
தப்பிவிட்டார்கள்
கலைஞர் மு. கருணாநிதி
வளையல் வாங்கலையோ
‘சும்மா பத்திரிகையும் கையுமா இருக்கிறியே, மூஞ்சிகீஞ்சி கழுவிப் பவுடர் கிவுடர் போடக்கூடாது?’ ‘அம்மா! எனக்கு மெருகுஒன் றுமதேவையில்லை.” “தங்கப் பாத்திரமா இருந்தாலும் மெருகு இருந்தாத்தாண்டி மவுசா விலைபோகும்.”
“என்னை விலைபோகும் பொருளாகவே ஆக்கி விட்டீர்களா?”
“அந்த கேள்வியெல்லாம்… அதோ நடராஜன் வர்ரான் அவனைக் கேளு.”
“என்னம்மா தங்கச்சி சொல்லுது?”
“என்ன சொல்லுது….பொட்டுக்கட்டிக்க மாட்டேங்குது.”
‘பழைய பல்லவியைத்தானே பாடுது.’ ‘அனுபல்லவி பாடினாலும் அதைத்தான் பாடுவேன் அன்ணா!”
“சரணங் கூடப்பாடுவாள் சண்டிக்கழுதை……. லக்ஷ்மீ!… நம்ப குடும்பம் நல்லா இருக்கணும்னா….
“நான் நாசமாய்ப்போகணும் அதுதானே அம்மா?” “தங்கச்சி…ஐ மீன் தார் தங்கம் தங்கமாகக் கொட்டுவார். நம்ப தடபுடலா வாழலாம்.’
‘அண்ணா … உங்கள் விநோத வாழ்வுக்காக நான் விபசாரியாக வேண்டுமா?’
”வக்கணை பேசாதே…. இப்படிப் பேசத்தான் உன்னை வளர்த்தேனாக்கும்.”
“ஆடுமாடுகளைக் கூடத்தான்…. நல்லவிலை போகுமென்று வளர்க்கிறார்கள்.
“லக்ஷ்மி…. இந்தப் பாரு….நீ வைரக்கண்ணை நினைச்சு வம்பு பண்றே!… இனி அந்த வரட்டுப் பயல் இந்த ஊர்திரும்ப மாட்டான். வந்தால்….ஜமீன்தார் அவன் காலை வாங்கி விடுவார். பேசாமல் எங்க அபிப் பிராயப்படி நட.’
“அண்ணா!….. நான் தாசி…உன் தங்கை தாசி.. ஐயோ… இந்த வார்த்தை உனக்கு நஞ்சாகத் தெரியவில்லையா?”
“நஞ்சாவது பஞ்சாவது… தெரியாமத்தான் பெரியவாள் காலத்திலே யிருந்து நடக்குதா?”
“பெரியவர்கள்… பெண் உலகத்தின் பரம எதிரிகள்! பாவிகள்!… பாம்புக் கூட்டங்கள்!”
“துள்ளாதே லக்ஷ்மீ!… நாளைமறுநாள் நம் வீட்டுக்கு ஜமீன்தார் வருகிறார். ஏதாவது தகராறு பண்ணினால்… நம் தலையே போய்விடும்.”
“ஏண்டா தம்பி நடராஜா!…பொட்டுக்கட்டிக் கலியாணம் முடியறத்துக்குள்ளே… ஜமீன்தார் வருவதாடா?”
“போ அம்மா!…உன் பழைய சாஸ்திரத்தைக் குப்பையில் போடு. பொட்டு அப்புறம் கட்டிக்கலாம், முதலில் துட்டு வரட்டும்.”
நடராஜன் தன் கலைந்துபோன தலையை ஒழுங்கு படுத்திக்கொள்ள நிலைக்கண்ணாடிக்கு முன் சென்றான். விம்மி விம்மி அழுதபடி லக்ஷ்மீ அதைவிட்டு நகன்றாள்.
அவளது அதரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. நடுங்கும் அதரங்கள் ‘வைரக்கண்ணு” என்று ஒரு வார்த்தையை வெளியே நீட்டி மீண்டும் மூடிக்கொண்டன.
வைரக்கண்ணு தலையங்கத்தை எழுதிமுடித்தான். தலையங்கத்தின் கடைசிப் பகுதிகளை இரண்டு முறை படித்துப் பார்த்தான்.
வளையல் வாங்கலையோ
”சமுதாயம்!….. நல்ல சமுதாயம் கேடுகெட்ட சமுதாயம். உள்ளமறியா உதவாக்கரைகள் உலவும் உளுத்த சமுதாயம்.’
அதை அப்படியே மடக்கி வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தான்.
“பத்திரிகாசிரியராம்… பத்திரிகாசிரியர், வாங்கிய கடனை வட்டியும் முதலுமா நாளைக்குக் கீழே வைக்கா விட்டால் தம்பி… கம்பி எண்ணணும் ஜாக்கிரதை.”
வைரக்கண்ணுவின் நெஞ்சிலே இந்தக் காரசாரமான எச்சரிக்கை இடியென முழங்கிக் கொண்டிருந்தது. பத்திரிகை நடத்துவதற்காக அரியநாயக முதலியாரிடம் வாங்கிய கடன் ஐநூறு ரூபாய் திருப்பித் தரப்படாததால் ஏற்பட்ட அபாய அறிவிப்பு இது!
நீண்ட மௌனத்திற்குப் பிறகு ஒரு நீளமான பெரு மூச்சு. அவன் கண்கள் குளமாகிக் கன்னத்தில் இரண்டு நீர்த் துளிகள் தொத்திக் கொண்டிருந்தன.
மேசையில் கிடந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்தான். அந்தக் கடிதத்தின் மடிப்புகள் கிழிந்திருந்தன. அத்தனை முறை அதைப் படித்திருக்கிறான் போலும்.
“அன்புள்ள அத்தான் விரைவில் சந்திப்போம்…”
“விரைவில் சந்திப்போம்” என்ற முடிவு அன்புள்ள அத்தானைவிட அதிக இனிப்பு வாய்ந்தது என்பதை அவன் இதழ்களின் அசைவு சொல்லிற்று. கன்னத்தில் நின்ற நீர்த்துளிகள் காய்ந்துவிட்டன.
‘அத்தான்’ என்று ஒரு அழைப்பு குயில்கூப்பிட் டதுபோல இருந்தது.
வைரக்கண்ணு திடுக்கிட்டு எழுந்தான். அவன் நெஞ்சி படபடவென்று அடித்துக் கொண்டது.
லக்ஷ்மீ!….
……’அத்தான்’!! இந்த இதய ஒலிகள்
பீறிட்டெழுந்து பின்னிக் கொண்டன.
அமைதி அதிக நேரம் நீடிக்கவில்லை.
“நேற்றுத்தானே கடிதம் எழுதியிருக்கிறாய். அதற்குள் எப்படி, லக்ஷ்மீ, வந்தாய்?”
“பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறேன். கேளுங்கள், அம்மாவின் ஆசைப்படி நடராஜ அண்ணாவின் அழைப்பையேற்று என்னை முதல் திருமணம் செய்துகொள்ள ஜமீன்தார் வந்தார்.நான் பலாத்காரமாக அறைக்குள் தள்ளப்பட்டேன்.”
“கேளுங்கள்! ஜமீன்தாரிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். என் உபதேசங்கள் எல்லாம் அவருக்கு ஊமையின் பேச்சாகத் தெரிந்தன. என்வாழ்வில் நஞ்சு பூச வேண்டாமென்ற கோரிக்கையை… அந்த நேரத்தில் அவர் எப்படிக் கேட்பார்.’
“துப்பாக்கியை நீட்டிப் பயமுறுத்தினார்.”
“நான் சாகசத்தில் இறங்கினேன். மதுபான வகையறாக்கள் அத்தனையும் ஜமீன்தார் வயிற்றில் கலந்தன. என் கைகளால் அவைகளை வாங்கிக் குடிப்பதே பெரும் பாக்கியமென்று அவர் எண்ணினார். கோப்பையை வாங்க அவர் கை நடுங்கியபோது நானே அவர் வாயில் ஊற்றினேன்.”
‘அவ்வளவுதான். ஜமீன்தார் போதை தலைக்கேறிச் சாய்ந்தார்.’
”பிறகு?”
“நான் விழித்துக் கொண்டேயிருந்தேன். விடியற் காலை மணி நாலு! வீட்டில் நல்ல தூக்கம். இருட்டிலே ஒளிந்துவந்து இரயிலேறினேன். இப்பொழுது….’
”லக்ஷ்மீ!… வீரலக்ஷ்மீ…?”
“அத்தான்… இந்த வைர வளையல்கள் ஜமீன் தார் கொடுத்தவை.”
“பாவம்…… நன்றாக ஏமாந்தான்.” பரிதாபத்துக்குரியவன்.
“அத்தான் இன்று முதல் நம் வாழ்க்கை ஆரம்பம்.”
“ஆம்.”
“இனி……..நாம் பிரிய வேண்டியதில்லை.”
“இல்லை.”
அத்தான்……. ஏன் அழுகிறீர்கள்?’
“அழ வில்லை… ஆனந்தக் கண்ணீர்.”
“நான் நம்பமாட்டேன்…நடந்ததைச் சொல்லுங்கள்.”
வைரக்கண்ணு வாய் திறக்கவேயில்லை.லக்ஷ்மியின் இடைவிடாத பிடிவாதத்தால் கடைசியில், தான் பட்ட கடனுக்காக நாளை ‘கோர்ட்டுக்குச் செல்லவேண்டு மென்ற உண்மை வெளியாயிற்று. லக்ஷ்மி கவலைப்படவே யில்லை. ஜமீன்தார் போட்ட வளையல்களைக் கழற்றினாள். தன் கழுத்தில் கிடந்த சிறிய சங்கிலியையும் வளையல்களையும் வைரகண்ணுவிடம் அளித்தாள்.
”அத்தான். இவைகளை நாளைக்கே விற்று விடுங்கள்.கடன் தீரட்டும். மீதிப்பணம் பத்திரிகைக்கு முதலாக இருக்கட்டும். நீங்கள் தயங்க வேண் டாம்.”
வைரக்கண்ணு யோசித்தான். ஆனாலும் சரியென்றான். இரவு ஓடிக்கொண்டிருந்தது.
வளையல்களை எடுத்துக்கொண்டு வைரக்கண்ணு புறப்பட்டான். வாயிற்படி வரையில் லக்ஷ்மி வந்து வழியனுப்பினாள். அவள் கண்களில் புது ஒளி! இதழைக் கிழித்துக் கொண்டு புன்னகை நெளிந்தது.
அவள் திருச்சியிலே வைரக்கண்ணுவின் வீட்டில் இருப்பதாக நினைக்கவில்லை. இன்பபுரியில் இருப்பதாக நினைத்தாள். ஒரு அநாதைச் சிறுவனின் மேல் அவள் கொண்ட காதல் ஜமீன்தார் கட்டிய மாட மாளிகைகளையெல்லாம் மண் மேடாக மதித்தது.
அவன் காதலுக்காக அவள் பட்ட இன்னல்கள் எத்தனை! வைரக்கண்ணு விரட்டப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டாள். அது அவள் விலாவில் பாய்ந்தவேல். காதலில் கொண்டிருந்த உறுதியால் அவள் சளைக்கவில்லை. நடராசனின் ‘நாட்டு சோக்காளி வாழ்வுக்கு தன் வாழ்வு பலியிடப்படவேண்டுமென்ற பலாத் காரம்!……. இது எரியும் தீயில் எண்ணெய்……
அவள் விடுதலை விழா அன்று!…அதை நினைத்து மகிழ்ந்தாள். ஆடிக்கொண்டே உள்ளே ஓடினாள்.. குயிலிசை கிளம்பிற்று.
வடநாட்டு மார்வாடியின் காசுக்கடையில் வைர வளையல்கள் சோதனை செய்யப்பட்டு விலைபேசுங் கட்டம் வந்தது.
“வைரம் உயர்ந்ததல்ல சாதா வைரங்கள். எல்லாம் நூறு ரூபாய் கூடப் பெறுமானமில்லை” மார்வாடி அலட்சியமாக வளையல்களைக் கீழே வைத்தான்.
வைரக்கண்ணு வளையல்களை எடுத்துக்கொண்டு ‘கண்ணைத் திறந்து கேளய்பா” என்றான்.
“போனால் போகிறது….நூற்று ஐம்பது வாங்கிக் கொள்”-இது மார்வாடி.
“பாவம் ஐயாவுக்குப் பரிதாபம்” வைரக்கண்ணு கிண்டலாகப் பேசினான்.
“ஒரே விலை… இருநூறு ரூபாய்!”
“தமிழ் நாட்டுக்காரனுக்குப் புத்தியேயில்லை என்பது ஐயாவின் அபிப்பிராயம்” -வைரக்கண்ணு ஆத்திரத்தோடுதான் இதைக் கூறினான்.
“சரி, கோபிக்காதே சார்… மறுபடியும் பார்க்கிறேன்.”
மார்வாடி வளையல்களை வாங்கி மீண்டும் மதிப்புப் பார்த்தான். பார்த்துக்கொண்டிருக்கும் போதே தன் கடைப் பையனிடம் ஏதோ இந்துஸ்தானியில் சொன்னான். கடைப் பையன் எங்கேயோ ஓடினான். திருப்பித் திருப்பி, வளையல்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். வைரக்கண்ணுக்கும் அலுத்துவிட்டது.
“சீக்கிரம் பாரய்யா!’
“இதோ முடிந்துவிடும்.”
”எவ்வளவு நாழிகை மதிப்புப் பார்க்க?”
“பையன் போயிருக்கிறான். வரட்டும் உங்களை அனுப்பி விடுகிறேன்.”
கடைப் பையன் திரும்பினான், அவனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டரும் வந்து சேர்ந்தார்.
வைரக்கண்ணு…… நகைகளைத் திருடிவந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டான்.
“உங்க பெயர் வைரக்கண்ணுதானே?’
‘ஆமாம்.’
“பாட்டாளி பத்திரிகையின் எடிட்டர் நீர்தானே?” “ஆமாம்.”
“இது யாருடைய நகைகள்?”
“என் மனைவியின் நகைகள்.”
“முன்பு …ஒரு முறை…உமக்குக் கல்யாணம் ஆகவில்லை யென்று என்னிடம் சொன்னீரே!”
“மனைவியல்ல…என்காதலி, அவள் விருப்பத்தின் படிதான் இவைகளை விற்க வந்தேன்.”
“உம் காதலி…இப்பொழுது எங்கே?”‘ “என் வீட்டில் இருக்கிறாள்.” “சரி….வீட்டுக்குப் புறப்படும்.” “இதோ… வருகிறேன்.”
சப் இன்ஸ்பெக்டரும், வைரக்கண்ணும், வேடிக்கை பார்த்தவர்களும் அவன் வீடு நோக்கி நடந்தார்கள்.
வீடு நெருங்க நெருங்க வைரக்கண்ணுக்குச் சிரிப்பு வெடிக்க ஆரம்பித்தது, சப்இன்ஸ்பெக்டர் சரியானபடி ஏமாறப் போகிறார் என்று அவன் மனதில் ஏளன எண்ணம் தோன்றிற்று.
வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
“லக்ஷ்மீ” என்று வைரக்கண்ணு ஆவலோடு கூப்பிட்டான். பதில்வரவில்லை. ஒரு மூலையில் அவள் படுத்திருந்தாள். “பகலிலா தூக்கம்?” அவளைத் தட்டி எழுப் பினான். சப் இன்ஸ்பெக்டருக்குச் சந்தேகம் தீர்ந்தது. திடீரென வைரக்கண்ணு அலறினான் முகத்திலறைந்து கொண்டான்.
அவன் முகமெல்லாம் ரத்தக் கறைகளோடு… பைத்தியம் பிடித்தவன் போல்… ஆடினான்.
எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள். லக்ஷ்மி பிணமாகக் கிடந்தாள்,
வைரக்கண்ணு கைது செய்யப் பட்டான். “திருடன்!கொலைகாரன்!” சப் இன்ஸ்பெக்டரின் சண்டமாருத ஒலிகள்!
“பாவிப்பயல்….ஒரு அழகான பெண்ணை நகைகளுக்காகக் கொலை செய்திருக்கின்றானய்யா.’
வேடிக்கை பார்த்தவர்கள் கூறினார்களிப்படி!
தாசித் தொழிலுக்கு ஒத்துவராத தங்கை, தன்னை யும், ஜமீன்தாரையும் ஏமாற்றிவிட்டு… ஒரு அநாதைப் பயலோடு வாழ்வது பிடிக்காத நடராஜன், ஓடிவந்தவளைக் கண்டுபிடித்துக் கூப்பிட்டுப் பார்த்தும் வராததால் சுட்டுக் கொன்றுவிட்டுப் போய்விட்டான் என்ற ரகசியம் யாருக்குந் தெரியாது. எப்படித் தெரிய முடியும்?
வைரக்கண்ணு வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டான். அவன் பழைய வைரக்கண்ணு அல்ல. பைத்தியக்கார வைரக்கண்ணு…வக்கீல் எது கேட்டாலும், “வளையல் வாங்கலையோ வளையல்'”என்ற பதிலைத்தான் சொல்லுகிறான்.



