

தமிழ் வையை
கி. வா. ஜகந்நாதன்
தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயருடையன அவை. இவற்றிற் பல வகையும், இவற்றிற்கு இனமான செய்யுட்களும் உண்டு. இவற்றையன்றி வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வந்த மருட்பா என்று ஒருவகைப் பா உண்டு. அது குறிப்பிட்ட சில பொருள்களைப் பாடுவதற்காக மட்டும் பயன்படுவது; ஆகையால் மிகவும் அருமையாகவே காணப்படும். மேலே சொன்ன நான்கு வகைப் பாக்களும் பழங்கால முதல் இன்றுவரை வழங்கி வருகின்றன.
ஆனால் பழங்காலத்தில் வழங்கி வந்த வேறு ஒருவகைப் பாடல் பிற்காலத்தில் வழக்கில் இல்லாமல் போய்விட்டது. முதற் சங்க காலத்தில் அவ்வகையான பாடல்கள் மிகுதியாக இருந்தனவாம். பரிபாடல் என்ற பெயருடைய அப் பாடலுக்குரிய இலக்கணம் தொல்காப்பியத்தில் இருக்கிறது. ‘எத்துணையோ பரிபாடல்’ முதற் சங்க காலத்தில் இருந்தன என்று இறையனர் அகப்பொருள் உரையாசிரியர் கூறுவர் (1, உரை.) இடைச் சங்க காலத்திலும் பல பரிபாடல்களைப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இடைச் சங்கத்துக்கு இலக்கணமாக வழங்கிய தொல்காப்பியத்தில் பரிபாடலுக்குரிய இலக்கணம் இருப்பதால், இலக்கியமும் இருந்தது என்று தெரிகிறது. கடைச் சங்க காலத்தில் தொகுக்கப் பெற்ற எட்டுத் தொகை நூல்களில் எழுபது பரிபாடல்கள் அடங்கிய தொகுதியும் ஒன்று. அதற்குப் பரிபாடல் என்பதே பெயர். கடைச் சங்க காலத்துக்கு அப்பால் பரிபாடலைப் பாடுபவர்களே இல்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பாப்பாவினம் என்ற நூலில் மாத்திரம் ஐந்து பரிபாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாவுக்கும் பாவினத்துக்கும் உதாரணமாகச் செய்யுட்களைப் பாடி அமைத்த நூல் அது. ஆதலின் வழக்கற்றனவானாலும் மாதிரிக்காக ஐந்து பரிபாடல்களைப் பாடிச் சேர்த்திருக்கிறார், அதன் ஆசிரியர். அவற்றோடுள்ள குறிப்புகளில் பரிபாடலின் இலக்கணமும், மேற்கோளாகச் சில அகத் தியச் சூத்திரங்களும் உள்ளன. பிற்காலத்து யாப்பிலக்கண நூல்களில் பரிபாடலுக்குரிய இலக்கணம் இல்லை.
பரிபாடல் என்பது வெண்பா முதலிய நால்வகைப் பாக்களின் அடிகளும் விரவிவரும் ஒருவகை இசைப்பாடல். ‘கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன’ (தொல்காப்பியம், செய்யுளியல், 242) என்று பேராசிரியர் எழுதுவர். தனக்கென்று வரையறை யாக அடியிலக்கணம் இன்றி எல்லாப் பாடல்களின் அடிகளும் வந்து நெகிழ்வுடன் வருவதால் பரிபாடல் என்ற பெயர் உண்டாயிற்று. பரிதல் – தளர்தல்; நெகிழ்தல். ‘பரிபாடல்’ என்பது பரிந்து வருவது; அது கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் வந்து பல அடியும் வருமாறு நிற்கு மென்று உணர்க ‘ (தொல்காப்பியம், செய்யுளியல், 118, உரை) என்பது நச்சினுர்க்கினியர் கூறும் விளக்கம். இது பெரும்பாலும் காம இன்பம் குறித்து வரும். சிறுபான்மை இன்னது வேண்டும் என்ற பிரார்த்தனையை உடையதாகி வரும். [“காமம் கண்ணிய நிலைமைத் தாகும்” (தொல். செய்யுள் இயல், 121); ‘என்பது காமப் பொருள் குறித்து வருமெனறவாறு. கண்ணிய என்றதனானே, முப்பொருளுமன்றிக் கடவுள் வாழ்த்தினும் மலைவிளை யாட்டினும் புனல்விளையாட்டினும் பிறவுமெல்லாம் காமம் கண்ணியே வரும் என்பது’ (பேராசிரியர்.) ]
எட்டுத் தொகை நூல்களில் கலித்தொகை, பரிபாடல் என்ற இரண்டு நூல்களும் பாட்டாற் பெயர் பெற்றவை. கலிப் பாக்களால் ஆனமையால் கலித்தொகை என்றும், பரிபாடலால் அமைந்தமையால் பரிபாடல் என்றும் அவ் விரண்டு நூல்களுக்கும் முறையே பெயர்கள் வந்தன.பறி பாடலில் எழுபது பாடல்கள் இருந்தன என்று உரை யாசிரியர்கள் எழுதி யிருக்கிறார்கள்.
திருமாற்கு இருநான்கு, செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக், காடுகாட்கு ஒன்று,-மருவினிய
வையை இரு பத்தாறு, மாமதுரை நான்குஎன்ப,
செய்யபரி பாடல் திறம்
என்ற பழம் பாடலால் திருமாலைப் பற்றிய பாடல்கள் எட்டும், முருகனைப் பற்றியவை முப்பத்தொன்றும், துர்க்கையைப் பற்றியது ஒன்றும், வையையின் புகழ் பேசும் பாடல்கள் இருபத்தாறும், மதுரையைப் பற்றியவை நான்கும் இந்தத் தொகை நூலில் இருந்தன என்று தெரிய வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் புத்தகத்தில் 22 பாடல்களும், பழைய உரையாசிரியர்கள் மேற்கோளா கக் காட்டும் இரண்டு பாடல்களுமாக 24 பாடல்களே எஞ்சியுள்ளன. இந்த இருபத்து நான்கில் திருமாலைப் பற்றியவை ஏழு; முருகனைப் பற்றியவை எட்டு ; வையையைப் பற்றியவை ஒன்பது, இந்தத் தொகை நூலைத் தொகுத்த புலவர் இன்னாரென்பதும், தொகுக்கும்படி வேண்டியவர் இன்னாரென்பதும் தெரியவில்லை.
பரிபாடலைத் தேடி எடுத்துப் பரிசோதித்துப் பரிமேலழகர் உரையுடன் தாம் எழுதிய அருங் குறிப்புக்களையும் சேர்த்து 1918.ஆம் ஆண்டில் என்னுடைய ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் வெளியிட் டார்கள். அப்பால் 1935-ஆம் ஆண்டில் பொருட் சுருக்கத் தையும் சேர்த்து இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்கள். அந்தப் பதிப்பு நடைபெறும் பொழுது உடனிருந்து பணி புரியும் பேறு எளியேனுக்குக் கிடைத்தது.
சங்க காலத்து மக்கள் கடவுளை வழிபட்ட முறை, கடவுளைப்பற்றி அவர்கள் அறிந்த செய்திகள் முதலியவற்றைத் தெரிந்துகொள்ளத் தொகை நூல்களில் அங்கங்கே உள்ள கில அடிகள் உதவுகின்றன. கடவுள் வாழ்த்தாக அந் நூல் களில் உள்ள முழுப் பாடல்களிலிருந்தும் பல செய்திகள் தெரியவருகின்றன. பத்துப் பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை கடவுளைப் பற்றிய பெரிய பாட்டு.
பரிபாடல் ஒன்றில்தான் கடவுளைப் பற்றிய பல பாடல்களை ஒருங்கே காண முடிகிறது. திருமால், முருகன் என்னும் இருவரைப் பற்றிய அற்புதமான பாடல்களைப் பரிபாடலில் காணலாம். திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை மலை, இருந்தையூர், மதுரை ஆகிய ஊர்களைப் பற்றிய வருணனைகளும் அவற்றில் வருகின்றன.
இப் பொழுது கிடைக்கும் பாடல்களின் சிறப்பை உணரும் போது, கிடைக்காமற் போன பாடல்களில் இன்னும் என்ன என்ன அருமையான செய்திகள் இருந்தனவோ என்று எண்ணி இரங்க நேர்கிறது.
பரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் உரிய துறையும் அதைப் பாடிய புலவரின் பெயரும் அப்பாட லுக்கு இசை வகுத்த புலவரின் பெயரும் இன்ன பண்ணிற் பாடுவதற்கு உரியது என்பதும் அவ்வப் பாடலின் பின்னே உள்ள குறிப்புக்களால் அறியலாகும்.
இந்தப் புத்தகத்தில் இரண்டு பாடல்களுக்குரிய விளக் கத்தைக் காணலாம். திருமாலைப் பற்றிய நான்காம் பரி பாடலும், வையையைப் பற்றிய ஆறாம் பரிபாடலும் இதில் உள்ளன. முதற் பாட்டு, புறப்பொருளில் கடவுள் வாழ்த்து என்னும் துறையைச் சார்ந்தது. அடுத்தது அகப்பொருளில் மருதத்திணையில் தலைவி வாயில் மறுத்தது என்னும் துறை யைச் சார்ந்தது. திருமாலைப் பற்றிய பாட்டு 73 அடி களால் ஆகியது; வையையைப் பற்றியது 106 அடிகளை உடையது. ஆக இப் புத்தகத்தில் 179 அடிகளுக்குரிய விளக்கம் இருக்கிறது. இவ்விரண்டையும் முறையே பாடியவர்கள் கடுவன் இள எயினனார், ஆசிரியர் நல்லந்துவனார் என்போர். கடுவன் இள எயினனார் இந்தப் பாடலையன்றித் திருமாலைப் பாடிய மற்றொரு பாட்டும், முருகக் கடவுளைப் பாடிய பாட்டு ஒன்றும் பரிபாடலில் இருக்கின்றன. ஆசிரியன் நல்லந்துவனார் வையையைப் பற்றிப் பாடிய வேறு இரண்டு பாடல்களும், முருகக் கடவுளைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்றும் அத்தொகை நூலில் உள்ளன. கலித் தொகையில் உள்ள நெய்தற்கலியை இயற்றியதோடு, அந்த நூலைத் தொகுத்தவரும் இவரே.
பரிபாடலில் கடவுள் வாழ்த்தாக வரும் செய்யுட்கள் உபநிடதங்களைப் போல நுட்பமான பொருள்களை உடை யவை. வேதத்தில் உள்ள கருத்துக்கள் பலவற்றை அவற் றிலே கண்டு மகிழலாம். பரிமேலழகர் தம் உரையிடையே சில இடங்களில் வேதக் கருத்தை நினைப்பூட்டுகிறார்.
கடுவன் இள எயினனார் பாட்டில் திருமாலின் பெருமை பலவகையில் அமைந்திருக்கிறது. அவன் திருவவதாரங்களின் சிறப்பு, அவனுடைய திருவுருவ எழில், அவன் எங்கும் எப்பொருளிலும் கலந்து நிற்கும் நிலை, பல தெய்வங்களாகவும் நிற்கும் இயல்பு, அவனுடைய அடியார் தன்மை அடியாருக்கு அப்பெருமான் எளியனாய் நிற்கும் திறம் முதலியவற்றைப் புலவர் விரித்துரைக்கிறார்.
திருமாலினுடைய திருமேனி நீல மணியைப் போலவும், அலையடங்கிய கடலைப் போலவும், சூல் கொண்ட முகிலைப் போலவும் ஒளிர்கின்றது. அவனுடைய திருமார்பில் திருமகளே மறுவாக எழுந்தருளி யிருக்கிறாள். துழாய் நறுங் கண்ணியை அப்பெருமான் அணிந்திருக்கிறான். அவன் திருவிழிகள் தாமரையைப் போல உள்ளன; செங்கட் செல்வன் அவன். அவனுடைய திருவுந்தியிலிருந்து தாமரை தோன்றுகிறது. அவன் திருவிடையில் பொன்னாடை பளபளக்கிறது. அவன் திருக்கரத்தில் சக்கரப் படை விளங்குகிறது. அவனுடைய கொடி கருடன். அவனுடைய திருவடியே அடியார்களுக்குப் பற்றுக் கோடாதலால் அது அவனைக் காட்டிலும் சிறப்புடையதாகத் தோன்றுகிறது.
அவன் குணப் பெருங்கடல். அருள் நிரம்பியவன். அவனிடமிருந்து எல்லாப் பொருள்களும் தம் தம் இயல்புகளைப் பெற்றன. சூரியனுடைய வெப்பமும் ஒளியும், சந் திரனுடைய தண்மையும் மென்மையும், மழைக்குரிய சுரத்தலும் வண்மையும், பூமியின் காப்பும் பொறுமையும், காயாம்பூவின் மணமும் பொலிவும், நீரின் தோற்றமும் விரிவும், ஆகாயத்தின் உருவமும் ஒலியும், காற்றின் வருகையும் ஒடுக்கமும் எல்லாம் அவனிடமிருந்து வந்தவையே.
அவன் அறஞ் செய்வாருக்கு இன்பமும், மறம்புரிவாருக்குத் துன்பமும் அளித்தாலும் அவை இரண்டும் விருப்பு வெறுப்பால் அளிப்பன அல்ல. அவனுக்குப் பகைவரும் இல்லை; நண்பரும் இல்லை. அவனுக்கென்று வடிவும் இல்லை. ஆயினும் அடியார் நினைத்த வடிவிலே எழுந்தருளி வரு வான். ஆலமரத்தினடி முதலிய இடங்களில் வெவ்வேறு பெயரோடு மக்கள் வணங்கும் தெய்வங்கள் பலவாக இருப்பவனும் அவனே.
அவனுடைய அடியார் புலப்பகையை வென்றவர். உயிர்களிடத்தில் அன்புடையவர். அவனை அவர்கள் பலவாறு தொழுது ஏத்துகின்றனர். ஆயினும் அவனை முற்றப் புகழ்வது இயலாத காரியம். அடியார்கள் கும்பிடும் கைக்குள்ளே அடங்கி அவர்களுக்கு ஏவலாளனைப் போல இருந்து அவர்களைப் பாதுகாக்கும் பேரருள் படைத்தவன் அவன்.
இரணியனைக் கொன்று பிரகலாதனுக்கு அருள்புரியும் பொருட்டு நரசிங்க அவதாரம் எடுத்தான். உலகத்தை எடுக்கும் பொருட்டு வராகாவதாரம் செய்தான்.
இறைவனுடைய அடியாரை ஆர்வலர் (2, 70) என்று குறிக்கின்றார் புலவர். பிரகலாதனைப் பிருங்கலாதன் என்று சொல்கிறார். ஐம்பொறிகள் வாயிலாகச் செல்லும் அவாவை ஐந்திருள் என்பர். ‘நாங்கள் உன்னைப் புகழ்வதைக் கண்டு நீ நகை செய்வாய். ஆயினும் நாங்கள் எங்கள் ஆர்வத்தால் துதிக்கப் புகுகின்றோம்’ என்று பாட்டின் தொடக்கத்தில் சொல்கிறார். நரசிங்காவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போது, இறைவன் தோன்றிய தூண் பிளந்து அதன் துண்டுகள் கீழே விழும்பொழுதே இரணியனுடைய உடலைப் பிளந்த துண்டுகளும் உடன் விழுந்தன என்று பாடுகிறார். இரணிய சங்காரத்தின் வேகம் இதனாற் புலப்படுகிறது.
கருடனைப் பற்றிச் சொல்கையில் அவன் பாம்பைப் பலவகையில் பயன்படுத்திக் கொள்வதை வருணிக்கிறார். பனை, கலப்பை, யானை என்னும் பிற கொடிகள் திருமாலுக்கு இருந்தாலும் கருடக் கொடியே மிகச் சிறந்த தென் கின்றார்.
“நினக்கு, மாற்றோரும் இலர் கேளிரும் இலர்” என்ற அடி வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனுடைய பொது நிலையைச் சொல்கிறது.
“நின்னிற் சிறந்த நின் தாளிணையவை“
என்பது அவனுடைய திருவடிப் பெருமையைப் புலப்படுத்தும் அழகான பகுதி. திருவடிச்சிறப்பைப் பலவகையில் பிற புலவர்கள் பாராட்டியதுண்டு. அவை யாவற்றையும்விட இது மிக்க பொருட் செறிவுள்ளதாக விளங்குகிறது.
இறைவனைப் பக்திக்கு அகப்படுபவன் என்று சொல்வர். அதனை இப்புலவர்,
“நின் ஆர்வலர்
தொழுதகை அமைதியின் அமர்ந்தோயும் நீயே“
என்று சுவைபடப் புலப்படுத்துகிறார்.
“இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமம் ஆர்ந்த நிற்பிரிந்து
மேவல் சான்றன எல்லாம்“
என்னும் அடிகளும்,
“போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்றுஏம் ஆற்றல் இலையே”
என்பவையும்,
“மனக்கோள் நினக்கென வடிவுவேறு இலையே“
என்பதும்,
“அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்
எவ்வயி னோயும் நீயே”
என்னும் அடிகளும் கடவுளின் பொது இயல்புகளை எடுத்துக் காட்டும் நுண் பொருளையுடைய பகுதிகள்.
வையையைப் பற்றிப் பாடப் புகுந்த நல்லந்துவனார் முதலில் மழை பெய்வதைச் சொல்லி, அப்பால் மலையிலே அருவிகளில் நீர் மிக வருவதையும் அது நிலத்திற் படர்ந்து ஆற்றிலே கலப்பதையும் சொல்கிறார். பிற்காலத்துக் காவி யங்களில் முதலில் மழை பெய்தலையும் ஆறு பெருகுவதை யும் அதனால் நாடு வளம் பெறுதலையும் புலவர் சொல்லும் மரபு இங்கே நினைவுக்கு வருகின்றது.
வையையில் வெள்ளம் வருகிறது. அதைக் கண்டு காவலர்கள் அதன் கரைகளைப் பாதுகாக்கும் பொருட்டுப் பறையறைகின்றனர். மதுரைமா நகரில் உள்ளவர்கள் நீர் விளையாட்டுக்காகப் புறப்படுகின்றனர். இப் பாட்டின் முதற் பகுதி வையையில் நடைபெறும் நீர் விளையாட்டை வருணிக்கிறது.
ஆடவரும் மகளிரும் நீரில் விளையாடும் பொருட்டுக் கூட்டமாகப் போவதும், நீர் விளையாட்டு நிகழ்த்துவதும், அவர்கள் விளையாடுவதால் நீர் தன் இயல்பு மாறி வேறு மணத்தை வீசுவதும் பாட்டில் வருகின்றன.
பாட்டின் பிற்பகுதியில் காதற்பரத்தைக்கும் தலைவனுக்கும் இடையே நிகழும் வாக்கு வாதத்தையும், அப்பால் அவள் ஊடல் தீர்ந்து அவனோடு மகிழ்வதையும், தலைவி எல்லாச் செய்திகளையும் விறலியிடம் கூறுவதையும் புலவர் சொல்கிறார்.
இந்தப் பாட்டிலிருந்து, அக் காலத்தில் மக்கள் இன்ப வாழ்வு பெற்று வாழ்ந்த வகையும் நாகரிக நலஞ் சிறந்து விளங்கிய சிறப்பும் வேறு செய்திகளும் தெரிய வருகின்றன.
ஆற்றில் வெள்ளம் வந்தால் அதற்குத் தூபதீபம் காட்டிப் பூசை செய்து நிவேதனம் செய்வது பழைய தமிழர் வழக்கம். இறைவன் எழுந்தருளி யிருக்கும் தலத்தைச் சுட்டி ஆணையிடுவர். இந்தப் பாட்டில் தலைவன் திருப்பரங்குன்றத்தின் மேல் இரண்டு முறை ஆணையிடுகிறான்.
நீராடுவதற்கென்றே தனிப்பட்ட ஆடைகளையும் பிற அலங்காரங்களையும் ஆடவரும் மகளிரும் அக்காலத்தில் புனைந்தார்கள். இதை ஈரணி என்று புலவர் குறிப்பிடுகிறார். தோள்வளை, மணிமாலை முதலியவற்றை மக்கள் அணிந்தனர். ஆடவர் மார்பில் அணிந்த மாலையைத் தார் என்றும், மகளிர் அணிந்ததைக் கோதை யென்றும் சொல்வர். மார் பிலும் தோளிலும் தொய்யில் எழுதி, நகத்திலும் கன்னத்திலும் செந்நிறம் ஊட்டி, மார்பில் சந்தனம் பூசி அழகு செய்து கொண்டனர் மகளிர்.
நீர் விளையாட்டு நிகழ்த்தும்போது நெட்டியாலான தெப்பத்தை மிதக்க விட்டு விளையாடினார்கள். நிறம் ஊட்டிய நெட்டியால் தேரைப் போலச் செய்து அதனை நீரில் விட்டு விளையாடினர். தாம் அணிந்த சாயமும் சந்தனமும் அழியவும், அணிகள் ஒன்றோடொன்று கலக்கவும் ஆடவரும் மகளிரும் நீராடி இன்புற்றனர். ஒருவர் மேல் ஒருவர் மண நீரையும், புனுகையும் வீசி விளையாடினர். இதற்காகத் துருத்திகளையும் கொம்பையும் கொண்டு போனார்கள். நீர் வீசு கருவியைச் சிவிறி என்று வழங்கினர்.
நீரில் விளையாடும் நகர மாந்தரோடு சேர்ந்து நீரில் இறங்கி விளையாடும் உரிமை சிலருக்கு இல்லாமல் இருந்தது. கரையிலிருந்தே பலர் நீர்விளையாட்டைக் கண்டு களித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் அருவி தாலாட்டவும் காற்றுப் பாராட்டவும் இரவிலே காதலர் தங்கி இன்புற்றனர். புலவர் கள் அருவியையும் ஆற்றையும் பாடினார்கள். தமிழ்ப் பாடலாற் சிறப்படைந்தமையால் அதனைத் தமிழ் வையை என்று பாராட்டுகிறார் நல்லந்துவனார்.
‘பல காலமாகக் குற்றமற்ற புலவர்கள் பாடிய வையை பாட்டுப் பொய்யாகாமல் மழைநீர் வெள்ளமாக மலை அடிவாரத்தில் பரந்து ஓடியது’ என்று புலவர்களுடைய திருவாக்கின் பெருமையை ஓரிடத்தில் நினைவூட்டுகிறார் ஆசிரியர்;
“மாசில் பனுவற் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரைந்து வினை நந்தத்
தாயிற்றே தண்ணம் புனல்.”
வையை யாறு அணையை உடைத்துக் கொண்டு பாய்ந்ததாம். அதற்கு உவமை கூற வருகிறார் புலவர். வெள்ளத்தைக் கண்ட காதலர்களுடைய ஆசை எப்படி கட்டுக்கு அடங்காமல் மீறுமோ அப்படி அணையை உடைத்தது என்று இடத்திற்கு ஏற்றபடி உவமை கூறி விளக்குகிறார்;
“விருப்பொன்று பட்டவர் உளம்நிறை உடைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை,”
தலைவனிடம் ஊடல் கொண்ட காதற் பரத்தை அவன் இற்பரத்தையோடு நீராடினான் என்று சொல்லும்போது இப்படியே இடத்துக்கு ஏற்ற உவமை ஒன்று வருகிறது. ஓடுகின்ற ஆற்றில் செல்லும் தெப்பக் கட்டையைப் போல யார் யார் கைப்பற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்களோ அவர்களுக்கெல்லாம் தெப்பமாக உதவும் மார்பை உடையாய் நீ’ என்று காதற்பரத்தை சொல்கிறாள்;
“செல்யாற்றுத் தீம்புனலிற் செல்மரம் போல
வவ்வுவல் லார்புணை ஆகிய மார்பினை.”
இப்படியே, “வையையில் உடைந்த மடையை அடைத்துவிட்ட பிறகும் பின்னும் வரும் ஊற்று நீரைப் போல, முன்பு அவர்கள் பட்ட துன்பம் போகும்படி அவர்களோடு நீராடிய பிறகும் மறுபடியும் அவர்கள் வருந்தும் படிநீ இங்கே ஏன் வந்தாய்?” என்று அவள் சொல்வதிலும் இத்தகைய உவமை அமைந்திருக்கிறது;
“வையை உடைந்த மடைஅடைத்தக் கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர்போல, இன்னும்
அனற்றினை துன்பு அவிய நீஅடைந்தக்
கண்ணும் பனித்துப் பனிவாரும் கண்ணவர்
நெஞ்சம் கனற்றுபு காத்தி வரவு.”
தலைவி தலைவன் நிகழ்த்தியவற்றைச் சொல்லிவிட்டுக் கடைசியில் வேகமாகப் பேச்சை முடிக்கிறாள். அந்த வேகம் அவளுடைய பேச்சிலே ஒலிக்கிறது;
“களிப்பர், குளிப்பர், காமம் கொடிவிட
அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப.”
ஓரடியில் முதலெழுத்தையன்றி மற்ற எழுத்துக்கள் பல ஒரே மாதிரி வந்தால் பாட்டில் எதுகை நயம் நன்றாக இருக்கும். இந்தப் பாட்டில் அப்படிச் சில பகுதிகள் இருக்கின்றன.
“வரைச்சிறை உடைத்ததை வையை; வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை
யறைகெனும் உரைச்சிறைப் பறையெழ ஊரொலித் தன்று“
என்னும் அடிகளிலும்,
“போரணி யணியிற் புகர்முகஞ் சிறந்தென
நீரணி யணியி னிரை நிரை பிடிசெல் ஏரணி
யணியி னிளையரு மினியரும் ஈரணி
யணியி னிகன்மிக நவின்று”
என்னும் பகுதியிலும்,
“வரையழி வாலருவிக் கால்தா லாட்டக்
கரையழி வாலருவிக் கால்பா ராட்ட”
என்னும் இடத்திலும்,
“கொய்ததும் வாயாளோ கொய்தழை கைபற்றிச்
செய்ததும் வாயாளோ செப்பு“
என்பதிலும் அத்தகைய அமைப்பைக் காணலாம்.
பரிபாடலுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை, திருக்குறளுக்கு அவர் எழுதிய உரைபோன்ற சிறப்பை உடையதாக இல்லாவிட்டாலும், பொருளைத் தெரிந்து கொள்ளப் போதிய அளவில் அமைந்திருக்கிறது. அவ்வுரை இல்லை யென்றால் இந்நூலின் பல பகுதிகளுக்குப் பொருளே விளங்க வழியில்லை. அவ்வுரையைப் பற்றி, “இந்த உரை, பலவிடத்துப் பொழிப்புரையாயும் சிலவிடத்துப் பதவுரை யாயும் சிலவிடத்துக் கருத்துரையா சிறிதும் புலப்படாத சொற்களின் பழைய வடிவங்களைப் புலப்படுத்தியும், உரிய இடங்களில் இலக்கணக் குறிப்புக்களைப் பெற்றும், சில விடத்து மிக அழகான பதசாரத்துடன் கூடியும், விளங்காத சிலவற்றைத் தக்க தமிழ் நூல் மேற்கோள்களாலும் வேதம் உபநிடதம் முதலியவற்றின் கருத்துக்களாலும் விளக்கியும் மிக விரிவாக அமைந்துள்ளது” என்று மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதி யிருக்கிறார்கள். இப் புத்தகத்தில் உள்ள இரண்டு பாடல்களின் விளக்கங்களும் பரிமேலழகர் உரையைப் பின்பற்றியே இருக்கும். சில இடங்களில் மாத்திரம் வேறுபட்டிருக்கும்.
ஓரிரண்டு இடங்களில் மூலத்தில் ஊகித்துக் கொண்ட பாடங்களை அமைத்திருக்கிறேன்.
அவை வருமாறு:-
வையையைப் பற்றிய பாட்டில் 15- ஆம் ஆடி, “கொடி சேராத் திருக்கோவை காழ்கொள” என்ற பாடத்தோடு இருப்பதை, “கொடி சோரத் திருக்கோவை காழ்கொள்” என்று கொண்டிருக்கிறேன். ”ஊரூர்பு இடந்திரீஇ” (37) என்பதை உரைக்கு ஏற்ப, “ஊர்பூர்பு இடந்திரீஇ” என்று மாற்றிக் கொண்டேன். “வரையழி வாலருவி (?) வாதாலாட்ட” (52) என்று தெளிவின்றியிருந்த அடியை, “வரையழி வாலருவிக் கால்தாலாட்ட” என்று ஒருவாறு ஊகித்து அமைத்திருக்கிறேன். “இன்னிள வேனி லிது வன்றோ வையை நின்……” (77) என்ற அடியிலுள்ள குறையை உரைபின் உதவியைக் கொண்டு, “இன்னிள வேனி லிதுவன்றே வையைநின் காமம்” என நிரப்பி அமைத்திருக்கிறேன். அவ்விடங்களில் இப்படித்தான் பாடம் இருக்க வேண்டும் என்று துணிவாகச் சொல்லும் தகுதி எனக்கில்லை. ஆயினும் பாட்டின் ஓட்டத்தோடு இந்த ஊகங் கள் பொருந்தி இழைகின்றன என்ற நினைவு மாத்திரம் உண்டு.
எட்டுத் தொகை நூல்களில் உள்ள பாடல்களிற் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து விளக்கம் எழுதி வெளியிடத் தொடங்கியபோது எட்டுப் புத்தகங்களும் நிறைவேற வேண்டுமே என்ற அச்சம் எனக்கு இருந்தது. எட்டு மாத காலத்தில் மாதம் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற திட்டத்தோடு இதைத் தொடங்கினேன். ‘எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்மை’ என்னிடம் இல்லாமை யால், வரையறுத்த கால அளவு இரட்டிப்பாகி விட்டது. 1951-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இவ்வெளியீட்டு வரிசை பதினாறு மாதங்கள் கடந்த பின்பு இப்போது நிறை வேறுகிறது. தாமதமானாலும் எடுத்துக் கொண்ட காரியம் ஒருவாறு நிறைவுறும் வண்ணம் செய்வித்த முருகன் திருவருளை எண்ணி உருகி வணங்குகின்றேன்.
சங்கநூற் கடல் எங்கே? நான் எங்கே? பரந்த பெருங் கடற்கரையில் கிளிஞ்சில் பொறுக்கும் குழந்தையைப் போல இவற்றை எழுதினேன். இதற்குக்கூட என்னுடைய அறிவாற்றல் காரணம் என்று சொல்ல முடியாது. என்னுடைய ஆசிரியப்பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்களுடைய கருணைப் பெருக்கிலே ஊறியமையால் அடைந்த பேறு இது என்பதை எத்தனை முறை சொன்னாலும் போதாது.
சங்கநூற் காட்சிகளாகிய இந்த நூல் வரிசையை நன்றாக வெளியிட வேண்டும் என்ற ஆவலும் அதற்கேற்ற முயற்சியும் செயல் வன்மையும் காட்டி, இவற்றை அழகாக மலரச் செய்த பெருமை அமுத நிலையத்தின் தலைவரும் என் கெழுதகை நண்பருமாகிய ஸ்ரீ. ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களைச் சாரும். அவருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘”மனை விளக்கு’ வெளியானது தொடங்கி ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து, “இது புது முறை; நல்ல முறை; அழகாக இருக்கிறது” என்று பாராட்டிய அன்பர்கள் பலர். பத்திரிகையாளர் இந்தப் புத்தகங்களைச் சிறப்பித்து மதிப்புரை எழுதினர். இத்தகைய அன்பர்கள் அளித்த ஊக்கம் என் கருத்துக்கும் பேனாவுக்கும் உரத்தை அளித்தன. அவர்களுக் கெல்லாம் என் நன்றி உரியது.
இந்தப் புத்தகங்கள் எட்டுக்கும் மூன்று வண்ணத்தில் மேலட்டை ஓவியங்களை எழுதி உதவியவர் ஸ்ரீ எஸ். ராஜம் அவர்கள். இந்திய ஓவியக் கலையில் இவர் மிக்க திறமை உள்ளவர் என்பதைத் தமிழ் நாட்டார் நன்கு அறிவர். இந்தப் புத்தகங்களின் அழகை இவருடைய ஓவியங்கள் பின்னும் அதிகமாக்கி யிருப்பதை நான் சொல்லவும் வேண்டுமா? ஓவியர் மணி ராஜத்தின் கைவண்ணத்தைப் பாராட்டி என் நன்றி யறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தமிழ்!
கி.வா.ஜகந்நாதன்



