
தமிழ் வையை
கி. வா. ஜகந்நாதன்
திருமால் புகழ்
இறைவனுடைய பெருங் கருணையையும் பேராற்றலையும் நினைக்கும்பொழுது அன்பர்களுடைய உள்ளம் களிக்கூத் தாடுகிறது. ஒவ்வொரு கணமும் அவனு டைய திருவருளின் சிறப்பை உணர்ந்த படியே வாழ்கிறவர்கள் அவர்கள். உடம்பையும் உடம்பின் உறுப்புக்களையும் உயிர்கள் வாழும் உலகையும் அவ்வுலகத்துட் பொருள்களையும் படைத்து உயிர்களுக்கு உதவிய கடவுளின் பேருதவியை நினைக்குந்தோறும் அவ்வன்பர்களுக்கு நன்றியறிவு மீதூர்கின்றது. அவனை வாயாரப் பாடுகின்றனர்; அவன் புகழை விரிக்கின்றனர்.
புகழ் கூறுவார்
அவன் புகழ் அவர்கள் கூறக் கூற மேலும் மேலும் விரிகின்றது. அதற்கு எல்லை ஒன்று இருப்பதாகவே தோன்றவில்லை. வேதங்கள் பல பல விதமாக இறைவன் புகழை விரித்தும் இன்னும் முடிவு காணவில்லை. அப்படியிருக்க, மக்கள் எவ்வாறு புகழ்ந்து முடிவு கட்டிவிட முடியும்? அதனால் புகழாமல் இருக்க முடியுமா? தம்மால் இயன்ற வரையில் புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
இறைவன் திருக்கோயிலை வலம் வந்து அவன் திருவுருவத்தைத் தரிசித்துப் போற்றுகின்ற சரியையாளர் அவனைப் புகழ்கின்றனர். அவர்கள் இறைவனுக்கு அன்பர்களே. ஆயினும் அவர்களினும் பெரிய அன்பர்கள் இருக்கிறார்கள். இறைவன் திருவுருவத்தை அணுகித் தாமே அலர் தூவியும் நீராட்டியும் புனைந்தும் வழிபடும் கிரியையாளர் இருக்கின்றனர். அவர்களும் இறைவனைப் புகழ்கின்றனர். அவர்களுக்கும் மேலே இயமம், நியமம் முதலிய நெறி பற்றி யோகம் புரிந்து சித்திபெற்ற அன்பர்கள் மூன்றாம் படியில் இருக்கிறார்கள். அவர்களும் தாம் பெற்ற இன்ப அநுபவத்தையும் அதனைத் தாம் பெற அருளிய இறைவன் திருவருளையும் எண்ணி எண்ணிப் பெருமிதம் அடைந்து இறைவனைப் புகழ்கின்றார்கள்.
ஞானியர்
இனி நான்காவது படியில் இருக்கும் பேரன்பர்களை ஞானியர் என்று சொல்வார்கள். அவர்கள் உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள். பொறிகளை வென்றவர்கள். உள்ளத்தே தெளிவு பெற்றவர்கள்.
கண், செவி, நாக்கு, மூக்கு, உடம்பு என்ற ஐந்தும் ஐந்து வகை உணர்வுகளை உடையன. கண் காட்சி யுணர்வையும், செவி கேள்வி யுணர்வையும், நாக்குச் சுவை யுணர்வையும், மூக்கு மண வுணர்வையும், உடம்பு பரிச உணர்வையும் பெறுகின்றவை. இந்த ஐந்து உணர்வுகளையும் ஐம்பொறிகளும் பெற்று உள்ளத்தே அவற்றின் நுகர்ச்சியைச் சாரச் செய்கின்றன. ஐம்பொறிகளாகிய வாயிலின் வழியே உள்ளம் அவாவைச் செலுத்துகின்றது. ஐம்பொறிகளின் வழியே செல்லும் அவா வளர வளர உள்ளத்தே கலக்கம் மிகுதி யாகின்றது; தெளிவு இல்லாமற் போகின்றது. கலக்கம், தெளிவு என்பவற்றையே அறியாமை, அறிவு என்று சொல்லலாம். அவற்றையே இருள், ஒளி என்றும் சொல்லலாம். பொறிகளை மயக்கி அறியாமைக்கு உட்படுத்துவதனால் உலகத்தை “மாயிருள் ஞாலம்”, “இருள் தருமா ஞாலம்” என்று ஆன்றோர் கூறுவர். அந்த மயக்கம் நீங்கினால் ஒளியாகிய மெய்ஞ்ஞானம் உண்டாகும்.
ஐம்பொறிகளினால் உண்டாகும் இருள் நீங்க இறைவன்பால் இடைவிடாத அன்பு பூண்டு, மெல்ல மெல்லப் பொறிகளின் செயலை. அடக்க வேண்டும். அவ்வாறு ஐம்பொறியினால் விளையும் இருள் நீங்கினபின் பழைய வாசனையினால் உள்ளத்தே இருக்கும் மாசைக் களைய வேண்டும். அந்த மாசைக் களைவதற்கு ஆன்றோர்கள் அருளாலும் அநுபவத்தாலும் தெளிந்து வழி வகுத்திருக்கின்றனர். மைத்திரி, கருணை, முதிதை, உபேக்ஷை என்ற நான்கு பாவனைகளால் மனமாசு துடைக்க வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று விரும்புவது மைத்திரி பாவனை. பிற உயிர்கள் துன்புறும்போது அதற்கு இரங்கி அத்துன்பம் நீங்கவேண்டு மென்று நினைப்பது கருணா பாவனை. தாம் பண்ணிய நல்வினைப் பயனை நுகர்ந்த உயிர்கள் மகிழ்ச்சியை அடைவது கண்டு மகிழ்தல் முதித பாவனை. விருப்பு, வெறுப்பு, பகை, நட்பு இன்றி எவ்வுயிரையும் சமமாகப் பாவித்தல் உபேக்ஷா பாவனை; இதை இகழ்ச்சி யென்றும் சொல்வர். இந்த நான்கும் சித்தத்தின்கண் உள்ள மாசைத் துடைத்துத் தூய்மைப் படுத்துவதால் இவற் றைச் சித்தபரி கர்மம் என்று சொல்வார்கள்.
ஐம் பொறிகளால் விளையும் மயக்கமாகிய இருளை நீக்கி, மைத்திரி முதலிய நான்கு பாவனை களால் உள்ளத்திலுள்ள மாசைத் துடைத்து விட்டால் மனம் ஒருமைப்படும்; அப்போது இறைவனுடைய தியானமாகிய ஒன்றிலே மனத்தைச் செலுத்தினால் அம்மனம் ஓய்ந்து நிற்கும்; சமாதி நிலை கை கூடும்.
இறைவனுடைய அருளையே துணையாகப் பெற்ற ஞானியராகிய ஆர்வலர், ஐந்து இருளை அறவே நீக்கி, நான்கினுலே உள்ளத்தில் உள்ள மாசைத் துடைத்து, அந்த உள்ளத்தை ஒன்றின் வழியே செல்ல விடுத்துச் சமாதி நிலையிலே இன்புறு வார்கள். அவர்கள் தாம் பெற்ற இன்பத்தை நினைந்து நினைந்து மகிழ்கிறார்கள். அந்த இன்பத்தைப் பெற அருளிய இறைவனைத் தொழுது ஏத்துகிறார்கள்; அவனுடைய புகழை விரிக்கின்றார்கள்.
ஐந்து இருள் அறநீக்கி நான்கினுள் துடைத்துத்தம்
ஒன்று ஆற்றுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதுஏத்தி
நின்புகழ் விரித்தனர்.
ஐந்து பொறிகளால் உண்டாகும் மயக்கத்தை அறும்படியாக ஒழித்து, மைத்திரி கருணை முதிதை உபேட்சை என்ற நான்கினாலும் (சித்தத்தில் உள்ள மாசைத்) துடைத்துத் தம்மை ஒன்றின் கண்ணே செல்லும் படி வழிப்படுத்திய நின் அன்பர்கள், நின்னை வணங்கிப் பாராட்டி நின் புகழை விரிவாகச் சொன்னார்கள்.
ஐந்து – கண், செவி, வாய், மூக்கு, உடம்பு என்னும் ஐந்து பொறிகள். இருள் – மயக்கம். நான்கு – மைத்திரி, கருணை, முதிதை, உபேட்சை. நான்கினுள் – நான்கினால். துடைத்து – மாசு நீக்கி. நான்கின் உள் துடைத்து என்று பிரித்து, நான்கினாலே உள்ளத்தை மாசறத் துடைத்து என் றும் பொருள் கொள்ளலாம். தம்-தம்மை. ஒன்று ஆற்றுப்படுத்த. ஒரு பொருளினிடத்தே செலுத்திய ; ‘தம்மைச் சமாதியாகிய ஒரு நெறிக்கண்ணே படுத்திய’ என்பது பரிமேலழகர் உரை.
வியப்பிலாப் புகழ்
இவ்வாறு கடுவன் இள எயினனூர் என்ற புலவர் திருமாலைப் பாட ஆரம்பிக்கிறார். திருமால் பலராலும் புகழப் பெற்றவர்.
“புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநளை“
“மாயோன் அன்ன உரைசால் சிறப்பு” (புறநானூறு)
என்று அப்பெருமானுடைய புகழைப் புலவர்கள் சிறப்பாக எடுத்துச் சொல்வார்கள். புகழையே கேளாமல் இருக்கும் ஒருவனிடம் சென்று எப்படிப் புகழ்ந்தாலும் அவன் அதை ஏற்றுக் கொள்வான்; குறைவாகப் புகழ்ந்தான் என்று சொல்லமாட்டான்; வேறு ஒருவன் மிகுதியாகப் புகழ்ந்திருந்தால்தான் இந்தப் புகழ் குறைவாகத் தோற்றும். ஆனால், பலரும் புகழும் பெருமானைப் புகழப் புகுந்தால் இந்தப் புகழ் அந்தப் பெருமானுக்குப் புதுமையாகத் தோற்றாது.அது மாத்திரம் அன்று. அப் பெருமான் எத்தகையோருடைய புகழை யெல்லாம் கேட்டவன் தெரியுமா? பொறிகளை அடக்கி மன மாசு அறுத்து யோக இன்பத்திலே தம்மை மறந்து நிற்பவர்களுடைய புகழைக் கேட்பவன் அவன். ‘அவர்களுடைய புகழை யெல்லாம் கேட்கும் பெருமானை நாம் புகழப் போகிறோம்’ என்ற நினைவிலே புலவருக்குச் சிறிதே துணுக்கம் தோற்றியது. ஆனால் அடுத்த கணத்தில் அது மாறிவிட்டது.
திருமால் அந்த ஞானிகள் கூறிய புகழைக் கேட்டு, “நம் புகழை அளந்து சொல்கிறார்கள்” என்று மகிழ்ந்தானா? “இதுகாறும் யாரும் கூறாத புகழை இவர்கள் சொல்கிறார்கள்” என்று வியந்தானா? அவனுக்குப் புகழ் ஒரு பொருட்டல்ல; புதுமையும் அன்று. ஆகவே அதைக் கேட்டு அவனுக்கு வியப்பே உண்டாகாது. அவர்கள் கூறும் புகழ் அவனுக்கு இறும் பூது அன்று. இதனைப் புலவர் நினைத்துப் பார்த்தார். ‘அவர்கள் புகழ்வதற்கே வியப்படையாத பெருமான் நம் புகழைக் கேளா விட்டாலும், அது நமக்கென்று தனியாக வந்த சிறுமை அன்று’ என்று தம்மைத் தாமே தேற்றிக் கொண்டார்.
‘அந்த ஞானியர் கூறும் புகழ் கிடக்கட்டும். நாம் கூறும் புகழ் எப்படி இருக்கும்?’ என்ற நினைவு சிறிதே வந்தது. அதை நினைக்கும் போதே சிரிப்பு வந்தது. அவர் எண்ணம் ஓடியது.
‘ஞானியர்களாலே முற்றப் புகழ ஒண்ணாத ஒருவனை நாம் புகழப் புகுகிறோமே! அவன் புகழை நாம் கேட்டிருக்கிறோம். பல இடங்களில் பலர் வாயிலாகக் கேட்டிருக்கிறோம். அவற்றையே இப்போது சொல்லப் போகிறோம். ஆனால் அவற்றையேனும் முழுதும் நினைவுறுத்திக் கொண்டு சொல்ல முடியுமா?- அது எங்கே இயலப் போகிறது? இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாகக் கோவை யின்றி, முறையின்றி, முழுமையின்றித்தான் புகழ முடியும். எதையாவது சொல்ல வந்த குழந்தை முழு வாக்கியத்தையும் சொல்ல முடியாமல் அங்கொரு வார்த்தை இங்கொரு வார்த்தையாகச் சொல்லுகிறதே, அது போலத்தான் நாம் புகழப் போகிறோம். அதைப் பற்றி நினைக்கும்போது நமக்கே சிரிப்பு வருகிறதே! இறைவன் சிரிக்கமாட் டானா? நிச்சயமாகச் சிரிப்பான். சிரிப்பது நியாயம்; சிரிக்கத்தான் வேண்டும். “அட பைத் தியக்காரர்களே!” என்று நம்மைப் பார்த்துச் சிரிக்கத்தான் வேண்டும். சிரி அப்பா, சிரி; நீ நகுதலும் தகுதிதான்.
‘ஆனால் எம்முடைய குறைபாட்டையும் நீ நகுவதையும் அறிந்து நாங்கள் புகழாமல் விடப் போவதில்லை. பொறியடங்கிச் சமாதி கூடிய பெரியார் விரிக்கும் புகழையே மெச்சாத நீ, நாங்கள் கூறும் புகழைக் கேட்டுச் சிரிப்பது வியப் பன்று. அவர்கள் புகழ்வதை நிறுத்துவதில்லை. நாங்களும் புகழ்வதை நிறுத்தப் போவதில்லை.
நீ சிரிக்கச் சிரிக்க எங்கள் மழலைத் துதியைச் சொல்லத்தான் போகிறோம்.’
புலவர் திருமாலையே நோக்கிச் சொல்கிறார்:
……கிளக்குங்கால் அவை நினக்கு
இறும்பூது அன்மைநற்கு அறிந்தே மாயினும்
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப.
(நின் ஆர்வலர் நின்புகழை) விரித்துச் சொல்லும் பொழுது அவர்கள் கூறும் புகழ் வகைகள் உனக்கு வியப்பை உண்டாக்குவன அல்ல என்பதை நன்றாக அறிந்தோமானாலும், (அது கண்டு வாளா இராமல்) இங்கும் அங்குமாக நின்னை நாங்கள் புகழ,நீ எங்கள் குறை கண்டு சிரிப்பதும் ஏற்ற காரியந்தான்.
கிளக்குங்கால் – சொல்லும் பொழுது. வகையினாலே புகழ் பலவாதலால் அவையென்று பன்மையாகச் சொன்னார். இறும்பூது வியப்பு. அன்மை – அல்லாத தன்மையை, நற்கு: நன்கு என்பதன் விகாரம். நகுதலும் – அறியாமையைக் கண்டு சிரித்தலும். தகுதி – தக்கது. ஈங்கு – இங்கு. ஊங்கு. அங்கு தொடர்பும் முறையும் இல்லாதது என்பதைப் புலப்படுத்த ஈங்கு ஊங்கு என்றார். நின் – நின்னை. கிளப்ப- சொல்ல. ஈங்கு ஊங்கு நிற்கிளப்ப, நகுதலும் தகுதி என்று இயைத்துப் பொருள் செய்ய வேண்டும்.
அப்புகழ்க ளெல்லாம் நினக்கு இயல்பாவன அல்லது வியக்கப்படுவன அல்லாமையை அறிந்து வைத்தும், அத் தன்மையம் அல்லாத யாங்கள், அவற்றுட் சிலவற்றை ஈங்கும் ஊங்குமாகப் பிறழக் கூறுவதற்கு நீ நகுதலும் எமக்கு ஒரு தகுதியாம்; அதனால் யாம் கிளத்தலும் ஒழிதற் பாற்றன்று’ என்பது பரிமேலழகர் உரை.
இவ்வாறு கடுவன் இளஎயினனார் அவை யடக்கத்தைப் போன்ற முகவுரையைக் கூறிவிட்டு மேலே திருமாலைப் புகழ்வதில் ஈடுபடுகிறார். அப் பெருமானுடைய திருமேனிக் கோலத்தையும் ஆடை படை ஆகியவற்றையும் வருணிக்கிறார்.
திருமேனி
திருமால் பெரிய திருமேனியை உடையவர்; கரிய மேனியர். அந்தத் திருமேனிக்கு எதை உவமை சொல்லலாம் ? ஒளிவிடும் அழகிய நீல மணியைப் போல எம்பெருமான் திருமேனி ஒளிர்கிறது. ஆதலின் நீல மணியைச் சொல்லலாம். அவனுடைய பெரிய திருமேனிக்கு ஏற்றபடி பெரிய பொருளை உவமையாகச் சொன் னால் பொருத்தமாக இருக்கும். எல்லையற்ற பொருள் ஒன்று இருந்தால் அதைச் சொல்லலாம். கரையற்ற பொருளாக இருப்பது எது? கடல் இருக்கிறதே. கரிய நிறத்தை உடைய கடலை அவன் திருமேனிக்கு உவமையாகச் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆனால் கடலிலே ஒரே நீல வண்ணத்தைக் காண முடியாதபடி அலைகள் செய்கின்றன. அலைகள் எழுந்து வீசினால் வெண்மையாகத் தோன்றுகின்றன. அவற்றில் நுரையும் எழுகின்றது. அலையும் நுரையும் இராமல் இருந்தால் ஒரே நீலநிறமாகக் கடல் இருக்கும். அலை உண் டாதல் அவிந்த, அலையடங்கிய, கடல் இருந்தால் அதை அவன் மா மெய்க்கு ஒப்பாகக் கூறலாம்.
திருமணியையும் திரை படுதல் அவிந்த முந்நீரையும் உவமையாகச் சொல்லலாம்; ஆனால் இவை ஓரிடத்தில் இருப்பவை. இறைவன் தன்னை வழிபடுவோரிடம் சென்று அருள் செய்கிறவன். தன் திருமேனிக் கோலத்தை அன்பர்கள் இருக்கும் இடம் சென்று காட்டும் அருளாளன். அதற்கு ஏற்றபடி உவமை சொல்ல வேண்டாமா?
சூலுடைய மேகம் மழை பொழியும் பொருட்டு வருகிறதே, அதைப் பார்த்தால் அன்பர்களுக்கு அருள் செய்ய வரும் திருமாலின் திருமேனி நினைவுக்கு வர வில்லையா? ஆதலால் காலத்திலே மழையைப் பெய்ய வருகிற மழை முகிலையும் அவன் திருமேனிக்கு உவமை சொல்லலாம்.
இவற்றை யெல்லாம் நினைத்த புலவர், “திருமாலே, நின் பெரிய கரிய திருமேனி திருமணியையும் திரை அவிந்த முந்தீரையும், இருஞ்சூலையுடைய மேகத்தையும் ஒக்கும் ” என்று பாடுகிறார். [வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோரனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோ இவன் அழகென்பதோர் அழியாஉரு வுடையான்
என்ற கம்பர் பாடல் இங்கே நினைவுக்கு வருகின்றது. ]
திருமணி திரைபாடு அவிந்த முந்நீர்,
வருமழை இருஞ்சூல் மூன்றும் புரையும் மாமெய்,
அழகிய நீல மணி, அலை உண்டாதல் அடங்கிய கடல், காலத்தில் பெய்ய வருகிற பெரிய நீராகிய கருப் பத்தை யுடைய மேகம் ஆகிய மூன்றையும் ஒக்கும், நின் கரிய பெரிய திருமேனி.
திரு -அழகு. பாடு -படுதல்; உண்டாதல்; ஒலித்தலும் ஆம். அவிந்த – அடங்கிய. முந்நீர் -மூன்று நீர்மையை யுடைய கடல்; ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று இயல்புகளை உடையது; ஆற்று நீர், ஊற்று நீர்,வேற்று நீர் என்ற மூன்று நீர்களை உடையது என்றும் சிலர் கூறுவர்.
வரும் – காலத்திலே பெய்ய வரும். இருஞ் சூல் மழை என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். புரையும்- ஒக்கும். மா-பெரிய, கரிய.
உடையும் படையும்
திருமேனியின் நீல வண்ணம் இயற்கையாகவே ஒளிர்கிறது. அதனைப் பின்னும் நன் றாகப் பொலிவுறுத்தும்படி அப் பெருமான் இடையில் அணிந்த பொன்னாடை அமைந்திருக்கிறது. நீல வண்ணமும் பொன்னிறமும் ஒன்றற்கு ஒன்று மாறுபட்டவை; ஒன்றை யொன்று எடுத்துக் காட்டுபவை.
மரஅ மெய்யொடு முரணிய உடுக்கையை.
அந்தக் கரிய திருமேனியோடு நிறத்தால் மாறுபட்ட பொன்னாடையை உடையாய்.
முரணிய – மாறுபட்ட. உடுக்கை – உடை.
கரிய மேனியையும் பொன்னாடையையும் கண்ட பிறகு சற்றுக் கூர்ந்து எம்பெருமானை நோக்க விருப்பம் உண்டாகிறது. பளபளக்கும் ஆடையைக் கண்ட கண்ணோடு பார்க்கை யில் அப்பெருமானுடைய திருக் கரத்தில் ஏதோ ஒன்று பளபளப்பது தெரிகிறது. அது மின்னுகிறது; சுழல்கிறது. அது என்ன? இறைவன் சக்கரத் திருக்கையினன் என்று கேட்டிருக்கிறோமே. ஆம். அவன் திருக்கரத்தில் ஒளி விடுகின்ற சக்கரம் இருக்கிறது. அந்தச் சக்கரம் எத்தனையோ அசுரர்களுடைய உயிரைக் குடித்திருக்கிறது. பகைவர்களின் உயி ரைக் கண்டால் அந்தச் சக்கரம் துள்ளுகிறது. அவர்களின் உயிருக்கு அது பகையானது; அவர்கள் உயிரோடு முரணை உடையது.
நோனார் உயிரொடு முரணிய நேமியை.
பகைவருடைய உயிரோடு மாறுபட்ட சக்கராயுதத்தை உடையாய்.
நோனார் – பகைவர்; பொறாதவர் என்பது சொற் பொருள்; ஒருவருடைய புகழையும் செல்வத்தையும் கண்டு பொறாமல் பகைத்தலின் பகைவருக்கு நோனார் என்ற பெயர் வந்தது. முரணிய – பகைத்த. நேமி – சக்கரம். நேமியை – சக்கரத்தை உடையாய்.
நரசிங்கப் பெருமான்
திருமாலின் சக்கரப் படையின் வலியை நினைந்தபோது புலவரு க் கு அப்பெருமானுடைய திரு அவதாரங்கள் நினைவுக்கு வரு கின்றன. பிற படை இல்லாமல் தன்னுடைய நகங்களே படையாக இரணியனுடைய உடலை வகிர்ந்த செய்தியை எண்ணுகிறார். நரசிங்க அவதாரத்திலே கருத்தைச் செலுத்துகிறார்.
‘திருமாலே, செங்கண்ணை உடைய பெரு மானே, சினத்தால் சிவப்பேறுதலின்றி இயல்பாகவே சிவந்த திருவிழிகளை உடையவனே, நீ இரணியனைப் பிளந்த உகிரை உடையாய்’ என்று பாராட்ட வருகிறார்.
இரணியன் தன் ஆட்சிக்குள் தன் பெயரே யன்றிப் பிறர் பெயர் வழங்கலாகா தென்று அடக்கியாண்டான். அவன் மகன் நாராயணனைப் புகழ்ந்தான். ஊரெல்லாம் தன்னைப் புகழ, தன் அருகே உள்ள புதல்வன் வேறு ஒருவனைப் புகழ்வதைக் கேட்டுப்பொறுப்பானா? அவனுக்குச் சினம் மூண்டது; நெஞ்சு புகைந்தது; அதனால் மார்பில் உள்ள சந்தனம் புலர்ந்தது.
இரணிய ராஜ்யத்தில் வேறு ஒருவனைப் புகழ்வதாவது!” என்று உறுமினான். தன் இளஞ்சேயானாலும், அந்த அசுர உள்ளம் சேயென்ற எண்ணத்தைக் கொள்ளவில்லை. பிரகலாதனைப் பல வகையிலே துன்புறுத்தினான். கட்டிப் போட்டு மலையிலிருந்து உருட்டினான். யானை முன் இட்டான். தந்தையால் அந்தக் குழந்தை பட்ட துன்பம் கணக்கில் அடங்காது. பல பல பிணிபட்டும் அவன் இறைவனை மறக்கவில்லை. அவனுடைய திரு நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தான். இரணியன் கட்டக் கட்டப் பிரகலாதனுடைய அன்பு முறுகி உரம் பெற்றது. அவனுக்குத் துன்பம் மிகுதி ஆக ஆக, அவன் உடல் நடுங்கியது; ஆனால் அவன் உள்ளம் நடுங்கவில்லை. அவன் உரத்தைக் கண்டு தேவர் புகழ்ந்தனர். நோயும் நடுக்கமும் அவன் தன் தந்தையால் அடைந்தான்; ஆனால் அவன் தளர்வின்றி நாராயணனைப் புகழ்ந்தான். அவன் உறுதி கண்டு யாவரும் அவனைப் புகழ்ந்தனர். அவன் புகழ் அலர்ந்தது; பரவியது.
ஆயினும் இரணியனிடம் பிரகலாதனுக்கு வெறுப்பு உண்டாகவில்லை. பிரகலாதன் தன் மைந்தன் என்பதை இரணியன் மறந்தான்; பகைவனாக எண்ணினான்; அவனை ஒறுத்தான். பலபல பிணிபட வலந்தான் (கட்டினான்). ஆனால் பிரகலாதனோ அவன் தன் தந்தை யென்பதை மறக்கவில்லை. அவனிடம் இருந்த அன்பு மாறவில்லை.
அந்த அசுரன் பிரகலாதனை இகழ்ந்தான்; அவனுடைய உயிர்த் துணையாக நின்ற நாராயணனை இகழ்ந்தான். பிரகலாதன் இரணியனை இகழவில்லை. அவன் தன் தாதை யாகலின், அவன் இகழ்ந்தாலும் தான் அவனை இகழா நெஞ்சினனாக விளங்கினான்; எல்லாம் நாராயணன் செயல் என்று அமைதியோடு இருந்தான்.
தன்னை நம்பினோரைத் தாங்கும் தயாபரன் இறைவன். அவன் நல்லோரை நாட்டி அல்லோரை வீட்டும் கருணையும் திறலும் உடையவன். பிரகலாதனைக் காத்தருளவும் இரணியனைத் தடியவும் முற்பட்டான். தூணிலிருந்து நரமடங்கலாகத் தோன்றினான்.
இரணியன், ”எங்கேயடா உன் ஹரி?” என்று கேட்டான். “அவன் எங்கும் உள்ளான்; தூணிலும் உள்ளான்; துரும்பிலும் உள்ளான்” என்றான் பிரகலாதன். ‘” எங்கே, இந்தத் தூணில் இருந்தால் நான் பார்க் கிறேன்” என்று தூணை அறைந்தான் அசுரன். படீரென்று தூண் பிளந்தது; திடீரென நர மடங்கல் தோன்றியது. உற்பாதங்கள் நிகழ்ந் தன. முரசு முழங்கியது. தன்னை மனமொழி மெய்களால் விரும்பி வணங்கி நன்றாக அன்பு செய்த பிரகலாதனைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் திருமால். தன் பெயர் ஒன்றையே தன் நாட்டில் நட்டானே, அந்த இரணியனுடைய மார்பிலே பாய்ந்தான். பெரிய மலை போன்ற மார்பு அது.
ஆனால் என்ன? குன்றின்மேற் பாயும் கோளரி போலப் பாய்ந்தான் நரசிங்கப் பெருமான். இரணியனுடைய நெஞ்சம் அகங்காரம் நிரம்பியது; செருக்குச் செறிந்தது; பகை யுணர்ச்சி யாகிய மதம் நிறைந்தது. அந்தப் பகை மதல் அழியும் படியாக அவன் நெஞ்சிலே இறைவன் பாய்ந்தான். அவன் மார்பைத் தன் உகிரினால் வகிர்ந்தான்.
இவ்வளவும் கணப் போதிலே நிகழ்ந்தது. வெடித்துப் பிளந்த கம்பத்தின் துண்டுகள் கீழே விழுவதற்கு முன்னே இரணியன் மார்பைப் பிளந்துவிட்டான் திருமால். தூணின் துண்டுகள் கீழே விழுந்தன; அவற்றோடு இரணியனுடைய பிளந்த மார்பின் தசைகளும் விழுந்தன.
இந்தக் காட்சியைத் தம் அகக் கண்ணிலே நிறுத்திய புலவர் பாடுகிறார். ‘செங்கமலக் கண்ணா, உன்னைப் பிரகலாதன் புகழ, அதனைக் கேட்கப் பொறாமல் புகைந்த நெஞ்சும் புலர்ந்த சாந்தும் உடைய இரணியன் பிரகலாதனைப் பல பல துன்பத்தை அடையும்படி கட்டிய பொழுது, துன்பம் மிகவும் உடம்பு நடுங்கவும் நின்ற புகழோனாகிய அச்சேய் இரணியன் தன் தந்தையாதலின் இகழாத நெஞ்சோடு இருக்க, அப்போது நீ இரணியனை இகழ்ந்து புறப்பட்டுப் பிரகலாதனைத் தழுவி, இரணியன் மார்பிலே பாய்ந்து, உற்பாதங்கள் உண்டாகவும் இடி போன்ற முரசு முழங்கவும், வெடி பட்டு ஒடிந்த தூணின் துண்டங்களோடு தடிந்த ஊன் துண்டங்கள் பல கீழே விழும்படி வகிர்ந்த உகிரை உடையாய்’ என்று பாராட்டுகிறார்.
செயிர்தீர் செங்கட் செல்வ ! நிற் புகழப்
புகைந்த நெஞ்சிற் புலர்ந்த சாந்திற்
பிருங்க லாதன் பலபல பிணிபட
வலந்துழி, மலர்ந்த நோய்கூர்
கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினன்
ஆக, நீ இகழா
நன்ற நட்டஅவன் நன்மார்பு முயங்கி
ஒன்றா நட்டஅவன் உறுவரை மார்பில்
படிமதம் சாம்ப ஒதுங்கி
இன்னல் இன்னரொ டிடிமுரசு இயம்ப
வெடிபடா ஒடிதூண் தடியொடு
தடிதடி பலபட, வகிர்வாய்த்த உகிரினை.
கோபம் தீர்ந்த, இயல்பாகவே செம்மையையுடைய கண்களையுடைய செல்வனே! நின்னைப் பிரகலாதன் புகழ, அது கேட்டுச் சினத்தாற் புழுங்கிய நெஞ்சத்தோடும், உலர்ந்த சந்தனத்தினோடும் அவன் பலபல வருத்தத்தைப் படும்படி யாக இரணியன் கட்டிய பொழுது, பரவிய துன்பம் மிகுதி யானவனும், ஒடுங்கிய நடுக்கத்தை யுடையவனும், பரவிய புகழையுடையவனுமாகிய பிரகலாதன், தன்னையும் திருமாலையும் இகழ்பவன் தன் தந்தையாதலால் அவனை இகழாத நெஞ்சினனாக இருப்ப,நீ இரணியனை இகழ்ந்து, நன்றாக நின்னை விரும்பிய அந்தப் பிரகலாதனுடைய நல்ல மார்பைத் தழுவிக் கொண்டு, தன் பெயர் ஒன்றேயாக எங்கும் நிலை நிறுத்திய இரணியனுடைய மிக்க மலை போன்ற மார்பிலே பகைமைச் செருக்கு அழியும்படி பாய்ந்து, துன்பத்தைக் காட்டும் தீய நிமித்தங்களோடு இடி போன்ற முரசு முழங்க, வெடிபட்டுப் பிளந்த தூணின் துண்டங்க களோடு நீ பிளந்தஊன் துண்டுகள் பல கீழே விழ, வகிர்தலை வாய்த்த கை நகங்களை உடையாய்.
10.செயிர் – இங்கே கோபம். 11. புகைதல் – சினத் தாற் புழுங்குதல். அதனால் வெப்பம் ஏறிய மார்பிலே பூசிய சந்தனம் உலர்ந்தது. நெஞ்சின்-செஞ்சோடு. சாந்தின் சந்தனத்தோடு. 12. பிருங்கலாதன் – பிரகலாதன். பிணி. வருத்தம். பட – அடைய. 13. வலந்துழி -கட்டினபோது. மலர்ந்த நோய் – பரவிய துன்பம். கூம்புதல் – அடங்குதல். கூம்புதற்குக் காரணமாகிய நடுக்கம், 14. அலர்ந்த-பரவிய நோய் கூர் புகழோன், நடுக்கத்துப் புகழோன் என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். 14-15. இகழ்வோன் தாதையாகலின் அவனை இகழாத நெஞ்சினனாக. ‘இகழப் படுவோனை இகழாத நெஞ்சினனாக என்பர் பரிமேலழகர். இகழா – இகழ்ந்து; அவன் வலிமை முதலியவற்றை மதியாமல் என்றபடி.
16. நட்ட- விரும்பிய; அன்பு செய்த. முயங்கி- தழுவி. ‘மார்பு முயங்கி’ என்பதற்கு ‘அவன் நெஞ்சிற் பொருந்தி என்று உரை எழுதுவர் பரிமேலழகர் 17.ஒன்றா நட்ட அவன் – தன் நாட்டிற் பிற பெயர் உலவா மல் தன் பெயர் ஒன்றே ஆகும்படி நிறுவிய இரணியன்; ‘நின்னோடு ஒன்றாக வரங்கொண்ட இரணியன்’ என்பர் பரிமேலழகர். உறு-மிக்க.
18.படி – பகை ; பிரதி என்பதன் சிதைவு. ‘படியென் பது பாகதச் சிதைவு’ (பரிமேலழகர் உரை.) மதம்-செருக்கு. சாம்ப- அழிய. ஒதுங்கி – பாய்ந்து. 19. இன்னர் – துன்பத் தைக் காட்டும் தீய நிமித்தங்கள், 20. வெடிபடா ஒடி- வெடிபட்டுப் பிளந்த. தூண் தடி- தூணின் துண்டங்கள். 21. தடிதடி-தடிந்த மாமிசம். தடிதல் – இங்கே பிளத்தல். வகிர்-வகிர்தல்; பிளத்தல். உகிரினை – நகத்தை உடையாய். ஒரு காலத்தே இரண்டு தடியும் வீழ்ந்தனவென விரைவு கூறியவாறு’ என்பர் பரிமேலழகர்.
வராக அவதாரம்
இறைவனுடைய திருவவதாரங்களில் ஒன்றாகிய நரசிங்க மூர்த்தியை நினைத்தபின், தொடர்ந்து மற்றோர் அவதாரம் நினைவுக்கு வருகிறது. உலகம் முழுதையும் பாயாகச் சுருட்டிக் கடலில் மறைந்தான் ஓர் அசுரன். திருமால் வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்று உலகத்தைக் கடலினின்றும் மேலே எடுத்தான். அந்த அவதாரம் புலவர் நினைவுக்கு வந்தது. அந்த வரலாறு நரசிங்கமூர்த்தியின் கதையைவிடப் பழையது. பூர்வ காலத்தில் நிகழ்ந்தது.
பழங்காலத்தில் இவ்வுலகத்தை வராகத் திருவுருவங் கொண்டு தன் கழுத்தால் தாங்கி எடுத்தான் இறைவன். உலகத்தைத் தாங்கும் வலிமை அக் கழுத்துக்கு உண்டு. கரிய வலிய கந்தரத்தால் இவ்வுலகத்தை எடுத்துத் தாங்கித் தன் அருளாட்சியின் கீழே வைத்தது புராணத் தாற் பாராட்டப்பெறும் செய்தி. உலகத்தை மீட்டு அதை உரிய நிலையில் வைத்துவிட்டு அதன் மேலே இறைவன் உவகையினால் நிமிர்ந்து நின்றான். அப்படி நின்றது உலகத்துக்கு நடுவே அச்சுப்போலே மேருமலை நிமிர்ந்து நிற்பது போல இருந்தது. உலகத்தின் நடுவண் ஓங்கிய பலர் புகழ் குன்றினேடு ஒத்த வராக மூர்த் தியை நினைந்து பாடுகிறார் புலவர்.
புருவத்துக் கருவல் கந்தத்தால்
தாங்கிஇவ் வுலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர்புகழ் குன்றினோடு ஒக்கும்.
பண்டைக் காலத்தில் (வராகத் திருக்கோலம் கொண்டு) கரிய வலிய கழுத்தினால் இவ்வுலகத்தைத் தாங்கித் தன் அடிக் கீழ் வைத்தது, (உலகத்தின்) நடுவில் ஓங்கிய பலரும் புகழும் மேருமலையை ஒக்கும்.
புருவம் – பூர்வம்; பழங்காலம். கந்தம்: கந்தரம் என்பதன் சிதைவுபோலும். தாங்கி – எடுத்துப் பாதுகாத்து, அடிப்படுத்தது – தன் அருளாணைக்குள் வைத்த செயல், எழுவாய். ஐ: சாரியை. நடுவண் – நடுவில். பலர்புகழ் குன்று – மேருமலை.
வெம்மையும் தண்மையும்
கடவுள் எல்லாப் பூதங்களையும் உண்டாக்கினான். கதிரவனையும் திங்களையும் படைத்தான். அவற்றின் தன்மைகளையும் அவனே உண்டாக்கினான். அந்த அந்தப் பொருளாகவே இருந்து உலகத்துக்கு நன்மை உண்டாக்குகிறான். அவன் இருளை ஓட்டும் தெய்வத் தேசு படைத்தவன். சோதி உருவுடையவன். அவன் திருவுருவத்தைக் கண்டவர்களே அவனுடைய விளக்கத்தை உணர முடியும் என்பது இல்லை. அவனுடைய ஒளியின் ஒரு கூற்றைக் கதிரவனிடத்தில் பார்க்கலாம். அவன் தன் ஒளியினால் கதிரவனை ஒளியுடையவனாகச் செய்கிறான். அப்படியே அடியார்களுக்கு இன்னல் புரிவோர்களை அடக்கும் வெப்பம் அப்பெரு மானிடத்தில் உண்டு. அந்த வெம்மையின் ஒரு கூறே பனியைப் போக்கும் வெம்மையாக ஞாயிற்றினிடம் அமைந்திருக்கிறது. ஆதலின் சூரியனைப் பார்க்கும் போதே திருமாலின் நினைவு வர இடம் உண்டு. அப்பெருமானுடைய வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின் கண்ணே உள என்று எண்ணி வணங்கலாம்.
திங்கள் தண்சுடர். அதன் நிலவில் தண் ணிய ஒளியும் மென்மையும் இணைந்திருக் கின்றன. உலகம் தண்ணிய நிலவை ஏற்று உவக்கிறது. காதலர் அதனைக் கண்டு களிக்கின்றனர். குழந்தைகள் நிலா விளையாட்டு விளையாடுகின்றனர். முள்ளும் மரமும், மேடும் பள்ளமும், கறுப்பும் செம்மையும் கதிரவன் பள்ளமும்,கறுப்பும் ஒளியில் வெவ்வேறாகத் தோற்றுகின்றன. பாலைநிலம் அவ்வொளியினால் கண்ணைத் துன்புறுத்துகிறது. ஆனால் நிலவொளியில் பாலை நிலங்கூட மோகனமான சோபையைப் பெறுகிறது. கரடுமுரடான வழிகளும் பார்க்க
அழகான தோற்றத்தைப் பெறுகின்றன. இது தான் நிலவின் மென்மை. அது பட்ட இடங் களெல்லாம், பார்க்க அழகிய தோற்றத்தை அடைகின்றன. இறைவன் தண்மைக்கும் மென்மைக்கும் இருப்பிடம். அவனுடைய திருவருளைக் காட்டிலும் தண்ணிய பொருள் ஒன்று இல்லை. அதைத் தண்ணளி என்று புலவரும் அன்பரும் பாராட்டுவர். அவனுடைய தண்மை யையும் மென்மையையும் ஓரளவு திங்களிலே காணலாம்.
நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுஉள;
நின், தண்மையும் சாயலும் திங்கள்உள.
நின்னுடைய (பகைவரை அழிப்பதற்குக் காரணமான) வெப்பமும், ஒளியும் சூரியனிடத்திலே இருக்கின்றன; நின்னுடைய குளிர்ச்சியும் மென்மையும் சந்திரனிடத்திலே இருக்கின்றன.
வெம்மை- கொடுமை; தீயோரைத் தெறும் தன்மை. ஞாயிறு – கதிரவன். தண்மை – குளிர்ச்சி; அருள். சாயல்- மென்மை. ‘வெம்மை தண்மை என்றது பகைவர் மாட்டு வெகுளுதலையும் அன்பர்மாட்டு அருளுதலையும்’ என்பது பரிமேலழகர் உரை.
அசுரர்களைத் தடிந்த வெம்மையும் அன்பர்களைக் காக்கும் தண்மையும் அவனிடம் இருப் பதை நரசிங்க அவதாரமும், வராக அவதாரமும் காட்டுகின்றன. அந்த வெம்மையையும் தண்மையையும் உலகிலே கண்டால் அவை யாவும் இறைவனுடைய குணங்களிலிருந்து கூறுபட்டு வந்தன என்று எண்ணுவது அடியார் இயல்பு. தீயதைப் போக்க வெம்மையும் நல்லதை ஆக்கத் தண்மையும் வேண்டும். உலகில் தீமை போக, நன்மை வளர்ந்தால் இன்பம் உண்டாகும். இறைவன் தன் திருவருளால் எல்லா உயிர்களுக்கும் இன்பம் அருளுகிறான்; துன்பத்தையும் அருளுகிறான். அவ்விரண்டுமே உயிர்களின் புண்ணிய பாவங்களின் பயன்கள். தீமைக்குத் தீமையும் நன்மைக்கு நன்மையும் பயனாக வருதலின் தீமை ஒழிந்து நன்மை மிகும். ஆதலின் இறைவன் வெம்மையும் தண்மையும் உடையவனாக இருக்கிறான். அவனுடைய வெம்மையையும் தண்மையையும் உணர வேண்டுமானால் ஞாயிற்றையும் திங்களையும் கண்டு தெளியலாம். கதிரவனிடம் உள்ளது வெம்மையானாலும் அதனால் விளைவது நன்மையே. இறைவனுடைய வெம்மையும் அத்தகையதே.
வண்மை
இறைவனைக் காட்டிலும் சிறந்த வள்ளல் யாரும் இல்லை. தம்மிடம் உள்ள பொருள்களை வரையறையின்றி ஈயும் வள்ளல்கள் பலர் உலகில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இனியும் இருப்பார்கள். ஆனால் அந்த வள்ளல்களுக் குப் பொருளை உதவியன் யார்? இறைவன் அல்லவா? ஆகவே, வள்ளல்களை வள்ளல்களாகும்படி செய்த பெருவள்ளல் இறைவன். அவன் தாராவிட்டால் யாரும் ஏதும் பெற இயலாது. வள்ளல்கள் தம்மிடம் உள்ள பொருளைக் கொடுத்தால், அவரிடம் உள்ள பொருள் அந்த அளவுக்குக் குறைந்துவிடும். மறுபடியும் பொருளை ஈட்டிக் கொண்டாலன்றி அக்குறை நீங்காது. கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் அருள் ஒன்றுதான். அந்தச் செல்வத்தை நிரம்ப உடையவன் இறைவன். அதனை அநாதிகாலமாக அவன் யாவருக்கும் வழங்கி வருகிறான். அதனால் அவனிடம் உள்ள அருள் எள்ளளவும் குறைபடவில்லை. அவன் சுரக்கும் அருள் தங்குதடையின்றி வருவது. அவனுடைய வள்ளன்மை வேறு யாரிடத்தும் காணக் கிடையாதது.
இந்த இயல்புகளை நினைப்பூட்டுவது மழை. காலத்துக்குக் காலம் மழை சுரந்துகொண்டே இருக்கிறது. இனிமேல் உலகத்தில் மழையே இல்லை என்று சொல்லும் நிலை எப்போதும் வாராது. பசும்புல் முதல் மக்கள் வரையில் தலையெடுத்து வாழும்படி வைப்பது மழை. அது நம்மிடமிருந்து கைம்மாறாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. இந்த இயல்பு மழைக்கு எங்கிருந்து வந்தது? இறைவனுடைய ஒருகூறே மழையாக இருப்பதால் அவனுடைய சுரத்தலும் வண்மையும் மாரியினிடம் உள்ளன. அவனுடைய கூறு இல்லாவிட்டால் மழை இராது; மேகம் இருந்தாலும் அது பெய்யாது. இறைவனுடைய அருளாணையால் மேகம் மழை பெய்கிறது. அது பெய்யும்போது அதனைக் காணும் அன்பர் கள், “இதோ இறைவன் திருவருள் மழையாகப் பெய்கிறது” என்று கூறி வாழ்த்துவார்கள்.
நின், சுரத்தலும் வண்மையும் மாரிஉள.
உன்னுடைய இடையறாது சுரக்கும் தன்மையும் கொடையும் மழையினிடம் உள்ளன.
‘சுரத்தல்’ – கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளர்தல். வண்மை – கொடை. (பரிமேலழகர்)
காவலும் பொறையும்
கடவுள் எல்லா உயிர்களையும் தனு, கரணம், புவனம், போகம் என்பவற்றைக் கொடுத்து வாழச் செய்கிறான். தங்கள் தங்களுக்கு வேண்டிய பொருளைத் தாங்களே ஈட்டிக் கொண்டு வாழலாம் என்று எண்ணுவது தவறு. நம்முடைய முயற்சியால் நாம் பெறுவது மிகவும் சிறிதே. இறைவன் மறைமுகமாக நின்று நம் முயற்சிக்கு வெற்றி அருளுவதனால் தான் அந்த முயற்சியும் பயனைத் தருகிறது. அரிசியை மனிதன் தன் முயற்சியால் வாங்கி வரலாம். அதைச் சமைக்கத் தீ வேண்டும். அது இறைவன் தந்ததுதான். அரிசியுங்கூட நெற்பயிர் விளைந்தால்தான் கிடைக்கும். மண்ணையும் நெல்லையும் நீரையும் சேர்த்துக் கலந்து வைத்தால் பயிர் விளைந்து விடாது. நெல்லாகிய பயிரை விளையும்படி செய்கிறவன் இறைவன். அதன் இலையிலே பசுமையையும் அதன் காயிலே பாலையும் அதன் கதிரிலே நெல்லையும் அந்த நெல்லிலே அரிசியையும் அந்த அரிசியிலே உணவுத் தன்மையையும் இசைத்து நமக்கு உணவாகச் செய்கிறவன் இறைவனே. நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நினைவு நமக்கு இருக் கிறது. ஆனால் அந்த நினைவினால்தான் நாம் முயற்சி செய்து வாழ்கிறோம் என்பது இல்லை. உலகத்து உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றும் கவலை இறைவனுக்கு இருக்கிறது. அவன் எல்லோரையும் காக்கும் தெய்வம். எல்லோரை யும் காக்கும் காவலை ஏற்றுக் கொண்டவன்.
எல்லா உயிர்களையும் தாங்கிப் புரப்பவன் அவனே.
குழந்தையினிடம் அன்பு பூண்ட தாய் அதற்கு வேண்டிய உணவு முதலியவற்றை அளித்துப் பாதுகாக்கிறாள். ஏதேனும் குறும்பு செய்தால் கோபிக்காமல் கொஞ்சுகிறாள். பிழை செய்தால் பொறுக்கிறாள். இறைவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான். அவர்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்து அருள் செய்கிறான். அவனுக்கு உள்ள பொறுமைக்கு அளவில்லை. ஒவ்வொரு கணமும் நாம் பிழை செய்து கொண்டே இருக்கிறோம். அவனுக்கும் அவனுடைய குழந்தைகளாகிய உயிர்க் கூட்டங்களுக்கும் ஏதேனும் தீங்கு புரிவதே நம்முடைய இயற்கையாகப் போய்விட்டது. அவ்வாறு செய்யும் தீங்குகளுக்கு உரிய தண்டனையைக் கொடுக்க இறைவன் எண்ணினால் நாம் ஒரு கணமும் வாழ இயலாது. அவன் அளித்த உடம்பையும் பொருளையும் அவனுடைய அருள் நெறிக்கு மாறுபடாமல் பயன்படுத்தி வாழ நமக்குத் தெரிவதில்லை; தெரிந்தாலும் அப்படி வாழ்வதில்லை. இது பிழை அல்லவா? ஆயினும் இறைவன் நமக்கு மேலும் மேலும் பொருளைத் தருகிறான்.நாம் செய்யும் பிழையைப் பொறுத் துக் கொள்கிறான்.
உயிர்களைப் பாதுகாத்துப் புரத்தலும், அவர் கள் இயற்றும் பிழைகளைப் பொருட்படுத்தாது பொறுக்கும் நோன்மையும் இறைவனிடம் இருத் தலை நம்மைத் தாங்கும் ஞாலம் ஒவ்வொரு கணமும் நமக்குப் புலப்படுத்துகிறது. உயிர்க் கூட்டம் வாழ்வதற்கு ஆதாரமாக நின்று, அவர்களுக்குரிய போகங்களைத் தரும் பொருள்களைத் தன்னிடம் உண்டாக்கி உதவி செய்கிறது நிலம். நம்மைப் புரக்கும் தன்மை அதற்கு உண்டானது இறைவன் திருவருளால். இறைவனுடைய கல்யாண குணங்களில் ஒன்றாகிய காவலை அது ஒரு கூறு பெற்றிருக்கிறது.
பொறுமைக்கு நிலத்தைக் கூறுவது வழக்கம். “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை, இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என் பது வள்ளுவர் வாய்மொழி. தன் உள்ளே புதைந்திருக்கும் கனிப் பொருள்களை அகழ்ந்து எடுப்பதோடு, வேளாண்மையின் பொருட்டு உழுதும், நீர் நிலைகளை அமைக்கும் பொருட்டுத் தோண்டியும், நடக்கும் பொருட்டுக் காலால் மிதித்தும் மக்கள் துன்புறுத்தினாலும் பூமிதேவி சினம் கொள்வதில்லை. அத்தகைய பொறுமை எங்கிருந்து வந்தது? கதிரவனிடம் தன் வெம்மையின் ஒரு கூற்றையும், திங்களினிடம் தன் தண்மையின் ஒரு பகுதியையும், மாரியினிடம் தன் வண்மையில் ஓரளவையும் எப்பெரு மான் வழங்கினானோ அப்பெருமானே ஞாலத் துக்கு இந்தப் பொறையை வழங்கினான். அவன் வழங்கியமையால் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உளவாயின.
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துஉள.
நின்னுடைய தாங்கும் தன்மையும் பொறுமையும் நிலத்தினிடம் இருக்கின்றன.
புரத்தல் – பாதுகாத்தல். நோன்மை – பொறுத்தல். ஞாலம்-பூமி.
மணமும் வண்ணமும்
றைவனுடைய திருமேனி நீல வண்ணத்தை உடையது. அதற்கு உரிய உவமைகளை முன்பு சொல்லியிருக்கிறார் புலவர். மணியையும் அலையடங்கின கடலையும் மேகத்தையும் சொன்னார் அல்லவா? அது அவன் திருமேனியை நினைத்து அதற்கு எது உவமையாகும் என்று ஆராய்ந்து பார்த்துச் சொன் னது. இப்போது கதிரவனையும் திங்களையும் மழையையும் ஞாலத்தையும் பார்த்து அவற்றிலே இறைவனுடைய கூறு இருக்கிறதென்று கண்டு இன்புற்ற அதிசயத்தை வெளியிடுகிறார். காயாம்பூவை அகக்கண்ணிலே காணுகிறார் புலவர். கதிரவனைக் காணாமல் கடவுளின் வெம்மையையும் விளக்கத்தையும் கொண்ட பொருளாகக் கண்டவர் இவர். கதிரவனைக் கண்டு உலகப் பொருளை யெல்லாம் அதன் ஒளியாற் காணலாம்; அன்றிக் கதிரவனையும் காணலாம். இந்த இரண்டுக்கும் புறக் கண் கருவியாக உதவும். இந்த இரண்டு காட்சியையும் யாரும் காணலாம். ஆனால் கதிரவனைக் கண்டு அவன் மூலம் இறைவனைக் காண்பது எல்லாராலும் இயலாது. இறைவனுடைய அன்பும் அவனுடைய திருவருளிலே நாட்டமும் உடையவர்களுக்கே அது இயலும். அந்த நாட்டத்தையுடைய புலவர் காயாம்பூவைக் காணுகிறார்.
காயாம்பூவுக்கு மணம் உண்டு; நிறம் உண்டு. மணம் இருத்தலால் மலராக இருக்கிறது; தனக்கென்று அமைந்த நீலநிறம் இருத்தலின் காயாம்பூவாக இருக்கிறது. பூவின் தன்மை மணம். காயாவின் தன்மை நிறம். இந்த மணமும் வண்ணமும் அது தானாகப் படைத்துக் கொண்டனவா? இல்லை. இறைவனுடைய அரு ளால் அமைந்தவை. அதனுடைய நறுமணமும் நீலவண்ணமும் திருமாலை நினைப்பூட்டுகின்றன. அவனிடத்தே உள்ள மணமும் பொலிவும் அம் மலரிடத்தே அமைந்துள்ளன.
நின், நாற்றமும் ஒண்மையும் பூவைஉள. நின்னுடைய நறுமணமும் பொலிவும் காயாம் பூவில் உள்ளன.
நாற்றம்- மணம். ஒண்மை- பொலிவு; வண்ணம். பூவை – காயாம்பூ; காசா என்று இக்காலத்தில் வழங்குவர்.
தோற்றம் முதலியன
புலவர் இவற்றோடு நிற்கவில்லை. மேலும் எவ்வெப் பொருள்களில் அவனுடைய இயல்புகள் பொருந்தியுள்ளன என்பதைச் சொல் கிறார். நிலத்தைச் சொன்னார். அதனோடு நினைப்பதற்குரியது நீர் அல்லவா? நிலத்தைச் சுற்றி வளைந்து கரையற்று விளங்கும் கடல் வானத்திலிருந்து பெய்யும் மழைக்கும், நிலத் திலிருந்து சுரக்கும் ஊற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறது.
அந்தக் கடல் மிக விரிந்தது. பெரிய நீல நெடும்பரப்பாகக் கண்ணுக்கு எட்டாத தூரத்துக்கு அது பரவியிருக்கிறது. அதனுடைய தோற்றமும் அகலமும் வியப்பதற்குரியவை. தன் தோற்றமும் அகலமும் இறைவனுடைய தோற்றத்தையும் அகலத் தையும் நினைக்கத் தூண்டும் பொருளாக இந்த முந்நீர் கிடக்கிறது.
இப்படியே ஆகாயத்தைப் பார்த்தாலும் இறைவனுடைய தன்மைகள் நினைவுக்கு வருகின்றன. ஆகாயம் ஓர் உருவம் உடையது. ஆனால் கண்ணுக்குப் புலப்படுவது அன்று. இறைவனும் அப்படித்தான் இருக்கிறான். அவனுடைய உருவமே வெளி அல்லது ஆகாசம் என்றுகூடச் சொல்வது உண்டு. ஆகாயத் துக்கு உரியது. ஆகாயத்தின் மூலம் பரவுகிறது. இறைவன் நாதமயமானவன்; ஒலி வடிவானவன். அவனுடைய அருளொலி இல்லை யானால் உலகில் யாரும் பேச இயலாது; ஒலிக்க முடியாது. ஆதலின் அவன் ஒலியை நினைப்பூட்டுகிறது, ஆகாயத்திலே பரவும் ஒலி. அருவமாக நிற்கும் நிலையாகிய உருவத்தையும் அது நினைவுறுத்துகிறது.
ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாகிய காற்றுச் சில சமயங்களில் வீசுகிறது; சில சமயங்களில் வீசாமல் நிற்கிறது. அது வீசி அடிக்கும்போது, “காற்று அடிக்கிறது” என்று சொல்லுகிறோம். அது வீசாமல் புழுக்கமாக இருந்தால், “காற்றே இல்லையே!” என்று சொல்கிறோம். காற்று இல்லாத இடத்தில் நாம் வாழ முடியுமா? அது வீசும்போது காற்று இருப்பதாக உணர் கிறோம். வீசாதபொழுது, ஒடுக்கமாக இருக்கும் போது, உணர்வதில்லை; அதனால்,”காற்றே இல்லை” என்று சொல்கிறோம். காற்று, தான் இருப்பதை உணர்த்திக்கொண்டு வீசுகிறது; தான் இருப்பதை உணர்த்தாமல் ஒடுங்கி நிற்கிறது. இறைவனும் இப்படி இரண்டு தன்மையை உடையவனாக இருக்கிறான். சில காலங்களில் உலகில் அவதாரம் செய்து தன் ஆற்றலைப் புலப்படுத்துகிறான். அன்புடையவர் களுக்குத் தன் அருளால் இன்ப நுகர்ச்சி தந்து தன்னை உணரும்படி வைக்கிறான். மற்றவர்களுக்கு அந்த உணர்வு இல்லாமற் செய்கிறான்.உணர்ந்தாலும் உணராவிட்டாலும் அவன் இருப்பது உண்மை. புழுக்கத்தினால் “காற்று இல்லை” என்று சொன்னாலும் காற்று இருப்பது போல, அறியாமையால், “இறைவன் இல்லை” என்று சொன்னாலும் இறைவன் இல்லாமற் போவதில்லை; இருக்கிறான். அவதார காலங்களில் வாழ்வாருக்கும் அன்புடையாருக்கும் வெளிப்பட்டு அருள் செய்ய வருகிறான்; ஏனையோருக்குத் தெரியாமல் ஒடுங்கி நிற்கிறான். இந்த இரண்டு இயல்புகளையும் காற்றினிடம் பார்க்கலாம். அதனிடம் வருதலும் ஒடுக்கமும் உள. அவை இறைவனுடைய இயல்புகளில் ஒரு கூறே ஆகும்.
நின், தோற்றமும் அகலமும் நீரின்உள;
நின், உருவமும் ஒலியும்ஆ காயத்துள;
நின்,வருதலும் ஒடுக்கமும் மருத்தின்உள.
நின்னுடைய தோற்றமும் பரப்பும் நீரில் உள்ளன; நின்னுடைய உருவமும் ஒலியும் ஆகாயத்தில் உள்ளன; நின் வருகையும் வாராமல் ஒடுங்கி நிற்றலும் காற்றில் உள்ளன.
தோற்றம் – காணப்படும் காட்சி; ‘வெளிப்படுதல்’ என்பர் பரிமேலழகர். அகலம் – விரிவு; ‘பெருமை’ (பரிமேலழகர்) ‘உருவம்-ஞானக்கண்ணாற் காணப்படும் உருவம். ஒலி- சொல்; ஆகாயத்துள என்றார், அதன் பண்பாகலின். வருதல் -அவதரித்தல். ஒடுக்கம் – மீண்டு சென்று அடங்குதல்’ என்பர் பரிமேலழகர். மருத்து – காற்று.
எல்லாம்
இப்படியே இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம். தீயின் தன்மையாகிய வெப்பம் இறைவனுடைய இயல்பை நினைப்பூட்டுகிறது. மலையின் உயர்வும் கடலின் ஆழமும் மரத்தின் பசுமையும் கல்லின் திண்மையும் மலரின் மென்மையும் பொன்னின் பொலிவும் இரும்பின் வன்மையும் இறைவன் இயல்புகளின் கூறுகளே.யானையின் உயர்விலே அவன் உயர்வையும், சிங்கத்தின் வீரத்தில் அவன் வீரத்தையும், மானின் மென்மையில் அவன் மென்மையையும், அணிலின் சுறுசுறுப்பிலே அவன் இயக்கத் தையும், மயிலின் அழகிலே அவன் அழகையும், குயிலின் குரலிலே அவன் குரலையும், காக்கை யின் சிறகிலே அவன் கருநிறத்தையும் காணலாம். சேற்றிலே நெகிழ்ச்சியும், முள்ளிலே முனையும், வாளிலே கூர்மையும் அவன் இயல்பு களின் அமிசமே. இப்படிப் பார்த்தால் உலகில் உள்ள பொருள்களின் தன்மைகள் யாவும் அவனுடைய தன்மைகளின் கூறுகளே. எல்லாம் அவனிடத்தில் உள்ள தன்மைகளிலிருந்து பிரிந்தவை. ஒடுங்கும்போது அத்தன்மைகள் அவனிடம் ஒடுங்குகின்றன.
புலவர் ஒவ்வொரு பொருளாக எண்ணி அவற்றின் தன்மைகளையும் நினைந்து, அவை இறைவனுடைய தன்மைகளின் கூறுகள் என்றார். கதிரவனையும், திங்களையும், மாரியையும், ஞாலத்தையும், காயாம்பூவையும், நீரையும், வானையும், காற்றையும் நினைத்து அவற்றின் தன்மைகளையும் நினைத்தார். இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போனால் உலகில் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சொல்லலாமே. அப்படிச் சொல்வது என்பது முடிகிற காரியமா? ஆகையால் மேலே வேறு பொருள்களைச் சொல்லாமல், இதுகாறும் நான் சொன்ன பொருள்களும், இவையல்லா மல் இவற்றோடு தொடர்புடையனவாக நினைக் கத்தகும் பொருள்களும், மற்றவையும் ஆகிய எல்லாம் உன்னிடமிருந்து பிரிந்தவை; அதனால் உன் தன்மைகளைப் பெற்றவை. காவலையுடைய உன்னால் பாதுகாக்கப் பெறுபவை. இவை மீட்டும் உன்னிடத்தே ஒடுங்குபவை” என்று சொல்லிவிடுகிறார்.
இதுகாறும் சொன்னவற்றை இவை என்று சுட்டுகிறார். அப்படிச் சொன்னவற்றோடு தொடர்புடையவற்றை உவை என்ற சுட்டால் சுட்டுகிறார். மற்றவற்றை யெல்லாம் அவை என்று கூறுகிறார். இவை, உவை, அவை என்ற மூன்று சுட்டுப் பெயர்களும் மூன்று நிலையில் உள்ளவை. நமக்கு அருகில் உள்ளவற்றை இவை என்று சொல்வோம். இ என்ற சுட்டு அணிமையைக் குறிப்பது. கதிரவன் முதலிய பொருள்கள் நமக்கு அருகில் இல்லாவிட்டாலும், அவற்றைப் பற்றிய நினைவு அணிமையிலே உண்டாயிற்று அல்லவா? அதனால் நெஞ்சுக்கு அணிமையாகிய அவற்றை இவை என்று சுட்டுவதில் தவறு இல்லை. [‘இவன் என்றார், தம் கருத்துக்கண் அணுமையான்’ என்று புறநானூற்று உரையாசிரியர் (72:2) எழுதியது இங்கே நினைப்பதற்குரியது. ]பாட்டில் புலவர் இவ் என்று சொல்கிறார். இவ் என்பது இவை என்ற பொருளையுடைய சொல். தாம் நினைத்த பொருளோடு சேர்த்து எண்ணும் பொருள்கள் சில உண்டு. ஞாயிற்றையும் திங்களையும் சொன்னவர் அவற் றிற்கு இனமாகிய மற்றக் கோள்களையும் நினைப்பது இயல்பு. நீர், நிலம், காற்று, வான் என்பவற்றோடு தீயையும் சொல்லலாம். காயாம் பூவோடு பிற மலர்களை யெல்லாம் சொல்லலாம். முன்னே சொன்னவற்றை ஒட்டிச் சொல்லத் தக்க இவற்றைப் போன்ற பொருள்களை உவ் என்று சுட்டினார். நினையாதவற்றை அவ் என்று சுட்டினார். என்ன இருந்தாலும் மனிதன் மனத்தினால் நினைக்க முடியாதவையும் பல உண்டு. அவற்றிலும் இறைவன் தன்மை உண்டு. அவற்றை யெல்லாம் பிற என்ற சொல்லிலே அடக்கினார். “எல்லாம் உன்னிடமிருந்து பிரிந்து உன்னிடமே ஒடுங்குவன” என்கிறார்.
அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து
மேவல் சான்றன, எல்லாம்;
சேவல் ஓங்கு உயர்கொடி யோயே !
(இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் உள்ள தன்மைகள் நின்னுடைய தன்மைகளின் கூறு என்று தெரியும்) அக்காரணத்தால், இதுகாறும் கூறிய பொருள்களும், இவற்றோடு தொடர்புடைய பொருள்களும், தொடர்பில்லாப் பொருள்களும், பிற பொருள்களுமாகிய எல்லாம் காவல் செய்யும் அருள் நிரம்பிய நின்னிடமிருந்து பிரிந்து மீட்டும் நின்னிடத்திலே பொருந்துதல் அமைந்தன; ஆண் கருடனாகிய ஓங்கிய உயர்வை யுடைய கொடியை உடையவனே !
அதனால்: மேலே ஒவ்வொரு பொருளிலும் இறைவன் தன்மை உளவாதலைக் கூறினார். அவ்வாறு பொருளின் கண் உள்ள தன்மைகள் அவனுடைய தன்மைகளாவதனால் என்று பொருள் கொள்ளவேண்டும். இவ்-இவை. உவ் – உவை. அவ் – அவை. உவ் என்பது இடையிலுள்ள வற்றையும் மேலுள்ளவற்றையும் புலப்படுத்தும். அவ் என்பது சேய்மையில் உள்ளவற்றைச் சுட்டும். ‘இவை யென்றது நணியவற்றை; உவையென்றது அவற்றிற் சேய வற்றை; அவையென்றது அவற்றினும் சேயவற்றை; பிறவென்றது காணப்படாதவற்றை’ (பரிமேலழகர்.) ஏமம் – பாதுகாப்பு; இன்பம் என்றும் சொல்லலாம். ஆர்ந்த – பொருந்திய. பிறவுமாகிய எல்லாம் சான்றன என்று கூட்டுக. மேவல் – மீட்டும் நின்னிடத்தே ஒடுங்குதல். சான்றன – அமைந்தன. சேவல் – கருடன்.
உலகத்துப் பொருள்கள் யாவும் இறைவனால் படைக்கப் பெற்று, அவனாலே பாதுகாக்கப் பெற்று, அவனிடத்திலே ஒடுங்குவன. படைப்பு, காப்பு, அழித்தல் என்ற மூன்றையும் இறைவன் செய்கிறான். ‘நிற்பிரிந்து’ என்றதனால் படைத்தலையும், ‘ஏமம் ஆர்ந்த நின்’ என்றதனால் காத்தலையும், ‘மேவல் சான்றன’ என்றதனால் அழித்தலையும் குறிப்பிட்டார். ‘என்றது, உலகுயிர்களின் தோற்றமும் நிலை பேறும் ஒடுக்கமும் நின்கண்ண என்றவாறாம். என்று பரிமேலழகர் எழுதியிருக்கிறார்.
கொடியின் இயல்பு
“சேவலோங்கு உயர் கொடியோயே!” என்று கூறியவுடன் புலவருக்கு அந்தக் கொடியைப் பற்றிய எண்ணம் விரிகிறது. திருமாலின் அவதாரம் பல. அவற்றுள் ஒவ்வோர் அவதாரத்தில் ஒவ்வொரு கொடியை உடையவனாக விளங்கினான். ஆயினும் நாராயணமூர்த்திக்கு என்றும் உள்ள கொடி கருடக் கொடி. மற்றக் கொடிகள் பல இருந்தாலும் ஒப்பற்றதாக ஓங்கி நிற்பது கருடக் கொடி. கொடியாகவும் ஊர்தியாகவும் இருக்கும் கருடன் மிக்க சிறப்புடையவன். திருமாலின் அடியவர்கள் அவனைப் பெரிய திருவடி என்று சொல்லுவார்கள்.
சேவற் கொடியையுடைய திருமாலுக்கு வேறு என்ன என்ன கொடிகள் அவதார காலங்களில் இருந்தன ? பலராமனாக வந்த போது அவன் பனைக் கொடியை உடையவனாக இருந்தான். அதனால் தாலகேது என்ற பெயர் அவனுக்கு வந்தது. நாஞ்சிலாகிய கலப்பைக் கொடியும் யானைக் கொடியும் அவனுக்கு உண்டு. ஆனாலும் அவை யாவும் ஒப்பில்லாத ஒரு கொடியாகி நிற்கும் தன்மையுடையன அல்ல. எக்காலத்தும் ஒரே கொடியாக, எவ்விடத்தும் உயர்ந்து ஓங்கி நிற்பது கருடக் கொடிதான். மற்றவற்றிற்கு அப்படி ஒன்றாக உயர்ந்து நிற்கும் சிறப்பு இல்லை.
நின்ஒன்று உயர்கொடி பனை;
நின்ஒன்று உயர்கொடி நாஞ்சில்;
நின்ஒன்று உயர்கொடி யானை;
நின், ஒன்றா உயர்கொடி ஒன்று இன்று.
சேவல் ஓங்கி உயர்ந்திருக்கும் கொடியையுடைய நினது உயர்ந்த கொடி ஒன்று பனை; நின் உயர்ந்த கொடி மற்றொன்று கலப்பை; நின் உயர்ந்த கொடி பின்னும் ஒன்று யானை; (இப்படிப் பல கொடிகள் இருந்தாலும்) நின்னுடைய கொடி ஒன்றேயாக, உயர்ந்த கொடி இவற்றுள் ஒன்றும் இல்லை.
உயர்கொடியையுடைய நின் என்று கூட்டுக. உயர் கொடி ஒன்று பனை என்று பொருத்தவேண்டும். நாஞ்சில்- கலப்பை. ஒன்று இன்று – மேற்கூறியவற்றுள் ஒன்றும் இல்லை. ‘இவ்வண்ணம் பல கொடியுளவேனும், நின் ஒன்றாக உயர்ந்த கொடியை அக்கொடிகள் ஒன்றுதல் இன்று. ஒன்றாதல் – முதலாதல். ஒன்றுதல் – ஒத்தல்’ என்பது பரிமேலழகர் உரை.
அவனுடைய கொடிகளுள் பிறவற்றிற்கு இல்லாத சிறப்பை உடையதும், ஒன்றாக உயர்ந்ததும் ஆகிய கருடக் கொடியின் பெருமையை அளவிட்டுச் சொல்ல இயலாது. அந்தக் கொடியின் மிசையிருந்து காட்சிதரும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும் இருக்கிறவன். திருமாலின் அங்க அடையாளங்களின் பெருமையைச் சொல்லும்போது அப்பெருமா னுடைய கொடியில் இருக்கும் கருடனுடைய பெருமையை எண்ணிப் பார்ப்பது பொருத் தந்தான்.
கருடன் என்றாலே அஞ்சுவது பாம்பு. பாம்புக் குலத்துக்குப் பகை கருடன். விடத்தையுடைய நாகங்களின் உயிர் குடிப்பது; அவற்றின் உடம்பையும் விழுங்குவது கருடன். அது மாத்திரமா? மற்றவர்களுக்கெல்லாம் பாம்பென் றால் அச்சம். “பாம்பென்றால் படையும் நடுங்கும்” அல்லவா? ஆனாலும் கருடன் அந்தப் பாம்புக்கு அஞ்சாதவன். வேண்டிய படியெல்லாம் பாம்புகளை உபயோகப்படுத்திக் கொள்கிறான்.
கருடனை அது என்று சொல்வதைவிட அவன் என்று சொல்வதுதான் தக்கது. இறைவனுக்குக் கொடியாக நிற்கும் பேறுடையவன் அல்லவா? கருடன் என்று உயர்திணைப் பெயரைப் படைத்தவன் ஆயிற்றே. அவனுடைய வயிற்றின் மேல் உதரபந்தனமாக ஒரு பாம்பைக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன் கையிலேயும் தோளிலும் வளைவாக இட்டிருப்பவை பாம்புகளே. முடியின் மேலும் பாம்புகள் இருக்கின்றன. பாம்பையே அணிகளைப் போலப் பூண்டிருக்கிறான். அவன் தலைமேலே குடைவிரித்தாற் போலப் பாம்பு இருக்கிறது. பகைவர்களை ஏவலாளராக வைத்துக் கொள்வது அரசர்களுக்கு இயற்கை. புள்ளரசனாகிய கருடன் பாம்புக் குலத்தைப் படுத்தும் பாடு சொல்லத் தரமன்று. என்ன என்னவோ விதமாக வேலை வாங்குகிறான். அவற்றைச் சிறகுகளில் தொங்கவிட்டிருக்கிறான். சிறகுகளின் தலைப்பிலே பூணைப் போலப் பொருத்திக் கொண்டிருக்கிறான்.
விடமுடை அரவின்உடல் உயிர்உருங்கு உவணம் அவன், மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்புதொடி; பாம்பு முடிமேலன;
பாம்புபூண்; பாம்பு தலைமேலது;
பாம்புசிறை; தலையன பாம்பு.
விடத்தையுடைய பாம்பின் உடலையும் உயிரையும் விழுங்கும் கருடன் (அந்தக் கொடியில் இருப்பது); அவனுடைய வயிற்றின் மேல் கட்டியிருப்பது பாம்பு; பாம்பே அவனுக்கு வளையாக இருப்பது; பாம்பு முடிமேல் இருப்பவை; பாம்பே ஆபரணங்கள்; பாம்பே தலைக்கு மேலே இருப்பது; பாம்பே சிறையில் இருப்பவை; சிறையின் தலைப்பில் இருப்பவை பாம்பு.
உருங்கு – உண்ணும். உவணம் – கருடன். ‘அது கட வுட் கொடியென்பது தோன்ற அவன் என உயர்திணையாற் கூறினார்’ என்பர் பரிமேலழகர், மடி-வயிறு, வலந்தது-கட்டியது. தொடி- கைவளை, தோள்வளை. பூண் – ஆபரணம். சிறை – சிறகு. தலையன – சிறகின் தலைப்பில் உள்ளவை.
திருமால் பகைவர்களுடைய செருக்கை அழிப்பவன். அவனுடைய கொடியாக உள்ள கலுழனும் தன் பகையை அழிப்பவன். அவ னுடைய பொன்னாபரணங்கள் பாம்புகளே. அவன் தாக்கி அலைத்து இரையாகக் கொள்பவையும் பாம்புகளே.
படிமதம் சாய்த்தோய்! பசும்பூண்அவை;
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரை யதுபாம்பு.
பகைவர்களின் செருக்கை அழித்த திருமாலே! கருடனுக்குப் பசும் பொன்னாலான பூண்களும் அந்தப் பாம்புகளே; நின் கொடிமேல் இருந்தவனாகிய அவன் தாக்கிக் கொன்று உண்ணும் இரையும் பாம்பே.
படி -பகை, மதம்- செருக்கு. சாய்த்தாய் – அழித்தவனே. பசும்பூண் -பொன்னாலான அணி. பசுமை, பொன்னைக் குறிக்க வந்தது,
‘இதனால் கருடனுக்கு அறனுடைமையும் மறனுடை மையும் கூறப்பட்டன’ (பரிமேலழகர் உரை.)
பகையும் நட்பும் இன்மை
இவ்வாறு பாம்புகளை அணியாகவும் குடை யாகவும் இரையாகவும் கொள்ளும் கருடனைக் கொடியாகக் கொண்ட திருமாலும் சிலரை அழித்தான்; துன்புறுத்தினான். அவர்களிடத் திலே அவனுக்குப் பகைமை உண்டா?
இராவணன், இரணியன் முதலியவர்களை இறைவன் அழித்தான். அவர்களிடத்தில் உள்ள குற்றத்தைக் கண்டு அவர்கள் வருந் தும்படி வெகுண்டு துன்புறுத்தினான். விபீடனனையும் பிரகலாதனையும் பாதுகாத்தான். இப்படியே குற்றமுடையோரைத் தடிதலும் அன்புடையோரைப் பாதுகாத்து அருளுதலும் அவன்பால் உண்டு என்பதைப் பழைய வரலாறுகள் சொல்கின்றன. ஆதலால் இறைவனுக்குப் பகைவர் இன்னார், நண்பர் இன்னார் என்ற வேறுபாடு உண்டோ? இந்த ஐயம் சிலருடைய உள்ளத்தில் எழலாம். மனிதர் களுக்குப் பகைவரும் ஈண்பரும் இருப்பது போல இறைவனுக்குப் பகைவரும் நண்பரும் இருக்கிறார்கள் என்று சொல்லலாமா ?
இறைவனுக்கு அரக்கர் அத்தனை பேரிடமும் பகை உண்டு என்று சொன்னால் இராவணன், கரன், கும்பகர்ணன் முதலியவர்கள் திறத்தில் அது உண்மையாகும். இராவணன் பகைவன் என்றால், அவனைச் சார்ந்த யாவருமே பகைக் குழுவினரே. ஆனால் அவன் தம்பியாகிய விபீடணன் இறைவனுடைய அருளைப் பெற்றான். பகைவனுடைய தம்பி என்ற நினைவு இருந்தால் அவனுக்கு அருள் கிடைத்திராது. அப்படியே பிரகலாதனுக்கு அருள் செய்த இறைவன் அவனிடம் அபிமானம் கொண்டிருந்தால் அவன் தந்தையை அழிக்காமல் இருக்க வேண்டும். பிரகலாதன் தன் தந்தையென்ற நினைவோடு இகழாதிருந்த போது இறைவன் தோன்றி இரணியனை இகழ்ந்து கொன்றான். இரணியனிடம் பகைமை இருந்தது என்றால் அவன் மகனுக்கு அருள் செய்வது மனித உணர்ச்சியோடு பொருந்துவது அன்று. கண்ணனாகத் திருவவதாரம் செய்தபொழுது தன் சொந்த மாமனை அழித்தான். மாமன் என்ற உறவு, அபிமானத்தை மிகுதியாகப் பெற்ற உறவு. அப்படியிருந்தும் மாமனாகிய கம்சனைக் கொன்றான் கண்ணன். ஆதலின் இறைவனுக்குப் பகையென்றும் நட்பென்றும் வரையறையில்லை யென்றே தோன்றுகிறது.
அப்படியானால் ஏன் சிலருக்கு அருளையும் சிலருக்கு வருத்தத்தையும் தருகிறான்?
சூரியன் வானத்தில் உதயமாகிறான். அதன் முன் உலகமே களிக்கூத்தாடுகிறது. சூரியனுக்குப் பகைப் பொருள் இது, நட்புப் பொருள் இது என்று அவற்றைச் சொல்ல முடியாது. ஆனால் சூரியன் உதயமாகும்போது தாமரை மலர்கிறது; நீலமலர் கூம்புகிறது. சூரியன் தாமரையினிடம் இனிய கதிர்களையும்,நீல மலரினிடம் இன்னாத கதிர்களையும் வீசுவதில்லை. அதன்கதிர்கள் யாவும் ஒரே தன்மையன. அதில் பகைத் தன்மையும் நட்புத் தன்மையும் இல்லை. ஆயினும் தாமரையினிடம் மலர்ச்சியையும், நீல மலரிடம் குவிவதையும் அந்தக் கதிர்கள் உண்டாகச் செய்கின்றன. கதிரவனுடைய கிரணங் களால் பனிக் கட்டியிலிருந்து நீர் சுரக்கிறது. சூரிய காந்தத்திலிருந்து நெருப்பு உண்டாகிறது. இரண்டு பொருள்களிடத்தும் வீசும் கதிர் ஒன்றேதான். வெங்கதிரோன் வீசும் வெயிலால் கடல் நீர் உப்பக் கட்டியாக மாறுகிறது; கட்டி நெய்யோ உருகி ஓடுகிறது. சூரியன் தாமரைக்கும் பனிக்கட்டிக்கும் நண்பன் என்றும், நீல மலருக்கும் சூரிய காந்தத்துக்கும் பகைவன் என்றும் சொல்லலாமா? சொல்வது பொருத்தம் அன்று.
பின், இந்த வேறுபட்ட விளைவுகள் உண் டாவதற்குக் காரணம் என்ன? சூரியனுடைய கதிரின் தன்மை ஒன்றாகவே இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பொருளின் தன்மைக்கு ஏற்றபடி விளைவு உண்டாகிறது. சூரியன் மலர்களுக்கு நட்புப் பூண்டவன் என்று சொல்ல இயலாது, நீலோற்பலத்தைக் குவிய வைப்பதனால் பகைவன் என்று சொல்ல இயலாது, தாமரையை மலர வைப்பதனால். தாமரையின் இயல்பு சூரியன் கதிர்களைக் கொண்டு மலரும் இயல்பு; நீல மலரின் பண்பு கதிரவன் கதிர்களுக்குமுன் கூம்புவது. ஆதலின், மலர்தலும், கூம்புதலுமாகிய வேறுபாடு களுக்குரிய வெவ்வேறு காரணம் கதிரவன் கதிரில் இல்லை; மலர்களின் தன்மையில் இருக்கிறது.
இறைவனுடைய திருவருளும் அத்தகையதுதான். பொல்லாதவர்களுக்கு அவன் அருள் வெகுளியாக விளைகிறது; துன்பமாக வருகிறது. நல்லவர்களுக்கு ஆதரவாக விளைகிறது; இன்பமாக வருகிறது. மக்கள், தேவர், அரக்கர், அசுரர் யாராயிருப்பினும் ஒரு சாதியோ, குலமோ, கூட்டமோ அவனுடைய ஆதரவுக்கும் வெகுளிக்கும் உரியது என்று சொல்வது உண்மை அன்று. அவர்களுடைய தன்மைதான் இந்த இருவகை விளைவுகளுக்கும் காரணமாக இருப்பது. பிறருக்குத் தீங்கு புரியும் வெம்மையுடையோர், பாவம் செய்வோராவார். பாவத்தை மறம் என்றும் சொல்லலாம். மறம் புரிவோருடைய மறமே இறைவன் திருமுன் வருத்தமாக விளைகிறது. புண்ணிய மாகிய அறம் உயிர்களுக்கு இனியது; தண்மையானது. அந்தத் தண்ணிய இயல்புடையோருடைய இயல்பே இறைவன் திருமுன் இன்பமாக விளைகிறது.
வெம்மை உடையவர்களுடைய கடுமையான குற்றத்தைக் கண்டு அவர்கள் வருந்தும்படியான வெகுளியை இறைவன் தோற்றுவிக்கிறான்; விருப்பம் இல்லாதவனைப் போல, பட்சபாதம் உடையவனைப் போல, தோற்றுகிறான். வெம்மையாகிய மறம் இல்லாதவரிடத்துக் கடுப்பும் கோட்டமும் (பட்சபாதம்) இல்லாதவனைப்போலத் தோற்றுகிறான். அப்படியே தண்மை உடையவர்களுக்கு அருள் செய்பவனைப் போலவும் நடுநிலையில் இருப்பவனைப் போலவும் விளங்குகிறான். அது இல்லாதவர்களிடம் அவை இல்லாதவனைப் போலத் தோற்றுகிறான்.
இவ்வாறு அவரவர்களுடைய அறத்துக்கும் மறத்துக்கும் ஈடாகக் கடுத்தலும் நல்கலும் இறைவனிடம் விளைகின்றனவே அன்றி, தன்னைப் போற்றாதவர்களென்ற காரணத்தால் அவர்கள் உயிரைப் போக்குதல் இறைவன் இயல்பு அன்று; தன்னைப் போற்றுகிறவர்கள் என்பதற்காக அவர்களுடைய உயி ரு இன்பம் செய்தலும் அவன் இயல்பு அன்று. அவன் அருள் எல்லோருக்கும் பொதுவானது. அறம் செய்தாருக்கு அந்த அருள் இனிதாக இருக்கிறது;மறம் செய்தாருக்குக் கொடியதாக இருக்கிறது.
இறைவன் நல்லோருக்கு அருள்வதையும் அல்லோரை அடக்கி வருத்துவதையும் கருணையின் இரு வேறு பகுதிகள் என்றே சொல்ல வேண்டும். நல்ல குழந்தைக்குத் தின்பண்டம் தந்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் தாய், பொல்லாத குழந்தையை அடித்துச் சோறு கூடப் போடாமல் இருக்கிறாள். இந்த இரு வகைச் செயல்களுக்கும், தன் பிள்ளைகள் நல்லவர்களாக வளரவேண்டும் என்ற தாயன்பே காரணம். தோற்றத்தில் ஒன்று இனிதாகவும் மற்றொன்று கொடிதாகவும் இருந்தாலும் இரண்டுக்கும் மூலம் அன்புதான். அப்படியே இறைவன் நன்மையருளி இன்பந் தருவதற்குக் காரணமாகிய கருணையே, அல்லோருக்குத் துன்பந்தந்து ஒறுத்தலுக்கும் காரணம் ஆகிறது. இரண்டும் வெவ்வேறு செயலாக, ஒன்றற்கு ஒன்று மாறுபட்டனவாகத் தோற்றினாலும் கருணையின் விளைவுகளே. இனியதைத் தருகின்ற கருணையை அறக் கருணை யென்றும், இன்னாததைத் தருகின்றதை மறக்கருணை யென்றும் பெரியோர் கூறுவர்.
வானம்எங் கேஅமுத பானம்எங் கேஅமரர்
வாழ்க்கை அபி மானம் எங்கே
மாட்சிஎங் கே அவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
மன்னன் அர சாட்சி எங்கே
ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கே அந்த
நான்முகன் விதித்தல் எங்கே
நாரணன் காத்தலை நடாத்தலெங் கேமறை
நவின்றிடும் ஒழுக்கம் எங்கே
ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
இலக்கமுறு சிங்க முகனை
எண்ணரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
ஈந்துபணி கொண்டிலைஎனின்.
தானம் இங் கேர்சென்னைக் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
என்பதில் இராமலிங்க வள்ளலார், சூரன் முதலியோரை முருகன் சங்கரித்தருளின செயலை மறக்கருணை என்று சொல்கிறார்.
இவ்வாறு, எல்லாம் இறைவன் அருளின் விளைவே என்று சொல்வதற்குக் காரணம் என்ன? அவனுக்கு எந்த உயிரினிடத்தும் பகையோ, சிறப்பான விருப்போ இல்லை. அவனுக்குப் பகைவரும் இல்லை; நண்பினரும் இல்லை. இறைவன் அசுரரை அழித்தான், அன்பரைக் காத்தான் என்று சொல்லும் வரலாறுகள் யாவும் இந்த இயல்புக்கு முரணானவை அல்ல. இந்த உண்மையைச் சற்றே சிந்தித்துப் போற்றி உணரவேண்டும். இல்லையானால் தெளிவு பிறவாது. இரணியனை நரசிங்கனாதி அழித்தான், பூமியை வராகமாகி எடுத்தான் என்று முன்னே புகழ்ந்துவிட்டு, “அவனுக்குப் பகைவரும் இல்லை; கேளிரும் இல்லை” என்று சொன்னால், இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டது போலத் தோற்றலாம். ஆனால் முன்னே சொன்ன நியாயங்களை யெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால் வேற்றுமை இன்று என்று விளங்கும்.
கடுநவை அணங்கும் கடுப்பும் நல்கலும் கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும் போற்றுதர் உயிரினும் மாற்றுஏம் ஆற்றல் இலையே; நினக்கு மாற்றோ ரும் இலர் கேளிரும் இலர்எனும்,
வேற்றுமை இன்று, அது போற்று நர்ப் பெறினே.
கடுமையான குற்றத்துக்காக வருத்தும் கோபமும், அருள் செய்தலும், ஒருபாற் கோடித் தண்டிக்கும் கொடுமையும், நடுநிலையும் ஆகிய இவை பாவமும் புண்ணியமும் உள்ளவிடத்து உடையாய்; இல்லாத இடத்து இல்லாய். உன்னை வழிபடுவார் உயிருக்கும், வழிபடாதார் உயிருக்கும் மாற்றி அழித்தலைச் செய்வதும் இன்பம் செய்வதும் உன்பால் இல்லை. நினக்குப் பகைவரும் இல்லை; நட்பினரும் இல்லை; என்றாலும் (முன்னே சொன்னவற்றிற்கும் இதற்கும்) வேறுபாடு இல்லை, அதை ஆராய்ந்து கொள்வாரைப் பெற்றால்.
கடுநவை அணங்கும் கடுப்பு – கடுநவையின் பொருட்டு வருத்தும் கோபம்; நவை – குற்றம்; அணங்குதல்- வருத்துதல்; கடுப்பு-கோபம். நல்கல் – அருள் செய்தல். கொடுமை – கோடுதல். செம்மை – நடுநிலை. வெம்மை – மறம்; பாவச்செயல். தண்மை – அறம்; புண்ணியச்செயல். உள் வழி – அவற்றை உடையோரிடம். இல்வழி – இல்லாதாரிடம்.
வெம்மை உடையோரிடம் கடுநவை அணங்கும் கடுப்பும் கொடுமையும் உடையாய்; இல்வழி இலை. தண்மை யுடையோரிடம் நல்கலும் செம்மையும் உடையாய்; இல்வழி இலை என்று முறையே கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.
போற்றார் – பகைவர். போற்றுநர் – வழிபடு வோர். மாற்று – மாற்றுதல்; போக்குதல். ஏம் ஆற்றல் – இன்பத்தைச் செய்தல். மாற்றோர் – பகைவர். கேளிர்-நண்பர். எனினும் என்பது எனும் என்று விகாரப்பட்டு நின்றது. போற்றுநர் பெறின் – ஆராய்ந்து தெளிந்து கொள்பவரைப் பெற்றால். போற்றுவாருக்கு இவ்விரண்டினுள்ளும் வேற்றுமை இல்லையென்று விளங்கும் என்பது கருத்து.
‘என்றது,குற்றமாகிய மறமுடையாரிடத்து வெகுளியும் கோட்டமும் உடையையாய் அஃது இல்லாரிடத்து இல்லை யாதலும், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும் செம்மையுமுடையையாய் அஃது இல்லாரிடத்து இல்லையா தலுமல்லது, நினக்குப் பகையாயினார் உயிரின்கண் அதனை மாற்றுதல் தொழிலும், நினக்குக் கேளிராயினார் உயிரின் கண் அதற்கு ஏமஞ் செய்தற்றொழிலும் உடையை யல்லை அவ்விருதிறத்தாரும் நினக்கு இன்மையான் என்றவாறு’ என்றும், ‘உயிர்களது இயல்பான் நினக்குப் பகையும் நட்பும் உளபோலத் தோன்றுவதல்லது நின் இயல்பான்’ அவை உளவல்ல என்றவாறாம்’ என்றும் எழுதுவர் பரிமேலழகர்.
இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன்; “வேண்டுதல் வேண்டாமை யில்லான் அடி சேர்ந்தார்க், கியாண்டும் இடும்பை யில ” (குறள்) என்பது வள்ளுவர் வாக்கு. ஆகவே விருப்பிற் குரிய கேளிரும் வெறுப்புக்குரிய பகைவரும் அவனுக்கு இல்லை.
மூவகை நிலை
திருமால் பொறிகளால் உணரும் உருவம் இல்லாதவனாகவும், அன்பர்கள் அவனருளே கண்ணாகக் காணும்போது சிலவகை உருவங் களை உடையவனாகவும், இயற்கையாக அமைந்த பொருள்கள் யாவுமே தன்னுடைய வடிவாகப் பெற்றவனாகவும் இருக்கிறான். இந்த மூன்று வகை நிலையையும் புலவர் பாடுகிறார்.
அப்பெருமானுக்கு மனத்தினாலே பற்றிக் கொள்வதற்குரிய வடிவு என்று தனியாக ஒன்று இல்லை. அவன் மனத்துக்கும் அப்பாற் பட்டவன்; பொறிகளால் உணரப்படாதவன். மனக்கோள் நினக்குஎன வடிவுவேறு இலையே.
நினக்கு என்று மனத்தினால் பற்றிக்கொள்ளுவதற்கு அமைந்த வடிவம் தனியே ஒன்றும் இல்லை.
மனக் கோள் வடிவு என்று கூட்டுக. கோள் – கொள்ளுதல். வடிவு – கை கால் முதலியவற்றோடு கூடிக் கண்ணுக்குத் தோற்றுவதாக அமைந்த உருவம்.
‘அன்பர் மனத்திற் கொண்டனவன்றி, நினக்கென வேறு வடிவு உடையை அல்லை.’ (பரிமேலழகர்)
எப்போதும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தோடு இருப்பவனானால் அவனுக்கு அதுவே வடிவம் என்று சொல்லலாம். ஒருவன் நாடகத்திலே பல வேடம் புனைபவனாக இருந்தாலும் அத்தனை கோலங்களும் அவனுடையன அல்ல. தனக் கென்று அமைந்த வடிவம் உண்டானால் அது ஒன்றாகத்தான் இருக்க முடியும். திருமாலுக்குப் பல வடிவங்கள் உண்டு என்று சொல்லும் போது குறிக்கும் வடிவங்கள் அன்பர்களுக்கு அருள் தரும் பொருட்டு மேற்கொண்டவை களே. நாடகம் ஆடுவோன் நாடக ரஷிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வெவ்வேறு கோலம் புனைவது போன்றது இது. ஆதலின் தனக்கென்று வரையறையாக யாவரும் கண்ணாற் காணும் ஒரே வடிவம் அவனுக்கு இல்லை என்றார்.
அப்படி இல்லையாயினும் அவன் அருள் பெற்றார் காணும் அழகிய வடிவங்கள் அவனு டையனவே; அவன் வேண்டுமென்று மேற் கொள்வனவே. அவற்றின் அழகை உவமை யோடு சார்த்தி எண்ணிப் பார்க்கிறார் புலவர்.
திருமால் இருள் போன்ற கரு நிறமுடை யவன். ஆனால் நம்முடைய கண்ணை மறைக்கிற இருளை அதற்கு உவமை சொல்லலாமா? இருளில் இல்லாத கவர்ச்சி அவன் மேனிக்கு உண்டு. இந்த இருளை நாம் ஏற்றுக்கொள்வ தில்லை. நமக்கு விருப்பமில்லாத துன்பத்தை இருள் என்று சொல்கிறோம். ஆனால். இறைவ னுடைய திருமேனியோ பல முறை கண்டு மகிழ் வதற்குரியது. நாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதாக ஓர் இருட்டு இருக்குமானால் அதை அப் பெருமான் திருமேனிக்கு உவமை சொல்ல லாம்; அந்த இருளின் இருக்கையென்றே அவன் திருமேனியைக் கூறலாம். [“அல்லையாண்டு அமைந்த மேனி அழகன்” என்பது கம்பர் வாக்கு. ] அழகிய நீல மணியையும் சொல்லலாம்.
கோள் இருள் இருக்கை, ஆய்மணி மேனி.
உவந்து ஏற்றுக் கொள்ளுதலையுடைய இருட்டின் இருப்பிடம்,ஆய்ந்தெடுத்த நீல மணி நின் திருமேனி.
கோள் கொள்ளுதல். கோள் இருள் என்பது இல் பொருள் உவமை. மேனி-நிறம். ‘கண்ணைக் கொள்ளு தலையுடைய இருக்கு இடமாய நீலமணி போலும் மேனி’ என்பது பரிமேலழகர் உரை.
அந்தத் திருமேனியில் திருமால் துழாய் மாலையை அணிந்திருக்கிறான். அம் மாலையில் திருத் துழாயின் மலரும் இருக்கிறது. கட்டு விட்டு அலர்ந்த பூவோடு கூடிய திருத்துழாய் மாலை அது அதன் வாசனை நெடுந் தூரத்துக்கு வீசுகிறது.
துளவத்தின் இலையும் மலரும் சேர்ந்த கொத்துக்களை மாலையாகக் கட்டியிருக்கிறார்கள்.
நக்கு அலர் துழாஅய் நாறுஇணர்க் கண்ணியை,
வெடித்து அலர்ந்த மலரோடு கூடிய துளவத்தின் மணம் வீசும் கொத்துக்களாற் கட்டிய மாலையை உடையாய்.
நக்கு – கட்டுவிட்டு; வெடித்து. அலர் துழாய் என்பதைத் துழாய் மலரென்றே கொள்ளுவதும் பொருந்தும். இணர் – கொத்து. கண்ணியென்றது தலையிற் சூடும் சிறிய மாலைக்குப் பெயரானாலும் இங்கே பொதுவாக மாலையைக் குறித்து நின்றது.
‘மேனியிலே கண்ணியை உடையாய்’ என்று கூட்டியும் பொருள் கொள்ளலாம்.
அவனுடைய திருமார்பிலே துழாய் மாலை கிடந்து புரள்கிறது. அதனூடே பார்த்தால் அம்மார்பில் திருமகள் வீற்றிருத்தலைக் காணலாம். அவள் அவன் கரிய திருமார்பிலே ஒரு சிறிய மறுப் போல இருக்கிறாள். மறுவானாலும் அழகு தருவது; புனைமறு. அது பொன்னிறம் வீசுவது. திருமகள் பொன் நிறத்தவள் அல்லவா?
பொன்னிற் றோன்றிய புனைமறு மார்ப!
பொன்னைப் போலத் தோற்றம் அளிக்கும், புனைந்தது போன்ற, திருமகளாகிய மறுவையுடைய மார்பனே !
புனை – அலங்கரித்தாற் போன்ற. திருமகளாதலால் புனை மறு என்றார்’ (பரிமேலழகர்.) திருமகளே மறுவாக இருத் தலின், “திரு மறு மார்பு” (பெரும்பாணற்றுப்படை, 29) என்று பிற புலவரும் கூறினர். இதனை ஸ்ரீ வத்ஸமென்பர் வடி மொழியாளர்.
அவனுடைய திருமேனியையும் மாலையையும் மார்பையும் சொன்ன பிறகு மேலும் சொல்ல ஆசைப்படுகிறார் புலவர். ஆனால் ஒவ்வோர் அங்கமாகச் சொல்லிக் கொண்டே போனால் மிக மிக விரிவாகச் சொல்லவேண்டியிருக்குமே. அவன் திருவுருவத்தை உள்ளக் கண்ணிலே நிறுத்திப் பார்க்கிறார். மேலும் கீழும் பார்க்கிறார். மேலே பளபளவென்று ஒளி விடும் திருவிழிகளையும் கீழே யாவர்க்கும் பற்றுக் கோடாக இருக்கும் திருவடிகளையும் காண்கிறார். அவை இரண்டையும் சொல்லி அவனுடைய திருவுருவ வருணனையை நிறைவேற்ற எண்ணுகிறார் புலவர்.
அவனுடைய கண்ணுக்கு எதை உவமை கூறலாம். கமலக் கண்ணன் அல்லவா? தாமரையைத்தான் சொல்லவேண்டும். உலகில் சேற்றிலே முளைக்கும் தாமரையைச் சொல்ல அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. சேற்றிலே முளைக்காத தாமரை ஒன்று இருந்தால் அதைச் சொல்லலாம். அப்படி ஒன்று இருக்கிறதா? தாமரை சேற்றிலே தோன்றுவதனால்தான் பங்கயம் என்று பெயர் பெற்றது. பங்கயம் அல்லாத தாமரை ஏது?—புலவர் யோசித்துப் பார்க்கிறார். சேற்றிலே முளைக்காத தாமரை ஒன்றை அவர் கண்டுபிடித்துவிட்டார். அது உலகிலுள்ள தாமரைகளைப் போன்றதன்று, அது தோன்றிய இடமும், அதனை இடமாகக் கொண்ட பொருளும் மிக மிகச் சிறப்பானவை.
அவனுடைய திருவுந்தியிலே தோன்றிய தாமரையைப் பங்கயம் என்று சொல்ல முடி யுமா? அது சேற்றில் முளைக்காத தாமரை; அடுக்கடுக்காக இதழ்களையுடைய தாமரை; தாமரையின் இலக்கணம் ஒன்றும் குறைவின்றி மலர்ந்த தாமரை. அதைத்தான் அளப்பரியவ னாகிய அப்பெருமானுடைய கண்ணுக்கு உவமை சொல்ல வேண்டும்.
நின்னிற் றோன்றிய நிரைஇதழ்த் தாமரை
யன்ன நாட்டத்து அளப்பரியவை.
நின்னிடத்திலே (உந்தியில்) தோன்றிய வரிசையான இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற கண்ணையுடைய, அளத்தற்கு அரியை.
நிரை – வரிசை. இந்தத் தாமரையில் பிரமன் தோன்றினான். நாட்டம் – கண். அளப்பரியை என்பது அளப்பரி யவை எனச் செய்யுளை நோக்கி வந்தது; ஓர் அகரம் இடையிலே புதிதாகச் சேர்ந்திருக்கிறது. ‘இசை நிறையும் இடைச் சொல்’ (பரிமேலழகர்) .
அவனுடைய திருவடிக்கு எதனை உவமை யாகச் சொல்வது? அதற்கு உவமை சொல்லி முடியாது. இறைவனுக்காவது உவமை சொல்லலாம். அவன் திருவடிக்குச் சொல்வது அரிது. ‘அவனுடைய அங்கந்தானே அது?’ என்று கேட்கலாம். அவன் திருவுருவத்தில் திருவடி ஓர் அங்கந்தான். அவனுக்கு அது அங்கம். நமக்கோ அவனுடைய உருவம் முழுவதும் தெரியாது; தெரியவேண்டிய அவசியமும் இல்லை. நமக்குப் பற்றுக்கோடாக இருப்பது அவ னுடைய திருவடிதான். தென்னமரத்தில் நமக்குச் சிறந்ததாகப்படுவது தேங்காய்தான். அது போல் இறைவன் திருமேனியில் அழகும் வலிமையும் உடைய பல அங்கங்கள் இருந்தாலும் நம்மை ஆள்வதற்குப் பூமியின் மேல் நடந்துவர உதவுவது அவன் திருவடியே. நமக்குப் பற்றுக் கோடாக இருப்பதும் அதுவே. அதனால்தான் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில், ‘வாலறிவன் நற்றாள்”, ”மலர்மிசை ஏகினான் மாணடி”, “வேண்டுதல் வேண்டாமை யிலானடி”, தனக்குவமை யில்லாதான் தாள்’, “அறவாழி யந்தணன் தாள்”, “எண்குணத் தான்தாள்”, “இறைவன் அடி” என்று முழு முதற் கடவுளின் திருவடிகளையே எடுத்துச் சொன்னார். நம்மாழ்வாரும் திருவாய் மொழி யின் முதற் செய்யுளில் “துயரறு சுடரடி தொழு தெழில் மனனே” என்று கூறினார்.
ஆதலின் “நின்னைக் காட்டிலும் எமக்குச் சிறந்த திருவடியை உடையாய் நீ” என்று பாராட்டுகிறார் புலவர்.
நின்னிற் சிறந்த நின் திருவடியவை,
நின்னைக்காட்டிலும் எங்களுக்குச் சிறந்த நின் திரு வடிகளை உடையாய்.
நின்னின் – நின்னை விட, சிறந்த அடி, நின்அடி என்று கூட்டுக. திருவடியை என்பது திருவடியவை என விகாரமாக நின்றது. ஓசை கூட்டிச் சொல்லும் பொருட்டு அகரத்தைச் சேர்த்துப் பாடினார். ‘வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் தாளிணையை யுடையை.’ (பரிமேலழகர்.)
முதலில் இறைவனுக்கு இன்னதுதான் வடிவம் என்ற வரையறை இல்லை என்றார். அப்பால் அவனுடைய திருவுருவத்தைப் பற்றி எண்ணினார். இனி அவனுடைய குணங்களைச் சொல்லுகிறார். தனித் தனியே எடுத்துச் சொல்லிக் கடைசியில் முற்றச் சொல்ல முடியா மையின் “எல்லாம் நீயே” என்று முடிக்கும்படி ஆகிவிடுகிறதல்லவா? ஆதலின் குணங்களைச் சொல்லும்போதும் அப்படித் தொடங்கி முடிக்க வேண்டாம் என்று புலவர் நினைத்தார்போலும்! கடவுள் என்று சொல்வதற்குரிய தன்மைகள் யாவும் உன்னிடம் நிரம்பியுள்ளன’ என்று ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடுகிறார்.
நின்னிற் சிறந்த நிறைகடவுளவை.
நின்னிடத்தில் சிறப்பாக அமைந்த நிறைந்த கடவுள் தன்மையை உடையாய்.
நின்னில்-நின்னிடம். கடவுளவை – கடவுளை; கடவுள் தன்மையை உடையாய். அகரம் இசை நிறைவுக்காக வந்தது. இதற்கு, ‘நின்னைக்காட்டினும் சிறந்த நிறைந்த கடவுள் தன்மையாகிய அருளை உடையாய்’ என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனுடைய தன்மை பல எனினும் உயிர்களுக்கு மிகப் பயன்படுவது அவன் அருளே ஆதலாலும், அவனுடைய குணங்கள், செயல்கள் என்று தனித்தனியே சொன்னாலும் அவை அனைத்துக்கும் அவன் அருளே மூலமாதலாலும் அதுவே சிறந்ததாயிற்று. கொன் றருளினான், எழுந்தருளினான், சினந்தருளினான் என்று அவனுடைய செயல்கள் அனைத்தையும் அருட்செயலின் வகைகளாகச் சொல்லும் வழக்கு இதைத் தெளிவாக்கும்.
இவ்வாறு சொன்ன புலவருக்கு மீட்டும் யோசனை உண்டாயிற்று. இறைவனுடைய தன்மைகள் அளவிடற்கரியன. “உயர்வற உயர் நலம் உடையவன்” அவன். எல்லாக்குணங்களும் அவனுடைய அருளிலும் மாயையிலும் தோற்றியவை. ஆதலின் தெய்வத் தன்மைகளை மாத்திரம் சொன்னால் போதுமா? ஆகவே அதோடு நிறுத்தாமல், “அத்தகைய தெய்வத் தன்மைகளை அன்றி வேறு தன்மைகளும் நின் பால் உள. அவற்றை எம் போலியர் எப்படி அறிய முடியும்? வேதங்களை நன்கு ஆராய்ந்த முனிவர்கள் அந்த அறிவினாலும் அநுபவத்தினாலும் உணர்ந்து அவ்வப்போது வெளியிடு கிறார்கள். அவற்றை யெல்லாம் முடிவு போக அறிந்து கூறுவது இயலுமா? உன்னை வணங்குவதோடு உன் அருள் பெற்ற முனிவர்களையும் அணங்குகிறோம். அவர்கள் உன்னை நன்கு உணர்ந்தவர்கள்; உன்னைப் போன்றவர்கள். நின்னை ஒத்த அந்தணர்கள் அறிந்த அரிய உபநிடதப் பொருள் தெரிந்தால் நின் குணங்களை உணரலாம். அவர்கள் அறிந்தவை அவை; எம்மால் அறிதற்கு இயலாதவை’ என்று சொல் கிறார்.
அன்னோ ரல்லா வேறும் உள; அவை‘
நின்னோ ரன்னோர் அந்தணர் அருமறை.
அத்தன்மையல்லாத வேறு தன்மைகளும் நினக்கு உள்ளன. அவை நின்னையொத்த முனிவர்கள் உணர்வதற்குரிய அரிய உபநிடதத்தின் இரகசியப் பொருள்கள்.
அன்ன ஓர் அல்லா எனப் பிரிக்கவேண்டும்; ஓர்: அசை. அன்ன என்பதன் இறுதி அகரம் மறைய, அன் என நின்று ஓர் என்பதுடன் சேர்ந்து அன்னோர் என ஆயிற்று. நின் ஓர் அன்னோர் என்று பிரிக்கவேண்டும்; இங்கும் ஓர் என்பது அசை நிலை; அதற்கு ஒரு பொருளும் இல்லை. மறை – இரகசியம். மறைந்த பொருள் உடைமையால் வேதத்துக்கும் அதன் முடியாகிய உபநிடதங்களுக்கும் மறையென்ற பெயர் அமைந்தது.
இறைவன் திருமேனி யுடையவனல்லனாயினும் அருளுடையாருக்குக் காட்டும் திருமேனியைப் பற்றி முதலில் கூறி அப்பால் அவன் இயல்புகளைக் கூறினார். பிறகு அவன் இருக்கும் இடங்களைக் கூற வருகிறார். இறைவன் எங்கும் இருக்கிறான் என்றாலும் அவனை நினைந்து வழிபடுவதற்கு என்று சில இடங்களை அருள் பெற்ற சான்றோர்கள் வரையறையாக வைத்திருக்கின்றனர். திருக்கோயில்களை அமைத்து அங்கே இறைவனுக்குரிய திருவுருவங்களை நிறுவி வழிபடும்படி செய்திருக்கிறார்கள். அவ் வழிபடும் திருவுருவங்களைக் கோயிலின்றியே மரத்தின் அடியிலும் வேறு இடங்களிலும் வைத்து வழிபடுவதும் உண்டு. முதலில் அழகிய மரங்களில் இறைவன் இருப்பதாக எண்ணி, அவற்றை இறைவன் உருவாக வழி பட்டார்கள். அப்பால் அவ்விடங்களில் அவனுடைய உருவை அமைத்து வழிபட்டார்கள். பிறகு கோயில் கட்டி அங்கே அவன் திருவுருவத்தை நிறுவி வழிபட்டார்கள்.
ஆலமரம் மரங்களிலே பெரியது. அது விழுது விட்டுப் பரந்து நிற்பது. பலகாலம் இருப் பது. தன்னுடைய நிழலில் பல மக்களுக்கு இடம் கொடுப்பது. அதனிடம் பலருக்கு நிழல் தரும் தன்மை இருப்பதை எண்ணி, இறைவன் பலருக்கும் அருள்தரும் இயல்பை அதனுடன் ஒருங்கு வைத்துப் போற்றினார்கள். அதனிடம் தெய்வத் தன்மை இருப்பதாக நினைந்து வழி பட்டார்கள். ஆலமரம் தெய்வம் உறையும் மரம் என்ற நம்பிக்கை பழங்காலத்தில் இருந்ததைப் பழம் பாடல்கள் தெரிவிக்கின்றன. பிறகு, அங்கே கடவுளுருவங்களும் கோயில்களும் எழுந்தன. திருவாலந் துறை, திருவாலங் காடு, திருப்பழுவூர் முதலிய இடங்களில் சிவ பெருமான் ஆலடியில் உறைகின்றார். “ஆலமர் கடவுள்” என்று பழநூல்கள் கூறும். “கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்” என்பது புறநானூறு (199: 1)
இப்படியே கடம்பிலும் இறைவன் இருப்பதாகக் கொண்டார்கள். கடம்பில் முருகன் உறைகின்றான் என்ற செய்தியைத் திருமுருகாற்றுப் படை சொல்கிறது; “புதுப்பூங் கடம்பும்” (2:25). “கடம்பமர்காளை” என்று தேவாரம் சொல்கிறது.
ஆற்றின் நடுவிலே இருக்கும் திட்டுக்குத் துருத்தி என்று பெயர். ரங்கம் என்று வட மொழியில் வழங்கும். அதுவும் தெய்வத்தை வழிபடுவதற்குரிய இடம் என்று சான்றோர் கொண்டனர். திருவரங்கம் காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் அல்லவா?திருத்துருத்தி (குற்றாலம்) என்பது ஒரு தலம்.அது ஒரு காலத்தில் ஆற்றினிடையே திட்டாக இருந்ததுதான்.
இறைவனை வணங்கும் இடங்களில் மற்றொன்று மலை. இன்று தமிழ் நாட்டில் பெரும் பாலான மலைகளில் திருக்கோயில்களைக் காணலாம். கோயில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முருகன் மலைகளில் எழுந்தருளியிருக்கிறான் என்ற கருத்துடையவர்கள் தமிழர்கள். குன்று தோறாடுங் குழகன் முருகன் என்று பாராட்டுவார்கள்.
ஆற்றின் துறைகளும், பொய்கைக் கரையும், மரத்தின் அடியிலே மக்கள் கூடும் அம்பலமும், பிறவுமாகிய இடங்களிலும் தெய்வத்தை வழிபடுவது மரபு. இவ்வாறு பல இடங்களில் பலபல உருவமும் நாமமும் உடையனவாக வைத்து வணங்கும் தெய்வங்கள் எல்லாம் ஒரே கடவுளின் வேறு வேறு நிலைகளே. இதைப் புலவர் சொல்கிறார்.
ஆலமரத்தின் தளிர் சிவப்பாக இருக்கும்; அழல் போலத் தோற்றும். அதன் நிழல் கொழு நிழல். அது மற்ற மரங்களைவிட அதிகமான கிளைகளை உடையது. ‘பல சினைகளைப் பெற்ற ஆலமரத்திலும், கடம்பிலும், ஆற்றின் நடுவிலும், மலையிலும், வேறு இடங்களிலும் வேறு வேறு பெயரோடு எழுந்தருளுபவன் நீ தான்’ என்று பாடுகிறார் புலவர்.
அழல்புரை குழைகொழு நிழல்தரும் பலசினை
ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக்கு அறு நிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்!
நெருப்பை ஒத்த தளிரையும் கொழுவிய நிழலையும் தரும் பல கிளைகளையுடைய ஆலமரமும், கடம்பமரமும், நல்ல ஆற்றின் நடுவிடமும், காற்று வழங்குவது அறும்படி தடுத்து நிற்றலைபுடைய மலைகளும், பிற இடங்களும் ஆகிய அவ்வவ்விடங்களில் மேவிய வேறு வேறு பெயர்களை உடையவனே!
அழல்புரை – நெருப்பையொத்த, குழை – தளிர். குழை தரும், நிழல் தரும் என்று கூட்டுக. சினை -கிளைகால் வழக்கு அறும் நிலை – காற்று வழங்குதல் அற்ற நிலையையுடைய; ‘காற்று வழங்காத திணிந்த நிலையையுடைய குன்ற மென்க’ (பரிமேலழகர் உரை)
இப்படிச் சில இடங்களை வகுத்துக் கொண்டு அங்கே இறைவன் இருக்கிறான் என்று வழிபடுவதனால், மற்ற இடங்களில் அவன் இல்லை என்று கொள்வதா? அது தவறு. இறைவன் எங்கும் நிறைந்தவன். விஷ்ணு என்ற திருநாமமே அவன் யாண்டும் நிறைந்திருப்பவன் என்பதை உணர்த்துவது. இறை என்ற சொல்லும் அதே பொருளைத் தருவது. ஆதலின் அவன் இல்லாத இடமே இல்லை.
முன்பு, அவன் குணங்கள் இன்ன இன்ன பொருள்களில் உள்ளன என்று சொல்லத் தொடங்கினவர் எல்லாப் பொருள்களிலும் நின் குணங்களே உள்ளன என்று கூறி முடித்தார். அப்படியே இன்ன இன்ன இடங்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களாக இருப்பவன் நீயே என்று தொடங்கியவர், இடங்களைக் கணக்குப் பண்ணிச் சொல்ல முடியாது என்று உணர்ந்து ‘பிறவும்” என்று சொன்னார். ‘ஆலமும் கடம்பும் ஆற்று நடுவும் குன்றமும்’ என்று சொன்னவர், ‘இன்னும் பல பல உண்டு; அவற்றை யெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லுதல் இயலாத காரியம்’ என்று எண்ணினார். ‘இவைகளும் பிறவும்’ என்று சொல்லி முடித்தார். அப்படியும் அவருக்குத் திருப்தி பிறக்கவில்லை. ‘எல்லா இடங்களிலும் நீயே எழுந்தருளியிருக்கிறாய்’ என்று கூறி ஆறுதல் பெறுகிறார்.
எவ்வயி னோயும் நீயே.
எவ்விடத்தில் இருப்பவனும் நீதான்.
எவ்வயினோய்: முன்னிலை. தெய்வம் இருப்பதாகச் சொல்லும் இடங்களையெல்லாம் முன்பு சொன்னார். இப்போது எல்லா இடங்களிலும் அவன் இருப்பதைச் சொல்கிறார்.
அடியார்க் கெளியன்
இறைவன் எங்கும் இருக்கிறான். பல உருவங்களும் பல குணங்களும் உடையவனாக இருக் கிறான். பல பெயர்களோடு இருக்கிறான். ஆனாலும் அவன் எல்லோராலும் அறியப்படுவது இல்லை. எங்கும் இருந்தாலும், ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் இருந்தாலும் அவனை உணர்ந்து அன்பு செய்து அதனால் வரும் இன்பத்தை நுகர்பவர்கள் மிகச் சிலரே. அந்த அன்பர்களிடத்தில் இறைவன் விளையாடுகிறான்.
அவர்களிடம் கட்டுப்பட்டிருக்கிறான். வேறு பொருள்களால் அவனைக் கட்ட முடியாது. யசோதை கயிற்றினால் கட்டப் பார்த்தாள்; முடியவில்லை. ஆனால் அன்பர்களுடைய அன்பினால் தளைப்படுபவன் அவன். சகாதேவன் அப் பெருமானைக் கட்டிவிட்டான். அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை அவன். பக்தி வலை யிற் படுபவன் அவன். தன்னைத் தொழுபவர்கள் கையாலே கட்டிப் பிடிக்குமளவுக்கு அவர்களுக்கு எளியனாக இருக்கிறான். அவர்கள் அவனைத் தலைவனாக எண்ணி அன்பு செய்து கை குவித்துத் தொழுகிறார்கள். அவனோ அவர்களுடைய தொழுத கையின் குவிப்புக் குள்ளே அடங்கி நிற்கிறான். அதுமாத்திரமா? அந்த அன்பர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து உதவும் ஏவலாளனாகவும் இருக்கிறான். ஏவாமலே தலைவன் நினைத்ததை முடிப்பவன் சிறந்த ஏவலாளன். அப்படியே இறைவனும் தன் அடியார்கள் நினைப்பவற்றை முடித்துத் தருகிறான். அதனால் அவர்களுக்கு அவனைக் காட்டிலும் சிறந்த ஏவலாளன் யாரும் இருக்க முடியாது. அவர்களிடத்திலே அடங்கி, அவர்கள் வழிப்படியே ஒழுகி ஏவல் செய்பவனைப் போல இருந்தாலும், அவர்களுக்குத் தீங்கு வராமற் பாதுகாக்கும் பெரிய காவலாளனாகவும் இருக்கிறான்; அவர்கள் செய்யும் தொண்டுகளுக்கு அரணாமாக இருந்து அவற்றை நிறைவேற்றுகிறான்.
இந்த இயல்புகளையெல்லாம் புலவர் சொல்லிப் பாடலை முடிக்கிறார்.
நின் ஆர்வலர்
தொழுதகை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவர்அவர் ஏவ லாளனும் நீயே;
அவர்அவர் செய்பொருட்கு அரணமும் நீயே,
நின்னுடைய அன்பர்கள் நின்னைத் தொழுத கையின் குவிவுக்குள்ளே அடங்கி அமர்ந்தவனும் நீயே; அந்த அந்த அன்பர்களுக்கு ஏற்ற ஏவலாளனும் நீயே; அவர் அவர் செய்யும் பொருளுக்குக் காவலாக இருப்பவனும் நீயே.
ஆர்வலர் -அன்பர். அமைதி – அமைந்த நிலை. ‘நினைத் தன முடித்தலான், அவரவர் ஏவல் செய்வானும் நீ. …செய்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடென்பன (பரிமேலழகர்.) அரணம் – காவல்.
முதலில் திருமாலினுடைய புகழ் சொல் வதற்கரியதென்று கூறி, பின் அவன் திரு மேனியையும் உடை நேமி ஆகியவற்றையும் நினைத்து, பிறகு நரசிங்க அவதாரத்தையும் கேழலாக வந்த கோலத்தையும் புகழ்ந்து, அவனுடைய தன்மைகளை உலகத்துப் பொருள் களெல்லாம் கொண்டிருத்தலைச் சொல்லி, அவன் கொடியின் சிறப்பைப் புகழ்ந்து, வேண்டுதல் வேண்டாமையிலான் அவன் என்பதைத் தெளிவுறுத்தி, மீண்டும் அவன் உருவ எழிலையும் திருவடிச் சிறப்பையும் குண நலங்களையும் எடுத்துரைத்து, அவன் இருக்கும் இடங்களை இயம்பி, எங்கும் இருப்பவன் என்பதையும் தெளிவுறுத்திய புலவர்,ஆர்வலருக்கு அணிமையில் உள்ளவனாக இருப்பதைச் சொல்லிப் பாட்டை முடித்தார். ஆர்வலர் நின்புகழ் விரித்தனர் என்று தொடங்கி, ஆர்வலர்க்கு அரணம் நீயே என்று முடித்தார்.
பாட்டு இறைவனுடைய நலங்களைச் சொல்வதாக இருக்கிறதே ஒழிய, இன்னது வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் வகையில் அமையவில்லை.ஆயினும், ‘இத்தகைய பெருமானிடம் நாமும் அன்பு செய்தால் அவன் அருளைப் பெறலாம்’ என்ற கருத்து நமக்குத் தோன்றும்படி அவன் தன் அன்பர்களுக்கு எளியனாம் தன்மையை இறுதியிலே சொல்லி முடித்திருக்கிறார். இறைவன் இயல்பு எத்துணைச் சிறப்புடையதாக இருந்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை. நமக்கு அருள் செய்யும் தன்மை அவன்பால் இருப்பதுதான் அவனுக்குப் பெருமை. அதனையே இறுதி அடிகள் நினைப் பூட்டுகின்றன.
திருமால்
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை;
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20
தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;
புருவத்துக் கரு வல் கந்தத்தால்தாங்கி,
இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்துமேவல் சான்றன எல்லாம் 35
சேவல் ஓங்கு உயர் கொடியோயே
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்
நின் ஒன்று உயர் கொடி யானை 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்
அவன் மடிமேல் வலந்தது பாம்பு
பாம்பு தொடி பாம்பு முடி மேலன
பாம்பு பூண் பாம்பு தலை மேலது 45
பாம்பு சிறை தலையன
பாம்பு படி மதம் சாய்த்தோய் பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும்
கொடுமையும் செம்மையும்
வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை இல்வழி இலையே
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்குமாற்றோரும்
இலர் கேளிரும் இலர் எனும்வேற்றுமை
இன்று அது போற்றுநர்ப் பெறினே 55
மனக்கோள் நினக்குஎன வடிவுவேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய்மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறுஇணர்க் கண்ணியை;
பொன்னிற் றோன்றிய புனைமறு மார்ப!
நின்னிற் றோன்றிய நிரைஇதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை;
நின்னிற் சிறந்த நிறைகட வுளவை;
அன்னோ ரல்லா வேறும் உள; அவை
நின்னோ ரன்னோர் அந்தணர் அருமறை; 65
அழல்புரை குழைகொழு நிழல்தரும் பலசினை
ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக்கு அறு நிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்!
எவ்வயி னோயும் நீயே;நின் ஆர்வலர் 70
தொழுதகை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவர்அவர் ஏவ மானனும் நீயே;
அவர்அவர் செய்பொருட்கு அரணமும் நீயே.
கடவுள் வாழ்த்து.
கடுவன் இளஎயினனுர் பாட்டு.
பெட்டனுகனூர் இசை.
பண்ணுப் பாலையாழ்.
இந்தப் பாட்டு, கடவுள் வாழ்த்து என்னும் துறையில் அமைந்தது. இதனைப் பாடியவர் கடுவன் இள எயினனார் என்னும் புலவர். இதற்கு இசை வகுத்தவர் பெட்டனாகனார் என்னும் புலவர். இதற்கு உரிய பண் பாலை. இவை மேலேயுள்ள குறிப்புக்களிலிருந்து தெளிவாகின்றன.
இது பரிபாடலில் நான்காவது பாடலாக அமைந்திருப்பது.



