ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் 
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

முன்னுரை

வணக்கம். ‘ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்’ என்று இப்போது உங்கள் கையில் இருக்கும் இந்த நூலின் ஆசிரியர், திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே, தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டவர். கம்பனைப் பற்றியும், கலைகளைப் பற்றியும், கல்லால் இழைத்த காவியங்களான கோயில்களைப் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்களைப் படித்து இன்பம் அடைந்தவர்கள் தமிழர்கள். ‘வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற தொகுப்புக்களின் மூலமாகவும், வேங்கடத்துக்கு அப்பால் என்ற வடநாட்டுத் தலங்கள் பற்றிய நூல் மூலமாகவும் அவரை இனம் கண்டு வைத்திருக்கிறார்கள் பக்தர்கள், ஆன்மிகச் செல்வர்கள், கலாரசிகர்கள். ஆகவே அவர்களுக்கு, எங்கள் தந்தையார், திரு. பாஸ்கரத் தொண்டைமானைப் பற்றிப் புதிதாக எதுவும் சொல்லவேண்டிய அவசியமில்லை.

‘ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும், அவ்வப்போது அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் தாம், என்றாலும் அவர்கள் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னர் தான் நூல் வடிவம் பெறுகின்றது. இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் நான் ஏற்கெனவே படித்தவைதாம். படித்து இன்புற்றவைதாம் – என்றாலும் அச்சுக்குக் கொடுப்பதற்கு முன்னர் மீண்டும் அவற்றை நான் படித்தபோது அத்தனையும் எனக்குப் புதிய கட்டுரைகள் போலவே இனிப்பாய் இருந்தன. நவில் தொறும் நூல் நயம் போலும் என்பார்களே, அப்படி இருந்தது. ஆடும் பெருமானையும், அளந்த நெடுமாலையும் எத்தனை கோயில்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த இரண்டு திருமூர்த்தங்களுக்குமிடையே இப்படி ஓர் அபூர்வமான, அற்புதமான ஒற்றுமை இருப்பதை எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லையே. அனுமனது விஸ்வரூபம், கோதையின் அழகிய கோலம், இரண்டு கட்டுரைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை. கோதையின் அழகிய கோலத்தை காணத்தான் எப்படியெல்லாம் அலைந்திருக்கிறார்கள் என்று அறிகின்ற போது வியப்பாக இருக்கின்றது. அப்படித்தான் ராஜ கம்பீர நாடாளு நாயகனான, அந்த வேலுக் குரிச்சி வேட்டுவனாம் முருகனைத் தேடி அலைந்த கதையும் நம்மை பரவசப்படுத்துகிறது. கலை தேடி அலைந்த காதல் என்றால் இதுதான் போலும்.

காலமெல்லாம் கலைப்பணிக்காகவே கோயில் கோயிலாக வலம் வந்தவர்கள் தந்தையார். எத்தனையோ தலங்களுக்கு அவர்களுடனேயே போயிருக்கிறோம். ஆனாலும், அந்த அழகை அவர்கள் எடுத்துச் சொல்லும்போது எல்லாமே புத்தம் புது அனுபவம் போலத் தோன்றுகிறது. திருச்செங்கோட்டுக்கு உடன் அழைத்துப் போய், ஒவ்வொரு மூர்த்தியாய்க் காட்டி விளக்கியது இன்றும் எனக்குப் பசுமையாய் நினைவிருக்கிறது. பேராசிரியர் சீனிவாச ராகவன் சொல்லியது போன்று, தொண்டை மான் அவர்களுடைய கட்டுரைகளைப் படிக்கும்போது, அவர்களே நம் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு போய் கோயிலில் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் நேரில் உடனிருந்து விளக்குவது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. தொண்டைமான் அவர்களின் நோக்கமும் அதுதான். தாம் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டும் என்பது. இந்தக் கட்டுரைகளின் பயனும் அதுதான். இந்தக் கட்டுரைகளை ஒரு முறை படித்தால் போதாது. பலமுறை படிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அருமை பெருமை பிடிபடும்.

இந்த நூலுக்கு நல்லதொரு முகவுரை வழங்கியிருக்கிறார், வித்வான் திரு. ல. சண்முகசுந்தரம் அவர்கள், ரசிகமணி டி.கே.சியின் நண்பர் வட்டத்தில் முக்கியமானவர். ரசிகமணியின் குரலாக, இன்றும் ஒலிபரப்பிக் கொண்டவர். அவர் தாம் அறிந்த தொண்டைமானை உங்கள் முன் நிறுத்தியிருக்கிறார் – அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

⁠தந்தையாரின் நூல்களை இத்தனை ஆர்வத்துடன் வெளியிட முன் வந்துள்ள கலைஞன் பதிப்பகத்தார், ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் இதனை அழகான நூலாக நம் கையில் தந்திருக்கிறார்கள் – அவர்களுக்கு நன்றி சொல்ல பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.

⁠வணக்கம்.

ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !