தேன் பாகு
கி.வா.ஜகந்நாதன்

கிண்டியாய நமஹ

அந்தப் பிராமணர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நீராடி விட்டுக் கையில் ஒரு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு வீடு தோறும் சென்று ‘கிருஷ்ணாய நமஹ’ என்று சொல்லி நிற்பார். வீட்டுக்காரர் போடும் அரிசியை வாங்கிக் கொள் வார். பல வீடுகளில் கிடைக்கும் அரிசியைக் கொண்டு அவர் ஜீவனம் நடத்தி வந்தார்.

ஒருநாள் ஒரு வீட்டிற்குள் சென்று, “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லி நின்றார். கூடத் தில் யாரும் இல்லை. சற்றும் முற்றும் பார்த்தார்.

யாரும் இல்லை. அங்கே ஒரு கிண்டி இருந்தது. அதை எடுத்துத் தம் பையில் போட்டுக்கொண்டு புறப்பட்டு விட்டார்.

பிறகு வீட்டுக்காரர்கள் கூடத்தில் இருந்த கிண்டியைக் காணாமல் எங்கும் தேடினார்கள். அது கிடைக்கவில்லை.

இரண்டு நாட்கள் ஆயின. அந்த இரண்டு நாளும் அந்தப் பிராமணர் அந்த வீட்டுக்குப் போகவில்லை. மூன்றாவது நாள் போனார். அங்கே நின்றபோது அவருடைய மனதில் கிண்டியைத் திருடின நினைவு தோன்றியது. மார்பு ‘படக் படக் கென்று அடித்துக்கொண்டது. “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லவேண்டியவர் “கிண்டியாய நமஹ” என்று சொல்லிவிட்டார். அவர் மனதில் இருந்தது அவரை அறியா மலே வாயில் வெளிப்பட்டுவிட்டது.

அதைக்கேட்ட வீட்டுக்காரர்கள் ‘இவர் என்ன கிண்டியாயநமஹ, என்றாரே, இவரேகிண்டியைத் திருடியிருப்பாரோ?’ என்று எண்ணி “ஓய்! பிராம்மணா, கிண்டி எங்கே? என்று அதட்டிக் கேட்டார்கள். முன்பின் இத்தகைய காரியத்தைச் செய்து அறியாதவரா தலின் அவர் தடுமாறினார். கடைசியில் கிண்டியைத் தாமே எடுத்துச் சென்றதாகவும் மறுநாள் கொண்டு வந்து கொடுப்பதாக வும் ஒப்புக்கொண்டார்.

மறுநாள் கிண்டி வந்து சேர்ந்தது. ‘கிருஷ்ணாய நமஹ, ‘கிண்டியாய நமஹ’ ஆனதை எண்ணி வீட்டுக்காரர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *