வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம்

7. ஐப்பான் மெயின் காம்ப்!


அன்பர்களே ! உங்களிற் பலர் ஜெர்மனியின் மெயின் காம்பைப் பற்றி அறிந்திருக்கக்கூடும். ஆனால், ஜப்பா னுடைய மெயின் காம்பைப் பற்றி அறிந்திருக்க வழியே இல்லை. ஏனெனில், அது அவ்வளவு முன்னேற்பாட்டுடன் மறைவாக பாதுகாக்கப் பெற்றிருந்தது. அதன் சுருக்கத்தை உங்களுக்குச் சொல்லுவதும், அந்நாட்டு அரசியற் குணஞ் செயல்களை விளக்குவதுமே இன்றைய எனது பேச்சாகும்.

‘தனகா மெமோரியல்’ என்றாலும், ‘ஜப்பானின் மெயின் காம்ப்’ என்றாலும் இரண்டும் ஒன்றேயாகும். தின்கா என்பவர் ஜப்பானிய ராஜ்ஜியத்தின் முதல் மந்திரியாக 1927-ல் இருந்தவர். அவர் எழுதி வைத்த அறிக்கையே தனகா ஞாபகச் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. அவ்வறிக்கையே ஜப்பானுடைய போர்க் கொள்கையாகவும், போர்த்திட்டமாகவும் விளங்குகிறது. அது சக்ரவர்த்தி மீஜி அவர்களால் ஒப்புக்கொள்ளப் பெற்று, கையாண்டு வந்து, நமக்கு விட்டுப் போயிருக்கிற திட்டமாகும் என்று மந்திரி தனகா அவர்கள் வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள்.

நாட்டுப்பற்று எங்கும் மிகுந்துள்ள இக்காலத்தில், தமிழ் மக்களாகிய நாமும் பிறநாட்டு மக்களின் கொள்கைகளையும் திட்டங்களையும் அறிந்துகொள்வது நலமாகும். அதிலும், இந்தியாவிற்கு விடுதலை அளிக்க உழைப்பதாகக் கூறுகிற ஜப்பானிய நாட்டின் கொள்கையை அறிந்து கொள்வது பின்னும் அதிக நன்மையை உண்டாக்கும் என்பது எனது எண்ணம்

ஒருவன் தானும் தன் குடும்பமும் நல்வாழ்வு வாழ வேண்டுமென ஆசைப்படுவது நியாயமாகும். ஒரு நாடு முன்னேற்றமடைய ஆசைப்பட்டு முயற்சி செய்வதும் நீதியாகவே கருதப்படும். ஆனால், பிறரை வதைத்து, துன்புறுத்தி, அழுத்தி, நசுக்கி அதன் மூலம் வாழ எண்ணுவது அநீதியாகும். அதிலும் நேர்மையான போர் இன்றி மறைவான திட்டங்களின் மூலம் வஞ்சனையாக நாடு கவர்வது கொடுமையாகும். அதிலும் ஆசியாவிற்கே விடுதலை பெற வழிசொல்லித் தருகிற ஜப்பானிய அரசாங்கம் இம் மாதிரியான திட்டத்தைக் கையாள்வது பெருங் கொடுமை யாகும். அப்படிப்பட்ட அந்தத் திட்டத்தையும் கொள்கை யையும் கருத்தூன்றிக் கவனிக்குமாறு வேண்டுகிறேன்:

நமது தற்காப்பிற்காகவும், கிழக்கு ஆசியாவிலுள்ள மற்றவர்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்கு வதற்காகவும் ஜப்பான் உயிரையும் ஆயுதங்களையும் உபயோகிக்கும் முறையை அனுசரித்தாகவேண்டும். இம்முறையை நாம் அனுசரிக்கும்போது அமெரிக்காவின் எதிர்ப்பையும் சைனாவின் சண்டையையும் எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.

சைனாவை நமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரவேண்டு மானால், நாம் முதலில் அமெரிக்காவை அழித்து ஒழிக்க வேண்டும். சைனாவுடன் போரிட்டு ஜெயிக்கு முன்னே நாம் மஞ்சூரியாவையும், மங்கோலியாவையும் ஜெயிக்க வேண்டும். உலகத்தை ஜெயிக்க முதலில் சைனாவை ஜெயித்தாக வேண்டும். சைனாவை ஜெயித்துவிட்டால், தென் கடல் நாடுகளும், பிற ஆசிய நாடுகளும் நமக்கு பயந்து நம்மிடம் சரணடைந்துவிடும்.

தொழில் என்ற முறையிலும், வர்த்தகம் என்ற முறையிலும் நாம் மஞ்சூரியாவிற்குள்ளும், மங்கோலியாவுக்குள்ளும் நுழையவேண்டும். பின்பு அங்கு நாம் பெரிய அளவில் குடியேறவேண்டும். பிறகு அதையே தளமாக உபயோகிக்கவேண்டும். அங்கிருந்தே சைனாவின் பல பாகங்களுக்கும் பரவி, ஆங்காங்குள்ள மூலப் பொருள்களைக் கைப்பற்றித் தீரவேண்டும். இவை முடிந்த பிறகு அங்கிருந்தே இந்தியாவிற்கும், சிரியா, ஆசியா, மத்திய ஆசியா, ஐரோப்பாவில் கூட படை எடுக்கவேண்டும். இப்பொழுது ஐப்பானின் தேசீய பலம் வளர்ச்சியடைவதற்கு பரந்த நிலங்கள் அதிகமாகத் தேவையாகும்.

இத் திட்டங்கள் நிறைவேறுவதற்கு இராணுவ இலாகாவின் இரகசிய நிதியிலிருந்து 10 லட்சம் எண் செலவழிக்க வேண்டும். ஓய்வு பெற்றிருக்கிற 400 இராணுவ உத்தியோகஸ்தர்களை சைனாக்காரர்களாக உருமாற்ற வேண்டும். அவர்களை உபாத்தியாயர் தொழிலுக்கு என்று மங்கோலியாவின் உள்ளும், அதற்கு வெளியிலும் வேலை செய்ய அனுப்பி வைக்க வேண்டும். இவர்கள் மூலமாக மங்கோலிய அரசன் நம்பிக்கையை எளிதில் பெறலாம். ஜப்பானின் தேசீய நன்மைக்கும் 100 வருட காலத்திற்கு அடிகோலி விட்டதாகவும் ஆகும்.

கொரியர்கள் நமக்கு முன்பு தொந்தரவு கொடுத்து வந்தவர்கள். இப்போது அவர்களை நம்பலாம். அவர்களிற் பலரைச் சைனாவிற்குள் அனுப்பி, நிலங்களை வாங்கி, நெல் சாகுபடி செய்யும்படி செய்ய வேண்டும். இதற்கு நாம் அவர்களுக்குக் கூட்டுறவு மூலமும், ரயில்வே மூலமும் நிறையப் பொருளுதவி செய்யவேண்டும். இது நமது உணவுத் தொல்லையை அடியோடு போக்கிவிடும்.

கொரியர்கள், கலிபோர்னியாவிலும் தென்-அமெரிக்காவிலும் குடியேறியிருக்கிற ஜப்பானியர்களுக்கு மாறுபட்டவர்கள். அவர்கள் தற்காலம் சைனாக்காரர்களைப் போல இருப்பதால் நமக்கு நன்கு பயன்படுவார்கள். ஆனால், அவர்களின் ஜனத்தொகை 25 லட்சத்திற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மேற்போகு மானால், அவர்களிற் சிலரை நமது இராணுவத்தில் சேர்த்துக் கொண்டு அவர்களைக் கொண்டே அவர்களை அழுத்த வேண்டும். இப்படி இம்சிக்கும் இராணுவத்தினர்களை சைனாக் கொரியர்களென்றோ, ஜப்பானியக் கொரியர்க ளென்றோ அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. “ஆட்டுத் தலையை விளம்பரமாக வைத்துக்கொண்டு, நாய்க் கரியை நம்மால் எப்போதும் விற்க முடியும்” என்று கூறியிருக்கிறார் ஜப்பானிய மந்திரி தனகா என்பவர். மேலும், தமது அறிக்கையில் கூறுவதைக் கேளுங்கள்:

பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும், வெற்றிக்கும் போக்குவரவு வசதிதான் தாயாக இருக்கிறது. நமது ரயில் பாதைகள் எல்லாம் அநேகமாக தென் மஞ்சூரியாவிலேயே இருக்கின்றன. வட மஞ்சூரியாவில்தான் அதிக செல்வங்கள் இருக்கின்றன. அங்கு ரயில் வசதியில்லாமையால் அச் செல்வங்களை நாம் அனுபவிக்க முடியவில்லை. தேசீய பாதுகாப்பிற்கும் அங்கு ரயில் வசதிகள் வேண்டும். அத்தகைய வசதியை உண்டு பண்ணினால் ஜப்பானியர்களை வட மஞ்சூரியாவுக்கு அதிகமாகக் குடியேறும்படி செய்யலாம்.

மஞ்சூரியாவின் இருதயமும், மங்கோலியாவின் இருதயமும் போன்ற இடங்களில் நமது இரயில் பாதைகளை அமைக்கவேண்டும். அதன்மூலம் நாம் சைனாவில் ராணுவ ராஜீய பொருளாதார முன்னேற்றங்களை அழிக்கலாம். ரஷ்யர்களுடைய செல்வாக்கையும் பலத்தையும் பரவ விடாமலும் தடுக்கலாம். இந்த இரயில் பாதைத் திட்டமே நமது தேசீய போர்த்திட்டத்தின் முதல் திட்டமாகும்.

பெந்தைல் மாகாண மக்களுக்கு பணக் கஷ்டம் அதிகமாக இருக்கிறது. நாம் அவர்களுக்கு உதவி செய்தா லொழிய வேறு வழி அவர்கட்குக் கிடையாது. இது நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். மஞ்சூரியா மங்கோலியா இரயில் பாதைகளை இச்சமயத்தில் அமைத்துக்கொண்டு பிறகு அம் மாகாண பாங்குகளின் மூலம் அவர்கட்கும் பண உதவி செய்ய முடியும்.

ரஷ்யாவானது சைனா ஈஸ்டர்ன் ரயில்வேயை வலுவாக்கி அதன் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் திட்டத்தை நிறைவேற்ற எண்ணியிருக்கிறது. இதற் காகவே கிழக்கிலும் மேற்கிலும் இந்த ரயில்வேயை ரஷ்யா நீட்டியிருக்கிறது. அது செய்யும் ஒவ்வொரு செயலும் நமது முன்னேற்றத்தையும், தென் மஞ்சூரியா ரயில் வளர்ச்சியையும் தடைப்படுத்தவே செய்யும்.

ஆகவே, ரஷ்யாவினுடைய தென் மஞ்சூரியாவின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக பாவனை செய்துகொண்டே, வட மஞ்சூரியாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்து அங்குள்ள சிறந்த மூலப் பொருள்களை அள்ளிக்கொண்டு வந்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம். சைனாவின் செல்வாக்கைத் தெற்கே பரவவிடாமலும், ரஷ்யாவின் செல்வாக்கை வடக்கே பரவ விடாமலும், தடை செய்ய முடியும். இவைகளைச் செய்யும்பொழுது நாம் ரஷ்யாவுடன் வஞ்சனையாகவே சிநேகமாயிருக்க வேண்டும். காட்டா மந்திரி சபையின் காலத்தில் மந்திரி பாரன் கோட்டா அவர்கள் “ஜாபி”யை ஜப்பானுக்கு வரவழைத்து ராஜ தந்திர உறவு பற்றிப் பேசியதும் இதற்காகவே யாகும்.

“டுங்கிலியோவிலிருந்து – ஜெஹோல் வரை நமது ரயில் பாதையைப் போடவேண்டும். அது 447 மைல் நீளத்தில் அமையும். இதற்கு 5 கோடி எண் செலவிட்டால் போது மானதாயிருக்கும். இது மிக மிக முக்கியமானதோடு ஜப்பானின் வருங்கால செல்வமுமாக இருக்கும். அந்த ரயில் திட்டம் நிறைவேறினால், அங்குள்ள ஏராளமான நஞ்சை நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் மங்கோலியாவுக்குள் நமது ஜனங்கள் 2 கோடிப் பேர் குடியேற முடியும். 20 லட்சம் ஆடுமாடுகளை அங்கு மேய்க்கலாம். ஆடு மாடுகளின் ஏற்றுமதி வர்த்தகமும் இதனால் அதிகமாகும். ஜப்பானில் ஒரு ஆடு தருகிற கம்பளி மயிரைவிட அங்கு 3 மடங்கு அதிகமாகத் தரும். ஆஸ்ட்ரேலியாவின் கம்பளியைவிட அதிக நயமானதாக இருப்பதோடு விலையில் மலிவானதாகவும் இருக்கும். ரயில் வசதி ஒன்று இருந்தால்தான் நாம் இதை அடைய முடியும். உலகத்தின் மற்ற நாடுகள் இந்த இரகசியத்தை அறியு முன்னே நாம் முந்திக் கொள்ளவேண்டும். இப்போதே அதிக தாமதித்து விட்டோம். பிரிட்டனும், அமெரிக்காவும் இதை அறிந்தால், நம்முடன் போட்டியிட ஆரம்பிக்கும். அதற்கு முன்னே நிலைமையை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும். ஆடு மாடு வர்த்தகமும், கம்பளிக் கைத் தொழிலும் ஜப்பானுடைய தேவைக்காக மட்டுமல்ல ; அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளுடனும் இவ்வர்த்தகம் செய்ய உதவும். இந்த இரயில் பாதைத் திட்டம் இதற்காகவே நிறைவேறியாக வேண்டும். இது அங்கு நிறை வேறுகிறதா? இல்லையா? என்பது வாழ்வதா? சாவதா? என்பதையே பொறுத்திருக்கிறது.

சூளன் – டனான் இருப்புப்பாதை ஒன்றும் போட வேண்டும். இதன் நீளம் 136 மைல் இருக்கும். இதற்காக செலவிட 1 கோடி எண் போதுமானது. ஜப்பானின் எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் சண்டையிட்டே ஆகவேண்டும். அச்சண்டை வட மஞ்சூரியாவிலேதான் நடைபெறும். ராணுவ முக்கியத்துவத்துடன் பார்வையிட்டால், இந்த ரயில் பாதையானது ரஷ்யாவின் பின்னணியைப் பெரிதும் பயமுறுத்தவும், வட மஞ்சூரியாவிற்கு புதிய பலத்தைக் கொண்டுபோக முடியாமல் தடுக்கவும் நமக்கு உதவியாக இருக்கும்.

இந்த இரயில் பாதையினால், சைனாக்காரர்கள் இங்கு குடியேறி நமக்குச் சில்லரைத் தொந்தரவுகள் செய்யலாம். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. மங்கோலிய அரசர்களை நமது நம்பிக்கையின் கீழ் கொண்டுவந்து கடுமையான சட்டங்களையியற்றி அவர்களை விரட்டியடிக்கலாம். இந்த ரயில் பாதைத் திட்டம் வெற்றி பெற்றால், நமது வகுப்பினரை உலகத்தையே ஜெயிக்க அனுப்பலாம். இத்திட்டப்படி மஞ்சூரியா, மங்கோலியா. சைனா இவை களைப் பிடிக்குமுன்னே நமது சக்ரவர்த்தி மஜி அவர்களின் திட்டப்படி போர்மோசாவையும், கொரியாவையும் முன்னதாகப் பிடித்தாக வேண்டும். அவ்விரண்டும் நிறைவேறி விட்டால், தென் கடல் நாடுகள் அனைத்தும் கம் காலடியில் விழும். பிறகு ஆசியாவும், உலகமும் நம்முடையதே.

சைனாவையும் உலகத்தில் பிற நாடுகளையும் நாம் பயமுறுத்த அமெரிக்காவுடன் சண்டையிட்டே ஆசு வேண்டும். பிலிப்பைன் தீவுகளிலுள்ள அமெரிக்கரின் ஆசியாப் படைகளின் தொல்லைகளை ஒழித்தாகவேண்டும்.

“ஜப்பானியக் கடலை நம் தேசீய தற்காப்புக்குக் கொண்டு வந்துவிட்டால், அமெரிக்க சைன, ரஷ்ய கடற்படைகளுக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை” என்று தனகா கூறியிருக்கிறார். மேலும், அவர் கூறுவதைக் கேளுங்கள்.

“நாம் போதுமான இரும்பும், நிலக்கரியும் பெற்றால் உலகத்தில் பெரிய ஜன சமுதாயமாக இருப்போம். கீழ்க் கோடியும், மேற்கோடியும் படையெடுக்க முடியும். நமது மோட்டார்களுக்கும், சண்டைக் கப்பல்களுக்கும் அதிகமாக எண்ணெய் தேவை. இதற்கு அமெரிக்க யந்திரத்தை நாம் உபயோகித்தால் நமது எண்ணெய் உற்பத்தியில் 50 சத விகிதம் அதிகமாக உற்பத்தி செய்யலாம். இரும்பு, நிலக்கரி, எண்ணெய் இம் மூன்றும் நமக்கு மிகவும் முக்கியமானது.

நமக்குப் பிற நாடுகளின் பணம் தேவையாக இருக்கிறது. இதற்கு தென் மஞ்சூரியா ரயில்வே மீது பணங்களைப் போட நாம் அனுமதித்தால், மற்ற நாடுகளில் உள்ளவர்கள் நம்மீது சந்தோஷப்பட்டு பணம் போடுவார்கள். இப் பொருள் நமக்குப் பெரும் உதவியாயிருக்கும். சைனாவால் இதைத் தடை செய்ய முடியாது. இந்த நல்ல முறையைச் செய்யச் சிறிதும் தாமதம் செய்யக் கூடாது.

மஞ்சூரியா, மங்கோலியாவுக்குள் ஆஸ்பத்திரிகளும், பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி, டாக்டர்களாகவும். உபாத்தியாயர்களாகவும் நம்மவர்களை ஆங்கு அனுப்பி, அவர்களின் தொண்டுகள் மூலம் ஜப்பானிய மக்களின் பேரில் நல்ல எண்ணம் உண்டாகும்படிச் செய்ய வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் அவர்களுக்குச் சாதாரண படிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்கவேண்டும்.

கூட்டுறவு நிலையங்கள் மூலம் கொரியர்களுக்கு உதவி செய்து, அவர்களை சைனாக்காரர்களிடமிருக்கும் நிலங்களை விலைக்கு வாங்கும்படிச் செய்ய வேண்டும். பிறகு நாம் அதை வாங்கி நமது ஜனங்களுக்குக் கொடுத்து அங்கு குடியேறும்படிச் செய்யவேண்டும். இதுவே நமது நோக்க மாகவும் கொள்கையாகவும் இருக்கவேண்டும். பூகோள அமைப்பின்படி ரஷ்யாவும், நாமும் சும்மா இருக்கமுடியாது. சண்டைபோட்டே ஆகவேண்டும். அதற்காகவே ரஷ்யாவும் நாமும் தளவாடங்களை அதிகமாக அபிவிருத்தி செய்து வருகிறோம்.

மஞ்சூரியாவில் நம்முடைய கொள்ளையடிப்பு பல மாதிரியாக இருக்கவேண்டும். அடிக்கடி நமது திட்டங்கள் வெளியில் தெரியாமல் இருக்க நமது தலைமைக் காரியாலயங் களை இரகசியமான இடத்தில் அமைக்கவேண்டும். மஞ்சூரியா, மங்கோலியாவிலுள்ள நமது ஏஜண்டுகள் மத்திய காரியாலயத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். கொரியாவைக் கைக்கொள்ள நமது மந்திரிகளான இதோ, சுட்சூரா ஆகியவர்களின் திட்டங்களைக் கைக் கொள்ளவேண்டும். இக் காரியங்களைக் கவனிக்க ஒரு காலனி இலாகாவை உண்டாக்கி, அதன் மூலம் நமது விஸ்தரிப்பு வேலைகளைச் செய்யவேண்டும்.

இவையும் இவைபோன்ற பிறவும் ஜப்பானிய மெயின் காம்ப் ஆகிய, தன்கா அறிக்கையில் காணப்படுகின்றன.

இத்திட்டங்களில் சில நிறைவேற முயற்சித்தும், சில அடியோடு நிறைவேற முடியாமலும் இருக்கின்றன. இவைகளைக் காணும்பொழுது ஜப்பானி யர்களுக்கும், நேர்மை என்பதற்கும் சிறிதும் பொருத்தமில்லை யென்றே கூறவேண்டும். அவர்களின் எண்ணம் வேறு, சொல் வேறு, செயல் வேறாகவே இருந்து வருகிறது. அவர்களின் எண்ணத்திற்கு இந்தத் திட்டமும், அவர்களின் சொல்லிற்கு அமெரிக்காவிடம் சமாதானமே எங்கள் விருப்பம் என்று பேசிக்கொண்டிருந்ததும், அவர்களின் செயலுக்கு அதே சமயத்தில் ஹவாய் தீவில் வீசிய வெடி குண்டுகளும் போதுமான சான்றாக இருக்கும்.

ஜப்பானிய அகராதியில், கொரியாவுக்கு உதவி என்றாலும், மஞ்சூரியாவுக்கு ‘ரயில் பாதை’ என்றாலும், மங்கோலியாவுக்கு ‘சுயராஜ்யம்’ என்றாலும், ‘இந்தியா’வுக்கு ‘விடுதலை’ என்றாலும், ‘ஆசியாவின் புணருத்தாரணம்’ என்றாலும், ‘உலகத்திற்கு சமாதானம்’ என்றாலும் ஒரே ஒரு பொருள்தான் உண்டு. அது என்னவென்றால் ஜப்பானுக்குள் அடிமைப்பட வேண்டும் என்பதே.

வங்காள மக்களுக்காகக் கண்ணீர் வடிக்கும் ஜப்பானி யர்கள்தான் வங்காளத்தில் தொடர்ந்தாற்போல் குண்டு வீசியவர்கள் என்பதையும், தென்னிந்திய மக்களின் விடுதலையைப்பற்றிக் கூறும் ஜப்பானியர்கள்தான் விசாகப் பட்டினத்திலும், சென்னையிலும் குண்டு வீசியவர்கள் என்பதையும் நாம் மறந்துவிடவில்லை. குண்டுகள் வீசிய பிறகுதான் அவர்களுக்கு இரக்க புத்தி தோன்றியிருக்கிறது என்பதையும் நம்ப முடியவில்லை. வஞ்சக புத்தியும், கெஞ்சும் பேச்சும்,நஞ்சூட்டும் செயலுமுள்ள ஜப்பானியர் களிடத்து, எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அஜாக்கிரதையாகவும் நாம் இருந்து, அவர்களின் பகற் கனவும் ஒரு காலத்தில் பலித்து, இந்தியாவும் அவர்க ளிடத்திற் சிக்கி விடுமானால், இந் நாடு நம்முடையது, இதை ஆளும் உரிமை நமக்குச் சொந்தம். இதை ‘நாம் விரைவில் பெறுவோம்’ என்ற நம்பிக்கையை நாம் அடியோடு இழந்து, இன்னும் பல நூறு ஆண்டுகள் தலை தூக்க முடியாமல், புதிய அடிமைகளாக வாழ நேரிடும் எனக் கூறி எச்சரிப்பதுடன் எனது பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன். எல்லோருக்கும் வணக்கம்.

(இது 15-12- 43-ல் ஆற்றிய உரை.)

முற்றிற்று.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *