வள்ளுவர் கண்ட மனையறம் சுந்தர சண்முகனார்

வாழ்க்கைத் துணைநலம்

குடும்ப வாழ்க்கையில் கணவனுக்குத் துணையாக இருக்கின்ற மனைவியின் குணநலங்களைப் பற்றிக் கூறும் பகுதியாதலின், இதற்கு வாழ்க்கைத் துணைநலம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. கணவனின் கடமைகளைக் கூறும் இல்வாழ்க்கை என்னும் பகுதிக்குப்பின், மனைவியின் மாண்புகளைக் கூறும் இப்பகுதியை அமைத்தது இயைபுடையதுதானே.

1. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(பதவுரை) மனைத்தக்க மாண்புடையள் ஆகி = குடும்பத்துக்குத் தகுந்த மாட்சிமை உடையவளாய், தற்கொண்டான் = தன்னை மணந்துகொண்ட கணவனது, வளத்தக்காள் = செல்வ வளப்பத்துக்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்பவளே, வாழ்க்கைத் துணை = உண்மையில் வாழ்க்கைக்குத் துணையாவாள். (மனை – மனையறம்- குடும்பம்: மாண்பு = மாட்சிமை – நற்குண நற்செய்கைகள்: தற்கொண்டான் தன் கொண்டான் = கணவன். வளம் = வந்துகொண்டிருக்கும் செல்வ வளம்).

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) தான் பிறந்த குடிக்குத் தக்கவொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினையுடையவள் இல்வாழ்க்கைக்குத் துணையாவாள்.

(பரி. உரை) மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கை களையுடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை யுடையாள் அதற்குத் துணை.

(தெளிவுரை) குடும்பப் பெண்ணுக்குரிய குணச்சிறப்புடன், கணவனது வருவாய்க்கேற்பச் செலவு செய்பவள் எவளோ அவளே நல்ல வாழ்க்கைத் துணைவியாவாள்.

(ஆராய்ச்சி உரை) வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு இந்தக் குறளில் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. என்ன? ஒருவனுக்கு மனைவிதான் வாழ்க்கைத் துணையா? அவன் தாய் தந்தையர் என்ன ஆவது? அவன் உடன்பிறந்தார்கள் என்ன ஆவது? உற்றார் உறவின்முறையார் ஊரார் உலகத்தார் என்ன ஆவது? இவர்கள் எல்லாம் இருக்க நேற்றுவந்த பெண்டாட்டி வாழ்க்கைத் துணையாகி விடுவாளா? அவளுக்கு அவ்வளவு பெரியபேரா? ஆம், அவளே வாழ்க்கைத்துணை.

தாய்தந்தையரோ இறுதிவரை இருப்பதில்லை. இருக்கும் போதும் அவர்களது அன்பு பல பிள்ளைகளுக்கும் பங்கிடப்படுகிறது. உடன் பிறந்தார்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவரவர்கட்கும் தனிக்குடும்பம் உண்டாகிவிட்டால், அதன் பிறகு அண்ணனாவது, தம்பியாவது! அண்டை வீட்டுக்காரனே மேல். உற்றார் – உறவின் முறையார், ஊரார் – உலகத்தாரோ, வாழ்ந்தாலும் பொறுக்க மாட்டார்கள் – தாழ்ந்தாலும் மதிக்க மாட்டார்கள். நண்பரோ, மனைவியோடு அவர் போய்க்கொண்டிருக்கும் போது ஏறிட்டுப் பார்க்க மாட்டேன் என்கிறார். சில சமயம் தெருவாயிற் படியோடு நிற்கவைத்துப் பேசியே வழியனுப்பி விடுகிறார். பிள்ளைகளுக்குள் பெண்பிள்ளைகளோ, அகப்பட்டவரையும் சுருட்டிக்கொண்டு அயலார் சொத்தாய்ப் போய்விடுகின்றனர். ஆண் பிள்ளைகளோ, திருமணம் செய்துவைத்துவிட்டால் அடியோடு மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு மனைவி என்ன – மாமனார் என்ன -மாமியார் என்ன- மைத்துனர்கள் என்ன மைத்துனிகள் என்ன -இவர்களே நெஞ்சத்திரையில் நிழற்படம்போல ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஒவ்வொன்றாகப் புடைத்துத் தூற்றிப் பார்த்தால் கடைசியாகத் தேறுவது மனைவி என்னும் ஒரு பொருள்தான். அவன் வாழ்வு அவள் வாழ்வு – அவன் தாழ்வு அவள் தாழ்வு. இன்ப துன்பம் இரண்டிலும் இறுதிவரையும் இணைந்து நிற்பவள் அவளே! நான் இவ்வளவு எழுதியதைக் கொண்டு என்னைப் பெரிய ‘பெண்டாட்டிதாசன் என்று எவரும் எண்ணிவிட வேண்டா! இதனை நானாகச் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்லியிருக்கிறார் ‘வாழ்க்கைத்துணை’ என்று!

“இங்கே வள்ளுவர் அளவு மீறிப் புனைந்துரைத்து விட்டார். ஒருவேளை அவர் மனைவியார் அவ்வாறு நடந்திருக்கலாமோ, என்னவோ? சில பெண்டிரால், அவர்தம் கணவரது வாழ்க்கை பெரிதும் இடர்ப்படுகின்றதே – வாழ்க்கைக்கே இறுதி நேர்ந்து விடுகின்றதே! அவர் தமை ‘வாழ்க்கைத்துணை’ எனல் வள்ளுவர்க்கு அடுக்குமா? என ஐயுறலாம் சிலர். வள்ளுவர் என்ன கொக்கா? அவர் அவ்வளவு தெரியாதவரா? ஆழம் தெரியாமல் காலைவிட்டு அகப்பட்டுக்கொண்டு திணறுபவர் அல்லர் அவர். அதனால்தான், எல்லா மனைவியரும் வாழ்க்கைத் துணைகளாகி விட முடியாது; மனைத்தக்க மாண்புடை யளாகித் தற்கொண்டான் வளத்தக்காளே வாழ்க்கைத் துணையாவாள் என்றார் வள்ளுவப் பெருந்தகையார்.

மனைத்தக்க மாண்பு’ என்பது என்ன? முறை தெரியாத பெண்ணொருத்தியை நோக்கி, குடித்தனம் செய்கின்ற பெண்ணா காரணமா தெரியவில்லையே என்று உலகியலில் பேசுவது வழக்கம். எனவே, குடும்பப்பெண் என்றால், அவளிடம் என்னென்னவோ நற்குண நற்செய்கைகளை மன்பதை (சமூகம்) எதிர்பார்க்கிறது. என்பது புலனாகும். ‘நல்ல பெண்மணி’ என்னும் தலைப்பில் இப்போது நாட்டில் ஒரு பாட்டுப் பாடுகின்றார்களே. அதன்படி ஒழுகினாலேயே கூட ஏறக்குறைய மனைத்தக்க மாண்புதான்.

அடுத்து “தற்கொண்டான் வளத்தக்காள்” என்றால் என்ன? கணவனும் மனைவியுமாக வெளியூரில் தனிக்குடும்பம் செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். அங்கு மாமி இல்லை; மைத்துனி இல்லை; ஓரகத்தி இல்லை; ஊர்வம்புக்காரி ஒருத்தியுமே இல்லை. ஆயினும் அடிக்கடி இருவர்க்குள்ளும் இரும்பெரும் போராட்டம் நடக்கின்றது. அதற்குரிய காரணங்களுள் முதலிடம் பெறுவது, மனைவி விரும்பும் பொருள்கள் எல்லாம் வீட்டிற்கு வந்து சேராமையே! “அதனால்” அவள் கணவனை மதிப்பதில்லை – பணிவிடை செய்வதில்லை. வேலைகளையும் செவ்வனே செய்து முடிப்பதில்லை. செலவாளிகளாக இருக்கின்ற அண்டை வீட்டு ஆறு முகத்தையும் எதிர் வீட்டு ஏகாம்பரத்தையும் எடுத்து ஈடு காட்டுகின்றாள். நீயும் ஓர் ஆண்மகனா என்று மானத்தை வாங்குகிறாள். குறைந்த வருவாயுடைய கணவன் என்ன செய்வான்? தன் எளிமையை வெளிக்காட்ட வெட்கி, கடன் வாங்கியாவது தொலைக்கிறான். அதன் பிறகு, ஆகா! இத்தகைய கணவர் கிடைப்பாரா என்ற புகழ்மாலை வீட்டில்! வாங்கிய கடனைக் கொடுக்க வழியற்றவன் என்ற இகழ்மாலை நாட்டில்!

செலவானது வரவுக்கு மேற்படாமல் உட்பட்டிருக்குமானால், குறைந்த வருவாயினால் தாழ்வு ஒன்றும் இல்லை என்னும் கருத்தில், “ஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை போகு ஆறு அகலாக்கடை” எனத் திருவள்ளுவரே தெரிவித்துள்ளார் மற்றோரிடத்தில். எனவே, நூறு காசு ஈட்டி மேலும் பத்துக்காசு கடன் வாங்குபவனைக் காட்டிலும், ஐம்பது காசு ஈட்டி அதில் ஐந்து காசு மிச்சப்படுத்துபவனே மேலானவன் என்ற “மந்திரத்தை” மனத்தில் இருத்தும் மங்கை நல்லாளே சிறந்த வாழ்க்கைத்துணையாவாள். இது குறித்தே, “தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை” என்றார் ஆசிரியர். ஆகவே, மனைவி ஆடம்பரச் செலவுகளை அறவே அகற்ற வேண்டும். கணவன் அவ்வாறு செய்தாலும் அவனைத் திருத்தவேண்டும்.

இங்கே இன்னொன்றும் கவனிக்க வேண்டும். கருமித்தனமாய் இருக்கவேண்டுமென ஆசிரியர் சொல்லவில்லை. கணவனது வருவாய் வளப்பத்துக்குத் தக ஒழுகவேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார். எனவே, குறைந்த வருவாயானால் சிக்கனமாயிருக்கவேண்டும். நிறைந்த வருவாயானால் கூடியவரை பிறருக்கு உதவவும் செய்யலாம்.

இங்கே வளத்தக்காள் என்பதற்கு வேறொரு பொருளும் சொல்லலாம். அதாவது, “கணவனது செல்வமாக இருக்கத்தக்கவள் – இவளே கணவனுக்குப் பெரிய செல்வவளம்” என்ற அழகு உரைதான் அது! இப்போது தீர்ப்பு வழங்குங்கள் – இத்தகையோளை வாழ்க்கைத் துணை என்று வாய்குளிர வழுத்துவதற்கு என்ன தடை? மேலும் துணை என்ற சொல்லுக்கு இணை – இரட்டை என்ற பொருளும் உண்டு என்பதும் இங்கே நினைவிருக்கட்டும்!

பெண் வைத்திருப்பவர்களே! மாப்பிள்ளையின் சொந்த வருமானத்தைக் கருதிப் பெண் கொடுப்பீராக! முன்னோர் சொத்தில் பிழைக்கும் தலையில்லாத முண்டங்களுக்குப் பெண் கொடாதீர்கள் என்று எச்சரிப்பது போல் “தற்கொண்டான் வளம்” என்னும் தொடர் அமைந்திருக்கின்றதல்லவா? பெண் பார்ப்பவர்களே! பணத்துக்காகவும் பளபளப்புக்காகவும் பெண் கட்டாதீர்கள்! பண்புக்காகப் பெண் கட்டுவீர்களாக என்று எச்சரிப்பதுபோல் “மாண்புடையள்” என்னுந்தொடர் அமைந்திருக்கின்றதல்லவா! என்ன அழகு!

2. மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்

(பதவுரை) இல்லாள்கண் = மனைவியிடத்தில், மனைமாட்சி இல்லாயின் = மனையறத்துக்கு (குடும்பத்துக்கு) வேண்டிய சிறப்புப் பண்புகள் இல்லாமற்போனால், வாழ்க்கை = (அவளைத் துணையாகக் கொண்டு நடாத்தும் குடும்ப வாழ்க்கையானது. எனை மாட்சித் தாயினும் = வேறு எத்தகைய சிறப்பினை உடையதாக இருந்தாலும், இல் = ஒன்றும் இல்லாததாகவே கருதப்படும். (இல்லாள் = மனைவி; எனை = எந்தவிதமான)

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள் மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளையுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

(பரி. உரை) மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவனில்லாளிடத் தில்லையாயின் அவ்வில் வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமை யுடைத்தாயினும் அஃதுடைத்தன்று.

(தெளிவுரை) மனைவியிடம் குடும்பப் பண்புகள் – சிறப்புகள் இல்லையாயின் வேறு எது நிறைந்திருப்பினும் வாழ்க்கை சிறவாது.

(ஆராய்ச்சி உரை) மனைமாட்சி மனைவிக்கு இருக்கத்தானே வேண்டும். அதனால்தானே அவளுக்கு மனைவி என்னும் பெயரும் கொடுக்கப்பட்டது. மனைக்கு உரியவள் மனைவி. வள்ளுவரோ ‘இல்லாள்’ என்று அழைக்கிறார். இல் என்றால் வீடு. இல்லுக்குரியவள் – வீட்டுக்குரியவள் இல்லாள். இந்தச் சொல்லோடு தொடர்புடைய நயமான செய்தியொன்று நினைவிற்கு வருகிறது. தமிழினம் மனைவிக்குக் கொடுத்திருக்கும் மதிப்புக்கு, மனைவி, இல்லாள் என்னும் சொற்களே சான்று பகருமே! மேலும், ஆடவர் தம் மனைவியரை “எங்கள் வீட்டிலே” என்னுஞ் சொல்லால் குறிப்பிடுவது மரபு. ஆண்மகன் தான் சிறுவனாய் இருக்கிறபோது ‘எங்கள் வீட்டிலே கேட்டார்கள்’ எனத் தன் பெற்றோரை “வீட்டிலே” என்னுஞ் சொல்லால் குறிப்பிடுகிறான் – அவனே தனக்குத் திருமணமாகி விட்ட பின்பு, தன் பெற்றோர் இருக்கும்போதே “எங்கள் வீட்டிலே கேட்டார்கள்” எனத் தன் மனைவியை “வீட்டிலே” என்னும் சொல்லால் குறிப்பிடுகிறான். என்ன விந்தை இது! ஒருவர் தம் நண்பரிடம் “எங்கள் வீட்டிலே வாங்கிவரச் சொன்னார்கள்’ என்பார். வீட்டிலே என்றால் உன் தந்தையார் வாங்கி வரச் சொன்னார் போலும் என்பார் நண்பர். இல்லையையா, எங்கள் வீட்டிலே என்கிறேன், நீ என்னவோ தந்தையாரா என்று கேட்கிறாயே என்பார் இவர். உடனே நண்பர், ஓகோ! உன் தாயார் வாங்கிவரச் சொன்னாரா? சரிதான். அப்படிச் சொல்லு என்பார். அதற்கு இவர், இல்லையையா இல்லை, எங்கள் வீட்டிலே வீட்டிலே என்று அடித்துக் கொள்கிறேன். மறுபடியும் தாயாரா என்று கேட்கிறாயே, வீட்டிலே என்றால் வேறு யாரையா? என் மனவிதான் வாங்கிவரச் சொன்னாள் என்பார். உடனே நண்பர், ‘ஓ அப்படியா! தாய் தந்தையரை விட மனைவி இருந்தால்தான் உனக்கு வீடு வீடாகத் தெரியும் போலும்’ எனக்கூறி நகையாடுவார்.

நான் இவ்வளவு நேரம் வீண்கதை எழுதவில்லை. எழுத்துக்கு எழுத்து இந்தக் குறளின் விளக்கமேயாகும். வள்ளுவர் இல்லாள் இல்லாள் என்று சொல்லியிருப்பதிலுள்ள உண்மை இதுதான்! ஒரு சிலர் இந்தத் “தத்துவத்தை” இன்னும் கூர்மையாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மனைவி பேரால் வீடு வாங்குபவர்களைத் தான் சொல்லுகிறேன். ஆனால், அவர்கள் பங்காளிக்குப் பாய்ச்சல் காட்டுவதற்காகவும், கடன்காரர்களுக்குக் கடுக்காய் கொடுப்பதற்காகவும், பெண்டாட்டி பேரால் வீடுகளை வாங்கிப் போட்டுவிட்டதாக உலகினர் சொல்கின்றனர். அவர்களைக் கேட்டால், நாங்கள் “இல்லாள்” என்னும் திருவள்ளுவர் வாக்குக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று சொல்வார்களோ என்னவோ! தீர்ப்பை உங்கள் பொறுப்பிலேயே விட்டுவிடுகிறேன்.

சில குடும்பங்களில் கணவன் கட்டிக்கரும்பாய் இனிக்கிறான்; மனைவியோ எட்டிக்காயாய்க் கசக்கிறாள். எனவே, கணவனுக்குப் பண்பாடு இருந்தால் போதாது; மனைவிக்கு மாட்சிமை வேண்டும் என்பதை வற்புறுத்தவே, “இல்லாள் கண் இல்லாயின் இல்” என்று அடுக்கினார் ஆசிரியர். இங்கே, இல்லாள் என்பதன் இறுதியில் உள்ள “ள்” என்னும் எழுத்தையும், “கண் என்னும் ஏழாம் வேற்றுமை உருபில் உள்ள “ண்” என்னும் எழுத்தையும் நன்கு அழுத்தந் திருத்தமாக ஒலிக்க (உச்சரிக்க) வேண்டுமல்லவா? அவ்வாறு அழுத்தி ஒலிக்கும்போது, அந்த வற்புறுத்தல் குறிப்புத் தோன்றுவது காண்க. இன்னும் இரண்டுமுறை சொல்லிப் பார்ப்போம், ‘மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின்’, ‘மனைமாட்சி ‘இல்லாள்கண் இல்லாயின்’ என்ன சொல்நயம்! எவ்வளவு பொருள் நயம்! நேரில் பாடம் சொல்லும் பொழுது, இந்த நுணுக்கங்களையெல்லாம் இன்னும் நன்றாக எடுத்துக் காட்ட முடியுமல்லவா?

கணவனோ பட்டம் பல பெற்றவன்; பதவிமேல் பதவி அலை மோதுகிறது; பணங்காசோ மிகுதி – இன்னும் எல்லாம் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு குறை. அதுதான் மாட்சிமையுடைய மனைவி கிடைக்காத குறை. அது இல்லாமல் வேறு எது இருந்துதான் என்ன பயன்? அவளை விரட்ட முடியாது. அன்றைக்கு ஆயிரம் பேருக்கு முன்னாலே தாலி கட்டினாயே – அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு வா! எனக்கு ஆக வேண்டியதைத் தீர்த்துவிடு என்று மிரட்டுவாள். எனவே, இவன்தான் கூறாமல் “சந்நியாசம்” கொள்ளவேண்டும். இவ்வாறு கொள்ளலாமா? இதுவா இல்வாழ்க்கைக்கு அழகு? இதனால்தான், “வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்” என்றார் வள்ளுவனார்.

இங்கே வள்ளுவர்க்கு ஒன்றும் ஓடவில்லை – ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம் – உணர்ச்சி வயப்பட்டுவிட்டார். பிற மாட்சிகளினும், மேலானதாக மனைமாட்சியைச் சிறப்பிக்க வந்த ஆசிரியர், இந்த மாட்சி இருந்தாலும் போதாது, அந்த மாட்சி இருந்தாலும் போதாது என்று எவையேனும் சில மாட்சிகளையாயினும் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? எதைக் குறிப்பிட்டாலும் ஈடாகாது போல் தெரிகிறது. எனவே, போங்களையா, அது எந்த மாட்சியாயிருந்தாலும் முடியாது என்னும் கருத்தில். ‘எனை மாட்சித்தாயினும்” என்று சொல்லிவிட்டார். மனைமாட்சி இல்லாவிடின், வாழ்க்கை இனிக்காது – சிறக்காது என்று சொல்லி யிருக்கலாமே எனின், வாழ்க்கை இருந்தல்லவா அதன்பிறகு இனிப்பது சிறப்பது? வாழ்க்கையே இல்லை போங்களையா என்று சொல்பவர் போல் எனைமாட்சித்தாயினும் “இல்” என்று ஒரே அடியாய் அடித்துவிட்டார். எனவே, மனைக்கு வாய்த்துள்ள மங்கையர்களே! என்ன செய்ய இருக்கின்றீர்கள்?

3. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை.

(பதவுரை) இல்லவள் மாண்பானால் = மனைவி மாட்சிமையுடன் விளங்கினால், இல்லது என் = வீட்டில் இல்லாத பொருள் என்ன? இல்லவள் மாணாக்கடை = மனைவி மாண்பின்றி யிருந்தால், உள்ளது என் = வீட்டில் இருக்கக்கூடிய பொருள் யாது? ஒன்றும் இராது. (இல்லவள் = மனைவி; மாண்பு = நற்குண நற்செய்கை தகுதி திறமை முதலியன உடைத்தா யிருத்தல்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) ஒருவனுக்கு மனையாள் மாட்சிமை யுடையாளானால், எல்லா மிலனே யாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?

(பரி. உரை) ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையளாயினக்கால் இல்லாததியாது! அவள் அன்னளல்லாக்கால் உள்ளது. யாது?

(தெளிவுரை) மனைவிக்கு மாண்பு இருந்தால், குடும்பத்தில். இல்லாதது என்ன? எல்லாம் இருக்கும். மனைவிக்கு மாண்பு இல்லையானால், குடும்பத்தில் உள்ளது என்ன? ஒன்றும் இருக்காது.

(ஆராய்ச்சி உரை) இந்தக் குறள். குடும்ப அறிவியலின் (Home Science) எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டது – இல்லை. எல்லைக்கோட்டையும் தாண்டிவிட்டது. இதற்குமேல் இன்னும் எந்தெந்தச் சொற்களால் குடும்பக் கலையின் உயர்நிலையை உரைத்துக் காட்டமுடியும்? வீட்டில் ஒன்றும் இல்லாவிடினும் மனைவிக்கு மாண்பு மட்டும் இருந்துவிட்டால், மனைக்கு வேண்டிய மற்ற எல்லாம் இருப்பதாகவே பொருளாம். வீட்டில் எல்லாமே இருந்தாலும் மனைவிக்கு மாண்பில்லையாயின் ஒன்றும் இல்லாததாகவே பொருளாம். இதனை இல்லது என்? உள்ளது என்? என்னும் வினாக்களால் விளங்க வைத்துள்ளார் ஆசிரியர். இங்கே வள்ளுவர், திட்டவட்டமாகத் தெளிவான ஒரு முடிவுக்குத் துணிந்து வந்து விட்டவராகக் காணப்படுகிறார். வேறு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். குடும்பத்துக்கு உண்மையான மூலதனம் மனைவியே – அதுவும் மாண்புமிக்க மனைவியே என்பது வள்ளுவர் கருத்து. இதனை இந்தக் குறளில் இல்லவள் – இல்லவள் என இருமுறை கூறியிருப்பதும், “மாண்பானால்: “மாணாக்கடை” என்னும் இருவகை உடன்பாட்டு, எதிர்மறை எச்ச முடிவுகளும் உணர்த்தி நிற்கின்றன வன்றோ? மாண்பானால், மாணாக்கடை என்பவற்றின் இறுதியில் உள்ள “ஆனால்”, “கடை” என்னும் இரண்டும் ஒருவகை வினையெச்ச விகுதி முடிவுகளாம்.

இனி, இக்குறட் கருத்தைச் சிறிது விளங்க நோக்குவாம் :- வீட்டில் போதிய பொருள்கள் இல்லாவிடினும், போதிய திறமையும் ஊக்கமும் உடைய மனைவி, எல்லாம் இருக்கும் வீட்டை விடத் தன் குடும்பத்தைச் சீர்திகழச்செய்வாள்; திறமையும் ஆர்வமும் இல்லாதவளோ, எல்லாம் இருப்பினும், ஒன்றும் இல்லாத வீட்டை விடத் தன் குடும்பத்தைப் பாழ்படுத்துவாள். முன்னவள் செட்டாகப் புதிய பொருள்களைச் சேகரிப்பாள் – நீண்டநாள் வைத்துப் படைப்பாள். பின்னவளோ, புதிய பொருள்களைச் சேகரிப்பதுஞ் செய்யாமல் உள்ள பொருள்களையும் விரைவில் அழித்து ஒன்றும் இல்லையாக்குவாள். முன்னவள், வீட்டிற்கு விருந்தினர் வந்தால், குறைந்த பொருளைக் கொண்டே பலவகைக் கறிகள் செய்து உணவு படைப்பாள்; பின்னவளோ, எல்லாம் இருப்பினும், இரண்டொன்றும் சரியாய்ச் செய்யாது கடனைக் கழித்தனுப்புவாள். முன்னவள் தன் ஏழைக் கணவன் இன்று காய்கறி வாங்கக் காசு இல்லையே என்றால், நேற்று வாங்கி வந்தவற்றுள் மிச்சம் உளது என்பாள்; பின்னவளோ, தன் கணவன் இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், நேற்று வாங்கி வந்தவை போதவில்லை, இன்றைக்கு இன்னும் நிறைய வாங்கிவர வேண்டுமெனக் கட்டளையிடுவாள். மேலும், இருப்பதைக் கொண்டு கணவன் முதலியோரை இன்புறுத்தித் தானும் இன்புறுவாள் முன்னவள்; எல்லாம் இருப்பினும், ஒரு விழுங்கு வெந்நீருக்கு வழியின்றித் திண்டாடித் தவிக்கவிடுவாள் பின்னவள்.

வேறு துறைகளிலும் இவ்விதமே – இவ்விதமே! ஆவது முன்னவளால்; அழிவது பின்னவளால், இதனாலேயே, முன்னவள் வீடு எல்லாம் உடையதாகவும், பின்னவள் வீடு ஒன்றும் இல்லாததாகவும் வள்ளுவரால் உரைக்கப்பட்டன. இக்குறட் கருத்தே. “இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை” என்னும் ஔவையின் மொழிக்குச் செவ்வியளிக்கின்றது. இங்கே, திருவள்ளுவரின் மனைவியார், இளையான்குடி மாறரின் மனைவியார் போன்ற நற்பெண்டிரின் வரலாறுகள் நமக்குப் போதிய சான்று பகரும். மாண்பு அற்ற பத்து மாட்டுக்காரி, மாண்பு பெற்ற ஒரு மாட்டுக்காரியிடம் பால் வாங்கிய கதை பலரும் அறிந்ததே!

4. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்.

(பதவுரை) (ஒரு பெண்ணிடத்தில்) கற்பு என்னும் -கற்பு என்று சொல்லக்கூடிய, திண்மை (எண்ணம், சொல், செயல் என்பவைகள்) கலங்காத வலிமை, உண்டாகப் பெறின் இருக்கப்பெற்றால், பெண்ணின் – (அத்தகைய) பெண்ணைக் காட்டிலும், பெருந்தக்க பெரிய தகுதி வாய்ந்த மேலான பொருள்கள். யா உள (இவ்வுலகத்தில்) யாவை உள்ளன? (ஒன்றும் இல்லை)

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண-உரை) பெண் பிறப்புப்போல மேம்பட்ட யாவை உள? கற்பாகிய திண்மை உண்டாகப் பெறின்.

(பரி -உரை) ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை யுள, அவள் மாட்டுக் கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.

(தெளிவுரை) கற்பென்னும் கலங்காவன்மை இருந்தால், உலகில் பெண்ணை விட மேலான பொருள்கள் யாவை?

(ஆராய்ச்சி உரை) “கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை” என்றார் ஒரு பெரியார். கற்பு எனப்படுவது, “கட்டிய கணவன் கல்லா யிருந்தாலும் வேறு எவரையும் கருத்தாலும் கருதாத தூய்மை” என்கின்றனர் ஒரு சிலர். “பிறந்த வீட்டில் பெற்றோரும், புகுந்த வீட்டில் கணவன் முதலியோரும் கற்பித்தபடி ஒழுகுதலே கற்பு” என்கின்றனர் ஒரு சிலர்.

“சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்” என்னும் அழகு பொருந்தக் கற்பு என்னும் சொல்லுக்கு நாம் பொருள் காண்போமாயின், திருக்குறளுள், வாழ்க்கைத்துணை நலம் என்னும் இப்பகுதியுள், பெண்கட்கு இருக்க வேண்டுவனவாகக் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தையும் கற்று, அவற்றைச் செயல்முறையில் செய்து காட்டுவதே சிறந்த கற்பாகும் என்று ஒருவாறு துணியலாம். இதனுள் அடங்காததாக ஏனையோரால் இயம்பப்படும் கற்பு நிலைதான் யாதுளது?

“பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு, பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு” என்னும் மொழிப்படி, இருப்பதைக் கொண்டு இல்லாததையும் ஈட்டி, கணவன் களிக்கக் கற்புக்கடன் பூண்டு திகழும் ஒரு மங்கையை மனைவியாகப் பெற்ற மணவாளனுக்கு, அவளினும் மாநிலத்தில் பெறத்தக்க மாண்பொருள் வேறு யாது? ஒன்றும் இல்லையென்பது குறட்கருத்து.

5. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.

(பதவுரை) தெய்வம் – கடவுளை, தொழாஅள் – வணங்காதவளாகிய, கொழுநன்-கணவனையே, தொழுது-வணங்கி, எழுவாள்-(பின்பே) எழுந்து சென்று வேறு வேலை செய்யும் பெண்மணி, பெய் என – பெய் என்று (மழைக்குக்) கட்டளையிட, மழை பெய்யும் – மழையானது பெய்யும்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண. உரை) தெய்வத்தைத் தெய்வம் என்று தொழாளாய், எல்லாத் தெய்வமும் தன் கணவன் என்றே கருதி, அவனை நாடோறும் தொழுது எழுவாள் பெய் என்று சொல்ல மழை பெய்யும்.

(பரி. உரை) பிற தெய்வம் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழாநின்று துயில் எழுவாள் பெய்யென்று சொல்ல, மழை பெய்யும்.

(தெளிவுரை) கணவனையே கடவுளாகக் கருதும் கலங்காத கற்புடைய பெண்கள், இயற்கைக்குத் தாம் அடிமையாகாமல். இயற்கையைத் தம் அடிமையாக்கி, எடுத்த காரியத்தை இனிதே முடிப்பர் என்பது குறிப்பான கருத்து.

(ஆராய்ச்சி உரை) கற்புடைய பெண்ணின் வாய்ச் சொல்லுக்கும் மழைக்கும் மின்சாரத் தொடர்பு இருக்கின்றதா என்ன? இயற்கையின்படிப் பெய்தலும், பெய்யாமையும் செய்கின்ற மழை. ஒரு பெண் சொல்லிவிட்டால் பெய்யுமா? மழை பெய்யாத இடங்களில் பெய்யும்படிப் பெண்கள் ஏவலாமே! ஒருவேளை அங்கே கணவனை மட்டுமே தொழும் கற்புறு மடந்தையர் இல்லை போலும்! அல்லது, கற்புறு மடந்தையர் ஒரு சிலராவது இருப்பதனால்தான், கொஞ்சம் மழையாவது பெய்து நெஞ்சை நனைக்கின்றதா? அல்லது. வஞ்சகர் நிறைந்த இவ்விடங்கள் வாடட்டும் என்று சிலவிடங்களில் உள்ள கற்புறு மங்கையர் பெய்யவேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டார்களா? ஒருவேளை திருவள்ளுவர் வேண்டுமென்றே புனைந்துரைத்துள்ளாரா? அல்லது விஞ்ஞானம் தெரியாதவரா? என்றெல்லாம் பற்பல எண்ணங்கள் பரந்துபட்ட மக்களிடத்துத் தோன்றுவது இயற்கை!

விஞ்ஞானிகள் விரும்பினால் செயற்கை முறைகள் சிலவற்றால் செய்வித்துப் பெய்விக்கலாமே தவிர, ஒரு பெண் பெய் என்று சொல்லிய அளவில் மழை பெய்யவே பெய்யாது. இஃது உறுதி! உறுதி!! ஆயின் திருவள்ளுவர் இங்ஙனம் தெரிவித்திருப்பதின் நோக்கம் என்னவென்பதை ஆராயவேண்டும்.

ஒழுங்காகக் குடும்பம் நடாத்தும் பெண், முன்னிய காரியத்தை முட்டின்றி முடிப்பாள் என்பதே இக்குறளில் குறிப்பாகக் கொள்ளவேண்டிய கருத்தாகும். இங்குத் திருவள்ளுவர் எடுத்துக்கொண்ட பொருளைச் சிறப்பிக்க வேண்டும் என்று கருதிக் கற்பனையையே கையாண்டுள்ளார். இது ஒருவகையான கவிமரபு. இன்னோரன்ன கவிமரபுகளைக் குற்றம் உடையதாகத் தள்ள முடியாது.

வள்ளுவர் ஓரிடத்தில், துன்பத்திற்குக் கலங்காதவர் துன்பத்திற்கே துன்பம் கொடுப்பர் என்னும் கருத்திலும், துன்பம் துன்பப்படும் என்னும் கருத்திலும்

இடும்பைக்கு இடும்பை படுப்பர்

இடுக்கண் இடுக்கண் படும்

என்று கூறியுள்ளார். உண்மையில் துன்பம் ஓர் உயிருள்ள பொருளா? அத்துன்பத்திற்கு ஒருவர் துன்பம் கொடுப்பது என்பதும், அத்துன்பம் துன்பப்படும் என்பதும் முயற்கொம்பும், குதிரைக் கொம்பும் அல்லவா? இதன் உண்மைக்கருத்து என்ன? துன்பத்திற்காக மனம் சோராமல் இருந்தால் அத்துன்பம் துன்பமாகத் தோன்றி வருத்தாது நீங்கும் என்பதே.

மற்றோரிடத்தில், பிறந்த குடிக்குப் பெருமை தருவேன் என்று முயலும் ஒருவனுக்கு, கூடத் தெய்வமும் தன் இடுப்பு உடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்து உதவி செய்யும் என்னும் கருத்தில், ‘குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும” என்றியம்பியுள்ளார் வள்ளுவர். உண்மையில் தெய்வம் இடுப்பு உடையை இறுக்கிக் கட்டாவிட்டால், உடை அவிழ்ந்து விழுந்துவிடுமா? எனவே. இன்னோரன்னவை யெல்லாம், எடுத்துக் கொண்ட கருத்தை வற்புறுத்துவதற்காகவும், கற்போர்க்குச் சுவை தருவதற்காகவும் கவிகள் கையாளும் கற்பனை மரபு என்பது காணக்கிடக்கும். அன்று தொட்டு இன்று மட்டும் எந்தக் கவிதான் கற்பனையைக் கையாளவில்லை. ஆனால், கற்பனையென்னும் திரைமறைவில், புராணங்கள் புளுகுகின்ற அண்டப்புளுகு, ஆகாயப் புளுகுகளை யெல்லாம் அடக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை; அகற்ற வேண்டும் என்பதே. அளவு மீறின் அமிழ்தமும் இனிக்காதே; நஞ்சாகுமே!

மேலும், இக்குறளுக்கு, கணவனை வணங்கும் கற்புடைய பெண், பெய்யென்று சொன்னால் பெய்யக்கூடிய ஒரு மழை இருந்தால் எவ்வளவு நன்மை பயக்குமோ அவ்வளவு நன்மையைக் குடும்பத்திற்குச் செய்வாள் என ஒரு பொருள் கூறுதலும் உண்டு. இங்ஙனம் கூறின், இல்லாத பொருளை எடுத்துக் காட்டும், “இல்பொருள் உவமையணி” உடையதாக இக்குறளைக் கொள்ளவேண்டும்.

இன்னும் இக்குறளுள், படுக்கையை விட்டு எழுந்தபின்பு அல்லவா தொழமுடியும்; தொழுது எழுவதாகக் கூறியுள்ளமை எங்ஙனம் பொருந்தும் என ஒரு வினா எழுதல் உண்டு. உண்ண அமர்ந்தவனை நோக்கி, அழைக்க வந்தவன் “இன்னுமா உண்ணுகிறாய்” என்று கேட்கிறான். அமர்ந்தவன் சோற்றில் கூட இன்னும் கைவைக்கவில்லை; இருப்பினும், “இதோ வந்துவிட்டேன்” என இறந்த காலத்தால் கூறுகிறான். விரைவும், உறுதியும்பற்றிப் பின் செய்யப்போவதை முன் செய்ததாகக் குறிப்பிடுவது உலக இயல்புகளுள் ஒன்றன்றோ? தொழுது எழுவதையும் இங்ஙனமே கொள்ளவேண்டும்.

6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

(பதவுரை) தன் காத்து – தன்னை ஒழுக்கம், உடை, உணவு முதலியவற்றால்) நன்கு காப்பாற்றிக் கொண்டு, தன் கொண்டான் – தன்னை மனைவியாகக் கொண்ட கணவனையும், பேணி – நன்கு (உபசரித்து) காப்பாற்றி, தகைசான்ற – (தமக்கிருக்கின்ற) தகுதி நிறைந்த, சொல்-புகழ் மொழியை, காத்து -(நீங்காது) காப்பாற்றி, சோர்வு இலாள் – (எந்தக் காரியத்திலும்) சோர்வு கொள்ளாதவளே, பெண் – சிறந்த பெண்ணாவாள்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண – உரை) தன்னையும் காத்து, தன் கணவனையும் பேணி, நன்மையணிந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை உடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.

(பரி -உரை) கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி, இருவர் மாட்டும் நன்மை யமைந்த புகழ் நீங்காமல் காத்து, மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையாளே பெண்ணாவாள்.

(தெளிவுரை) தன்னையும் வழுவாது காத்துத் தன் கணவனையும் அன்புடன் போற்றித் தகுதிமிக்க புகழை நிலைநிறுத்தித் தளர்ச்சி கொள்ளாதவளே சிறந்த குடும்பப்பெண்.

(ஆராய்ச்சி உரை) பெண், தன்னையும் கணவனையும், குடும்பப் பெருமையினையும் காப்பாற்றிச் சோராதிருக்க வேண்டும்.

முன் அதிகாரத்தில் ‘இயல்புடைய மூவர்க்கும்’ என்ற இடத்தில், பெற்றோர், மனைவி, மக்கள் என உரை எழுதினோம். பின்னர், “தென்புலத்தார்” என்னும் குறளில், தான் என்பதற்குக் கணவனைக் (குடும்பத் தலைவனை) குறித்தோம். கணவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் மனைவியும் அடங்கிவிடவில்லையா? மனைவியைக் காக்கவேண்டும் என்று தனியாக வேறு கூறவேண்டுமா? என்று சிலர் எம்மை வினவினர். இக்குறளைக் கூர்ந்து நோக்கவேண்டுகிறோம். தன்னைக் காப்பதோடு கணவனையும் காப்பது மனைவியின் கடமை என்று இங்கே கூறும்போது, தன்னைக் காப்பதோடு மனைவியையும் காப்பது கணவனின் கடமை என்று அங்கே கூறியதில் என்ன பிழை?

7. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

(பதவுரை) சிறை -(வீடு, அறை முதலியன) சிறைகளைக் கொண்டு, காக்கும்-(பெண்களைக்) காவல் காக்கின்ற,காப்பு-காவல், எவன் செய்யும்- என்ன பலனைத் தரும்? ஒன்றும் தராது; ஆதலின்) மகளிர் – பெண்கள், நிறை – தம் கற்பு நிறைவால், காக்கும் – (தம்மைத் தாமே) காத்துக் கொள்ளும், காப்பே-காவலே, தலை – தலைசிறந்த காவலாகும்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண-உரை) மகளிரைச் சிறை செய்து காக்கும் காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்கும் காவலே தலையான காவல்.

(பரி -உரை) மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய் காவல்.

(தெளிவுரை) தூங்குபவனை எழுப்ப முடியும்: விழித்திருப்பவனை எழுப்ப முடியாது; அதுபோல, தன் ஒழுக்கத்தில் தனக்கே கவலையுள்ள பெண்ணையே பிறரால் காக்கமுடியும். அல்லாத பெண்ணை அறையில் இட்டுப் பூட்டினும் காக்கமுடியாது.

ஆண், பெண் இருபாலார்க்கும் அறிவுரை வழங்குவதே இக்குறள். பெண்களைப் பூட்டிவைக்கும் பேதையர்களே! அவர்கட்கு விடுதலை நல்குங்கள்! எங்கிருப்பினும், எங்குச் செல்லினும் நல்லோர் நல்லோரே! அல்லோர் அல்லோரே! என்று ஆண்கட்கும். அரிவைமார்களே! ஆண்களால் உங்களை அடக்கமுடியாது: நீவிரே நும்மை நேரிதின் நடத்திக் கொள்ள வேண்டும் என்று பெண்கட்கும் தெளிவுறுத்துகின்றார் தெய்வப் புலவர்.

8. பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

(பதவுரை) பெண்டிர்-பெண்கள், பெற்றான்- தம்மை உள்ளன்போடு. ஏற்று (பெற்று) வாழும் கணவரை. பெறின் -உள்ளன் போடு கணவராக ஏற்று வாழ்வார்களேயானால், புத்தேளிர் வாழும்-தேவர்கள் வாழ்கின்ற, உலகு-வானுலகின் கண், பெரும் சிறப்பு மிகப் பெரும் சிறப்புக்களை, பெறுவர்-அடைவார்கள்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண – உரை) பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின், தேவர் வாழும் பெரிய சிறப்பினைடைய உலகத்தைப் பெறுவர்.

(பரி -உரை) பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவாராயின், புத்தேளிர் வாழும் உலகின்கண் அவரால் பெருஞ் சிறப்பினைப் பெறுவர்.

(தெளிவுரை) மகளிர் தன் கணவரின் நல்லன்பையும் நன்மதிப்பையும் பெறும்படி நடந்துகொள்ளின், தேவர் வாழும் விண்ணுலகில் பெரும்பேறு பெறுவர். எடுத்துக்காட்டு வேண்டுமானால் கண்ணகி சாலும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பெறுதல் என்றால், இரண்டறக் கலந்து இயைந்து வாழ்தல். “பெற்றார்ப் பெறின்’ என்று பாடங்கொண்டார் மணக்குடவர்.

9. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

(பதவுரை) புகழ்-புகழ்ச்சியான செயலை, புரிந்த-விரும்பிய, இல்-மனைவி, இலோர்க்கு-இல்லாத ஆடவர்க்கு, இகழ்வார்முன் – (தம்மை) இகழ்ந்து பேசும் எதிரிகளின் முன்னே. ஏறுபோல்- ஆண்சிங்கத்தைப் போல (இறுமாப்புடன் நடக்கக்கூடிய) பீடு நடை – பெருமிதமான நடை, இல்லை இல்லையாம்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண – உரை) புகழ் பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம், தம்மை இகழ்ந்துரைப்பார் முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை.

(பரி-உரை) புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு. தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர் முன் சிங்கஏறுபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.

(தெளிவுரை) புகழுக்குரிய மனைவி கிடைக்கப்பெறாதவன் பிறர்முன் தலைநிமிர்ந்து நடக்க முடியாது; எல்லோராலும் இகழவும் படுவான். “நம்மிடம் ஐயா காட்டும் ஆர்ப்பாட்டம் எல்லாம். அடுப்பங்கரையில் அம்மாவிடம் சென்றால் அடங்கிவிடும்” என்று பெண்டாட்டி யடியவர்களை நோக்கி உலகினர் எள்ளி நகையாடும் இகழ்ச்சியினையே, இக்குறளுள் நுணுக்கமாக நுழைத்துள்ளார் நுண்மாண் புலவர்.

10. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

(பதவுரை) மங்கலம் -(வீட்டிற்கு) மங்கலப் பொருளாவது. மனைமாட்சி மனைவியினுடைய மாட்சிமையே; மற்று -பின்பு, அதன் – அந்த நன்கலம் – நல்ல – மனைமாட்சியினுடைய அணிகலமாவது, நன்மக்கள் – நல்ல பிள்ளைகளை, பேறு-பெறும் பேறே யாகும்; என்ப-என்று சொல்லுவர் அறிவுடையோர்.

இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:

(மண-உரை) ஒருவனுக்கு அழகென்று சொல்லுப மனையாள் ஒழுக்கம் உடையாளாதலை; அவ்வழகின்மேல் நல்ல அணிகலன் என்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.

(பரி -உரை) ஒருவருக்கு நன்மை யென்று சொல்லுவர் அறிந்தோர் மனையாளது நற்குண நற்செய்கைகளை; அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.

(தெளிவுரை) வீட்டிற்கு விளக்கம் பெண்கள்; பெண்கட்கு விளக்கம் நல்ல பிள்ளைகள் என்பது கருத்து. இங்கு, “மனைக்கு விளக்கம் மடவார், மடவார் தமக்குத் தகைசால் புதல்வர்” என்னும் நான்மணிக்கடிகைச் செய்யுள் ஒப்பு நோக்குதற்குரியது. (இக்குறளின் விளக்கமே, எம்மால் எழுதப்பெற்றுள்ள “வீடும் விளக்கும்” என்னும் தனித்தமிழ் நூல்)

அதிகாரச் சுருக்கம்

பெண்கள், இல்லறத்திற்கு வேண்டிய மாண்பும், வரவுக்கேற்ற செலவும், கணவனைத் தெய்வமாகக் கொள்ளும் கற்பும், சோர்வின்மையும், தம்மைத்தாமே காக்கும் நிறையும் உடையவர்களாக இருக்கவேண்டும். இத்தகைய பெண்கள் இருக்கும் வீட்டில் எல்லாம் இருக்கும். அவரினும் சிறந்த பொருள் உலகில் ஒன்றும் இல்லை. அவர் நினைத்த காரியத்தை முடிப்பர். வானுலகிலும் சிறப்புப் பெறுவர். கணவர்க்கும் அவரால் பெருமிதம் கிடைக்கும்.

இறுதியாக, பெண்கட்கு விளக்கம் பிள்ளைகள் எனக்கூறி. மக்கட்பேறு என்னும் அடுத்த அதிகாரத்திற்கு அடிப்படையிட்டுளார் அறிஞர் வள்ளுவனார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1.5 / 5. வாக்கு எண்ணிக்கை: 2

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *