வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம்

4. பர்மாவும் அரிசியும்


பர்மா அரிசி என்றதும் என்ன அது? எங்கே இருக்கிறது? எப்போது வரும் என்ற கேள்விகள் நம் நாட்டு மக்கள் கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதை நான் நன்கறிவேன். அப்படிப்பட்டவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம், அவசரப்பட வேண்டாம்; சிறிது பொறுமையாயிருங்கள் என்பதுதான்.

பர்மா அரிசியைப்பற்றி அறிந்துகொள்ளுமுன் பர்மாவைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்து கொள்ளவேண்டும். பர்மா என்பது ஒரு அழகான நாடு. அது நம் நாட்டிற்கு வட கிழக்கு மூலையில் உள்ளது. கடல் வழியே 1000 மைல் தொலைவுள்ளது. மலைகளடர்ந்த நாடு, நீர் நிறைந்த நாடு, செழிப்பு மிகுந்த நாடு. தேவலோகத்தில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்று நாம் கேள்விப்பட்டிருக் கிறோமோ அவைகள் அனைத்தையும் நாம் பர்மாவில் காணலாம். அந்நாட்டின் பரப்பளவு நமது சென்னை மாகாணத்திலும் சிறிது அதிகம் என்றாலும் அந்நாட்டு மக்களின் எண்ணிக்கை ஒன்றேமுக்கால் கோடி சென்னை மாகாணத்தில் நம் தமிழ்நாட்டு மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் இரண்டரை கோடி ஆகும்.

பர்மாவின் அரசாட்சிக் காலம் 5. முதற் காலம் பர்மியர்கள் தங்கள் மன்னர்களால் ஆளப் பெற்ற காலம். இரண்டாவது காலம் அவர்கள் தமிழ்நாட்டு மன்னர்களால் ஆளப் பெற்ற காலம். மூன்றாவது காலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட காலம். நான்காவது காலம் ஐப்பானிய ஆட்சிக்குட்பட்ட காலம். ஐந்தாவது காலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மறுபடியும் திரும்பிய காலமாகும்.

பர்மா மிகச் சமீப காலம் வரை இந்தியாவோடு இணைக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலுள்ள பல மாகாணங்களைப் போல் பர்மாவும் இந்தியாவில் ஒரு மாகாணமாக இருந்தது. சிறிது காலத்திற்கு முன்புதான் அது இந்திய மத்திய ஆட்சியிலிருந்து விலகி ஒரு தனி நாடாகப் பிரிந்து சென்றது. அதன் பிறகுதான் அது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தும் விலகி ஜப்பானுக்கு அடிமைப்பட்டது.

பர்மாவின் மூலப் பொருள்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகிற்கே தேவையாக உள்ளது. எண்ணெய்யும், தேக்கும், நெல்லும் அதன் பெரிய மூலப் பொருள்களாகும். தமிழ் நாட்டிற்கு தஞ்சை, திருச்சி ஜில்லாக்கள் நெற் களஞ்சியமாக இருப்பதைப்போல இந்தியாவுக்கு பர்மாவே நெற்களஞ்சியமாக இருந்து வந்தது. பர்மா நாட்டில் மொத்த ஏற்றுமதியில் சரி பாதியை அது இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இந்திய மக்கள் இறக்குமதி செய்து வந்தனர். தென் அமெரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஸ்பெயினிலும், இதாலி நாட்டிலும் கூட நெல் விளைகின்றன. என்றாலும், உலகத்தில் அதிகமாக நெல் விளையும் நாடுகள் இந்தியா,பர்மா,சயாம்,இண்டோ சைனா ஆகிய நாடுகள் தான். இதிலிருந்து உலகத்தின் நெற் களஞ்சியம் நாம் வாழ்கின்ற தென்கிழக்கு ஆசியாதான் என நன்கு விளங்குகிறது. உலகிலேயே மக்கள் முதலிலிருந்து கையாண்டு வரும் உணவு அரிசி உணவு ஒன்றேயாகும்.

ஆசியாவில் தென் கிழக்கு நாடுகளிலும் பர்மா நாடு ஒன்று தான் நெல் விளைவில் உலகிலேயே முதன்மை ஸ்தானம் வகித்து வருகிறது. அந்நாட்டிற்கு இயற்கையானது பெருந்துணை செய்கிறது. பெரிய ஆறு, சிறந்த அணைக்கட்டு, நீர் ஊற்று, நில அமைப்பு, நல்ல மழை, அதிக உஷ்ணம் ஆகியவைகள் அங்கு பொருந்தியிருக்கின்றன. இதுவரை கூறியதிலிருந்து பர்மா நாட்டைப்பற்றி ஒருவாறு அறிந்து கொண்டிருப்பீர்களென்று நம்புகிறேன்.

நெல் விளைவைப்பற்றி இனி ஆராய்வோம். பர்மா நாட்டில் செல்வத்திற்கும், வியாபாரத்திற்கும், கைத்தொழிலுக்கும் மூலகாரணம் அந்நாட்டு நெல் விளைவு ஒன்றுதான் எனக் கூறலாம். அந்த நாட்டில் எந்தப் பாகத்திலும், எந்தப் பூமியிலும் நெல் விளையும். நல்ல நெல் விளைச்சல் உள்ள நாடுகளுக்கு வருடாந்திரம் 50 அங்குல மழை அதிகமான தாகும். ஆனால் அங்கு அதற்கு மேலும் மழை பொழி கிறது. நமது தமிழ் நாட்டில் வருடாந்திர சராசரி மழை 25 அங்குலமேயாகும்.

நமது நாட்டில் நெல் விளைய வைக்கும் முறைக்கும் பர்மா நாட்டில் நெல் விளைய வைக்கும் முறைக்கும் சிறிது வேறுபாடு உண்டு. அவற்றை நம் நாட்டு விவசாயிகள் கவனிப்பது பெரிதும் நன்மை தரும். அங்கு நெல் விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். பிறகு அவ்விதைகளை மற்றும் 24 மணி நேரம் தரையிலோ, கூடைகளிலோ வைத்து இலைகளாலும், தழைகளாலும் மூடி வைக்கிறார்கள். அது முளை கிளம்பத் தயாராகிறது.

10 ஏக்கர் நிலம் சாகுபடி செய்ய வேண்டியவர்கள் ஒரு ஏக்கர் நிலத்தை நாத்து சாகுபடி செய்யப் பக்குவப்படுத்துகிறார்கள். நாத்தங்கால் நிலத்தில் நம் நாட்டைவிட அதிகமாக நீர் தேக்கப்படுகிறது. நிலத்து மண் நன்றாக உழவு செய்யப்பெற்று சிறிதும் புல், பூண்டுகளில்லாமல் கவனிக்கப் பெறுகிறது. அதிகமாகத் தேங்கிய நீரை பூராவும் வடிய விட்டுவிடுகிறார்கள். பக்குவப்பட்டுள்ள நாத்தங்கால் நிலத்தில் முளை கிளம்பியிருக்கிற விதைகளைத் தெளிக்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் 10 கூடை விதைகள் தெளிக்கப்பெறுகின்றன. விதை தெளித்த நான்காம் நாள் ஒரு அங்குல உயரம் நீர் விடுகிறார்கள். 40 நாட்களுக்குள் அது 1-11/2 அடி உயரம் வளர்ந்துவிடுகிறது.

சம பூமியில் சில குண்டுகள் ஒரு ஏக்கர் அளவு வரை இருக்கின்றன. மலைப் பிரதேசங்களில் கால் ஏக்கருக்கு உட்பட்ட குண்டுகளே அதிகமாகும். உழவுக்கு நம் நாட்டு கலப்பைகளும் மாடுகளுமே பயன்படுத்தப் பெறுகின்றன. அதிகமாக உழ வேண்டிய பாகங்களில் மட்டுமே மேல் நாட்டு இயந்திரங்களைக் கொண்டு உழவு செய்யப்படுகிறது. நன்றாக எரு இடப்பெற்று, ஆழமாக உழுது பக்குவப் படுத்தப் பெற்ற நிலங்களில் நட்டய ஆரம்பமாகிறது. நாத்துக்கள் 1-1/2 அடி உயரம் வளர்ந்ததும் அவை பிடுங்கப் பெற்று, கத்தை கத்தைகளாகக் கட்டப்பெறுகின்றன. பெண்களும் குழந்தைகளும்தான் நடவு வேலைகளைச் செய்கிறார்கள். இதற்காக ஆண்களுக்குத் தரும் கூலி அளவு பெண்களுக்கும் தரப்படுகிறது. நாத்து நடுதலில் 6 முதல் 8 அங்குலம் வரை இடைவெளி விட்டு நடுகிறார்கள். சில பூமிகளில் 12 அங்குலம் இடைவெளி விட்டும் நடுகிறார்கள். நம் நாட்டில் இவ்வளவு இடைவெளி விட்டு நடுவதில்லை.

நெற்கதிர்கள் முற்றி நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி விடுகின்றன. அதாவது கார்த்திகை மாதம் முழுவதும் அங்கு அறுவடை செய்யும் வேலை நடைபெறுகிறது. இவ்விளைவுக்குப் ‘பனிக்கால விளைவு’ என்பது பெயர். 100-க்கு 98 பங்குகள் இக் காலத்திலேயே விளைந்து அறுவடை செய்யப்பெறுகின்றன. அறுவடை செய்யும் பக்குவத்தில் நீர் முற்றும் வடிய விடப்பட்டு நிலம் காய் விடப்படுகிறது. கையினால் சிறு கத்தியைக் கொண்டே அறுவடை நடைபெறுகிறது.

அறுவடையான நெற்கதிர்கள் கையினால் அடிக்கப் பெறுகின்றன. மூங்கிற் சல்லடைகள் 5 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டு சலிக்கப்படுவதால் கருக்காயும் நீக்கப் பெற்று, கல்லும் மண்ணுமின்றி சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது. இவ்வேலை நம் நாட்டில் நடைபெறுவதில்லை.

இவ்வாறு விளைய வைக்கப் பெறுகின்ற அந்நாட்டு நன்செய் நிலங்களின் எண்ணிக்கை அளவு 125 இலட்சம் ஏக்கராக்களாகும். 1836-ல் அங்கு இருந்த நன்செய் நிலங்கள் 173 இலட்சம். அதிலிருந்து 125 இலட்சம் ஏக்கராக்களாக நன்செய் நிலங்கள் வளர்ச்சியடைந்திருப்பது அந் நாட்டு வேகமான முன்னேற்றத்தையே காட்டுகிறது. இவ் வளர்ச்சிக்கும், விளைவிற்கும் பர்மியர்களின் உழைப்பு மட்டுமல்ல ; நம் நாட்டு மக்கள் உள்பட வெளி நாட்டு மக்கள் பலருடைய உழைப்பும் ஒரு பெருங் காரணமாகும்.

இனி அரிசி இயந்திரங்களுக்கு

விளைந்த நெற்கள் போவதைப்போல நாமும் போக வேண்டியதுதான். அந் நாட்டு மொத்த விளைவில் 100-க்கு 17 பங்கு உள்நாட்டுத் தேவைக்குப் போதுமானது. அவற்றை அவர்கள் வைத்துக்கொண்டு மீதி 83 பங்குகளை விற்பனை செய்துவிடுகிறார்கள். விற்ற நெல்கள் ஏற்றுமதி செய்யப் பெறுவதில்லை. அவை அரிசியாக்கப்படுவதற்காக இயந்திர சாலைகளுக்குச் செல்லுகின்றன. பர்மாவில் வாய்க்கால் வசதிகள் அதிகம். ஆகவே இயந்திர சாலைகளுக்கு நெற்களைக் கொண்டு போவதற்காக வண்டிப் பாதையையும், வண்டியையும் எதிர்பாராமல் வாய்க்காலையும் படகுகளையும் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். படகுகள் மூலம் அந்நாட்டின் எந்த பாகத்திற்கும் போக முடியும். 150 மைல் தூரத்திலுள்ள இயந்திரசாலை ஒன்றுக்குக் கூட நெற்கள் வாய்க்கால் வழியே செல்லுகின்றன. ஒரு படகு சுமார் 10 டன் நெற்களை ஏற்றிச் செல்லும். அதாவது 500 கூடையாகும். சிறிதளவு நெற்கள்தான் ரயிற் பாதை வழியாக இயந்திர சாலைகளுக்குச் செல்லுகின்றன. அந்தக் காலத்தில் இரயிற் பிரயாணம் செய்யும்பொழுது இரயிற் பாதைகளுக்கருகில் மலை மலையாக நெற்குவியல்களைக் காணலாம். அவைகளின்மீது சூரிய ஒளி படுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். மீண்டும் மழைக்காலம் வருவதற்குள் அவைகளை அள்ளி இயந்திர சாலைகளுக்கு அனுப்பிவிடுவார்கள்.

பர்மாவில் முதல் முதலாக அரிசி இயந்திரம் (ஸ்டம் மில்) வைத்தது பெஸ்ஸின் என்னும் இடத்தில்தான். முதலாவது இயந்திரம் வைத்து இன்றைக்கு 86 வருடங்களாகின்றன. அதன் பிறகு 36 வருடங்களில் அதாவது சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பர்மாவில் 54 மில்களாக வளர்ச்சியடைந்துவிட்டன. இப்போது ரங்கூன் அரசாங்கக் கணக்கின்படி அங்கு 700 இயந்திர சாலைகளிருக்கின்றன. பர்மாவில் நன்செய் நிலங்கள் வளர்ச்சியடைந்த வேகத்தைவிட இயந்திர சாலைகள் வளர்ந்த வேகம் மிக மிக அதிகமானதாகும். சற்று உயர்ந்தவிடத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அந்நாடு அரிசி இயந்திரமயமாகவே தோன்றும். உலகின் எந்தப் பாகத்திலும், எந்த நாட்டிலும் இவ்வளவு அரிசி இயந்திரக் கூட்டங்களை நம்மால் காண முடியாது.

700 மில்களில் 650 சிறியவை. என்றாலும் அவை நாள் 1-க்கு 10, 20 முதல் 100 டன் வரை அரிசி தரும். 40 மில்கள் நடுத்தரமானவை. அவை நாள் 1-க்கு ஒவ் வொன்றும் 400 டன்கள் அரிசி தரும். பிற 10 மில்களும் பெரியவை. இவற்றுள் 1 ரங்கூன் நகரத்தில் இருக்கிறது. அது நாள் 1-க்கு 1500 டன் நெல்களை அரைத்து 1000 டன் அரிசியாகத் தருகிறது. டன் ஒன்றுக்கு சுமார் 127 மூட்டை அரிசியாகும். அதாவது நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்தி 500 அரிசி மூட்டைகளைத் தருகிறது. 24 மணி நேரத்தில் 25,000 மூட்டை நெல்களை அது அரைத்துத் தள்ளுகிறது. நம் நாட்டில் நாள் 1-க்கு 500 மூட்டை நெற்களை அரைக்கும் இயந்திர சாலைகளை பெரிய இயந்திர சாலை என அழைத்து வருகிறோம். இதைப்போல் 50 மடங்குகள் அதிகமான நெற்களை அந்த இயந்திர சாலை ஒரு நாளில் அரைத்து விடுகிறது. உலகிலேயே பெரிய இயந்திர சாலை இது ஒன்றேயாகும். இந்த மில்லில் 50 படி நெல்லை சுத்தப் படுத்தவும், உடைக்கவும், அரைக்கவும், மெருகிடவும், தரம் பிரிக்கவும் எவ்வளவு நேரம் வேண்டும் தெரியுமா? 1,2, 3 அவ்வளவு நேரம்தான் பிடிக்கிறது. 60 எண்ணுவதற்குள் அதாவது ஒரு நிமிஷத்துக்கு 17 மூட்டைகள், மணிக்கு 1020 மூட்டைகள். நாள் 1-க்கு 25,000 மூட்டைகளை இந்த ஒரு மில் இந்த 5 விதமான வேலைகளையும் செய்து முடித்துவிடுகிறது. அது மட்டுமா? இயந்திரங்களில் மறைச் சுத்துக்களை சில அளவுகளில் வைத்து அரைப்பதன் மூலம் பல ரகமான அரிசிகளை இந்த இயந்திரமே உற்பத்தி செய்துவிடுகிறது. இம்மாதிரியான பெரிய அரிசி இயந்திரம் ஒன்று உலகில் எப்பக்கத்திலுமில்லை. பெரிய அரிசி இயந்திரம் ஒன்று வைத்திருப்பதிலும், அதிக அரிசி இயந்திரக் கூடங்களை வைத்திருப்பதிலும், அதிகமாக நெல் உற்பத்தி செய்வதிலும் உலகத்திற்குத் தலைமை வகிக்கும் பெருமை பர்மா நாட்டிற்கே கிடைத்திருக்கிறது எனக் கூறலாம்.

அரிசிகளின் தினுசுகளைப் பாராமல் நாம் இயந்திர சாலைகளை விட்டுப் புறப்படுவது நல்லதல்ல. நம் நாட்டில் கார், சம்பா, சிறுமணி என்று பல ரகங்கள் இருப்பதுபோல அங்கும் பல தினுசுகள் உண்டு. அவற்றுள் ‘ங்காசீன்’ ‘ஏமாட்டா,’ ‘மிடான்’ என்ற மூன்று தினுசுகளே மிக அதிகம். இவற்றுள்ளும் பல உட்பிரிவுகள் உள்ளன. அரிசி இயந்திர சாலைகளில் 6 வகையான புழுங்கலரிசிகளும் 12 வகையான பச்சரிசிகளும் தயார் செய்யப்பெறுகின்றன. இதிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. இத்தினுசுக்களை மக்கள் தங்களின் அறிவைக் கொண்டும் அனுபவத்தைக் கொண்டுமே கண்டுபிடித்துக் கூறுகிறார்கள். இது தவிர சோதனைக் கருவிகள் எதுவும் இதற்காகக் கையாளப் பெறுவதில்லை. பர்மாவுக்குச் சென்று அங்கு இவைகளைப் பார்த்து வந்த ஒரு ஜெர்மனியன், ‘பூதம்தான் பர்மாவில் நெல்லை விளைவிக்கிறது. பூதம்தான் அதைப் பாதுகாக்கிறது. பூதம்தான் அரிசித் தொழிலையும் செய்கிறது’ என்று வியப்போடு கூறினான். இச் சொற்களிலிருந்து பர்மாவின் அரிசித் தொழில் மனிதனுடைய அறிவு, ஆற்றல் வலிமைகளுக்கு அப்பாற்பட்டது என்பது அவனுடைய கருத்து என்று நமக்கு நன்கு புலப்படும்.

அரிசி ஏற்றுமதியையும் நம்மால் முடிந்த வரை கவனிக்க வேண்டியதுதான். பர்மா நாடு 1941-ல் தன் னுடைய மொத்த உற்பத்தியில் சரிபாதி அரிசியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. அதாவது 125 இலட்சம் ஏகராநிலத்தில், 70லட்சம் டன் அரிசி உண்டாக அதில் 35 இலட்சம் டன் அரிசியை அது வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அதன் விற்பனைத் தொகையோ 33 கோடி ரூபாய்கள். இதிலிருந்து டன் 1-க்கு 95 ரூபாய் என்றும் 50 படி கொண்ட அரிசி மூட்டையின் விற்பனை விலை சராசரி ரூ.7-10-0 ஆகிறதென்றும் நமக்குத் தெரிய வருகிறது. இந்த 35 லட்சம் டன் அரிசியில் 25 லட்சம் டன் அரிசி ரங்கூன் துறைமுக வழியே ஏற்றுமதி செய்யப் பெற்றிருக்கிறது. இதனால் அத்துறைமுகத்தின் முதன்மையும் சிறப்பும் நன்கு விளங்கும்.

பர்மா அரிசியின் பெரிய வாடிக்கைக்கார நாடு இந்தியா தான். பர்மா அரிசியின் ஏற்றுமதியில் 100-க்கு 4 பங்கு வீதம் மேல்நாடுகளுக்குச் சென்றது. 5 பங்கு வீதம் சைனா வாங்கியிருக்கிறது. 6 பங்கு வீதம் ஜெர்மனிக்கு அனுப்பப் பெற்றிருக்கிறது. 8 பங்கு வீதம் பிராங்கும் சிங்கப்பூரும், மலேயாவும் சேர்ந்து வாங்கியிருக்கின்றன. 12 பங்கு வீதம் சிலோனுக்கு ஏற்றுமதி செய்யப் பெற்றிருக்கிறது. இந்தியாவோ 49 பங்கு வீதம் வாங்கி இருக்கிறது. இதிலிருந்து பர்மாவில் நெல் விளைவிக்கும் கைத்தொழிலுக்கும் வியாபாரத்திற்கும் இந்தியா எவ்வளவு முக்கியமானதாக இருந்து வருகிறது என்பதும், இந்திய மக்களின் உணவுக்குப் பர்மா அரிசி எவ்வளவு முக்கியமாக இருந்து வந்திருக்கிறது என்பதும் நன்கு விளங்குகிறது. இந்த இரண்டு நாடுகளுக்குள் உள்ள தொடர்பு எப்போதாவது அற்று விடுமானால், இரு நாடுகளும் துன்பத்தையே அனுபவிக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

4 வருட ஐரோப்பியப் போரும். 3 வருட பசிபிக் யுத்தமும், 9 வருட சைனா சண்டையும் வெற்றிகரமாக முடிந்து இரண்டு வாரங்களே ஆகின்றன. நேசக் கட்சியினரின் இப்பெரிய வெற்றியைக் கண்டு உலக முழுதும் மகிழ்ச்சி அடைகிறது. இம்மகிழ்ச்சியில், இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் பெரும் பங்கு உண்டு என்று மகிழ்ந்து கூறலாம்.

நிலச் சீர்திருத்த வேலைகளும், நெற்பயிர் விளைவிக்கும் வேலைகளும் பர்மாவில் வெகு துரிதமாக நடைபெறுகின்றன. இந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாத அறுவடைகளில் பெரும் பகுதி அரிசியை 1946, ஜனவரி, பிப்ரவரி மாதங் களில் அது ஏற்றுமதி செய்யும். நாமும் இறக்குமதி செய்வோம் என்று நம்பி எதிர்பார்க்கலாம். இதன் மூலம் நமக்கும், பாமாவுக்கும் முன்பு இருந்த பழைய நட்புத் தொடர் மீண்டும் இணைக்கப்படுகிறது என மகிழ்ச்சியோடு கூறி, இந்த நல்ல செய்தியை இத்துடன் நிறுத்துகிறேன்.

(29-8-1945-ல் பேசியது.)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *