வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம்

3. காவிரியும் உறையூரும்


அன்பர்களே ! இன்றுவரை ‘ஆறும் ஊரும்’ என்ற பொருள் பற்றிய 6 பேச்சுகளைக் கேட்டீர்கள். இன்றைய பேச்சு ஏழாவதும் இறுதியுமாகும். இதுவரை பேசப் பெற்ற எந்த நதிக்கும் ஆறு என்று பெயரில்லை. எந்த நகருக்கும். ஊர் என்று பெயரிருந்ததில்லை. ஆனால். இன்று பேச எடுத்துக்கொண்ட காவிரிக்கு ‘யாறு’ என்றும் உறையூருக்கு ‘ஊர்’ என்றும் பெயர் உண்டு. யாறெனப்படுவது. காவிரி, ‘ஊரெனப்படுவது “உறையூர்’ என்பது புலவர்களின் வாக்கு. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதைவிட அதிக மகிழ்ச்சியைத் தருவது இவை இரண் டிற்கும் உரியவனான ‘சோழ மன்னனுக்கு வேந்தன்’ என்று பெயர் வழங்குவதாகும். இவ் உண்மையை தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணா வதும் சோழ மண்டலமே என்ற பொய்யாமொழிப் புலவரின் வெண்பா அடிகள் நன்கறிவிக்கும். பல நதிகளும் பல மன்னர்களும் உள்ள அக்காலத்திலேயே இவ்வாறு துணிவாகக் கூறுவது எளிதானதாகாது என்று எண்ணிப் பார்க்கும்பொழுது உண்மை தானாகவே புலப்படுகிறது.

நாகரீகத்தின் சிறப்பு அறிவைப் பொறுத்ததாகும். அறிவின் சிறப்பு மக்களையும், மக்களின் பிறப்பு மன்னனை யும், மன்னனின் சிறப்பு நாட்டையும், நாட்டின் சிறப்பு நகரையும், நகரின் சிறப்பு நதியையும், நதியின் சிறப்பு நீரையும் பொறுத்ததாகும். மக்களின் நாகரீகத்திற்கு நீரே அடிப்படையாக இருந்து வருகிறது. இம்முறையில் வட நாட்டு நாகரிகத்திற்குக் கங்கை நீரையும் தென்னாட்டு நாகரீகத்திற்குக் காவிரி நீரையும் அடிப்படையாகக் கூறலாம். தமிழ் நாட்டு வாலாறு எழுதப்படும் பொழுது காவிரிக் கரையிலிருந்துதான் தொடங்க வேண்டும். தமிழ் நாட்டு வரலாறு மட்டுமல்ல. திராவிட நாட்டு வரலாறும், இந்திய நாட்டு வரலாறும் ஆசியாக் கண்டத்தின் வரலாறும் உலக வரலாறுங்கூட இங்கிருந்துதான் தொடங்கியாக வேண்டும் எனத் தெரிய வருகிறது. எவ்விதம்? எனில், உலகில் முதல் முதலாக மக்கள் தோன்றியவிடம் கடற் கோளால் அழிந்துபோன தமிழ் நாட்டின் தென்பகுதியாகிய லெமூரியா என்றவிடமே என்ற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் உலக மக்களின் நாகரிகத்திற்குக் காவிரியுந் தொண்டு செய்திருக்கிறது என்று கூறலாம்.

இந்தியாவில் பல நதிகள் இருக்கின்றன. என்றாலும் சிறப்பு வாய்ந்த நதிகள் பத்து. இவை கங்கா, யமுனா, துங்கபத்ரா, கிருஷ்ணா, கோதாவரி என வடநாட்டு நதிகள் 5-ம், பெண்ணையாறு, பாலாறு, காவிரி, வைகை, பொருணை என தென்னாட்டு நதிகள் 5-மாகப் பிரிந்தன. பாரதியார் அவர்கள் தென்னாட்டு நதிகளைக் கூறும்பொழுது ‘காவேரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருணை நதி’ யெனக் கூறினார்கள். காவிரி, நதிகளின் கடுவிலிருந்தாலும், நாட்டின் நடுவிலிருந்தாலும் அது பாட்டின் முதலில் பதிந்திருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

காவிரிக்கு ‘யாறு’ என்று மட்டும் பெயரல்ல. நீர் என்றும், புனல் என்றும், பொன்னி என்றும் பல பெயர்கள் இருக்கின்றன. காவிரி சூழ்ந்த நாட்டிற்கு நீர் நாடு என்றும், புனல் நாடு என்றும், பொன்னி நாடு என்றும் பெயர். காவிரிக்கும் காவிரி சூழ்ந்த நாட்டிற்கும் உரியவனான சோழ மன்னன் நீர் நாடன் என்றும், புனல் நாடன் என்றும், பொன்னி நாடன் என்றும் அழைக்கப் பெற்றிருக்கிறான். இவற்றை, புறநானூறு முதலிய நூல்களால் நன்கறியலாம். புனல் நாடன் என்ற பெயராளது ஒரு சிறந்த மன்னனையும், அவனது செழித்த நாட்டையும், விரிந்த நதியையும் தன்னுள் அடக்கிக் காட்டுவதை அறிந்து மகிழ வேண்டும். இது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு தனிச் சிறப்பாகும்.

காவிரியின் தோற்றம் மேற்குத் தொடர்ச்சி மலையில் காவிரியின் மறைவு கிழக்குக் கடற்கரையில் காவிரியின் நீளம் ஏறக்குறைய 400 மைல்கள். காவிரியின் நாடுகள்: பிறந்தது குடகு நாட்டில், தவழ்ந்தது கன்னடத்தில் நடந்தது கொங்கு நாட்டில், வாழ்ந்தது சோழ நாட்டில் குளிப்பது சோனாட்டுக் கடலில் ஆகும். காவிரிக்கு நிலம் கூறவேண்டுமானால் அது குறிஞ்சி நிலத்திற் பிறந்து முல்லை நிலத்தில் தவழ்ந்து பாலை நிலத்தைப் பாராமல் மருத நிலத்தில் விளையாடி நெய்தல் நிலத்தில் முடிகிறது எனக் கூறலாம்.காவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலோடு கலக்கும் இடம் வரை அது தெய்வக் காவிரியாகவே அன்றும் இன்றும் கருதப்பட்டு வருகிறது. இது அதன் வளம் பொருந்திய சிறப்பையே நமக்கு எடுத்துக் காட்டுவதாகும். ஆடி 18-ல் காவிரியில் நீர் பெருகுவதும் புது வாழ்வில் புகுந்த மணமக்கள் புதுப்புனல் ஆடுதலும் தங்கள் வாழ்வும் வாழ்நாளும் பெருக வேண்டும் எனக் காவிரியைத் தெய்வமாக எண்ணி வணங்குதலுமாகியவைகள் தமிழ் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் வழக்கமாகும்.

காவிரியாற்று நீர் சோழ மன்னர்களை வாழ்விக்கவும் காவிரியாற்று மணல் சோழ மன்னர்களை வாழ்த்தவும் பயன்பட்டு வந்திருக்கின் றன. சோழ மன்னர்களை வாழ்த்திய புலவர் பெருமக்கள் காவிரியாற்று எக்கரிட்ட மணல்களை விட அதிக ஆண்டுகள் வாழ வேண்டும் என வாழ்த்தியிருக்கிறார்கள். சோழர் அரசும் அவ்விதமே உறையூரில் வாழ்ந்து வந்தது. சோழர் குடிதோன்றிய காலம் நமக்குத் தோன்றவில்லை. கல்வெட்டுகளும் காட்டவில்லை. பதியெழு வறியாப் பழங்குடியினர் என்றும் மண் தோன்றிய காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினர் என்றும் புலவர்கள் கூறியிருக்கிறார்கள். சோழரும் பாண்டியரும் சூரியவம்சம், சந்திரவம்சம் என – அதாவது ஞாயிறு வழியினர், திங்கள் வழியினர் என – அழைக்கப்பட்டார்கள். அவர்களும் ஞாயிறு வட்ட திங்கள் வட்டக் குடைகளைப் பிடித்திருந்தனர். இது அவர்களின் பழமையைக் காட்டுகிறது போலும். அரங்கம் என்பது ஆற்றிற்கிடையிலுள்ள மேட்டின் பெயராகும். காவிரியாறு உறையூருக்கு எதிரில் வந்து இருபுறமும் சுற்றிச் சூழ்ந்து ஒரு திரு அரங்கத்தையும் திரு அரங்கரையும் திரு அரங்க நகரையும் உண்டாக்கி இருக்கிறது.

