அன்பின் உருவம்

அன்பின் உருவம்
கி. வா. ஜகந்நாதன்

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது அநுபவத்தில் கனிந்து வந்த பழமொழி. என்பையும் உருக்கும் பாடல்களை மாணிக்கவாசக சுவாமிகள் பாடினார். “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று கூறும் விவிலிய நூலைப் படித்த கிறிஸ்தவராகிய ஜி.யூ. போப் துரை திருவாசகத்தைப் படித்தார்; உருகினார். “இவரைக் காட்டிலும் எளிமையுள்ளவர் யார்?” என்று வியந்தார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். திருவாசகத்தின் பெருமை இக்காலத்திலும் மங்காமல் இருப்பதற்கு இது ஓர் உதாரணம்.

சைவத் திருமுறைகளில் எட்டாவது திருவாசகமும் திருக் கோவையாரும். திருவாசகம் 51 பகுதிகளையும் 656 பாடல்களையும் உடையது. அவற்றில் முதலில் இருப்பது சிவபுராணம் என் னும் கலிவெண்பா. அடுத்து, கீர்த்தித் திருவகவல், திரு அண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்ற மூன்றும் உள்ளன. இந்த நான்கும் பல அடிகளை உடைய பாடல்கள்.

திருக்கோவையாரில் 400 பாடல்கள் உள்ளன. அது ஐந்திணைக்கோவை என்னும் பிரபந்த அமைப்பை உடையது. அதை இறைவனே எழுதி அழகிய திருச்சிற்றம்பல முடையான் என்று கையெழுத்திட்டதாக ஒரு வரலாறு உண்டு. திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத் துப் பாடிய நூல் அது. அதனால் திருச்சிற்றம்பலக் கோவையாரென்றும் வழங்கும். திருவாசகத்தோடு ஒத்த பெருமை உடைய தாதலால் அதைக் கோவைத் திருவாசகம் என்றும் சொல்வதுண்டு. நூல்களின் பெயர்களை மதிப்போடு சொல்லும்போது பலர்பாலுக்குரிய ஆர்விகுதி சேர்த்துச் சொல்வது தமிழ் மரபு. அப்படிச் சிறப்புப் பெற்றவை நாலடியார், திருக்கோவையார், திருக்களிற்றுப்படியார், சிவஞான சித்தியார் என்பன. திருக்கோவையாருக்கு உள்ள சிறப்பை ஆர்விகுதி தெரிவிக்கிறது.

திருவாசகம் முழுவதற்கும் பழங்காலத்தில் யாரும் உரை எழுதியதாகத் தெரியவில்லை. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவர் விரிவாக எழுதியுள்ளார். அணிமையில் சில சில பகுதிகளுக்கு உரை எழுதியவர்களும், நூல் முழுவதுக்கும் எழுதியவர்களும் உண்டு. மறைமலையடிகள் முதல் நான்கு பாட்டுக்கு உரை எழுதியிருக்கிறார். மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரவர்கள் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திரு வெம்பாவை ஆகியவற்றிற்குக் கதிர்மணிவிளக்கம் என்ற விரிவுமை எழுதியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நவநீதகிருஷ்ண பாரதியாரவர்கள் திருவாசகம் முழுமைக்கும் உரை எழுதிப் பதிப்பித்திருக்கிறார். கா.சுப்பிரமணிய பிள்ளை முதலியவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தில் திருவாசகத்திலிருந்து எட்டுப் பாடல்களும் திருக்கோவையாரிலிருந்து ஒரு பாடலும் விளக்கம் பெறுகின்றன. பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை முறையில் பாடல்களை நான் விளக்கவில்லை. முதலில் நிலைக் களத்தை அமைத்துக் கொண்டு பாடற்பகுதிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி முடிவில் பாட்டு முழுவதையும் சொல்லும் முறையையே இந்த வரிசையில் மேற்கொண்டிருக்கிறேன். அவையில் விரிவுரை ஆற்றும் முறையில் இவை இருக்கும். பாடல்களிலுள்ள சொல்லின் பொருளை மாத்திரம் விளக்கினால் ஓரளவு தான் அவை உள்ளத்தில் பதியும். இத்தனை விரிவாகச் சொல்லிப் பாட்டைப் பிறகு சொன்னால் பாடல் முழுவதும் நன்றாகவும் தெளிவாகவும் பதியும் என்பதே என் நோக்கம். இதற்கு முன் வெளியான நூல்களைப் படித்தவர்கள், நான் கருதிய நோக்கம் கைகூடியதாகவே சொல்கிறார்கள்.

தமிழ்ப் புலவர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நினைவோடு இவற்றை எழுதவில்லை. பள்ளியில் கீழ்வகுப்பில் படிக்கும் மாணவனுக்கும் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தால் விளக்கங்களையும் உவமைகளையும் கதைகளையும் பெய்து இவ் வரிசையை எழுதி வருகிறேன். இம் மலர்மாலை முருகன் திருவருளால் முழுதும் நிறைவேறவேண்டும்.

கி.வா.ஜகந்நாதன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *