வள்ளலாரும் அருட்பாவும்
கி. ஆ. பெ. விசுவநாதம்

வள்ளலார்


1.
வள்ளலார் யார்?

உலகில் உள்ள மதங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை என்றும், அவற்றுள் மிகப் பெரிய மதங்கள் ஒன்பது என்றும் சமயவாதிகள் கூறுகின்றனர். அவை இந்து மதம், புத்த மதம், சமண மதம், கிறிஸ்து மதம், இஸ்லாம் மதம், பார்சி மதம், சைவம், வைணவம், சன்மார்க்கம் என்பன. இவை அனைத்தும் நாம் வாழ்கின்ற இதே ஆசியாக் கண்டத்தில் தோன்றியவை. இதனால் நல்லறிஞர்கள் ஆசியாக் கண்டத்தினைக் குறிப்பிடும் போதெல்லாம் ஞானம் பிறந்த கண்டம்”. “ஞானம் பிறந்த கண்டம்” என்று கூறுவதுண்டு.

அதிலும் ஆறு மதங்கள் நம் இந்தியாவிலேயே பிறந்தவை. அதிலும் மூன்று மதங்கள் தமிழகத்திலேயே தோன்றியவை. அவை, சைவம், வைணவம், சன்மார்க்கம் என்பன. இவற்றில் சன்மார்க்க சமயத்தைத் தோற்றியவர் நம் வள்ளலார்.

பொருளை வாரி வழங்கியவர்கள். “பொருள் வள்ளல்கள் அருளை வாரி வழங்கியவர்கள் “அருள் வள்ளல்கள்”. இத்தகைய அருள் வள்ளல்கள் பலர். அவர்களில் ‘வள்ளலார்’ என்ற பெயரையே பெற்றுத் திகழ்பவர் நம் வள்ளலார்.

பெயர் – இராமலிங்க அடிகள்.

பெற்றோர் – சின்னம்மையார், இராமையா பிள்ளை.

பிறந்த நாள் – 1-10-1823

பிறந்த ஊர் – சிதம்பரத்திற்கு வடக்கில் உள்ள மருதூர்.

உடன் பிறந்தோர் – சபாபதிப் பிள்ளை, பரசுராமப்

பிள்ளை.

2. வாழ்ந்த ஊர்கள்

பெரும்பாலும் சென்னையும், வடலூரும், வாழ்ந்த ஆண்டுகள் 1823 முதல் 1874 வரை, 51 ஆண்டுகள்.

3. வாழ்ந்த இடமும் வயதும்

கந்த கோட்டத்தில் ஒரு வயது முதல் பன்னிரண்டு வயது வரை. திருவொற்றியூரில் 12 முதல் 35 வயது வரை. சிதம்பரத்தில் 35 முதல் 44 வயது வரை. வடலூரில் 44 முதல் 47 வயது வரை சித்தி விளாகத்தில் 47 முதல் 51 வயது வரை.

4. ஆசிரியர்கள்

காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி முதலியார், உடன் பிறந்த தமையன் சபாபதிப் பிள்ளை முதலியோர்.

5. மாணாக்கர்கள்

தொழுவூர் வேலாயுத முதலியார். பொன்னேரி, சுந்தரம் பிள்ளை. இறுக்கம் இரத்தின முதலியார், பண்டாரம் ஆறுமுக ஐயா, காயாறு ஞானசுந்தரம் ஐயா ஆகியோர்.

6. அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், காஞ்சிபுரம் சபாபதி முதலியார் அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார், மாயூரம் முனிசீப் வேத நாயகம் பிள்ளை, அட்டாவதானம் சபாபதி முதலியார், ‘மகாவித்துவான்’ தணிகாசல முதலியார் போன்றவர்கள்.

7. தோற்றம்

துறவியாக, ஞானியாக, புலவராக, கவிஞராக, சொற் பொழிவாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராக, உரை யாசிரியராக, ஞானாசிரியராக,போதகாசிரியராக, மருத்து வராக, சித்தராகக் காட்சியளித்தவர்.

8. அவர் கண்டவை

ஒரு தனிக் கொள்கையை, தனி மார்க்கத்தை, தனிக் கொடியை, தனிச் சபையை, தனி மந்திரத்தை, தனி வழி பாட்டைத் தனிமுறையாகக் கண்டவர்.

9. அவரது தொண்டுகள்

திருக்குறள் வகுப்பு, முதியோர் கல்வி, மும்மொழிப் பாடசாலை, கல்வெட்டு ஆராய்ச்சி.

10. செயற்கருஞ் செயல்கள்

நாம் எண்ணங்களைக் கோடிக் கணக்கில் எண்ணுகிறோம்.

திருவள்ளுவரோ,

“அடுத்த நிமிடம் உயிர் வாழ்வதை அறியமாட்டார்கள். அவர்கள் எண்ணங்களைக் கோடிக்கு மேல் எண்ணுகிறார்கள்” எனக் கூறுகிறார் என்பது குறள்.

ஒருபொழுது வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல பல

ஆக, நாம் எண்ணங்களைக் கோடிக் கணக்கில் எண்ணு கிறோம். எழுத்துக்களை இலட்சக்கணக்கில் எழுது கிறோம். பேச்சுக்களை ஆயிரக்கணக்கில் பேசுகிறோம். கொள்கைகளை நூற்றுக் கணக்கில் கூறுகிறோம். திட்டங் களைப் பத்துக் கணக்கில் வகுக்கிறோம். ஆனால் செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்வதில்லை. வள்ளலாரோ பல செயல்களை, அதுவும் செயற்கருஞ்

செயல்களைச் செய்து முடித்தவர்.

சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை, சத்திய ஞான சமரச சன்மார்க்க சங்கம், இம் மூன்றையும் தோற்றுவித்து, செவ்வையாக நடத்தி, என்றும் நின்று நிலவச் செய்திருப்பது அவர் செய்த செயற்கருஞ் செயல் களாகும்.

யார் பெரியர் என்ற கேள்விக்கு வள்ளுவர் கூறுகிற விடை “பணத்தரல்லர். நிலத்தரல்லர். எழுத்தரல்லர் பேச்சரல்லர், வயது முதிர்ந்த கிழவர்களும் அல்லர், பிறராலே செய்தற்கரிய காரியங்களைச் செய்பவரே பெரியர் என்பது, இதனை செயற்கரிய செய்வர் பெரியர்” என்ற குறளால் அறிய முடிகிறது. அத்தகைய பெரியர் “வள்ளலார்”.

11. சித்த மருத்துவர்

சித்தர் வேறு, முத்தர் வேறு சித்தி அடைந்தவர் சித்தர் முத்தி அடைந்தவர் முத்தர்.

சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
முத்திஎன்பது நிலை முன்னுறு சாதனம்

என வள்ளலாரே கூறியுள்ளார்.

1. வள்ளலார் சித்த மருத்துவராகவும், சித்தராகவும் இருந்து உடற்பிணிக்கும், மனப்பிணிக்கும் மருந்து கூறியவர்.

ஞான மருந்து இம் மருந்து – சுகம் நலகும் வைத்திய நாத மருந்து சுத்த சன்மார்க்க மருந்து, அருட்சோதி மலையில் துலங்கும் மருந்து, சித்துருவான மருந்து எனைச் சித்தெல்லாம் செயச் செய்வித்த மருந்து என்ற அவருடைய பாடல் இவற்றை மெய்ப்பிக்கிறது.

2. பெற்ற உடம்பு சாகடிப்பதற்காக அல்ல என்பது சித்தர்கள் கண்ட முடிவு. ‘இதற்குச் சாகாக் கலை’ என்று பெயர்.

நந்தவனத்திலோர் ஆண்டி–அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி–அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

என்பது

ஒரு சாகாக்கலைப் பாடல். நந்தவனத்தில் ஓர் ஆண்டி – உலகத்தில் ஒரு ஆன்மா, நாலாறு மாதமாய் – நாலும் ஆறும், பத்து மாதமாய் தாய் வயிற்றிலிருந்து, குயவனை வேண்டி – பிரம்மாவை வேண்டி. கொண்டு வந்தான் ஒரு தோண்டி– இந்த உடம்பு. இதைப் பாதுகாக்கத் தெரி யாமல் உலக இன்ப துன்பங்களில் உழன்று, கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி சாகடித்தாண்டி என்பது, இதன் பொருள். இந்தக் கலையெலாம் கற்றவர் நம் வள்ளல்.

3. பொன் செய்யும் ஆற்றலையும் படைத்தவர். அவர் உடம்பில் முகத்தைத் தவிர பல பகுதிகள் பொன் மயமாய் இருந்து ஒளிவீசின என்பதை அவர் காலத்தில் வாழ்ந்தவர் கண்டுள்ளனர். இது அவர் முகத்தைத் தவிர மற்ற இடங்களை மூடி மறைத்திருந்ததாலும் தெரிய வருகிறது. இவற்றைப் பொன் வடிவம் தனையடைந்து களித் தேன்” என்ற அவரது வாக்கும். “பொன்னுடம்பு எனக் குப் பொருந்திடும் பொருட்டு என்னுளம் கலந்த என் தனி யன்பே” என்று அவர் இறைவனை நினைந்து உருகிப் பாடிய பாடலும் மெய்ப்பிக்கின்றன.

12. வியப்புக்குரியவை

1. ஓராண்டுப் பருவத்திலே தில்லையில் திரை தூக்கத் தரிசித்தது.

2. திண்ணையிலிருந்து புரண்டு கீழே விழுந்தபோது விழாமல் தடுத்து இறைவி காப்பாற்றியது.

3. ஐந்து வயதில் பள்ளிக்குச் சென்றும் படிப்பில் கவனமில்லாது இறை நினைவே கொண்டிருந்தது.

4. ஒன்பது வயதில் அவரது ஆசிரியர். ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் என உலக நீதியைச் சொல்லக் சொல்லியும் இவர் சொல்லா திருந்தார். “ஏன் சொல்லவில்லை?” என்று ஆசிரியர் கேட்டபோது, இறைவனிடத்திலே “வேண்டாம் வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருப்பானேன். “ஏதாவது வேண்டும், வேண்டும்” என்று “எதை வேண்டலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றார்.

“நீ வேண்டுமானால் வேண்டும் வேண்டும் எனப்பாடு” என்று ஆசிரியர் கட்டளையிட உடனே ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலைப் பாடியது.

5. பட்டினியோடு திண்ணையில் படுத்து உறங்கிய போது அண்ணியார் வடிவில் வந்து இறைவி அவருக்கு உணவளித்தது.

6. சிறு வயதிலேயே துறவு பூண்டு மீண்டது.

7. இளமையில் அண்ணன் சொற்பொழிவுக்கு ஏடு படிக்கத் தொடங்கி, அவர் ஒப்புக் கொண்ட சொற்பொழிவுக்கு நோய்வாய்ப்பட்டுப் போக முடியாதிருந்த போது, தான் சென்று அச்சொற்பொழிவை நிகழ்த்தி, மக்களின் பாராட்டைப் பெற்றது.

8. பிறகு ஊர் மக்கள் அவர் தமையனிடம் சென்று இனித் தம்பியையே சொற்பொழிவுக்கு அனுப்புங்கள் என்று கேட்கும் நிலை வந்தது.

9. திருவொற்றியூரில் வள்ளலார் நடந்து சென்ற போது, “இதோ ஒரு மனிதன் போகிறான்” என்று ஒரு ஞானி மகிழ்ந்து கூறியது.

10. தண்ணீரில் விளக்கு எரித்தது.

11. ஒரே இரவில் 1596 வரிகளையுடைய அருட் பெருஞ்சோதி அகவலைப் பாடி முடித்தது.

12. பொருளாசை சிறிதும் கொள்ளாது. “பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றிலேன், நான் படைத்த அப் பணங்களை பலகால் கிணற்றிலே எறிந்தேன், குளத்திலும் எறிந்தேன். கேணியில் எறிந்தனன் எந்தாய்” என்று கூறிப் பணத்தை எறிந்து வந்தது.

காராலும், கனலாலும், காற்றாலும், ககனக் கலை
தடுக்கப் படுதலிலாத் தனி வடிவம் அளித்தாய்!

எனவும்.

‘இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றினாய்’

‘சாகா நிலை இது தந்தனம் உனக்கே’ என்றாய்,

‘எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்தாய்’

‘அற்புதம் இயற்று! அதிசயம் இயற்று!’ என்றாய் எனவும், அவரே இறைவனிடம் கூறி மகிழ்ந்தது.

இவை அனைத்தும் நம்மை வியப்படையச் செய்வன.

13. சீர்த்திருத்தக்காரர்

1. ஏழை, பணக்காரர், மேல்சாதி, கீழ்சாதி முறை களைக் கண்டித்தவர்.

2. சமய வேற்றுமைகளைச் சாடியவர்.

3. புராண இதிகாசங்களை வெறுத்தவர்.

4. கோவில் கட்டியவன் கோவிலுக்குப் போகாத நிலையையும், குளம் வெட்டியவன் தண்ணீர் எடுக்க முடியாத நிலையையும் தாக்கி, ஒரு பெரும் புரட்சியைச் செய்தவர்.

5. மாயூரம் முனிசீப் வேதநாயகம்பிள்ளை பாடிய நீதி நூலுக்குச் சாற்றுக்கவியும் வழங்கி மகிழ்ந்தவர்.

14. அவரது வரலாற்றை அறியத் துணைபுரிவன :

1.திருவருட்பாவில் காணப்பெறும் அகச்சான்றுகள்,

2. தொழுவூர் வேலாயுத முதலியார் பாடிய “திரு அருட்பா” வரலாறு.

3. அவர் பிரும்ம ஞான சங்கத்தாருக்கு 1882-ல் கொடுத்த வாக்கு மூலம்.

4. தென்னாற்காடு மாவட்ட கெஸட் 1906 – ம் ஆண்டு.

5. பாலகிருஷ்ணப் பிள்ளை பதிப்பித்த அருட்பாவில் காணப்படும் சில குறிப்புக்கள்.

6. ஊரன் அடிகளார் பதிப்பித்த அடிகளார் வரலாறு ஆகியவைகளால் அவரது வரலாற்றை இன்னும் விரிவாகக் காணலாம். இதுகாறும் கூறியவை மிகவும் சுருக்கமானவை.

15. சன்மார்க்கம் என்பதன் பொருள்

1. சன்மார்க்கம் என்பது நல்வழி எனவும், நன்னெறி எனவும் பொருள்படும்.

2. சுத்த சன்மார்க்கம் என்பது தூய்மையான நல்ல வழி எனவும், சத்திய சன்மார்க்கம் என்பது உண்மையான நல்லவழி எனவும் பொருள்படும். இவையே இறைவனை அடையும் எளிய வழிகள் என்பது வள்ளலார் கருத்து.

3. ‘தங்கமே யனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கம்’ என்பது பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் ஒரு அடி. இது சன்மார்க்கத்தினருக்கும் மற்ற மார்க்கத்தினருக்கும் வேற்றுமையைக் காட்டுவதாகும். செம்பும் தங்கமும் ஒரே இனம். ஆனால் செம்பில் களிம்பு உண்டு; தங்கத்தில் களிம்பு இல்லை என்பதுதான் வேற்றுமை. செம்பிலே உள்ள களிம்பு நீங்கிவிட்டால் அது தங்கமாகி விடுகிறது. சன்மார்க்கிகள் மன அழுக்கு நீங்கியவர்கள். ஆதலால் அவர்கள் “தங்கமே அனையார்” ஆகின்றனர் என்று தெரிய வருகிறது.

16. வள்ளலாரது கொள்கைகள்

இளமையில் முருகனைக் கடவுளாகவும், திருஞான சம்பந்தரைக் குருவாகவும், திருவாசகத்தை வழிபடும் நூலாகவும் கொண்டு, பின்னர் ஒற்றியூரில் சிவபக்தராகவும் தில்லையில் நடராஜ பக்தராகவும், முடிவில் அருட்பெருஞ் சோதி அடியாராகவும், விளங்கினார். “கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ் சோதியர்! சிறு தெய்வ வழிபாடு கூடாது! உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது. எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணவேண்டும். ஏழைகளில் பசியைப் போக்க வேண்டும். எதிலும் பொதுநோக்கம் வேண்டும், இறந்தவர்களை எரிக் காமல் புதைக்கவேண்டும். ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீடு பெற உதவும்” என்பன அவரது கொள்கைகள்.

17. சன்மார்க்கத்தினரின் வேண்டுகோள்

“எல்லாமுடைய அருட்பெருஞ் சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் எவ்விடத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாவண்ணம் அருள் செய்ய வேண்டும்.

“சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எள்ளளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ் சோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட்பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம்” என வேண்டிக்கொள்வது.

18. அவர் கண்ட நெறிகளில் ஒன்று ”பெருநெறி“

1. இது ஒரு புது நெறி. நெறி பல வகை. அதில் பெருநெறி ஒரு தனிவகை, நெறி என்றாலே நன்னெறியைக் குறிக்கும். தீ நெறியைக் குறிக்காது. இதை “நெறி நின்றாடு நீடு வாழ்வார்” என்னும் திருக்குறளால் அறியலாம்.

நெறி என்றால் வழி. அதுவும் நல்வழியையே குறிக்கும். அவ்வழியைக் குறிக்காது. இதனை “வழியே ஏகுக! வழியே மீளுக” என்பதால் அறியலாம்.

தீ நெறியைக் குறிக்கும் போதெல்லாம் நமது முன்னோர்கள் நெறியல்லா நெறி’ என்றே குறிப்பிட்டிருக் கிறார்கள். இது தமிழகச் சான்றோரின் பண்பு.

வள்ளலார் தமது அருட்பாவில் பல நெறிகளைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவற்றுள் பெருநெறி என்பதை அடிக்கடி பல்வேறு இடங்களில் கூறியிருப்பதைக் காணலாம்.

“பன்னெறிச் சமயங்கள், மதங்கள் எனுமோர் பவநெறி உலகில் பரவியது. இதனால் மக்கள் செந்நெறி அறிந்திலர். இறந்திறந்து உலகோர் செறியிருள் அடைந்தனர். ஆதலின் இனி நீ புன்னெறி தவிர்த்து,வான் புத்தமுது அளிக்கின்ற சுத்த சன்மார்க்கத் தன்னெறி செலுத்துக! என்ற என் அரசே” எனக் கூறியிருக்கின்றார். இதில் பல நெறிகள் வந்துள்ளன.

வடலூரில் சத்திய ஞானசபை எட்டுப்பட்டை அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. அதில் எட்டாவது பட்டையில் குருநெறிக்கே என்னைக் கூட்டிக்கொடுத்தது. கூரறிய பெருநெறிக்கே சென்ற பேர்க்குக் கிடைப்பது பேயுலகக் கருநெறிக்கே சென்றவர் காணற்கரியது. காட்டுகின்ற திருநெறிக்கே சென்றவர்க் கேற்றது, “உத்தர ஞான சிதம்பரமே” என்ற அருட்பா எழுதப் பெற்றிருக்கிறது. இதில் ஒரு பெருநெறி வருகிறது.

“சிறுநெறி செலுத்தாது தடுத்தெனையாண்டு பெரு நெறி செலுத்தியோன்” என இறைவனைக் குறிப்பிடுகிறார். இங்கும் ஒரு பெருநெறி.

மற்ற நெறிகளுக்குப் பொருள் தெரிகின்றன. பெரு நெறி என்றால் என்ன? எனில்,”பெரிய நெறி” எனக் கூறி விடலாம். ‘பெருநெறி என்பது எது?’ என்றால் என்ன கூறுவது?

அருட்பாவில் உள்ள தெய்வமணிமாலையில், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” – இது உறவு நெறி. ”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”- இது வஞ்ச நெறி. ”பெருமை பெறு நினதுபுகழ் பேச வேண்டும்” -இது பக்திநெறி. “பொய்மை பேசாதிருக்க வேண்டும்”- இது வாய்மை நெறி. பெருநெறி பிடித்தொழுக வேண்டும்” இங்கும் ஒரு பெருநெறி. “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”- இது சமயநெறி,”மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்” – இது துறவுநெறி. “உனை மறவா திருக்க வேண்டும் – இது யோக நெறி. “மதிவேண்டும்” இது அறிவுநெறி. “நின் கருணைநிதி வேண்டும்” — இது கருணைநெறி. ”நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்”- இது சுகாதார நெறி. இவற்றுள் பெரு நெறி என்றால் எது? புரியவில்லை.

பெருநெறி என்பது நான்கு எழுத்துக்களில் உள்ள இரண்டு சொற்களைக் கொண்ட ஒரு சிறு சொற்றொடர், இதனை வள்ளலாருக்கு முன்பு உள்ள சான்றோர்கள் எவரும் கையாண்டதாகக் கேள்விப் படவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் தேடியும் என் கண்களுக்குப் புலப்படவில்லை,

வள்ளற் பெருமான் திருஞான சம்பந்தரை வழிபடு குருவாகக் கொண்டார் என அறிந்தேன். அவரிடம் கிடைக்குமா என ஆராய்கிறேன். சம்பந்தருக்கு வயது மூன்று. சீர்காழியில் குளத்தருகில் பாலுண்ட வாயோடு காட்சியளித்தார். தந்தை சிவபாத இருதயர் பிரம்பெடுத்து வந்து. ‘யார் பால் கொடுத்தது?’ என்று அதட்டிக் கேட்டார். அதற்குச் சம்பந்தர் ‘பெம்மான் என்றார். எந்தப் பெம்மான்? பிரமாபுரம் மேவிய பெம்மான். எந்தப் பிரமாபுரம்? பெருநெறிய பிரமாபுரம்” என்றார். அகப்பட்டுக் கொண்டது பெருநெறி. பூட்டுக்கு இங்கு சாவி கிடைத்தது போன்றிருந்தது. அது மட்டுமல்ல, “பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான்” என்ற சொற்றொடர், இறைவனையும் அவன் கொண்ட சீர்காழியையும், அந்தச் சீர்காழி நகரத்திலுள்ள சான்றோர்களின் நெறியையும் விளக்கியது. அப்பொழுது தெய்வமணிமாலைக்குத் திரும்பி வந்து. அங்குள்ள பெரு நெறியைப் பார்த்தால் வெறும் பெருநெறி என்றில்லை, “பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்” என்றிருப்பது புரிந்தது.

மற்ற நெறிகளெல்லாம் பிறர் கொடுக்க வேண்டும் என்பதாகவும், இந்தப் பெருநெறி மட்டும் பிறர் கொடுத்துப் பெறுவதல்ல; “தானே பிடித்து ஒழுக வேண்டிய ஒன்று” என்றும் விளங்கிற்று.

இதிலிருந்து பெருநெறி என்பது எல்லா நெறிகளிலும் உயர்ந்த நெறி என்பதும், அது சான்றோர்களால் கையாளப் பெற்ற – கையாளப்படுகின்ற நெறி என்பதும், அது அன்பு நெறி,

அருள்நெறி, கருணைநெறி ஆகிய மூன்று நெறி களாலும் பின்னப்பட்ட ஒரு பெருநெறி எனவும் விளங்கிற்று.

அன்பு நெறி, அருள் நெறி. கருணைநெறி ஆகிய இம் மூன்றும் மனமிளகிய நிலையையே காட்டுவன. எனினும் அவை ஒன்றல்ல. “அன்பு” சிறியவர் பெரியவரிடத்தில் காட்டுவது.

“அருள்” பெரியவர் சிறியவரிடத்தில் காட்டுவது. “கருணை” தன்னை ஒத்தவரிடத்திற் காட்டுவது எனலாம்.

இனி அன்பு மேல்நோக்கிச் செல்வது, அருள் கீழ் நோக்கி வருவது, கருணை சமவழியில் நடப்பது எனவும் கூறலாம். இவ்வுண்மைகளை, “அன்பைச் செலுத்தல்” என்பதனாலும், ‘அருளைப் பொழிதல்’ என்பதனாலும், “கருணை காட்டுதல்” என்பதனாலும் நன்கறியலாம், இம் மூன்றையும் கண்டு கையாண்டு நமக்கும் நடத்திக் காட்டி மகிழ்ந்தவர் வள்ளலார்.

(அ) அன்பு நெறி

1. இதைப் பத்தி நெறி எனவும் கூறுவர். இதற்கு வள்ளலார் இலக்கணம் கூறும்பொழுது, இறைவனை ஒரு ”மலை” என்கிறார். அதைப் பார்த்து எவரும் பயந்து விட வேண்டியதில்லை. அம்மலை “அன்பு என்ற கைப்பிடிக்குள் அடங்கிவிடும்” என்கிறார். அடுத்து இறைவனைக் “கடல்’” என்கிறார். அதைக் கண்டு எவரும் பீதி அடைய வேண்டிய தில்லை. அக்கடல் “அன்பு என்ற குடத்துக்குள்” அடங்கி விடக்கூடியது என்கிறார். அடுத்து இறைவனை “இவ்வுலகம் முழுவதும் நிரம்பியுள்ள ஒரு பரம்பொருள்” என்கிறார். இதைக்கண்டு எவரும் கலக்கமடைய வேண்டியதில்லை. அப் பரம்பொருள் “அன்பு எனும் வலைக்குள்” அகப்பட்டு விடும் என்று கூறுகிறார். இதிலிருந்து வெளியைவிட மலையை விட கடலை விட அன்பு பெரியது என்று தெரி கிறது. இறுதியில் இறைவனே ”அன்பு உருவானவன்” என்று அன்புருவாம் பரமசிவமே” என முடிக்கிறார்.

2. இதனைத் திருமூலரும் ‘அன்பும் சிவமும் இரண் டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார், அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின், அன்பே சிவமாய் அமரிந்திருப்பாரே’ எனக் கூறியிருப்பதாலும் நன்கறியலாம்.

3. இனி மக்களாய்ப் பிறந்தவர்கள் இறைவனிடத்தில் அன்பு செலுத்தியாக வேண்டும் என்பதற்காக. இறைவன் எத்தகையவன் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு” என்பது அவரது வாக்கு. இறைவன் கற்றவர்க்கு மட்டு மல்ல, சிறிலும் கல்லாதவர்க்கும் மகிழ்ச்சியைத் தருபவன் ஏன்? அவன் மகிழ்ச்சியே உருவானவன் என்கிறார்.

4 அடுத்து ‘காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்’ என்பது அவரது வாக்கு. கண் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, கண் இல்லாதவர்களுக்கும் கண் அளிப்பவன் இறைவன், காரணம் எல்லா உயிர்களுக்கும் இறைவன் கண்ணாகவே இருப்பவன் என்பது அவர் கருத்து: இதில் ஒன்று கண் இல்லாதவர்களுக்கு கண்கொடுப்பது புரிகிறது.

கண் உள்ளவர்களுக்கும் அவன் கண்கொடுப்பது என்றால் அது எப்படி? அது ஆராய வேண்டிய ஒன்று. ஆராய்ந்தால், அது ஊனக் கண்ணிலும் உயர்ந்த ஞானக் கண் என்பது புலப்படும்.

(ஆ) அருள் நெறி

1. வள்ளலார் “வாடிய பயிரைக் கண்ட போதெல் லாம் வாடினேன்” என்கிறார். இதனால் உயிர்கள் வாடு வது மட்டுமல்ல. பயிர்கள் வாடியதைக் கண்டும் அவர் வாடியிருக்கிறார் என்று தெரிகிறது. இது அருள் நெறியில் மிக உயர்ந்த நெறி, இதில் “கண்ட போதெல்லாம்” என்ற ஒரு சொற்றொடர் இருக்கிறது. இது வள்ளலார் ஒரு பயிரை வாடியிருக்கும் போது கண்டிருக்கிறார்; கண்டு வருந்தியிருக்கிறார்; மறுபடியும் உழவன் தண்ணீர் இறைத்து அப் பயிர் செழித்து நிற்பதைக் கண்டு மகிழ்ந் திருக்கிறார்; அடுத்து ஒரு நாள் அதே பயிர் வாடியிருப் பதைக் கண்டு வருந்தியிருக்கிறார் என்ற நிகழ்ச்சிகளையெல் லாம், “கண்ட போதெல்லாம்” என்ற சொற்றொடர் அறிவிக்கிறது.

2. வள்ளலார் உடம்பு ஒரு முறை இளைத்திருந்தது. அன்பர்கள் காரணம் கேட்டபோது, ‘நான் வருகின்ற வழியில் நடந்து சென்ற மக்களில் பலபேர் இளைத்திருந் ததைக் கண்டேன், அதனால்

என் உடம்பு இளைத்து விட்டது போலும்’ என்றார். இது எவ்வளவு பெரிய அருள் நெறி!

3. மற்றொரு தடவை வள்ளலாருடைய புருவம் துடித்தது. இதைக் கண்டதும், “யாருக்கோ எவருக்கோ துன்பம் வரப் போகிறது, அதைக் கண்டு நான் துடிக்கப் போகிறேன் என்பதை இது துடிதுடித்துக் காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார். இந்த உயர்ந்து அருள்நெறியை நம்மால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு உயர்ந்து நிற்கிறது இந்த அருள் நெறி.

4. வள்ளலார் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சொத்து ஒன்றும் இல்லாதவர். வருமானமும் இல்லாதவர். இவரின் இந்த நிலைகண்டு தமையன் கடிந்ததால் குடும்பத்தின் ஆதரவையும் இழந்தார்.

இழந்தார். தமையனார் இவருக்கு வீட்டில் சோறு போடக்கூடாது என்று கட்டளை இட்டிருந்ததால், பசிக்கு உணவு கிடைக்காமல் வருந்தியவர். எவரிடத்திலும் சென்று இரந்ததில்லை. எதுவும் ஏற்ற தில்லை. அவர் வாழ்க்கையில் பலகாலும் பசித்திருந்து ‘பசி’ மக்களை எப்படி வருத்தும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதன் விளைவே, “சத்திய தருமச் சாலையை” தோற்றியதும், மக்களின் பசிப் பிணியைப் போக்கும் செயற் கருஞ்செயலைச் செய்திருப்பதும் என உணரலாம்.

(இ) கருணைநெறி

1. உலகில் உள்ள எல்லா நாட்டினரிடத்தும், எல்லா

எல்லா மதத்தினரிடத்தும், மொழியினரிடத்தும் மட்டு மல்ல. எல்லா உயிர்களிடத்தும் காட்டுவதே “கருணை நெறி” ஆகும். இதற்கு ‘உயிரிரக்கம்” என்று பெயர். இதை ஜீவகாருண்யம் என்பர். வள்ளலார் கூறியிருக்கிற கருணை நெறியிலும், ஒருமைப்பாட்டிலும் மக்கள் மட்டு மல்ல, மற்ற எல்லா உயிர்களும் அடங்கியிருக்கின்றன.

2. ”ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன்னி னிதே” என்று இனியவை நாற்பது கூறுகிறது. “தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்ணற்க” என்பது வள்ளுவர் கருத்து, இதற்குமேல் வள்ளற்பெருமான், ளாய்ப் பிறந்தவர்கள் எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டி ஆகவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்.

3. நான் 50 ஆண்டுகட்கு முன் மூன்று சொற்றொடர்களை எழுதியிருந்தேன். “தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு. தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிர்களைப் பலிகொடுக்கிறார்கள்” என்பது. பொருள் விளங்கி யிருக்கும் என நம்புகிறேன்.

தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்த மனிதர்களாக இருந்தால், தங்களுக்கு வந்திருக்கும் நோய் என்ன? அது எப்படி வந்தது? அதை எப்படிப் போக்குவது? என்ன மருந்து சாப்பிடுவது? என்று தெரிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அப்படிக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமையால்தான். சில உருவங்கள் தங்களைக் காப்பாற்றும் என நினைத்து அதனிடம் போகிறார்கள்.

அந்த உருவங்களும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவை. காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தால் அவைகள் நேராக ஆட்டு மந்தைகளுக்கும் கோழிப் பண்ணைகளுக்கும் சென்று பசியாறக் கடித்துத் தின்று திரும்பி வரும். அதனால் எப்படி வெளியே போக முடியும்? பூசாரிதான் உள்ளே வைத்துப் பூட்டி விடுகிறானே! எவனாவது ஏமாந்தவன் எதையாகிலும் கொண்டு வந்து ‘பலி’ கொடுக்க மாட்டானா என்று, அவை உட்கார்ந்திருந்த இடத்திலேயே ஏங்கிக் கொண்டிருக்கும். அதனால் அது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது.

இனி பலி கொடுக்கப்படும் உயிர்கள். அவைகளும் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாதவை. மனிதன் அவைகளை வெட்டும் போதும் அறுக்கும்போதும் “கீச்கீச்’ சென்று அலறி அழுது மடிவதைத் தவிர, அவைகளால் வேறொன்றும் செய்ய இயலாது.

கரடி, புலி, சிறுத்தை, சிங்கம் முதலியன தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவை, அவைகளைக் கொண்டு வந்து எவரும் பலி கொடுப்பதில்லை. ஆகவே தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிர்களைப் பலி கொடுக்கிறார்கள் என்பது முடிவு.

ஜீவ காருண்யப் பிரச்சாரம் செய்யும் அன்பர்கள், இனி ஒரு புதியமுறையைப் பின்பற்றுவது நல்லது. அவர்கள் இனி உயிர்ப்பலி கூடாது என்று சொல்வதை நிறுத்திக்கொண்டு, காளி கோயிலுக்கும், கருப்பண்ணன் கோயிலுக்கும் சென்று, “அம்மையே! ஐயனே! இனி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடம் ‘ஆடு, கோழிகளை இனிப் பலி கொடுக்க வேண்டாம். அவற்றைத் தின்று சலித்து விட்டது. இனி கரடி, புலி, சிறுத்தை, சிங்கங்களைக் கொண்டு வந்து பலி கொடுங்கள்’ எனக் கட்டளையிட வேண்டும்” என்று அத்தெய்வங்களிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். இப் பக்தர்கள் அவைகளைக் கொண்டுவரக் காடுகளுக்குச் செல்வார்கள். சென்றதும், அவர்களே அவ்விலங்குகளுக்குப் பலியாகி விடுவார்கள். கோவில்களில் நடைபெறும் பலிகள் தானாகவே நின்றுவிடும். ஜீவகாருண்யப் பிரச்சாரமும் வெற்றிபெற்று விடும்.

வள்ளலார் ”உயிர்க்கொலையும், புலைப் புசிப்பும் உடையவர்களெல்லாம் உறவினத்தார் அல்லர்

அல்லர், பிறவினத் தார்” என்று, தமது அருட்பாவில் கூறியிருக்கிறார். இதற்குப் பொருள கூறியவர்களுள் சிலர், ‘உறவினம் பிறவினம் என்பதை மனித இனம் அல்லாத பிறஇனம் என்று சிலரும் செட்டியார் முதலியார் முதலிய சைவ இனத்தவரல்ல, வேறு இனத்தைச் சேர்ந்தவர்’ என்று சிலரும் பொருள் கூறுகின்றனர்.

வள்ளலார் கருத்து அதுவல்ல. அவர் உயிரினங்களை யெல்லாம் இரண்டாகப் பிரிக்கிறார். ஒன்று தட்டைப்பல் இனம், மற்றொன்று கோரைப்பல் இனம். தட்டைப்பல் இனங்கள் யானை, ஒட்டகம், குதிரை, மாடு, கழுதை, மான், ஆடு முதலியன. இவை ‘உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும்’ உடையன அல்ல. கோரைப்பல் இனங்கள் சிங்கம், சிறுத்தை, புலி, கரடி ஓநாய், நரி, நாய் முதலியன. இவைகள் அனைத்தும் கோரைப் பற்களாகிய கொக்கிப் பற்களை உடையன. இவை அனைத்தும் “உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும்” உடையன. இவைகளால் புல் உணவை உண்ண முடியாது. உண்ண விரும்பினாலும், அவற்றின் பற்கள் அவைகளுக்குத் துணை செய்யா.

“மக்களாய்ப் பிறந்தவர்களுள்” உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்களானால், அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்ல, கோரைப் பற்களையுடைய விலங்கினத்தைச் சேர்ந்தவர்கள்

என்பது வள்ளலாரின் கருத்து. இதிலிருந்து உறவினம், பிற இனம் என்பதற்கு, தட்டைப்பல் இனம், கோரைப்பல் இனம் எனப் பொருள் கூறுவதே சிறந்தது எனத் தெரிகிறது.

கழுதையானது தட்டைப்பல் உடைய மக்கள் இனத்தைச் சேர்ந்தது. அதற்கு எவ்வளவு பசித்தாலும், எதை எதையோ தின்றாலும், இறைச்சியைத் தின்னாது. அதுவே உண்ணாத பொருளை மனிதர் உண்ணலாமா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. சிந்தித்தால் மனிதரது பற்களின் இயற்கை அமைப்பே இறைச்சியைத் தின்பதற்கல்ல என அறியலாம்.

5. ஒரு மாணாக்கன் தவம் செய்ய விரும்பி அதற்குரிய வழிகளை அறிய தவமுனிவர் ஒருவரிடம் சென்றான். அவர் இப் பையனுடைய இளம் வயதை எண்ணி, தவம் செய்வதற்குரிய பக்குவம் இல்லை என்பதை உணர்ந்து, அவனுக்கு உரிய வழியைக் காட்டவேண்டும் என உணர்ந்து “தம்பீ! உன்னால் ஒரு பெருந்தவத்தைச் செய்ய முடியுமா?” என்று கேட்டார். அவன் என்னால் முடியும் என வாக்களித்தான். அதன்பிறகு அவனுக்குரிய பெருந்தவத்தை இவ்வாறு கூறினார்: ”அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணு. அரும் பசி எவருக்கும் ஆற்று மனத்துள்ளே பேதா பேதம், வஞ்சம், பொய், களவு, சூது, சினம் இவற்றையும் தவிர்ப்பாயாகில் செய்தவம் வேறொன்றுண்டோ?” இதுவே பெருந்தவம்” எனப் போதித்தார்.

இத்தலத்தில் மூன்று நெறிகள் உள்ளன. ஒன்று அனைத்துயிர்களும் ஒன்று என்று எண்ணுவது; மற்றொன்று அரும்பசி எவருக்கும் ஆற்றுவது; இன்னொன்று மனத்தைத் தூய்மைப் படுத்துவது. இம் மூன்றுமே “கருணை நெறி” களாகும்.

6. வட நாட்டிலிருந்து ஜைன சமயத் தலைவர் “அனுவிரதி ஆச்சார்யா

துளசி” அவர்கள் தென்னாட்டிற்கு வந்த போது, என் இல்லத்திற்கும் வந்திருந்தார். என் நூல் நிலையத்தையும் பார்த்தார். அதில் இராமலிங்க அடிகளின் அருட்பாவை எடுத்து, அதிலுள்ள சில பாடல்களைப் படித்துக் காட்டினேன். “வாடிய பயிரைக் கண்டு அவர் வாடியதையும் இளைத்தவர் தமைக் கண்டு இளைத்ததையும், பிறர் துயர் கண்டு துடித்ததையும்” அறிந்து, அவர் துடிதுடித்துப் போனார். “அதோடு தென்னாட்டில் இத்தகைய ஜீவகாருண்யம் படைத்த சான்றோர்கள் இருந்தனரா?” என்று வியந்தும் கேட்டார். மேலும் சில கருத்துக்களை அவருக்கு விளக்கிக் காட்டிய போது, அவர் சொன்ன சொற்கள் இவை: “நான் வட நாட்டில் இருந்து தென்னாட்டிற்கு வந்து மக்களுக்குக்கு கருணை நெறியைப் பரப்பலாம்” என வந்தேன்.

இப்போது இன்னும் இங்கு உள்ள கருணை நெறிகளை அறிந்து, அவைகளைக் கொண்டுபோய் வடநாட்டில் பரப்பவேண்டும் என எண்ணுகிறேன்” என்பதே.

7. வள்ளலாருடைய கருணை நெறிகளில் ஒன்று “எல்லா மக்களும் தங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பேராசைகளையும் பேதங்களையும் ஒழித்து சன்மார்க்க நெறிநின்று இறைவனை அடைய வேண்டும் என்பது.

அதற்காக வள்ளலார் பேதை மக்களைப் பார்த்து வருந்தி, அவர்கள் நிலையைத் தன்மேல் ஏற்றித், தானே பேதையானேன், அதுவும் வெறும்பேதையல்ல, “பேயேறி நலிகின்ற பேதையானேன்” என்கிறார். அப்படி ஆனது ஏதனால் என்பதற்குக் காரணமும் கூறுகின்றார், “பித்தேறி அலைகின்ற மனத்தினாலே பேயேறி நலிகின்ற பேதை யானேன்” என்று, எந்தெந்தப் பித்துகள் மனத்திலே ஏறின என்பதை விளக்கியும் காட்டுகிறார். வஞ்சக வாழ்க்கை ஏறி, மயக்கம் ஏறி, பேராசை ஏறி, மதநெறி ஏறி, அதனாலே பித்து ஏறியது என்று.

அந்தப் பித்து எப்படி மனதை அலைக்கழிக்கிறது என்பதற்கு ஒரு உவமை காட்டுவதுதான் நமக்குப் பெரும் வியப்பைத் தருகிறது. நாம் ஏறுகிற பொருட்கள் எனச் சில உள்ளன. அவை கப்பல், மாடிப்படி முதலியன; அவை நம் மேல் ஏறுவதில்லை.

நம்மேல் ஏறுகின்ற சில பொருட்கள் உள்ளன. அவை ஆடை, அணிகலன்கள். அவற்றின் மேல் நாம் ஏறுவதில்லை. ஆனால் இரு பொருட்கள் ஒன்றின்மேல் ஒன்று ஏறுகின்றன. அவை, மத்தும் தயிரும்.

மத்தின் மேல் தயிர் ஏறி, தயிரின் மேல் மத்து ஏறி “சர் — சர்”

என்று அலைக்கழிப்பது போல இந்தப் பித்து என மனத்தின் மேல் ஏறி, மனம் அதன்மேல் ஏறி நான் அலைக்கழிக்கப் படுகிறேன் என வருந்துகிறார். இது அவர் நிலையை அல்ல, நம்நிலையை எண்ணியே கூறியிருப்பதாகும். பாடலும் இது தான்:

மத்தேறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை
மயலேறி விருப்பேறி மதத்தினோடு
பித்தேறி அலைகின்ற மனத்தினாலே
பேயேறி நலிகின்ற பேதையானேன்

என்பது.

முடிவுரை

ஆக மூன்று புரிகளைக் கொண்டு முறுக்கப்பெற்ற ஒரு வடக்கயிறு போன்றதுதான் அன்பு நெறி, அருள் நெறி, கருணை நெறி ஆகிய மூன்று நெறிகளையும் பின்னிக் கொண்டிருக்கின்ற ஒரு நெறி. அதுவே பெரு நெறி எனக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றொரு வகையில் நெறி என்றால் வழி. பெரு நெறி என்றால் உயர்ந்தவழி, நல்ல வழி என்றாகும். இதனுடைய நேரான் மொழி பெயர்ப்பே சன்மார்க்கம் (மார்க்கம் – வழி). இதைக்கண்ட பெருமான் வள்ளலார்.

இதுகாறும் கூறியவற்றால் வள்ளலாரது வரலாற்றையும், அவர் கண்ட நெறியையும் ஒருவாறு அறியலாம். நாளைய தினம் அவருடைய “அருட்பா”வைப் பற்றி ஆராய்வோம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 3 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *