வள்ளுவர் கண்ட மனையறம் சுந்தர சண்முகனார்

மக்கள் பேறு

மக்கள் பேறு என்றால், நல்ல பிள்ளைகளைப் பெறும் பேறு என்பது பொருள். வாழ்க்கைத்துணை நலத்திற்குப்பின் மக்கட்பேறு அமைக்கப்பெற்றதற்குரிய இயைபுமுன் குறளாலேயே உணர்த்தப் பெற்றது.

இப்பகுதிக்கு ‘புதல்வரைப் பெறுதல்’ என்றல்லவா பெயர் எழுதியுள்ளார் பரிமேலழகர். ஈண்டு ஒரு சிலர் “மக்கட்பேறு” என்று எழுதுவதின் காரணம் என்னையோவெனின், இயம்புதும்: முன் அதிகாரத்திலும் மக்கட்பேறு என்றே தோற்றுவாய் செய்துள்ளார் வள்ளுவர். இவ்வதிகாரத்தும் அனைத்திடங்களிலும் மக்கள் என்ற பெயரையே வழங்கியுள்ளார்; ஆதலின் என்க. மேலும், மக்கள் என்னும் செந்தமிழ்ச் சொல் இருக்க, புதல்வர் என்னும் புதுமொழிச் சொல்லைப் புகுத்துவது எற்றுக்கோ? வள்ளுவர்க்கு அந்நோக்கம் இருந்திருப்பின் குறள்களிலேயும் புதல்வர் என்னும் சொல்லைப் புகுத்தியிருப்பாரே! புதல்வர்க்காகப் பரிந்து போராடும் சிலர், பிள்ளை “புத்” என்ற நரகத்திலிருந்து தந்தையை மீட்பதால் புதல்வர் என்னும் பெயரே பொருந்தும் என்கின்றனர். மீட்கக்கூடாது, நரகத்திலேயே தள்ளவேண்டும் என்று யாம் சொல்லவரவில்லை. நன்றாக மீட்டுச் சுவர்க்கத்திற்கே அனுப்பட்டும். ஆனால், நரகத்திலிருந்து மீட்பது பிள்ளையா? (மனிதரா?); அல்லது புதல்வர் என்னும் சொல்லா? (எழுத்துக்களா?) மீட்பது சொல்லன்று, பிள்ளையே யென்றால் மக்கள் என்னும் சொல்லை வழங்குவதில் என்ன தவறு?

1. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

(பதவுரை) பெறுமவற்றுள் – (ஒருவன்) பெறவேண்டிய பேறுகளுக்குள், அறிவு அறிந்த – அறிய வேண்டியவைகளை அறிவினால் அறியவல்ல, மக்கள் பேறு – (நல்ல) மக்களைப் பெறுதலாகிய பேறு. அல்ல – அல்லாதவையாகிய, பிற – பிற சிறந்த பேறுகள் இருப்பதாக, யாம் அறிவது இல்லை – யாம் அறிந்து மதிப்பதேயில்லை.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண-உரை) ஒருவன் பெறும் பொருள்கள் அறிவுடைய மக்களைப் பெறுதல்; பயன்படுவ தொழிந்த பொருள்கள் எல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.

(பரி. உரை) ஒருவன் பெறும் பேறுகளுள் அறியவேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை யாம் மதிப்பதில்லை.

(தெளிவுரை) ஒருவர் பெறவேண்டிய பேறுகளுள், அறிய வேண்டியவைகளை அறியவல்ல நன்மக்களைப் பெறுதலைத் தவிர வேறு பேறுகளை யாம் மதிப்பதில்லை.

(ஆராய்ச்சி உரை) உலகில் மனிதர் பெறவேண்டிய பேறுகளுக்குள் சிறந்த பேறு பிள்ளைப் பேறே என்பது கருத்து. சிறந்த பேறு வேறு இருப்பதாக இதுவரையும் அறிந்ததும் இல்லை; இனிமேலும் என்றும் அறியப் போவதும் இல்லை என்ற கருத்தை உள்ளடக்கி, “அறிவது இல்லை” என எதிர்காலத்தால் கூறிய புலவரின் புலமை புகழ்தற்குரியது.

என்ன! இல்லற இயலை விளக்கவந்த வள்ளுவர், கணவனுக்கும் மனைவிக்கும் மாட்சிமை வேண்டும் என்றார்; அன்பு வேண்டும் என்றார்; விருந்தோம்புதல் வேண்டும் என்றார்; இனியவை கூறல், செய்ந்நன்றி யறிதல் முதலியனவும் வேண்டும் என்றியம்பியுள்ளார்; இவற்றைப்போலவே, கணவனும் மனைவியும் பிள்ளைகளைப் பெறுவதிலும் கருத்தூன்ற வேண்டும் என்று கூறியுள்ளாரோ! இதனைக் கூடவா மக்களுக்குச் சொல்லித்தர வேண்டும்? அதிலும் பொதுமறையாகிய திருக்குறளிலா புகலவேண்டும்? அல்லது, இக்காலத்துப் போர்களினால் மனிதப்பஞ்சம் ஏற்பட்டதனால், மிகுதியாகப் பிள்ளை பெறுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து தூண்டும் சில நாடுகளுக்கு ஏற்பட்ட நிலை, நம் நாட்டிற்கும் வள்ளுவர் காலத்தில் ஏற்பட்டதா? என்றெல்லாம் வேடிக்கையான மனக்கிளர்ச்சிகள் விளையலாம் சிலர்க்கு.

பூணூல் பூண்டவர்கள் (இருபிறப்பாளர்) தென்புலத்தார் கடனைக் கழிப்பதற்காகப் பிள்ளை பெற்றே தீரவேண்டும் என்று பதமாகப் பகர்ந்துள்ளார் பரிமேலழகனார். அப்படியானால் மற்றவர் பிள்ளைபெற வேண்டியதில்லை போலும்! நாம் தென்புலத்தார் கடனைக் கழிக்கவேண்டும்; மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்ற கருத்தைத்தான் காதலர் கண்கள் ஒன்றுக்கொன்று அறிவித்துக் கொள்ளுகின்றன போலும்! ஆண்-பெண்களின் கூட்டுறவின்போது அந்நோக்கந்தான் முதலிடம் பெறுகின்றது போலும்! விசுவாமித்திர முனிவர் முதல் வீரப்பன் வரையும். அகலிகை முதல் ஆண்டிச்சிவரையும் சிற்றின்பத்தில் ஈடுபட்டதற்குரிய காரணம் என்னவென்பது எவர்க்கும் தெரியாது போலும்!

இன்ப உலகின் இயல்புகளை எடுத்தோதி. அவற்றுள் சீர்திருத்தம் காண்பிப்பதே. பண்டைய செந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பியல்பாகும். இத்தகையதே திருக்குறளின் மக்கட்பேறும். வாழ்க்கையில் எவ்வளவு இன்பம் இருப்பினும் குழந்தை யில்லாவிட்டால் என்ன பயன்? தமக்குப்பின் குடும்பத்தின் நிலை என்ன? கொழுகொம்பில்லாத கொடிபோல் குன்றுமே வளர்ச்சி! உலகில் எப்பொருள் தோன்றினாலும் பிள்ளைப்பேறு இல்லாவிடின் உலகந்தான் நடைபெறுவது யாங்ஙனம்?

எனவே, மணம் செய்துகொள்ளாமல் உண்மைத்துறவு கொண்டோர் சிலரும், துறவு, கைம்மை என்னும் திரை மறைவில் ஒளிந்து வாழ்ந்து கருவைச் சிதைப்போர் சிலரும், மணந்து கொண்டும் பிள்ளை பெறாதவர் சிலரும், பிள்ளை பெற்றும், தம்முடைய ஒழுக்கக்குறைவாலும், வளர்த்து முன்னுக்குக் கொண்டுவரும் திறமை இல்லாததாலும் பிள்ளைகளைப் பயனற்றவராக்கித் தாமும் பயன்பெறாது போகின்ற சிலரும் உலகில் உள்ளனர். ஆதலால், அவர்களை நோக்கி, மனிதர்களே! அறிவு நிரம்பிய நன்மக்களைப் பெற்று, பயன்பெற்று உலக வளர்ச்சிக்கும் உதவுதலே சால அழகிதாம் என்று கூறியுள்ளார் திருவள்ளுவனார். மேலும், நிலநீர், வீடுவாசல், நகைநட்டு முதலியவற்றைப் பெறுவதைப் பேறு என்னாமல், பிள்ளைபெறுவதையே “பேறு” (பெறுதல்) என்னும் சொல்லால் குறிக்கின்றனர் தமிழ் மக்களும். எடுத்துக்காட்டு வேண்டுமானால், “என் மகள் கருவுற்றிருக்கின்றாள், பிள்ளைப்பேறு பார்ப்பதற்குப் பணம் வேண்டும்” என்றும், “தாய் மகளுக்குப் பிள்ளைபேறு பார்ப்பதற்காக வந்திருக்கிறாள்” என்றும் வழங்கும் உலக வழக்குக்களே போதுமே! இவ்வுலக வழக்குக்களும், இம்முதற் குறளும் ஒன்றுக்கொன்று உறுதுணையன்றோ?

அறிவற்ற பயனற்ற பிள்ளைகளைப் பெறுவதைவிட பெறாமலே இருப்பதும், மரக்கட்டையைப் பெறுவதும், பொம்மைகளை வைத்துக்கொண்டு கொஞ்சுவதும் நல்லது; ஏன்? பெருந்துன்பமும், பொருட்செலவும் குறையும் அன்றோ; இக்கருத்தை அடக்கி அறிவறிந்த மக்கள் என்று பாடியுள்ள நயம் நன்று நன்று!

2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

(பதவுரை) பழி பிறங்கா -பழிக்கு இடம் இல்லாத, பண்புடை நல்ல குணங்களையுடைய, மக்கள் – பிள்ளைகளை, பெறின் – பெற்றால், (பெற்றோர்க்கு) எழுபிறப்பும் – ஏழு பிறப்புக்களிலும் கூட, தீயவை தீய தீமைகள், தீண்டா சேராவாம்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண – உரை) எழு பிறப்பினும் துன்பங்கள் சாரா; ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினை யுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

(பரி -உரை) வினைவயத்தால் பிறர்க்கும் பிறப்பு ஏழின் கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா, பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவானாயின்.

(தெளிவுரை) பிள்ளைகள் கெட்டவராய் இருந்தால். பெற்றோர்களுக்கும் கெட்ட பெயரும், கெடுதியும் நேரிடுகின்றன. பிள்ளைகள் நல்லவராயிருந்தால், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரும், நன்மைகளும் ஏற்படுகின்றன. நன்மை ஒரு வேளை மட்டுமா? ஒரு நாளைக்கு மட்டுமா? இல்லை, எப்பொழுதும், எந்நாளும் நன்மையே! என்பதை வற்புறுத்துவதற்காகவே “எழு பிறப்பும் தீயவை தீண்டா” என்று திருவாய் மலர்ந்தார் திருவள்ளுவனார்.

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்.

(பதவுரை) தம் பொருள் – (பெற்றோர்களாகிய) தம்முடைய செல்வம், தம் மக்கள் – தம்முடைய பிள்ளைகளே, என்ப- என்று சொல்லுவர் அறிஞர். அவர் பொருள் – அப்பிள்ளைகளுடைய செல்வம், தம்தம் வினையால் -(பெற்றோர்களாகிய) தங்கள் தங்களுடைய தொழிலினால், வரும் உண்டாகும்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண-உரை) தம்முடைய பொருள் என்று சொல்லுவர் உலகத்தார் தம் மக்களை; அம்மக்களுடைய பொருள் தம் தம்முடைய வினையோடே கூட வருதலான்.

(பரி-உரை) தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான்.

(தெளிவுரை) பெற்றோர்களுடைய செல்வம் பிள்ளைகளே. பெற்றோர் தொழில்செய்து ஈட்டும் செல்வம் பிள்ளைகளுடையதாம். பெற்றோர்கள் தாம் தொழில் செய்து ஈட்டும் செல்வத்தைத் தம் பிள்ளைகளுடையதாகவும், தம் பிள்ளைகளைத் தம்முடைய செல்வமாகவும் கருதுவது என்றும் இயற்கைதானே இவ்வுலகில்!

(ஆராய்ச்சி உரை) தம்தம் வினையால் என்பதற்கு, தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகனார். அஃதாவது, பெற்றோரை நோக்கிப் பிள்ளைகள் செய்யும் நல்வினையால் பிள்ளைகளின் பொருள் பெற்றோர்க்குச் சேருமாம். இத்தகைய தொடர்களைப் பொருளாக எழுதுவதற்கு உண்மையில் குறளில் இடமிருக்கிறதா? வலிந்து எழுதியிருப்பதாகத் தோன்றவில்லையா?தம் என்பது. முதல் அடியில் பெற்றோரைக் குறிப்பதனால், இரண்டாவது அடியிலுள்ள தம் தம் என்பனவும் பெற்றோரைக் குறிக்க, வினை என்பது பெற்றோர் செய்யும் தொழிலைக் குறிப்பதாக நேர்முகமுறையில் பொருள் எழுதப்பட்டது எம்மால்.

தொழில் என்னும் பொருளில் வினை என்னும் சொல்லை எண்ணற்ற இடங்களில் எடுத்தாண்டுள்ளார் வள்ளுவராதலின், பெற்றோர் தாம் ஈட்டும் பொருளைத் தமதாக எண்ணாமல், தம் மக்களுடையதாக எண்ணி, அம்மக்களையே தம் பொருளாக எண்ணுவாரேயானால், அம்மக்களை நன்முறையில் பேணி வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர முடியுமல்லவா? இக்கருத்தே இக்குறளின் நோக்கம்.

4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.

(பதவுரை) தம் மக்கள் – தம் பிள்ளைகள், சிறுகைதம் சிறிய கைகளால், அளாவிய – பிசைந்து துழாவிய, கூழ் -உணவானது. அமிழ்தினும் (சுவையில் மிக்க) அமிழ்தத்தைக் காட்டிலும், ஆற்ற- மிகவும், இனிது -இனிமை உடையதாம். (ஏ-ஈற்றசை)

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண-உரை) இனிமை உடைத்தாகிய அமிழ்தினும் மிக இனிது; தம்முடைய மக்கள் சிறு கையாலே அளையப்பட்ட கூழ்.

(பரி-உரை) சுவையான் அமிழ்தத்தினும் மிக இனிமை யுடைத்து, தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.

(தெளிவுரை) தம் பிள்ளைகள் சிறுகைகளால் துழவிப் பிசைந்த உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தினும் மிக இனிக்கும்.

(ஆராய்ச்சி உரை) ஒருவர் உண்ணும்போது அவ்வுணவில் பிறர் வந்து கையை இட்டுப் பிசைந்து சிதைப்பாரேயானால் உண்ணுபவர்க்குப் பிடிக்காது. ஆனால், அவருடைய சிறு குழந்தை வந்து உணவில் கையை இட்டுப் பிசைந்து வாரி இறைக்குமேயானால் அவ்வுணவு சுவையில் மிகுந்த அமிழ்தத்தைக் காட்டிலும் அவர்க்கு இனிக்கும் என்பது உலகத்தில் உள்ள உண்மைதானே!

“பல்வகைச் செல்வங்களைப் படைத்துப் பலரோடு உண்ணக்கூடிய பெருஞ் செல்வராயினும் சரியே: குறு குறுவெனத் தளர்நடை நடந்தும், சிறிய கையை நீட்டி உணவில் இட்டும், தொட்டும், கௌவியும், துழாவியும், உடம்பின் மேலே வாரி இறைத்தும் மனத்தை மயக்குகின்ற மக்களைப் பெறாதோர்க்கு வாழ்நாளில் பயன் ஒன்றும் இல்லை” என்னும் கருத்துடைய செய்யுள் ஒன்று. பழந்தமிழ்ச் சங்க நூலாகிய புறநானூற்றில் உள்ளது. அது வருமாறு:-

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெரும் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டியும்
இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை வில்லைதாம் வாழு நாளே

என்பது புறநானூற்றுச் செய்யுள் (188). ஈண்டுரைத்த குறளின் விளக்கமே இப்புறச் செய்யுள் என்றால் பொருந்தும்.’

5. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

(பதவுரை) மக்கள் – தம் பிள்ளைகளுடைய, மெய்- உடம்பினை, தீண்டல்-தொடுதல், உடற்கு இன்பம் – (பெற்றோர்களின்) உடலுக்கு இன்பமாயிருக்கும், மற்று – பின்பு, அவர் – அப்பிள்ளை களுடைய, சொல் கேட்டல் – இனிய (மழலை) சொற்களைக் கேட்டல், செவிக்கு இன்பம் – காதுக்கு இன்பமாயிருக்கும். மக்கள் மெய் தீண்டல் என்பதற்கு, பிள்ளைகள் பெற்றோருடைய உடம்பினைத் தீண்டுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண- உரை) தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற்கு இன்பமாம்; அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாம்.

(பரி- உரை) ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.

(தெளிவுரை) குழந்தைகளின் உடலைத் தொடுதல் பெற்றோர்களின் உடலுக்கு இன்பம். அடுத்து அவர்தம் சொற்களைக் கேட்டலோ காதுக்கு இன்பமாம்.

(ஆராய்ச்சி உரை) சில சமயங்களில் பெற்றோர் பெரிய துன்பக் கடலுள் மூழ்கியிருக்கும்போது, பிள்ளைகள் வந்து உடம்பைத் தொட்டும், இனிய மழலைகளைப் பேசியும் மகிழ்விக்க, திரும்பவும் பெற்றோர் இன்பக் கடலுள் மூழ்கி இறுமாப்பதைக் காண்கின்றோம்.

ஆடம்பர உடையில் அவா மிக்க இளைஞன் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் தன் இளமையில் மடிப்புக்கலங்காத (பெட்டி போட்ட) சட்டையை அணிந்துகொள்கின்றான். எவரேனும் அச்சட்டையைத் தொட்டால், “தொடாதே, மடிப்புக் கலங்கிவிடும்” என்று சினக்கிறான். தன் தம்பியோ, தங்கையோ மேலே வந்து விழுந்தால், “நான் கலங்காமல் வெண்மையான உடை உடுத்தியிருக்கிறேன்; ஏன் மேலே விழுந்து அழுக்காக்கினீர்கள்?” என்று கூறி அடிக்கிறான். நண்பர் எவரேனும் தோளின் மேல் கையை வைப்பார்களேயானால், பதமாகக் கையை எடுத்துக் கீழே விட்டு, சட்டை கலங்காமல் பார்த்துக் கொள்கின்றான்.

அவ்விளைஞனுக்கு மணப்பருவம் நெருங்கியது. மணம் நிகழ்ந்தது. குழந்தை பிறந்தது. தெருவிலே, புழுதியிலே விளையாடிக் கொண்டிருக்கின்றது குழந்தை. தந்தை ஆடம்பரமாக உடுத்திக்கொண்டு அயலூர்க்குப் புறப்படலானான். வீட்டை விட்டுத் தெருவிலே காலை வைத்தான். பார்த்தது குழந்தை. புழுதி படிந்த உடம்போடு, “அப்பா நானும் வருகிறேன்” என்று கூறிக் கட்டிக்கொண்டது. விலக்கி உள்ளே அனுப்ப முயற்சிசெய்தான். முடியவில்லை. தேம்பியது குழந்தையின் வாய், தூக்கி மார்போடணைத்துக் கொண்டான் தந்தை. முத்தமிட்டுக் காசு தந்து உள்ளே அனுப்பினான். குழந்தையின் புழுதி படிந்த உடம்பைத் தழுவியதில் தந்தைக்கோர் தனியின்பம்! “நானும் வருகிறேன்” என்ற பேச்சில் ஒரு பேரின்பம்.

தெருவிலே தேரின் மேல் ஏறிப் புறப்பட்ட தந்தையைக் குழந்தை தடுக்க, தந்தை கீழே இறங்கி மார்போடணைத்துக்கொண்டு மகிழ்ந்ததாக ஒரு நிகழ்ச்சி பண்டைய நூலாகிய அகநானூற்றிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வின்பமே இக்குறளில் இயம்பப்பட்டுள்ளது.

6. குழலினிதி யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.

(பதவுரை) தம் மக்கள் – தம் பிள்ளைகளுடைய, மழலைச் சொல் – இனிமையான குதலை மொழிகளை, கேளாதவர் கேட்காதவர்களே, குழல் இனிது -புல்லாங்குழலின் ஓசை இனிமையாய் இருக்கின்றது. யாழ் இனிது – யாழின் ஓசை இனிமையாய் இருக்கின்றது, என்ப – என்று சொல்லுவார்கள்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண- உரை) குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.

(பரி- உரை) குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவர், தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.

(தெளிவுரை) தங்களுக்குப் பிறந்த குழந்தையின் மழலைப் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தவர்கள், புல்லாங்குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளின் இசை இனிமை உடைத்து என்று இயம்ப மாட்டார்கள். தங்கள் குழந்தையின் கொஞ்சலைக் கேளாதவர்களே பிற இசைகளைப் புகழ்வார்கள். வள்ளுவர் இங்ஙனம் கூறியதன் கருத்து. குழந்தையின் கொஞ்சல் மிக மிக இனிது என்பதை வற்புறுத்துவதே!

7. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.

(பதவுரை) தந்தை – ஒரு தகப்பன், மகற்கு – தன் மகனுக்கு, ஆற்றும் – செய்யவேண்டிய, நன்றி – உதவியாவது, அவையத்து – (கற்றார் நிறைந்த) அவையிலே (சபையிலே). முந்தி இருப்ப- (கல்வி, கேள்வி, அறிவு, ஆராய்ச்சி, சொல்வன்மை முதலியவற்றில்) முன்னணியில் இருக்கும்படி, செயல் – செய்வதாம் – அஃதாவது கல்வியறிவு உடையவனாக்குதலாகும்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண -உரை) தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம். அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி உண்டாக்குதல்.

(பரி-உரை) தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது, கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கிருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.

(தெளிவுரை) தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது கற்றவர் கழகத்தில் அவன் கல்வியறிவில் முன்னணியில் திகழும்படியாகச் செய்தலாம்.

(ஆராய்ச்சி உரை) ஒரு தந்தை தன் மைந்தனுக்குத் தேடித்தர வேண்டிய பொருள், வீடுவாசலா? நிலம் நீரா? காசு பணமா? அழகிய மணப்பெண்ணா? இல்லையில்லை! இவற்றினும் மேலான கல்வியறிவே! ஏனையவற்றை அறவே அளிக்க வேண்டாம் என்றும் சொல்ல வரவில்லை. அவற்றை மட்டும் அளித்துக் கல்வியை அளிக்காமல் விடுதல் கூடாது என்பது இங்குக் கருத்து.

ஏன்? ஏனையவை தந்தைக்குப்பின் அழியினும் அழியும். ஆனால், கல்வி அழியாத விழுமிய பொருளன்றோ? இது குறித்தே.

எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சை மற்றல்ல பிற

என நாலடியாரும் நவில்கின்றது.

8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

(பதவுரை) தம் மக்கள் – தம்முடைய பிள்ளைகள், அறிவு உடைமை – அறிவு உடையவராய் இருத்தல், தம்மின் -தம்மைக் காட்டிலும் (அஃதாவது தமக்கு இன்பமாய் இருப்பதைக் காட்டிலும்), மாநிலத்து – பெரிய நில உலகிலே, மன் – நிலைத்துள்ள, உயிர்க்கு எல்லாம் உயிர்களுக்கு எல்லாம் (அஃதாவது அறிவுள்ள மனிதர்களுக்கெல்லாம்), இனிது – இன்பமாயிருக்கும்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண- உரை) தம்மக்கள் அறிவுடையாரானால், அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.

(பரி- உரை) தம் மக்களது அறிவுடைமை பெரிய நிலத்துமன்னா நின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினும் இனிதாம்.

(தெளிவுரை) தம் பிள்ளைகள் அறிவுத் திறமையால் செய்யும் ஆக்கவேலைகள், தம்மை விட, பெரிய உலகில் என்றும் வாழும் உயிர்கட்கெல்லாம் இனிய நன்மை பயக்கும்.

(ஆராய்ச்சி உரை) பிள்ளைகள் அறிவுடையராய் இருந்தால் மகிழ்ச்சி பெற்றோர்க்கு மட்டுமா? பெற்றோரைவிட, உலகத்துள்ள உயர்ந்த மனிதர்கள் மிகுதியாக மகிழ்வார்கள். எப்படி? பெற்றோர் தம் ஆயுள் வரையும், வீட்டில் மட்டும் மகிழ்வார்கள். உலகினரோ, பிள்ளைகள் இருக்கும் வரையும், இறந்த பின்னும் பல துறைகளில் மகிழ்வார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மகிழ்வார். தொழில் செய்யும் இடத்தில் தலைவர் மகிழ்வார். அரசாங்கம் மகிழும், பயன்பெறும் ஏழைகள் மகிழ்வர். இன்னும் எல்லோர்க்கும் எப்போதும் மகிழ்ச்சியேயன்றோ? திருவள்ளுவர் முதலியோரின் அறிவு பற்றி அவர்களின் பெற்றோர்களை விட உலகம் அன்றும், இன்றும், என்றும் – மகிழ்ந்ததே. மகிழ்கின்றதே, மகிழுமே!

இரட்டுற மொழிதல் (இரண்டு பொருள்படச் சொல்லுதல்) என்னும் இலக்கண விதிப்படி, இக்குறளுக்கு இன்னொரு பொருளும் இயம்பலாம். அஃதாவது, “பெற்றோராகிய தங்களின் அறிவைக் காட்டிலும் பிள்ளைகள் மிகக் அறிவுடையவராயிருப்பது உலகோர்க்கு உவகை யளிக்கும்” என்பதாம். புலியின் வயிற்றில் பூனை பிறத்தலாகாது. ஆனால், சிப்பியின் வயிற்றில் இப்பி(முத்து) பிறப்பது குறித்து உலகம் உவக்கின்றதன்றோ?

வேறொரு பொருளும் விளம்பலாம் இக்குறட்கு! அஃதாவது, ‘உலகிலுள்ள எல்லாப் பெற்றோர்களுக்கும் தங்கள் தங்களைக் காட்டிலும், தங்கள் தங்கள் பிள்ளைகள் மிக்க அறிவுடையவரா யிருப்பது மனத்திற்கு மகிழ்ச்சி யளிக்கும்” என்பதாம். பெற்றோரினும் பிள்ளைகள் அறிவிற் பெரியவராய் விளங்குவதால் பெற்றோர்க்குப் புகழ்ச்சி பெருகுந்தானே!

9. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

(பதவுரை) தன் மகனை – தன் பிள்ளையை, சான்றோன் என – கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று (அறிவுடையோர்) சொல்ல, கேட்டதாய் – (அப்புகழ்மொழிகளை, பொய்கூறாத அவ்வறிஞர் வாயின் மூலமாகக்) கேட்ட தாயானவள், ஈன்ற பொழுதின் (அப்பிள்ளையைப்) பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்போது, பெரிது – மிகவும், உவக்கும் – மகிழ்ச்சியடைவாள்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண – உரை) தான் பெற்ற காலத்தினும் மிக மகிழும், தன் மகனைச் சான்றோன் என்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.

(பரி- உரை) தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும், தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக்கேட்ட தாய். …. பெண்ணியல்பால் தானாக அறியாமையால் கேட்ட தாய் எனவும் கூறினார்.

(தெளிவுரை) பத்துத் திங்கள் வருந்திச் சுமந்து நொந்து பெற்ற தாயின் பொறையுயிர்ப்புத் துன்பத்தைப் (பேறுகால வேதனையைப்) போக்கும் மருந்து குழந்தையின் குரலன்றோ? பிறந்த உடனே குழந்தை, “குவா, குவா” என்று குழறுவதைக் கேட்டதும், துன்பத்தில் தோய்ந்துள்ள தாய்க்குக் கட்டுக்கடங்காத களிப்பு! மட்டற்ற மகிழ்ச்சி! அம்மகிழ்ச்சியைக் காட்டிலும் தன் பிள்ளை கல்வியறிவில் தேர்ந்தவன் எனப் பிற பெரியோர் புகழ்வதைக் கேட்டபோது பெரிதும் மகிழ்வாள் தாய் என்பது கருத்து.

(ஆராய்ச்சி உரை) பிள்ளைகளின் திறமையை அறியும் அறிவு பெண்கட்கு இல்லையாதலின், பிறர் கூறக் கேட்டே அறிய வேண்டும் என்னும் கருத்துப்பட வரைந்துள்ளார் பரிமேலழகர். தாமே அறியும் திறமை பெண்டிர்க்கு இருப்பினும், இல்லாவிடினும், “காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்றபடி தம் சிறப்பில்லாத பிள்ளைகளையும் சிறப்புடையவர்களாகக் கருதுவது பெரும்பாலும் பெற்றோர்க்கு இயல்பாகலின், பிள்ளையின் புகழைப் பிறர்வாயால் கேட்டு மகிழ்வதே பெருமகிழ்வாகும் என்னும் கருத்துப்படப் பாடியுள்ளார் வள்ளுவர் என்பதைப் பரிமேலழகர் அறிந்திலர் போலும்!

10. மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.

(பதவுரை) மகன் – ஒரு பிள்ளை, தந்தைக்கு- (தன்னைப் பெற்றுக் கல்வியறிவு ஒழுக்கம் உடையவனாக ஆக்கிய தன்னுடைய) தகப்பனுக்கு, ஆற்றும் – செய்யவேண்டிய, உதவி – பதில் உதவி (யாதெனின்) (பிறர் தன் கல்வியறி வொழுக்கங்களைக் கண்டு) இவன் தந்தை – இப்பிள்ளையின் தகப்பன், என் நோற்றான் கொல் (இப்பிள்ளையைப் பெறுவதற்கு) என்ன தவம் செய்தானோ, எனும் சொல் – என்று பாராட்டும் புகழ்மொழியாகும்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண- உரை) மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம், இவன் தந்தை என்ன தவம் செய்தான் என்று உலகத்தார் சொல்லும் சொல்லைப் படைத்தல்.

(பரி- உரை) கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது, தன்னறியும் ஒழுக்கமும் கொண்டார், இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான் கொல்லோ என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல்.

(தெளிவுரை) இவனைப் பெறுவதற்கு இவன் பெற்றோர் என்ன தவம் செய்தார்களோ என்று பிறர் தன் கல்வியறிவு ஒழுக்கம் முதலியன பற்றித் தன் பெற்றோரைப் புகழும்வண்ணம் ஒவ்வொரு பிள்ளையும் நடந்து கொள்ளவேண்டும்.

(ஆராய்ச்சி உரை) இப்பகுதியுள் தந்தை மகளுக்குச் செய்வதென்றோ, தாய் மகனுக்குச் செய்வதென்றோ, மகள் தந்தைக்குச் செய்வதென்றோ, மகன் தாய்க்குச் செய்வதென்றோ குறிப்பிடாமல். தந்தைக்கும் மகனுக்குமே தொடர்பு காட்டியிருத்தலின், அறிவுடையவர்கள் ஆண் பிள்ளைகளே என்பது நன்கு போதரும்; ஆதலின் புதல்வர் என்பதே பொருந்தும் எனின், மொழியுதும் ; அமிழ்தம் உண்டவன் வாழ்வான் என்றால், அமிழ்தம் உண்டவள் வாழ்வாள், உண்டவர் வாழ்வார், உண்டது வாழும், உண்டன வாழும் என மற்றைய பால்களும் கொள்ளலாம் என்பதை ‘ஒருமொழி ஒழிதன் இனம் கொளற்கு உரித்தே’ என்னும் நன்னூல் விதி உணர்த்து கின்றதன்றோ? அவ்விதிப்படியே ஈண்டும் மகன் என்றபோதெல்லாம் மகள் என்றும் கொள்ளலாமே!

அதிகாரச் சுருக்கம்

எல்லாப் பேற்றினும், நல்ல பிள்ளைப்பேறே சாலச் சீரிது, அப்பேறு பெற்றவர்க்கு எப்போதும் துன்பங்கள் அணுகா. மெய், வாய், கண், செவி என்னும் பொறிகட்கு மிக்க இன்பம் கிடைக்கும். இத்தகைய பிள்ளைகளைக் கல்வியறிவு ஒழுக்கங்களில் சிறந்தோராக்குதல் பெற்றோர்க்குக் கடமை. பெற்றோர்க்குப் பெரும்புகழ் உண்டாக்குதல் பிள்ளைகட்குக் கடமை.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1.5 / 5. வாக்கு எண்ணிக்கை: 2

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *