் பார்த்தான், காணவில்லை. பையைப் பார்த்தான்; பணமில்லை. ஒரு பெருமூச்சு; தங்கப்பன் எதிரே வந்து நின்று சிரிப்பது போலிருந்தது. நல்லவேளை வெளியே செல்ல டிக்கட்டாவது இருந்தது.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *