
தமிழ் வையை
கி. வா. ஜகந்நாதன்
தமிழ் வையை
மழை
நீரால் நிறைந்திருக்கும் கடலில் மேகங்கள் சென்று முகந்தன. இதற்கு முன் பலமுறை நீரை முகந்தும் அது இன்னும் நிறைகடலாகவே இருக்கிறது. அதன்கண் நீரை முகந்துகொண்ட மேகங்கள் வானப் பரப்பினிடையே எங்கும் பரவின; வான முழுவதையும் போர்த்து நின்றாற் போல எங்கும் நிறைந்தன. மெல்லச் சென்றன. நீராகிய பாரத்தைத் தாங்காதவைபோல நின்றன. அந்தப் பாரம் குறைய வேண்டுமானால் தாம் முகந்த நீரைப் பொழிந்துவிட வேண்டும். ஆகவே நீர் துளும் பிக் கொண்டிருக்கும் அந்த மேகங்கள் பாரம் நீங்கி இளைப்பாற வேண்டி நீரைப் பொழிந்தன.
நிறைகடல் முகந்துஉராய் நிறைந்து நீர் துளும்பும் தம் பொறைதவிர்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்.
நீரால் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி நிறைந்து, அப்பால் நீர் துளும்புகின்ற தம்முடைய பாரம் நீங்கி இளைப்பாறும் பொருட்டு, பொழிந்தன மேகங்கள்,
உராய் – உலவி; பரவி. பொறை – பாரம். தவிர்பு- நீங்கி, அசைவிட -இளைப்பாற. பொழிந்தன்று – பொழிந் தது. வானம் – மேகம். பொழிந்தன்று என்று ஒருமையாகச் சொன்னது, மேகங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக எண்ணி; இதைச் சாதி ஒருமை என் பார்கள்,
வெள்ளம்
மழை நன்றாகப் பொழிந்ததனால் எங்கும் ஒரே நீர் மயம். தரையே தெரியாமல் மழை நீர் மிகுதியாக எல்லா இடங்களிலும் நிரம்பி நின்றது. எங்கே பார்த்தாலும் மழை நீர் வெள்ளம். மலையின் மேலே மழை மிக வேகமாகப் பொழிகிறது. அதனால் மலையில் உள்ள மான் முதலிய விலங்கினங்கள் கலங்குகின்றன. மயிலினங்கள் மேகத்தையும் மழையையும் கண்டு அகவுகின்றன. மழை பெய்ததனால் மலையில் உள்ள அருவியில் நீர்ப்பெருக்கு அதிகமாகின்றது. அது மலையை நீராட்டுவது போல, அதன் மாசைக் கழுவுவது போல, வேகமாக இறங்குகிறது. அருவி பல கால்களாகப் பிரிந்து மலைச் சாரலில் ஓடுகிறது.
மலைச் சாரலில் ஓடி வந்த நீர் எல்லாம் கீழே இறங்கி ஆறாக ஓடுகிறது. புலவர்கள் மழையைப் பற்றிப் பாடிய பாடல்கள் பல. அதனை வாழ்த்திய கவிதை பல. மழையில்லா விட்டால் மாநிலத்தாருக்கு வாழ்வு இல்லை என்று பாடியிருக்கிறார்கள். மழை கைம்மாறு கருதாமல் பெய்வதையும் அதனால் பயிர் விளைவதையும் அறிவு விளக்கத்தைப் புலப்படுத்தும் தம்முடைய நாவினால் பாடியிருக்கிறார்கள். மாசு இல்லாத புலவர்கள், நல்ல செய்யுட்களை இயற் றும் நாவலர்கள், தம்முடைய கவிதையினால் எப் படியெல்லாம் பாடினார்களோ அப்படியே இப் போதும் மழை பொழிய, அருவி நீர் மலிந்து, கீழே இறங்கி ஆறாக ஓடுகிறது.
அவர்கள் நாவினாற் புனைந்த நல்ல கவிதை பொய்யாகாதபடி நீர் எங்கும் மேவிப் பரந்து விரைந்தது. அதனால் அங்கங்கே உழுவார் உழவும், விதைப்பவர் விதைக்கவும், களையெடுப் பார் களையெடுக்கவுமாகப் பயிர் செய்யும் தொழில் மேன்மேலும் பெருகியது.
இப்படி, வானம் பொழிந்த தண்ணம் புனல் எங்கும் ஓடி நண்மையை உண்டாக்கியது.
நிலம்மறை வதுபோல் மலிபுனல் தலைத்தலை இ
மலைய இனம்கலங்க மலைய மயில்அகவ
5. மலைமாசு கழியக் கதழும் அருவி இழியும்
மலிநீர் அதர்பல கெழுவு தாழ்வரை
மாசில் பனுவற் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரைந்து வினை நந்தத்
10. தாயிற்றே தண்ணம் புனல்.
தரையானது மறைந்துவிடுவது போல வெள்ளம் அவ்வவ்விடங்களில் நிறைந்து, மலையிலே உள்ள விலங்கினங்கள் கலங்கவும் மலையிலுள்ள மயில்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்கவும், மலையில் கோடை காலத்தில் படிந்திருந்த மாசு கழியவும் வேகமாக அருவி இறங்குகின்ற, மிக்க நீர் செல்லும் வழிகள் பல பொருந்திய மலையின் அடியில், குற்றமற்ற செய்யுட்களைப் பாடும் புலவர்களுடைய, புகழ் பெற்ற அறிவு விளக்கமுள்ள நாவினால் அழகு பெறப் பாடப் பெற்ற நல்ல கவிதையின் பொருள் பொய்யாகாமல் சென்று, பரவி விரைந்து, எங்கும் வேளாண்மையாகிய தொழில் பெருகும்படியாகக் குளிர்ந்த அழகிய புனல் ஓடியது.
‘ஊழிக் கண் நிலம் மறையும் வெள்ளம் போலே வெள்ளம் மேலே பரக்க’ என்பர் பரிமேலழகர். மலிர் புனல்- வெள்ளம். தலை தலைஇ – இடந்தோறும் நிரம்பி; தலை – இடம். மலைய – மலையில் உள்ள. இனம் – மான் முதலிய விலங்குக் கூட்டம். மேகத்தைக் கண்டு மகிழ்தல் மயிலுக்கு இயல்பு. அகவ – மகிழ்ச்சியால் குரல் எழுப்ப; ஆட என்றும் கொள்ளலாம். கதழும் – வேகமாகச் செல்லும். இழியும் – இறங்கும். மலி நீர் அதர் – மிக்க நீர் செல்லும் வழி. கெழுவு – அமைந்த. தாழ்வரை – மலையடிவாரம். மாசு இல்லாத பனுவல் என்றும் மாசு இல்லாத புலவர் என்றும் இரண்டு வகையாகவும் பொருள் கொள்ளலாம். பனுவல் – நூல். புலம் – அறிவு. மாறாமை – மாறாமல்; பொய்யாகாமல். வினை – தொழில். பிற தொழில்களும் நீரின்றிச் சிறப்படையாமையால் மனிதர்கள் இயற் றும் எவ்வகைத் தொழிலும் சிறப்படையும்படி என்றும் கொள்ளலாம். தாயிற்று – தாவியது; ஓடியது. தண் அம் புனல் – குளிர்ந்த அழகிய நீர்.
‘கவிதை – கவியது தன்மை. அஃது ஈண்டுச் செய்யுள் மேல் நின்றது.’ (பரிமேலழகர்.)
வையை
மழை பெய்ய அதனால் மலையில் அருவி பெருகியது. அது வேகமாக இறங்கித் தரையில் ஆறாக ஓடலாயிற்று. மழை வெள்ளம் இவ்வாறு வந்தமையால் வையை யாற்றில் புது வெள்ளம் வந்தது. அதனால் வையையின் வருகையே இதுகாறும் இல்லாத சிறப்பை அடைந்தது.
வையையில் புது வெள்ளம் வந்தால் அதை வரவேற்றுப் பூசித்து நீராடப் புகுவார் கள் மக்கள். பூசைக்கு வேண்டிய பண்டங்களைக் கையிலே ஏந்திக்கொண்டு வெள்ளத் தோடு வரும் வையையை நோக்கிப் போவார்கள். வையையைப் பூவால் அருச்சித்துத் தூப தீபங் காட்டி நிவேதனம் செய்து பொன் மீன் முதலியவற்றை அதனுள் இடுவது வழக்கம். அதனால் தூபத்துக்குரிய திரவியங்களையும், தீபத்தையும், தூபத்துக்கு வேண்டிய நெருப்பையும் ஏந்திச் செல்வார்கள். அதுமட்டுமா? வையையாற்றில் புனல் விளையாட்டுப் புரியப் பலர் செல்வார்கள். தமக்கு இன்பத்தை உண்டாக்கும் காதலர்களோடு புனலில் விளையாடுவது மிக்க இன்பத்தைத் தரும். அதற்காகக் காலையிலே எழுந்து தம்மை அலங்கரித்துக் கொண்டு மகளிர் புறப்படுவார்கள். அவர்கள் தம் கையிலே மேலே சொன்ன பொருள்களை ஏந்திக் கொண்டு செல்வார்கள்.
உண்ணும் நீரையும் உணவை உண்டாக் கும் நீரையும் தந்து, மாசு தீர ஆடும் நறும்புனலையும் வழங்குவதனால் வையையாறு பூசை செய்வதற்குரியது. அந்த நீரால் அறம் மலியும்; பொருள் மலியும்; வீட்டு நெறிக்குரிய தூய்மை மலியும். அவற்றோடு காதலரும் காதலியரும் ஒன்றுபட்டு நீர் விளையாட்டு நடத்தும் இன்பச் செயல்களுக்கும் வையையின் புது வெள்ளம் துணையாக இருக்கின்றது.
இவ்வாறு காதலுடையவர்களைக் காலையிலே அலங்காரம் செய்து கொள்ளும்படியாகச் செய்யும் வகையிலே வையை புது வெள்ளத்துடன் வந்தது.
மழை பெய்து வையையில் வெள்ளம் வருகிறது. அதன் கண் விளையாடும் பொருட்டு மகளிரும் மைந்தரும் கோலம் புனைந்து கொள்ளப் போகிறார்கள். அவர்கள் நீர் விளையாட்டு நிகழ்த்தும்பொழுது தங்கள் தங்கள் காதலரோடு சேர்ந்து ஆடுவதனால் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். உடம்பு பூரித்துப் போகும். தோளிலே அணிந்திருந்த தோள்வளைகளாகிய வாகுவலயங்கள் அந்தப் பூரிப்பினாலே இறுகிப் போகும். அவை இறுகும்போது அவற்றை முன்கைக்குத் தள்ளினால் அங்கே அவை கலகலக்கும். மகளிர் மார்பிலும் தோளிலும் சந்தனக் குழம்பால் கொடியின் உரு வத்தை எழுதியிருப்பார்கள். அதற்குத் தொய்யில் என்று பெயர். அது உருவழிந்து போகும். அவர்கள் இடையிலே அணிந்திருக்கும் மேகலைகள் மணிஉதிர்ந்து வெறும் வடங்களாக நிற்கும். நல்ல சுடரை வீசும் முத்து மாலைகள், அழிந்த சந்தனத்தோடும் மற்றப் பொருள்களோடும் கலந்து தம்முடைய ஒளி மங்கித் தோன்றும்.
மகளிர் தம்முடைய விரல் நகங்களில் சாயம் பூசியிருப்பார்கள்; கன்னத்தில் செம்பஞ்சிக் குழம்பால் பொட்டு இட்டிருப்பார்கள்; சிலர் லேசாகப் பூசியும் இருப்பார்கள். அந்தச் சாயமும் செம்பஞ்சுக் குழம்பும் நீர் விளையாட்டில் கலைந்துபோகும். மார்பில் சந்தனக்குழம்பு பூசியிருப்பார்கள். அதுவும் அழிந்து போகும். இந்த வண்ணப் பொருள்களும் சந்தனமும் நீரிலே கரைந்து வண்டலிடும். அந்த வண்டல் மணலோரங்களில் மண்டும். அவர்கள் அணிந் திருந்த இலை மாலையும் அவர்களுடைய கூந்தலும் நீராடும்போது அங்கும் இங்கும் புரளும். அதனால் அவர்கள் மேனியிலே படிந்திருந்த சந்தனம் நன்றாக அழிந்து போகும். துடைத்து விட்டாற்போல அவை அழியும். இவ்வாறு மகளிர் நீரில் விளையாடும் போது அவர்களுடைய காதலரும் அவர்களுடன் ஆடி மகிழ்வார்கள். மகளிர் தனங்களிலும் ஆடவர் மார்புகளிலும் அணிந்த ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து பொருந்தும். இப்படி நீர்விளையாட்டு இனிமேல் நிகழும்படியாக வையையிலே புனல் பெருகி வந்தது.
காதலர் ஒன்றுபட்ட உள்ளத்தினராய் நீர் விளையாட்டு நிகழ்த்துவார்கள். அவர்களுடைய உள்ளத்தில் காதல் பொங்கும். மற்ற வேளை களில் அவர்கள் தம் காதலைப் புலப்படுத்தாமல் மனத்தை அடக்கி வைத்திருப்பார்கள். நீர்விளையாட்டில் உள்ளம் ஒரு நிலையிலே அடங்கி நிற்குமா? மனத்தை நிறுத்த முடியுமா? இது காறும் அதனை நிறுத்தியிருந்தாலும் புதுப் புனலைக் கண்டபோது, அதை நிறுத்தும் ஆற்றல் தளர்ந்து போய்விடும். அவர்களுடைய உள்ளம் நிறை யென்னும் அணையைத் தகர்த்து விடும்; அன்பினால் ஒத்த காதலருடைய உள்ளம், நாணத்தால் நிறுத்தும் ஆற்றலாகிய நிறையை உடைத்தாற் போல வையை நீரும் வரும் வழியிலுள்ள அணைகளை யெல்லாம் உடைத்து வந்தது; மலையைப் போல உயரமாகக் கட்டிய அணைகளாக இருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு வந்தது. அப்படி வருகின்ற வெள்ளம் கரையை மோதியது. அலைகளாகிய சிறையினால் கரைகளாகிய சிறையை உடைத்தது. இரு கரையும் நின்ற காவலாளர்கள் இதைக் கண்டார்கள். கரை உடைந்துபோனால் ஊருக்கே ஆபத்து அல்லவா? ஆகவே அவர்கள் கரையை அடைப்பதற்காகப் பறை அறைவாரை அழைத்துப் பறை அறையச் சொன்னார்கள்.
“புது வெள்ளம் வந்துவிட்டது; கரை உடைந்துவிடும். எல்லோரும் வந்து கரையைச் சரிப்படுத்துங்கள் ” என்று அவர்கள் பறை யறைந்து கூறினார்கள். அந்தப் பறையைக் கேட்டு ஊரில் உள்ளவர்களெல்லாம் ஆரவாரத் தோடு எழுந்தார்கள். புனல் வந்ததென்ற மகிழ்ச்சியினால் அவர்கள் செய்த முழக்கம் நெடுந்தூரம் கேட்டது.
தொடிதோள் செறிப்பத் தோள்வளை இயங்கக்
15. கொடிசோ ரத்திருக் கோவை காழ்கொளத்
தொகுகதிர் முத்துத் தொடைகலிழ்பு மழுக
உகிரும் கொடிறும் உண்டசெம் பஞ்சியும்
நல்அணி அளறும் நனிவண்டல் மண்ட
இலையும் மயிரும் ஈர்ஞ்சாந்து நிழத்த
20. முலையும் மார்பும் முயங்கணி மயங்க
விருப்புஒன்று பட்டவர் உளம்நிறை
உடைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை; வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை;
அறைகெனும்
உரைச்சிறைப் பறைஎழ ஊர்ஒலித் தன்று.
வாகுவலயங்களைத் தோள்கள் அழுந்தும்படி செய்ய, தோளில் உள்ள வளை (முன் கையில் வந்து) அலைய, மார்பிலும் தனத்திலும் எழுதிய கொடியாகிய தொய்யில் அழிய, அழகிய மேகலை வெறும் வடமாகிய தோற்றத்தைக் கொள்ள, ஒளி சேர்ந்த முத்துமாலை கலங்கி நிறம் மங்க, நகத்திலும் கன்னத்திலும் பூசிய செம்பஞ்சிக் குழம்பும் தனர் களில் அணிந்த சந்தனக் குழம்பும் அழிந்து நன்றாக வண்டலாகச் செறிய, இலை மாலையும் கூந்தலும் (புரண்டு) ஈரமான சந்தனத்தை அழிக்க, மகளிருடைய தனங்களிலும் மைந்த ருடைய மார்புகளிலும் அணிந்த ஆபரணங்கள் அவர்கள் தழுவிக் கொள்வதனால் ஒன்றோடொன்று சேர்ந்து கலக்க, அன்பு ஒன்றுபட்ட காதலருடைய உள்ளம் நிறுத்தும் ஆற்றலை உடைத்தது போல மலையைப் போன்ற அணைகளை உடைத்தது வையை; வையையினுடைய அலைகளாகிய சிறகுகள் கரையாகிய சிறையை உடைத்தன: அப்போது அங்கே இருந்த காவலர்கள் பறை அறைக என்னும் உரையை அடுத்ததாகப் பறையின் முழக்கம் எழவே, ஊரில் உள்ளார் ஆரவாரம் செய்தார்கள்.
14.தொடி-தோள்வளை. செறிப்ப – நெருங்கி அழுந் தும்படி செய்ய. முன்னே நெகிழ இட்ட தொடி இப்போது தோள் பூரித்தலால் செறிந்தன. அப்படிச் செறிந்தது பொறா மல் கீழே தள்ளிய வளைகள் முன் கையினிடம் வந்து அலைந்தன. இயங்க – நழுவி அலைய.
15.கொடி – தொய்யில்; கொடி போன்ற உருவத்தை எழுதுதலின் இப்பெயர் பெற்றது. சோர -தன் உருவம் கலைய. திருக்கோவை – அழகிய கோவைகளாகிய மேகலை. மேகலை எட்டுக் கோவை, பதினாறு கோவை, முப்பத்திரண்டு கோவையெனப் பலவகைப்படும். காழ்-வடம். உடம்பு பூரித்தலாலும் நீர்விளையாட்டினாலும் மேகலையில் உள்ள மணிகள் உதிரவே வெறும் வடம் மாத்திரம் நின்றது.
16. தொகுகதிர்-தொகுதியாகச் சேர்ந்த ஒளி. தொகு முத்து என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். முத்துத் தொடை – முத்துமாலை; இது மார்பில் அணிந்தது. கலிழ்பு- கலங்கி; விளையாடுதலால் புரண்டு கலங்கியது. மழுக – சந்த னம் முதலியவற்றில் புரண்டு அலைவதால் நிறம் மங்க.
17. நகத்திலும் கன்னத்திலும் சிவப்புச் சாயம் பூசுவது இன்றும் உள்ள வழக்கம். உகிர் – நகம். கொடிறு – கபோலம்; கன்னம், உண்ட – பூசப் பெற்ற. செம்பஞ்சி – ஒருவகைச் செந்நிறக் குழம்பு.
18. நகில்-தனம், அளறு – சேறு; இங்கே சந்தனக் குழம்பு. வண்டல் மண்ட – வண்டலாகச் செறிய. நீரின் ஓரத்தில் மணலின்மேல் வண்டலாகப் படிந்தது.
19.இலை என்றது இலைமாலையை; அதைப் படலை என்று சொல்வார்கள். ஈர்ம் சாந்து – ஈரமாகிய சந்தனம். நீராடும் பொழுது நீரினால் சந்தனம் ஓரளவு அழிய எஞ்சியதை இலைமாலையும் கூந்தலும் நிலைகுலைந்து அலைந்து போக்கின. நிழத்த-குறைக்க ; அழிக்க.
20. மார்பு என்றது ஆடவர் மார்பை. முயங்கு – பொருந் திய. மயங்கல் – ஒன்றோடொன்று கலத்தல், இருவரும் தழுவி யமையால் இப்படி ஆயின.
21. விருப்பு – அன்பு. நிறை – நிறுத்தும் ஆற்றல். உடைத்தென உடைத்ததென; உடைத்தாலென என்றும் விரிக்கலாம்.
22. வரைச்சிறை – மலையைப் போன்ற அணையை. உடைத்ததை: ஐ, சாரியை.
23. திரையாகிய சிறகுகள். படபடவென்று பறவைகள் சிறகுகளை அடித்துக் கொள்வது போல அலைகள் தோற்றுதலின் அவற்றைச் சிறையாக உருவகம் செய்தார். கரைச் சிறையை உடைத்தன்று. சிறை – கட்டுக்காவல். அறைக எனும் என்பது அறைகெனும் என விகாரம் ஆயிற்று. கரை உடைப்பது கண்ட காவலர் பறையடிப்பாரை நோக்கி ஊராருக்குச் செய்தி தெரியும்படி பறையறையச் சொன்னார்கள்.
24. உரைச்சிறை – உரையின் புறத்தே. ‘உரையாகிய காவலோடே’ என்பது பரிமேலழகர் உரை. பறை எழ – பறையின் ஒலி முழங்க. ஊர் – ஊரில் உள்ளார்; ஆகுபெயர். ஒலித்தன்று – ஆரவாரித்தது.
தோள் தொடியைச் செறித்தல் முதலிய செயல்கள் நிகழும்படியாக, வையையில் நீர் அணையை உடைத்துக் கரையை உடைத்துப் பாய்ந்தது. இனி நிகழப்போகும் செயல்களை இங்கே நினைப்பூட்டினார்.
புனலாடப் போதுவார்
ஊரினர் ஆரவாரித்ததற்குக் காரணம் வையை யாற்றில் புனல் விளையாட்டு நிகழ்த்தலாம் என்ற எண்ணமே. அவர்கள் வையை ஆற்றை நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் புறப் பட்டார்கள். மகளிரும் மைந்தரும் புறப்பட் டார்கள். வீரர்கள் போருக்கு அணி அணியாக வகுத்துக் கொண்டு செல்லும் கூட்டத்தைப் போல இருந்தது அது. போருக்குக் செல்லும் படையில் யானைகள் சிறப்பாகத் தோற்றம் அளிக்கும். அவ்வாறு இந்தக் கூட்டத்தில் பெண் யானைகள் வரிசை வரிசையாகச் சென் றன. அவற்றை நன்றாக அலங்கரித்திருந்தார் கள். உலா வருவதாக இருந்தால் வேறு விதமாகக் கோலம் புனைவார்கள். நீராடப் போவதனால் அதற்கு ஏற்ற வகையில் அணிந்திருந்தார்கள். அந்த நீராட்டணியுடன் பிடிகள் சென்றன.
25. அன்று, போர்அணி அணியிற் புகர்முகம்
சிறந்தென
நீரணி அணியின் நிரை நிரை பிடிசெல.
(ஊரினர் ஆரவாரம் செய்த) அன்று போருக்காக அணியும் அணியோடு களிறுகள் சிறந்தாற் போல நீராடற் கேற்ப அணிந்த அணிகளோடு வரிசை வரிசையாகப் பிடிகள் போக.
போர்- போரின் பொருட்டு, அணியின் – அணியோடு. புகர்முகம் – யானை; போரைக் கூறினமையின் ஆண்யானை களென்று கொள்ளவேண்டும். நீர் – நீர்விளையாட்டு; ஆகு பெயர். நீர்விளையாட்டுக்காக அணிந்த அணியோடு. நிரை- வரிசை.
நீர் விளையாட்டுக்காகவே சிலவகையான ஆடையணிகள் உண்டு. அவற்றை ஆடவரும் மகளிரும் புனைந்து புறப்பட்டார்கள். அந்த அலங்காரத்தை ஈரணி என்று புலவர்கள் சொல்வார்கள். நீராடப் புறப்பட்டவர்கள், “நான் முந்தி, நான் முந்தி ” என்று போட்டி போட்டுக்கொண்டு சென்றார்கள். அழகான அணி களை அணிந்த இளைஞர்களும் அவர்களுக்கு இனியராகிய மகளிரும் போர் செய்யப் போவாரைப் போலவே வேகமும் இகலும் (போட்டி) உடையவர்களாகப் போய்க்கொண்டிருந்தார் கள். ஆம்; அவர்கள் நீர் விளையாட்டையே போரைப் போல நிகழ்த்தப் போகிறார்கள்.
வையை யாற்றையே அவர்கள் தங்கள் போர்க்குக் களமாக விரும்பி, அந்தப் போரிடையே வெல்வதற்கு ஏற்ப வலிமையுடன் சென்றார்கள். அணியணியாகச் சென்றார்கள். போரில் படைக் கலங்கள் உண்டல்லவா? இங்கும் சில கருவிகள் உண்டு. அந்தக் கருவிகளுடன் சென்றார்கள். போரில் முன்னாலே செல்லும் படைக்குத் தார் என்று பெயர். இங்கும் இளையரும் இளைய மகளிரும் முன் வரிசையிலே கையில் சில கருவி களோடு நடந்தார்கள். நீர்க் கரையிலே புகுந்து தம்முடைய போரை நிகழ்த்த அங்குள்ள துறைக்கண்ணே இறங்கப் போகிறவர்கள் அவர்கள்.
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் ஈர்அணி அணியின் இகல்மிக நவின்று தணிபுனல் ஆடும் தகைமிகு போர்க்கண்
30. துணிபுன லாகத் துறைவேண்டும் மைந்தின்
அணிஅணி யாகிய தாரர் கருவியர்
அடுபுன லதுசெல அவற்றை இழிவர்;
அழகாக அணிந்த அணிகளையுடைய இளைய மைந்தரும் அவருக்கு இனிய மகளிரும், நீராட்டுக்குரிய அலங் காரங்களுடன் போட்டியை மிக விரும்பி, குளிர்ந்த நீரில் ஆடுகிற அழகு மிக்க போரில், தமக்குரிய போர்க்களமாக நீர்த்துறையை விரும்பும் வலிமையோடு, வரிசை வரிசையாக அமைந்த தூசிப் படையைப் போன்றவராகி, நீர்வீசு கருவிகளை உடையவராய், கரையை மோதுகின்ற புனல் ஓடிக்கொண்டிருக்க, தாம் விரும்பிய அத்துறைகளிலே இறங்குவாராகி.
இழிவர்: முற்றெச்சம்; இழிவராகித் திரீஇ எனப் பின் வரும் சொல்லோடு முடியும்.
ஏர் – அழகு. அணியின் – அலங்காரத்தோடு. இகல் ஒருவர்க்கொருவர் மாறாகப் பேசி நடத்தல்; போட்டி. நவின்று – விரும்பி. தணி – குளிர்ந்த, தகை-அழகு; தகுதியும் ஆம். துணி புனல் துறையாக என்று கூட்டிப் பொருள் சொல்ல வேண்டும்; தெளிந்த நீரே தம் போர்க்கு உரிய களமாக, மைந்து-வலிமை. நீர் விளையாட்டுக்குரிய வலிமை மைந்தர், மகளிர் ஆகிய இருவருக்கும் இருத்தலின் இங்கே மைந்து என்றது அவ்விருபாலருடைய ஆற்றலையும் சுட்டியது. தார்-முன்னால் நிற்கும் தூசிப்படை. கருவியர்- நீரைப் பீச்சும் பீச்சாங்குழல் முதலிய கருவிகளை உடையவர். வண்ண நீரையும் பனி நீரையும் வாசனைக் கலவைகளையும் இட்டுப் பிறர்மேல் வீசும் குழல்களே இந்தக் கருவிகள். இவற்றைச் சிவிறியென்றும், துருத்தியென்றும் சொல்வார் கள்; இக்காலத்தில் பீச்சாங்குழல் என்று வழங்குவார்கள்.
புனல் விளையாட்டை நடத்திச் செல்லும் மகளிர் பலர் வாகனங்களில் ஏறிச்சென்றனர். சிலர் யானையின் மேல் ஏறிச் சென்றனர். இன்னும் சிலர் ஆரவாரத்தையுடைய மெல்லிய நடையையுடைய குதிரையின் மேலே சென்றார்கள். அவர்கள் கையில் என்ன என்ன கருவிகள் இருந்தன? சிலர் புழுகு நெய்யை உள்ளே அடைத்த குழலை வைத்திருந்தார்கள். நீராடும் போது பிறர் மேல் அதிலிருந்து புனுகை வீசுவார்கள். இன்னும் சிலர் உள்ளே துளையை யுடைய கொம்பிலே பனி நீரை நிரப்பிக் கொண்டு போனார்கள். வேறு சிலர் வெள்ளை நெட்டியாலான தெப்பக் கட்டையைக் கொண்டு போனார்கள். நீந்துவதற்கு ஏற்ற கருவி அல்லவா? வெறும் தெப்பக்கட்டை அது. இன்னும் சிலரோ நீரிலே மிதக்கும்படியாக நெட்டியாலே தேரைப் போலச் செய்து வண்ணம் கொடுத்து அதைக் கொண்டுபோனார்கள். என்ன கலைப் பண்பு!
வையையாற்றுக்குப் போகும் வழி முழுதும் ஒரே மக்கட் கூட்டம். அவர்களோடு யானைக் கூட்டம் வேறு; குதிரைக் கூட்டம் வேறு. மற்றக் காலங்களில் யானைகள் விருப்பப்படி நடைபோடலாம்; குதிரைகளும் இடசாரி வல சாரியாக ஓடலாம். ஆனால் இந்தக் கூட்டத்தில் தம் விருப்பம் போல் போக முடியுமா? சாரிகையை மறுத்து ஒரே வழியிலே நெருங்கிச் சென்றன. அவற்றின் மேலே ஏறிச் சென்றவர்களும் அவற்றின் போக்கிலே விட்டு அவை போன வழியே திரிந்தார்கள்.
கைம்மான் எருத்தர் கலிமட மாவினர் நெய்ம்மாண் சிவிறியர் நீர்மணக் கோட்டினர்
35. வெண்கிடை மிதவையர் நன்கிடைத் தேரினர்
சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
ஓர்இயவு உறுத்தர, ஊர்புஊர்பு இடந்திரீஇ;
சிலர் யானைகளின் கழுத்தின்மேல் ஏறியவராய், சிலர் ஆரவாரத்தையுடைய மெத்தென்ற நடையையுடைய குதிரையில் ஏறியவராய், புனுகு சிறந்திருக்கும் துருத்தியை உடையவராய், பனி நீரால் மணத்தைப் பெற்ற கொம்பை உடையவராய், வெள்ளை நெட்டியாற் செய்த தெப்பத்தை உடையவராய், பல வண்ணமூட்டிய நல்ல நெட்டியாற் செய்த தேரை உடையவராய், தாம் இயல்பாகச் செல்லும் கதியை மாற்றிக் குறையாத யானைத் திரளும் குதிரைத் திரளும் ஒரு வழியிலே நெருங்கிச் செல்ல அவற்றை ஊர்ந்து ஊர்ந்து (மகளிரும் மைந்தரும்) இடந்தோறும் உலவ.
கருவியராகி (31), இழிவராகி (32), எருத்தராகி, மாவினராகி (33), சிவிறியராகி, கோட்டினராகி (34), மிதவையராகி, தேரினராகி (35)த் திரீஇ என்று கூட்டுக.
திரீஇ என்பது திரிந்து என்ற பொருள் உடையதேனும் திரிய என்று கொள்ளவேண்டும். இது எச்சத் திரிபு.
கைம்மான் – யானை. எருத்து – கழுத்து. கலி. ஓசையை யுடைய; கனைப்பையுடைய. நீராடச் செல்லும் கூட்ட மாதலின் போருக்குரிய குதிரைகளைக் கொணராமல் மென்மையானவற்றைக் கொணர்ந்தனர், மடம் – மென்மை. மா-குதிரை. நெய் என்றது புழுகு நெய்யை. சிவிறி – நீர் வீசு கருவி; துருத்தி யென்றும் கூறுவர். நீர் – இங்கே பனி நீர். கொம்பு – ஊதுகொம்பைப் போல உள்ளே துளையை யுடைய கொம்பு. இதில் மணமுள்ள நீரை இட்டு வைப்பர். கிடை – நெட்டி. மிதவை – மிதப்பு; தெப்பக்கட்டை. நன் கிடையை, நிறம் பிடித்த நன்கிடை’ என்பர் பரிமேலழகர் சாரிகை – சாரி; நடை. மறுத்து – நீக்கி. தண்டா – குறை உண்டை என்பது உண்டிகை எனத் திரிந்தது; உண்டை – திரள்; கூட்டம். இயவு-வழி உறுத்தர-நெருக்க. ஊர்பு – ஊர்ந்து, திரீஇ – திரிந்து; இங்கே திரிய என்ற பொருளில் வந்தது.
இளையரும் இனியரும் (27) திரிய (37) என்று கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.
இளைஞரும் கூட்டம் கூட்டமாக வந்த மகளிரும் நீரிலே இறங்கி விளையாடத் தொடங் கினர். ஆனால் சிலர் நீருள் இறங்காமல் துறை யிலே இருந்தார்கள். மதுரையின் புறச் சேரியில் சில சாதியினர் வாழ்ந்தார்கள். அவர்கள் மதுரை மாநகர் மக்களோடு ஒன்றி விளையாடும் உரிமை இல்லாதவர்கள். அவர்கள் நீரில் இறங்கி விளையாடவில்லை. ஆனாலும் அவர்களும் கூட்டத்துடன் வந்து துறையின் கண்ணே நின்று வேடிக்கை பார்த்தார்கள். சிலருக்குத் தாமும் நீரிலே புகுந்து மற்றவர்களோடு விளையாட ஆசை இருந்தாலும் சமுதாய அமைப்பினாலும் தங்களுடைய தொழில் வகையினாலும் நீருக்குள்ளே செல்ல முடியாத நிலையில் இருந்தார்கள் அவர்கள். அவர்களும் புகவில்லை. மற்றும் ஒருசாரார் வேறு எவ்வகையான தடையும் இல்லாமல் இருந்தாலும் நீருக்குள்ளே இறங்கி அங்கே நடக்கும் விளையாட்டுப் போரில் ஈடுபடும் ஆற்றல் இல்லாதவர்கள்; அதற்கு ஏற்ற மைந்து அற்ற மெலியோர். அவர்களும் துறையிலே நின்றார்கள். இப்படிச் சேரி இளையரும், செல்லுதற்கு அரிய நிலையினரும், வலியர் அல்லோரும் அவர்களுக்கு விருப்பமான துறைகளிலே இருந்து நீர் விழாவிலே கலந்து கொண்டார்கள். மெலியர் அல்லோராகிய ஏனையோர் புதிய புனலில் புகுந்து நீர்விளையாட்டைப் புரிந்தார்கள்.
வேறுபடு நீர்
அவர்கள் புகுந்து உழக்குவதால் நீர் தன் நிறமும் இயல்பும் மாறிவிட்டது. பலவகையான வாசனைப் பண்டங்களை ஊறவைத்த நீரைக் குழலிலே பெய்து கொண்டு வந்தவர்கள், அதனை எல்லோர் மேலும் வீசினார்கள். மைந்தரும் மகளிரும் அணிந்திருந்த சந்தனக் குழம்பு நீரிலே கரைந்தது. வாசனைத் தைலங்களைத் தலையில் தடவிக் கொண்டு நீராடியமையால் அந்தத் தைலம் ஆற்றிலே கலந்தது. பீச்சாங் குழலின் மூலம் வீசிய புழுகு நெய் நீரோடு கலந்தது. அவரவர்கள் அணிந்திருந்த மலர்கள் சிதைந்து நீரிலே விழுந்தன. பலவகை மணத்தைப் பெற்ற இத்தனை பண்டங்களும் கலந்ததனால் வையையாறு புதிய மணத்தை வீசியது; அது வரும் வழி முழுதும் மணம் வீசிக் கொண்டே வந்தது.
சேரி இளையர், செலவரு நிலையர்
வலியர் அல்லோர் துறைதுறை அயர
40. மெலியர் அல்லோர் விருந்துபுனல் அயரச்
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும் யாறுவர லாறு.
மதுரையின் புறச் சேரியில் வாழும் இளைஞர்கள் மரபு பற்றி நீருக்குள்ளே மற்றவர்களோடு செல்வதற்கு அரிய நிலையை உடையவர்கள், உள்ளே புகுந்து விளையாடும் வலிமை உடையோரல்லாதார் யாவரும் துறைதோறும் விழாவை விரும்பி நின்று பார்க்க, மெலியர் அல்லாதார் நீருக்குள்ளே புகுந்து புதுப் புனல் விளையாட்டைச் செய்ய, அதனால் பல வாசனைப் பொருள்கள் ஊறிய சாரமாகிய நீரும் சந்தனக் குழம்பும் வாசனைத் தைலமும் புனுகும் பூக்களும் கலந்து மணம் வீசிச் செல்லும் வையையாறு தான் வரும் வழியில்.
சேரி -புறஞ்சேரி; இங்கே பிற நாட்டிலிருந்து வந்த யவனர் முதலியவர்கள் இருந்தார்கள். செலவரு நிலையர் என்பது பாணர் முதலியோரை. துறை அயர – துறையை விரும்ப. சேரி இளைஞரே செலவரு நிலையர் என்று பரிமேலழகர் கொண்டு, ‘காதலாற் செல்லும் புறச் சேரியில் இளையர் செல்லுதற்கரிய நிலையராக’ என உரை எழுதுவர். விருந்து – புதுமை. அயர -விளையாட்டைச் செய்ய. சாறு -சாரம்; ‘பத்துத்துவர் முதலாயின ஊறின நீர் (பரிமேலழகர்.) சேறு – குழம்பு ; இங்கே சந்தனக் குழம்பு. நெய் – வாசனைத் தைலம், புழுகு நெய். நாறுபு – மணம் வீசி. நிகழும் – செல்லும். வரலாறு – வருகிற வழியில். ‘இவ்வியாறு வருகின்றவாறு’ என்பர் பரிமேலழகர்.
வையையாற்றில் நீராடிக் காலையில் செய்தற்குரிய கடன்களைச் செய்தற் பொருட்டு அந்தணர் வந்தனர். வேதத்தை விரும்பி ஓதும் அவர்கள் நீர்த் துறைக்கு வந்தபோது அதில் ஒருவகை மணம் வீசுவதைக் கண்டார்கள். மூழ்குவதற்கும் ஆசமனம் முதலியன செய்வதற்கும் ஏற்றது தூய நீரே. தூயதல்லாத நீரிலும், வெந்நீரிலும் கடன்களை இறுத்தல் முறையன்று. எப்போதும் போலன்றி நீர் புதிய மணம் வீசி வேறுபட்டதைக் கண்டு மருண்டார்கள். மகளிரும் மைந்தரும் பூசியிருந்த வாசனைப் பொருள்களைக் கழுவி வந்த கலங்கல் நீர் ஒன் றும் செய்வதற்கு ஏற்றதன்று என்று எண்ணி, அதில் நீராடவில்லை; ஆசமனமும் செய்யவில்லை.
நாறுபு நிகழும் யாறுகண்டு அழிந்து வேறுபடு புனல்என விரைமண்ணுக் கலிழைப்
45. புலம்புரி அந்தணர் கலங்கினர் மருண்டு.
மணம் வீசிச் செல்லும் வையை யாற்றைக் கண்டு, இது தன் இயல்புமாறி வேறுபட்ட நீர் என்று எண்ணி, மகளிரும் மைந்தரும் பூசிய வாசனைப் பண்டங்களைக் கழுவு தலையுடைய கலங்கல் நீரை, வேதத்தை விரும்பி ஓதும் அந்தணர் கண்டு மருண்டு கலங்கினர்.
நாறுபு -மணம் வீசி. அழிந்து தன் இயல்பு நீங்கி. வேறுபடு புனல் – வேறான இயல்பைப் பெற்ற நீர். விரை வாசனைப் பொருள்கள். மண்ணு – மண்ணுதல்; கழுவுதல். கலிழை – கலங்கல் நீரை. புலம் – வேதம். புரி – விரும்பும். கலங்கினர் – மனம் குழம்பினர். மருண்டு – வியப்படைந்து; இவ்வாறு வருதற்குக் காரணம் என் என்று வியந்தனர். கலங்கினர் என்பதற்கு, ‘நீராடலும் வாய் பூசலும் முதலிய தம் தொழில் செய்யாது நீங்கினர்’ என்று உரை எழுதுவர் பரிமேலழகர்.
“அந்தணர் மாத்திரம் வேறுபட்ட வையை நீரைக் கண்டு மருண்டு கலங்கினார் என்பது இல்லை; மற்றவர்களும், இந்த நீர் உண்ணப் பயன்படாது” என்று கண்டு நீங்கினர். அவர்கள் நீரின் மணத்தை மாத்திரம் கண்டு விலக வில்லை. அதில் வரும் பொருள்களைக் கண்ட போது அதனைப் பருக மனம் கொள்ளவில்லை. அவர்கள் கண்ணிற் பட்டவை எவை?
புனல் விளையாட்டு நிகழ்த்த வந்த மகளிர் தம் கூந்தலிலே செருகியிருந்த மலர்களை எடுத்து எறிந்து நீராடினார்கள். அந்த மலர்கள் வையை யாற்றிலே மிதந்து வந்தன. மைந்தர்கள் மார்பிலே அணிந்த மாலைகள் கழன்று வந்தன; மகளிர் அணிந்த கோதைகளும் வந்தன. ஆடவர் அணியும் மாலையைத் தார் என்றும் மகளிர் அணிவதைக் கோதை என்றும் சொல்வது மரபு. நீர்விளையாட்டில் ஈடுபட் டவர்கள் கழித்த மலரும் தாரும் கோதையும் மிதந்து வந்தன.
இவைகள் யாவும் நகர மக்கள் நீராடும் இடத்திலே கலந்த பொருள்கள். ஆனால் முன்பே வையை யாற்றில் வேறு பொருள் களும் வருகின்றன. புது வெள்ளமாதலின் இரு கரைகளிலும் உள்ள பொருள்களை அடித் துக்கொண்டு வருகிறது ஆறு. பல மரங்களின் வேரைப் பறித்து அந்த வேரையும், மரத்தடியிலே உள்ள தூரைப் பறித்து அதனையும், மரஞ் செடி கொடிகளின் காயையும் கொடி களின் கிழங்கையும் பறித்து அவற்றையும் அடித்துக் கொண்டு வருகிறது ஆறு. வரும் வழியில் இழிவான பழக்க வழக்கங்களை உடைய பூரிய மாக்கள் புனலைக் கண்டவுடனே ஆரவாரம் செய்கின்றனர். அதன் கரையிலே குதித்துக் கொம்மாளம் போட்டு விருந்துண்கின்றனர். அவர்கள் விருந்தில் ஊனும் கள்ளுந்தானே இருக்கும்? அவர்கள் பன்னாடையால் வடிகட்டிய கள்ளை நுகர்கின்றனர்; அந்தக் கள்ளை உகுக்கின்றனர். அவர்கள் உண்டு ஒழித்த ஊனும், உகுத்த கள்ளும் வையை யாற்றின் தூய்மையைக் கெடுக்கின்றன.
மலரும் தாரும் கோதையும் கலப்பதனால் வையையாற்று நீர் வேற்று மணம் உடைய தாயிற்று; வேரும் தூரும் காயும் கிழங்கும் வருவதனால் தெளிவற்றுக் கலங்கியதாயிற்று; ஊனும் கள்ளும் கலப்பதால் அதன் நலனே அழிந்து விட்டது. இவற்றால் வையை நீர் தூயது, தெளிந்தது, ஆடுதற்குரியது, பருகுதற்குரியது, ஆடை வெளுப்பதற்குரியது என்று பலபடி யாகச் சொல்லும் இயல்புகள் யாவும் மாறிவிட் டன. வெள்ளம் வந்தாலும், விரிந்த பரப்புடைய நீர் இப்போது இருந்தாலும், அது சேறாகவும் வேறுபட்ட இயல்புடையதாகவும் இருந்தது.
50. மாறும்மென் மலரும் தாரும் கோதையும்
வேரும் தூரும் காயும் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பதும் மண்டி நார்
அரி நறவம் உகுப்ப நலன்அழிந்து வேறுஆ
கின்று இவ் விரிபுனல் வரவுஎனச்
சேறுஆடு புனலது செலவு.
சூடிக் கழித்த மெல்லிய மலரும், ஆடவர் அணிந்த தாரும், மகளிர் அணிந்த மாலையும், மரஞ் செடி கொடிகளின் வேரும் தூரும் காயும் கிழங்கும், இழிந்த மக்கள் உண்ணும் ஊனும் நிரம்பி, அம்மக்கள் பன்னாடையினாலே வடிகட்டின கள்ளைச் சிந்த, இவற்றால் தனது நல்ல இயல்பு கெட்டு, இந்த விரிந்த நீர் வரவு இப்போது நமக்குப் பயன் படாமல் வேறாகிறது என்று கண்டார் கூறும்படி சேறுபடும் வையை நீரினது கதி இருந்தது.
மாறுதல் – மாற்றுதல்; சூடிக் கழித்தல். தார், மைந்தர் அணிவது; கோதை, மகளிர் அணிவது; “மகளிர் கோதை மைந்தர் புனையவும், மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்” (பரிபாடல், 20:21-2);”ஒலிகொள் ஆயம், ததைந்த கோதை தாரொடு பொலிய” (மதுரைக் காஞ்சி, 264.5) என்பதற்கு, ‘புதுநீர் விழவின் ஆரவாரத்தைத் தம்மிடத்தே கொண்ட மகளிர் திரள் தம்மிடத்து நெருங்கின கோதை தம் கணவர் மார்பின் மாலையுடனே அழகுபெற’ என்று நச்சினார்க்கினியர் உரை எழுதுவர். தூர் – அடிமரப் பகுதி, பூரிய மாக்கள்- கீழ் மக்கள்.பூரிய மாக்கள் உண்பது என்றது ஊனை. மண்டி- நெருங்கி; நிரம்பி. நார் – பன்னாடை. நறவம்-கள். நார் அரி நறவம் – மரப்பட்டையினால் அரித்துப் பண்ணிய கள் என்றும் பொருள் கொள்ளலாம். உகுப்ப – சிந்த. நலன்- நல்ல இயல்பு. வேறு – தனக்குரிய இயல்பு மாறி வேறுபட்ட இயல்பு. ஆகின்று – ஆகின்றது. என- எனச் சொல்லிப் பிறரும் நீங்க. புனலது செலவு இருந்தது என ஒரு சொல் வருவித்து முடிக்கவேண்டும்.
புனலின் உரை
விடியற் காலையில் தமிழ்ப் புலவர்களின் புகழைப் பெற்ற வையையின் புனல் மதுரைக்குள் வந்த அழகு கண் கொள்ளாக் காட்சி. தமிழ் வையைத் தண்ணம் புனல் அந்த விடியற் காலையில் ஒரு செய்தியுடன் வந்தது. இரவில் தம்முடைய காதலிமாரோடும் திருப்பரங் குன்றத்தில் கட்டிளங் காளையர் இன்புற்றுத் தங்கிய செய்தியை, அந்த இன்பத்தைப் பெறுத வர்களுக்கு உரைக்க வந்தது போல வையைத் தீம்புனல் படர்ந்தது.
குன்றத்தினின்றும் அருவிக்கால் இழு மென்ற ஓசையோடு இறங்கியது. அந்த அருவி காதலர்கள் இனிது தூங்குவதற்குப் பாடும் தாலாட்டுப் பாட்டைப்போல இருந்தது. அங்கே காற்றுக்குப் பஞ்சம் உண்டா? அதற்குத் தடைதான் உண்டா? தடையின்றி வருகின்ற தூய காற்று, உருவமற்ற அரூபியாக இருந்தா லும் அது வீசும்போது ஒருவகை இன்னொலியை உண்டாக்கியது. அந்தக் காதலர்களின் இன்ப நிலையை அது பாராட்டியது போலும். இப்படி அருவிக்கால் தாலாட்டவும், அரூபியான காற்றுப் பாராட்டவும் தம் காதல் மங்கையரின் தனங்களின் இடையே ஆடவர் இரவிலே அளவளாவித் தூங்கும் சிறப்புடையது முருகன் எழுந்தருளிய திருப்பரங்குன்றம். இந்தச் செய்தியைச் சொல்வது போல வையை நீர் ஊரிடை யோடி வந்தது. தம் காதலரோடு கூடாமல் தனித்திருக்கும் மகளிருக்கு, அவர்களுடைய கணவர்கள் தம் காமக் கிழத்தியரோடு இரவில் அளவளாவியதை யெல்லாம் தெளிவாக இருள் புலரும் விடியற் காலையிலே அறிவிப்பது போலத் தரையிலே படர்ந்து சென்றது வையைத் தண்புனல்.
வரைஅழி வால்அருவிக் கால்தா லாட்டக் கரைஅழி வால்அருவிக் கால்பா ராட்டஇரவிற் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
55. புரைவது பூந்தாரான் குன்றுஎனக் கூடார்க்கு
உரையோடு இழிந்து உராய் ஊரிடை ஓடிச்
சலப்படை யான்இரவில் தாக்கியது எல்லாம்
புலப்படப் புன்னம் புலரியில் நிலப்படத்
தான்மலர்ந் தன்றே
60. தமிழ்வையைத் தண்ணம் புனல்.
மலையினின்றும் மிக்குவரும் தூய அருவியின் கிளை தாலாட்டவும், தடையின்றி மிக்குவரும் தூய உருவமற்ற காற்றுப் பாராட்டவும், இரவிலே தம் காமக் கிழத்தியரைப் புணர்ந்தவர்கள் அவர்களுடைய தனங்களிடையே தங்குதல் சிறந்திருப்பது பூமாலையை யணிந்த முருகனுடைய திருப் பரங்குன்றம் என்று அங்கே வந்து இன்புறாதவர்களுக்குச் சொல்லும் சொல்லோடே இறங்கிப் பரவி ஊரினிடையே ஓடி, வஞ்சனையையே படையாகக் கொண்டு அவ்வாடவர் இரவில் செய்ததெல்லாம் நன்றாக வெளிப்பட மிக்க விடியற் காலையில் நிலத்திலே நன்கு ஈரம் படும்படி தமிழால் புகழ் பெற்ற வையை யாற்றின் குளிர்ந்த அழகிய புனல் பரவியது.
அருவி வழியே ஆற்றிலே கலந்துவந்த பொருள்கள் காதலர்கள் இன்புற்றதைக் காட்டியது.
வரை – மலை. அழிதல் – மிகுதல். வால் அருவிக்கால்- தூய அருவியின் கிளை, தூய அருவமான காற்று. அருவி – அருவத்தை உடையது;
அரூபி என்பதன் சிதைவு அல்கல் – தங்குதல். புரைவது – சிறப்படைவது. பூந்தாரான் என்றது முருகனை. திருப்பரங்குன்றத்தைக் குன்றென்று அடையின்றிச் சொல்வது மரபு. கூடார்க்கு – வந்து சேரா தவர்களுக்கு. உரையோடு – சொல்லும் சொல்லோடு; என் றது புலப்படுத்தும் அடையாளங்களைச் சுட்டியபடி. இழிந்து. இறங்கி, உராய் – பரந்து, சலப்படையான் – வஞ்சகமாகிய ஆயுதத்தால். தாக்கியது – துன்புறுத்தியது. வீட்டிலுள்ள மனைவியரை அவர் அறியாமல் பிரிந்து காமக் கிழத்திய ரோடு இருந்ததையே சலப்படையால் தாக்கியது என்றார். புன்னம் புலரி – மிக்க புலரி; புலரி-விடியற்காலம். பென்னம் பெரிது, சின்னஞ் சிறிது, கன்னங் கரிது என்பன போலப் புன்னம் புலரி என வந்தது; மிகுதிப் பொருளைக் காட்டியது. மலர்ந்தன்று.பரவியது. தமிழ் வையை-தமிழ்ப் புலவராற் பாடப் பெற்ற வையை; தமிழ் நாட்டுத் தலைநக ராகிய மதுரையைத் தமிழ் மதுரை என்றது போலச் சொன்னதாகவும் கொள்ளலாம்.
2
முதல் நாள் வையை நீரில் தன் காமக் கிழத்தியோடும் நீராடினான் ஓர் ஆடவன். அவன் மனைவி வீட்டில் இருந்தாள். அவனுக்குரிய காதற் பரத்தை ஒருத்தியும் இருந்தாள். அவனுடைய இல்லத்தின் கண் ஒருசார் வாழ்ந்து அவனுக்கு இன்பம் ஊட்டுபவளாக இருந்த இற்பரத்தையாகிய காமக் கிழத்தியோடு அவன் நீர்விளையாடி இன்புற்றான்
இன்புற்றான் என்ற செய்தி அவனுடைய காதற் பரத்தைக்கும் மனை விக்கும் தெரிந்தது.
சேரியிலே வாழும் பொது மகளிரைச் சேரிப் பரத்தையர் என்று வழங்குவர். அவருள் தலைவன் காதலைப் பெற்று அவனுக்கே உரிய வளாக வாழ்பவள் காதற் பரத்தை; இவள் சேரிப் பரத்தையின் மகள். அவ்வாறு இருந்த காதற் பரத்தையின் மகளாய், மணவினை ஒன்றையன்றி மற்ற எல்லா நலங்களையும் பெறும் ஒருத்தியைக் காமக் கிழத்தி என்றும் இற்பரத்தை யென்றும் சொல்வார்கள். நாள் தோறும் அமுதத்தையே நுகரும் ஒருவன் அது தெவிட்டினால் சிறிது புளிப்புச் சுவையையும் நுகர்வதுபோலத் தலைவன் தன் மனைவியோடு இன்புற்று வாழும் காலத்தில் இடையே இத்தகையவர்களோடு அளவளாவுவது வழக்கம்.
பரத்தையரோடு அளவளாவுவது தெரிந் தால் தலைவிக்கு ஊடல் உண்டாகும். இங்கே முதல் நாள் இற்பரத்தையோடு நீராடினான் என்ற செய்தியை உணர்ந்த காதற் பரத்தை தலைவனிடம் ஊடலுடையவளாக இருந்தாள். தலைவன் தளிரைக் கொய்து கொண்டு வந்து அவளுக்குக் கையுறையாகக் காட்டி வையையில் புனல் வந்த செய்தியை மேலே உள்ளவாறு சொன்னான்.
காதலர்கள் ஒன்றுபட்டு விளையாடும் விளையாட்டைப் பற்றி அவன் கூறக் கூற அவளுக்குக் கோபம் மிகுதியாயிற்று. கோபத்தோடு பேசலானாள்:
காதற் பரத்தை : நான் பழையவள். பழைய பொரு ளிடம் சலிப்பு உண்டாவதும் புதிய பொருளிடம் மோகம் உண்டாவதும் உலக இயற்கை. இதை என்னிடம் ஏன் கொண்டுவந்து தருகிறாய்? என்றும் மாறாத புதுமையை உடையவரும் நின்னால் விரும்பப் படுவாரு மாகிய மகளிருக்காக அல்லவா இதை நீ கொய்தாய்? அப்படி இருக்க அவர்களிடம் அளிக்காமல் என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்?
தலைவன் : ஓ! நீ இந்தத் தளிரை நன்றாக அறிந் திருக்கிறாயே! நீ சொன்னவையே இவை.
(இப்படி அவன் பரிகாசமாகச் சொன்னான்.)
காதற் பரத்தை : நீ என்ன சொன்னாலும் உண்மை உண்மைதான். இப்போது மிகவும் நல்லவனைப் போல நீ பணிந்துதான் நிற்கிறாய். ஆனால் உன்னுடைய பழைய பண்பாகிய அன்பு ஒசிந்து (முறிந்து) விட்டது. முன்பெல்லாம் நீ தளிர் கொண்டு வந்து கொடுத்த போது அது எப்படி இருந்த தென்பது எனக்குத் தெரியாதா? உன் அன்பு எப்படி இருந்ததோ அப்படி வளப்பமாக இருந்தது. அப்போதெல்லாம் தளிரைக் கொய்தவுடனே எனக்குக் கொண்டு வந்து கொடுத்தமையால் அது துவளாமல் இருக்கும். இப்போதோ இது துவண்டிருக்கிறது; நீயே பார். யாருக்காகவோ இதைக் கொய்து கொண்டு சென்றாய். அவள் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். அதை இங்கே கொண்டு வந்திருக்கிறாய். அங்கும் இங்கும் அலைந்ததனால் இது துவண்டு போயிற்று. உன் திருட்டுத்தனம் இப்போது எனக்கு வெளிப்பட்டுவிட்டது. ஆ! ஆ! ஆ! எத்தனை அன்புடனும் ஊக்கத்துடனும் நீ இதைக் கொய்திருக்கிறாய்! உன் மார்பிலே கிடக்கும் மாலைகூட வாடிவிட்டதே! அப்படி வாடும்படி நீ கொய்தது தெரிந்தும் அவள் உனக்கு உடம்படவில்லையோ? மிகவும் வருந்திக் கொய்த தழையைக் கையிலே எடுத்துச் சென்று அவளிடம் பல்லைக் காட்டிப் பரக்க விழித்துச் செய்யாததை யெல்லாம் செய்தாயே; அதற்குக்கூடவா அவள் மனம் இரங்கவில்லை ? நீ கெஞ்சிக் கூத்தாடியது கண்டும் அவள் சம்மதிக்கவில்லையா?
”விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்.”
“தளிர் அறிந்தாய்; தாம் இவை.”
“பணிபுஓசி பண்ப! பண்டு எல்லாம் நனிஉருவத்து;
என்னே துவள்கண்டீ?
65. எய்தும் களவுஇனி; நின்மார்பில் தார்வாடக்
கொய்ததும் வாயாளோ? கொய்தழை கைபற்றிச்
செய்ததும் வாயாளோ? செப்பு.”
” அழியாமல் எப்போதும் புதுமையை உடைய, நின்னால் விரும்பப்படும் மகளிருக்கு இதனைக் கொய்தாய்” (என்று காதற் பரத்தை கூறினாள்.)
“இந்தத் தளிரை நீ நன்கு அறிந்தாய்; அவையே இவை” (என்று குறிப்பாகத் தான் அது செய்யவில்லை என்பது தோன்றத் தலைவன் சொன்னான்.)
“இப்போது பணிந்து, முறிந்த பழைய பண்பை உடை யவனே! முன்பு எல்லாம் நன்றாக அழகு பெற்றதாக இருந்தது நீ தந்த தளிர்; இப்போது இது துவள்வது ஏன்? நீயே பார். நின் திருட்டுத்தனம் இப்போது வெளிப்பட்டுவிட்டது. நின் மார்பில் உள்ள மாலை வாடும்படியாக நின்று இத்தளிரைக் கொய்ததற்கும் அவள் உடம்படவில்லையா? கொய்த தழையைக் கையிலே கொண்டு சென்று செய்யாத வணக்க மெல்லாம் செய்ததற்கும் அவள் உன் கருத்துக்கு உடம்பட வில்லையோ? சொல்” (என்றாள் காதற் பரத்தை.)
விளியா – ஒழியாத. விருந்து விழுவார்க்கு -புதியவராகிய விரும்புவாருக்கு; விருந்து – புதுமை; இங்கே புதுமையுடை யாருக்கு ஆயிற்று.
பணிபு – பணிந்து. ஒசிதல் -ஒடிதல். பண்ப – பண்பை உடையவனே. நனி உருவத்து – நல்ல உருவத்தை உடை யது; உருவத்தது என்பது செய்யுள் விகாரத்தால் உருவத்து என நின்றது. துவள் – துவளுதல். கண்டீ – காண்பாயாக. எய்தும்- வெளிப்படும். இனி-இப்பொழுது. வாயாளோ- சம்மதியாளோ, தலைவன்: இந்தத் தளிர் வாடுவதற்குக் காரணம் உண்டு. வையையில் புதுப்புனல் வந்தமையால் பறித்தவுடனே அதைக் கடந்து வர முடியவில்லை. அலங்கரித்த தெப்பத்தில் ஏறிவர வேண்டியிருந்தது. அதனால் தாமதம் ஆயிற்று. வையை வெள்ளம் காரணமாக இந்தத் தளிர்கள் துவண்டன. வேறு என்ன என்னவோ நீ சொல்கின்றாயே! முருகனுடைய குன்றத்தின் மேல்…. (சற்று நிறுத்தி) ஆ ஆ! அந்த வையையின் நீரோட்டந்தான் எவ்வளவு அழகாக இருக்கிறது! அழகிய வெள்ளம் அல்லவா அது?
அவன் திருப்பரங்குன்றத்தின் மேல் ஆணையிட்டுச் சொல்ல வந்தவன், அதன் பெயரைக் கூறினான்; அப்பால் வையையின் அழகைக் கூறுவான் போல ஆணை என்ற சொல்லைக் கூறாமல் மாற்றினான்.
“ புனைபுணை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை
நீரின் துவண்ட; சேஎய்குன்றம், காமர்
பெருக்குஅன்றோ வையை வரவு ?”
“அலங்கரித்த தெப்பத்தில் ஏறிவரத் தாமதம் ஆயிற்று; இந்தத் தளிர்கள் புதுப்புனல் காரணமாகத் துவட்சியை அடைந்தன. முருகனது திருப்பரங்குன்றத்தின் மேல் – அழகிய வெள்ளமல்லவா வையையில் வரும் நீர்?”
புனை – அலங்கரித்த. புணை – தெப்பம்; ஓடம். தாழ்த் தது – தாமதம் ஆயிற்று; ஐ: சாரியை. நீரின் – நீர் வந்த மையால். துவண்ட – வாடின. சேஎய் – முருகன்,குன்றம் திருப்பரங்குன்றம். காமர்-அழகிய; விருப்பத்தை உண் டாக்கும் என்றும் கொள்ளலாம். பெருக்கு-வெள்ளம்.
இதனைக் கேட்ட காதற் பரத்தைக்குப் பின்னும் கோபம் மூண்டது. வையை வெள்ளத்தைப் பற்றித் தலைவன் சொல்லச் சொல்ல அவன் இற் பரத்தையுடன் நீர் விளையாட்டில் ஈடுபட்டதை எண்ணி எண்ணிப் பொருமினாள்.
காதற் பரத்தை : ஆம், ஆம். நீ சொல்வது சரி. வையையின் வெள்ளம் ஒரே நிலையில் நிற்பது அன்று. சில காலம் அது திடீரென்று பெருகுகிறது; சில காலம் அது சுருக்கத்தை அடைகிறது. உன்னுடைய காதலால் எழுந்த காமமும் ஒரே சீராக ஒரே நிலையில் நிற்குமோ? சில பேரிடம் மிக விரைவிலே குறைந்துவிடுகிறது. வேறு சிலரிடமோ மிக விரைவிலே பெருகிவிடுகிறது. ஆகவே இதை நம்பி நீ ஆணையிட்டுச் சபதம் செய்யாதே. நிலையாக நிற்கும் காதல் நின்பால் இருந்தால் சூளுறலாம். அப்படி இருப்பதில்லை என்பதை நான் அநுபவத்தில் உணர்ந்தவள் ஆயிற்றே! ஆதலின் நீ சூளுற வேண்டாம். உன் காமம் வையைப் பெருக்கை ஒப்பதுதான். ஆதலின் முன்பு ஆணையிட்டாயே; அது தவறு; நீ பிழையை யுடையவன் ஆனாய்.
“ஆம் ஆம்; அது ஒக்கும்; காதலம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ?ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும்; சூளுறல்; வையைப்
பெருக்குஅன்றோ? பெற்றாய் பிழை.”
“ஆம் ஆம்; அது பொருந்தும். காதலால் பிறந்த காமம் ஒரு படித்தாக ஓர் இயல்பிலே நிற்குமோ? விரைவிலே சுருக்கத்தையும் பெருக்கத்தையும் உடையது அது. ஆதலின் அதை நம்பி ஆணையிட்டுப் பேசாதே; உன் காமம் வையை யின் வெள்ளமே அல்லவா? நீ சூளுறவு செய்து குற்றத்தை அடைந்தாய்.
ஒக்கும் – பொருந்தும். காதல் – உள்ளத்து உணர்ச்சி. காமம் – செயல்வகை. முன்னதை உள்ளப் புணர்ச்சி யென்றும், பின்னதை மெய்யுறு புணர்ச்சி என்றும் சொல் வார்கள். ஒருக்க – ஒரேமாதிரி.ஒல்லை – விரைவில். சுருக் கமும் ஆக்கமும் உடையது என்று ஒரு சொல் வருவித்து முடிக்கவேண்டும். சூளுறல் – சூளுறாதே; ஆணையிட்டு உறுதி கூறதே; சூள் – உறுதிமொழி, சபதம்.
பின்னும் காதற் பரத்தை பேசுகிறாள்:- “நான் சொல்வதை நீ நன்கு அறிவாய். மழை பொழிகின்ற கார்காலம் இது. இப்போது வையையில் நிறைய வெள்ளம் வந்திருக்கிறது. என் இடமும் நின் இடமும் அருகில் உள்ளன. அப்படி அருகே நம் பதி இருந்தும் வையையின் வெள்ளம் நீ என்னிடம் விரைவில் வர முடியாமல் குறுக்கே நின்றது. ஓடத்தை எதிர்பார்த்து நீ காத்துக் கிடக்கவேண்டி யிருந்தது. அம்பி (ஓடம்) காரணமாகத் தாழ்க்கச் செய்யும் வெள்ளத்தை யுடைய இதே வையை இனிய இளவேனிற் காலத்து நீரின்றித் தன்னிடத்தே நாரை முதலிய பறவைகள் இரை தேரும்படி கிடக்கும்; அப்போது கடக்க எளியதாய் இருக்கும். உன்னுடைய காமமும் இப்படித்தான் காலந்தோறும் வேறுபடுகிறது. நீ வையையைப் பற்றிச் சொன்ன அத்தனை செய்தியும் அதற்குப் பொருந்தும். ஆதலின் அதனை வையையோடு ஒன்றாகக் கருது.”
(வையையில் வெள்ளம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. நீ இற்பரத்தையினிடம் கொண்ட காமம் இன்னும் குறையவில்லை என்பதை யெல்லாம் குறிப்பிடுகிறாள்.)
“அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,
குருகுஇரை தேரக் கிடக்கும், பொழிகாரில்,
இன்னிள வேனில்; இதுஅன்றோ வையை?
நின்காமம்
வையை வயமாக வை.”
“அருகில் நம் பதிகள் இருப்பனவாக, மழை பொழிகின்ற காரில் நின்னை ஓடம் காரணமாகத் தாமதிக்கச் செய்யும்; இனிய இளவேனிற் காலத்தில் பறவைகள் இரை தேடும் படியாகக் கிடக்கும்; இது அல்லவா வையையின் இயல்பு? நின் காமத்தையும் வையையைச் சார்ந்ததாக வைத்து எண்ணுவாயாக.
அருகு – பக்கத்தில். பதி – வாழும் இடம். அம்பி-ஓடம். தாழ்ப்பிக்கும் – தாமதிக்கச் செய்யும். குருகு – நாரை, கொக்கு முதலிய நீர்ப் பறவைகள்; குருகு என்பதே ஒரு வகைப் பறவையின் பெயர் என்றும் கூறுவர், இரை தேர- இரைதேட, கிடக்கும் -ஓடாமல் தேங்கி நிற்கும். காரில் கார்காலத்தில், இளவேனில் – இளவேனிற் காலத்தில். காரில் தாழ்ப்பிக்கும், வேனிலில் கிடக்கும் என்று முறையே கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்; இதனை நிரல் நிறை என்று சொல்லுவார்கள். ‘காமம்’ என்ற சொல் பிரதியில் இல்லை. பரிமேலழகர் உரையைக் கொண்டு அமைத்தது. வயமாக – வழியாக; சார்ந்ததாக.வை -வைத்து எண்ணுக. ‘மேல் வையைப் பெருக்கன்றோ என்ற துணையல்லது அதன் இயல்பு கூறிற்றிலள்; கூறாதாள் இதனால் அதன் இயல்பு கூறி, இவ்வொப்புமை யுண்மையான் அதன்கண் அவளோடு நுகர்ந்த நுகர்ச்சி இன்னும் ஒழிதற்பாற்று அன்று என்றாளாம்’ என்பர் பரிமேலழகர்.
முதலில் அவள் வையைப் பெருக்கைப் பற்றிச் சொல்வது போலச் சொன்னாள். அவள் கோபம் மிக்கது. அந்தப் பெருக்கை உவமை காட்டிப் பொதுவாக அவன் காமத்தைப் பற்றிக் கூறினாள். அவளுடைய சினம் பின்னும் மிகுதியாயிற்று. அவன் இற்பரத்தை யுடன் நீர்விளையாட்டு அயர்ந்தது முதலிய வற்றை நேரடியாக உரைக்கத் தொடங்கி விட்டாள்.
காதற்பரத்தை : வேகமாக ஓடும் ஆற்றின் இனிய புனலிலே செல்பவர்களுக்கு அந்த வேகத்தோடு செல்லும் புணை பற்றிக் கொள்ள உதவுகின்றது. அந்தத் தெப்பக் கட்டை தன்னைப் பற்றிக் கொண்டாரின் போக்குக்கும் நீரின் போக்குக்கும் ஏற்றபடி போகுமே யன்றித் தனக்கென்று எந்த விதமான இயக்கமும் இல்லாதது. எந்தச் சமயத்தில் பற்றிக் கொள்ளலாம் என்று பார்த்திருந்து வௌவிக் கொள்ளுவதில் வல்லவர்களாகிய மகளிர் நீர்விளையாட்டிலே நின் மார்பினையே தெப்பமாகக் கொள்ளுகிறார்கள். அவர்கள் இழுத்த இழுப்புக் கெல்லாம் உட்படும் மார்பை உடையாய் நீ. அப்படி யாவரும் காணப் புனல் விளையாட்டு அயர்ந்தது மாத்திரம் அன்றி, சிறிதேனும் அச்சமின்றி அவர்களோடு இரவு முழுவதும் தங்கினாய். அப்படி நீ இருந்தும் அவர்கள் மனம் நிறைவு பெற்றிருக்கமாட்டார்கள். நின்னைப் பிரிந்தமையால் அவர்கள் மிகவும் துன்புற்றார்கள். நின் பிரிவினால் அவர்களை நீ எரித்தாய். அது மாறும்படி, அந்த பிரிவினால் உண்டான துன்பு அவியும்படி, நீ அவர்களை அடைந்து இரவும் பகலும் இருந்தாய். இப்போது இங்கே வந்திருக்கிறாய். வையையில் உடைந்துவிட்ட மடையை அடைத்த பிறகுங்கூட அடைத்த இடத்தி லிருந்து பின்னும் ஊற்றெடுத்து வரும் நீரைப் போல, நீ அவர்களை அடைந்த பிறகும் வருந்தும்படி இங்கே வந்துவிட்டாயே! அவர்கள் உன் பிரிவால் மறுபடியும் நடுங்கிக் கண்ணீர் வார நிற்பார்களே! அவர்கள் நெஞ்சம் கனலெழுந்து பொருமுமே! அப்படி யெல்லாம் ஆகும்படி நீ இங்கே வராதே.
“செல்யாற்றுத் தீம்புனலில் செல்மரம் போல
80. வவ்வுவல் லார்புணை ஆகிய மார்பினை;
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;
வையை உடைந்த மடைஅடைத்தக் கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர்போல இன்னும்,
அனற்றினை துன்புஅவிய நீஅடைந்தக்கண்ணும்
பனித்துப் பனிவாரும் கண்ணவர் நெஞ்சம்
கனற்றுபு காத்தி வரவு.”
“ஓடும் ஆற்றினது இனிய புனலிலே செல்லும் தெப்பக்கட்டை போல வௌவிக் கொள்ளுதலில் வல்ல மகளிருக்குத் தெப்பமாக உதவும் மார்பை உடையாய்; சிறிதளவேனும் அஞ்சாமல் இரவு முழுவதும் அவர்களோடு தங்கினாய். வையையில் உடைந்த மடையை அடைத்த பொழுதும் பின்னும் அதில் ஊற்றெடுக்கும் நீரைப்போல, மனம் வெப்பம் அடையும்படி செய்த துன்பம் நீங்குமாறு நீ அடைந்த பொழுதும் இன்னும் நடுங்கித் துளிக்கும் நீர்த்துளி ஒழுகும் கண்ணையுடைய அம் மகளிருடைய நெஞ்சம் புழுங்கச் செய்து இங்கே வருவதை நீங்குவாயாக.”
செல்யாறு-ஓடும் ஆறு. தீம்புனல் – இனிய நீர், மரம்: ஒரு மரப்புணை என்பர்; மரக்கட்டையும் ஆம். வவ்வு – வவ்வுதல்; முதல்நிலைத் தொழிற் பெயர். இற்பரத்தையையே நினைந்து கூறினாலும் பன்மையிற் கூறினாள், அங்ஙனம் கூறுவது வழக்கமாதலின். புணை – பற்றுக்கோடு. மார் பினை – மார்பையுடையாய்; மார்பை உடையாயாகி இரவு தங்கினை யென்று ஒன்றாகப் பொருள் செய்வதும் பொருந்தும் என்னும் – எவ்வளவும். பனியாய் – நடுங்காய்; அஞ்சாயாகி. வைகினை – தங்கினாய்.
மலிரும் – ஊற்றெடுக்கும். பிசிர் – ஊற்றுநீர். அனற் றினை துன்பு – அனலப் பண்ணின நின்னால் உண்டான துன்பம்; அனற்றினை: வினையாலணையும் பெயர். அவிய கெட. கனற்றுபு – வெம்பச் செய்து. இன்னும் கனற்றுபு என்று சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். கனற்றுபு வரவு காத்தி என்று கூட்டுக. காத்தி – காப்பாயாக; ஒழி வாயாக என்றபடி,
‘தனக்கென ஒரு செலவின்றி யாற்றின்கட் செல்கின்ற புனல் வழியே செல்லும் மரம்போல’ என்பர் பரிமேலழகர்.
இதைக் கேட்ட தலைவன் மேலே கூறலானான்.
தலைவன்: நடந்ததைச் சொல்லி விடுகிறேன். நான் ஒரு தடாகத்திலே குளித்தேன். அந்தப் பைந்தடத்தின் கரையில் ஒரு பெண் நின்றாள். தானும் குளிக்க வேண்டு மென்று எண்ணினாளோ என்னவோ, கரையில் நில்லாமல் நீரிலே மூழ்கினாள்; மூழ்கி எழுந்து என்மேல் மயங்கி விழுந்தாள். நான் அது கண்டு எழுந்து அவளை அணுகித் தூக்கச் செல்லுவதற்குள் அவளே எழுந்து விட்டாள். அவள் காமம் நுகரும் பருவம் உடையவள் அல்ல. உடையவளானால் யான் எடுக்குமட்டும் அப்படியே கிடப்பாள் அல்லவா? அவளைத் தவிர, தான் அணிந்த கோதையைப் போல என் மார்பினுள் அழுந்தி அணையப் பெற்றாள் வேறு யார்? நான் அவளோடு ஆடிய ஆறு யாது?
“நல்லாள் கரைநிற்ப நான்குளித்த பைந்தடத்து நில்லாள், திரைமூழ்கி நீங்கி எழுந்துஎன்மேல் அல்லா விழுந்தாளை எய்திஎழுந் தேற்றுயான் கொள்ளா அளவை எழுந்துஏற்றாள்; கோதையின் உள் அழுத்தி யான்எவளோ?
தோய்ந்தது யாது?”என.
“ஒரு பெண் கரையில் நிற்க, நான் குளித்த பசிய குளத்திலே அவள் கரையிலே நில்லாதவளாய் நீரிலே மூழ்கிப் பின் அங்கிருந்து எழுந்து என்மேல் மயங்கி விழுந்தவளை அணுகி எழுந்து நான் எடுப்பதற்குள் அவளே எழுந்து விட்டாள். கோதையைப் போல என் மார்பினுள் அழுத்தப் பட்டவள் வேறு யார்? நான் அவளுடன் படிந்தது எந்த ஆறு?” என்று தலைவன் கூற.
நல்லாள் – பெண். திரை என்றது இங்கே நீரை; ஆகு பெயர். அல்லா விழுந்தாளை- மயங்கி விழுந்தவளை; அல்லா -அல்லாந்து. எழுந்தேற்றல் – எழுதல். கொள்ளா அளவை – கொள்ளுவதற்கு முன். எழுந்தேற்றாள்- எழுந் தாள். கோதையின் – மகளிர் அணியும் மாலையைப் போல. உள் அழுத்தியாள்- என் மார்பினுள் அழுத்தப் பெற்றவள். என்னைத் தன் கோதைக்குள் அழுத்திக் கொண்டவள் என்றும் கூறலாம். தோய்ந்தது – படிந்தது; நீராடியது. காதற்பரத்தை : நீயும் அவளும் ஆடிய ஆறு யாதென்றா கேட்கிறாய்? அதை என் வாயினால் சொல்ல வேண்டுமென்று நீ விரும்பினால் நான் சொல்கிறேன். நீ தெளிவாக அறிந்து கொள். வேறு எங்கோ இருக்கிற ஆறா அது? இந்த வையை ஆறுதான்.
“தேறித் தெரிய உணர்தி; பிறிதும்ஓர்
யாறுஉண்டோ? இவ்வையை யாறு.”
“நன்றாகத் தெளிந்து அறிந்து உணர்வாயாக; வேறு ஓர் ஆறும் உண்டோ ? நீ ஆடியது இந்த வையை ஆறுதான்.”
தேறுதல் – தெளிதல். தெரிதல் – ஆராய்தல்.
இதைக் கேட்ட தலைவன் மறுபடியும் ஆணையிட்டுச் சொல்லலானான்.
தலைவன்: நான் குளத்தில் அல்லவா குளித்தேன்? அப்படி இருக்க, நீ வையை ஆறு என்று சொல்லுகிற முரண்பாட்டுக்குக் காரணம் என்ன? நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா? தண்பரங்குன்றத்தின் தலையைக் கையால் தொட்டு ஆணையாகச் சொல்கிறேன்.
“இவ்வையை யாறுஎன்ற
மாறுஎன்னை? கையால்
தலைதொட்டேன் தண்பரங் குன்று.”
“நான் தடத்தில் நீராடியது உண்மையாக இருக்க, நீ இந்த வையை ஆறு என்று சொன்ன மாறுபாடு ஏன்? தண்பரங்குன்றின் தலையை என் கையால் தொட்டு ஆணையிட்டேன்.’
மாறு மாறுபாடு. என்னை – ஏன்; என்ன காரணம். கையால் தலைதொட்டு ஆணையிடுதல் மரபு. தண் பரங்குன்று – குளிர்ச்சியான திருப்பரங்குன்றத்தை.
காதற்பரத்தையின் ஊடல் தணியாமல் இருந்தமையால் தலைவன் திருப்பரங்குன்றத்தின்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இவ்விரு வரிடையிலும் நடைபெறும் வாக்கு வாதத்தைக் காதற் பரத்தையின் வீட்டிலுள்ள முதிய பெண்கள் கேட்டார்கள். தம்முடைய மகளுடைய ஊடல் எல்லை கடந்து சென்று விட்டதை உணர்ந்தனர். தலைவனுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா?ஆதலின் இனியும் அவளுடைய ஊடல் நீட்டித்தால் அவர் களிடையே உள்ள உறவு முறிந்துவிடும் என்று அறிவார்கள். ஆதலின் காதற் பரத்தைக்கு அவர்கள் நல்லுரை கூறலானார்கள்.
பெண்டிர்: பெண்ணே, நீ இன்னும் சினத்தோடு இருத்தல் முறையன்று. கோபத்தால் மை உண்ட நின் கண்கள் சிவந்திருக்கின்றன. அந்தச் சிவப்பைக் கண்டு தலைவன் அஞ்சுகிறான். அவனிடத்தில் உள்ள கோபத்தை விட்டுவிட்டு அவனோடு அளவளாவத் தொடங் குவாயாக. இந்த ஊடல் அதிகமாகிவிட்டால் காதல் முறிந்துபோகும். எதையும் அளவிலே நிறுத்திவிடவேண்டும். ஆண்மகனது பொறுமைக்கு எல்லை உண்டு. அந்த எல்லை கடக்கும்படி நீ செய்யக்கூடாது. உன்னுடைய துனி (ஊடல்) மிகுதிப்பட்டால் இவ்வளவு காலம் வளர்த்த காமம் கெட்டுவிடும். இவன் மனம் கலங்கியிருக்கிறான். மேலும் நீ கலக்கத்தை அதிகமாகக் கொள்ளும்படி கோபித்தால் இவன் போய்விடுவான். அப்பால் நீ இவனைத் தேடிச் செல்லவேண்டி யிருக்கும். வலிய இருளில் அவ்வாறு நீ செல்லாதே. அது பிழை ஆகும்.
“சினவல்; நின் உண்கண் சிவப்புஅஞ்சு வாற்குத்
துனி நீங்கி ஆடல் தொடங்கு; துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்! இவன்
அல்லா நெஞ்சம் உறப்பூட்டக் காய்ந்தே
வல்இருள் நீயல்; அதுபிழை ஆகும்” என.
“சினங் கொள்ளாதே; நின் மையுண்ட கண்ணினது சிவப்பைக் கண்டு அஞ்சுகின்ற தலைவன் பொருட்டு உன் ஊடல் நீங்கி அவனோடு அளவளாவுதலைத் தொடங்கு; ஊடல் நன்றாக மிகுமானால் காமம் கெட்டுவிடும்; மகளே! இவன் தன் நெஞ்சத்தில் கலக்கத்தை மிகுதியாக ஏற்றுக் கொள்ளும்படி நீ அவனைக் கோபித்து (அவனைப் போகவிட்டு, அப்பால் அவனைத் தேடிக்கொண்டு) வலிய இருளில் நீண் காதே; அது குற்றமாகும்” என்று (வீட்டிலுள்ள முதிய பெண்டிர் சொல்ல என்று சொல்ல வருகிறார்.)
சினவல்-கோபிக்காதே. உண்கண் – மையுண்ட கண். துனி – ஊடல். ஆடல் – அளவளாவி இன்புறுதல்; “விளையாடல்” (பரிமேலழகர்) நனி-நன்றாக. கன்றிடின் – மிகுதி யானால். மகள்: விளி; ‘அதற்குக் காரணமாகிய மகள் இவன் சொல்லிய பேதைப் பருவத்தாள்’ என்று இவள் என் பதற்கு உரை விரிப்பர் பரிமேலழகர். அல்லா – அல்லாப்பு; கலக்கம். நீயல் – நீங்காதே, ‘பிழை : நீங்கின் இடனறிந்து வட்டி இனிதின் உணரும் ஒழுக்கத்திற்குப் பிழையாம்” (பரிமேலழகர்.)
இவ்வாறு முதிய பெண்டிர் இடித்துரைக்கவும் தலைவனிடமிருந்து தூதாகச் சென்று சமாதானம் செய்பவர்கள் அவளுடைய கோபத்தைத் தணிக்கவும் அவள் ஊடல் நீங்கித் தலைவ னோடு அளவளாவத் தொடங்கினாள். அவளுடன் தலைவன் இன்புற்று இருந்தான். அடுத்த நாள் வையையில் நீர் வந்ததையும், அதில் தலைவன் இற்பரத்தையுடன் விளையாடியதையும், அதை உணர்ந்த காதற் பரத்தை ஊடியதையும், பின்பு ஊடல் தவிர்ந்ததையும், தலைவனும் அவளும் அளவளாவியதையும் தலைவனுடைய மனைவியா கிய தலைவி கேள்வியுற்றாள். இப்போது அவளுக்குத் தலைவனிடத்தே கோபம் உண்டாயிற்று.
அவளுடைய ஊடலைத் தணிவிப்பதற்கு யாரைத் தூதாக அனுப்பலாம் என்று யோசித் தான் தலைவன். பாணனுடைய மனைவியும் ஆடல் பாடலில் வல்லவளுமாகிய விறலியைத் தலைவியின் உள்ளம் குளிரும்படி பேசி அவள் ஊடலை ஆற்றி வரும்படி அனுப்பினான். அவள் தலைவன் நல்லவனென்று சொல்ல, அது கேட்ட தலைவி தான் கேள்வியுற்ற அத்தனை யையும் ஒன்றுவிடாமல் சொன்னாள்; வையையில் வெள்ளம் வந்தது முதல் காதற்பரத்தை தன் ஊடல் தவிர்ந்து தலைவனுடன் அளவளாவியது வரைக்கும் சொன்னாள்.
மேலே சொன்னவற்றை யெல்லாம் சொல்லிப் பின்னும் சொல்லுகிறாள்; விறலியினிடம் சொல்லுகிறாள்.
தலைவி : விறலியே! முன்னே சொன்னபடியெல்லாம் வீட்டில் உள்ள முதிய மகளிர் சொல்லிக் காதற்பரத்தைக்கு அறிவுறுத் தினார்கள். பிறகு தலைவனுக்குத் தூதாக வந்து சமாதானம் செய்ய வல்லவர்களாகிய பாணன் முதலியவர்கள் அவளைக் கெஞ்சியும் பாராட்டியும் பல வகையாகப் பாடுபட்டு அவள் ஊடலைத் தெளிவித்தார்கள். அவள் ஊடல் தவிர்ந்தாள். பிறகு அந்த இருவரும் மதுவுண்டு களிப்பார்கள். மகிழ்ச்சிமிக்கு வையை யாற்றிலே குளித்து விளையாடுவார்கள். காமம் மேன்மேலும் கொழுந்துவிட்டுப் படரும்படியாக ஒருவருக்கு ஒருவர் இன்பத்தை அளிப்பார்கள். பிறகு ஊடல் கொள் வார்கள். அந்த ஊடல் நீங்கிப் பலபல இடங்களுக்குச் சென்று அங்கங்கே விளையாடு வார்கள்.
“இல்லவர் ஆட இரந்து பரந்துஉழந்து
வல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்!
களிப்பர்; குளிப்பர்; காமம் கொடிவிட
அளிப்ப; துனிப்ப; ஆங்காங்கு ஆடுப. “
விறலியே! (முன்னே சொன்னபடி) வீட்டிலுள்ள முதிய பெண்டிர் சொல்ல, ஊடலைத் தெளிவிப்பதற்கு வல்ல வர்களாகிய பாணன் முதலியோர் சேரிப் பரத்தையை இரந்தும் புகழ்ந்தும் பலபடியாக வருந்தி அவள் ஊடலைத் தெளிவிக்க, அவளும் தலைவனும் மது உண்டு களிப்பார்கள்; ஆற்றிலே குளிப்பார்கள்; காமம் கொடியோடிப் பரவ. ஒருவருக்கு ஒருவர் இன்பத்தை வழங்குவார்கள்; ஊடல் கொள்வார்கள்; அங்கங்கே விளையாடுவார்கள்.
இல்லவர் – வீட்டில் உள்ளார்; முதிய பெண்டிர். ஆட – சொல்ல. இரந்து – கெஞ்சிக் கேட்டு. பரந்து -பரவி; பாராட்டி.உழந்து – வருத்தப்பட்டு. வல்லவர்- ஊடலுணர்த்த வல்லவராகிய தூதுவர்; இவரை வாயில்கள் என்று சொல் வார்கள். உணர்த்தர- தெளிவிக்க. நல்லாய் – பெண்ணே; விறலியை விளித்தது. அவள் தலைவியின் ஊடலைத் தணிவிப் பதற்குத் தலைவனிடமிருந்து தூதாக வந்தவள்.
களித்தல் – மதுவுண்டு மகிழ்தல். கொடிவிட – படர். அளிப்ப – வழங்குவர். துனிப்ப – ஊடுவர். “ஊடுதல் காமத்துக்கு இன்பம்” ஆதலின் மீட்டும் ஊடுதலைச் சொன்னார். ஆடுப- விளையாடுவார்கள்; இன்புறுவார்கள் என்பதும் பொருந்தும். ‘அவ்விருவருங் கூடி மதுவாற் களிப்பார்கள்; களியால் வையைக்கட் குளிப்பார்கள்;குளித்துக் காம மிகுதியாற் கலப்பார்கள்; கலந்து அதற்கு இன்பம் உண்டாகப் புலப்பார்கள்; அவ்வவ்விடந்தோறும் விளையாடா நிற்பர் என்று தொடர்புபடுத்திக் கூறுவர் பரிமேலழகர்.
இவ்வாறு விறலியை நோக்கிக் கூறிய தலைவி, இத்தனைக்கும் காரணமாக இருப்பது வையையில் வந்த வெள்ளமாதலின் அந்த வையையை வாழ்த்துகிறாள்.
தலைவி : வையை ஆறே! உன்னிடம் நீராடுவார் நெஞ்சிலே தோன்றி வளர்ந்து அமைந்த காமத்தை நீ விளைவிக்கிறாய். அந்த நிலை நினக்கு என்றும் மாறாமல், வாடாமல், இருப்பதாகுக!
105. ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
வாடற்க வையை நினக்கு.
வையையே! நின்பால் நீராடுவாருடைய நெஞ்சத்தில் பரவிப் பொருந்திய காமத்தை உண்டாக்கும் தன்மை எக்காலத்திலும் நினக்கு வாடாமல் இருப்பதாகுக !
ஆடுவார் – நீராடுவார். அலர்ந்து – பரவி . அமைந்த பொருந்திய. காமம் – காமத்தை உண்டாக்கும் தன்மை; ஆகு பெயர். வாடற்க – வாடாமல் இருக்கட்டும்.
இவ்வாறு வையையை வாழ்த்துவாளைப் போல, ‘தலைவனும் அவனுடைய பரத்தையரும் இப்படியே இன்புற்றிருக்கட்டும்; இங்கே அவ னுக்கு வேலை இல்லை’ என்று குறிப்பித்தாள். தூதாக வந்த விறலியின் வேண்டுகோளை மறை முகமாக மறுத்துவிட்டாள். இதை வாயில் மறுத்தல் என்று சொல்லுவார்கள்.
இதன் துறை வருமாறு; ‘என்பது, வையை நீர் விழ வணியில் காதற் பரத்தை, இற்பரத்தையுடன் நீராடினுன் தலை மகன் எனக்கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான் எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு அவ்வையை நீர் விழவணியும் ஆங்குப்பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.
நீர் விழவணி-நீர்விளையாட்டுக் கேற்ற அலங்காரம். புலந்தாள் -ஊடினவள். புலவி – ஊடல். பட்ட – உண்டான. செய்தி – நிகழ்ச்சி.
ஆசிரியன் நல்லந்துவனுர் பாட்டு.
மருத்துவன் நல்லச்சுதனூர் இசை.
பண்ணுப் பாலையாழ்.



