வள்ளிநாயகியின் கோபம்
கா. ந. அண்ணாதுரை

2. வள்ளிநாயகியின் கோபம்

“வள்ளி! இப்படி அடிக்கடி கோபித்துக்கொண்டால் என்னதான் செய்வது? நான், உன் மனம் கோணும்படி, நடந்துகொண்டதுண்டா? ஏன் முகவாட்டம்? எவ்வளவோ தொல்லைகளை நான் பட்டவண்ணம் இருக்க நேரிடுகிறது. திருப்புகழ் பாடிப்பாடி அழைப்பவரை நாடிச் சென்று, அவர்கள் நாவில் உறையும் வார்த்தைகளுக்கும் நெஞ்சிலுள்ள எண்ணங்களுக்கும் பொருத்தமிருக்கிறதா என்று கண்டறிய வேண்டி பாடுபட நேரிடுகிறது. இனிய குரலிலே பாடுகிறார்கள்! என்னப்பனே! முருகா! என்று உருகும்போது, ஒரு விநாடி நானே மயங்கிவிடுகிறேன். கூர்ந்து பார்க்கும்போது தான், அந்த உருக்கமான குரல் எனக்கல்ல, பொன்னுருக்கு மேனியாளாகிய ஒரு பாவைக்கு என்பது புரிகிறது! இப்படி பரீட்சை பல நடத்தி வரவேண்டி இருக்கிறது. அலுவலை முடித்துக்கொண்டு அலுத்து வீடு திரும்பினால், நீ உன் அழகை மறைத்துக்கொண்டு என்மீது அனலை வீசுகிறாய். இது ஏன் என்று கேட்டாலோ புனலைச் சொரிகிறாய், வள்ளி! உள்ளதைச் சொல்லு! கள்ளத்தனமாக உந்தனை நான் அன்று காண வந்தேனே தினைப்புனந்தன்னில், அன்று இருந்த அன்பு, ஏன் இப்படிக் குறைகிறது?” என்று ஆறுமுகனார், கண்களைத் துடைத்தவண்ணம் இருந்த, வள்ளி நாயகியைக் கேட்டார்.

“என் துக்கம் என்னோடு இருக்கட்டும், நீர் ஏன் வீணாக வேதனைப்பட வேண்டும். உமக்கு என்னைப்பற்றி என்ன அக்கரை வாழுகிறது?” என்று விம்மி விம்மிப் பேசலானாள் வள்ளிநாயகி.

“கையிலே அல்ல வள்ளி! வேல், இப்போது என் நெஞ்சிலே பாய்ந்துவிட்டது” என்று சற்றுக் கோபமாகப் பேசினார் கந்தன்.

“விஷம் பாய்ந்தது, அப்பாவுக்கு!” என்று கோபத்தினூடே கொஞ்சம் கேலியைக் கலந்து தந்தார் அம்மையார்.

“குறும்பு, வள்ளி, உனக்கு. இதோ பார், என்ன குறை மனதில்” என்று கொஞ்சுமொழி பேசலானார், முருகன்.

“சொல்ல வேண்டாமென்றால் முடியவில்லை. பூலோகத்திலே, அதிலும் குன்றுதோறும் உமக்குக் கோயில் கட்டிக்கொண்டாடும் தமிழ்நாட்டிலே, நாத்திகம் நாற்றமடிக்கிறதே, நீர் கவலையற்று இருக்கிறீரே, சரியா?” என்று வள்ளி நாயகி விளக்கமுறைக்க, வேலவன், அம்மையை நோக்கி அழகான ஒரு சிரிப்பருளிவிட்டு, “அந்த ஈரோட்டுப் பாசறையினரையோ!” என்று கேட்டார். “அல்ல! அல்ல! அவர்களை அல்ல! அவர்கள் ஆறுமுகமும் வேண்டாம், மும்முகமும் வேண்டாம், ஆண்டவன், அன்பர் நெஞ்சிலுறையட்டும் என்று கூறுகிறார்கள். அவர்களை அல்ல நான் கூறுவது— வேலவா— பழனியப்பா— என்று பரம பக்தர்கள்போல, உமது புகழைப்பாடி, காவடிதூக்கி ஆடுகிறார்களே, அவர்கள்தானே, தமிழகத்திலே பெரும்பான்மையினர், அவர்களைத்தான் கூறுகிறேன்— அவர்கள் உம்மைப் போற்றுவதும் புகழ்வதும் வெறும் சூது—பொய்—முகஸ்துதி— ஏமாந்து போகிறீர்! அவர்கள் உண்மையிலே, உம்மை, உமது நடைமுறையைக் கேலி செய்கிறார்கள்— கண்டிக்கிறார்கள்” என்றாள் நாயகி. வேலவன் உண்மையாகவே கோபமடைந்து, “ஆஹா! சூரபதுமன் முதலாயோர் தோற்றோடினதை நீ அறியாயோ, பெண்பாவாய்! நம்மை நிந்திக்கவும், நமது வாழ்க்கை முறையினைக் கண்டிக்கவும் முற்பட்ட மூர்க்கர் யார், எத்திக்கு உள்ளனர் கூறு— எறிகிறேன் வேலாயுதத்தை” என்று கூற, வள்ளி அம்மை சற்று களித்து, “இப்படி நானாகச் சொன்னால்தானே உமக்கு விஷயம் புரிகிறது. இதோ பாருங்கள் நாதா! தாங்கள் என்னைக் கண்டு, காதல் கொண்டு………” என்று விவரிக்கும்போது, வள்ளிநாயகன் இடைமறித்து, “வள்ளி முழு உண்மை பேசு, நான் காதல் கொண்டதாகக் கூறுகிறாயே—உன் நிலையைக் கூறாமல்! இருவரும் கண்டோம் காதலித்தோம், என்று கூறு……” என்று திருத்த, அம்மை அதனை ஒரு புன்னகையால் அங்கீகரித்துக்கொண்டு, மேலால் பேசலானார்.

“என்னைத் தாங்கள், தங்கள் தேவியாக ஏற்றுக்கொண்டீர். முதலில் தேவயானை— பிறகு நான், அல்லவா? இந்த இருதார மணத்தை, நீர் இடைவிடாமல் மயிலேறி வலம் வரும் இன்பத் தமிழ் நாட்டினர், கேவலம், அக்ரமம் அநீதி என்று பேசி, ஏசி, இருதார மணம் செய்துகொள்வோர், கடின சித்தமுடையவர்கள், பெண்களின் இருதயத்தைப் பிளப்பவர்கள், என்றெல்லாம் கடிந்துரைத்து, ஒரு மனைவி உயிருடனிருக்கும்போது வேறோர் பெண்ணைக் கலியாணம் செய்வதைத் தடுத்தாலொழிய பெண்களின் வாழ்வு வதைபடும் என்று வாதாடி, இருதார மணத்தை இனி அனுமதிக்கப் போவதில்லை, சட்டம் செய்துவிடுகிறோம் என்று கூறி, சட்டசபையில் இதுபற்றிக் கண்டவர் கண்டபடி பேசி ஏசி, கடைசியில் ஏகதாரம்தான் சட்டப்படி செல்லும், ஏதேனும் தக்க காரணம் காட்டி முதல் மனைவியை சட்டப்படி விலக்கினால் மட்டுமே, வேறு ஓர் மங்கையைக் கலியாணம் செய்து கொள்ளலாம், என்று சட்டமே செய்துவிட்டனர்” என்றார் வள்ளியம்மை.

“சட்டமே செய்துவிட்டார்களா? தமிழ் நாட்டிலா?” என்று கேட்டார் முருகர்.

“ஆமாம், ஆமாம்! அழகுக்குத் தெய்வம், தமிழுக்குத் தெய்வம் என்று உம்மை வழிபடுவதாகக் கூறும், அதே தமிழ்நாட்டிலேதான், உம்முடைய வாழ்க்கை முறையையே குடும்ப அமைப்பையே, காதற் திருவிளையாடலையே கண்டிக்கும் போக்கிலே, சட்டம் செய்துவிட்டார்கள். கேட்டதுமுதல் எனக்கு பெரும் விசாரம். தேவயானை வீட்டிலே திருநாளாம்! நாதா! தேவயானை இருக்க என்னை நாயகியாகத் தாங்கள் கொண்டது, கேலிக்குரியதாக, சட்டப்படி முறையற்றதாக, உமது பக்தர்களாலேயே கருதப்பட்டு பேசப்பட்டால், என் மனம் வேதனை அடையாமல் இருக்குமா? உமது பக்தர்களுக்கு இது அடுக்குமா? முறையா? இருதாரம் கூடாது என்று சட்டம் இப்போது! இது நிலைத்துவிட்டால் அடுத்த தலைமுறையினர், ‘இரண்டு பெண்டாட்டிக்காரர்கள்’ என்று முன்னவர்களைக் கேலி பேசுவரே! பிறகு இருதாரமுடைய உமக்கும் திருப்புகழ் குறையுமே! ஏனோ தாங்கள் இவைபற்றி யோசியாமல், மயிலுண்டு மலையுண்டு என்று இருக்கிறீர்?” என்று அம்மை விளக்கவே ஐயன், உண்மையாகவே கோபங்கொண்டு, “இருதாரம் கூடாது என்று சட்டம் செய்தவர்கள், உண்மையில் என் வாழ்க்கை முறையை இகழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அவர்களைச் சும்மா விடக்கூடாது. கூப்பிடு மயிலை! கூறு, தமிழகத்திலா இந்த அதர்மச் செயல் நடந்தது? வள்ளி! கோபிக்காதே! மறந்துவிட்டேன், யார் அங்கே மந்திரி? அங்கு அடிக்கடி மாறிவிடுவதால் கவனம் வைப்பது கஷ்டமாகிறது” என்று கேட்க “சட்டம் இயற்றிய முதல் மந்திரி ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்” என்றார். “ஓமந்தூராரா? அவர் நமது பக்தராயிற்றே!” என்றார் முருகன்! “பக்தன் செய்கிற செயலா இது! மற்றவர்கள் ஏதேதோ காரணம் காட்டி, இருதாரம் கூடாது என்று வாதாடினாலும், அவர் உண்மையாகவே, உமது பக்தராக இருந்தால், என்னப்பன் முருகனே இருதாரம் கொண்டார் என்று எடுத்துக்காட்டித் தடுத்திருக்கமாட்டாரா, சட்டத்தை” என்று அம்மை கூறிட, வேலவன், “ஆமாம்! என் பக்தன்போல் வேடமிட்டு, என் வாழ்க்கை முறையையே கேவலமாக்கும் சட்டம் இயற்றிய ஓமந்தூராரை நேரிலேயே சென்று கேட்கிறேன்” என்று கூறிவிட்டு, மயிலேறி மறைந்தார்.

வள்ளி அம்மை, ஆனந்தமாக, பலகணி அருகே சென்று தெய்வயானையின் மாளிகையை நோக்கிய வண்ணம், “குதிக்காதே தேவா! குமரன் போயிருக்கிறார், குறும்புச்சட்டத்தை நொறுக்க” என்று மெல்லக் கூறியபடி இருந்தார்.

சிறிது நேரத்திற்கெல்லாம், மயிலேறும் பெருமாள், வந்தார், முகத்திலே வாட்டத்துடன்.

வள்ளி கோபக்குறியுடனேயே வரவேற்று, “ஏன்! உமது வாதம் ஏதும் பலன் தரவில்லையோ?” என்று கேட்க, முருகன், “வாதமா! ஒமந்தூரார் பேசவே இல்லையே என்னிடம்” என்று கூற, “ஏன், பேசவே இல்லையா! இப்படி உம்மை அவமதிப்பவரை பக்தர் என்று நம்புகிறீரே! ஏன் பேசவில்லை?” என்று கேட்டார். முருகன் வேலாயுதத்தை ஒரு புறம் வீசிவிட்டு, மயிலை விரட்டியபடி, “கிருத்திகையாம் இன்று! கிருத்திகையன்று மௌனவிரதம் இருக்கும் வழக்கமாம் ஓமந்தூரார். அதனால்தான் பேசவில்லை” என்றார். வள்ளியின் கோபம் கரை புரண்ட வெள்ளமாயிற்று—நான் இந்தச் சமயம் இங்கிருத்தல் ஆகாது என்று பறந்து சென்றேன், பக்கத்துச் சோலைக்கு.

குமரன் கொலுமண்டபத்துக் ‘குயில்’ எனக்குச் சொன்ன ‘சேதி’ இது! நம்பமாட்டீர்கள்! முருகனும் வள்ளியும் பேசுவதாவது, அதைக் குயில் கேட்டுவந்து கூறுவதாவது; இதெல்லாம் நம்பக்கூடிய விஷயங்களா, என்பதால் அல்ல! இவனிடமாவது குமரனிடம் பழகும் குயில் பேசுவதாவது!—என்றுதான் கூறுவீர்கள். முருகன் வள்ளி பேசக்கூடும் — குயில் அதைக் கேட்கவும் கூடும்! பிறரிடம் குயில் பேசுமா?—என்றுதான் எண்ணுவீர்கள்—மன்னிக்கவும்—எண்ணுவார்கள், எத்தர்களால் ஏமாளிகளாக்கப்பட்ட விசித்திர சித்தர்கள்.

குயில் கூறிற்றோ இல்லையோ கிடக்கட்டும், குமரனும் வள்ளியும் இருதார தடைச்சட்ட சம்பந்தமாக வேறு என்ன முறையிலே பேசியிருக்கமுடியும்—அதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

நாட்டிலே உருவாகிக்கொண்டுவரும் புதியநிலைகள் நமது கடவுள்களின் பழைய நடவடிக்கைகளைக் கண்டனத்துக்கு உரியனவாக்கி வருகின்றன — இதை உணர்ந்துகொண்டால் போதும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *