வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம்

2. ஜாதி முறை


[இதே பொருள் பற்றி வேறுபாடான தமது கருத்துக்களை இதற்கு முந்திய பேச்சில் மதுரை ராவ் சாகிப் என். நடேசய்யர் அவர்கள் தெரிவித்தார்கள்.]

தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவர்க்கும் எனது வணக்கம். ஜாதி முறையைப் பற்றிப் பேசும் வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. ஜாதி என்பது மக்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பிரிவிலுள்ள ஒரு கூட்டத்தைப் பிறப்பின் பொருட்டு குறித்துக் கூறுகிற ஒரு சொல், ஜாதி என்ற இச்சொல் பண்டைத் தமிழ் நூல்களில் இல்லை. இச் சொல் இல்லாததைக் கொண்டே ஜாதி முறையும் பழந்தமிழ் நாட்டில் இல்லை என்று நன்கு விளங்குகிறது. குலம் என்ற ஒரு சொல் இடைக்காலத்திய தமிழ் நூல்களில் காணப்படுகிறது. குலம் ஜாதியல்ல.

ஜாதி வேறு, குலம் வேறு. இதன் உண்மையை, ஜாதி குலம் பிறப் பிறப்பு என்ற சொற்றாடர் நன்கறிவிக்கும். ஜாதி பிறந்த கூட்டத்தைக் குறிக்கும். குலம் நடந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். குலம் என்ற சொல்லை ஒழுக்கம் என்ற பொருளிலேயே பல புலவர்கள் பல்வேறு நூல்களில் வழங்கியிருக்கிறார்கள். குல மகளிர் என்பது எந்த ஒரு ஜாதியையும் குறிக்காமல் ஒழுக்கமுள்ள பெண்கள் என்றே பொருள்படுகிறது. குலனுடையான் கண்ணேயுள என்ற வள்ளுவர் வாக்கும் குலம் ஜாதியல்ல ; ஒழுக்கமே என்பதை வற்புறுத்துகிறது.

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகைப் பிரிவு பண்டைய தமிழ் நாட்டில் இருந்ததுண்டு. இதுவும் தொழிலின் பொருட்டு பிரிக்கப் பெற்ற தொழில் முறையே தவிர பிறப்பின் பொருட்டு பிரிக்கப் பெற்ற ஜாதி முறையல்ல: சாலியவாகனனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவன் சட்டி பானைகளைச் செய்தபோது அவன் பெயர் வேளான். வேள் என்பது மண். வேளான் என்பது மண் தொழில் செய்வோன் என்றாகிறது. அவைகளை விற்கும்பொழுது அவன் வணிகன் ஆனான். போரிட்ட பொழுது வீரன் ஆனான். தண்டித்தபோது மறவன் ஆனான். ஆண்டபொழுது அரசன் ஆனான். முடிதுறந்து அறவொழுக்கத்தைக் கைக்கொண்டிருந்தால் அந்தணன் ஆவான். இது தமிழ் வழக்காகும். இவற்றையே பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என வடமொழியாளர் வகுத்து நால் வகைச் சாதியெனக் கூறிப் பிறப்பின் பொருட்டு வழங்கினர். இவ் வழக்குப்படி ஒருவனுக்குப் பிறப்பின் பொருட்டு வழங்கிய ஜாதிப் பெயரானது அவன் எத்தொழிலைச் செய்தாலும் மாறாது. மாற்ற முயன்றாலும் முடியாது.

இன்றையத் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் “பள்ளுபறை பதினெட்டு சாதி” என ஒரு பழமொழி வழங்கப்பெற்று வருகிறது. இதுவும் தொழில் முறை கருதி குறிப்பிடப் பட்டதே தவிர, பிறப்பு முறை கருதி வகுக்கப் பெற்றதல்ல. இது உண்மை.

உழவுத் தொழில் செய்ய நிலத்தின் பள்ளத்தைத் தூர்ப்பவர் அல்லது பள்ளஞ் செய்பவர் – பள்ளர்.அரசனது கருத்தை பறையடித்து அறிவிப்பவர் பறையர். எதிரியின் கள்ளச் செயலை அறியும் அறிஞர்-கள்ளர், மறக் கருணை கொண்டு தண்டிப்பவர் – மறவர். நாட்டைப் பாதுகாப்பவர் – காவற்காரர். எதுவும் உடையவர் – உடையார்.

பரிகாரம் செய்பவர் – பரிகாரி. வீரர் குடியினர்–வீர்குடி. துணிகளை வண்ணஞ் செய்பவர்-வண்ணர். தட்டி வேலை செய்பவர்- தட்டர். கொல்லுலைக் கூடத்தினர் -கொல்லர். வணிகஞ் செய்பவர்– வணிகர். வலை வீசுவோர் – வலைஞர். வேளாண்மை செய்வோர் – வேளாளர். முதன்மையாளர்- முதலியார் எனக் கூறி அழைக்கப்பெற்றனர். ஆகவே, இது தொழில் முறை கருதியதே அன்றி, பிறப்பு முறை கருதியது அல்ல.

தொடக்கத்தில் பிறப்பு முறை கருதிய ஜாதிகள் நான்கு என வகுத்திருந்தாலும் நான்கு நாற்பது ஆகி, பிறகு நானூறு ஆகி, நான்கு ஆயிரம் ஆகி, நாற்பது ஆயிரமாக உயர்ந்து, இன்று நான்கு லட்சம் பிரிவாகப் பிரிந்து ஜாதி முறையானது விளையாடிக் கொண்டிருக்கிறது.மேல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து ஜாதிக் கணக்கு எடுத்த ஸ்வீடன் தேசத்துப் பாதிரியார் ஒருவர் இந்தியாவில் 2181 ஜாதிப் பிரிவுகள் இருக்கின்றன எனக் கூறியிருக்கிறார். பாவம்! அவர் ஜாதிகளை மட்டும் அறிந்து எண்ணிக் கணக் கெடுத்தவர் போலும். ஜாதிகளின் பிரிவுகளையும், பிரிவுகளின் உட்பிரிவுகளையும், உட்பிரிவுகளின் உட்பிரிவுகளையும் அவரால் அறிய முடியவில்லை என்று தெரிகிறது. அறிந்திருந்தால் இவ்வாறு குறைவாகக் கூறியிருக்க நியாயமில்லை.

திருமணம் நடந்த ஒரு வீட்டில் நான் உணவருந்திக் கொண்டிருந்தேன். என் பக்கத்திலிருந்த ஒருவர் என்னை மெதுவாய்த் தட்டிக் கூப்பிட்டு அதோ கதவருகில் உட் கார்ந்து சாப்பிடுகிறாரே அவர் கொஞ்சம் பத்தாது. இப்போது நம் இனத்தில் சம்பந்தம் செய்து நடுப் பத்திக்கு வந்துவிட்டார் எனக் கூறினார். என்னிடம் எவர் சொன்னாரோ அவரைப்பற்றியே இன்னொருவர் சற்று முன்பு இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த இருவர்களும் கூறியது உண்மையானால், இவர்கள் முன்பு ஒரு சாதி, இப்போது அரைச்சாதி ஆக ஆள் ஒன்றுக்கு ஒன்றரைச் சாதி ஆகிறது. இதை அந்த ஸ்வீடன் தேசத்துப் பாதிரியார் அறிந்திருந்தால் எவ்வாறு கூறியிருப்பார்? இந்தியாவில் உள்ள 26 கோடி இந்துக்களில் 39 கோடி ஜாதிப் பிரிவுகள் உண்டு என்றுதான் கூறியிருப்பார்?

இத்தனை ஜாதிகள் இந்நாட்டிலிருந்தாலும் எந்த ஜாதியும் தன் ஜாதிப் பெருமையை இழக்கவோ, தன் ஜாதி தாழ்ந்தது என ஒப்பவோ விரும்புவதில்லை. 11 ஆண்டுகளுக்கு முன்பு பறையர்களின் சேரிக்குச் சென்றிருந்தேன். அங்கு அப்போது சாதிக் கூட்டம் நடந்தது. இந்த வழக்கம் நமது சாதியில் உண்டா? என்று பலர் கோபமாகக் கூச்சலிட்டனர். முடிவில் வேறு சாதியில் கலப்பு மணம் செய்த ஒருவனை சேரியை விட்டு விலக்கிவிட்டனர். இந் நிகழ்ச்சியானது இன்னும் என் உள்ளத்தை விட்டு மறையவில்லை. இதிலிருந்து எது உயர்ந்த சாதி? என எவர் முடிவு கட்டிக் கூறுவது? என்பது எனக்கே விளங்கவில்லை.

ஜாதி முறையினால் மக்கள் பிளவுபட்டு தனித் தனிக் கூட்டம் ஆனார்கள். அவ்வளவோடு நிற்கவில்லை. ஜாதி முறையானது ஜாதிக்கு ஒரு பட்டம்; ஜாதிக்கு ஒரு அடையாளம்; ஜாதிக்கு ஒரு தொழில் : ஜாதிக்கு ஒரு வழக்கம்; ஜாதிக்கு ஒரு நீதி; ஜாதிக்கு ஒரு தெரு; ஜாதிக்கு ஒரு கடமை; ஜாதிக்கு ஒரு உரிமை; ஜாதிக்கு ஒரு உணவு என்று கூட வகுத்துப் பிரித்துவிட்டது. இதனால் மக்கள் உள்ளத்தில் தோன்றியிருந்த அன்பு உணர்ச்சி அழிந்தது. ஒற்றுமை உணர்ச்சி குற்றுயிராய்க் கிடந்து மடிந்து போயிற்று. இந் நாட்டில் நடைபெறும் கலகங்களுக்கும், குழப்பங்களுக்கும் ஜாதி முறையே பெரிதும் காரணமாக இருந்து வருகிறது. முடிவாகக் கூறவேண்டுமானால், சமூகம் என்னும் நிலத்தில் சாதி என்னும் விதையூன்றி,வெறுப்பு நீர் பாய்ச்சி, வேற்றுமைச் செடி வளர்ந்து, பொறாமை பூத்து, கலகம் காய்த்து, அடிதடி பழுக்கிறது என்றே கூறவேண்டும்.

ஜாதி வேற்றுமையானது நாட்டு வேற்றுமையை விட, மத வேற்றுமையை விட, மொழி வேற்றுமையை விட, நிற வேற்றுமையை விட மிகப் பெரிதாக மதிக்கப்பெற்று வருகிறது. ஐரோப்பியர், அமெரிக்கர், சைனாக்காரர், ஐப்பானியர் ஆகியவர்கள் வேற்று நாட்டாராயிருந்தும், வேற்று மொழியினராயிருந்தும், வேற்று நிறத்தினராயிருந்தும் அன்போடு கைலாகு கொடுத்து மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஆனால், நமது நாட்டினரை, நமது மதத்தினரை, நமது மொழியினரை, நமது நிறத்தினரை நாம் தொடவும் அஞ்சி, மறுத்து, வெறுத்து வருகிறோம். இக் கொடுஞ் செயலைச் செய்கின்ற ஜாதி முறையை எண்ணும்பொழுது அறிஞர் களின் உள்ளம் வெடிக்காது என் செய்யும்?

ஜாதி முறையில் தீண்டாமை என்றும் ஒன்று உண்டு. இதைவிட கடுமையானதும், கொடுமையானதும் இவ்வுலகில் எப்பாகத்திலுமில்லை. தீண்டாமை என்ற சொல்லில் முதல் எழுத்து “தீ”; முடிவெழுத்து “மை” ஆகவே அச் சொல்லிலேயே தீமை அமைந்திருக்கிறது. தீண்டாமை நெருப்பை விடக் கொடியதாகும். நெருப்பு தொட்டவனை மட்டுமே சுடும்.

நெருப்பைத் தொட்டவனைத் தொட்டால் சூடு தாக்காது. ஆனால், ஜாதி முறை வகுத்துள்ள தீண்டலானது தொட்டவனைத் தொட்டாலும் தாக்கும். பிறகு அவனைத் தொட்டவனைத் தொட்டாலும் தாக்கும். மனிதனை மலத்தினுங் கேடானதாக மதிக்கச் செய்வது தீண்டாமையேயாம். மலத்தைத் தொட்டவன் கையைக் கழுவிவிட்டாற் போதும். மனிதனைத் தொட்டவன் தலையி லிருந்து கால்வரை கழுவி தலை முழுகித் தீரவேண்டும்.

ஜாதி முறையில் வேண்டாமையும் ஒன்றுண்டு. அது, “நாய் நுழையும் வீட்டில்கூட நீ நுழைய வேண்டாம். நன்றாய் கழுதை நடக்கும் தெருவில் நீ நடக்க வேண்டாம்” எனச் சொல்லும். ஜாதி முறையில் என்றும் ஒன்றுண்டு. அது “பூனை குடித்த எச்சில் பாலைக் குடி; ஆனால் மனிதன் பார்த்த பாலை மட்டும் குடிக்காதே” எனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்கும். இன்னும் கொள்ளாமை, கொடுக்காமை, உண்ணாமை, தின்னாமை, எண்ணாமை, இரங்காமை, பொறாமை முதலிய எத்தனையோ ஆமைகள் ஜாதி முறைச் சேற்றில் வாழ்கின்றன. இந்த ஆமைகள் யாவும் உணராமை என்னும் கிணற்றிலுள்ள அறியாமையின் குட்டிகள் போலும்!

தாழ்த்தப்பட்டவர்களுக்குள் நடைபெற்ற விருந்தொன்றில் நெய் பரிமாறினார்கள் என்ற குற்றத்திற்காக விருந்துண்ட உறவினர்களெல்லாம் ஜாதி இந்துக்களால் அடியும், மிதியும், உதையும் பட்டனர். இக் கொடுஞ் செயல் நடைபெற்ற நாள் 1936, ஏப்ரல் முதல் தேதியாகும். தண்ணீர் எடுக்க மண் குடத்தைப் பயன்படுத்தாமல், பித்தளைக் குடத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காகப் பெண் மக்கள் பலர் துன்புறுத்தப்பட்டனர். இக் கொடுஞ் செயல் நடைபெற்றது 1935 நவம்பர் முதலிலாகும். இரவிக்கை அணிந்த காரணத்திற்காக தாழ்த்தப் பட்ட பெண்களுக்கு ஜாதி முறை அடி வாங்கிக் கொடுத்திருக்கிறது.

சமீப காலத்தில் நமது ஜில்லாவில், குளித்தலை தாலுகாவில் ஒரு ஜாதியினரே வசிக்கும் ஒரு தெருவில் மற்றொரு ஜாதியினர் வீடு வாங்கியது செல்லாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறு ஜாதி முறை செய்கின்ற கொடுமைகள் அளவிட்டுக் கூற முடியாதவையாகும்.

ஒரு ஜாதியின்மீது ஆதிக்கம் செலுத்த இன்னொரு ஜாதிக்கு உரிமை உண்டு என்று கூறுகிறவர்கள்,”ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த மற்றொரு நாட்டுக்கும் உரிமையுண்டு என்று எண்ணி சும்மா இருந்துவிட வேண்டும். ஒரு நாட்டை அடிமைப்படுத்த இன்னொரு நாட்டிற்கு உரிமையில்லை என்று கூறுகிறவர்கள், ஒரு ஜாதியை அடிமைப்படுத்த இன்னொரு ஜாதிக்கு உரிமை யில்லை” என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லவா?

பொருளாதாரத் துறையிற் பார்த்தாலும் ஜாதி முறை தீமை செய்து வருகிறது. ஜாதியோடு தொழிலும் இணைக்கப் பெற்றிருக்கிறது. பிறப்பினாலேயே ஒருவனது தொழில் முன்னதாகவே உறுதி செய்யப்பட்டு விடுகிறது. இதனால் குறிப்பிட்ட சில ஜாதியினர் வேறு தொழில் செய்து பொருளாதாரத் துறையில் சிறப்படைந்து வாழ முடிவ தில்லை.

நல் வாழ்வு வாழ்வதற்குக்கூட ஜாதி முறை தீமை செய்து வருகிறது. எடுத்துக்காட்டாகப் பிராமணர்களையே எடுத்துக் கொள்வோம். நால்வகைச் ஜாதியில் இவர்கள் தலை சிறந்தவர்கள். இந்த ஒரு ஜாதியில் அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி என்பது போன்று வட நாட்டிலும் தென்னாட்டிலும் சேர்ந்து பெரும் பிரிவுகள் 56-ம், உ பிரிவுகள் 224-ம், உட் பிரிவுகளின் உட் பிரிவுகள் 896-ம் இருக்கின்றன என்பதை அறியும்பொழுது “வாழ்வு” எவ்வளவு தூரம் ஒதுக்கப் பெற்றிருக்கிறது என்பதை நன்கறியலாம். ஜாதி முறையும், கோத்திரப் பிரிவும் பார்த்து மணம் செய்வது என்ற கொள்கையினால் அழகான ஆணும் பெண்ணும், அல்லது அறிவாளிகளான ஆணும் பெண்ணும் சேர்ந்து நல்வாழ்வு நடந்த முடிவதில்லை. ஆனது ஒன்றையும், ஆகாதது ஒன்றையும் இணைத்து அவர்களின் வாழ்க்கை முறையை ஜாதி முறை வேடிக்கை பார்த்து வருகிறது.

ஜாதி முறை நல்லதா? கெட்டதா? என்பதும் ஒரு கேள்விதான். இதற்குப் பதில் கூறுமுன், எதற்கு? என்று கேட்டுத்தான் பதிற்கூற வேண்டும். ஜாதி முறை சில ஜாதிகளுக்கு நன்மையாகத் தோன்றலாம். அதுவும் கானல் நீர்தான். சில ஜாதிகளுக்கு ஜாதி முறை தீமை தருகிறது. சுயநலத்தைக் கருதாமல் நாட்டின் பொது நலத்தைக் கருதும்பொழுது ஜாதி முறை தீமைதரும் என்றே கூறியாகவேண்டும்.

சமூக ஒற்றுமையின் மீதுதான் இந்நாட்டில் ஒரு வலுவான அரசியலை அமைக்க முடியும். பிளவுபட்ட மக்களால் ஒரு நல்ல அரசியலை அமைக்க முடியாது. இவ் வுண்மையை உணர்ந்த அரசியல் நிபுணர்கள், சமூக சீர்திருத்தத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், அறிஞர்கள் ஆகிய அனைவரும் நம் நாட்டின் எதிர்கால நலனைக் கருதி ரமூக ஒற்றுமைக்கு “ஜாதி முறை” அழிய வேண்டும் என்றே கூறி வருகிறார்கள்.

ஜாதி இரண்டொழிய வேறில்லை.”அது “இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்” என்பதுதான் என்றும், ஒழுக்கமுள்ளோர் அனைவரும் ஒன்றே என்ற பொருளில் “ஒன்றே குலமும்” என்றும், எல்லாம் எனது ஊர், எல்லோரும் எனது சுற்றத்தார் என்ற பொருளில், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் பழந்தமிழ் நூல்களில் அரும்புலவர்கள் பலர் ஜாதி முறையை வெறுத்துக் கூறியிருக்கின்றனர்.

அது மட்டுமா? வேதாந்தக் கருத்தை விளக்கிய விவேகானந்த சுவாமிகளும், சித்தாந்தக் கருத்தை விளக்கிய இராமலிங்க சுவாமிகளும் ஜாதி ஒழிய வேண்டும் என்று வற்புறுத்திக் கூறியிருக்கின்றனர். அவ்வளவோடு நின்று விடவில்லை. எல்லா ஜாதியினரும் நாயன்மார்களாகியிருக்கிறார்கள் என்று சைவ புராணம் கூறுகிறது. அதைப் போலவே எல்லா ஜாதியினரும் ஆழ்வார்களாகியிருக்கிறார்கள் என்று வைணவ புராணமும் கூறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தீண்டாமை அழியவும், ஜாதி முறை ஒழியவும் தெய்வ சம்மதமும் இருக்கிறது என்று புராண வரலாறுகளால் தெரிய வருகிறது. தீண்டாத ஜாதி, திருப்பாணாழ்வாரை, திருவரங்கப் பெருமானும்; திருநாளைப் போவார் நந்தனாரை, தில்லை நடராஜப் பெருமானும் திருமேனியோடு தழுவி தன்னுள் இரண்டறக் கலக்கும்படிச் செய்த அருட் செயல்தான் அது. என்ன விவாதம் இனி இருக்கிறது? ஒன்றுமில்லை.

ஐாதி முறையை ஒழிக்க 5 வழிகளிருக்கின்றன. முதலாவது ஜாதி முறையை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது பெயருக்குப் பின்னால் உள்ள பட்டப் பெயர்களை விடவேண்டும். மூன்றாவது எல்லோரிடமும் அன்பாய் பழகவேண்டும். நான்காவது சுத்தமாக இருக்கும் எவரோடும். எவ்விடத்தும் மகிழ்ச்சியோடு உண்ணவேண்டும். ஐந்தாவது கலப்பு மணம் செய்ய வேண்டும். இந்த 5 வழிகளாலும் ஜாதி முறையை ஒழிக்க இப்போது சிறிய அளவில் முயற்சிக்கப்பெற்று ஒருவாறு பலனும் அடைந்து வருகிறது. கலப்பு மணத்தை ஆத ரித்தும், நடத்தியும், நடத்தத் தூண்டியும், எழுதியும், பேசியும் வருகிறவர்களின் தொகை அதிகமாகி வருகிறது. ஜாதிக் கலப்பு மட்டுமல்ல, சமயக் கலப்பு, மொழிக் கலப்பு. மாகாணக் கலப்பு, தேசக் கலப்பு,நிறக் கலப்புத் திருமணங்கள்கூட நடைபெறத் தொடங்கிவிட்டன. பள்ளிகளில் படிக்க முடியாமை, பஸ்களில் ஏற முடியாமை முதலிய வைகள் அழிந்து ஒழிந்து வருகின்றன. ஐஸ்டிஸ் கட்சி தாழ்த்தப்பட்டவர்களை ஸ்தல ஸ்தாபனங்களில் உட்கார வைத்து பெருமைப்படுத்தியது. காங்கிரஸ் கட்சி தாழ்த்தப் பட்டவர்களை சட்டசபை தலைமைப் பதவியில் உட்கார வைத்து மற்ற ஜாதியினரை மரியாதை செய்யச் செய்து விட்டது. ஜாதி முறையும் அழியத் தொடங்கிவிட்டது. இனி எவராலும் அதைத் தடுத்து நிலைநிறுத்த முடியாது. நீங்களும் அது அழிய வேண்டும் என்று ஆசைப்படுங்கள். இன்றேல் சும்மா இருந்துவிடுங்கள். அது. அழியும் வேகத்தில் குறுக்கே நின்று தடுக்காதீர்கள். அதுவே நீங்கள் இந்நாட்டின் எதிர்கால நன்மையைக் கருதிச் செய்யும் பெருந் தொண்டாகும் எனக் கூறுவதோடு எனது பேச்சை முடிக்கிறேன்.

[‘ஜாதியும் வர்ணமும் என்ற தலைப்பில் 25-8-42-ல் பேசியது.]

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *