வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம்

1. தகுதியும் திறமையும்


[இதே பொருள்பற்றி வேறுபாடான தமது கருத்துக்களைக் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரித் தலைவர் பட்டாச்சாரியார் அவர்கள் இதற்கு முன்பு தெரிவித்தார்கள்.]

“கல்வி நிலையங்களிற் சேர திறமையே முதல் தேவை” என்ற தலைப்பைக் கேட்டதும் ஒரு பேச்சின் தலைப்பு இவ்வளவு நீளமா? என்று எவரும் பயந்துவிட வேண்டாம். இது பேச்சின் தலைப்பு அல்ல; மாணவர்களின் புண்பட்ட மனதுக்குக் கிடைக்கும் விடை இது.

கல்வி நிலையங்கள் என்பது ஆர்ட் காலேஜ், மெடிகல் காலேஜ், இன்சினீரிங் காலேஜ், அக்ரிகல்ச்சரல் காலேஜ். என்கின்ற கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லுரி, அறிவுத் தொழிற் கல்லூரி, பயிர்த்தொழிற் கல்லூரி ஆகியவைகளைக் குறிக்கும். அவைகளிற் சேர்ந்து படிப்பதற்கென்று பல பிள்ளைகள் விண்ணப்பம் போடுவது வழக்கம். கல்லூரி அதிகாரிகள் திறமையான பிள்ளைகளைப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக்கொண்டு மற்ற பிள்ளைகளை வடிகட்டி அனுப்பி விடுவார்கள். சேர்க்கப்பெற்ற பிள்ளைகளெல்லாம் முன்னேற்றமடைந்த ஒரு வகுப்பைச் சேர்ந்ததாகவும், தெருவில் நிற்கும் பிள்ளைகள் எல்லாம் பிற்போக்கடைந்த வகுப்புகளைச் சேர்ந்ததாகவுமிருக்கும். அப்பிள்ளைகள் எல்லாம் எங்களுக்குக் கல்லூரிகளிற் படிக்க இடமில்லை எனக் கேட்பார்கள். அதற்குக் கல்லூரி அதிகாரிகள் சொல்லுகின்ற விடைதான் இப்பேச்சின் தலைப்பு. இப்பொழுது விளங்கியிருக்கும். “கல்வி நிலையங் களிற் சேர திறமையே முதல் தேவை” என்பதன் பொருள்.

“இதுதான் சரி” என்று சென்ற 7-ந் தேதியன்று ஒரு பேச்சைக் கேட்டோம். என் போன்றவர்கள் அதைச் சரி என ஒப்ப முடியாது. ஒப்புவதானால், குறைந்த எண்ணிக்கையுடைய உயர்த்தப்பட்ட வகுப்பினர் மேலும் மேலும் முன்னேறுவதையும் அதிக எண்ணிக்கையுடைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் முன்னேற வழியில்லாமற் போவதையும் ஆதரிக்க வேண்டும். ஆகவே, திறமையே முதல் தேவை என்ற கொள்கையானது பெரிதும் தவ றானதும், வருங்கால குடி ஆட்சிக்குச் சிறிதும் ஒவ்வாதது மாகும்.

“திறமை” என்பது எது? திறமையை அளக்கும் அளவுகோல் எது? யார் அளப்பது ? யார் அளப்பது? எப்படி அளப்பது? முடிவு கூறுவது எவர் ? கூறப்பட்ட முடிவுகளில் ஜாதிப் பற்று கலக்கவில்லை என்பதைக் கண்டு பிடிப்பது எப்படி ? என்ற கேள்விகளெல்லாம் திறமை என்றதும் கிளம்புகின்றன.

அதிக “மார்க்குகள்” தான் திறமை என்பது என்றால், சலுகைக்காகவும், சிபார்சுக்காகவும், ஜாதிக்காகவும், பொருளுக்காகவும் மார்க்குகள் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் அடியோடு ஒழிந்த பிறகல்லவா மார்க்குகளைக் கொண்டு திறமையை அளக்க முடியும்? இப்போது அளப்பது எப்படி?

நேர்மையான ஆசிரியர்களிடம் படிப்புக்காக மார்க்குகள் வாங்கிய பையன்களைக்கூடத் திறமையுடையவர்கள் என என்னால் ஒப்ப முடியவில்லை. படிப்பிற்காக வாங்கிய மார்க்குகள் படிப்பிற்காகப் பயன்படலாம். அதைவிட்டு தொழிலின் திறமைக்கு அந்த மார்க்குகள் எவ்வாறு பயன் படும்? படித்துப் பட்டம் பெற்ற டாக்டர்கள் சிலரைவிட, பழக்கமுள்ள கம்பவுண்டர்களிற் சிலர் திறமையுடையவர் களாயிருப்பது ஏன்? படித்துப் பட்டம் பெற்ற இஞ்சினீயர்கள் சிலரைவிட, பழக்கமுள்ள ஓவர்சியர்களிற் சிலர் திறமையுடையவர்களாயிருப்பது எப்படி? இதிலிருந்து படிப்பின் திறமைக்கும், தொழிலின் திறமைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன என்பது நன்கு விளங்கும். அவ்வித மிருக்க தொழிற் கல்வி கற்பிப்பதற்குப் படிப்பின் மார்க்குகள் முதல் தேவை என்பது எவ்வளவு பெரிய தவறு? அதை நம்மால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நமது மாகாணத்தில் டாக்டர் வேலைக்குப் படிக்கும் பிள்ளைகள் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டுமென்று ஒரு சட்டம் செய்ய திருத்தங்கள் கொண்டு வந்தார்கள். இதனால் சமஸ்கிருதம் தெரிந்த வகுப்பினரே டாக்டர் வேலைக்குத் திறமையுடையவர்களாகச் சேர்க்கவும், சமஸ்கிருதம் தெரியாத – படிக்காத அதில் அதிக மார்க்குகள் வாங்க முடியாத பிற வகுப்பினர்களெல்லாம் டாக்டர் வேலைக்குப் படித்து முடியாமற் போகவும் நேரிடும் என பனகால் அரசர் முதன் மந்திரியாக இருந்த காலத்தில் பொதுமக்கள் கிளர்ச்சி செய்தார்கள். டாக்டர் வேலைக்கும் சமஸ்கிருதப் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எனப் பல மேடைகளிற் பேசப்பட்டு எதிர்ப்புகள் கிளம்பின. பிறகு அது சட்டமாக்காமல் கைவிடப் பட்டது. திருப்பதி சமஸ்கிருதக் கல்லூரியில் பிராமண ரல்லாத மாணவர்கள் வியாகரணம் படிக்கத் திறமையற்ற வர்கள் எனக் கருதி சேர்க்கப்படுவதில்லை. பிறகு பனகால் அரசர் காலத்தில் அது திருத்தப்பட்டு இப்போது எல்லா வகுப்பு மாணவர்களும் வியாகரண வகுப்பில் சேர்க்கப்பட்டு படித்துத் திறமையானவர்களாக வெளிவருகின்றனர். அறிவுத்திறமை என்னாயிற்று?

19 வயதுக்குள் கல்லூரிக்குப் படிக்க வருகிறவர்கள் தான் திறமையுடைய பிள்ளைகள் என்றால், பொய்யாக வயதைப் பதிவு செய்கின்றவர்கள் எல்லாம் திறமையுடையவர்கள் என்றும், உண்மை வயதைப் பதிவு செய்கின்றவர்களெல்லாம் திறமையற்றவர்கள் என்றும் ஆகும். இந்த வயதுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினால், பொய்யாக வயதைப் பதிவு செய்கிறவர்களும் பெருத்து வருகிறார்கள். அரசாங் கத்தினர் கடுமையான நடிவடிக்கை எடுத்தால் இது குறையும். இன்றேல் இக் கொடிய வழக்கத்தால் பிள்ளை களையும் பொய்யிலும், ஏமாற்றத்திலும் பழக்கி, நாட் டிற்கும் கேடு செய்வதாக முடியும். இதனால் எல்லோரும் இவ்வாறுதான் வயதைப் பதிவு செய்கிறார்கள் எனச் சொல்லுவதாக நினைக்க வேண்டாம். இது அடியோடு இல்லையென எவரும் சொல்லிவிட முடியாது. என் பிள்ளைகளைப் பள்ளியிற் சேர்க்கும்பொழுது எனக்குக் கூட இவ்வாலோசனை கூறப்பட்டது என்றால் பிறரைப் பற்றிச் சொல்வானேன்? ஆகவே, வயதுக் குறைவுத் திறமை வழக்குக்கு வந்தால் நிற்காது.

திறமைதான் தேவை என்பதில் இன்னொரு தவறும் நடந்துவருகிறது. அதரவது சில வேலைகளுக்கு எஸ்.எஸ். எல்.ஸி படித்தவர்கள் போதும் என்றிருக்கும்பொழுது, அதற்குத் தகுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பித்திருக்கும் பொழுது அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு, பி.ஏ.,எம்.ஏ. படித்தவர்களை அவ்வேலைகளுக்கு நியமித்து விட்டு எங்களுக்குத் திறமையே முதல் தேவை, எனக் கூறுகிறார்கள். இது எவ்வாறு நியாயமாகும்? குறைந்த படிப்புள்ளவர்கள் பார்க்கும் வேலைகளுக்கு அதிக படிப்புள்ளவர்கள் எதற்காக? அதைப்போலவே இஞ்சினீரிங் காலேஜில் சேர எப்.ஏ படிப்புப் போதும் என் றிருக்கும்பொழுது பி.ஏ., எம்.ஏ.க்களை நியமித்துவிட்டு எங்களுக்குத் திறமையே முதல் தேவை என்பது எப்படி நேர்மையாகும்? படிக்குந் தகுதிவரை படிக்க வைத்த குடும்பங்களின் கதியும் என்னாகும்? தகுதியிருக்கும் போதுகூடத் திறமையில்லை என்று கூறுவது தப்பா? அல்லவா?

ஒரு நாட்டினர் திறமையுடையவர்கள், மற்றொரு நாட்டினர் திறமையற்றவர்கள் என்பதையாவது, எங்காவது எவராவது கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு வகுப்பினர் திறமை யுடையவர்கள், இன்னொரு வகுப்பினர் திறமையற்றவர்கள் என்பதை இந்த நாட்டில்தான் கேட்க முடியும். திறமையைப் பற்றி நான்கு பிரிவுகளாகச் சொல்லப்பட்டு வருகின்றது. 1. பிராமணர். 2. பிராமணரல்லாதார். 3. பிற்போக்கடைந்தவர். 4.தாழ்த்தப்பட்டோர். இவர்களுக்குத் திறமைகளும் வரிசைக் கிரமமாக இருக்கிறது என்று சொல்லப்படுவது உண்மையாகுமானால், அவர்கள் வாழுமிடங்களும், சுற்றுச் சார்புகளுமே காரணமாக இருக்க வேண்டும் அல்லவா? அப்படி இருந்தால், அக்கிரகாரத்திலிருந்து சரி பாதிப் பேர்களை சேரிக்கும், சேரியிலிருந்து சரி பாதிப் பேர்களை அக்கிரகாரத்திற்கும் அனுப்பி சுற்றுச் சார்புகளையும், சூழ்நிலைகளையும் ஒன்றாக்கித் திறமையையும் சமமாக்க வேண்டியது அரசாங்கத்தினுடையவும், தேச பக்தர்களுடையவும், பொதுநல ஊழியர்களுடையவும் முதற்கடமையாக இருக்கவேண்டும்.

திறமையை எண்ணக்கூடாது. வகுப்புவாரியாகத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி இருக்குமிடங்களிற் கூட ‘திறமை’ தலை விரித்தாடுகிறது. பிராமணரல்லாதார் என்ற தொகுதிக்கு ஆட்கள் தேவைப்படும்போது தமிழ் நாட்டார் அல்லாத வட நாட்டவர்கள் துழைக்கப்படு கிறார்கள். திறமை செய்கின்ற கொடுமை இது.இக் கொடுமைகளை மருத்துவக் கல்லூரிகளிலும் ரயில்வே தொழிற் கல்வி நிலையங்களிலும் நன்கு காணலாம்.வகுப்பு வாரியாகவும் ஜில்லா வாரியாகவும் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் இஞ்சினீயரிங் காலேஜில் உண்டு. திருச்சி ஜில்லாவிலிருந்து 1942-ல் கிறிஸ்தவ வகுப்பினர் இருவர் மனுப் போட்டிருந்தனர். ஒருவர்தான் தேவை என எடுத்துக் கொண்டார்கள். தேர்ந்தெடுக்கப் பட்டவன் படிக்கப் போகவே இல்லை. அதற்குப் பதிலாக அடுத்த பையன் வர விரும்பியும் சேர்க்க மறுத்து விட்டார்கள்.

அந்த வருஷத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மொத்தம் 80 பேர் அதில் 10 பேர் படிக்கவரவில்லை. அந்தக் காலி ஸ்தானங்கள் 10-க்கும் பிராமணப் பிள்ளைகளே தேர்ந்தெடுக்கப்பட்டனர். திறமையே முதல் தேவை என்பதன் பலன் இது.

என்னுடைய முடிவான கருத்து என்னவென்றால், திறமை முதல் தேவையுமில்லை. இரண்டாம் தேவையு மில்லை. திறமை என்பதே அடியோடு தேவையில்லை என்பதுதான். திறமையுடையவர்களை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, திறமையற்றவர்களை மட்டுமே கல்லூரிகளிற் சேர்த்துப் படிக்கும்படிச் செய்ய வேண்டும். அப்போதுதான் கையும் காலும் சூம்பிப்போய் வயிறு மட்டும் பெருத்து வலுக்குறைந்த குழந்தையைப் போலக் காணப்படும் தமிழ்நாடு எல்லாச் சமூகங்களும் உயர்ந்து வலுவான நாடாகக் காட்சியளிக்க முடியும்.

திறமையற்றவர்களைத் திறமையுடையவர்களாகச் செய்வதுதான் கல்லூரிகளின் முதல் வேலையாக இருக்க வேண்டும். அதைச் செய்ய இப்போதுள்ள கல்லூரிகளுக்குத் திறமையில்லாவிடில் அக் கல்லூரிகளை இடித்துத் தூளாக்கிவிட அரசாங்கம் உத்தரவு போடவேண்டும். அவ்வாறு செய்தால் கட்டிடங்களிருந்த நிலத்தில் கலக் கம்பாவது விளையும். உணவு நெருக்கடியான இக்காலத்தில் அது அதிக விளைவுக்குத் துணை செய்வதாகவுமிருக்கும்.

கட்டிட வசதிக் குறைவான இக்காலத்தில் அவற்றை இடிக்க மனமில்லாவிட்டாலும் கல்லூரிகளின் ஆசிரியர்களையாவது மாற்றியமைக்கவேண்டும். ஆசிரியர்களை மாற்றியமைக்க அரசாங்கத்தினருக்கு மனமில்லாவிடில் அரசாங்கத்தினரையே மாற்றியமைக்க வேண்டும். இதுதான் நாட்டு நலனுக்கும் வருங்காலக் குடி ஆட்சிக்கும் ஏற்ற சிறந்த தொண்டாகும். இதன் மூலம் திறமையற்றவர்களைத் திறமை கொண்டவர்களாகச் செய்யத் திறமையில்லாத கல்லூரிகளுக்குச் செலவிடப்படுகிற பொதுப் பணத்தையும் வீணாக்காமல் காப்பாற்ற முடியும். அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளின் நிலையே இவ்வாறாகுமானால், தேச பக்தர் களின் பெயரால், தனிப்பட்டவர்களால் நடத்தப்படுகின்ற கல்லூரிகளைப் பற்றி என்ன சொல்லுவது? ?

தீட்டின கத்தியையே தீட்டிக்கொண்டிருப்பது எவ்வளவு வீண் வேலையோ, அவ்வளவு வீண் வேலைதான் திறமையுள்ளவர்களாகச் செய்வதும். “சோறு தின்றவர்களுக்கே சோறு போடுவது” எவ்வளவு புண்ணியமோ, அவ்வளவு புண்ணியந்தான் திறமையுள்ளவர்களுக்காகவே கல்லூரிகளை நடத்துவதும். இன்றைய கல்லூரி மாணவர்கள் தான் எதிர்காலத்தில் இந்நாட்டை ஆளப் போகிறவர்கள் என்றால், கல்லூரிகளிற் படிப்பதிலும் நாட்டை ஆள்வ திலும் எல்லோருக்கும் பங்கு இருக்க வேண்டாமா? கல்லூரிகளில், திறமை பார்த்து வடிகட்டியே பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பதும், படிக்கும் பிள்ளைகளுக்குத் தக்கவாறு கல்லூரிகளை அதிகமாக்க முடியாது என்பதும், நாட்டின் நலனுக்கு ஏற்ற சொற்களாக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனெனில், இது ஒரு சமூகம் நாடாள வேண்டுமென்றும், பிற சமூகங்கள் அடங்கி வாழ வேண்டுமென்றும் சொல்லப்படுவது போலத் தோன்றும்.

உயர்ந்த ஜாதிப் போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் புளிய மிலார் அடி வாங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் சமூகத்திலும் சிலர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கையே. அதற்காக அந்தச் சமூகத்தினர் கல்லூரிப் படிப்பு இருந்தால்தான் அவ் வேலைகள் கிடைக்கும் என நினைத்து, சில பிள்ளைகளை எஸ்.எஸ்.எல்.ஸி வரை படிக்க வைத்து கல்லூரியில் படிக்கத் தகுதியுடையவன் என்ற நற்சாட்சிப் பத்திரத்தோடு கல்லூரிக்கு அனுப்பி வைத்தாலும் அவனை அங்கு சேர்க்காமல், அதிக மார்க்கு வாங்கிய மக்களைச் சேர்த்துக் கொண்டிருந்தால் அந்தச் சமூகத்தின் கதி என்ன? அவர்களிற் சிலர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாவது எப்படி ? அவர்கள் தங்கள் முதுகில் புளிய மிலார் அடி வாங்காமலிருப்பது எப்போது? “திறமைதான் முதல் தேவை” என்று கூறுகிறவர்கள் இவைகளை எண்ணிப் பார்த்தாவது கூற வேண்டாமா?

வகுப்புப் பூசல்களும், ஜாதிப் பிரிவுகளும் உடனே ஒழியவேண்டும் என்ற கொள்கையுடைய அறிஞர்களைக் கூடத் ‘திறமைதான் முதல் தேவை’ என்ற சொற்க ளானது திடுக்கிடச் செய்கிறது. முற்போக்கடைந்த மக்களோடு பிற்போக்கடைந்த மக்களும் சரி சமமாக எல்லாத் துறைகளிலும் வரும்வரையிலும் ஜாதிப் பிரிவுகள் அப்படி அப்படியே நிலைத்திருக்க வேண்டும் எனவும், அப்போது தான் குறிப்பாக அவர்களைக் கண்டுபிடித்து உயர்த்த முடியும் எனவும் நினைக்கும்படிச் செய்கிறது. இவ்வாறு நினைக்கும்படித் தூண்டுவது ‘திறமையே முதல் தேவை’ என்ற சொற்கள்தான்.

இந்தவிவாதத்தில் திறமையற்றவர்கள் என்று சொல்லப் பட்டு வந்தவர்கள் அனைவரும் உண்மையில் திறமையற்ற வர்கள் அல்ல. அவர்கள் திறமையற்றவர்களாக இருந்தால், உயர்தரப் பள்ளிகளில் படித்துத் தேறி கல்லூரிகளில் படிக்கத் தகுதியுள்ளவர்களென்று அரசாங்கத்தினரால் வழங்கப் பெற்ற உரிமைச் சீட்டுடன் கல்லூரியின் வாயிற் படிவரை வந்திருக்க முடியாது அல்லவா? இவர்களைத் திறமையற்றவர்கள் என்று கூறுகிறவர்களெல்லாம் உண்மை யைக் கூறுகிறவர்களாக இருக்க முடியாது. அவர்களைக் குருடர்களென்றும், செவிடர்களென்றும் கூறிவிட முடியாது.

போராட்டமெல்லாம், குறைந்த திறமை, அதிக திறமை என்பதைப் பொறுத்ததாகும். கேள்வி எல்லாம்.

தேவைக்குத் தகுந்த திறமையுள்ளவர்களை விலக்கிவி தேவைக்கு அதிகமான திறமையுள்ளவர்களைத் “தேடி இழுப்பது ஏன்?” என்பதுதான்.

முன்னேற்றமடைந்த வகுப்பினர் பிற்போக்கடைந்த மக்களைத் திரும்பிக்கூட பாராமல் விரைந்து நடப்பது ஒரு தவறு. அவர்கள் தாங்களாக முன்னேறி வந்தும் கை கொடுத்து உதவாமல் இருப்பது அதைவிடத் தவறு. அவர்களாகத் தட்டுத் தடுமாறி மேலேறிவரக் கண்டதும் ஆதரிக் காமல் சும்மா இருப்பது பெருந்தவறு. சும்மாவும் இராமல், முன்னேறி வந்தவர்களை மறித்துப் பிடித்துக் கீழே தள்ளுவதோ மன்னிக்க முடியாத பெருந்தவறாகும்.

“திறமையே முதல் தேவை” என்ற கொள்கை இந்நாட்டில் கையாளப்படாதிருந்தால் ஜாதிப் பூசல்களும், வகுப்பு வெறுப்புகளும் இவ்வளவு விரைவாகத் தோன்றி யிராது. வெளிப்படையாகக் கூற வேண்டுமானால், ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதற்கும், முஸ்லிம் லீக் பரவியதற்கும் தாழ்த்தப்பட்ட பெடரேஷன் வளர்ந்ததற்கும் “திறமையே முதல் தேவை ” என்று கூறுபவர்கள் தான் துணை செய்தவர்கள் எனத்துணிந்துக் கூறலாம்.

“திறமையே முதல் தேவை” என்ற சொற்களை முன்னேற்றமடைந்தவர்களின் வாயிலாகப் பிற்போக்கடைந்தவர்கள் என்றைக்குக் கேள்விப் பட்டார்களோ அன்றைக்கே பயந்து போய்விட்டார்கள். அவர்களுக்கு வருங்காலக் குடியாட்சியில் தங்களுக்கும் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அழிந்துபோயிற்று. அதனாலேயே அவர்கள் தங்கள் தங்களுக்குள் பலமான கட்சிகளை அமைத்துக் கொண்டு முன்னேற்றமடைந்த மக்களோடு முரண்பட்டு ஒற்றுமையின்றி போராடத் தொடங்கினர்.

“இனியும் திறமைதான் முதல் தேவை” என்று சொல்லிக் கொண்டு முன்னேற்றமடைத்தவர்களே மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தால். பிற்போக்கடைந்த மக்களின் அன்பையும், நட்பையும் பெற முடியாது. அவர்களின் இந்த நியாயமான கோரிக்கையை வகுப்புத் துவேஷம் எனக் கூறி மறைத்துவிடவும் முடியாது. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கைக்கு ஏற்றதாகவுமிராது. சமூக நலனுக்கும், நாட்டு நலனுக்கும் இக்கொள்கையால் நன்மை விளையவும் செய்யாது.

ஆகவே, திறமையே முதல் தேவை எனக் கூறி அதிகத் திறமையைத் தேடித் திரியாமல், தேவைக்கு வேண்டிய திறமையுடைய எல்லா வகுப்புப் பிள்ளைகளுக்குமே, கலைக் கல்வி நிலையங்களிலும், தொழிற் கல்வி நிலையங்களிலும் உரிமைப்படி இடம் அளிக்க வேண்டும். அதற்கு இருக்கும் கல்லூரிகளில் இடம் இல்லாவிடில் புதிய கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும்; நடைமுறை ஆண்டில் கல்லூரியில் படிக்கத் தகுதியோடும், திறமையோடும் வந்த 31,000 பிள்ளைகளில் 15,000 பேர்களுக்குக் கல்லூரிகளில் படிக்க இடம் கொடுத்து மீதி 16,000 பேர்களை விலக்கி படிக்க முடியாமற் செய்தது நமது மாகாண நலனுக்கு ஏற்ற செயலாக இராது.

தொழிற் கல்லூரியில் எல்லோருக்கும் கற்க இடம் கொடுத்துப் பிறகு தொழில்களில் ஒரு பரீட்சை வைத்து, அதற்குள் “திறமையே முதல் தேவை” எனக் கூறுவதானால் இது பொருந்தும். அதை விட்டுத் தொழிற்கல்வி கற்பதற்கே திறமை வேண்டும் – அதுவும் அதிக மார்க்கு திறமை வேண்டும் எனக் கூறுவது அறிவுக்கு ஒவ்வாத கூற்றாகும். இதுகாறுங் கூறியவற்றால். கல்வி நிலையங்களிற் சேர “திறமையே முதல் தேவை ” என்பது அறிஞர்களால் மறுக்கப்படும். எனக் கூறுவதோடு எனது பேச்சை முடிக்கிறேன்.

(14-2-47-ல் கல்வி நிலையங்களிற் சேர திறமையே முதல் தேவை’என்ற தலைப்பில் பேசியது.)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *