

வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம்
சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தமிழகம் நன்கு அறியும். அவரது நூற்றுக்கணக்கான பேச்சுக்கள், கேட்டவர்களுக்கு மட்டும் செவிக்குணவாகி, கேட்க முடியாதவர்களுக்கு நூல்வடிவில் வந்து பயன்படாது வானோடு வானாகக் கலந்துவிட்டன.
பல மாதங்களுக்கு முன் திருச்சி வானொலியிலே பேசிய ஏழு பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட விரும்பினோம். உடனே இசைந்தார் அன்பர். இந் நூலில் உள்ள ஒவ்வொரு பேச்சும் நம் நாட்டின் இன்றைய நிலைக்கு ஏற்றதாக இருப்பதைத் தமிழர்கள் வரவேற்று மகிழ்வார்கள் என நம்புகிறோம்.
இதை வெளியிட இசைவுதந்த ஆசிரியர்க்கும், பதிப்பிட அனுமதி தந்த திருச்சி வானொலி நிலையத்தாருக்கும் அரிய சிறப்புரை தந்துள்ள நாவலர். ச. சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.,பி.எல். அவர்களுக்கும் எங்கள் நன்றி.
தமிழர் பதிப்பகத்தார்.



