வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம்

6. பொங்கல் விழா


ஆண்டுகள் தோறும் தை பிறந்த முதல் நாளிலே நாம் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகிறோம். இப்பரந்த உலகில் இவ் விழாவைக் கொண்டாடும் வழக்கம் தமிழ் நாட்டிலும் அதைச் சார்ந்துள்ள இடங்களிலும் மட்டுமே காணப்படுகிறது. இவ்வழக்கம் தோன்றிய காலத்தைத் திட்டமாகக் கூற முடியவில்லை என்றாலும் 2,000 ஆண்டு களுக்கு முன்புகூட இவ்வழக்கம் நம் தமிழ் நாட்டில் இருந் திருக்கிறது என்று நன்கு தெரிகிறது.

இப் பொங்கல் விழாவைக் கொண்டாடும் காலமானது சூரியன் தென்கிழக்கில் உதிப்பதிலிருந்து மாறி வடகிழக்கி லிருந்து உதிக்க நோக்கி, திசை திரும்பும் காலம். நல்ல மழை பெய்து நாடு சிறப்பெய்தியிருக்கும் காலம். பூவும். பிஞ்சும், காயும், கனியும் பொலிவுபெற்று விளங்கும் காலம். பனிக்காலத்திற்கும், வேனிற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம். செந்நெல்லும், தீங்கரும்பும் விளைந்து வீட்டிற்கு வந்து சேருங்காலம். உழைத்த மக்கள் ஓய்வு பெறுங்காலம். மணப்பருவமுற்ற மக்கள் மணம் பெறத் தொடங்கும் காலம் ஆகும்.

இந்த அருமையான காலத்தில்தான் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. இந் நன்னாளிலே வாழும் இடங்கள் அனைத்தும் தூய்மைப் படுத்தப் பெறும். மண் பூசுதலையும், சுண்ணாம்பு அடித்தலையும் எல்லோர் இல்லத் திலும் காணலாம். பழைய பொருள்கள் அப்புறப்படுத்தப் பெறும். குப்பை கூளங்கள் எரிக்கப் பெறும். புதுப் பொருள்கள் கையாளப் பெறும். இதனால் மனையும் புது மனையாகத் தோன்றும்; சுருக்கமாகக் கூறுமிடத்து மக்கள் தங்கள் வாழ்வையே புது வாழ்வாகத் தொடங்குவர் எனக் கூறலாம்.

புதிதாக விளைந்து வீட்டிற்கு வந்த நெல்லானது, அரிசி யாகும். புதிதாக விளைந்து வந்த கரும்பும் சர்க்கரையாகும். பாலையும், நெய்யையும் பசுவும் தன் பங்காகக் கொடுக்கும். அழகிய பெண்கள் புனலில் மூழ்கி, புது ஆடை அணிந்து, பூக்களை முடித்து, புதுவளை பூண்டு, இவைகளை புதுக் கலத்திலே ஒன்றாகச் சேர்த்து, பொங்கலாகப் பொங்கி வழங்குவர். ஆடவர் அருந்தி மகிழ்வர். ஏழை மக்களுக்கு அன்பு கலந்து வழங்கியும் மகிழ்ச்சிப் பெருக்கடைவர்.

உழைத்த மக்கள் ஊதியமாகவும், வறுமை வாய்ப்பட்டவர்கள் கொடையாகவும் நெல்லும், கரும்பும் பெறுவர். ஏழை மனையிலும் செல்வர் மனையிலும் இந்நாளில் பொங்கல் பொங்கும். யாவரும் இனிப்புச் சோற்றை உண்டு இன்பத்தில் திளைப்பர். உழைத்த மக்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ச்சியடையும் திருநாளே இத் திருநாள். நெற்கதிரும், தீங்கரும்பும் வயல்களில் முற்றி யிருக்கும்போது ஆண்களின் உள்ளம் மகிழும்; அதைவிட அதிகமாகவே பொங்கல் குதித்துப் பொங்கும்பொழுது பெண்களின் உள்ளம் பொங்கி எழுந்து மகிழும்.

இப் பெருநாளும், திருநாளும் ஆகிய நந்நாளில் தமிழ்ப் பெருமக்கள் தங்கள் தங்களின் மக்கள், மருமக்கள், உற்றார் உறவினர் ஆகிய அனைவரையும் அன்போடும். முறையோடும் அழைத்து தங்கள் மகிழ்ச்சியில் அவர்களையும் பங்குபெறச் செய்து மகிழ்வார்கள். குடும்பத்திலுள்ள பெரியவர்களைக் கிழக்கு நோக்கி நிறுத்தி அவர்களின் திருவடி களில் அக்குடும்பத்தார் அனைவரும் வணங்கி எழுவார்கள். பெரியவர்கள் இளையவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறி மகிழ்வார்கள். இது பொங்கல் திருநாளின் சிறந்த வழக்கமாகும். அறிவு நிரம்பிய பெரிய குடும்பங்களில் நடைபெறுகிற இந்நிகழ்ச்சியானது எவர்க்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்நாளில் அருகில் இல்லாமல் தொலைவில் இருக்கின்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துச் செய்திகளை அனுப்புவார்கள். அவ்வாழ்த்துதல் அக்குடும்பத்தினரை மட்டும் வாழ்த்துவதாயிராமல் மிகவும் பரந்து விரிந்த நோக்கத்துடன் வாழ்த்துவதாயிருக்கும். இந்நாளில் பலரும் தங்கள் எண்ணத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றி வைக்க வேண்டுமென கடவுளையும் பெரியவர்களையும் வேண்டுவது உண்டு. நண்பர்களையும் அவ்வாறு விரும்புங்கள் என வேண்டுவதும் உண்டு. நாடு, மொழி, மக்களை வாழ்த்துவதும் உண்டு. அப்படிப்பட்ட பொதுவான வாழ்த்துதல் ஒன்றை இப்போது நான் எடுத்துக் காட்டுகிறேன்.

தமிழர் திருநாள்

வாழிய பொங்கல் வாழிய தமிழ்மொழி
வாழிய தமிழகம், வாழிய மக்கள்
மஞ்சளும் இஞ்சியும் வானுயர் கரும்பும்
செந்நெல் அடிசிலும் தீங்கனி பிறவும்
நிலமகள் தந்த வளனெனப் போற்றும்
செந்தமிழ்த் திருநாள் சிறப்புற வந்ததால்
பொங்குக பொங்கல் எங்ஙணும் நன்குற ;
தமிழ்மொழி தமிழ்க்கலை தமிழர் தம்நாடு
உரிமை பெற்று உலகினில் மிளிரவும்
ஆண்மை சிறக்கவும், அறம்பல பெருகவும்
நாடும் மக்களும் நலமெலாம் பெறவும்
வாழிய பொங்கல் வளம்பல பொழிந்தே

என்பதாகும்.

இதோடு இப்பொங்கல் விழாவில் முதல் நாள் விழா முடிவு பெறுகிறது. அடுத்த நாள்.

நெல்லும் கரும்பும் விளைந்து வீட்டிற்கு வந்தது மக்கள் உழைப்பினால் மட்டுமா? அல்ல; மாடும் இவ்விளைவிற்கு சரி பங்கு உழைத்திருக்கிறது. ஆகவே மக்கள் பொங்கல் விழாவைப் போலவே, மாட்டுப் பொங்கல் விழாவும் மறுநாள் கொண்டாடப்படும். மாட்டுக் கொட்டில்களைத் தூய்மைப் படுத்தி, மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றிற்கும் வண்ணம் பூசி, பூவும், பொட்டும் இட்டு, அன்றும் புதுப் பொங்கல் பொங்கி, ஆடவரும், பெண்டிரும் இரு கைகளாலும் இனிப்புச் சோற்றை அள்ளி, அள்ளி அவைகளுக்கு ஊட்டி மகிழ்வர். மக்களைப்போலவே மாடுகளும் தங்கள் உழைப்பின் பலனை உண்டு மகிழும்படிச் செய்வதுதான் மாட்டுப் பொங்கல் விழாவின் கருத்தாகும். இத்துடன் பொங்கல் விழா முற்றுப் பெறுவதில்லை.

நெல்லும் கரும்பும் விளைந்து வந்தது தன் உழைப்பினால் தான் என்று மனிதன் நினைப்பானாம். தன் உழைப்பினால் தான் விளைந்தது என்று மாடும் எண்ணுமாம். மனிதனைவிட தனக்கு அதிக வலிமை உண்டென்று மாடு நினைக்குமாம். மாட்டைவிட தனக்கு அதிக வலிமை உண்டென்று மனிதன் நினைப்பானாம். இதில் எது சரி? எப்படி முடிவு கட்டுவது ? இதன் முடிவை கண்டுபிடித்துக் கூறுவதற்காகத்தான் மூன்றாம் நாள் சல்லிகட்டும் விழா நடைபெறுகிறது.

திறந்த வெளிகளிலே காளைகளை அவிழ்த்துவிடுவார்கள். அக்காளைகளை இளைஞர்கள் விரட்டிப் பிடிப்பார்கள். பிடிபட்ட காளைகளின் கொம்புகளில் கட்டப்பெற்றுள்ள பொருள்களைப் பிடித்த இளைஞர்கள் பரிசாகப் பெறு வார்கள். இக்காட்சிகளைப் பெண்டிரும் பிள்ளைகளும் பெரி யோரும் கண்டு களிப்பார்கள். காளைகளை அடக்கும் காளை களையே கன்னிப் பெண்கள் கணவனாக ஏற்பார்கள். இவ்வழக்கம் இன்றும் சில கிராமங்களில் கையாளப்பெற்று வருகிறது. பிடிபடுவதற்காக என்று மாடுகளும் பிடிப்பதற்காக என்று மக்களும் பல கிராமங்களுக்குச் சென்று வருவது உண்டு. இந்த நாட்களில் அந்தந்த கிராமங்களில் வீரங்கலந்த ஒரு தனியழகு தோன்றும். மனிதனை அடக்க மாடும், மாட்டை அடக்க மனிதனும் போராடுகிற துணிகரக் காட்சியானது வீரத்தின் உச்ச நிலையை நமக்கு அறிவிக்கும்.

முடிவு

2000 ஆண்டுகளுக்கு மேலாக இவ்விழா நடை பெற்று வந்தும் கூட வெற்றி பெற்றது மாடா? மனிதனா ? என்ற முடிவிற்கு இன்னும் வர முடியவில்லை. மாடுகளை அடக்கிய மனிதர்களும், மனிதர்களை அடக்கிய மாடுகளும் உண்டு. முடிவு கூறுவது எளிதல்ல என்றாலும் கூறலாம். வாழ்வுக்கு உதவுவது ஆணா? பெண்ணா? உழவுக்கு உதவுவது மாடா? மனிதனா? என்ற கேள்விக்குப் பதில் என்ன? ?

ஆணும் பெண்ணும் சேராவிடில் வாழ்வு இல்லை; மாடும் மனிதனும் சேராவிடில் உழவில்லை என்பது தானே. ஆம் அதுதான் முடிவு. இவ்வுண்மையை நமக்கு அறிவிப்பதற்காகத் தான் மாடு, மனிதன், கலப்பை இவை மூன்றும் சேர்ந்த ஏர் ஒன்றை ஒரு உயிராகக் கற்பனை செய்து அதற்கு

கால்பத்து, கண் ஆறு, வாலிரண்டு, வயிறு மூன்று

என ஒரு புலவர் கூறியிருக்கிறார். இதனால் உழவுத் தொழில் என்பது மாடும் மனிதனும் சேர்வதே என நன்கு விளங்கு கிறது. இப்பொங்கல் விழாவானது இல் வாழ்வைச் சிறப்பித்து நல் உழவைப் போற்றி, வீரத்தைப் பாராட்டுகிறது. அது மட்டுமல்ல. உழைப்பையும்,வாழ்வையும், வீரத்தையும் ஒன்றாகவே பிணைத்துக் காட்டுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இச்சிறந்த கருத்துக்களை உள்ளமைத்து இப்பொங்கல் பெருநாளைக் கொண்டாடச் செய்த முன்னோர் களின் அருஞ்செயலை கருத்தூன்றிக் கவனிக்கும் பொழுது நமது உள்ளம் மகிழ்ச்சிப் பெருக்கை அடைகிறது.

இத்திருநாளில் ‘பொங்கல் பொங்குக’ என்று வாழ்த்துவது வழக்கம். இது பொங்கற் சோற்றை மட்டும் குறித்துக் கூறுவதல்ல. இது பல் பொருள்களை உள்ளடக்கியது. பண்டைக் காலத்தில் ஒளவை மூதாட்டி சோழ மன்னனை வாழ்த்தும்போது, வரப்புயர’ என்று மட்டுமே வாழ்த்தினான்.

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயர்வான்

என்பது அதன் பொருள். அதுபோலவே பொங்கல் பொங்குக, என்பதிலிருந்து நாடு செழிக்க வேண்டும்; மழை பொழிய வேண்டும். நீர் நிறைய வேண்டும். உரம் பெருக வேண்டும். உழைப்பு வலுக்க வேண்டும். விளைவு சிறக்க வேண்டும். வீட்டிற்கு வந்து சேரவேண்டும். மனைவி மக்கள் மகிழ்ந்து பொங்குகின்ற பொங்கல் பொங்க வேண்டும் என்று யாவுங் கூறியதாகப் பொருள்படும்.

இரண்டாம் நாள் பட்டிப் பெருக வேண்டும். பால் பானை பொங்க வேண்டும் என வாழ்த்துவார்கள். பட்டிப் பெருகினால் உரம் பெருகும் என்பதும் பால் பானை பொங்கினால் மனைவாழ்வு பெருகும் என்பதும் கருத்து.

பொங்குதல் என்பது பெருகினால் அன்றி நிகழாது. நீர் பெருகினால் பொங்கும். பால் பெருகினால் பொங்கும். சோறு பெருகினால் பொங்கும். மனம் பெருகினால் பொங்கும் இதனால் பொங்க வேண்டுமென்று வாழ்த்துவது பெருக வேண்டும் என்று வாழ்த்துவதாகவே இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்களாகிய நாம் பொங்கத் பெருநாளும்,தமிழ்த்திருநாளும் ஆகிய இந்நாளில் ஒருவருக் கொருவர் பொங்கல் வணக்கம் கூறி பொங்குக பொங்கல் என்று வாயாரக் கூறி வாழ்த்துவோமாக.

நாடும் மழையும் நலமாய்ப் பொங்கட்டும்
விளைவும் உழைப்பும் விரைவாய்ப் பொங்கட்டும்
கல்வியும் அறிவும் கலந்து பொங்கட்டும்
கைத்தொழில் வாணிபம் கருத்தாய்ப் பொங்கட்டும்
சிறப்பும் செல்வமும் சேர்ந்து பொங்கட்டும்
உண்மையும் ஒழுக்கமும் ஓங்கிப் பொங்கட்டும்
அன்பும் அறமும் அழகாய்ப் பொங்கட்டும்
பசியும் பிணியும் பறந்து ஒழியட்டும்
வீரமும் ஆண்மையும் விரைந்து பொங்கட்டும்
ஒற்றுமை வலிமை உயர்ந்து பொங்கட்டும்
அன்னியன் படையெடுப்பு அழிந்து ஒழியட்டும்
அனைவர் உள்ளமும் மகிழ்ந்து பொங்கட்டும் பொங்கட்டும்…பொங்கட்டும்.

எங்கும் பொங்கட்டும் வாழிய பொங்கல்……

வணக்கம் பல.

(13–1- 45-ல் வாழ்த்தியது)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *