வள்ளுவர் கண்ட மனையறம் சுந்தர சண்முகனார்

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை என்றால், ஆடவன் மனைவியுடன் வீட்டில் இருந்து நடாத்தும் குடும்ப வாழ்க்கை என்பது பொருள். இல்லறத்தின் பெருமையினையும். அதனால் உண்டாகும் நன்மையினையும். இல்லறத்தாரின் கடமையினையும் தொகுத்து சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் என்னும் அழகுபட இவ்வதிகாரத்தில் கூறியிருத்தலின், இது முன் வைக்கப்பட்டது.

1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

(பதவுரை) இல்வாழ்வான் என்பான் – வீட்டில் மனைவியுடன் இருந்து வாழும் குடும்ப வாழ்க்கையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், இயல்பு உடைய – இயற்கையாக உரிமை உடையவர்களாக உள்ள, மூவர்க்கும் – (பெற்றோர், மனைவி, மக்கள் என்னும்) மூவகையார்க்கும், நல் ஆற்றின் நல்வாழ்வு என்னும்) நல்ல வழியிலே, நின்ற – (உதவியாகக் கிடைக்கப் பெற்று) நின்ற, துணை – துணையாவான்.

இனி முறையே மணக்குடவர் உரையும், பரிமேலழகர் உரையும் வருமாறு:-

(மண – உரை) இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் பிரமச்சாரி, வானப்பிரத்தன், சந்நியாசி என்னும்) இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்ற ஒரு துணை.

(பரி -உரை ) இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான் (பிரமசரிய ஒழுக்கத்தானும், வனத்தின் கண் தீயோடு சென்ற மனையாள் வழிபடத் தவம் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றுந்துறந்த யோக ஒழுக்கத்தானும் ஆகிய) அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலைபெற்ற துணையாம்.

(தெளிவுரை ) ஒரு பெண், தன் இளம்பருவத்தில் பெற்றோரின் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் கணவனின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்வதாகக் கூறுவதியல்பு. அதுபோலவே ஓர் ஆண்மகனும், இளம்பருவத்தில் பெற்றோர் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் மனைவியின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்கின்றான். இம்முறையாக நோக்குங்கால், ஓர் இல்வாழ்வான் ஒருசேரத் தன் பெற்றோரையும் மனைவியையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயக் கடமை உடையவனாய்க் காணப்படுகின்றான் என்பது தெளிவு. பொருட்செறிவுடைய கதையொன்றும் புகலப்படுவது உண்டு நம் நாட்டில்!

ஒருநாள் ஒரு விறகுவெட்டி எட்டணா சம்பாதித்தானாம். அவ்வணாக்களை அன்றைக்கே செலவழித்துவிட்டானாம். மெய்தானே! எட்டணா எப்படிப் போதும் ஒரு குடும்பத்திற்கு! ஆனால், அவன் அன்றிரவு தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் பின்வருமாறு பகர்ந்தானாம். இன்றைக்கு நான் எட்டணா சம்பாதித்தேன். அவற்றுள் இரண்டணாவைப் பழைய கடனுக்காகக் கொடுத்துவிட்டேன். நான்கணாவைக் குடும்பத்திற்காகச் செலவழித்து விட்டேன். மீதி இரண்டணாவைப் பின்னால் உதவுவதற்காக உண்டிப் பெட்டியில் போட்டு வைத்துள்ளேன் என்பது விறகு வெட்டியின் செலவு விளக்கம். கேட்டான் பக்கத்து வீட்டுக்காரன். வியப்புடன், இக்காலமான காலத்தில் எட்டணா முழுவதுமே போதாதே! அப்படியிருக்கக் கடன் எப்படித் தந்தாய்? மிச்சப்படுத்தியது எப்படி? என்று வினவினான். பின் விறகுவெட்டி, பழைய கடனைக் கொடுத்தல் என்றால், இதற்குமுன் என்னைப் பெற்று வளர்த்துச் செலவுசெய்து காப்பாற்றிய என் பெற்றோர்க்காக இரண்டணாவை ஒதுக்குதல்; குடும்பத்திற்குச் செலவழித்தல் என்றால் எனக்கும் என் மனைவிக்குமாக நான்கணாவை ஒதுக்குதல்; மிச்சப்படுத்துதல் என்றால், எதிர்காலத்தில் காப்பாற்றும் கடமைப்பட்டுள்ள பிள்ளைக்காக இரண்டணாவை ஒதுக்குதல் என்று மேலும் விளக்கம் செய்தானாம். இப்போது விளங்குமே இக்குறட்கருத்து!

(ஆராய்ச்சி உரை ) திருமணம் ஆவதற்குமுன் உள்ள நிலைக்குப் பிரமசரியம் என்று பெயர்: திருமணமாகி மனைவியோடு வீட்டில் வாழும் நிலைக்குக் கிருகத்தம் என்று பெயர். வீட்டை வீட்டு மனைவியுடன் காட்டையடைந்து தவம் செய்யும் நிலைக்கு வானப்பிரத்தம் என்று பெயர்; எல்லாவற்றையும் துறந்த தனித்த நிலைக்குச் சந்நியாசம் என்று பெயர். இது வடநூல் வைப்புமுறை. இந்நான்கு திறத்தாருள், கிருகத்தனாகிய இல்வாழ்வான் ஏனைய மூன்று திறத்தாரையும் காப்பாற்ற வேண்டும் என்றே இக்குறளுக்கு உரையாசிரியர் பலரும் உரை தீட்டிவிட்டனர். தமிழர்தம் கோட்பாடு இஃதன்று: இதனினும் வேறுபட்டது. சிறிது ஆராய்வோம்.

ஒருகால், அயல்நாட்டிலிருந்து தென்னாட்டுள் புகுந்தனர் ஆரியர். அவர்க்கென வீடுவாசல், நிலம், நீர் முதலியன இல்லை. அதனால் ஒன்றிய குடும்பத்துடன் ஓர் ஊர்க்குள் வாழமுடியவில்லை. பிள்ளைகளை ஓரிடத்தில் ஒண்டச் செய்தனர். அவருடைய பொழுதுபோக்கு நிலைக்குப் பிரமசரியம் எனப் பேர் தந்து, பிறர் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று பிழைப்புக்கு வழியும் செய்துவைத்தனர். சிலர் மட்டும் கணவனும். மனைவியுமாக ஊர்க்குள் உதவிபெற்று ஒன்றி வாழ்ந்தனர். அந்நிலைக்குக் கிருகத்தம் என்று பெயரிட்டனர். சிலர் ஊர்க்குள் புகுந்து பிச்சையெடுத்து உண்டு, கணவனும் மனைவியுமாகக் காட்டோரங்களில் தங்கலாயினர். இவர்தம் நிலைக்கு வானப்பிரத்தம் என்பது பெயர். ஒருதுறையும் அற்ற சிலர் முற்றத் துறந்த முனிவராகித் தனித்துத் திரிந்தனர். இவர்களே சந்நியாசிகள். எனவே, ஆரியர் தம் வரலாற்று நிலைக்கு ஏற்ப வர்ணாசிரமங்களை வகுத்துக் கொண்டனர் என்பது புலப்படும். இத்தகைய நெருக்கடியான நிலை தமிழர்தம் வரலாற்றில் என்றும் ஏற்பட்டதில்லை. ஆதலின் அவர்கள் எவ்வளவு ஏழ்மையாயிருப்பினும் தம் பிள்ளைகளைத் தம்முடனேயே வைத்து வளர்த்துவந்தார்கள். அதனால், தமிழர்க்கும் பிரமசரிய நிலைக்கும் தூரம் அதிகம். ஏனைய நிலைகளையும் இவ்விதமே கொள்ளவேண்டும். ஆனால், தமிழர்க்கு இரண்டு நிலை உண்டு. (இவ்விரண்டினை மட்டுமே திருவள்ளுவர் தம் நூலுள் விவரித்துள்ளார்.)

அவையாவன:- ஒன்று. குறிப்பிட்ட காலம் வரையும் மனைவியுடன் கூடிச் சிற்றின்பம் நுகர்ந்து, உலகிற்குத் தொண்டாற்றும் உயர்ந்த இல்லற நிலை; மற்றொன்று, சிற்றின்பம் வெறுத்தபின், பேரின்பத்தில் விருப்புடையவராகிப் பிற உயிர்களிடம் பேரிரக்கம் பூண்டொழுகும் துறவற நிலை. இவ்விரு நிலைகளையே இல்லறஇயல், துறவறவியல் என இயம்பலானார் வள்ளுவனாரும். எனவே, தமிழர்தம் கோட்பாட்டுக்கும் திருவள்ளுவர் கருத்துக்கும் மாறாக, இக்குறளுக்கு உரையெழுதுதல் ஒரு சிறிதும் ஒவ்வாது என உணர்க.

ஆகவே, இக்குறளில் உள்ள “மூவர்” என்னும் சொல்லுக்குப் பிரமசாரி, வானப்பிரத்தன். சந்நியாசி எனப் பொருள் உரைக்காமல், பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை எனப்பொருள் உரைத்தாம் யாம். பிறர் கூறும் வானப்பிரத்தனையும், சந்நியாசியையும், நம் வள்ளுவர் துறவி என ஒன்றாக அடக்கி, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை, “துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்” என்னும் அடுத்த குறளில் கூறியுள்ளார். பிரமசாரியாய் இருந்து வறுமையுற்று வாடும் பிறருடைய பிள்ளைகளைத் “துவ்வாதவர்க்கும்” என்பதனுள் அடக்கிவிடலாம். ஆகவே. அடுத்த குறளையும் ஆராயின் அறிய வருமே உண்மை!

சிலர் திருமணம் ஆனதும் மனைவியின் வயப்பட்டுப் பெற்றோரைப் போதிய அளவு காப்பாற்றுவதில்லை. “தாய் தண்ணீர் இன்றித் தவிக்கின்றாள். தம்பி கும்பகோணத்தில் கோதானம் கொடுத்துக் கூத்தடிக்கின்றானாம்” என்னும் பழமொழி எழுந்ததும் இது குறித்தே. இன்னோரைத் திருத்துவதற்காகவே, “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”, “தந்தை தாய்ப் பேண்” முதலிய பொன்மொழிகள் எழுந்தன. சிலர் குடித்தும், சூதாடியும், வைப்பாட்டியின் வயப்பட்டும் பெண்டாட்டி, பிள்ளைகளைக் காப்பாற்றாமல் அடித்துத் துரத்தி அல்லல் அடையச் செய்கின்றனர். எனவே, இல்வாழ்வார் எவரும் இனியும் இத்தகைய தீய செயல்களுக்கு இடம் இல்லாமல், இம்முத்திறத்தாரையும் உணவு உடை முதலியவற்றால் ஒழுங்காகக் காப்பாற்ற வேண்டும் என்று இக்குறளால் தெரிவித்துள்ளார் திருவள்ளுவர். இக்குறளுக்கு இவ்விதம் உரை செய்யாவிட்டால், மேற்கூறிய சில கருத்துக்களையெல்லாம் கூறாதுவிட்ட குறைபாடு ஆசிரியரை அடையும் அன்றோ? ஆய்க அறிஞர்!

2. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.

(பதவுரை) இல்வாழ்வான் என்பான் – இல்லறத்தான் என்று சொல்லப்படுபவன், துறந்தார்க்கும் (பற்றுக்களைத்) துறந்த பெரியாருக்கும், துவ்வாதவர்க்கும் (ஏழ்மையால்) எவ்வித இன்பத்தையும் அநுபவிக்க முடியாத ஏழை எளியவருக்கும், இறந்தார்க்கும் (ஆதரவின்றித் தம் பார்வையில்) இறந்து கிடப்போருக்கும் (அஃதாவது அனாதைப் பிணங்களுக்கும்) துணை (தக்க) துணையாவான்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண-உரை) வருணத்தினையும், நாமத்தினையும் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளராய் உண்ணப் பெறாதார்க்கும். பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் துணையாவான்.

(பரி -உரை) களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும், நல்கூர்ந்தார்க்கும், ஒருவரும் இன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணை.

(தெளிவுரை) து என்றால் அநுபவித்தல், துவ்வாதவர் என்றால் அநுபவிக்காதவர் – அஃதாவது, இன்பம் அநுபவிக்க முடியாத ஏழை எளியவர்கள். இல்வாழ்வான். துறவிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும் உணவு, உடை முதலியன உதவ வேண்டும்;

ஆதரவற்ற (அனாதைப்) பிணங்களை அப்புறப்படுத்தி இறுதிக்கடன் இயற்ற வேண்டும் என்பது கருத்து. ஆதரவில்லாப் பிணங்களை அப்புறப்படுத்துவது அறங்களுள் ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது.

(ஆராய்ச்சி உரை) உரையாசிரியர்கள் பலரும், முன் குறளில் சொல்லப்பட்டுள்ள மூவருள் துறந்தாரையும் ஒருவராகச் சேர்த்துவிட்டார்கள் ஆதலின், இக்குறளில் உள்ள “துறந்தார்க்கும்” என்ற சொல்லைக் கண்டு திகைத்து வேறு என்னென்ன பொருள்களையோ விளம்பி இடர்ப்படுகின்றனர். மணக்குடவர், முன் குறளில் உள்ள மூவருள் ஒருவராகிய துறவி, வருணத்தினையும், நாமத்தினையும் (சாதி சமயங்களை) துறவாதவர் என்றும், இக்குறளில் உள்ள துறவி, வருணத்தினையும் நாமத்தினையும் துறந்தவர் என்றும் வேற்றுமை காட்டிச் சரிசெய்யப் பார்க்கின்றார். துறவிகளுக்குள்ளேயே, வருண நாமங்களைத் துறந்தவர் என்றும், துறவாதவர் என்றும் இருவகை உண்டா? இல்லையே! வருண நாமங்களைத் துறவாதவர்களை எப்படித் துறவிகள் என்னும் பெயரால் அழைக்கமுடியும்? வருண நாமங்களையே துறவாதவர்கள் வேறு எவற்றைத்தாம் துறக்க உடன்படுவார்கள்? நிற்க-

பரிமேலழகரும், முன் குறளிலேயே துறந்தாரைக் கூறிவிட்டாராதலின், இக்குறளில் உள்ள துறந்தார் என்பதற்கும் துறவி எனப் பொருள்கூற உடன்பட்டிலர். ஆனால், இவரும் வேறுவிதமாகச் சரி செய்யப் பாடுபட்டுள்ளார். அஃதாவது – துறந்தார் என்றால், இவ்வளவு நாள் காப்பாற்றி வந்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் (துறக்கப்பட்டவர்கள்) என்று கூறியுள்ளார். இங்ஙனம் துரத்தப்பட்டு இன்பம் அனுபவிக்க முடியாமல் தவிப்பவர்களைத் “துவ்வாதவர்” என்பதற்குள் அடக்கிவிடலாமே! மற்றும், துறந்தார் என்னும் செய்வினையை, துறக்கப்பட்டார் எனச் செயப்பாட்டு வினையாக வலிந்துகொண்டு இடர்ப்படவும் வேண்டியதில்லையே! எனவே, ஈண்டு, துறந்தார் என்பதற்குப் பற்றுக்களைத் துறந்த பெரியோர்கள் என்று பொருள் கொள்வதே சாலப்பொருந்தும். அச்சொல்லுக்குரிய இயற்கைப் பொருளும் அதுவே. தமக்கென ஒரு வருவாயும் தேடாமல், பிறர் நலத்திற்கே பாடுபடும் துறவிகளுக்கு உணவு, உடை முதலியனவற்றை இல்லறத்தான்தானே கொடுக்க வேண்டும். இன்னும், கண், கால் முதலிய உறுப்புக் குறைந்தவராகித் தொழில் செய்ய முடியாமல் பிச்சை எடுப்போரை, துவ்வாதவர் என்பதனுள் அடக்க வேண்டும்.

3. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை.

(பதவுரை) ஆங்கு – அவ்வில்வாழ்க்கையில், தென்புலத்தார் (இறந்துபோய்த்) தென்திசையில் இருப்பவராகக் கருதப்படும் முன்னோரும். தெய்வம் – கடவுளும், விருந்து – (இதற்குமுன் வராத புதிய) விருந்தினரும், ஒக்கல் – சுற்றத்தார்களும், தான் – தானும் (அதாவது இல்வாழ்வானும்). என்ற – என்று சொல்லப்படுகின்ற ஐம்புலத்து – ஐந்து வகையார் இடத்திலும் செய்யவேண்டிய, ஆறு – அற நெறியை, ஓம்பல் – தவறாமல் செய்தல், தலை தலை சிறந்ததாகும். (ஆங்கு என்பதை அசையாகவும் தள்ளலாம்.)

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) பிதிரர், தேவர், புதியராய் வந்தார். சுற்றத்தார், தான் என்னும் ஐந்திடமாகிய நெறியைக் கெடாமல் ஓம்புதல் தலையான இல்வாழ்க்கை.

(பரி. உரை) பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம். பிதிரர் ஆவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், தென்புலத்தார் என்றார்.

(தெளிவுரை) தென்புலம் – தென்திசை. இறந்து போனவர்களின் உயிர் தெற்கே செல்வதாக அக்காலத்து மக்கள் எண்ணிவந்தனர். அதற்கேற்பவே வள்ளுவரும் அறிவித்துள்ளார்.

எனவே இறந்துபோனவர்களை ஓம்புதல் என்றால் என்ன? தாய் தந்தையரோ, புலவர்களோ, துறவிகளோ, வள்ளல்களோ இறந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் உயிர் தென்புலத்தில் இருந்தால்தான் நமக்கென்ன? இல்லாவிட்டால்தான் நமக்கென்ன? அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு அறிகுறியாக – அவர்கள் இவ்வுலகிற்குத் தொண்டாற்றியதற்கு அடையாளமாக – அவர்களைப் போலவே ஏனையோரும் நல்வழியில் நடக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நெறியாக – அவர்களால் நன்மைபெற்ற நாம், அவர்கட்கு நன்றி செலுத்தும் வாயிலாக – அவர்கட்கு நினைவுநாள் கொண்டாடவேண்டும். இப்போதும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுகின்றோம் அல்லவா? இறந்துபோன தாய் தந்தையரை ஆண்டுதோறும் எண்ணி நன்றி பாராட்டுபவராக நடந்துகொள்கின்றோம் அல்லவா?

இவை போல்வனவற்றையே தென்புலத்தாரை ஓம்பல் எனத் தெரிவித்துள்ளார் திருவள்ளுவர்.

தெய்வத்தை ஓம்புதல் என்றால், ஓய்வும் உறுதியும் பெறுவதற்காகக் கடவுளை வழிபடுதல்.

விருந்து என்பதற்கு நேர்பொருள் புதுமை. “விருந்தே புதுமை” என்பது தொல்காப்பிய மூலம். வெள்ளை கறக்கிறது என்றால் வெள்ளையான பசு கறக்கிறது என்று பொருள் கொள்வதைப் போல, விருந்து வந்தது என்றால் புதிதான மனிதர் வந்தார் என்று பொருள் கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஆகுபெயர் என்று பெயர். ஆகுபெயர் என்றால் ஒன்றைக் குறிக்கும் ஒரு பெயர். அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு ஆகிவருவது. புதுமையைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், புதிதாய் வருகின்ற மனிதர்க்கு ஆகிவருவதால் இஃது ஆகுபெயராகும். இதன் வகைகள் பல. ஈண்டு விரிப்பின் பெருகும். எனவே, முன்பின் வந்துகொண்டிருக்கும் தொடர்புடைய உறவினர்கள் விருந்தினர் ஆகமாட்டார் என்பதும், திடீரெனப் புதிதாக வருபவரே விருந்தினர் ஆவர் என்பதும் வெட்ட வெளிச்சம். திருக்குறள் விருந்தோம்பல் என்னும் பகுதியிலுள்ள “வருவிருந்து வைகலும் ஓம்புவான்”, “செல் விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்” என்னும் குறட்பகுதிகளாலும் இதனைக் குறிப்பாய் உணரலாம். மேலும், இக்குறளிலேயே ஒக்கல் (சுற்றம்) என ஒன்று தனியாகக் கூறியுள்ளமையே. உறவினர் விருந்தினர் ஆகார் என்பதற்கு மறுக்கமுடியாத அகச்சான்றாகும். சரி நல்லது, புதிதாக வருபவரே விருந்தினர் என்பீராயின், அவர்களை முன்குறளில் உள்ள துறந்தார், துவ்வாதவர் என்பவர்க்குள் அடக்கிவிடக்கூடாதோ? என்று வினவலாம். அடக்கமுடியாது. ஏன்?

ஓர் ஊரில் விழா நடக்கின்றது. மாநாடு நடக்கின்றது. இன்னபிற சிறப்புக்கள் நடைபெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அவ்வூர்க்குப் புதிய மக்கள், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வருவார்கள். அப்புதியோர்க்கு ஊரினர் தங்க இடம் அளிக்கலாம்; குளிக்கவும், குடிக்கவும் தண்ணீர் வசதி செய்து தரலாம்; இயலுமேல், வந்தவர்க்கும் உடன்பாடாகில் உணவும் அளிக்கலாம். செய்யப்பட வேண்டியதொன்றுதானே இஃது! இன்றும் நாட்டில் நடைபெறுகின்றதே. இத்தகைய நிகழ்ச்சி! அன்றியும் புதிதாக வந்த இடத்தில் குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோர் என்ன செய்ய முடியும்? ஊரார் உதவி இருந்தே தீரவேண்டும். இத்தகைய புதியோரைத் துறந்தார் என்று சொல்ல முடியுமா? அல்லது. துவ்வாதவர் என்றுதான் மொழிய முடியுமா? முடியவே முடியாதே! உண்மையான விருந்தினர் என்பவர் இப்புதியோரே! இன்னும் சிலர் (பிரயாணம்) வழி நடந்து செல்கிறார்கள். அவர்கள், வெய்யில் கடுமையாகக் காயும் நேரத்திலோ இரவிலோ, மழை பெய்யும் நேரத்திலோ வழியில் உள்ள ஓர் ஊரில் தங்கிவிடுவார்கள். அவர்களும் அவ்வூரார்க்கு விருந்தினரேயாவர். ஏன்- இப்புதியோர், ஊராரின் உதவியின்றித் தம் கைப்பணத்தைக் கொண்டு, தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள முடியாதா என்று சிலர் ஐயுறலாம். இங்கொரு செய்தியை நினைவுபடுத்தினால் இவ்வையத்திற்கு ஒருவாறு இடமிருக்காது. அஃதென்ன?

புகைவண்டி, நிலஊர்தி, வானஊர்தி முதலியவற்றின் மூலமாக வழி கடப்பது இந்தக் காலம்; பெரும்பாலும், கட்டை வண்டி, கால்நடையின் மூலமாக வழி கடந்தது அந்தக் காலம். தம்மூரில், தம் வீட்டில் காலை உணவு உண்டு, பின் தொலைவில் உள்ள வெளியூர்கட்குச் சென்று வேலையை முடித்துக் கொண்டு தம் வீடு திரும்பிவந்து அடுத்த வேளை உணவு உண்ணுவது இந்தக்காலம்; கட்டு சோறு கட்டிக் கொண்டு நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் வெளியூர்சென்று மீண்டது அந்தக்காலம். கண்ட இடங்களில், கண்ட நேரங்களில், கண்ட உணவுச்சாலைகட்குள் புகுந்து காசை இறைத்து வயிற்றை நிரப்புவதற்கு வாய்ப்பு மிகமிகக் கிடைக்கப் பெற்றிருப்பது இந்தக் காலம்; கட்டுசோற்று மூட்டை கரைந்த பின்பு, ஊர்க்குள் புகுந்து ஊராரின் உதவி பெற்றது அந்தக் காலம். எனவே, இல்லறத்தான் விருந்தோம்ப வேண்டும் என்று அந்தக் காலத்தில் வள்ளுவர் வற்புறுத்தியிருப்பது பொருத்தந்தானே! எல்லாம் வளர்ச்சி பெற்ற இந்தக்காலத்திலும் இவ்விருந்தோம்பல் தேவைப்படுகின்ற தென்றால் மேலும் கூறுவானேன்?

எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கே (எள்+நெய்) எண்ணெய் என்று பெயர்; அந்தப் பெயர், பின்பு தன்னோடு ஓரளவு ஒப்புமை உடைய ஏனைய எண்ணெய்களுக்கும் வழங்கப்பட்டதைப் போல புதியோரைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், பின்பு அவரைப் போல் வந்து போகும் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது. எனவே, இதுகாறும் கூறியவற்றால், தம்மை நாடிவரும் புதிய விருந்தினரை ஓம்ப வேண்டியது இல்லறத்தானுக்குரிய கடமைகளுள் ஒன்று என்பது உணரப்பெறும்.

ஒக்கல் என்றால் சுற்றத்தார்கள். இல்லறத்தான் தன்னைச் சேர்ந்த சுற்றத்தார்களையும் ஓம்பவேண்டும். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்கல் என்பது நாம் அறிந்ததுதானே!

முதல் குறளில் உள்ள “இயல்புடைய மூவர்” என்பதற்கு, பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்னும் மூவர் எனப் பொருள் உரைத்தாம் யாம். ஏன் -அம்மூவரையும் இக்குறளில் உள்ள சுற்றத்தாருக்குள் அடக்கிவிடக் கூடாதா? என்ற வினா எழலாம் ஈண்டு. அடக்கமுடியாது. ஏன்?

ஒருவன் தன் பெற்றோர், மனைவி, மக்கள் எனும் மூவகையாரோடு கொள்ளும் தொடர்புக்கும், ஏனைய சுற்றத்தார்களோடு கொள்ளும் தொடர்புக்கும் வேற்றுமை மிக உண்டு. வெளியூருக்குச் சென்ற பெற்றோரோ, மனைவியோ, மக்களோ திரும்ப வீட்டிற்கு வந்தால், வீட்டிற்குரியவன் பிறரை நோக்கி, என் வீட்டிற்குச் சொந்தக்காரர் வந்திருக்கிறார் என்றோ, விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்றோ சொல்லும் வழக்கம் எங்கும், என்றும் இல்லை. ஏனைய உறவினர் வந்தால் அப்படிச் சொல்லுவது உண்டு. தமையன், தமக்கை, தம்பி, தங்கை என்பவரும் தனித்தனிக் குடும்பத்தினராக ஆய்விடுவதால் அவர்களும் விருந்தாளிகளாகக் கருதப்பட்டு விடுவதை நாம் வாழ்க்கையில் கண்டே வருகின்றோம். மேலும், ஒருவன் தன் பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்பவர்க்கு உரிய உடைமைகளையெல்லாம், ஏறக்குறையத் தனக்கும் உரியனவாக எண்ணுகின்றான். ஏனையோர் உடைமைகளை அங்ஙனம் எண்ணுவது இல்லை. எனவே, இம்மூவரும் ஏனையோரைப் போலச் சுற்றத்தார் என்னும் சொற்குள் கட்டுப்படாமல், பிரிக்கமுடியாத குடும்ப உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றார்கள் என்பது இனிது புலனாகும். இதற்கு அகச்சான்று வேண்டுமானால், “இயல்புடைய மூவர்க்கும்” என்பதில் உள்ள “இயல்புடைய” என்னும் சொற்றொடர் ஒன்றே போதுமே!

சுற்றம் ஓம்புதலாவது :- பல வேலைகளின் நிமித்தம் வெளியூரிலிருந்து வந்து போகும் சுற்றத்தார்க்கு உணவு முதலியன உதவுதல், ஆதரவற்ற சுற்றத்தார்களைத் தம்மோடு வைத்து ஆதரித்தல், அன்னோரின் பிள்ளைகட்குக் கல்வி வசதிசெய்தல், அன்னோர்க்கு ஏதேனும் வருவாய்க்கு வழி தேடித்தருதல் முதலியனவாம். இவ்வுதவிகளையெல்லாம் இல்லறத்தான் இயன்றவரை இயற்றலாமே!

ஐந்தாவதாக (தான்) இல்லறத்தான் தன்னையும் ஓம்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருவள்ளுவர். இஃது சிலர்க்கு வியப்பையும் அளிக்கலாம். அப்படியொன்றும் இங்கு வியப்பிற்கு இடமில்லை. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் பாதுகாத்துக் கேடுகெட்ட மானிடர்கள் எத்துணையோ பேர் உண்டு. இல்லாதவனைப் பற்றி இங்கு எடுத்துரைக்கவில்லை. சிலர் அரும்பாடுபட்டுச் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பார்கள். ஆனால், நல்ல உணவினையோ, உடையினையோ, உறக்கத்தினையோ, உறையுளையோ (இடம்), இன்ன பிற இன்பங்களையோ வேண்டிய அளவு பெற்றிருக்க மாட்டார்கள். என்னே இவர்தம் இரங்கத்தக்க நிலை! தன்னைப் பாதுகாத்துக் கொண்டால்தான், மேன்மேலும் பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும். எனவே, மேற்கூறிய ஐந்தும் இல்வாழ்வான் இயற்ற வேண்டியவை என்பது இக்குறட் கருத்து.

(ஆராய்ச்சி உரை) தென்புலத்தார் என்பதற்கு, முதல் முதல் உலகத்தை உண்டாக்கிய போதே நான்முகனால் (பிரமனால்) உண்டாக்கப்பட்ட ஒரு தெய்வசாதி என்று பரிமேலழகர் பகர்ந்தனர் உரை. ஏன் இவர்களை, தெய்வம் என்பதற்கு அவர் கூறும் பொருளான தேவர்க்குள் அடக்கிவிடலாமே! தென்திசையில் இருக்கும் இத்தெய்வ சாதியார்கள் நமக்காக என்ன செய்கின்றார்களோ? நாம் இவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ? ஒன்றும் புரியவில்லை. ஏனைய தெய்வங்களைப் போலவே இவர்களும் அருள்புரிகின்றார்கள் என்றால், இவர்களையும் தெய்வக்கூட்டத்துள் சேர்த்து விடுவதால் என்ன இடையூறு? எனவே, இப்பொருள் பொருத்தம் அன்று.

மேலும், இப்பொருள் உரைத்தால், யாம் உரைத்தபடி முன்னோரின் நினைவு விழாவிற்கு இடமில்லாமலேயே போய்விடும். இறந்துபோன வீரர் முதலியவர்களுக்கு விழாக்கொண்டாட வேண்டாமா? கொண்டாடியதாகக் கூறுகின்றனவே சங்ககால இலக்கண இலக்கியங்கள்! வீரமங்கை கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானே ஒரு தனித்தமிழ் மன்னனாம் சேரன் செங்குட்டுவன்.

சிலப்பதிகாரத்திற்குள் சென்று பார்த்தால் தெரியும். எனவே, தென்புலத்தார் என்பதற்கு, சிறந்த செயல்கள் செய்து சென்றுபட்ட முன்னோர் எனப் பொருள் கூறலே சாலப் பொருந்தும்.

4. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

(பதவுரை) வாழ்க்கை – (ஒருவனுடைய) இல்வாழ்க்கையானது. பழி அஞ்சி – (பொருள் தேடுதல் முதலியவற்றில் உண்டாகும்) பழிக்கு அச்சப்பட்டு, பாத்து – (அப்படி நல்லவழியில் வந்த செல்வப்பயனைப் பலர்க்கும்) பகுத்துக் கொடுத்து. ஊண் – (தானும்) உண்ணுதலை, உடைத்தாயின் உடையதாக இருக்குமேயானால், வழி – (அந்நல்வாழ்க்கையின்) தொடர்ச்சி, எஞ்சல் – அற்றுப்போதல். எஞ்ஞான்றும் – எப்பொழுதும், இல்-இல்லை.

இனிமுறையே மணக்குடவர் உரையும், பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண – உரை) இல்வாழ்க்கையாகிய நிலை பழியையும் அஞ்சிப் பகுத்துண்டலையும் உடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத்தினும் இல்லை.

(பரி – உரை) பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின், அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தல் இல்லை.

(தெளிவுரை) கெட்ட வழியில் பணம் தேடினால் உலகம் பழிக்கும் என்று அஞ்சி, நல்ல வழியில் தேடி, அதனைப் பலர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்பவனுடைய வாழ்க்கை தொடர்ந்து நல்ல விதமாக நடக்கும் என்பது வள்ளுவரின் வாய்மொழி. இஃது என்னே விந்தை! உலக நடை ஒன்றும் திருவள்ளுவர்க்குத் தெரியாது போலும்! என்று வியக்கலாம் சிலர். ஏன்?

கெட்டவழியில் பொருள் தேடாவிட்டால் பலர்க்கும் பகுத்துக்கொடுக்கும் அளவு பொருள் சேர்வது எப்படி? நல்ல வழியில் பொருள் தேடும் நல்லோர் சிலர், தம்மையே நன்கு பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றார்களே! அவர்கள் பலர்க்கும் பகுத்துக் கொடுப்பது எப்படி? செல்வம் சேர்ந்திருந்தாலும், பலர்க்கும் பகுத்துக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அக்குடும்பம் விரைவில் நொடித்துவிடாதா? பின்பு இடையறாமல் எப்போதும் விளங்குவது எப்படி? என்பவற்றையெல்லாம் எண்ணும்போது இக்குறளில் நம்பிக்கை தோன்றாது தானே! இதனைச் சிறிது ஆராய்வோம்.

திருவள்ளுவர் இந்தக் குறளில் தெரிவித்திருப்பது என்ன? நல்ல வழியில் பொருள் ஈட்டவேண்டும்; அப்பொருளை, (பெற்றோர். பெண்டாட்டி, பிள்ளை, துறந்தார், துவ்வாதவர், இறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார், தான் என்னும்) பலர்க்கும் பயன்படுத்தி வாழவேண்டும் என்பதுதானே! இல்வாழ்வான் தன்னையும், தன் பெற்றோர், மனைவி, மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒருவன் தன் செல்வம் முழுவதையும் பிறர்க்கே செலவிட்டுத் தன் குடும்பத்தை அழித்துவிட வேண்டும் என்பதன்று. போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்றதல்லவா? எனவே, பிறர்க்கு ஓரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்துவிடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கும் உதவிப் பலருடைய நன்மதிப்பையும் பெறுவதால், தப்பித்தவறித் தன் குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அப்பலரும் உதவுவர். பலருள் சிலர்கூடவா நன்றி பாராட்ட மாட்டார்கள்? பிறர்க்கு உதவாதவனடைய குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அதிலும் அவன் கெட்டவழியில் பொருள் ஈட்டியிருப்பானேயானால் அவன் குடும்பத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள்.

மேலும், கெட்ட வழியில் மிக்க பொருள் திரட்டி வாழ்வது வெள்ளத்தை நம்பி வாழ்வது போலாகும். வெள்ளம் எப்போதும் வருமா? ஆனால், நல்ல வழியில் பொருள் ஈட்டி வாழ்வதோ, ஊற்றுநீரை நம்பி வாழ்வது போலாகும். ஊற்று எப்போதும் சுரக்குமன்றோ? எனவே, நல்வழியில் பொருளீட்டி, நாலாபேர்க்கும் உதவி வாழ்வானுடைய குடும்பம் தொடர்ந்து விளக்கம் பெறும் என்னும் இக்குறட் கருத்து இப்போது ஏற்புடையதாய்த் தோன்றுமே!

(ஆராய்ச்சி உரை) சிலர் இன்னொருவருடைய பொருளை எடுத்துத் தம்முடையது போல வழங்குவார்கள். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைப்பது’ என்றால் இதுதான்? இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடு படுத்தி அவரிடம் உள்ள பொருளைப் பறித்து, நல்லவர் போலத் தாங்கள் வழங்குவார்கள். “மாட்டைக் கொன்று செருப்புத்தானம் செய்வது” என்றால் இதுவேதான். இவ்விதம் பழிப்புக்கிடமான முறையில் பொருள் தேடிச் செய்பவை யெல்லாம் உண்மையான உதவியாகா. ஆனால், பிறருடைய பொருளைக் கையாண்டு பலர்க்கும் பயன்படவும் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, பொருளுக்கு உரியவரின் வாழ்க்கைக்கு ஒரு தீங்கும் ஏற்படாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அஃதாவது, அன்னாரின் தேவைக்கு மேற்பட்ட பகுதியையே பலர்க்கும் பயன்படுத்த வேண்டும். அதனால் தப்பில்லை. ஒரு பொய் ஒருவர்க்கும் தீமை செய்யாமல், பலர்க்கு நன்மை செய்யுமேயானால் அப்பொய்யும் மெய்யேயாம் என்னும் கருத்தில், “பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த -நன்மை பயக்கும் எனின்” என்று ஒரு குறள் பின்னோரிடத்தில் உளதன்றோ?

5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

(பதவுரை) இல்வாழ்க்கை -(ஒருவனுடைய இல்லற வாழ்க்கையானது, அன்பும் – (யாவரிடத்தும்) அன்பினையும். அறமும் அறச்செயலினையும், உடைத்தாயின் – உடையதாய் இருக்குமே யானால், பண்பும் – (அவ்வில்வாழ்க்கையின்) இலக்கணமும், பயனும் -நன்மையும், அது – (அந்த அன்பும் அறமும் உடைத்தா யிருக்கின்ற) அச்செயலே.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண – உரை) இல்வாழ்க்கையாகிய நிலை யாவர் மாட்டும் அன்பு செய்தலையும், அறம் செய்தலையும் உடைத்தாயின் அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே.

(பரி – உரை) ஒருவன் இல்வாழ்க்கை, தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம். இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின் (நடவாமையின்) அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனாயிற்று.

(தெளிவுரை) பண்பு என்றால் இலக்கணம்; அஃதாவது தன்மை. இல்வாழ்க்கைக்கு இருக்கவேண்டிய இலக்கணம் அன்பும், அறமும் உடைமையே. இல்வாழ்க்கையின் பலனும் அந்த அன்பும் அறமும் உடையதாய் இருப்பதே. அன்பும், அறமும் இல்லாதவன் இனிமையாக இல்வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்? முடியாது. அதனாலேயே அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் இலக்கணம் என்றார். யாவரிடமும் அன்பு காட்டுவதும், அறம் செய்வதுமே இல்வாழ்க்கையின் நோக்கம் ஆதலால், அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் பலனும் ஆகும் என்றார்.

இஃதென்ன! ஒன்றையே இலக்கணமாகவும், பலனாகவும் கூறித் தியங்கச் செய்துள்ளாரே திருவள்ளுவர் என்று திகைக்கலாம் சிலர். இத்தியக்கத்தாலேயே பரிமேலழகர் வேறுவிதமாக உரை பகர்வாராயினர். கூர்த்து நோக்கின், இங்குத் திகைப்பிற்கே இடம் இல்லை. எடுத்துக்காட்டு ஒன்று தருவோம்.

பிள்ளையின் இலக்கணம் பெற்றோரைக் காப்பாற்றுதலும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும் என்று ஒருவர் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அவ்விரண்டுந்தானே பிள்ளையினால் உண்டாகும் பயனுங்கூட, எனவே, ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதைக் குறித்துத் தியங்க வேண்டாமன்றோ?

(ஆராய்ச்சி உரை) அன்பு என்பதற்கு மனைவி மேல் உள்ள அன்பு என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகர். இங்கே வள்ளுவர் காதல் என்னும் சொல்லை வைத்திருந்தால் பரிமேலழகர் பகரலாம் அவ்விதம். ஆகவே, அன்பு என்பதற்கு யாவரிடத்தும் உள்ள அன்பு என்று பொருள் கூறினால், அவ்வில்வாழ்வானுக்கும் பெருமை, திருவள்ளுவர்க்கும் பெருமை! எல்லோரிடத்திலும் அன்பு உள்ளவன் தன் மனைவியிடத்திலா அன்பு இல்லாதவனாகப் போய்விடுவான். பரிமேலழகர் கூறியபடியே வைத்துக் கொண்டாலும் தம் மனைவியின் மேல் அளவு மீறி அன்பு கொண்ட சிலர், பிறரை நோகச்செய்கின்றனரே! பிறரை என்ன? பெற்றோரையே பேதுற (மயங்கச்) செய்கின்றனரே! இதுதானா இல்வாழ்க்கையின் இலக்கணம்?

மேலும், பரிமேலழகர், அன்பை இல்வாழ்க்கையின் இலக்கணமாகவும், அறத்தைப் பலனாகவும் பகர்ந்துள்ளார். இங்குக் கூர்ந்து நோக்கவேண்டும். “பண்பும் பயனும் அது” என்பது குறள். “அது” என்னும் ஒருமை அன்பையும் அறத்தையும் உடைத்தாயிருக்கும் செயலைக் குறிக்கின்றது. எனவே, பண்பும் அச்செயல்தான், பலனும் அச்செயல்தான். பரிமேலழகர் உரைப்படி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் நோக்கம் வள்ளுவர்க்கு இருந்திருக்கு மேயானால், “பண்பும் பயனும் அவை என்று பாடியிருப்பார். அன்பு இலக்கணமாகும்போது, அறம் மட்டும் இலக்கணம் ஆகாதா? அறம் பயனாகும்போது, அன்பு மட்டும் பயனாகாதா? ஆகுமே!”

6. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்.

(பதவுரை) அறத்தாற்றின் – அறவழியிலே, இல்வாழ்க்கை ஆற்றின் – (ஒருவன்) இல்லறத்தை நடத்துவானேயாயின், புறத்தாற்றில் அறவழிக்குப் புறவழியான மறவழியில் அதாவது தீயவழியில், போஒய்ப் பெறுவது – சென்று பெறக்கூடிய நன்மை, எவன் – என்ன? (ஒன்றுமில்லை)

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின், புறநெறியாகிய தவத்தில் போய்ப் பெறுவது யாதோ?

(பரி. உரை) ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவனாயின், அவன் அதற்குப் புறமாகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? புறத்தாறு – இல்லைவிட்டு வனத்துச் செல்லு நிலை.

(தெளிவுரை) அற ஆறு – அறத்தாறு; புறஆறு – புறத்தாறு. அறத்துக்குப் புறம் அதாவது புறம்பு மறம் அதாவது தீமை. ஆறு- வழி, நெறி. “போய்” என்பதுதான் “போஒய்” என்றாயிற்று. எவன், என்ன, என் என்னுஞ் சொற்கள் ஒரே பொருள் உடையவை. எவன் என்பது பழைய வழக்கு.

உலகில் சிலரது குடும்ப வாழ்க்கை செம்மையுற நடத்தலைக் காண்கின்றோம். அந்தக் குடும்பத்தாரிடைக் குறையொன்றுங் கூறவியலாது. கணவன் மனைவி ஒற்றுமை, பெற்றோர் பிள்ளை ஒற்றுமை, விருந்தோம்பல், சுற்றம் தழுவல், பிறர்மனை நயவாமை, கள்-களவு-பொய்-சூது முதலியன இன்மை, இன்பத்தில் துள்ளாமை, துன்பத்தில் கலங்காமை முதலிய பண்புகளுடன் வாழ்தல் தான் “அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றுதல்” என்பது. இதற்கு எதிர்மாறான வாழ்க்கை “புறத்தாற்றில் போகும் இல்வாழ்க்கை”யாகும். பெரும்பான்மையோர்க்கு அறத்தாற்று இல்வாழ்க்கையில் இன்பமோ, பெருமையோ விறுவிறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை; அன்னோர்க்குப் புறத்தாற்று இல்வாழ்க்கையிலேயே பூரிப்புப் பொங்குகிறது; இன்பங் கொழுந்து விடுகிறது; விறுவிறுப்பு முறுக்கேறுகிறது. ஆனால், புறத்தாற்று இல்வாழ்க்கை முதலில் முன்னேற்றமாய்த் தென்படினும் பின்னர்க் கவிழ்த்துவிடும்; ஆதலின் அறத்தாறே என்றும் நின்று நிலைத்து நீடிக்கும் என எச்சரிக்கின்றது இந்தக் குறள்.

(ஆராய்ச்சி உரை) இந்தக் குறளில் அறத்தாறு புறத்தாறு என இரண்டு நெறிகள் பேசப்பட்டுள்ளன. அறநெறிக்குப் புறநெறி (எதிர்மாறான நெறி) மறநெறி (தீயவழிகள்) என இயற்கையாய்ச் சொல்லமைப்பு – தொடர் அமைப்புகளை ஒட்டி யான் உரை எழுதினேன். ஆனால், பழைய உரையாசிரியர்கள், இங்கே எனக்கு மேல் பெரும் புரட்சிப் பொருள் புகன்றுள்ளனர். அவர்தம் துணிவைப் பாராட்டுகிறேன். புறத்தாறு என்பதற்கு, இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான துறவற் வாழ்க்கை – தவவாழ்க்கை என அவர்கள் பொருள் எழுதியுள்ளனர். நல்லமுறையில் இல்வாழ்க்கை நடத்தினால், துறவறத்திற்குச் சென்றுதான் தீரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; துறவறத்திற்குச் சென்று பெறக்கூடிய நன்மைகளையெல்லாம் இவ்வில்லறத்திலேயே பெறலாம் என்பது அவர்தம் கருத்து. உண்மைதானே!

உள்ளத்தில் ஒழுங்கு இல்லாமல், முற்றத் துறந்த முனிவரெனச் சொல்லிக்கொண்டு. காட்டில் திரிந்துதான் என்ன பயன்? காற்றை உண்டுதான் என்ன பயன்? கந்தலைக் கட்டி ஓட்டைச் சுமந்து இரந்து உண்டுதான் என்ன பயன்? ஒன்றும் இல்லை. எல்லாம் வெளிப்பகட்டே! ஆனால், பெண்ணுடன் வீட்டிலேயிருந்து சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், உள்ளத்தில் ஒழுங்கு உடையவர்கள் பேரின்பத்தையும் பெறுவார்கள். இதனை முற்றத் துறந்த முனிவரும் நுகர்ந்து கண்டவரும் (அனுபவசாலியும்) ஆகிய பட்டினத்தாரே பகர்ந்துள்ளார்:

காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி ஓடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர் நாடேய் இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே

என்பது பட்டினத்தடிகளின் பாடல். (நாரியர்-பெண்டிர்) பெண்ணுடன் இருப்பவர்கள் வீட்டுலகப் பேரின்பத்தையும் பெறுவார்கள் எனில், இவ்வுலக இன்பங்கள் எல்லாவற்றையுங்கூட எய்த முடியும் என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லையன்றோ? இன்னும் இப்பாடலுக்கு, வீட்டுலகம் (மோட்சம்) சென்று பெறும் பேரின்பத்தை, இவ்வுலகிலேயே இல்லறத்தில் மனைவியுடன் இருந்து வாழ்ந்துகொண்டே பெற்று விடலாம் என்றும் பொருள் உரைத்துக் கொள்ளலாம். இந்தப் பாடலுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறே போதுமே!

எனவே, பழைய உரையாசிரியர்கள் கூறியுள்ள இந்தப் புரட்சியான கருத்து நன்றாய்த்தான் உள்ளது. வள்ளுவரே பின்வரப் போகும் ஒரு குறளில் இந்தப் புரட்சியைக் கையாண்டுள்ளார். அந்தப் புரட்சியின் அனல் இங்கேயும் வீச, உரையாசிரியர்கள் இங்கேயே குளிர்காயத் தொடங்கி விட்டனர். ஆயினும், இந்தப் பொருளுக்கு இந்தக் குறள் அமைப்பு இடம் தரவில்லை என்றே உணர்கிறேன். அறத்தாறு என்று சொல்லி, பின் புறத்தாறு என்றால், அது அறநெறிக்குப் புறம்பான மறநெறிதான். புறவாழ்க்கை என்று சொல்லியிருப்பின், இல்வாழ்க்கைக்குப் புறம்பான துறவு வாழ்க்கை எனப் பொருள் கொள்ளலாம். அவ்வாறு இல்லையாதலின், பழைய உரை பொருந்தாது என்பது இப்போது புரிகிறது. “பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவு” என்னும் கொள்கையைப் பின்பற்றி யான் இக்குறளுக்கு உரை எழுதியிருக்கும் நுணுக்கத்தை இலக்கணம் கற்றோர் உணர்வர். தீயன கண்டிப்பதற்கும் இடம் இது.

இந்தக் குறளில் “போஒய்” என ஒரு சொல் உள்ளது. இதன் உண்மையான உருவம் “போய்” என்பதுதான். இதன் நடுவே “ஒ”என்னும் ஓர் எழுத்து சேர்ந்துள்ளது. இந்த எழுத்துக்கும் இங்கே தனி ஒலி இல்லை. “போ” என்பதை நீட்டிச் சொல்லும் போதே “ஒ” என்பதற்கும் சேர்த்து நீட்டிவிட வேண்டும். “போ-ஒய்” எனப் பிரித்துப் படிக்காமல், “போஒய்” என ஒரே நீட்டாய் நீட்டிச் சொல்லிவிடவேண்டும்.

“போ” என்பதில் உள்ள (ப்+ஓ) உயிர் எழுத்தின் அளவை மிகுதியாக எடுத்து ஒலிப்பதற்கு அறிகுறியாக “ஒ” என்பது சேர்க்கப்பட்டது. ஆதலின், இதனை இலக்கணத்தில் “உயிர்அளபெடை” என்பர். இங்கே இந்த உயிர் அளபெடை இடம் அடைப்பதற்காகக் கையாளப்பட்டது – என்பது இலக்கண நூலாரின் கருத்து. இதை நான் ஒத்துக் கொள்வதில்லை. இடம் அடைப்பதற்கு வள்ளுவர்க்கு வேறு சொல் கிடைக்காதா? எனவே, ஒரு பொருள் கருதியே வள்ளுவர் இங்ஙனம் அமைத்துள்ளார். அதாவது, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றாதவர்களை நோக்கி, நீங்கள் புறத்தாற்றில் “போஒய்” கிழிப்பது என்ன? என்று நீட்டி நெளித்து இளித்துக் காட்டி ஏளனம் செய்கிறார். இந்த ‘ஓ’ என்னும் ஓர் எழுத்தை இடையில் புகுத்தி அளவை மிகுதியாக எடுத்ததில் இத்துணைப் பொருட்சுவை பொதிந்து கிடப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க.

7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாந் தலை

(பதவுரை) இயல்பினான் – இயல்பான ஒழுக்கமுறையுடன், இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்று புகழ்ந்து பேசப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை – (வேறு நன்மை பெற முயல்பவர்களுக்குள் எல்லாம் முதன்மையானவன் ஆவான், (இயல்பினான் என்பதின் இறுதியிலுள்ள ஆன்’ மூன்றாம் வேற்றுமை உருபு)

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவ னென்பான், முயல்வா ரெல்லாரினுந் தலையாவான். முயறல் – பொருட்கு முயறல்.

(பரி உரை) இல்வாழ்க்கையினின்று அதற்குரிய இயல்போடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவான், புலன்களைவிட முயல்வா ரெல்லாருள்ளும் மிக்கவன்.

(தெளிவுரை) மக்கள் எல்லோரும் தாம் இன்பம் பெறுவதற்காகவே முயற்சி செய்கின்றார்கள். அம்முயற்சி பலவகையில் செல்லுகின்றது. அன்னோர்க்குள் ஒழுங்காக இல்லறம் நடாத்துபவனே சிறந்தவன். நல்ல முறையில் குடும்பம் செய்பவனுக்குப் பசி, பகை, பிணி முதலிய துன்பங்கள் இன்றி, எல்லா இன்பங்களும் இயையும் ஆதலின் அவன் சிறந்தோன் ஆவான்.

(ஆராய்ச்சி உரை) இக்குறளில் உள்ள “இல்வாழ்க்கை வாழ்பவன்” என்னும் தொடர் ஓர் அரிய அணுத்தொடர் ஆகும். இத்தொடரில் இரண்டு முறை வாழ்(தல்) என்னும் சொல் வந்துள்ளது. இதற்கு வள்ளுவர் அகராதியில் என்ன பொருள்? கணவனும் மனைவியுமாய் இல்லில் இயைந்து வாழ்தலையே வாழ்தல் என வள்ளுவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இல்வாழ்க்கையே வாழ்க்கையாக அவர்க்குப் புலப்பட்டிருக்கிறது. மற்ற வாழ்க்கையெல்லாம், “வாழாது வாழ்கின்றேன்” என ஒரு காரணம் பற்றி ஓரிடத்தில் மணிவாசகர் கூறியிருப்பது போல, வாழாத வாழ்க்கையே போலும்! வள்ளுவர் “வாழ்க்கைத் துணைநலம்” என்னும் பகுதியில், மனைவியை “வாழ்க்கைத்துணை” எனக் கூறுகிறார். அங்ஙனமெனில், ‘வாழ்க்கை என்பது எது? என நாமே உய்த்துணர்ந்து கொள்ளலாமே. இல்வாழ்க்கையே வாழும் வாழ்க்கை என்னும் கருத்தை உள்ளடக்கியே “இல்வாழ்க்கை வாழ்பவன்” என இக்குறளில் ஆசிரியர் கூறினார். (வாழ்க்கையை வாழ்தல்- அதாவது வாழும் வாழ்க்கை).

இத்தொடரில் இன்னும் ஒரு நயங் காணலாம். “எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்” என்பது போல இல்வாழ்க்கையில் உள்ள எல்லோருமே வாழ்ந்தவராகி விடுவார்களா? இல்லறமென்னும் நல்லறத்தைப் புல்லறமாக்கிக் கொண்டவர்கள் எத்துணையோ பேர்! “கலியாணம் பண்ணியும் பிரமச்சாரி” என்றபடி, பேருக்குத் திருமணம் செய்துகொண்டு பேதுறுகின்ற பேதைப்பித்தர்கள் எத்துணையோ பேர்! இவர்களெல்லாம் இல்வாழ்க்கை வாழ்பவராக மாட்டார்கள். இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பின்படி வாழ்பவரே வாழ்வாராவர் என்ற கருத்தையும் அடியொற்றித்தான் “இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்” என்றார் வள்ளுவப் பெருமானார்.

இல்வாழ்க்கை வாழவேண்டிய “இயல்பு” என்பது என்ன? இயல்பு என்பதற்கு, இயற்கை, தன்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, முறை என்றெல்லாம் பல பொருள் உண்டு. போதிய அளவு உழைத்து, உண்டு, உடுத்து. நுகர்ந்து, உறங்கி, பிறருக்கும் உதவி வாழும் வாழ்வு இயல்பான வாழ்வுதான். இக்காலத்தில் பலரிடம் செயற்கையான போலி வாழ்வே காணப்படுகின்றதன்றோ? எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் இயல்பான உண்மையின்றி, செயற்கையில் உண்மைபோல் நடிக்கின்ற போலித்தனமே காணப்படுகின்றதல்லவா? இது கூடாது. செயற்கையான போலித்தனமின்றி, இயல்பான ஒழுங்கு முறையுடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு துறைகளில் முயல்பவர்களுக்கெல்லாம் தலைமையானவன் ஆவான் என்பதே இக்குறட்கருத்து.

இக்குறளில் உள்ள “முயல்வார்” என்பதற்கு, உலகியல் பொருளியல் துறையில் முயலுபவர் என்னும் கருத்தில் மணக்குடவரும் தவநெறியில் முயலுபவர் என்னும் கருத்தில் பரிமேலழகர் போன்றோரும் பொருள் கூறியுள்ளனர். இயல்பான இல்வாழ்க்கை யல்லாத வேறு துறைகளில் முயல்பவர் என்று நாம் பொருள் எடுத்துக்கொள்ளலாமே.

உலகில் எந்த உயிர்ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் ஆணும் பெண்ணுமா யிருப்பதையும், இவ்விரண்டின் சேர்க்கையாலேயே தோற்றம் ஏற்படுவதையும் நாம் கண்டு வருகின்றோம். எனவே, இயற்கைப் படைப்பின் அமைப்பு நோக்கம், ஈரினமும் இயல்பாய் இணைந்து வாழ்தலே?, இவ்வாறு அமையாத வாழ்வெல்லாம் அரைக்கிணறு தாண்டும் அரைகுறை வாழ்வே! மனைவி மக்களுடன் வாழ்ந்தறியாதவன், பெரிய பணக்காரனாய் அல்லது பெரிய படிப்பாளியாய் அல்லது பெரிய துறவியாய் நூறாண்டு வாழ்ந்திருந்தாலும் அவனது வாழ்வு பதினெட்டு வயதுப் பையனது வாழ்வேயாகும். சாவு-வாழ்வுக் காரியங்களில் சமூகம் அவனுக்கு முதன்மை கொடுப்பதில்லை. நல்ல பிள்ளை குட்டி பெற்ற நரைத்த தலைகளையே நாடுவர் மக்கள், அவர்களுக்குத்தான் மனிதவாழ்வின் முழுப் பூட்டுத்திறப்பும் தெரியும். அவர்களே – அவர்தம் அறிவுரைகளே மற்றவர்க்கு வழிகாட்டியாகும். எனவேதான், இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன், அங்ஙனம் வாழாது வேறு வழியில் வாழ முயலுகின்ற மற்றவர்க்கெல்லாம் தலைமை தாங்குகிறான். இப்போது புரிந்திருக்குமே இக்குறளின் உட்கிடை!

8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து.

(பதவுரை) ஆற்றின் ஒழுக்கி -(ஓர் இல்லறத்தான் தன் மனைவி, மக்கள், துறவிகள் முதலானோரையும்) நல்ல வழியில் நடக்கச் செய்து, அறன் இழுக்கா -(தானும்) நல்லறத்தில் இருந்து தவறாமல் நடத்துகின்ற, இல்வாழ்க்கை – இல்வாழ்க்கையானது. நோற்பாரின் – தவஞ்செய்வாரைக் காட்டிலும், நோன்மை உடைத்து (வலிய) தவத்தன்மை உடையதாகும்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண-உரை) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின்பால் ஒழுகும் இல்வாழ்க்கை தவம் செய்வாரினும் வலியுடைத்து.

(பரி -உரை) தவம் செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப்பண்ணித் தானும் தன்னறத்தில் தவறாத இல்வாழ்க்கை, அத்தவம் செய்வார் நிலையினும் பொறையுடைத்து.

(தெளிவுரை) பிறரையும் நல்வழியில் நடக்கச் செய்து தானும் அறம் தவறாது நடத்தும் இல்வாழ்க்கை, தவஞ்செய்வார் வலிமையினும் மிக்க தவவலிமை உடையதாம்.

(ஆராய்ச்சி உரை) ஒழுகுதல் தன்வினை அஃதாவது தான் நடத்தல். ஒழுக்குதல் பிறவினை – அஃதாவது பிறரை நடக்கச் செய்தல். இங்கே ஒழுக்கி எனப் பிறவினையாகக் கூறியிருத்தலின், “மனைவி, மக்கள், துறவிகள் முதலானோரை நல்ல வழியில் நடக்கச் செய்து” என்று பொருள் கூறவேண்டியதாயிற்று. இழுக்காத என்பதில் உள்ள த கெட்டது. இதுதான் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இல்வாழ்க்கை நோன்மை உடையது என்றால், இல்வாழ்வான் நோன்மை உடையவன் என்று கொள்ளவேண்டும்.

நோன்மை என்பதற்குத் தவம், வலிமை, பொறை முதலிய பொருள்கள் உண்டு. இங்கே சில உரையாசிரியர்கள் வலிமை எனப் பொருள் உரைத்துள்ளனர். சிலர் பொறை எனப் பொருள் புகன்றுள்ளனர். தவம் எனப் பொருள் உரைத்தாம் யாம். ஏன்? தவம் என்றால் ஏதோ தனிப்பட்டது என்று எவரும் தயங்க வேண்டாம்; ஒழுங்கான முறையில் இல்வாழ்க்கை நடத்துவதும் ஒரு தவமே. மேலும், இவ்வில்லறத் தவம் துறவிகளின் தவத்தைக் காட்டிலும் வலியதும், சிறந்ததும் ஆகும் என்பது எமது கருத்து.

இல்லறத்துறவு என்றால் வேறு எதுவும் இல்லை; பொழுது விடிந்து பொழுது போகும் வரையும் தம் மனைவி மக்களை மட்டுமே கட்டியழுதுகொண்டு – அவர்கட்கு வேண்டியவற்றை மட்டுமே தேடி உழன்றுகொண்டு கிடக்காமல், மற்ற மன்பதைக்கும் (சமுதாயத்துக்கும் தொண்டாற்றுதலே இல்லறத் துறவு. இத்தகைய தொண்டு புரிவோரே ‘இல்லறத்துறவிகள்” என்பது கருத்து.

“தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்” என மற்றொரு குறளில் கூறியுள்ளபடி, தான் மட்டுமே தனியே அமர்ந்து “மூக்கு விழிகளை” மூடிக்கொண்டு செய்யும் துறவுத் தவத்தை விட, மனைவி மக்களுடன் மக்கள் சமுதாயத்துக்கும் தொண்டாற்றும் இல்லறத்தவம் எவ்வளவோ சிறந்ததுதானே! இது குறித்தே. “இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மையுடைத்து” என்றார் வள்ளுவர். ஆனால், “எல்லோரையும் ஆற்றின் ஒழுக்கித் தானும் அறனிழுக்காது நடத்துகின்ற இல்வாழ்க்கையே நோற்பாரின் நோன்மையுடைத்து” என்பதும் ஈண்டு நினைவிருக்க வேண்டும். எனவே, இல்லறத் தவத்துக்குரிய இலக்கணம், அனைவர்க்கும் ஆகவேண்டிய உதவிகளைச் செய்து அவரவரையும் நல்ல வழியில் நடத்துதல், தானும் நல்ல வழியில் நடத்தல் என்னும் இரண்டும் உடைமை எனத் துணிக.

முன்பு – சங்க காலத்தில் பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் ஒருவர் வாழ்ந்தார். அவர் வயதால் முதிர்ந்தவர்; வடிவத்தால் இளையவர். நரை, திரை, மூப்புக்களுக்கு அவர் உடம்பில் எங்கும் இடம் கிடைக்கவில்லை. ஒரு சமயம் வெளியூர் ஒன்றுக்குச் சென்றார் அவர். அவ்வூரினர் சிலர் புலவரை நோக்கி, பெரியீர்! தங்கட்கு வயது பல நிரம்பியும் நரை தோன்றவில்லையே! காரணம் என்ன? இவ்வாற்றலை (வித்தையை) எங்கு, எவரிடம் கற்றீர்? என்று வினவினார்கள். அவர்க்குப் பின்வருமாறு பதிலீந்தார் புலவர்.

“அன்பர்களே! பல ஆண்டு ஆகியும் நரை தோன்றாத ஆற்றலை எங்குக் கற்றீர்” என்று வியப்புடன் வினவுகின்றீர்கள். இங்கு வியப்பிற்கே இடமில்லையே. யான் ஒழுங்கான இல்வாழ்க்கை உடையவன். அதனால் என் மனைவியும், மக்களும் திருந்திய நல்வாழ்க்கையினர். வேலைக்காரரும் அத்தகையோரே! பற்றுக்களைத் துறந்த சான்றோர் பலர் எம் ஊரில் உள்ளனர். இத்தகைய சுற்றுச் சூழலுடன் நல்லமுறையில் யாங்கள் வாழ்க்கை நடத்துவதால், பசி, பிணியின்றி என்றும் இளையனாய்த் திகழ்கின்றேன் யான்” என்று மொழிந்தார். இதனை அப்புலவர் பாடிய

யாண்டு பலஆக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின், மாண்ட என் மக்களொடு மனைவியும் நிரம்பினர், யான் கண்டனையர்என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே

என்னும் புறநானூற்றுப் (191) பொற்பாடலால் அறியலாம்.

இவ்வரலாற்றால் அறியக்கிடப்பது என்ன? புலவர் அனைவரையும் ஆற்றின் ஒழுக்கினார். தாமும் அறன் இழுக்காது வாழ்ந்தார். அதனால் நோற்பாரைவிட நோன்மை பெற்றார். யோகிகள் யோகவன்மையால் பெறக்கூடிய இளமையை இந்தப் போகி பெற்று வாழ்ந்ததைக் நோக்குங்கள்! மேலும், இல்வாழ்வான் உணவு உடை முதலியன உதவினால் தான் துறவி ஆற்றின் ஒழுகமுடியும் ஆதலின். துறவிகளை ஆற்றின் ஒழுக்குபவனும் அவனே என்பதும் இங்கு நினைவுக்கு வரவேண்டும். மற்றும், துறவிகளின் துறவறத்தவத்தினும் இல்வாழ்வானின் இல்லறத்தவமே எல்லோர்க்கும் பயன் அளிக்கும். ஆதலின் அது உயர்ந்ததுதானே!

9. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

(பதவுரை) அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – அறம் அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டதெல்லாம் இல்வாழ்க்கைதான்; அஃதும் – அப்பேர்ப்பட்ட சிறப்புடைய இல்வாழ்க்கையும், பிறன் பழிப்பது இல்லாயின் – பிறன் எவனும் பழிப்பதற்கு இடமில்லாதிருக்குமானால் தான், நன்று – நல்லதாகும்- சிறந்ததாகும். (அறன் – அறம்)

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப் படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை.

(பரி. உரை) இருவகை யறத்தினும் நூல்களான் அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; ஏனைத் துறவறமோவெனின், அதுவும் பிறனாற் பழிக்கப்படுவதில்லையாயின், அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.

(தெளிவுரை) உலகில் எது எதுவோ அறம் என்று சொல்லப்படினும் உண்மையில் அறம் என்று சொல்லப்படுதற்கு உரியது இல்வாழ்க்கைதான். இல்வாழ்க்கையே சிறந்தது எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்டதால், குடும்பத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கொள்ளலாகாது. அந்த இல்வாழ்க்கையும் பிறனொருவன் பழிக்காதபடி இருந்தாலே சிறந்ததாம்.

(ஆராய்ச்சி உரை) “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்பதற்கு வாடிக்கையாக ஏதேதோ பொருள் சொல்வது வழக்கம். இல்லறம், துறவறம் என அறம் இருவகை; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்னுங் கருத்தில் பரிமேலழகர் எழுதியுள்ளார். இன்னும் எத்துணையோ அறங்கள் (முப்பத்திரண்டு அறங்கள்) சொல்லப் படுவதுண்டு. அவற்றுள் இல்லறமே சிறந்தது என்றெல்லாம் சொல்லுவதுண்டு. இங்கே நான் என்ன சொல்லுகிறேன்? அறமே இல்வாழ்க்கை- இல்வாழ்க்கையே அறம்; கரும்பே கன்னல் – கன்னலே கரும்பு என்பது போல. அகராதி தொகுப்பவர்கள், அறம் என்பதற்கு நேரே இல்வாழ்க்கை எனவும், இல்வாழ்க்கை என்பதற்கு நேரே அறம் எனவுங்கூட எழுதிவைக்கலாம். இதற்கு நிகண்டு போன்றதொரு சான்று. “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்பதே.

“அறன் எனப்பட்டதே” என்பதின் இறுதியிலுள்ள துறவறத்தினின்று இல்லறத்தைப் பிரித்துக் காட்டும் பிரிநிலை ஏகாரம் ஆகும் எனப் பொருள் கொண்டு, “அஃது” என்ற சொல்லுக்கு “அந்தத் துறவறமும்” எனப் பொருள் கூறியுள்ளார் பரிமேலழகர். ஏகாரத்தைத் தேற்ற ஏகாரமாகக் கொள்ளின் இந்தக் குழப்பத்துக்கு இடமில்லை. “அஃது” என்னும் சுட்டு எவ்வாறு துறவறத்தைக் குறிக்க முடியும்? முதலில் இல்வாழ்க்கையைக் கூறி, பின்பு அது என்று சுட்டிக்காட்டினால் எது என்று எண்ணுக.

இல்வாழ்க்கையில் இருந்துகொண்டுதான் எல்லா அறமும் செய்ய முடியுமாதலின் “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை” என்றார். இல்வாழ்க்கையே அறம் எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்டதால்.

குடும்பத்தில் இருந்துகொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாமா? பிறர் பழிக்காதபடி நடந்துகொண்டால் தானே நல்லதாகும் என்பதை அறிவிக்கவே “பிறன் பழிப்பதில்லாயின் நன்று” என்றார் ஆசிரியர். இங்கே “பழிப்பது” என்னுஞ் சொல்லுக்கு, பழித்தலுக்குரிய தாழ்ந்த குலத்து மனைவி எனப் பொருள் எழுதியுள்ள மணக்குடவருக்கு நமது கழிபேரிரக்கம் உரித்தாகுக!

10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

(பதவுரை) வையத்துள் – மண்ணுலகத்திலே, வாழ்வாங்கு வாழ்பவன் – (இல்லறத்தில் இருந்து) வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்து வருபவன், வான் உறையும் விண்ணுலகத்தில் அமர்ந்திருக்கின்ற, தெய்வத்துள் வைக்கப்படும் – தெய்வங்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்பெறுவான். (வையம்- மண்ணுலகு; வான் -மேலுலகு)

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.

(பரி. உரை) இல்லறத்தோடு கூடி வாழுமியல்பினால் வையத்தின்கண் வாழ்பவன் வையத்தானே யெனினும் வானின்கணுரையுந் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.

(தெளிவுரை) உலகில் வாழவேண்டிய முறைப்படி இல்வாழ்க்கை நடத்துபவன் விண்ணில் இருக்கும் தெய்வங்களுள் ஒரு தெய்வம்போல் மதிக்கப்படுவான்.

(ஆராய்ச்சி உரை) இந்தக் குறளில் உலக வழக்கில் உள்ள உண்மையொன்று பொதிந்து கிடப்பதாகப் புலப்படுகின்றது. உலகில் ஒழுங்கான முறையில் நல்வாழ்வு நடத்திப் பின்னர் இறந்து போனவரைக் குறித்துச் சுட்டி, “அவர் செத்துத் தெய்வமாகப் போய் விட்டார்” என்று மக்கள் பேசிக் கொள்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். நாமே பலரைப் பற்றி அவ்வாறு சொல்லியிருப்போம். ஆனால், தீயசெயல்கள் செய்து இறந்துபோன கொடியவர்களை அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வது வழக்கத்திலில்லை: அவர்களை அலகையாய் அலைவதாகச் சொல்வதுதான் வழக்கம், ஆனால், நல்வாழ்வு வாழ்ந்து இறந்துபோன நல்லவரைக் குறிப்பிட்டுத்தான். “சும்மா சொல்லக்கூடாது; அவர் செத்துத் தெய்வமாய்ப் போய்விட்டாரு; அவர் எவ்வளவு பாடுபட்ட மனுசன் தெரியுமா! அவர் மட்டும் இப்பொழுது இருந்திருந்தால் இது இப்படியா நடந்திருக்கும்? இந்நேரம் எவ்வளவோ மேல் நோக்கத்துக்குக் கொண்டு வந்திருப்பாரு” என்றெல்லாம் சொல்வது உலகியல். மக்களது பேச்சுவழக்கை இங்கே எழுத்துக்கு எழுத்து அப்படியே கொடுத்திருக்கிறேன். உண்மைதானே இது? இதே கருத்தைத்தான், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்றார் திருவள்ளுவனார்.

எனவே, தெய்வநிலை யடைவதற்குரிய நேர்ப்பாதை வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் போலும்! தெய்வங்கள் எல்லாம் இப்படிமேல் வகுப்பு மாறி வந்தவைதாமோ? நம் திருக்கோவில்களுக்குள் நுழைவோமேயாயின், தெய்வங்களின் பட்டாளங்களைப் பரவலாகப் பார்க்கலாம். அவற்றையும் கூர்ந்து நோக்கின், ஆழ்வார்களாக-அல்லது நாயன்மார்களாக இருக்கக் காணலாம். அண்மைக் காலத்தில் மனிதர்களாக இருந்து பின் தெய்வமாக மாறிய இவை எல்லாம், “ஜூனியர்” தெய்வங்கள் (பிந்தியவை) ஆகும். அவதார புருசர்களாக வந்து தோன்றிய தெய்வங்கள் எல்லாம் “சீனியர்” தெய்வங்கள் (முந்தியவை) ஆகும்.

இவையன்றி, இன்னும் இக்குறளின் உண்மைக்கு ஒரு சான்று தருவேன்:- உலகில் நல்லவரோ- கெட்டவரோ எவர் இறந்தாலும், ‘சிவலோக பதவி யடைந்தார்’, ‘வைகுண்ட பதவி யடைந்தார்’ என்றுதானே ‘கருமாதிப் பத்திரிகை’யில் அச்சிடுகின்றோம். இதிலுள்ள உண்மையாது? செத்தவரைத் தெய்வமாக மதிக்கிற உண்மைதான். செத்தவருக்கு எவ்வளவு படையல் வழிபாடுகள் நடக்கின்றன தெரியுமா? செத்துப்போன கெட்டவனையும் சமூகம் மதித்துத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறது எனில். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்” என்று வள்ளுவர் சொல்லியிருப்பதில் என்ன தவறு? என்ன தடையிருக்க முடியும்?

தெய்வங்கள் மண்ணுலகில் நம் நடுவே வெளிப்படையாய்க் காணப்படாமையின், அவை விண்ணுலகில் எழுந்தருளியிருக்கக் கூடும் என்ற மக்களின் எண்ணத்தை எதிரொலிப்பவர் போல் “வானுறையும் தெய்வம்” என்றார் வள்ளுவர். அவன் வானத்துக்குச் சென்ற பிறகுதான் தெய்வமாவான் என்பதில்லை; வாழ்வாங்கு வாழுமவன் வையத்துள் இருக்கும்போதே கூட தெய்வமாக மதிக்கப்படுவான் என்ற குறிப்புப் பொருள் “வையத்துள் வைக்கப்படும்” என்பதிலிருந்து கிடைக்கின்றதல்லவா?

வாழ்வாங்கு வாழ்பவன் என்று கூறியுள்ளாரே – வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன? இல்லறத்தான் இப்படி யிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இத்தனை குறள்களில் கூறி வந்தாரே – இன்னும் எத்தனையோ குறள்களில் கூறப்போகிறாரே, அப்படி யப்படி யெல்லாம் நடந்து கொள்வதுதான் ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என்பது. இயற்கை நியதியின்படி இல்லறத்தில் வாழ்வதே வாழ்வாங்கு வாழ்தல்தானே! இல்வாழ்க்கையின் முற்ற முடிந்த தனிப்பெருஞ்சிறப்பு இந்தக் குறளில் கூறப்பெற்றுள்ளது.

அதிகாரச் சுருக்கம்

இல்வாழ்வான் உலகில் வாழும் எல்லோர்க்கும் துணையாவான். அவன், பிறர் பழிப்பிற்கு இடமின்றி, நல்லமுறையில் வாழ்வானேயானால், அவன் குடும்பம் தொடர்ந்து வாழும். எல்லா நன்மைகளும் கிடைக்கும். ஆதலின், அவன் ஏனையோரைக் காட்டிலும் சிறந்தவன் ஆவான். அது குறித்து, எல்லோரும் அவனைத் தெய்வமாகப் போற்றுவார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1.5 / 5. வாக்கு எண்ணிக்கை: 2

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *