வள்ளலாரும் அருட்பாவும்
கி. ஆ. பெ. விசுவநாதம்

திரு அருட்பா

1. அருட்பாவின் சிறப்பு

தமிழகத்தில் நான்கு நூல்களுக்குத் தனித்தனியான சிறப்புகள் உள்ளன. முதல் சிறப்பு பகவத் கீதைக்கு; அது மனிதன் கேட்க கடவுள் சொன்னது என்பதால். இரண்டாவது சிறப்பு திருவாசகத்திற்கு; இது கடவுள் கேட்டிட மனிதன் சொன்னது என்பதால், மூன்றாவது சிறப்பு திருக்குறளுக்கு; அது மனிதன் கேட்க மனிதன் சொன்னது என்பதால். நான்காவது சிறப்பு அருட்பாவிற்கு. இது மனிதரிலும் அருளாளர்கள் கேட்க அருளாளன் கூறியது என்பதால். இச்சிறப்பு அருட்பாவிற்குப் பெருஞ் சிறப்பைத் தருவதாகும்.

2. பெயர்ச் சிறப்பு

தமிழ்நூல்களில் ஐந்து நூல்கள் தன் பெயரையே தமக்குச் சிறப்பாகப் பெற்றுத் திகழ்கின்றன.

1. மந்திரங்கள் பல, திரு சேர்ந்த மந்திரம் ஒன்றே ஒன்று; அது, திருமந்திரம்.

2. வாசகங்கள் பல. நானும் நீங்களும் பேசுவதெல்லாம் வாசகம் தான். ஆனால் திரு சேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று. அது திருவாசகம்.

3. கோவை பல தஞ்சை வாணன் கோவை, திரு வெங்கைக் கோவை, திருவாரூரிக் கோவை என்பவை. ஆனால், திருசேர்ந்த கோவை ஒன்றே ஒன்று; அது திருக் கோவை.

4. குறள்களும் பல. அவை ஒளவைக் குறள் முதலியன. ஆனால் திரு சேர்ந்த குறள் ஒன்றே ஒன்று; அது திருக்குறள்.

5. அருட்பாக்களும் பல, அருளாளர்கள் பாடிய பாக்கள் அனைத்தும் அருட்பாக்களே. ஆனால் திரு சேர்ந்த அருட்பா ஒன்றே ஒன்று; அது திருவருட்பா.

3. திரு அருட்பா

ஆறு திருமுறைகள், அதாவது ஆறு பகுதிகள், 399 பதிகங்கள், 5818 பாடல்கள்.

இதில் அருட்சோதி அகவல் ஒரு மலை போன்றது. அதன் ஒவ்வொரு அடியும் அதன் படிகளைப் போன்றவை.

இவையே அருட்பாவின் அமைப்பு, இறைவனை முன்னிறுத்தி 5818 பாடல்களைப் பாடிய ஒரே புலவன், ஒரே துறவி, ஒரே ஞானி, வள்ளலார்.

4. இறைவனைக் கண்டது

உலகில் உள்ள அறிஞர்களும் ஞானிகளும் இறைவனைத் தேடித் தேடி அலைகிறார்கள். ஆனால் வள்ளலார் உள்ளம் ஒன்றுதான் இறைவனது இருப்பிடத்தைத் தேடி, அது மனிதரது உள்ளம் என்று கண்டு ஆனந்தக் கூத்தாடியது.

இக்கருத்தை அருட்பாவில் உள்ள ஒரு பாடல் அருமையாக முழங்கிக் கொண்டிருக்கிறது. அது,

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி, உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக் கின்றார் யாவர்,
அவருளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் எனத் தேர்ந்தேன்

என்ற அருட்பா.

இப் பாடலில் எத்துணையும் என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் உள்ளன. ஒன்று எந்த அளவும் என்பது; மற் றொன்று எள் அளவும் என்பது.

அப்படி எள் அளவும் பேதமுறாமல், வேற்றுமையுறாமல் எல்லா உயிர்களையும் தம் உயிரைப் போலக் கருதுகின்ற மக்கள் உள்ளந்தான் இறைவன் குடிகொள்ளும் இடம் என்று இந்த அருட்பா முடிவுகட்டிக் கூறுகிறது.

இக் கருத்தைத் தெளிவாக அனுபவ மாலையில் உள்ள நூறு பாடல்கள் விளக்கிக் கொண்டிருக்கின்றன. அதில், தானும் இறைவனும் கலந்த நிலையை ஒரு பா கூறுகிறது.

அது,

அறியாத பருவத்தே எனை வலிந்து அழைத்தே ஆடல் செய்யும் திருவடிக்கே பாடல் செயப் பணித்தார் செறியாத மனச் சிறியேன் செய்த பிழையெல்லாம் திருவிளையாட் டெனக்கொண்டேதிருமாலை யணிந்தார் பிரியாம லென்னுயிரில் கலந்து கலந்து இனிக்கும் பெருந் தலைவர் நடராஜர் என்பது.

5. ஆட்சி

நாடுகளை ஆட்சி புரிகிறவர்கள் இறைப்பற்று உள்ள நன்மக்களாக இருக்க வேண்டும் என்பது, வள்ளலார் முடிவு. அப்படிப்பட்ட ஆட்சி உலகமெல்லாம் நிலவ வேண்டும் என்று வள்ளலார் பெரிதும் விரும்பி வாழ்த்து கிறார். அது மட்டுமல்ல, அது இல்லாது ஆட்சிகள் அனைத்தும் ஒழிய வேண்டும் என்றும் கருதுகிறார். இக் கருத்தினை அருட்பாவின் 5618-வது பாடல் அடியிற் கண்டவாறு கூறுகிறது.

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக அருள்டியந்த நன்மார்க்கர் ஆள்க–தெருள்நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுகநன்று நினைந்து எல்லோரும் வாழ்க இசைந்து

6. வணங்குதல்

பிறரைக் கண்டால் உடனே வணங்க வேண்டும். அதுவும் அவர்கள் வணங்கும் முன்னே நாம் வணங்க வேண்டும் என்று வள்ளலார் கருதுகிறார். இக் கருத்தையே நபிகள் நாயகம் அவர்களும் சலாம் செய்வதில் முந்திக்கொள் என்று கூறியிருக்கிறார்.

மற்றவர்கள் கைகூப்பிய பின்னருங்கூட மரியாதைக்காகக் கூப்பாத கைகளை வள்ளலார் ‘கொடுங்கைகள்’ என்று சாடுகிறார். இக்கருத்தை ”அடுத்தவர் கரங்கள் கூப்பினும் கூப்பாக் கொடுங்கை” என 3344-வது பாடல் கூறுகிறது.

7. வட்டி

3351-வது பாடல் சமுதாயத்திலுள்ள மக்களின் போக்கைச் சாடுகிறது. வட்டியைப் பெருக்கி ஏழைகளின் மனைகளைக் கவர்வதும் ஓட்டைச் சட்டியைப் பிறர் வைத் திருந்தாலும் அதைக் கண்டு பொறாமை கொள்வதும் சூதுகள் நிறைந்த மனதைப் பெறுவதும்,

பெறுவதும், நல்லவர்கள் பெரியவர்கள் மனம் வெறுக்கும்படி நடப்பதும் தவறு என்று கண்டிக்கிறார். அதைப் பிறர் செய்வதாக இல்லா மல் தன் மேல் ஏற்றி, அப்படிப்பட்ட என்னை, இறைவா

நீ காத்தருள் என்று இறைவனை வேண்டுகிறார். அப் பாடல்,

வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டைச் சட்டியே எனினும் பிறர் கொளத் தரியேன் தயவிலேன் சூதெலாம் அடைந்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன்
–
உலகில் பெரியவர் மனம் வெறுக்கச் செய் எட்டியே மண்ணாங் கட்டியே யனையேன் என்னிலும் காத்தருள் எனையே

8. திறந்த உள்ளம்

அடுத்து ஒரு பாடல் “இறக்கவும் ஆசையில்லை, இப்படி நான் இருக்கவும் ஆசையில்லை, இனி நான் பிறக்கவும் ஆசையில்லை, பெரியவர் பெரியவர் என்று சிறக்கவும் ஆசையில்லை, விசித்திரங்கள் செய்யவும் ஆசையில்லை, துறக்கவும் ஆசையில்லை. துயரடைந்து தூங்கவும் ஆசை ஒன்றிலை” என்று, வள்ளலார் பிள்ளைச் சிறு விண்ணப்பத் தில், தன் உள்ளத்தைத் திறந்து காட்டுவது, தம் உள்ளத்தை யெல்லாம் சுடுகிறது.

9. மரணமிலாப் பெருவாழ்வு

அருட்பாவில் மிக உயர்ந்து நிற்கின்ற பாடல் ஒன்று. அது,

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்!
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்,
புனைந்துரையேன் பொய்புகலேன், சத்தியம் சொல்கின்றேன்

என்பது.

இப்பாடல் மூலம் வள்ளலார் தாம் பெற்ற பெரும் பேற்றைப் பெற கூகை மக்களையெல்லாம் அழைக்கின்ற அந்தப் பேரன்பு, நம்மையும் நினைக்கச் செய்து, உணரச் செய், நம் உள்ளத்தையும் நெகிழச் செய்கிறது.

10. பட்ட பாடு

திருவருள் முறையீடு என்ற பகுதியில்,

நான் படும் பாடு சிவனே உலகில் நவிலும் பஞ்சுதான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ?

என்ற பாடலும்

‘பட முடியாதினித் துயரம், பட்டதெல்லாம் போதும்‘

என்று இறைவனிடம் முறையிடும் பாடலும், அவர் இவ்வுலகில் பட்ட பாடுகளையெல்லாம் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

11. உடலை எரித்தல்

உயிர் பிரிந்த பிறகு உடலை எரிப்பதை மனம் வருந்திக் கண்டிக்கிறார். அதைப் பின்வரும் பாடலால் அறிய முடிகிறது.

அணங் கெழுபேர் ஓசையொடும் பறையோசை
பொங்கக் கோரணி கொண்டந்தோ
பிணங்கழுவி எடுத்துப் போய்ச் சுடுகின்றீர்
இனிச் சாகும் பிணங்களே நீர்.

கணங் கழுகுண்டாலும் ஒரு பயனுண்டே,
என்ன பயன் கண்டீர் சுட்டீர்!
எணங்கெழு சாம்பலைக் கண்டீர்-அது
புன்செய் எருவுக்கும் இயலாதன்றே!

12. மூன்று தேவைகள்

வள்ளலார் இறைவனிடத்தில் மூன்று தேவைகளைக் கேட்கிறார். அவை: புண்படா உடம்பும், புரைபடா மனமும், பொய்படா ஒழுக்கமும் என்று வேண்டுகிறார். அந்த வேண்டுதலும், இவைகளைப் பெற்று இரவும் பகலும் கண்படாது நின்தனையே கருத்தில் வைத்து ஏத்துதற்கு என்று வேண்டுகிறார். இது அவருக்கல்ல, நமக்கு. உடம்பு புண்படாது, மனம் புரை படாது, ஒழுக்கம் பொய்படாது இருக்க வேண்டும் என்பது கருத்து. இப் பேற்றை நாமும் பெற வேண்டும் என்று அருட்பா வற்புறுத்துகிறது.

13. இறைவனை இப்பொழுதே அடையலாம்

ஆம்; உடனே அடையலாம் என்று அருட்பா கூறுகிறது. இதை இது தருணம், அப்பன் வரு தருணம், அத்தன் வரு தருணம். கணவர் வரு தருணம், கைகலந்த தருணம், தழுவி நின்ற தருணம், மணவாளர் வருகின்ற தருணம், அருள் புரிந்த தருணம், அருளாளர் வருகின்ற தருணம்,பதி வரும் ஓர் தருணமிது தருணமிது தோழி.

சன்மார்க்கம் தலையெடுக்கப் புரிகுவது இத்தருணம் களக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம்பொற்சபையில் சிற்சபையில் புகுகின்ற தருணம்

என்று பல இடங்களில் அருட்பா இறைவனை விரைவில் அடையும் தருணத்தை வற்புறுத்திக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, 3757, 4720, 4784 வது பாடல்கள் ‘தருண நிதியே!’ என்றும், ‘தருணத்திற்கு ஏற்றவா என்றும் அழைத்து, நினையடையும் தருணம் இஞ்ஞான்றே என்றும் வற்புறுத்துகிறது.

அருட்பாவில் உள்ள 5818 பாடல்களில், ஒவ்வொரு பாடலைப் பற்றியும், ஒவ்வொரு அடியைப் பற்றியும், ஏன் ஒவ்வொரு சொற்றொடரைப் பற்றியும் கூட ஒவ்வொரு நாள் பேசலாம். அவ்வளவு ஆழமானவை அவருடைய பாடல்கள்.

இனி “அருட்பாவில் ஒரு அடி” பற்றிச் சில:

இக் காலத்தில் சிலர் வள்ளலார் மீது தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அதுவும் அவர் புராணங்களை வெறுப்பவர் எனவும், சமயங்களை மறுப்பவர் எனவும், நாத்திகர் எனவும் தூற்றுவதாகும். இது வேண்டுமென்றே சிலர் செய்யும் தவறுகள். இது சாதிபேதங்களை அவர் ஒழிப்பதாலும், மூடப் பழக்க வழக்கங்களை அவர் வெறுப்பதாலும், சிலர் மனம் பொறாது, இத் தவறான கூற்றுக்களைப் பரப்பி வருகின்றனர். இக் கூற்றுக்கள் அனைத்தும் உண்மையல்ல. அவர் சிறந்த ஆத்திகர், ஒரு நல்ல பாரம்பரிய மரபைத் தழுவியவர் என்பதை மெய்ப்பிக்க அடியிற் கண்டவைகளை உங்கள் முன் வைக்கிறேன்.

1. அகச் சான்று

இது அருட்பாவின் ஒரு பாவில் உள்ள ஒரு அடியில் உள்ள ஒரு சொற்றோடர். அது

‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட
மரபினில் யான் ஒருவன் அன்றோ?’

என்பது.

இறைவனையே நோக்கி “இறைவா நான் உன் அடியார் பரம்பரையில் தோன்றியவள் அல்லவா?” என்று உரிமைக் குரல் எழுப்புகின்ற அவரது வாக்கு இது.

2. வாழையடி வாழையென வந்த மரபு

இச் சொற்றொடரில் மரபு என்ற ஒரு சொல் இருக்கிறது. அந்த மரபு எது என்று ஆராய வேண்டும். இறுதிக் காலத்தில் தோன்றிய ஞானிகள் மூவர். அவர்கள் பட்டினத் தார், தாயுமானவர், இராமலிங்க அடிகள். இம் மூவரும் துறவி, ஞானி,புலவர் என்றாவர்.

இம் முறையில் பார்த்தால் இராமலிங்க அடிகளுக்கு முந்திய மரபு தாயுமானவர் என்று தெரிகிறது. தாயுமானவருக்கு முந்திய மரபு எது? தாயுமானவர் வாக்கிலிருந்தே இதைக் கண்டு பிடிக்க வேண்டும் அல்லவா? அவருடைய குரு மௌனகுரு. திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டையிலுள்ள மெளன மடத்தில் வாழ்ந்தவர். தாயுமானவர் அவருக்கு வணக்கம் செலுத்தும்பொழுது, “மந்திர குருவே யோக தந்திர குருவே, மூலர் மரபில் வரு மௌனகுருவே” என்று வணக்கம் செலுத்தியிருக்கிறார். இதிலிருந்து இந்த மரபுக்கு மூலம் மூலர்; அவர் திருமூலர் என்று தெரிகிறது. ஆக, இப்பொழுது நமக்கு ஒரு மரபு கிடைத்து விட்டது. முதலில் திருமூலர், பிறகு சித்தர்கள். அடுத்து

தொல்காப்பியர், திருவள்ளுவர். பிறகு சமயசாரியர்கள் சந்தானாசாரியர், நாயன்மார், பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க அடிகள் எனக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இத்தனை பேரும் திருமூலர் மரபையே சார்ந்திருக் கிறார்கள். அந்த மரபைவிட்டு மாறவில்லை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள்;

திரு மூலர்

(அ) திருமந்திரத்தில் முதல் தந்திரம் 137-வது பாடலில், “திருவடியே சிவமாகும், திருவடியே சிவலோகம் சித்திக்கும், திருவடியே செல்லும் கதி, திருவடியே தஞ்சம்” எனக் கூறியுள்ளார். இறைவனை வணங்க அவனது திருவடியைப் பற்றுக் கோடாகக் கொள்ளவேண்டும். இது திருமூலர் கருத்து

(ஆ) இதனையே திருவள்ளுவரும் பின்பற்றித் திருக்குறளில், முதல் அத்தியாயத்தில், இறை வணக்கத்தில் உள்ள பத்துக்குறள்களில் ஏழு குறள்களில் திருவடியையே கூறியிருக்கிறார். நான்கு குறள்களில் தாள்கள். அவை ‘வாலறிவன் நற்றாள், தனக்குவமை இல்லாதான் தாள், அறவாழி அந்தணன் தாள், எண் குணத்தான் தாள்” என நான்கு மூன்று குறள்களில் அடி. அவை மலர்மிசை ஏகினான் மாணடி, வேண்டுதல் வேண்டாமை இலான் அடி, இறைவன் அடி ஆகிய மூன்று. ஆக திருவடி ஏழு.

(இ) பின்னர் இம்மரபில் தோன்றிய மணிவாசகர் விடுவாரா? திருவடியை. திருவாசகத்தில் முதல்பகுதியில் சிவபுராணத்தில் இறைவணக்கம் செலுத்தும் பொழுது “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க, ஆகமமாகி நின்றண் ணிப்பான் தாள் வாழ்க” என்றே அவன் தாள்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார். இதிலும் நான்கு தாள்கள், இத் தோடு விட்டாரா? வள்ளுவர் தாள்களோடு அடியையும் சேர்த்துக் கூறி இருக்கிறாரல்லவா! அதனையும் பின்பற்றி மணிவாசகர் அடுத்துக் கூறுகிறார்: “ஈசன் அடிபோற்றி. எந்தை அடிபோற்றி, தேசன் அடிபோற்றி, சிவன் சேவடி போற்றி” என்று இறைவளது திருவடிகளையும் குறிப்பிட்டுப் போற்றியிருக்கிறார்.

(ஈ) இந்த மரபில் வந்த திருநாவுக்கரசரை, சமணர்கள் நீற்றறையில் வைத்துப் பூட்டி, “இந்நேரம் அவர் எலும்பும் சாம்பலுமாகி யிருப்பார்” என்று எண்ணிக் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் உயிரோடு வெளியில் வந்தார். அங்கிருந்தோர் எப்படி உயிர் பிழைத்தீர்கள்” என்று கேட்டதற்கு, “என்னை இறைவனது திருவடி நிழலில் வைத்திருந்தேன், அந்த இறையடி நீழல் என்னைக் குளிரச் செய்தது, தகிக்கவில்லை” என்றே கூறினார். எப்படி திருவடி?

(உ) அடுத்து திருஞானசம்பந்தர்.

திருவாவடுதுறைப் பதிகத்தில் “இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன் கழல் தொழுதெழு வேன்” என்றும், ”வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும்உன் கழல் விடுவேன் அல்லேன்” என்றும். இறைவனது திருவடியையே உறுதியாகப் பற்றியிருப் பதாகக் கூறியிருக்கிறார்.

(ஊ) சுந்தர மூர்த்தி சுவாமிகளும் “மற்றுப்பற்றெனக் கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்” என்றும் “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கி, “அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்” என்று கூறித் திருவடியையே பற்றி முடித் திருக்கிறார்.

இந்த மரபைப் பின்பற்றியே வள்ளலார் அவர்களும் “திருவடிப்புகழ்ச்சி” என்ற ஒரு பெரும்பாடலை மூன்றாந் திருமுறையில் முதல் பாடலாகப் பாடியே தொடங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல, திருவடிப் பெருமை என ஆறாம் திருமுறையில் 45 பாடல்களையும் பாடியிருக்கின்றார்.

வள்ளலார் அந்தப் பாரம்பரிய மரபை விட்டுச் சிறிதும் விலகவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

இனி நமது சிந்தனைக்கு ஒரு கேள்வி. வாழையடி வாழையாக வந்த இத்தனை பேரும் ஏன் திருவடியையே நினைந்து அதனையே பற்றிப் போற்றியிருக்கிறார்கள்? ஏன் தலையை முகத்தை. முடியை, மார்பை, கைகளைச் சொல்லவில்லை. சிந்தித்தால் ஒரு உண்மை புலப்படுகிறது; தலையை முகத்தைப் பார்த்தால் சிவன், விஷ்ணு, பிரமா. முருகன், விநாயகன், ஏசு, புத்தர் எனத் தெய்வங்களின் வேற்றுமைகள் புலப்பட்டுவிடுமாம் ! திருவடி ஒன்றையே பார்த்து வணங்குவதால் எவ்வித வேற்றுமையும் தோன்றாது. யாருடைய திருவடி என்றும் தெரியாது. ஏன் இன்னும் ஒருபடி தாண்டிச் சிந்திக்கலாம், திருவடிகளை மட்டும் பார்த்து வணங்கும் பொழுது அது ஆண் திருவடியா? பெண் திருவடியா? என்றும் தோன்றாது. எப்படி இந்த வேற்றுமையற்ற வணக்கம்? வள்ளலார் கண்ட சமரச சன்மார்க்கம் இதுவே என்றாகிறது. இதுவும் திருமூலர் மரபிலிருந்து மாறவில்லை என்பதையே நமக்குக் காட்டுகிறது.

3. சாதி சமய பேதமில்லாமை

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது ஏறத்தாழ 3000 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப் பெருமகன் திருமூலரின் வாக்கு. இதையே பின்பற்றி, இதற்கு ஒரு விளக்கம் கூறுவது போல, வள்ளலார் தன் அருட்பாவில் ”ஒன்றே சிவமென்று உணர்ந்து இவ்வுலகமெலாம் நன்றே நடுமையுற்று நண்ணியே” எனப் பாடியிருக்கிறார். இது உலக மக்களின் ஒருமைப்பாடு. வள்ளலார் இதற்கு “ஆன்ம நேய ஒருமைப்பாடு” எனப் பெயரிட்டிருக்கிறார்.

“சாதி, மதம், சமயம் எனும் சங்கடம்“ என்றும்

”சாதியிலே, மதங்கவிலே, சாத்திரக் குப்பைகளிலே“

என்றும், சாதி, குலம், சமய வேற்றுமைகளைக் கண்டித்த பாடல்கள் பலவற்றை அருட்பாவில் காணலாம். இதுவும் மூலர் மரபையே காட்டுவதாகும்.

4. ஆயிரம் திருநாமம்

“ஒரு நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ” என்பது நமது முன்னோர் கருத்து. இவ்வழியில் நமது திருநாவுக்கரசர் இறைவனது திருநாமத்தைப் பற்றி,

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையன் என்னின் அல்லான் ஒப்புடையான் அல்லன் ஓர் ஊரான் அல்லன் ஓர் உவமன் இல்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருகே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன், இவ்வண்ணந்தன், இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே

எனக் கூறியிருக்கிறார்.

இம் மரபைப் பின்பற்றி மாணிக்கவாசகர் இறைவனைப் பல பெயரிட்டு அழைக்கிறார். அலை ”சோதியன், துன்னிருள் தோன்றாப் பெருமையல், ஆதி அந்தம் நடுவு இம்மூன்றும் இல்லான், நோக்கரிய நோக்கு, நுணுக்கரிய நுண்ணுணர்வு, போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியன், காக்கும் எம் காவலன், காண்பரிய பேரொளி” என்பன தாயுமான அடிகளும் இநே மரபைப் பின்பற்றி அரும்பொன், மணி என் அன்பு, என் அன்பான அறிவு, அறிவில் ஊறும் ஆனந்த வெள்ளம், வேதம், வேதாந்தம். மேதக்க கேள்வி, பூமிக்குள் வித்து, வித்தின் விளைவு எண்,கடுத்து,எண்,எழுத்து, கதிக்கான மோனவடிவு என்று இறைவனுக்குப் பல்வேறு பெயரிட்டிருக்கிறார்.

இம் மரபைப் பின்பற்றியே நம் வள்ளலாரும், இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்களைச் சூட்டியிருக்கிறார். ஏன் அதற்கு மேற்பட்ட பெயர்களையும் அருட்பா ஒன்றில் தான் காணமுடியும். எடுத்துக்காட்டாகச் சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.

இறைவனது திருப்பெயர்கள்

1. அடை மொழிகளுடன் சில :- அனை ‘அம்பலத் தரசு, ஆனந்தத் தேன், புலவரெல்லாம் புகழ்க் கண்ணியன், மலை தரு மயில், மடமயில், மதிமுக அமுது, உண்ணா ரமுது,சித்து சிகாமணி, குணப் பெருங் குன்று, ஞானதேசிக மாமணி, கண்ணளிக்கும் கண், களிப்பருளும் களிப்பு, மாற்றறியாத செழும் பசும்பொன் என்பன.

2. உறவின் முறையில் சில : அவை, ஐயன், அப்பன் அண்ணன், அத்தன், தந்தை தாய், காதலன் என்பன.

3. சுவைக்கும் பொருள்களாகச் சில:- அவை, அற்பகக் கனி, கற்கண்டு, அமுது, தேன் பால், சர்க்கரை, கரும்பு. பாகு, பழம், கனிரசம் முதலியன.

4. காணக் கூடியவையாகச் சில:- அவை, அரசு. அமைச்சு, இளம்பிறை மான், மயில், குயில், குன்று, மலை கடல், மயிர், சுடர், கண், சோலை, தரு, விளக்கு, சோதி குரு, அழகு, அக்கரை, இக்கரை முதலியன.

5. கண்காணாப் பொருள்களாகச் சில :- அவை, சிவம், தவம், அருள், அன்பு, கருணை, நாதம், ஒலி, ஒளி, வெளி, மதி, கதி, நலம், கரம், உயிர் முதலியன.

6. செல்வப் பொருளாகச் சில :- அவை, பொல், மணி, முத்து, மாணிக்கம். இரத்தினம், நிதி, செல்வம், நன்மணி, நவமணி, சிவமணி, பொன்மணி முதலியன

திருமறை:- இது “அருட் பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை’ என்பது. இதை மகா மந்திரம் என்பர் வட மொழியினர். இதன் பொருள் ‘இறைவன் ஒளிமயமானவன், அதுவும் பேரொளியினன், அதுவும் அருள் நிறைந்த பேரொளியினன் என்பதும், இறைவி, கருணை வடிவினள், அதுவும் பெருங் கருணை வடிவினள், அதுவும் ஒப்பற்ற பெருங் இருணை வடிவினள்’ என்பதுமாகும். இது மணிவாசகப் பெருமான் இறைவனை “அம்மையே அப்பா” என்றழைத்த வழிமுறையைப் பின் பற்றியது போலும்.

6. ஒளி வணக்கம்

(அ) தொல்காப்பியர் தன் நூலில் கொடிநிலை, கந்தழி, வள்ளி எனக் குறிப்பிட்டுள்ளார்.இம் மூன்றும் திரி. எண்ணெய், அகல் என்பவற்றைக் குறிப்பன என்று பசுமலை டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் கூறியிருக்கிறார். இது பழந்தமிழ் மக்களின் ஒளி வணக் கத்தைக் காட்டுவளவாகும்.

(ஆ) தமிழகத்தில் மிகப் பழமையான கோவில்கள் மூன்று. அவை, சிதம்பரம், திருவொற்றியூர், திருவாரூர். இம்மூன்றிலும் கடைசியாகத் தோன்றியது திருவாரூர்க் கோவில். இது தோன்றிய காலத்தை நமது சமயாச்சாரியார்களில் ஒருவர், ‘திசை எட்டும் திரிவதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே’ என ஐயத்தோடு கூறியிருக்கிறார். இதுவும் இன்று நேற்றுக் கூறியதல்ல, 1300 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. கடைசிக் கோயில் தோன்றியதே தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்ற திசைகள் அமைவதற்கு முன்னோ பின்னோ என்று ஐயப்பாடு கொள்ளும் பொழுது, அதற்குமுன் தோன்றிய இரு கோயில்களின் காலத்தை எவ்வாறு அறிவது? இந்த மூன்று தொன்மையான கோயில்களிலும் கருவறையில் அதாவது மூலதானத்தில் உருவங்கள் ஒன்றுமே இல்லை. இம் மூன்றிலும் அக்காலந்தொட்டு இன்றும் ஒளி வணக்கமே நடைபெற்று வருகிறது.

(இ) திருக்கோயில்

இன்றுங்கூட கோயில்களில் மக்கள் வழிபடும் பொழுது உருவ வணக்கத்தின்முன் கற்பூர வழிபாடும், அடுக்கு விளக்கு வழிபாடும் நடைபெறும் பொழுதுதான் இறைவழி பாடு உச்சநிலையை யடைகிறது.

(ஈ) தைப்பூச விழா

தமிழ்மக்களின் விழாக் காலமெல்லாம் நிலாக்காலத்திலேயே நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் முழுநிலா வைகாசி விசாகம் முழு நிலா. ஆனி மூலம் முழுநிலா, ஆடி உத்தராடம் முழுநிலா, ஆவணி அவிட்டம் முழுநிலா, புரட்டாசி கலைவிழா பத்து நாட்களும் வளர்நிலா, கார்த்திகை மாத கார்த்திகை முழுநிலா, மார்கழி திருவாதிரை முழுநிலா, தைப்பூசம் முழுநிலா, மாசி மகம் முழுநிலா,பங்குனி உத்தரம் முழு நிலா. ஆக தமிழ்

மக்களின் விழாக்காலமெல்லாம் நிலாக்காலத்திலேயே நடை பெற்று வருகின்றன.

வடலூரில் தைப் பூசத்தன்று முழுநிலாக் காலத்தில் சோதி வழிபாடு நடைபெறுகிறது. அங்கு சத்திய ஞான சபை தெற்கு நோக்கி இருப்பதால் மக்கள் வடக்கு நோக்கி நின்று சோதி வழிபாடு செய்கின்றனர். அப்போது மாலை நேரத்தில் அவர்களுக்கு வலதுபுறம் நிலவு ஒளியும், இடது புறம் ஞாயிறு ஒளியும், எதிர்ப்புறம் சோதி ஒளியும் தோன் றும். அன்று காலை நேரத்தில் ஒளி வணக்கம் செய்கிறவர் களுக்கு, வலதுபுறம் ஞாயிறு ஒளியும். இடதுபுறம் நில வொளியும், எதிர்ப்புறம் சோதி ஒளியும் கிடைக்கும். இது இறைவனை முக்கண்ணனாக வழிபடும் முறையாகவும் அமையும். இக்காட்சி தைப்பூசத்தன்று கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதை வடலூரில் அன்றிப் பிற இடங் களில் காண இயலாது.

ஆக இந்த அருட்பெருஞ்வோதி ஒளிவணக்க வழிபாடு கூட பண்டைய பழந்தமிழ் மக்களின் ஒளிவணக்க மரபைச் சேர்ந்ததே யாகும்.

7. சுகத்திலுறும் பயன்

திருநாவுக்கரசரை சுண்ணாம்புக் காளவாயில் போட்டுப் பூட்டியபின், அவர் சாகாமல் வெளிவந்துபோது அவர் பாடிய பாடல் “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய் கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே” என்பது. இப்பொருள்களைப் போலவே இறைவனது திரு வடியும் எனக்குக் குளிர்ச்சியாக இருந்தது, அதனால் எனக்கு எவ்வித இடையூறுமில்லை என்பது இதன் பொருள். இதன் உள்ளே மற்றொரு புதை பொருளும் உண்டு. சிந்தித்தால் அதுவும் விளங்கும். அது ஐம்புலன்களுக்கும் குளிர்ச்சியைத் தருகிற ஐந்து

ஐந்து பொருள்களை அடக்கியிருப்பது.மாசில் வீணை வாதுக்குக் குளிர்ச்சி, மாலை மதியம் கண்ணுக்குக் குளிர்ச்சி, வீசு தென்றல் மூக்குக்குக் குளிர்ச்சி, வீங்கிளவேனில் உடலுக்குக் குளிர்ச்சி, மூசு வண்டறை பொய்கையின் நீர் நாவுக்குக் குளிர்ச்சி என்பது. எப்படி அவர் ஐம்புலன்களுக்கும் குளிர்ச்சியைத் தருகிற இவ்வைந்து பொருள்களைத் தேடிக் குறிப்பிட்டது.

வள்ளலார் தமது அருட்பாவில் 6-ம் திருமுறையில் அருள் விளக்க மாலையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். அதில்,

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே! தரு நிழலே, நிழல் கனிந்த கனியே.

இப்பாடலிலும் திருநாவுக்கரசர் பாடலில் உள்ளது போல ஒரு புதைபொருளைக் கண்டு மகிழலாம்.

அது, கோடையிலே இளைப்பாறிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர் காதுக்குக் குளிர்ச்சி, நிழல் கனிந்தகனி கண்ணுக்குக் குளிர்ச்சி, ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீர் நாவுக்குக் குளிர்ச்சி, உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலர் மூக்குக்குக் குளிர்ச்சி, மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று உடம்புக்குக் குளிர்ச்சி என வள்ளலாரும் தமது அருட்பாவில் இறைவனை நம் ஐம் புலன்களுக்கும் குளிர்ச்சியைத் தருகின்ற ஐந்து பொருள்களாகக் காட்டி மகிழ்கிறார். எப்படி அருட்பா!

இந்த அளவுக்கு மட்டுமல்ல, வள்ளலார் இன்னும் ஒரு படி தாண்டி, இறைவனை, இவ்வைந்து பொருள்களால் விளைகின்ற சுகமாகவும் அதற்கு மேல் அடைகின்ற முக்திப் பேற்றைச் சுகத்திலுறும் பயனாகவும் கூறி மகிழ்கிறார்.

இதுவும் இந்தப் பாரம்பரிய வழி வந்ததாகவே தெரிகிறது.

இது காறும் கூறிய 7 செய்திகளாலும் வள்ளலார் மாறு பட்ட பாதையில் சென்றவரல்ல என்பதும், திருமுலர் காலந்தொட்டு வாழையடி வாழையாக வந்த ஒன்றுபட்ட பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்றும், அவரது கொள்கை களும் நெறிகளும் திருமூலர் காலந்தொட்டு சான்றோர் களால் கையாளப்பெற்று வருவன என்பதும், நன்கு புலப் படும்.

வள்ளலார் பெற்ற பெரும் பேறு

வள்ளலார் அருட்பாவின் ஆறாம் திரு முறையில் சன் மார்க்க உலகின் ஒருமைநிலை என்ற தலைப்பில் அதன் இறுதிப்பாடலாக (5624ம் பாடல்)

நோவாது நோன்பெனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் — தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் இவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை

என்ற பாடல் காணப்படுகிறது. “நோவாது நோன்பு என்னைப் போல நோற்றவர் யார்? சாகாத வரம் என்னைப் போவப் பெற்றவர் யார்? நின் பேரருளை என்போலப் பெற்றவர் யார்? எந்த உலகிலாவது யாராவது உண்டா? நீயே கூறு?” என்று இறைவனையே கேட்பதாக அமைந்திருக்கிறது இப்பாடல். இது அவரது பெரும்பேறு பெற்ற பெருமிதத்தையே காட்டுகிறது.

மற்றொரு பாடல் இன்னும் அதிகமான பேறு பெற்றதைக் காட்டுகிறது அது.

அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்தடை வித்திட
அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற் கென்றே
எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன், அருளைப்

பெற்றேனே

என்பது இப்பாடலின் மூலம் வள்ளலார், தான் எதற்காகப் பிறப்பிக்கப் பெற்றேன்? எதற்காக வருவிக்கப் பெற்றேன்? எதற்காக இந்த அருளைப் பெற்றேன்? என்பனவற்றை அவரே கூறுவதாக உள்ளது. இப் ”பா” அவரது தெளிவையும் மன உறுதியையும் பெற்ற பெரும்பேற்றை யும் நமக்குத் தெளிவாகக் காட்டுவதாகும்.

இறுதியாக, அவருடைய கொள்கைகளையும் அவர் வகுத்த நெறி முறைகளையும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என உணர்ந்து, அவர் “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று கூறி, தைப் பூச நன்னாளில் சித்தி விளாகத்தில் ஒரு அறைக்குள் சென்று கதவை மூடி அருட்பெருஞ் சோதி ஆண்டவராகிய இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார். இவ்வாறு அவர் சித்தியடைந்த நாள் 30-1-1874. இது இவ்வுடம்போடு இறைவனை அடையும் சித்தர் பெருமக்களின் முத்திப் பேற்றையே நமக்கு விளக்கிக் காட்டுவதாக இருக்கிறது. அவர் அன்று “கடைவிரித்தேன் கொள்வார் இலை” என்று கூறியது அவர் எதிர்பார்த்த அளவு யென்பதுதான்.

என்றாலும் இன்று அவரது கொள்கைகள் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும், ஆசியாக் கண்டத்திலும் மட்டும் அல்ல. ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்காக் கண்டத்திலும் வெகு வேகமாகப் பரவி வருகின்றன.

ஆண்டுதோறும் வடலூரில் தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான மக்கள் கூடி ஜோதி வழிபாடு நடத்துகின்றனர்.

உலகில் இனி கடும் நாஸ்திகத்திற்கோ, கடும் ஆஸ்திகத்திற்கோ இடம் இராது. எதிர்காலம் இனி சன்மார்க்கத் திற்குத்தான். காரணம் சன்மார்க்கம் எல்லா மார்க்கங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ஒளிவீசுவதேயாகும்.

இது வரை மிகவும் சுருக்கமாக, நேற்றும் இன்றும் வள்ளலாரது வரலாற்றையும், அருட்பாவின் சிறப்பையும் பற்றிக் கூறினேன்.

இறுதியாகக் கூறுகிறேன். வள்ளலார் மக்களின் போக்கைக் கண்டு வாடினார், சமுதாயத்தின் குறைகளைக் கண்டு சாடினார். அவற்றைப் போக்க இறைவனது திருவருளைத் தேடினார். அதற்காக 5818 பாடல்களைப் பாடினார். தமது நெறிமுறைகளை மக்கள் ஏற்காதது கண்டு சித்திவிளாகத் தனி அறைக்குள் சென்று கதவை மூடினார். இறைவனோடு இறைவனாக இரண்டறக் கலந்து கூடினார்”

என்ற சொற்களோடு இந்த எனது சொற் பொழிவை முடிக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த பல்கலைக் கழகத்தினருக்கும், வந்திருந்து சிறப்பித்த பெருமக்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியன.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 3 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *