
வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம்
5. வியாபாரம்
அன்பர்களே,
வியாபாரம் என்ற தலைப்பில் இன்றைய தினம் உங்கள் முன்பு பேசுகிறேன். யார் வியாபாரி? எது வியாபாரம்? எது வியாபார முறை? வியாபாரிகளால் ஏற்படும் நன்மை தீமைகள் எவை? அரசாங்கத்தின் கடமை எது? என்ப வைகளை விளக்குவதே இன்றைய எனது பேச்சு.
யார் வியாபாரி?
வியாபாரம் செய்பவன் வியாபாரி. வியாபாரி என்றால் திறமையுடையவன் என்றும் கூறலாம். மற்ற துறைகளில் உழைப்பவர்களைவிட வியாபாரிக்கு அதிக திறமை இருக்க வேண்டும். ஒரு வியாபாரிக்கு கைத்தொழில் அறிவும், வேளாண்மை அறிவும், பொருளாதார அறிவும், நிர்வாக அறிவும், அனுபவ அறிவும், அரசியல் அறிவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றால் தான் ஒருவன் சிறந்த வியாபாரி ஆக முடியும். இன்றேல், அவன் வியாபாரியாக இருந்தாலும், உண்மையான வியா பாரியாக இருக்க முடியாது.
இனி, அப்படிப்பட்ட ஒரு வியாபாரி பொது ஜனங்களால் போற்றப்பட வேண்டுமானால் மேற்கூறிய அறிவுகள் மட்டும் போதாது. இன்னும் ஒன்று வேண்டும். அதுதான் ‘நாணயம்’ என்பது, நாணயம் என்ற சொல்லை பெரும்பாலும் பணம் என்பதற்கே வழங்கி வருகிறார்கள். பணம் என்பதும் நாணயம்தான். ஆனாலும் இந்த நாணயம் பணம் அல்ல ‘ நா-நயம் நாக்கு நயம்தான் நாணயமாகும்.
பொய் பேசாமை, கெடு தவறாமை, கடுஞ்சொல் சொல்லாமை ஆகிய இம் மூன்றும் நா நயங்களாம். இதிலிருந்து ஒரு வியாபாரியின் நா நயமானது உண்மை பேசுவது. கெடுப்படி நடந்துகொள்ளுவது, இனியவை பேசுவது ஆகிய மூன்றுமே என நன்கு விளங்கும்.
வியாபாரிகளுக்கு அரசாங்கத்தில் அதிக செல்வாக்கு உண்டு. வியாபாரிகள் உழைத்து சம்பாதித்து தொழில் வரி, லைசென்ஸ் வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி, ஏற்றுமதி வரி, சுங்க வரி, சொத்து வரி, வருமான வரி, அதிக வரி, அமித லாப வரி ஆகிய பல்வேறு வரிகளை அரசாங்கத்திற்குச் செலுத்துகின்றனர். இதனால் அரசாங்கத்தின் ஒரு பிரிவுச் செல்வையே ஈடு செய்வதாகிறது.
மற்றவர்களைவிட அதிகமாக சிந்தனை செய்பவர்கள் விஞ்ஞானிகள் : அவர்களைவிட அதிகமாக சிந்தனை செய்ப வர்கள் வியாபாரிகள். விழிப்பு நிலையில் மட்டுமல்ல; உறக்க நிலையிலும்கூட வியாபாரிகள் சிந்தனை செய்வதுண்டு. ஒரு விஞ்ஞானியின் தொண்டுகளைப் போலவே ஒரு வியாபாரியின் தொண்டுகளும் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன.
மற்றவர்களைக் காட்டிலும் வியாபாரிகளுக்கு அதிகமாக நாட்டின்மீது பற்றுதல் உண்டு. எனது பொருள். எனது வியாபாரம், எனது சொத்து என்பதிலிருந்தே எனது நாடு என்ற உணர்ச்சியும் வன்மையாக வளர்ச்சியடைகிறது. இதனால், பிறரைக் காட்டிலும் வியாபாரிகளே அதிகமாக நாட்டுப்பற்று உடையவர்கள் எனக் கூறலாம்.
உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இன்றைய அரசியல் சபைகள் வியாபாரிகளை அதிகம் கொண்டவைக ளாக இருந்து வருகின்றன. சில அரசாங்கங்கள் வியாபாரிகளின் துணைகொண்டு நடைபெறுகின்றன. இன்னும் சில அரசாங்கங்கள் வியாபாரிகளாலேயே நடத்தப்படுகின்றன. உலகப் பெரும் போர்களிற் பல வியாபாரத்தை அடிப்படை யாகக் கொண்டவைகளாக இருந்திருக்கின்றன. இதனால் உலகிற் சிறந்தவன் வியாபாரி என நன்கு விளங்கும்.
எது வியாபாரம்?
என்பதை ஒருவாறு ஆராய்வோம். கொண்டு, விற்ப தற்குத்தான் வியாபாரம் என்று பெயர். இருக்குமிடத்தில் வாங்கி இல்லாதவிடத்தில் விற்பதும்,விளைந்தவிடத்தில் வாங்கி, விளையாத விடத்தில் விற்பதுமே வியாபாரம்.
தஞ்சை ஜில்லாவில் அதிகமாக விளைந்த நெற்களை வாங்கி கோயமுத்தூர் ஜில்லாவில் விற்பதும், கோயமுத்தூர் ஜில்லாவில் உற்பத்தியான துணிகளை வாங்கி தஞ்சை ஜில்லாவில் விற்பதும் ஒரு நல்ல வியாபாரம்தான். இந்த வியாபாரம் பொது ஜனங்களால் பாராட்டப்பெற்று சிறப் புடையதாகக் கருத வேண்டுமானால், இதில் ‘நேர்மை’ என்ற ஒன்று சிறப்பாகக் கலந்திருக்க வேண்டும். நேர்மை கலவாத வியாபாரத்தை வியாபாரம் எனக் கூறுவதைவிட சூது எனக் கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
முகந்து கொடுப்பதிலும் வாங்குவதிலும், அளந்து கொடுப்பதிலும் வாங்குவதிலும், நிறுத்துக் கொடுப்பதிலும் வாங்குவதிலும், எண்ணிக் கொடுப்பதிலும் வாங்குவதிலும் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும். உயர்ந்த சரக்குகளில் மட்டச் சரக்குகளைக் கலப்பது நல்லதல்ல. வியாபாரத்தில் நேர்மையைக் கலப்பதுதான் நல்லது. நம்பும்படி சொல்லிவிடுவது நல்லதல்ல. அது திறமையும் ஆகாது. உண்மையைச் சொல்வதுதான் நல்லதாகும்.
வியாபாரம் என்றால் என்ன? என்பதைப்பற்றி இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு தமிழ்ப் பெரும் புலவர் மிக அழகாகக் கூறியிருக்கிறார். அது, கொள்வதுவும் மிகை படாது; கொடுப்பதுவும் குறைபடாது என்பதே. இக்காலத்திற் கேற்றவாறு கலப்படங்கள் நடைபெறாது என்பதையும் நாம் சேர்த்துக் கூறிக் கொள்ளலாம். அக்காலத்து கலப்படஞ் செய்வது இல்லை யாதலின் புலவர் கூறாது விடுத்தனர் எனக் கொள்ளுதல் வேண்டும்.
எது வியாபார முறை?
1. ஒரு பொருளை நிறுத்துக் கொடுக்கும்போது தராசுகளின் முனை சிறிது முனைக்கும்படி நிறுத்துக் கொடுப்பது ஒரு வியாபார முறை. தராசின் முனை முன்னுக்கு வருவதால் நிறுக்கும் தொழிலாளி, எழுதும் கணக்காளி, நடத்தும் முதலாளி ஆகிய மூவரும் முன்னுக்கு வருவதுடன் வாங்குபவனும் முன்னுக்கு வருவான். வியாபாரமும் முன்னுக்கு வரும். நாடும் முன்னுக்கு வரும். தராசின் முனை பின்னுக்குப் போய்விடுமானால் யாவும் அடியோடு பின்னுக்குப் போய்விடும் என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும்.
2. ஒரு நல்ல வியாபாரத்திற்கு அதிக மூலதனம் வேண்டும். மூலதனம் இல்லாமல் வியாபாரம் செய்வது கை இல்லாமல் முழம் போட ஆசைப்படுவது போலாம். கடன் வாங்கி தொழில் செய்பவன் முதலாளி அல்ல; அவன் கடனாளி. வேண்டுமானால், கடன்கார முதலாளி எனக் கூறிக் கொள்ளலாம். கடனுக்குப் பயப்பட்டு, வட்டி செலுத்தவும், செலவு செய்யவும், விளம்பரஞ் செய்யவும் பயப்படுகிற காரணத்தினால், கடன்கார முதலாளிகளால் ஒரு நல்ல வியாபாரத்தைச் செய்ய முடிவதில்லை.
3.ஒருவர் வாங்கும் கடனுக்காக மற்றொருவர் உடந்தையாகக் கையெழுத்திடுவது ஒரு கெட்ட வழக்கம் இதற்கு, “ஜாயிண்ட் கையெழுத்து” என்று பெயர். இந்தத் தப்பிதத்தை பிறர் செய்தாலும் வியாபாரிகள் செய்ய கனவிலும் நினைக்கக் கூடாது. பிறர் கெட்டால் அவரோடு போம். வியாபாரி கெட்டால், வியாபாரமும் கெடும். ஜாயிண்ட் கையெழுத்துக்களினால் கெட்டுப்போன வியாபாரிகளும், அழிந்துபோன வியாபார ஸ்தலங்களும், பாழாய்ப்போன குடும்பங்களும் மிகப் பல.
4. இலாபத்தைக் குறைத்துவைத்து விற்பனையை விரி வாக்குவது ஒரு சிறந்த வியாபார முறை. ஒருவன் வீசைக்கு இரண்டணா இலாபம் வைக்கிறான். மற்றொருவன் மணங்குக்கு இரண்டணா இலாபம் வைக்கிறான். விசைக்கு இரண்டணா இலாபம் ளைப்பவன் 10 வீசை விற்று ரூ. 1-40 இலாபம் பெறுகிறான். மணங்குக்கு 0-20 இலாபம் வைப்பவன் 30 மணங்கு விற்று 3–12-0 ரூபாய் இலாபம் பெறமுடிகிறது. இதனால்,குறைந்த இலாப விற்பனை அதிக வருமானத்தையும் அதிக இலாப விற்பனை குறைந்த வரு மானத்தையும் தருவதை நன்கறியலாம்.
5. வந்ததும், விற்றதும், கையிருப்புச் சரக்கும், பற்றும் வரவும்,கை இருப்புக் கணக்கும், யாவும் சுத்தமாக வைத்திருப்பது ஒரு நல்ல முறை. ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் இருப்புச் சரக்குகளை எழுதி, ஓரட்டுத் திட்டம் கட்டி, இலாப நட்டத்தை மூலதனக் கணக்கில் தாக்கல் செய்து, ஐந்தொகைப் பட்டியல் முடித்து வைப்பதே சரியான வியாபாரக் கணக்காகும்.இப்படிப்பட்ட கணக்கு விற்பனை வரி அதிகாரியாலும், வருமான வரி அதிகாரியாலும் பாராட்டப்பெறும். இன்றேல், கணக்குத் தகசலும், களவும் ஏற்பட்டு, நட்டமும், துன்பமுமே நடைமுறையில் கிடைத்து வரும்.
6. கடை வீதிகளில் போட்டி போட்டுக்கொண்டு மட்டச் சரக்குகளையும், கெட்ட சரக்குகளையும் குறைந்த விலைகளுக்கு விற்றுவருவது சிறந்த வியாபாரம் அல்ல. அதைவிட நல்ல சரக்குகளை தயார் செய்து வைத்துக் கொண்டு உயர்ந்த விலைகளுக்கு விற்றுவருவது சிறந்த வியாபாரமாக இருந்துவரும்.
7.ஒரு நல்ல வியாபார ஸ்தலத்திற்கு அதிகமான மூலதனம்,விரிவான வியாபாரம், உயர்ந்த சரக்கு, நியாயமான விலை, சரியான எடை, சுத்தமான கணக்கு ஆகியவைகள் மட்டும் போதாது. தொழில் நடத்துவோரிடத்தே இனிய சொல்லும் இருத்தல் வேண்டும். எந்தச் சரக்கு இல்லாவிட்டாலும் இந்தச் சரக்கு இருந்து தீரவேண்டும். இந்த இனிய சொல்லும் சேர்ந்தபோதுதான் அங்கு வியாபார முறைகள் அனைத்தும் ஒரு நல்ல உருவாக அமைகிறது.
இனி வியாபாரியால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்வோம்.
வியாபாரி தன்னுடைய இலாபத்தைக் கருதி தஞ்சை ஜில்லா நெல்லைக் கோவையிற் விற்றும், கோவை ஜில்லா துணிகளைத் தஞ்சை ஜில்லாவில் விற்றுமிருக்கலாம். என்றாலும் இந்த வியாபாரத்தினால் நாட்டிற்கு ஏற்பட்ட நன்மைகள் பல அவை: விளைந்த உணவு அழிந்து போக விடாமல் பாதுகாக்கப் பெற்றது
1. இல்லாத மக்களுக்கு உணவு வழங்கியது
2. உள் நாட்டுக் கைத்தொழிலுக்கும் ஆலைத் தொழிலுக்கும் ஆக்கம் தேடியது
3. உள் நாட்டுத் தேவைகளை நிரப்பிவைத்தது
4.பொருள்களை உள்நாட்டிற் குள்ளேயே மாற்றிப் பொருளாதாரத்தைச் சரிப்படுத்திக் கொண்டது
5. அரசாங்கம் அமைதியாக நடைபெற துணை செய்தது
6. நாட்டு நலன் பாதுகாக்கப்பெற்றது.
ஆகியவைகளாம். இவை யாவும் வியாபார நன்மைகள்.
இந்த நன்மைகளைச் செய்வதற்காக அந்த வியாபாரி ஒரு சிறிது இலாபம் அடைவது நியாயம் ஆகும். அவ்வாறு இலாபம் அடைய அவருக்கு உரிமையும் உண்டு. என்றாலும், இந்த இலாபம் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். வரம்பு கடவாத இலாபத்திற்குதான் ‘இலாபம்’ என்று பெயர். வரம்புகடந்து விட்டால் அதற்கு ‘இலாபம்’ என்று று பெயர் அல்ல. ‘கொள்ளை’ என்று ஆகிவிடுகிறது. இலாபம் வரம்பு கடந்து, கொள்ளையாக மாறும்பொழுது, வியாபாரியும் வரம்பு கடந்து கொள்ளைக்காரனாக மாறி விடுகிறான்.
தேவையில்லாதபோது சரக்குகளைச் சேகரித்துத் தேவைப்படுகிறபோது செலவு செய்வதால் நாட்டிற்கு நன்மை ஏற்படுகிறது. ஆனால் தேவைப்படுகிறபோது பொது ஜனங்களுக்கு கிடைக்கவிடாமல் சேகரித்து வைப்பதால் நாட்டிற்குத் தீமை ஏற்படுகிறது. சரக்குகளை மறைத்து வைப்பது மோசம். மக்களை ஏமாற்றுவது வஞ்சகம். மறைவாக விற்பது இருட்டு விற்பனை. கணக்கு எழுதாது விற்பது திருட்டு விற்பனை. வியாபாரியும் கொள்ளைக் காரனாகி, வியாபார ஸ்தலமும் வழிப்பறி இடமாக மாறி விட்டால் நாட்டிற்கு ஏற்படும் தீமைகளைச் சொல்லவா வேண்டும்?
இப்படிப்பட்ட ஒரு வியாபாரி நாட்டிற்கும், மக்களுக்கும். அரசாங்கத்திற்கும் கேடு செய்வதோடு நில்லாமல், வர்த்தகத் துறைக்கும் கேடு செய்து, தன் கடைக்கும் கேடு தேடி, தனக்கும் கேடு தேடிக்கொள்கிறான். இதனால் நல்ல வியாபார முறையால் நாட்டிற்கு நன்மையும், கொடிய வியாபார முறையால் நாட்டிற்குத் தீமையும் ஏற்படுவது நன்கு விளங்கும். சாதாரண காலத்திலேயே இதைத் தீமை என்று கூறுவதானால் யுத்த காலத்தில் இதைக் ‘கடுந் தீமை’ எனக் கூறியாக வேண்டும்.
நியாயமான விலைக்குப் பசியால் வாடும் மக்களுக்கு உணவு விற்க மறுப்பதும், பிரசவ வேதனைப்படுவோர்க்கு மருந்து விற்க மறுப்பதும் சில வியாரிகளுடைய செயல்கள். அதிக விலைக்கு விற்று, தான் மட்டும் அதிகம் பொருள் தேட, தன் வாய் ருசிக்கும்படித் தின்ன, தன் வயிறு பெருக்க, தன் பெண்டு பிள்ளைகள் வாழ எண்ணி, ஊராரின் பெண்டு பிள்ளைகளை உணவு கொடுக்க மறுத்துக் கொல்லுவதும், மருந்து கொடுக்க மறுத்துக் கொல்லுவதும் எவ்வளவு கொடுமையான செயல்கள்? இப்படிப்பட்ட வியாபரிகள் கொள்ளைக்காரர்கள் என்பதிலிருந்து விலகி கொலைகாரர்களாகவும் மாற ஆசைப்படுகிறார்கள் போலும். இத்தகையை வியாபாரிகளை தீமையிலிருந்து விலக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்ய வேண்டியது அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் கடமையாகும். நம் நாட்டைப்பொருத்த வரையில் அரசாங்கத்தினர் இக்கொடுமைகளை ஒழித்து மக்களைக் காபாற்றத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந் நடவடிக்கைகள் 4 பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும்.
முதற் பிரிவு உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்குமாறு பங்கு விகிதப்படுத்திக் கொடுக்கச் செய் திருப்பது. இரண்டாவது பிரிவு வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்களை இறக்குமதியான துறைமுகத்தில் அடக்க விலைக்குமேல் யுத்த காலத்திற்கு முன் என்ன இலாபம் வைத்து விற்றார்களோ அதே இலாபம் வைத்து விற்கச் செய்திருப்பது.மூன்றாவது பிரிவு உள்நாட்டு உற்பத்திப் பொருள்கள் எல்லாவற்றையும் 100-க்கு 20-க்கு மேல் இலாபம் வைக்காமல் விற்கும்படிச் செய்திருப்பது. நான் காவது பிரிவு மேற்கூறிய முப்பிரிவுப் பொருள்களிலும் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகிற பொருள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு விலைகளைக் கட்டுப் படுத்திக் கூறி அந்தக் கட்டுப்பாட்டு விலைக்கே விற்கச் செய்திருப்பது. இவை நான்கும் சிறந்த முறைகளில் வேலை செய்கின்றன. இவைகளைக் கவனிக்க சிவில் சப்ளை இலாகா என ஒரு புதிய இலாகாவை ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்த இலாகாவில் தலைமை அதிகாரிக்கு சிவில் சப்ளை கண்ட்ரோல் ஜெனரல் என்று பெயர். இவ் அதிகாரிக்கு புதிய அவசரச் சட்டப்படி பல அதிகாரங்கள் வழங்கப் பெற்றிருக்கின்றன.
ஒரு வியாபாரியைக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான கணக்கு வைக்கும்படியும், வியாபார சம்பந்தமாக எல்லாத் தகவல்களையும் பதிவு செய்து வரச் செய்யவும், விரும்புகிற போது கணக்குகளைப் பார்வையிடவும், ஒரு கெஜட்டட் ஆபீசரை எந்த வியாபாரஸ்தலத்திலும் நுழைந்து சோதனை போடச் செய்யவும். சந்தேகத்தின் பேரில் சரக்குகளைக் கைப்பற்றும்படியும், இறக்குமதியாகும் பொருள்களுக்கு அடக்கவிலையை நிர்ணயஞ் செய்யவும், தேவையான ஊர் களுக்குச் சரக்குகளை அனுப்பிவைக்கும்படியும், குறிப்பிட்ட நபருக்கு விற்கும்படிச் செய்யவும், வினியோகத்தை கட்டுப் படுத்தும்படிச் செய்யவும் உத்திரவிட இந்த அதிகாரிக்கு முழு அதிகாரமுண்டு.
குற்றம் செய்தவர்களை உடனுக்குடன் விசாரித்து அவர்களுக்குத் தனித்தனியே அபராதம் விதிக்கவோ, சரக்குகளைப் பறிமுதல் செய்யவோ, 5 வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கவோ இம் மூன்றையும் சேர்த்து ஒரே சமயத்தில் விதிக்கவோ இந்த அவசரச் சட்டம் அனுமதி யளிக்கிறது.
கடையின் உள்ளிருக்கும் சரக்குகளைக் கடையின் முன் எழுதி வைக்காதிருப்பதும், கட்டுப்பாட்டு விலைக்கு விற்க மறுப்பதும், கட்டுப்பாட்டு விலைக்குமேல் விற்பதும், விற்ற விலைக்கு பட்டியல் கொடுக்க மறுப்பதும், சரக்குகளை அபரிமிதமாகச் சேகரித்து வைப்பதும், கொள்ளை இலாபம் அடிப்பதும் ஆகியவைகள் இச்சட்டப்படி பெருங் குற்றங்களாகும்.
இக் குற்றங்களுக்காக 500, 1000, 2000, 5000, 10,000 ரூபாய்கள் அபராதமும் 1 வாரம் 1 மாதம் 3 மாதம் 6 மாதம் சிறைத் தண்டனைகளும் அளிக்கப்பெற்று வருகின்றன. இவற்றை நீங்கள் தினந்தோறும் தினசரிப் பத்திரிகைகள் மூலம் பார்த்தும், வானொலி மூலம் கேட்டும் வந்திருக்கலாம். கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி யன்று கராச்சியில் ஒரு வியாபாரிக்கு 15,000 ரூபாய்கள் அபராதமும் 6 மாதக் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப் பெற்றது. சில நீதி மன்றங்களில் ஒரு பைசா அதிகம் விற்ற குற்றத்திற்காக ரூ.500 அபராதம் விதிக்கப் பெற்றிருக்கிறது. இங்கு மட்டுமல்ல ; இது போன்ற சட்டங்கள் உலக முழுதுமுள்ள எல்லா நாடுகளிலும் அமுலிலிருப்பதாகத் தெரிய வருகிறது.
இத்தகைய குற்றங்களைச் செய்ததற்காக அமெரிக் காவில் சில வியாபாரிகள் ஆயுள்வரை சிறைத் தண்டனை அடைந்திருக்கின்றனர். வேறு பல நாடுகளில் வியாபாரிகள் தங்கள் சொத்துக்களை இக் குற்றங்களுக்காக இழந்திருப் பதாகவும் தெரிய வருகிறது. இவைகளைப் பார்க்கும்பொழுது நம் நாட்டில் இச்சட்டம் கடுமையானதாக இல்லையெனத் தோன்றும்.
நாட்டு நலனைக் கருதியும், மக்களின் நல் வாழ்வைக் கருதியும் அரசாங்கத்தினர் வியாபாரிகளை எச்சரித்து வருகின்றனர். பத்திரிகைகள் மூலமாகவும், வானொலி மூலமாகவும் பிரசாரமும் செய்து வருகின்றனர். போதுமான பலன் கிடைக்கவில்லை. விரைவில் கிடைக்காவிடில் குற்றம் செய் தவர்களுக்குத் தண்டனைகளை அதிகமாக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அத் தண்டனைகள் குற்றம் செய்த வியாபாரியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, குற்ற வாளியின் வியாபார லைசென்சை ரத்து செய்வது, குற்றவாளி எந்த வியாபாரமும், எவர் பெயராலும் செய்ய முடியாமற் செய்வது ஆகியவைகளாக இருக்குமோ என அஞ்ச வேண்டி இருக்கிறது.
தவறான பாதையில் நடக்க முயற்சிக்கும் வியாபாரிகளை எச்சரிப்பதும், தவறு செய்யும் வியாபாரிகளை உடனே போலீசுக்கு அறிவித்து தண்டிக்கும்படிச் செய்வதும் பொது ஜனங்களின் நீங்காக் கடமைகளாகும். சட்டங்களை அமுல் நடத்த பொதுஜன ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குப் பெரிதும் துணை செய்கிறது. பொது ஜனங்களும் அவசியத்தை உத்தேசித்து அதிக விலை கொடுத்து வாங்கிவிடாமல், அர சாங்கத்திற்கு அறிவித்து உள்ள விலைக்கே வாங்குவதில் பிடிவாதமாக இருக்கவேண்டும். இப்படிச் செய்தால் இக் கொடுமை விரைவில் ஒழிந்துவிடும்.
ஒழுங்கான வியாபாரிகளைக் கொண்ட நாடுதான் நல்ல நாடாகும்.நாட்டின் நலத்திற்குத் தொண்டு செய்ய பிறரைக் காட்டிலும் வியாபாரிகளே அதிகம் கடமைப்பட்டவர்கள். அதிக உரிமையுடையவர்களும் அவர்களேயாவர். அதிக ஆற்றல் படைத்தவர்களும் வியாபாரிகளே ஆவர். அத்தகைய அன்பர்களை நான் வேண்டிக்கொள்வதென்ன வெனில், யுத்தத்தால் பாதிக்கப்பெற்று, குறை உணவு உண்டு, அரை வாழ்வு வாழும் ஏழை மக்களைக் கொண்ட நம் நாட்டிற்கு இக்காலத்தில் தங்களாலியன்ற உதவிகளைச் செய்யுங்கள். உதவிகளைச் செய்ய முடியாவிடில், தீமைகளையேனும் செய்யாதிருங்கள் என்பதுதான். இந்த வேண்டுதலுடன் வியாபாரம் என்ற இப் பேச்சை நிறுத்திக்கொள்ளுகிறேன்.
நாடும் தொழிலும் நல்ல வணிகமும்,
ஏழை மக்களின் இன்னுயிர் வாழ்வும்
ஆளும் அரசும் அவனியின் விளைவும்
நாளும் செழிக்க நல்வாழ்வு வாழ
நாமனை வரும் நலமாய் வாழ்த்துவோம்
வாழ்க வணிகம் வளம் பல பொழிந்து.
வணக்கம்.
(8-4-45-ல் நிகழ்த்திய சொற்பொழிவு இது.)



