
உலகநீதி
காப்பு
உலகநீதி புராணத்தை யுரைக்கவே கலைக
ளாய்வருங் கரிமுகன் காப்பு
பதவுரை: உலக நீதி – உலக நீதியாகிய, புராணத்தை – பழஞ்செய்திகளை, உரைக்க – நான் கூறுதற்கு, கலைகள் – வேதம் முதலிய நூல்களால், ஆய்வு அரும் – ஆராய்ந்து காண்டற்கு அரிய, கரிமுகன் – யானை முகத்தையுடைய விநாயகக் கடவுள், காப்பு – காப்பாவர் என்றவாறு.
பொழிப்புரை: உலக நீதி என்னும் பழஞ் செய்திகளைச் சொல்லுதற்கு வேத முதலிய நூல்களாலும் அறிய வொண்ணாத விநாயகக் கடவுள் காப்பாவர் எ – று.
உலகநீதி உலகத்தில் பண்டைக்காலந் தொடங்கி உயர்ந் தோர்களால் ஏற்கப்பட்டு வரும் நீதிகள். இவைதாம் புதியனவாகச் சொல்வனவல்ல, தொன்று தொட்டுள்ளனவே என்பது அறிவித் தற்குப் ‘புராணம்’ என்றார்; புராணம் பழைமை; பதினெண் புராணம் முதலியவற்றைப் போல் இதனையும் புராணமென்றா ரென்று கொள்ளற்க: கலைகளாய் வரும் என்பதற்குக் கலைகளின் வடிவாகி வரும் என்றுரைப்பினும் அமையும். காப்பு – காவல்; இடையூறு வராமல் பாதுகாப்பர் என்றபடி.