இதைப் போலவே இதே காவிரி மைசூரிலும் இரு புறமும் சுற்றிச் சூழ்ந்து ஒரு திரு அரங்கத்தையும் திரு அரங்கரையும் திரு அரங்கப்பட்டினத்தையும் உண்டாக்கி இருக்கிறது. இதனை வடமொழியினர் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கர், ஸ்ரீரங்கப்பட்டினம் எனக் கூறுவர். அரங்கம் என்பது தமிழ்ச் சொல்.

காவிரியாற்றிற்கு இருபுறமும் கரை கட்டிய மன்னன் கரிகாற் சோழனாவான். இவனுக்குத் திருமாவளவன் என்றும் பெயர் உண்டு. சிறந்த போர்வீரன். இவனது அறிவும் ஆற்றலும் எவராலும் மறக்க முடியாதவை. தமிழகத் தலைமை தாங்கிய வளவன்’ எனப் பெயர் பெற்றவன்.

காவிரிக்குக் கரை கட்டுவதற்கென்று சிங்களத் தீவிலிருந்து பத்தாயிரம் தொழிலாளர்கள் இவனால் வரவழைக்கப்பட் டனர். காவிரியின் இருபுறமுள்ள கிராமங்களைப் பல பிரிவு களாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவும் 5 மைல் நீளம் கரை கட்டத் திட்டமிட்டு ஆங்காங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு அந்தந்த கிராமத்தின் மூலம் அரசாங்க உணவளித்து 200 மைல் நீளத்திற்கு ஒரே காலத்தில் கரை கட்டச் செய்த திறமை வியக்கக் கூடியதாகும். காவிரியின் நீர் வீணாகா மலும் வெள்ளத்தால் நிலங்கள் பாழாகாமலும் நீர்ப்பாசன வசதியோடு அணைகட்டிப் புகழ் பெற்ற மன்னன் இராஜ ராஜ சோழன் ஆவன். இவன் கி.பி. 985 முதல் 1013 வரை அரசாண்ட அறிஞன். இவனால் கட்டப்பெற்ற தஞ்சாவூர்ப் பெரிய கோவில் 950 ஆண்டுகளாகியும் நிலைத்து நின்று புத்தம் புதிதாகத் தோன்றி அம் மன்னனுடைடய புகழுடம் பிற்கு உலக மக்களிடையே இன்னும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இக்கோவில் கட்டுவதற்குப் பெருங் கற்களைத் தோணிகள் மூலம் கொண்டு வர நமது காவிரி பேருதவி செய்திருக்கிறது.

சிலப்பதிகாரம் என்ற தமிழ்ப் பெருங்காப்பியம் தமிழ் மக்களின் செல்வக் கருவூலமாகும். இந்நூல் தோன்றி இன்றைக்கு 1800 ஆண்டுகள் ஆயின. இந்நூலை இயற்றியவர் சேர நாட்டு இளவரசர். துறவு பூண்டவராதலின் இளங்கோ அடிகள் எனப் பெயர் பெற்றார். இவர் இந்நூலில் காவிரியைக் குறிப்பிடும் பொழுது காவிரிப்பேர் யாறு என்றும், சோழர் தம் தெய்வக்காவிரி என்றும் கூறியிருக்கிறார். கல்வியிற் பெரியராகிய கம்பர் தாம் இயற்றியுள்ள இராமாயணத்தில் காவிரியைக் கங்கையிற் புனிதமாய் காவிரி எனக் கூறியிருப்பது வியப்பைத் தருகிறது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாது என்பது காவிரியின் சிறப்பைக் காட்டுகிறது.

இத்தகைய சிறப்புகளைப் பெற்று, தெளிந்து, பரந்து, விரிந்து, நீண்டு, ஓடுகின்ற காவிரியாற்றின் தென்கரையில் தான் பெரும் பெயரும்,பெரும் பேறும்,பெரும் புகழும் பெற்ற உறையூர் நகரம் அமைந்திருக்கிறது.

உறையூர் என்பது மக்கள் உறையும் ஊர் என்றும், உறைவதற்கு ஏற்றஊர் என்றும் பொருள்பெறும்.’ஊர்’ என்பது பொருள் அமைதியுடைய தமிழ்ச் சொல். மக்கள் கூட்டங்கூட்டமாக ஊர்ந்து சென்று தங்கியவிடங்களுக்கு அக்காலத்து மக்கள் வழங்கிய பெயரே ஊர் என்பதாகும். உறையூர்க்கு உறந்தை எனவும் பெயர் உண்டு. கோழி நகர் எனவும் கூறப்பெறும். உறையூர் தோன்றிய வரலாறு வீரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒரு கோழியானது தன்னையணுகிய யானையோடு போர் செய்து சிறகை விரித்துப் பறந்து, கொத்தி, விரட்டி வென்றதை யறிந்த சோழ மன்னன் அந்தவிடத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டான் என்பது கோழி நகர் வரலாறு. இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் உறையூறைப் பற்றிக் கூறும்பொழுது முறஞ்செவி வாரணம் முன் சமமுருக்கிய புறஞ் சிறை வாரணம் எனக் கூறியிருப்பதும் இவ் வரலாற்றை மெய்ப்பிக்கிறது. காரிக் கண்ணனார் என்ற பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் உறையூரை ‘அறந்தங்கும் உறையூர்’ எனப் புகழ்தங்கக் கூறியிருக்கிறார். காவிரியை அடுத்து உறையூரும், உறையூரை அடுத்து காவிரியும் அமைந்ததினால், இரண்டும் புகழ் பெற்று விளங்கின எனத் கூறலாம்.

உறையூர் சோழ மன்னர்களுக்கு நெடுங்காலம் தலைநகராக இருந்திருக்கிறது. சில காலங்களில் தஞ்சை திருவாரூர், கங்கைகொண்ட சோழபுரம், காஞ்சீவரம், காவிரிப் பூம்பட்டினம் ஆகிய நகரங்களும் தலைநகர்களாக இருந்திருக்கின்றன. கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலேயே உறையூரிலிருந்து கிழக்கே காவிரிப்பூம்பட்டினத்திற்கும், மேற்கே வஞ்சி நகருக்கும், தெற்கே மதுரை நகருக்கும் வண்டிப் போக்குவரவு, படைகள் போக்குவரவுக்குரிய பாதைகள் செவ்வையாய் அமைந்திருந்தது எனத் தெரிகிறது. தரைப் பாதைகளைப் போலவே ஆற்றுப் பாதைகளையும் போக்கு வரவுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 1916-ம் ஆண்டிற் கூட மூங்கில் கட்டுகள் ரோட்டிலிருந்தும் பவானியிலிருந்தும் காவிரி வழியாக திருச்சி வந்து சேர்ந்ததை நான் நன்கறிவேன்.

மதுரையில் இருந்தது போன்ற ஒரு தமிழ்ச் சங்கமும் பல நூல்களும் அக்காலத்தில் உறையூரிலிருந்தன. அரசாட்சி வியக்கத்தக்க முறையில் நடைபெற்றிருக்கிறது. அலெக் சாண்டருக்கும் அசோகருக்கும் கூட உறையூர் தலைவணங்கிய தில்லை. கி.பி.7-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி உறையூரில் வலுக்குறைந்தது. மீண்டும் 846-ல் வீர விஜயாயைச் சோழனால், சோழர் ஆட்சி வலுவாக நிறுவப்பெற்றது. 12-ம் நூற்றாண்டு வரை மிகுந்த புகழ்பெற்று விளங்கியது. மதுரையை யாண்ட முதலாவது மாரவர்ம சுந்தர பாண்டியன் கி.பி. 1225-ல் உறையூரையும் தஞ்சாவூரையும் தீயிட்டுக் கொளுத்தி, வெற்றிபெற்று, திரும்பவும் இவ்வூர்களை சோழர்களிடமே கொடுத்துவிட்டுச் சென்று விட்டான். இவ்வரலாறு திருக்காட்டுப்பள்ளி கல்வெட்டுகளிலும் திருவரங்கக் கல் வெட்டுகளிலும் காணப்படுகின் றன.

பராந்தகன் ஆட்சிக் காலத்தில் உறையூரில் மண்மாரி பெய்ததாகவும், நகர் அழிந்ததாகவும் திரிசிராமலை செவ்வநதிப் புராணம் கூறுகிறது. முதல் பராந்தகன் 907 முதல் 953 வரை ஆண்டிருந்தான். 2-ம் பராந்தகன் 961 முதல் 969 வரையிலும் ஆண்டிருக்கிறான். மண்மாரி பெய்தது எவன் காலத்தில்? எப்படி? என்பதை அறிய முடியவில்லை. சோழனுடைய மனைவி தப்பிப் பிழைத்துக் கரையேறிய விடத்திற்குத்தான் உத்தம் சேரி என்ற பெயர் வந்தது என்பது செவி வழிக் (கர்ணபரம்பரை) கேட்டுவரும் செய்தியாகும்.

16-ம் நூற்றாண்டு மத்தியில் உறையூரை ஆட்சி செய்த சோழன் பாண்டி நாட்டின்மீது படை எடுத்து வெற்றி பெற்றான். தோற்று ஓடிய பாண்டிய மன்னன் விஜயநகர ராஜ்யம் சென்று அடைக்கலம் புகுந்து சோழனோடு சண்டை செய்ய அவர்களை அழைத்துவந்தான். இதன் பயனாக சோழநாடும் பாண்டியநாடும் நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது.

உறையூர் நகரத்தில் சோழர் ஆட்சிக்கும் பாண்டியர் ஆட்சிக்கும் 1559-ம் ஆண்டில் முற்றுப்புள்ளி வைக்கப் பெற்றது. தமிழ் மன்னர்கள் ஆட்சி வீழ்ந்த பொழுதே தமிழ் மக்களின் வாழ்வும் வீழத் தொடங்கியது. காவிரியும் உறையூரும் கண் கலங்கின.

1559 முதல் 1736 வரை உறையூர் நாயக்கர் ஆட்சியில் அடங்கியிருந்தது. தென்னாட்டில் விஜயநகர ராஜ்யத்தை முதன் முதலாக நிலை நிறுத்தியவன் விசுவநாத நாயக்க னாவான். திருச்சியில் காணப்படும் மேலக்கோட்டை வாயிலும், ஆண்டார் தெருவில் காணப்படும் கோட்டைச் சுவரும் நாயக்கர்களின் காலத்தில் கட்டப்பெற்றவையாகும். நாயக்கர் வழிவந்த கடைசி அரசி ராணி மங்கம்மாளின் மருகி மீனாட்சியம்மாளிடமிருந்து, திருச்சியும் உறையூரும் ஆற்காட்டு நவாப் இடம் சென்றது.

கி.பி.18-ம் நூற்றாண்டினிறுதியில் உறையூருக்காகப் பிரஞ்சுக்காரருக்கும் பிரிட்டிஷ்காரருக்கும் உறையூரைச் சுற்றிச் சண்டை நடந்திருக்கிறது. திருச்சிக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் சந்தைப் பேட்டை மலை என்று ஒன் றிருக்கிறது. அதன் பெயர் அதுவல்ல. அதன் உண்மைப் பெயர் ‘சண்டைபோட்ட மலை’ என்பதாகும். ஆங்கிலத்தில் அம்மலைக்குப் “பிரஞ்ச் ராக்” என்று பெயர். இன்றைக்கும் இம்மலை பழமையைப் பாதுகாக்கும் அதிகாரிகளால் பாது காக்கப்பெற்று வருகிறது. 1820-ம் ஆண்டில் கூட உறையூரில் பிரிட்டிஷ் துருப்புகளிருந்தன.

உறையூரில் சுண்டைக்காய்ப்பாறை என ஒன்றுண்டு. அதில் ஒரு சுனையும், சுனை அருகில் ஒரு கல்வெட்டும் இருக்கிறது. அவற்றைப்பற்றி சொல்லப்படும் கதைகள் மிகப் பயங்கரமானவைகளாகவிருக்கின்றன. உண்மை என்ன ? என்று இன்னும் விளங்கவில்லை. இவை ஆராயத் தக்கவை.

பழங்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்தில் உறையூர் புகழ்பெற்று வருகிறது. திருச்சியும் உறையூரும் 1866-ல் நகரசபை ஆட்சிக்குட்பட்டது. திருச்சி நகரசபைக்கு உறையூர் இன்னும் தலைநகராக இருந்து வருகிறது. திருச்சி ஜில்லாவுக்குள் நெசவு தொழிலுக்கு உறையூர் புகழ் பெற்ற தாகும். சென்னை மாகாணத்திலேயே கருங்கல் சிற்பத் தொழிலுக்கு உறையூர் சிறந்ததாகும். இந்தியா என்ன? உலக முழுவதற்குமே சுருட்டுத் தொழிலில் சிறந்த பெயர் பெற்று விளங்கிவருவது உறையூரேயாகும். இதுநாரும் கூறியவைகளால் காவிரியும், உறையூரும் பழைமையிலும், புதுமையிலும் புகழ்பெற்றவை என நன்கு விளங்கும்.

வணக்கம்.

(‘ஆறும் ஊரும்’ என்ற தலைப்பில் 24-9-46-ல் பேசியது.)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *